in

காதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த்

காதலெனும்... ❤ (பகுதி 4)

 

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

திரவன் உதிக்கும் முன்னே அந்த திருமண மண்டபம் பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தது

நெருங்கிய உறவுகள் அங்கேயே வேறு அறைகளில் தங்கவைக்கப்பட்டிருக்க, எல்லோரும் குளித்து கிளம்ப என, சலசலப்புக்கும் குறைவிருக்கவில்லை 

“பாப்பா எந்திரிச்சுட்டாளா தேவி?” என்றபடி அறைக்குள் வந்தார் சண்முகம்

“குளிச்சுட்டு இருக்கா ‘ங்க. பியூட்டி பார்லர் பொண்ணு இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும், அதுக்குள்ள குளிச்சு தயாரா இருந்தா தான் சரியா இருக்கும்” என்றார் 

“ஹ்ம்ம்… அப்புறம்…” என குரலை தணித்து ஏதோ கூற ஆரம்பித்தவர், இமயா குளியலறை கதவை திறந்து கொண்டு வருவதை உணர்ந்து, மனைவியிடம் ஜாடை காட்டி மௌனமானார் 

‘என்னவாக இருக்கும்?’ என அறிந்து கொள்ள தேவியின் மனம் துடித்த போதும், மகள் முன் பேசுவதை கணவர் தவிர்க்கிறார் என்பதை உணர்ந்து மௌனமானார் 

“வா பாப்பா, நல்லா தூங்கினியா?” என பெற்றவர் கேட்க 

“தூங்கினேன் ப்பா, நீங்க தான் சரியா தூங்கல போல, கண்ணெல்லாம் செவந்திருக்கு” என்றாள் இமயா 

மகளின் அக்கறையில் மனம் நெகிழ்ந்தவர், “கல்யாணம் நல்லபடியா முடியற வரை டென்ஷன் தான கண்ணு” என முறுவலித்தார் 

“இதுக்கு தான் எல்லாத்தையும் காண்ட்ரேட் விட்டுருந்தா வேலை கம்மியாகும்னு சொன்னேன், நீங்க தான் ப்பா எல்லாம் நானே பார்த்து செஞ்சா தான் திருப்தினு சுமையை ஏத்திக்கிட்டீங்க” என உரிமையாய் தந்தையை கடிந்து கொண்டாள் இமயா 

“என் மகளுக்கு செய்யறது சுமையா பாப்பா? பெரிய மனுசி மாதிரி பேசறதை பாரேன்” என சிரிப்புடன் மனைவியை பார்த்தார் சண்முகம் 

அதே நேரம் அறைக்குள் நுழைந்த இமயாவின் அத்தை ஈஸ்வரி, “இப்படியே புருஷன் பொண்டாட்டி மகளை கொஞ்சி சிரிச்சுட்டு இருந்தா கல்யாண பந்தல்ல நானா போய் உக்கார்றது?” என அதட்டியபடியே வந்தார் 

“ராத்திரி அழுததுக்கும் திட்டுனீங்க, இப்ப சிரிச்சாலும் திட்டறீங்க, உங்க கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலியே அத்த” என இமயா கேலி செய்ய 

“ஏண்டி… இன்னைக்கி ஒரு நாளைக்காச்சும் வாயாடாம பொண்ணா லட்சணமா இருக்க மாட்டியா நீ” என அதட்டினார் ஈஸ்வரி 

“போங்க அத்த, நான் எப்பவும் போல தான் இருப்பேன். இதென்ன இண்டெர்வியூ ரூமா, அடக்க ஒடுக்கமா உக்காந்து பதில் சொல்றதுக்கு” என விடாமல் வம்பு பேசினாள் இமயா 

“ஏண்டா சண்முகம், பேச்சுக்கு பேச்சு பேசற வாயில ரெண்டு போடறதை விட்டுட்டு புருசனும் பொண்டாட்டியும் மக பேசறத ரசிச்சுட்டு நிக்கறீங்களா?  என்ன வளத்து வெச்சுருக்கா பாரு உங்கம்மானு போற எடத்துல இடி வாங்கப் போறா பாரு” என ஈஸ்வரி மிரட்ட 

