in

பெற்றோருக்கான உளவியல் தொடர் (Parental Psychology) – பகுதி 1 – அறிமுகம்

Parental Psychology - Part 1

ர் ஊரில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவரது அருகாமை வீட்டில், காப்பீட்டு முகவர் (Insurance Agent) ஒருவர் வசித்து வந்தார் 

இருவரும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில், நிறைய செடி மரங்கள் என வளர்த்து வந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் தோட்டத்தை பராமரிக்கும் விதத்தில் மாறுபட்டனர் 

ஆசிரியர் செடிகளுக்கு நிறைய தண்ணீர் ஊற்ற மாட்டார், அதோடு  செடிகளை பற்றி அதிகம் கவலைப்பட மாட்டார்

ஆனால்,  காப்பீட்டு முகவர் செடிகளுக்கு நேரம் தவறாமல் நீர் ஊற்றி, ஒரு புழு பூச்சி அருகில் வராமல் பாதுகாப்பார்  

ஆசிரியர் வீட்டு செடிகள் சுமாராய் அது பாட்டில் வளர்ந்தது. ஆனால் முகவர் வீட்டு செடிகள் மிகச் செழிப்பாய், “ராஜ வீட்டு கன்னுகுட்டி” என்பார்களே, அது போல் அழகாய் வளர்ந்தது  

இந்நிலையில் ஓர் நாள் இரவு, புயல் மழை வந்து அவ்வூரையே புரட்டிப் போட்டது

மறுநாள் காலை, தன் தோட்டத்தை பார்த்த முகவர் மிகவும் வருந்தினார். புயல் மழை அவரது வீட்டுச் செடிகள் மொத்தத்தையும் வேரோடு பிடுங்கி எறிந்து இருந்தது

ஆனால் ஆசிரியர் வீட்டு செடிகள், சற்று சேதாரம் அடைந்திருந்தாலும், வேரோடு சாயவில்லை

அதைப் பார்த்த முகவர் மிகவும் ஏமாற்றமாய் உணர்ந்தார். “இது எப்படி சாத்தியம்?” என ஆசிரியரிடம் வினவினார்

அதற்கு ஆசிரியர், “நீங்கள் உங்க செடிகளுக்கு வேண்டிய எல்லாவற்றையும், ஏன் அதையும் தாண்டியும் அதிகமாய் அளித்தீர்கள். எனவே உங்கள் செடிகள் சுகமாய் செழிப்பாய் வளர்ந்தது. நான் எனது செடிகளுக்கு வேண்டிய அவசியமான சத்தை மட்டுமே அளித்தேன். அதனால், அவை தனக்கு இன்னும் தேவைப்பட்ட அதிக சத்தைத் தேடி ஆழமாய் வேர் விட்டு உள்ளே சென்றது. அதன் காரணமாய் புயல் மழை எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் உறுதியான வேருடன் வளர்ந்து இருக்கிறது” என்றார்  

இந்த கதையை நீங்கள் இதற்கு முன்பே படித்திருப்பீர்கள். நானும் எங்கோ படித்தது தான்

இந்த கதையில் வரும் ஆசிரியர், செடிகளை பற்றி சொல்லும் விடயம், நம் பிள்ளைகளுக்கும் பொருந்தும்

நாம் அவர்களுக்கு அவசியம் வேண்டிய வழிகாட்டுதல்களை மட்டும் செய்தாலே போதுமானது. அதை விடுத்து, ஒவ்வொரு விஷயத்தையும் சொல்ல சொல்ல செய்யப் பழக்கினால், தேடல் என்னும் எண்ணமே இல்லாமல் போய் விடும். அவர்களுக்கு “சுயம்” என்பதும் இருக்காது  

சிக்மண்ட் பிராய்டு – (Founder Of Psychoanalysis)

சிக்மண்ட் பிராய்டு (Sigmund Freud) என்ற ஆஸ்திரிய நாட்டின் நரம்பியல் நிபுணர், மனோஆய்வின் முன்னோடி (Founder Of Psychoanalysis) என்று அறியப்பட்டவர்

