ஒரு விசியமுங்க :-
இந்த கதையை படிச்சு புரிஞ்சுக்கறதுக்கு பொது அறிவெல்லாம் தேவை இல்லீங்க, பொதுவா அறிவே இல்லைனாலும் பிரச்சனை இல்லீங்க 😀
ஆனா ஒரே ஒரு, இல்ல இல்ல ரெண்டே ரெண்டே வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் தெரிஞ்சா போதுமுங்க
அதாகப்பட்டது, ரங்கமணி என்றால் கணவர், தங்கமணி என்றால் மனைவி. அம்புட்டு தானுங்க 😊
பொறுப்பு துறப்பு குறிப்பு: –
(அதாங்க இந்த டிவில ப்ரோக்ராம் போடறதுக்கு முன்னாடி Disclaimer போடுவாங்களே, அதான் இது)
இந்த கதைகள்ல வர்ற தங்கமணி ரங்கமணி ரகளை எல்லாம் எங்க வீட்ல எட்டி பாத்து எழுதின மாதிரியே இருக்குனு யாராச்சும் வழக்கு கிழக்கு போட்டீங்கன்னா, அதுக்கு நானோ பத்திரிக்கை நிர்வாகமோ பொறுப்பில்ல. இது எல்லாமும் கற்பனையே கற்பனையே கற்பனையே
அதையும் மீறி தனி நீதிமன்றம் அமைக்கற அளவுக்கு ஆனதுன்னா, உங்க வீட்டு தங்கமணியே உங்களுக்கு எதிரா சாட்சி சொல்ற வாய்ப்பிருக்குங்க, அப்பறம் எங்கள குத்தம் சொல்லாதீங்க, சொல்லிப்புட்டோம்
என்றும் வம்புடன்,
சஹானா கோவிந்த்😆
ஒரு ஊர்ல ரங்கமணி ரங்கமணினு ஒரு ரங்கமணி இருந்தாருங்க. அட, ரெண்டு பேரு இல்லைங்க, ஒருத்தர் தான், அவர் பேரே ‘ரங்கமணி’ தான். ஆச்சர்யமா இருக்கோ? இதுக்கே ஆச்சர்யப்பட்டா எப்படிங்க? இனி தான் முக்கியமான ஆச்சர்யமே இருக்கு
அவரோட தங்கமணி பேரு ‘தங்கமணி’யே தான். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி இவங்க கல்யாணத்தப்ப ஊரே ஆச்சர்யப்பட்டுச்சு இவங்க பேரு பொருத்தத்த பாத்து
ஆனா பேருல தான் இப்படி ஒரு பொருத்தம், வீட்டுல தினமும் ரணகளம் தான் போங்க. இவங்க கிழக்குன்னா அவர் மேற்குனுவாரு. அப்படி ஒரு எதிர் பொருத்தம். தங்கமணி ரங்கமணினாலே அப்படி தானேங்கரீங்களா, அதுவும் வாஸ்தவம் தான்
இந்த தங்கமணிகிட்ட இருக்கற ஒரு பழக்கம் என்னன்னா, பேச்சுக்கு பேச்சு ஒரே பழமொழியா கொட்டித் தள்ளுவாங்க. உங்கூரு எங்கூரு பழமொழி இல்ல உலக பழமொழி தான் போங்க
(இருங்க இருங்க வீட்டுக்குள்ள என்னமோ ரகளை நடக்குது, என்னனு ஒட்டு கேப்போம். நமக்கு தான் ஓட்டு கேக்கரதுன்னா ரெம்ப பிடிக்குமே…ஹி ஹி ஹி)
“என்னங்க”
“ம்”
“என்னங்க”
“ம்”
“உங்களத்தானே…”
“ம்”
“கடைந்த மோரிலே குடைந்து வெண்ணெய் எடுக்கிறதுனு ஒரு பழமொழி சொல்லுவாங்க, அது கூட செஞ்சரலாம். உங்ககிட்ட ஒரு பதில் வாங்க முடியுதா”
“என்னம்மா சொல்லு? கேட்டுட்டு தான் இருக்கேன்”
“என்ன? கேட்டுட்டு இருக்கீங்களா? நான் என்ன சொன்னேன்னு திருப்பி சொல்லுங்க பாப்போம்?”