“அதெல்லாம் என் பொண்ணு இடத்துக்கு தகுந்த மாதிரி மாறிக்குவா ‘க்கா, நம்ம அத்தை தானேனு உன்கிட்ட தான் மல்லுக்கு நிக்கறா” என மகளை அணைத்தபடி கூறினார் சண்முகம் 

“என் அப்பா னா அப்பா தான்” என செல்லம் கொஞ்சினாள் இமயா 

ஈஸ்வரி மீண்டும் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதே நேரம் அறைக்குள் ஒப்பனை செய்யும் பெண் நுழைய, “சரி சரி, சட்டு புட்டுனு கிளம்புங்க எல்லாரும். தேவி, காலைல எல்லாமே நம்ம நகைக தான் போடறோம்னு சொன்னியே, எல்லாம் சரியா எடுத்து வெச்சுட்டியா?” எனவும் 

“வெச்சுட்டேன் க்கா, நீங்க நேத்தே சொன்ன மாதிரி பாப்பாவுக்கு எல்லாம் போட்டு முடிச்சதும் தான் இங்கிருந்து நகருவேன்” என உறுதியளித்தாள் தேவி 

“ஆமா பத்திரம். நான் முன்னாடி நிக்கறேன், நீ மசமசனு நிக்காம சட்டுனு வா” என்றபடி வெளியேறினார் ஈஸ்வரி 

அவர் சென்றதும், “அத்தை வந்தாலே அதிரடி சரவெடி தான் இல்லப்பா?” என இமயா சிரித்தபடி கேட்க 

“இப்படி நம்மளை அதட்டவும் ஒருத்தர் வேணும்டா கண்ணா. அதோட, நீ எப்படி நம்ம வீட்ல உரிமையோட இருக்கியோ, அதேப் போல அவளுக்கும் நம்ம வீடு தான பொறந்த வீடு, அந்த உரிமை தான்” என்றார் 

‘நீ போகும் இடத்திலும் இப்படி சீராட உரிமையுடன் ஒரு பெண் வருவாள், அப்போது இதை நீ நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்’ என சொல்லாமல் சொன்னார் அந்த தந்தை 

சண்முகம் எப்போதும் அப்படித் தான், எதையும் திணிப்பது போல் செய்ய மாட்டார். ஆனால் தான் வாழும் முறைமையிலேயே மகளுக்கு  நல்லது கெட்டதை புரிய வைத்து விடுவார் 

ஒரு வழியாய் அலங்காரம் எல்லாம் முடிந்து இமயா எழுந்து நிற்க, மகளின் அழகைக் கண்டு தேவியின் முகம் பெருமையில் ஒளிர்ந்தது 

மகிழ்வுடன் மகளுக்கு நெட்டி முறித்தவர், அங்கிருந்த பெண்களிடம் அவளை அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேறினார் தேவி 

சற்று நேரத்தில், “ரெடியா?” என்றபடி அறைக்குள் வந்த மாப்பிள்ளையின் சித்தி, மேலும் கீழும் அளவெடுப்பது போல் இமயாவை பார்த்தார் 

இமயா கூச்சத்தில் நெளிய, பின் ஏதோ முணுமுணுத்தபடி வெளியேறினார் 

“என்னடி இந்த பொம்பள இப்படி பாக்குது?” என தோழி ஒருத்தி கேட்க 

“மாப்ள வீடுன்னா அப்படித் தான் பாப்பாங்க” என்றாள் மற்றொருத்தி 

“அடிப்போடி… நீ இன்னும் எந்த காலத்துல இருக்க? இப்பெல்லாம் பொண்ணுங்களுக்கு தான் டிமாண்ட் தெரியுமா?” எனவும் 

“வாஸ்தவம் தாண்டி… ஆனா மாப்ள கவர்மண்ட் ஜாப், நல்ல பெர்சனாலிட்டி சொத்துனு இருக்கறப்ப, கொஞ்சம் இப்படித் தான் இருப்பாங்க” என நிதர்சனம் பேசினாள் மற்றவள் 

“பொண்ணை கூட்டிட்டு வரச் சொல்றாங்க” என குட்டிப் பெண் ஒருத்தி சொல்லி விட்டு ஓட, பின்னோடு ஈஸ்வரி அத்தையும் மற்ற சில உறவுப் பெண்களும் வர, அவர்களுடன் மௌனமாய் நடந்தாள் இமயா 