அவரின் சைக்கோஅனலடிக் தியரி (Psychoanalytic Theory), உலகப் புகழ் பெற்றது. இன்று பலவித மனநோய்களுக்கான தீர்வுக்கு, இவரின் இந்த ஆய்வே முன்னோடி என சொல்லப்படுகிறது

அவரின் ஆய்வின் ஒரு கோட்பாடு, “ஒருவர் தான் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள், அவர்களின் பிற்கால வாழ்க்கையில் அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தை தீர்மானிக்கிறது” என்கிறது  

உதாரணத்திற்கு, சிறுவயதில் பெற்றோர் பிரிந்த காரணத்தால், அந்த குடும்பத்தை சேர்ந்த பிள்ளைக்கு உறவுகள் மற்றும் குடும்ப அமைப்பின் மேல் நம்பிக்கையின்மை ஏற்பட்டு, தனக்கான குடும்ப வாழ்க்கையே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் நிலை ஏற்பட்டதாம்

எந்த அளவிற்கு சிறுவயதின் நிகழ்வுகள், பிள்ளைகளின் பிற்கால வாழ்வை பாதிக்கும் என்பதை இந்த சின்ன உதாரணத்தின் மூலமே உணரலாம் 

பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை புரிவோருக்கும், தோல்வியை தாங்காமல் வாழ்வை முடித்துக் கொள்ளும் பலருக்கும், இது போல் ஏதேனும் ஒரு இளம்பிராய பாதிப்புகள் காரணமாய் இருக்கலாம் என்பது மனநல மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது

எனவே சிறுபிள்ளை தானே என உதாசீனம் செய்யாமல், அவர்களை நமக்கு சமதையாய் நடத்தினாலே, நிறைய பிரச்சனைகளை சரி செய்ய இயலும்

பிள்ளைகளுக்கான சுதந்திரம் (Giving Space to Kids)

சற்று யோசித்துப் பாருங்கள், 1970 / 80’களில்  பிறந்த நமக்கு, நம் பெற்றோர் கொடுத்த சுதந்திரத்தை, நாம் நம் பிள்ளைகளுக்கு இன்று தருகிறோமா? 

சுதந்திரம் என்றால், ஊர் சுற்றுவதும், சினிமாவுக்கு செல்வதும், ஆண்டிராய்டு போன் வாங்குவதும், ஒரு லட்சம்  ரூபாய் பைக் வாங்கித் தருவதும் அல்ல 

நான் சொல்லும் சுதந்திரம், தன் மேற்படிப்பை பற்றியோ அல்லது எதிர்காலத்தை பற்றியோ  முடிவெடுக்கும் சுதந்திரம். அதை நாம் நம்ம பிள்ளைகளுக்கு தருகிறோமா?

“அவளுக்கு என்ன தெரியும்” என்றோ 

“அவனைக் கேட்டா விஸ்காம் படிக்கறேன், அது இதுனு ஏதாச்சும் ஒளறுவான்” என்றோ கூறும் பெற்றோரே அதிகம்

இது தானே இன்றைக்கு நம் பிள்ளைகளை பற்றிய நம் மதிப்பீடு. அனைத்து பெற்றோரும் இப்படித் தான் என நான் கூறவில்லை, ஆனால் பெரும்பாலோனோர் இப்படித் தான் இருக்கின்றனர்

எந்த தவறான நோக்கத்திலும் நீங்கள் இதை செய்வதில்லை

பிள்ளைகள் மேல் நீங்கள் கொண்ட அதீத அக்கறையும், அவன் அல்லது அவள் தன் வாழ்வில் தோற்று விடக் கூடாதே என்ற பயமுமே இதற்கு காரணம் என்பது புரிகிறது 

ஆனால், இதே வயதில் நாம் இருந்த போது, நம் பெற்றோர் அண்டை அயலாரிடம் நம்மை பற்றி என்ன பேசுவார்கள் என சற்று யோசித்துப் பாருங்கள்

“எங்க பையனுக்கு நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை, அவனே இன்ஜினியரிங் படிக்கணும்னு போய் சேந்துட்டான்” என்றோ 

“நீங்க வேற, அவ என்ன மார்க் வாங்கினானு கூட நான் பாக்கல,  நம்ம ஊரு காலேஜ்ல பி.காம் சீட் வாங்கிட்டா, பணம் கட்ட மட்டும் தான் அவங்கப்பா போனாரு” எனவும், நம் பெற்றோர் நம்மைப்  பற்றி பெருமை பேசியதை நாம் ரசித்ததில்லையா?

