in

அம்மா (சிறுகதை) – ✍ விபா விஷா

அம்மா (சிறுகதை)
  • மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாம நிரைதாழ்ந்த பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து – என்னைக்

கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்.

என்னும் நாச்சியாரின் திருமொழிக்கேற்ப, மத்தளங்கள் கொட்டிட, வரிசங்கு  ஊதிட, என் காதல் கணவர், எந்தன் கைத்தலம் பற்றிட நான் கண்ட கனவு… இதோ இன்று நனவாகிக் கொண்டு இருக்கிறது.

உலகத்தில் உள்ள இன்பங்களெல்லாம் என் கண் முன்னே விரிந்து கொண்டிருக்க, திருமங்கல நாணினைப் பூட்டிடும் பொழுது என்னவர் உதிர்த்த  “I  LOVE YOUடி பொண்டாட்டி” எனும்  வார்த்தையில், என் விழிகளின் ஓரம் சொட்டியது ஒரு துளி கண்ணீர்

ஐந்து வருடங்கள் காதலித்தும் கூட, அவர் என்னிடம் இதுவரை இந்த வார்த்தையை கூறவில்லை. தன் மனதினை உரைத்திடும் பொழுது  கூட மணத்தைப் பற்றிக் கேட்டாரே ஒழிய, காதல் உரைக்கவில்லை.

ஆம்… எங்கள் முதல் சந்திப்பு, இன்றிலிருந்து ஐந்து வருடங்களுக்கு முன்பாக, நான் வேலையில் சேர்ந்த முதல் நாள்

அவருக்கும் அன்று தான் வேலையில் முதல் நாள், ஆனால் டீம் லீடராக

ஒரே குழுவில் வேலை. ஏதோ சந்தேகம் கேட்க அவரிடம் சென்றவளிடம் என்னவர்… என் வசீகரன் கூறிய முதல் வார்த்தை..

“உன் சந்தேகம் எல்லாம் அப்பறம் கேளு இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லு. நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்றதும், விதிர் விதிர்த்து போய் விட்டது எனக்கு

பின்னே அப்பொழுது தான் முதன் முதலில் பார்க்கும் ஒரு பெண்ணிடம் முதல் வார்த்தையே  கல்யாணத்தைப் பற்றி பேசினால்?

பயத்தில் கை கால்கள் நடுங்க சட்டென்று திரும்பிப் போனவளை, இதற்கடையில் சிறு சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் அவர், என் வசு.

நாட்கள் செல்லச் செல்ல… எனக்கிருந்த பயம் மறைந்து, அவர் அருகினில் பாதுகாப்பாக உணர ஆரம்பித்தேன்

யாரொருவன் ஒரு பெண்ணுக்கு அவனருகில் இருக்கிற பொழுது பாதுகாப்பான உணர்வினை அளிக்கிறானோ, அவனே உண்மையான ஆண்மகன். அவன் நண்பனாகட்டும், காதலனாகட்டும் அல்லது கணவனாகட்டும்

என் வசு எந்த ஒரு தருணத்திலும் என் மனதில் பயத்தினை விளைவித்ததே இல்லை எனலாம். அவர் தனது கண்களால் கூட கண்ணியம் பிழன்றதில்லை. ஆனால் காதலும் உரைத்ததில்லை.

நான் கூட அவரிடம் கேட்டிருக்கிறேன், “வசு உங்ககிட்ட நான் எவ்வளவோ முறை லவ் யூ சொல்லிருக்கேன். ஆனா நீங்க என்கிட்ட ப்ரபோஸ் பண்றப்ப கூட லவ் யூ னு சொல்லலயே?” என்று

அதற்கு எப்பொழுதும் அவரது வழமை போல் அக்மார்க் பதில், “லவ் யூ னு சொன்னா தான் காதலா? சொல்லலைனா உன் மேல எனக்கிருக்கற காதல் உனக்கு புரியாதா என்ன?” என்பார்