“அதுவா, பாப்போம் சொல்லுங்க திருப்பி சொன்னேன்னு என்ன நான். கரெக்ட்டா?”
“என்ன ஒளர்றீங்க?”
“நீ தானே நீ சொன்னத திருப்பி சொல்ல சொன்ன. அதான் ஒரு ஒரு வார்த்தையா திருப்பி சொன்னேன்”
“அட ராமா”, னு தலைல கை வெச்சுட்டு உக்காந்துட்டாங்க தங்கமணி
“ஸ்ரீராமா தெரியும், பலராமா கூட தெரியும். அது யாரு தங்கம் அட ராமா?”
“ம்… எங்கப்பா?” என்றார் தங்கமணி பல்லைக் கடித்து கோபத்தை அடக்கியபடி
“ஓ அப்படியா, ஆனா உங்க அப்பா பேரு தண்டபாணி ஆச்சே? ஒருவேளை சுருக்கி செல்லமா அடராமானு கூப்பிடுவீங்களா?”
“தண்டபாணிய எப்படி அடராமானு சுருக்க முடியும்?” என முறைத்தாள் தங்கமணி
“அதானே, எப்படி முடியும்? அப்புறம் எப்படி உங்க வீட்டுல இப்படி எல்லாம்? சரி விடு உங்க குடும்பமே ஒரு மாதிரினு தெரிஞ்சுது தானே” என கிடைத்த வாய்ப்பை விடாமல் வாரினார் ரங்ஸ்
“இங்க பாருங்க, பேச்சை மாத்தாதீங்க? அப்போ நான் என்ன சொன்னேன்னு இப்போ சொல்ல போறீங்களா இல்லையா?”
“அப்போனா எப்போ? இப்போவுக்கு முன்னாடி அப்போவா, அப்போவுக்கு முன்னாடி அப்போவா”
“ஈஸ்வரா…”, என மறுபடியும் தங்ஸ் தலையில் கை
“அது யாரு? ஓ… உங்க சித்தப்பா சண்முகத்தோட சுருக்க பேரா”
“வேண்டாம், கோவத்த கிளறாதீங்க. நான் மனுசியா இருக்க மாட்டேன்”
“நீ கோவம் வந்தா உண்மை எல்லாம் பேசற தங்கம், ஐ லைக் இட் யு நோ”
“முருகா, அந்த கீழப்பட்டி வரனுக்கே நான் சரினு சொல்லி இருக்கலாம். இப்படி எல்லாம் படணும்னு இருக்கறப்ப விடுமா விதி”, என்று தங்கமணி பிளாஷ்பாக் எல்லாம் இழுத்து மூக்கு உறிஞ்ச
“யாரு? கீழ்பாக்கம் வரனா, பொருத்தம் தான்”, என கேலி சிரிப்பு சிரித்தார் ரங்கமணி
“அது கீழ்பாக்கம் இல்ல, கீழப்பட்டி. காதும் போச்சா?”
“ஹி ஹி… காது எல்லாம் ஒகே தான். அந்த கீழப்பட்டிக்காரன் சிக்கி இருந்தா கீழ்ப்பாக்கத்துக்கு தானே வந்து சேந்துருப்பான், அதை தான் சிம்பாலிக்கா சொன்னேன்”, என ரங்கமணி இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொள்ள
“ஆஹா, ரெம்ப மேதாவின்னு நெனப்போ உங்களுக்கு”
“ச்சே ச்சே… மேதாவியா இருந்துருந்தா அந்த மேலபட்டிகாரியவே கரெக்ட் பண்ணி இருப்பனே, ஹும்” என ரங்கமணியும் தங்ஸ் ஸ்டைலிலேயே பெருமூச்சு விட
“நான் என்ன சொன்னேன் அதை மொதல்ல சொல்லிட்டு அப்புறம் மத்தது பேசுங்க”
“ஆஹா… இன்னிக்கி விட மாட்டா போல இருக்கே” என மனதிற்குள் நினைத்த ரங்கமணி, “அதான் சொன்னேனே, பாப்போம் சொல்லுங்க திருப்பி……..”