அது நம் தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பை மேலும் வளர்க்கவில்லையா? 

 

முடிவு எடுக்கும் திறன் (Decision Making Skills in kids)

என்ன படிக்கனும்? ஆர்ட்ஸ் குரூப்பா சயின்ஸ் குரூப்பா?

நான் என்னவா ஆகணும், டீச்சரா, லாயரா?

எனக்குள்ள என்ன திறமை இருக்கு? 

எனக்கு பிடிச்ச துறைல நான் போகலாமா? 

இப்படிப்பட்ட கேள்விகள் எழுந்த சூழ்நிலைகளில், பெரும்பாலும் நாமே தான் முடிவெடுத்து இருப்போம், அதிகபட்சம் அண்ணனோ அக்காவோ அல்லது வகுப்பு ஆசிரியரோ நமக்கு வழிகாட்டி இருக்கலாம், வெகு சில வீடுகளில் பெற்றோரும் உதவி இருப்பார்கள் 

அப்படி வளர்ந்த நாம், இன்று எவ்வகையில் குறைந்து விட்டோம்?

70s Kid சுந்தர் பிச்சை தன் படிப்பு, வேலை எல்லா விஷயத்துலயும் தானே தான் முடிவெடுத்ததாக ஒரு நேர்காணலில் பகிர்ந்ததை படித்தேன்

இன்று அவர் என்ன நிலையில் இருக்கிறார் எனபதை நீங்களே அறிவீர்கள் 

ஆனால், இன்று நிலை அப்படியா இருக்கிறது?

பள்ளியில் நடக்கும் ஒரு ஓவியப் போட்டியில் கூட, தன் பிள்ளை தான் சொல்வதை தான் வரைய வேண்டும், அதோடு முதல் பரிசும் வாங்க வேண்டும் என்பது தானே நம் எதிர்பார்ப்பாய் இருக்கிறது

இதன் காரணமாய், பிள்ளையின் கற்பனை திறனை மறைமுகமாய் முடக்குகிறோம் என்பதை நாம் உணர்வதில்லை  

வெற்றி பெறுவது ஒன்றே போட்டியில் பங்கு பெறுவதன் நோக்கம் என்ற மனப்பான்மையை இது வளர்க்காதா?

அதன் காரணமாய் தானே தோல்வியை ஏற்கும் மனப்பக்குவம் இன்றி, இன்றைய  இளவயது தற்கொலைகள் பல நிகழ்கின்றன 

‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படத்தின் கடைசி காட்சியில் ஜெயம் ரவி தன் தந்தையிடம் சொல்வாரே, “என்னோட ஆட்டத்தையும் சேத்து நீயே ஆடுவியேப்பா”னு, அந்த கதை தான் இன்றைக்கு பெரும்பாலான வீடுகளில் நடக்கிறது 

சின்ன சின்ன விஷயத்தில் கூட, பிள்ளைகளின் கற்பனைத் திறனை முடக்கி, சுயமாய் முடிவெடுக்கும் தன்மையை வளர விடாமல் செய்தால், பின்னாளில் பெரிய முடிவுகளை எடுக்கும் தைரியம் அவர்களுக்கு எங்கிருந்து வரும் 

நாம வளர்ந்த நாட்கள் அளவிற்கு, மேற்படிப்பு பற்றி முடிவெடுக்கும் சுமையை, இன்றைக்கு இருக்கும் போட்டி நிறைந்த உலகில், நம் பிள்ளைகளை நம்பி விடுவது சாத்தியமில்லை தான், ஒப்புக் கொள்கிறேன் 

ஆனால், அவர்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, அது சாத்தியமென்றால் அதை செயலாக்க உதவலாம். அல்லது சாத்தியமில்லையெனில், அதை அவர்களின் மனம் புண் படா வண்ணம் எடுத்து சொல்லி புரிய வைக்கலாம்.  அது   பெற்றோராய் நம் கடமை இல்லையா?  