“அப்ப சரி, நானும் இனிமே உங்க கிட்ட லவ் யூ சொல்லவே மாட்டேன் பாருங்க” என நான் கூற

“ஹா ஹா ஹா… பாக்கலாம் அதையும்” எனவும், சவால் விடுவதை போல சிரித்தார்

ஆமாம் பின்னே… ஸ்ரீ ராம ஜெயம் போல ஒரு நாளைக்கு ஆயிரத்தெட்டு முறை ‘ஐ லவ் யூ’ என பாராயணம் செய்பவள் இப்படி கூறினால் சிரிப்பு வராதா?

இந்தக் கல் நெஞ்சக்காரர், காதலிக்கிறேன் என்று வாயால் கூறாமலே நித்தமும் உணரச் செய்தார் அவரது காதலை.

அதனால் திகட்டாத எங்கள் காதலுக்கு தித்திப்பு சேர்க்க வேண்டும் என திருமணம் முடிந்ததுமே எவ்வித காரணமும் கொண்டு தள்ளிப் போடாமல் உடனே குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்தோம். அதுவும் என் வசுவுக்கு குழந்தைகளென்றால் கொள்ளைப் பிரியம்.

“குறைந்தது அரை டஜன் குழந்தைகளாவது வேண்டும் நமக்கு” என அவர் கூறிட

“ஏன் நாடு இருக்கும் நிலைமையில் இன்னும் அரை டஜன் சேர்த்து கேட்க வேண்டியது தானே?” என  கேலி செய்தேன்

#ad

              

                  

ஆனால் வருடங்கள் தான் கழிந்ததே  தவிர, எங்கள் காதலிலும் சரி, என் உடலிலும் சரி எவ்வித மாற்றமும் நிகழவில்லை.

பல்வேறு மருத்துவமனைகள், பல்வேறு மருத்துவர்கள் ஏகமனதாக எடுத்துக் கூறிய விஷயம் இது தான்.

எனக்கு… என் கருப்பை முழுமையாக வளரவில்லை. என்னால் ஒரு கருவினை  சுமக்க, பெற்றெடுக்க இயலாது. டெஸ்ட் டியூப் கூட பயன் தரவில்லை.

குழந்தை போல என்னை பார்த்துக் கொள்ளும் வசுவிற்கு, என்னால் ஒரு குழந்தையைக் கொடுக்க முடியாது. இந்த எண்ணம் தான் என் மனதினை வாளால் அறுத்தது.

ஆயிரம் கோவில்களுக்கு ஏறி இறங்கி பலநூறு வேண்டுதல்கள் வைத்தும், அதில் ஒரு தெய்வம் கூட என் மனுவினை ஏற்றுக் கொள்ளவில்லை.

இறுதியாக மலட்டம்மன்  கோவில் என்றொரு கோவிலுக்கு சென்றோம். குழந்தையில்லாமல் மலடியாக இருந்த பெண்ணொருத்தி தன்னைத் தானே அழித்துக் கொண்டு தெய்வமாய் ஆனதற்கான சான்றாய் இருந்தது அக்கோவில்.

அங்கே  அந்த அம்மனோ குழந்தை பெறாவிட்டாலும் ஊருக்கே தாயாகி விட்டாள்.

இதில் என்னவொரு முரண் பாருங்கள், அம்மா என்றொரு அழைப்பினிலே அவளுக்கிருந்த மலடி என்ற பட்டம் அழிந்தே விட்டதே.

இப்படியே தினம் தினம் ஒவ்வொரு கோவிலிலும் ஒரேயொரு வேண்டுதலுமாக என் நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க, ஒரு நாள் அருகிலிருக்கும் கடைக்குச் சென்று விட்டு திரும்புகையில் என் பக்கத்து வீட்டுக் குழந்தை விளையாடி கொண்டு இருக்கும் போதே கீழே விழுந்து அடி பட்டுவிட, உடனே பதறி ஓடிப் போய் குழந்தையை தூக்கிச் சமாதானம் செய்ய முயன்றேன்.