“போதும் உங்க மொக்கை. அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன்? அதை சொல்லுங்க”
“என்ன நீ? பிரகாஷ்ராஜ் ஏதோ படத்துல கேக்கற மாதிரி, அதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடினு மெரட்டற”
“காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? னு பழமொழி. அது மாதிரி தப்பு பண்ணினதும் இல்லாம இப்போ நான் மெரட்டறேனு பழி போடறீங்களா”
“என்னது தப்பா? என்னமோ பேங்குல கொள்ளை அடிச்ச மாதிரி பேசறியே தங்கம். யாராச்சும் கேட்டா வம்பாய்டும்”
“உங்கள திருத்தவே முடியாது”
“நான் என்ன பரிச்ச பேப்பரா திருத்தறதுக்கு”, என என்னவோ பெரிய ஜோக்கை சொல்லிவிட்ட ஜோரில் ரங்கமணி சிரிப்பாய் சிரிக்க
“ஜோக்கா? நீங்க சொல்றது ஜோக்கா இருந்தா மத்தவங்க சிரிக்கணும், நீங்களே சிரிச்சா அதுக்கு பேரு வேற”, என தங்கமணி பல்ப் எண்ணிக்கையில் ஒன்றை சேர்த்து விட்டு எழுந்தார்
“தங்கம், நீ போ வேண்டாங்கல. அதுக்கு முன்னாடி என்ன சொன்னேன்னு நீயே சொல்லிட்டு போயேன். க்ரைம் ஸ்டோரி கடைசி பக்கத்த கிழிச்ச மாதிரி சஸ்பென்ஸ் வெச்சா எப்படி?”, என ஆர்வமாய் கேட்க
“ம்ம்ம்….என்னவா? அதுக்கு முன்னாடி நான் ஒண்ணுமே சொல்லல, நான் பேசறத நீங்க கவனிக்கரீங்களானு சும்மா டெஸ்ட் பண்ணத்தான் அப்படி கேட்டேன்”, என தங்கமணி ஒரு பல்ப் கூடையையே தலையில் கொட்டிவிட்டு போனார்
“அடிப்பாவி, ஒண்ணுமில்லாமையேவா ஒரு மணி நேரமா அதுக்கு முன்னாடி அதுக்கு முன்னாடின்னு உசுர வாங்குன? ஹும்… எப்படி எல்லாம் பிளான் பண்றாங்கப்பா”, என ரங்கமணி ரங்காராவ் மாதிரி தலைல துண்ட போட்டுட்டு உக்காந்துட்டார்
(இனி நமக்கு என்ன வேல இங்க… அடுத்த ரகளை என்னனு அடுத்த எபிசோட்ல வந்து பாத்துக்கலாம் வாங்க 😃)
ஆஹா, ஆஹா, நம்ம வீட்டிலே எட்டிப் பார்த்துட்டுத் தான் எழுதி இருக்கீங்க! நல்லாத் தெரியுதே! இதே “கிழக்கும் மேற்கும்” என்கிற தலைப்பிலே நானும் எழுதினேனே! முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னாலே!
ஹா ஹா… வீட்டுக்கு வீடு வாசப்படி மாமி
சிரிப்பதற்கு தயார் ஆகிவிட்டேன்! தொடர்க!
மிக்க நன்றி சார்
இது எங்க வீட்டுக்கு வந்தூட்டு போனப்பறம் எழுதின கதை மாதிரி இருக்கு :).
வீட்டுக்கு வீடு வாசப்படி அங்கிள் 😂