இமயா வருவதை உணர்ந்து கார்த்தியின் விழிகள் அவள் பக்கம் திரும்ப, அவளோ குனிந்த தலை நிமிராது தோழிகள் உறவுப் பெண்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தாள் 

மணமேடையை வலம் வந்து, ஈஸ்வரி அத்தை சொன்னபடி குழுமியிருந்த மக்களுக்கு கைகூப்பி முகமன் கூறிவிட்டு, மணமகன் அருகே இமயா அமரப் போக, “ஒரு நிமிஷம் நில்லு” என ஒரு குரல் இடையிட்டது 

அதை எதிர்பாராத இமயா அதிர்வில் கீழே விழப்போக, மணமகள் தோழியாய் இருந்த உறவுப்பெண் விழாமல் தாங்கிப் பிடித்தாள் 

அதற்குள், “சம்மந்தியம்மா…” என்றபடி சண்முகம் அருகே வர, பின்னோடு தேவியும் பதட்டத்துடன் வந்து நின்றார் 

“நீங்க அங்கயே நில்லுங்க” என அதிகாரமாய் கூறிய மணமகன்  கார்த்தியின் அன்னை சாவித்ரி, இமயாவை நோக்கி நகர்ந்தார் 

என்னவென்பதை போல் தன் பெற்றோரை பார்த்த இமயா, தன் அன்னையின் கண்ணில் நீர் படலம் கண்டதும், ஏதோ சரியில்லை என்பதை உணர்ந்தாள் 

வந்தவர், இமயா அணிந்திருந்த நகைகளை ஆராய்ந்தார். திடீரென, “உன் நகையெல்லாம் கழட்டு” எனவும், என்ன செய்வதென புரியாமல் விழித்தாள் இமயா 

“உன்னைத் தான் சொல்றேன், கழட்டு” எனவும் 

“எதுக்கு கழட்ட சொல்றீங்க?” என்றாள் இமயா 

“ம்… உங்க வீட்ல சொன்ன மாதிரி அறுபது பவுன் போட்டு இருக்காங்களானு தெரியணும்” என்றார் மிடுக்காய் 

அதிர்வுடன் இமயா பெற்றவர்களை பார்க்க, “சம்மந்தியம்மா, எல்லாரும் பாக்கறாங்க, கொஞ்சம் இப்படி வாங்க” என கெஞ்சலாய் சண்முகம் அழைக்க 

“நேத்து மண்டபத்துக்கு வந்ததுல இருந்த கொஞ்சம் இப்படி வாங்க, கொஞ்சம் அப்படி வாங்கனு சாக்கு சொல்லிட்டே தான் இருக்கீங்க. மூணு லட்சம் தரேன்னு சொன்னது, இப்ப வரை ரெண்டு லட்சம் தான் கைக்கு வந்திருக்கு. அப்படியே கெஞ்சி கிஞ்சி தாலி ஏறிட்டா என்ன பண்ண முடியும்னு பிளான் பண்றீங்களோ?” என சாவித்ரி கோபமாய் கேட்க 

“ஐயோ அப்படி இல்லங்க, தயவு செஞ்சு கொஞ்சம் பொறுமையா இருங்க. முஹூர்த்த நேரம் முடிஞ்சுடும், மாங்கல்ய தாரணம் முடியட்டும், எப்படியாச்சும் பணத்தை தந்தர்றேன்”

“நகையே சொன்னபடி போட்ட மாதிரி தெரியல” என சாவித்ரி மீண்டும் இமயாவை பார்க்க 

“என்னப்பா இதெல்லாம்? இப்படி இவங்க பணம் நகைனு டிமாண்ட் செஞ்சதா என்கிட்ட நீங்க சொல்லவே இல்லையே” என பெற்றவரை கேள்வியாய் பார்த்தாள் இமயா 

“சொல்லியிருந்தா என் பையனை வேண்டாம்னு சொல்லி இருப்பியா?” என கோபமாய் கேட்ட சாவித்ரி