அப்பொழுது அக்குழந்தையின் தாயார் அங்கு ஓடி வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு, “நீங்க போங்க, நான் பார்த்துக்கறேன்” எனக் கூறியவள்

நான் திரும்பியதும், “வந்துட்டா பெரிய இவளாட்டம்… குழந்தை இல்லாதவ, இவ கண்ணு பாட்டு தான் என் குழந்தை கீழ விழுந்துருக்கும். இப்போ இவளே கீழ விழுந்த குழந்தையை தூக்கி சமாதானம் செய்யறேனு வரா. ஹையோ இவ கை பட்டதுல இன்னும் என் குழந்தைக்கு  என்னென்ன சீக்கு வர போகுதுனு தெரியலையே…” என எனக்கு கேட்க வேண்டுமென்பதற்காகவே சற்று உரக்க கூறினாள் அந்தப் பெண்மணி

அந்த அம்மாள் இவ்வாறு கூறியதும் உள்ளுக்குள் நொறுங்கி விட்டது  எனக்கு.

ஏற்கனவே யாரும் முகத்திற்கு முன்னால் எதுவும் கூறாவிட்டாலும், முதுகுக்கு பின்னால் எதாவது பேசுவார்களோ என மனதிற்குள் புழுங்கிக் கொண்டு இருந்தவள் நான்

ஏனென்றால், “பிறர் முதுகுக்கு பின்னால் நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம் தட்டிக் கொடுப்பது தான்” என்ற பொன்மொழிக்கு எதிர்பதமாய் நடப்பது தானே பெரும்பாலோரின் வழமை.

 இப்பொழுது இந்த அம்மாள் இப்படி வேண்டுமென்றே கூறவும் சுயபட்சாதாபம் மேலோங்க, மிகுந்த சுயநலத்துடன் என் காதல் கணவனை மறந்து, தூக்க மாத்திரையை காதலித்து விட்டேன்.

மருத்துவர்களின் அதி தீவிர போராட்டத்திற்கு பின்பு என் வசுவின், “வந்துடு அனு.. என்கிட்ட வந்துடு அனு” எனும் கதறலில் மீண்டும் இவ்வுலகினை அடைந்தேன்

கண் விழித்ததும் வசுவின் முகம் தேடிய நான், அவர் என்னருகில் இல்லாததால் மிகுந்த அலைப்புற்று போனேன்.

சற்று நேரத்தில் என்னை அனுமதித்திருக்கும் அறைக்குள் வந்த வசு, மருத்துவமனையே அதிரும்படி ஓங்கி ஒரு அறை அறைந்தார்.

“நீ என்ன விட்டுட்டு போய்டலாம்னு நினைச்சுட்ட இல்ல? உனக்கு என்ன விட குழந்தை தான் முக்கியமா போய்டுச்சு இல்ல?” என என்னைக் கட்டிக் கொண்டு அழ

‘ஐயோ ரொம்ப சுயநலமா யோசிச்சமே’ என்ற கழிவிரக்கத்தில்

“என்ன மன்னிச்சுடுங்க வசு, நான் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல இந்த மாதிரி ஒரு காரியம் பண்ணிட்டேன்” எனக் கதறினேன்.

“ஏய் நீ பேசாத… இப்படி பாதியிலேயே என்ன விட்டுட்டு போகறதுக்கு தான் உன்ன அப்படி காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டனா?

குழந்தை இல்லனா யாராலயும் வாழவே முடியாதா? நமக்குனு ஒரு குழந்தை இல்லனா நம்ம காதல் செத்துப் போய்டுமா?