காரணத்தோடு மறுத்தலின் அவசியம் (Say No with a reason)

இந்த தலைமுறை பிள்ளைகளுக்கு வெறுமனே வேண்டாம் என்றால் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஏன் வேண்டாம் என்பதற்கான சரியான காரணத்தையும் சொல்ல வேண்டும். அப்போது தான் நீங்கள் சொல்வதை  முழு மனதோடு ஏற்றுக் கொள்வார்கள் 

மூன்று வயதில் நம் பிள்ளை குளிர் காலத்தில் ஐஸ்கிரீம் கேட்டால் என்ன செய்தோம்? “தர முடியாது போ” என்றா சொல்வோம்?

இல்லையே, “குளிர் காலத்துல ஐஸ்கிரீம் சாப்ட்டா காய்ச்சல் வரும், அப்புறம் ஊசி போடணும். ஊசி போட ஓகே’னா சாப்பிட்டுக்கோ” என அந்த வயதிற்கு ஏற்றாற் போல் சமாளிப்பதில்லையா? அதே போல்  எந்த  வயதிலும் சாத்தியமே 

“சொல்றது ரெம்ப ஈஸி, செஞ்சு பாருங்க தெரியும்” என நீங்கள் முணுமுணுப்பது கேட்கிறது. நிச்சயம்  கடினம் தான், ஒப்புக் கொள்கிறேன். பின்  பிள்ளை வளர்ப்பு என்றால் சும்மாவா? 

மற்றவர்களுக்காக செய்யாதீர்கள் (Do not Impose Peer Pressure on Kids)

“நான் சொல்றதை தான் நீ படிக்கணும்” என்றோ

அல்லது, “என் பெரியப்பா பேரன் அமெரிக்கால MS பன்றானாம், நீயும் எப்படியாச்சும் அங்க படிச்சாகணும்” என நமக்குள்ள Peer Pressureஐ, பிள்ளைகள் மீது திணிப்பது எந்த வகையில் நியாயமாகும் 

நான் பெற்றோரான உங்களை குறை சொல்லவில்லை. உங்கள் பிள்ளையின் நலனுக்கு தான் எல்லாமும் செய்கிறீர்கள். தேவைக்கு அதிகமாவே செய்கிறீர்கள் என்று தான் சொல்கிறேன்

நம்மை வளர்க்க நம் பெற்றோர் இத்தனை யோசித்தார்களா என்றால், இல்லை என்று தான் தோன்றுகிறது, அதற்கு அவசியமும் இருக்கவில்லை. ஏனெனில் நாம் வளர்ந்த காலம் வேறு, நம் பிள்ளைகள் வளரும் இந்த காலம் வேறு என்பது நிதர்சனமான உண்மை 

விரல் சுற்றி டயல் செய்யும் லேன்ட்லைன் (Landline) தொலைபேசியையே, பதிவு செய்து வைத்து, வருடங்கள் பல காத்திருந்து இணைப்பை பெற்ற தலைமுறை நாம் 

ஆனால் YouTubeல் வீடியோ காட்டினால் தான், பிறந்த பிள்ளையே உண்ணும் காலம் இன்று  

பிள்ளையை நான் சரியாய் வளர்க்கிறேனா? (Am I raising my child in the right way?)

இதன் காரணமாய், நம் தலைமுறை பெற்றோர் பலருக்கும், தினமும் மனதில் எழும் ஒரு கேள்வி, “நாம நம்ம குழந்தையை சரியாத் தான் வளக்கறமா? எதிர்வீட்டு சுரேஷ் மாதிரி வளர்க்கணுமோ? இல்ல, நம்ம ஆபீஸ் சித்ரா சொல்றது தான் சரியோ?” 