“ஒத்த பொண்ணை வெச்சுட்டு கல்யாணத்துக்கே இந்த லட்சணத்துல செய்யறவங்க, இனி மத்த சீரெல்லாம் எந்த அழகுல செய்யப் போறீங்க?” என கூண்டில் நிற்கும் குற்றவாளியை விசாரிப்பதை போல் விசாரித்தாள் சாவித்ரி 

அதுவரை பொறுமையை இழுத்து பிடித்து நின்ற ஈஸ்வரி, அதற்கு மேல் தாங்க மாட்டாமல், “என்னங்க இது, சபைல வெச்சு இப்படியா பேசறது? அதுவும் மணமேடைக்கு வந்தப்புறம்” எனக் கேட்க 

“மணமேடை வரை இந்த பிரச்சனை வந்ததுக்கு நானா காரணம்? என் பையனுக்கு கவர்ன்மென்ட் வேலை கிடைச்ச அன்னைக்கே உங்க தம்பி வீட்ல வந்து பேசினனே 

முன்னாடி பேசினது நாப்பது பவுன், ஒரு லட்சம்னு. ஆனா கவர்மெண்ட் வேலை கிடைச்சதால, இன்னும் இருபது பவுன் நகை, ரெண்டு லட்சம் பணம் சேத்தி தர்றதா இருந்தா கல்யாணத்தை வெச்சுக்கலாம், இல்லேனா இதோட நிறுத்திரலாம்னு சொன்னேன்

இவர் தான், அதெல்லாம் நான் செஞ்சர்றேன்னு வாக்கு குடுத்தார், உண்டா இல்லையானு கேளுங்க” என்றாள் சாவித்ரி 

“இவங்க சொல்றது உண்மையா சண்முகம்?” என ஈஸ்வரி கேட்க, மௌனமாய் தலை குனிந்து நின்றார் அவர் 

அதற்குள், “கார்த்திக், உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?” என இமயா அவன் புறம் திரும்பி கேட்க, அவன் ஒன்றும் பேசாமல் மௌனமாய் நின்றான் 

அதிலேயே அவனுக்கு தெரிந்து தான் இதெல்லாம் நடக்கிறது என்பதை உணர்ந்ததும், அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் இமயா 

“ஏங்க இன்னும் எந்த காலத்துல இருக்கீங்க? வரதட்சிணை கேட்டா ஜெயில்ல களி தான் திங்கணும், தெரியுமா?” என ஈஸ்வரி கேட்க 

“ஓஹோ… மெரட்டறீங்களோ? உங்க பொண்ணுக்கு நீங்க ஒண்ணுமே போடாம வெறுங்கழுத்தோட தான் கல்யாணம் பண்ணி குடுத்தீங்களா?” என சாவித்ரி கேலியாய் கேட்க 

“நாங்களா விருப்பப்பட்டு எங்க பொண்ணுக்கு செய்யறது வேற, இப்படி நீங்க கட்டாயப்படுத்தி கேக்கறது சரியில்ல” என்றார் ஈஸ்வரி 

“அதை அப்பவே சொல்லிருக்க வேண்டியது தான, நாங்க ஒண்ணும் உங்க பொண்ணே தான் வேணும்னு ஒத்தக் காலுல நிக்கலியே” என சாவித்ரி எரிச்சலுடன் மொழிய

“இதெல்லாம் உனக்கு தேவையாடா சண்முகம். இதுக்கு தான் நம்ம சொந்தத்துல பாப்போம்னு சொன்னேன், புருசனும் பொண்டாட்டியும் உலகத்துல இல்லாத மகளை பெத்து வெச்சுருக்கோம்னு பெரிய இடம் தேடுனீங்க. இப்பவே இப்படி காசு பணம்னு அலையறவங்க, நம்ம புள்ளைய எப்படி சந்தோசமா வெச்சிருப்பாங்க சொல்லு” என சாடினார் ஈஸ்வரி 

“இல்லக்கா, அவங்க மொதல்ல கேட்டதை நான் ரெடி பண்ணி வெச்சுட்டேன். கொஞ்ச நாள் முன்ன கவர்மெண்ட் வேலை கிடைச்சதும் திடீர்னு சேர்த்து கேட்டதும், பணத்துக்காக நிச்சயம் பண்ணின கல்யாணத்தை எப்படி நிறுத்தறதுன்னு எப்படியாச்சும் சமாளிப்போம்னு சரின்னேன்.

நான் சொல்லி வெச்ச எடத்துல பணம் வரல. அவசரத்துக்கு நெலம் காடுனு விக்க முடியல. அந்த ஒரு வாரம் பத்து நாளுல அந்த பணம் வந்துரும், இல்லேன்னா ஊர்ல இருக்கற நெலத்தை வித்தாச்சும் குடுத்துருவேன்” என்றார் பாவமாய்

குற்றவாளி போல் தந்தை கூனி குறுகி நின்றது இமயாவின் மனதை வருத்தியது

அந்த வருத்தத்தில், “இப்ப கூட எதுவும் பேச மாட்டீங்களா கார்த்திக்?” என இமயா எதிர்பார்ப்புடன் அவனை பார்க்க 

“ஓஹோ.. தாலி கட்றதுக்கு முன்னாடியே என் புள்ளையை எனக்கு எதிரா திருப்ப பாக்கறியா?” என சீறினாள் சாவித்ரி 

“கார்த்திக்… இப்ப நீங்க வாய தெறந்து பேசலைனா, கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது” என்றாள் இமயா தீர்மானமாய் 

“பாப்பா…” என சண்முகம் பதற 

“அப்பா… நீங்க இதுல தலையிடாதீங்க” என அவரை தடுத்தாள் இமயா 

“அவ சொல்றது தான் சரி. பெத்தவங்களுக்கு எதிரா பேச சொல்லல, ஆனா தப்புனு தெரிஞ்சும் அதுக்கு துணை போறவரை நம்பி எப்படி புள்ளய குடுக்கறது” என இமயாவின் பக்கம் பேசினார் ஈஸ்வரி 

“இமயா ப்ளீஸ் கொஞ்சம் பொறுமையா இரு” என கார்த்திக் கெஞ்சலாய் பார்க்க 

“பொறுமையா இருக்கணுமா? மணமேடைல வெச்சு உங்கம்மா எங்க எல்லாரையும் அசிங்கப்படுத்துறங்க, நான் பொறுமையா இருக்கணுமா?”

“அப்படி என்ன ஊர் உலகத்துல கேக்காததை கேட்டுட்டாங்க?” என்றான் எப்படியாவது பிரச்சனை தீர வேண்டுமென

ஆனால், அது இமயாவின் கோபத்தை இன்னும் தூண்டி விட்டது

“ஓ… அப்ப கவர்ன்மென்ட் ஜாப் கிடைச்சத சாக்கா வெச்சு  எக்ஸ்ட்ரா டிமாண்ட் பண்ணினது கூட தப்பில்ல… அப்படி தான”

“இமயா, எதுக்கு இப்படி பிரச்சனையை பெருசு பண்ணிட்டே போற?” என எரிச்சலானான் கார்த்திக்

“பிரச்சனையை நான் பெருசு பண்றனா?” என்றாள் கோபமாய்

“டேய் கார்த்தி,  எதுக்குடா கண்டவளுக்கெல்லாம் பதில் சொல்லிட்டுருக்க. மாலையை தூக்கி போட்டுட்டு வாடா, இந்த பஜாரி நம்ம குடும்பத்துக்கு சரிப்பட மாட்டா” என சாவித்ரி கத்த

“ஐயோ சம்மந்தி…” என சண்முகமும் தேவியும் பதற, யாரும் எதிர்பாராத விதமாய், இமயா தன் கழுத்தில் இருந்த மாலையை கழட்டி எறிந்தாள் 

அனைவரும் விக்கித்து நிற்க, “பொட்டப்புள்ளைக்கு இவ்ளோ திமிரு ஆகாது. மணமேடை வரை வந்து கல்யாணம் நின்னா, உனக்கு இனி எப்படி கல்யாணம் நடக்குதுனு நானும் பாக்கறேன்” என சவால் விட்டாள் சாவித்ரி

“கல்யாணமா, தெரிஞ்சே போய் மறுபடி நான் கிணத்துல விழுவனா என்ன? சத்தியமா இந்த ஜென்மத்துல அப்படி ஒரு நிகழ்வு என் வாழ்க்கைல இருக்காது” என்ற இமயாவின் பதிலில் அனைவரும் அதிர்ந்து நிற்க