இப்படிப்பட்ட கேள்விகள் எல்லாம் உங்கள் மனதில் தோன்றுவதால், நீங்கள் நல்ல பெற்றோர் இல்லை என்று அர்த்தமில்லை

இன்னும் சொல்லப் போனால், பிள்ளைகளை பற்றி யோசித்து இத்தனை மெனக்கெடும் நீங்கள், பெஸ்ட் பேரண்ட் அவார்ட் பெறத் தகுதியானவர் தான், அதில் எந்த சந்தேகமும் இல்லை 

எனக்குள்ளும் இத்தகைய கேள்விகள் தினமும் எழும். நானும் உங்களைப் போல் ஒரு சராசரி அம்மா தான். அதுவும் சில நேரங்களில், “என்ன தான் செய்வது?” என தலையில் கை வைத்து அமரும் நாட்களும் உண்டு 

என்னைப் பற்றி (About me)

நான் ஒன்றும் பெரிய உளவியல் நிபுணரோ, டாக்டரோ அல்ல. B.Com, MBA (Finance) என கணக்குபதிவியலும், எண்களும் சார்ந்தே இருந்தது எனது படிப்பும், அதைத் தொடர்ந்த வேலையும் கூட (ஓரிரு வருட ஆசிரியப் பணி அனுபவம் தவிர)

மகள் பிறந்த பின், என்னுள் நிறைய மாற்றங்கள். அவளோடு சேர்ந்து, நானும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய், “பேபி ஸ்டெப்ஸ்” என்பார்களே, அப்படித் தான் ஒவ்வொரு நாளும் நகர்கிறது 

மகள் சற்று வளர்ந்ததும், பணிக்கு மீண்டும் செல்லும் எண்ணத்தில், என் துறையில் கொஞ்சம் மேம்படுத்திக் (Update) கொள்வோம் என்ற நோக்கில், எம்.காம் (M.Com) படிக்க விண்ணப்பித்தேன் 

மறுபடியும் பைனான்ஸ் மேஜர் வேண்டாமே என, “Education Management” Specialization தேர்ந்தெடுத்தேன்

அதில் மாணவ உளவியல் (Student Psychology) சார்ந்த பாடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது

அந்த பாடங்களுக்கான தேடல், சைக்கலாஜி பற்றி மேலும் கற்றுக் கொள்ளும் ஆர்வத்தை என்னுள் ஏற்படுத்தியது

அது என்னை பாடம் தாண்டி, உளவியல் (சைக்காலஜி) துறை சார்ந்த புத்தகங்கள், கட்டுரைகள், பேச்சுக்கள் என தேடித் தேடி செல்ல வைத்தது 

அந்த தேடலில், பெற்றோருக்கான உளவியல் பற்றி நான் கற்ற விஷயங்களை, கோர்வையாய் உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்தத் தொடர்

வளர்ப்பு முறைகள் (Parenting Styles)

அதெல்லாம் இருக்கட்டும், “பிள்ளையை எந்த முறையில் வளர்ப்பது சரியானது?” என மீண்டும் அந்த கேள்விக்கே வருகிறீர்களா?

பொன்னோ பூவோ என அடிக்காமல் திட்டாமல் வளர்க்க வேண்டுமா?

அல்லது கண்டித்தால் தான் வேலையாகும் என, திட்டி / அடித்து மட்டுமே வழிக்கு கொண்டு வர வேண்டுமா?

இரண்டுமே தவறு, கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில சற்று கண்டிப்பு அவசியமே. ஆனால், எந்நேரமும் கண்டிப்புடனே இருப்பதும் சரியல்ல

Balancing என்பார்களே, அதை கற்பதில் தான் இருக்கிறது பெற்றோரான நமக்கான சவால்

அது சுலபமல்ல என்பதை அனுபவத்தில் உணர்ந்து இருக்கிறேன். இந்த பகிர்தல் மூலம் சேர்ந்து கற்போம்

இன்றைக்கு இந்த அறிமுகம் போதுமென நினைக்கிறேன். வளர்ப்பு முறைகள் (Parenting Styles), பிள்ளை வளர்ப்பில் Do’s and Dont’s என, பல விஷயங்களை பற்றி அடுத்தடுத்த பகுதிகளில் விரிவாகப் பாப்போம்

என்றும் நட்புடன்

சஹானா கோவிந்த்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

தங்கமணி ரங்கமணி… (நகைச்சுவைத் தொடர் – அத்தியாயம் 1)

ரங்கமணி – DOS or Windows…(தங்கமணி ரங்கமணி சிரீஸ் – நகைச்சுவைத் தொடர் – அத்தியாயம் 2)