“அத்தை என்னை வீட்ல கொண்டு போய் விடுங்க” என ஈஸ்வரியின் முன் வந்து நின்றாள் இமயா 

கண்ணீர் இல்லை, அலட்டல் இல்லை, பெரிதாய் ஏமாற்றமும் வருத்தமும் கூட அவள் முகத்தில் இருக்கவில்லை

இப்படி உணர்ச்சி துடைத்த நிலை நல்லதல்ல என்பதை உணர்ந்த ஈஸ்வரி, “இங்க பாரு கண்ணு, இப்ப நீ சரினு சொல்லு, இந்த முஹுர்த்தத்துலயே நம்ம சொந்ததுலயே ஒரு பையன பாத்து…” என்ற அத்தையை  இடைமறித்த இமயா 

“அத்த, இந்த பார்ட் பொருந்தலைனா வேற சரி வருதானு போட்டு பாக்கறதுக்கு நான் மெஷின் இல்ல, உயிரும் உணர்வும் இருக்கற மனுசி. இந்த பேச்சை இதோட விட்டுடுங்க, தயவு செஞ்சு என்னை வீட்ல கொண்டு போய் விடுங்க” என்றாள் தீர்மானமாய் 

வேறு வழியறியாது இமயாவோடு வீட்டுக்கு கிளம்பிய ஈஸ்வரி, “சண்முகம், நான் இவள வீட்டுல விட்டுட்டு உஷாவ துணைக்கு வெச்சுட்டு வரேன். நீ மனச விடாத, தைரியமா இரு” என உடன் பிறந்தானுக்கு தைரியம் உரைத்து விட்டு வெளியேறினார் 

சற்று நேரத்தில் மொத்த கூட்டமும் கலையத் தொடங்க, சண்முகமும் தேவியும் நடப்பதை நம்ப இயலாமல், யாரையும் தடுக்கவும் இயலாமல் கண்ணீருடன் நின்றனர் 

இமயா இப்படி புரட்சி செய்வாள் என கார்த்தியோ அவன் பெற்றவர்களோ எதிர்பார்க்கவில்லை 

மிரட்டினால் வழிக்கு  வருவார்கள் என்றெண்ணியே சாவித்ரி மிரட்டியது, அது இப்படி ஆகுமென நினைக்கவில்லை என்பது, அவளின் வெளிறிய முகத்தில் இருந்தே தெரிந்தது 

கார்த்தி வரதட்சணை பணம் என ஆசைபடுபவனல்ல, அதே நேரம் அது கூடாது என புரட்சி செய்பவனுமல்ல

சராசரி மிடில் கிளாஸ் குடும்பத்தில், பெற்றோர் நமக்கு நன்மையே செய்வார்கள், அவர்களை எதிர்ப்பது தவறு என்றே சொல்லி வளர்க்கப்பட்டவன்

இமயாவின் மீது ஈர்ப்பும், மனைவி ஆகப் போகிறவள் என்ற உரிமையில் சிறு நேசமும் இருந்த போதும், அவளுக்காக பெற்றவளை எதிர்க்க மனம் ஒப்பாமல், மௌனம் காத்தான்

அந்த மௌனம் காரணமாகவே, இப்போது மனம் கவர்ந்தவளை இழந்து நிற்கிறான். பேசும் வார்த்தைகள் மட்டுமல்ல, பேசாத வார்த்தைகள் கூட, சில நேரம் ஆறாத வடுவை உண்டாக்கும் 

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

              

                  

(தொடரும்… ஜூலை 1, 2021)

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

4 Comments

  1. கடைசி வாக்கியம் உண்மைதான். பேச வேண்டிய நேரத்தில் எதைப் பேசணுமோ அதை தைரியமாக மனம் விட்டுப் பேசிடணும். வாயை மூடிக் கொண்டால் பின்னாட்களில் பிரச்னை தான். பல ஆண்களின் பலவீனமே இது தான். பேசவேண்டிய சமயங்களில் வாய் மூடிப் பேச மாட்டார்கள். 🙁

அம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா

சிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)