அது மட்டும் இல்லாம, குழந்தை பெத்துக்கறது தான் ஒரு பொண்ணோட தகுதியா என்ன? ஒரு பொண்ண அவளுக்காக மட்டுமே நேசிக்கக் கூடாதா?

இல்ல மாசமா இருக்குறப்போ மட்டும் அவளை தலையில் தூக்கி வச்சுக்கறதும், குழந்தை பெத்ததுக்கு அப்பறம் அவளை கால்ல போட்டு மிதிக்கறதும் சரியா?

சரி இப்போ நமக்கு குழந்தை இல்லைனதும் என் காதலை மறந்துட்டு நீ உன்னைய அழிச்சுக்க நினைச்ச இல்ல?அப்போ இந்த குறை எனக்கு இருந்துதுன்னா நான் இத தான் செய்யணும்னு நீ எதிர்பாப்பயா?” எனக் கேள்வி மேல் கேள்வியாய் கேட்டார்.

அவரின் ஒவ்வொரு கேள்விகளும் சாட்டையாய் விளாசிட, ஆனாலும் அப்போதிருந்த மனநிலையில்,”நான் பண்ணினது தப்பு தான். ஆனா இப்போ ஒரு நல்லது பண்ணனும்னு நினைக்கறேன். நீங்க நல்ல ஆரோக்கியமான ஒரு பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணிக்கணும்” எனக் கறாராக நான் கூறியதும், மீண்டும் என்னை நோக்கி கையை ஓங்கி விட்டார்

“ச்சே… உன்ன மறுபடியும் அடிக்க வேணாம்னு பாக்கறேன்” என மிகுந்த எரிச்சலுடன் மொழிந்தார்

ஆனால் நானோ சற்றும் அசராமல், “நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கலைனா, நான் கண்டிப்பா மறுபடியும் இதே முயற்சியை தான் செய்வேன். நீங்க இன்னும் எத்தனை முறை என்ன காப்பாத்த முடியும்னு நினைக்கறீங்க?” என பதிலுக்கு நான் வினவ

“அப்படி ஏதாவது நீ பண்ணினனு வச்சுக்க, நீ காண்பிச்ச  வழியிலேயே நானும் வந்துடுவேன்” என்றதுடன் வெளியேறினார்

#ad

             

         

அதன் பின்பு மருத்துவமனையிலிருந்த நாட்களில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை.

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அன்றும் கூட, எந்த பேச்சுமின்றியே இருவரும் வீடு சென்று கொண்டிருந்தோம்.

வெளியிலேயே முகத்தைத் திரும்பிக் கொண்டிருந்த எனக்கு, சிறிது நேரம் கழித்தே சுற்றுப்புறம் உரைக்க, கவனித்துப் பார்த்தால் இது எங்கள் வீட்டிற்கு செல்லும் வழி இல்லை என்பது தெரிந்தது.

ஆனாலும் பார்வையைக் கூட திருப்பாமல் நான் அமர்ந்திருக்க, வசுவோ எக்கினைப் போன்ற இறுகிய முகத்துடன் இருந்தார்.

இறுதியாக எங்கள் கார் சென்ற இடம்  ஒரு மருத்துவமனையைப் போலவே தோன்றியது.

தூரத்தில் இருந்து மருத்துவமனை போல தோன்றியதுமே.. மீண்டும் செக்கப், ஊசிகள், மருந்துகள், மாத்திரைகள் என சலித்துக் கொண்ட நான், அது என்ன மருத்துவமனை என்று கூட  கவனிக்கவில்லை.

ஆனால் அந்தக் கட்டிடத்தின் உள்ளே சென்று பார்த்தால், பிறந்து ஒண்டிரண்டு நாட்களிலிருந்து நான்கைந்து வயது வரையுள்ள குழந்தைகள் இருந்தனர்

ஒரே கர்ப்பகிரகத்தில் ஒரு நூறு தெய்வங்கள் சேர்ந்து இருப்பது போல, மகிழ்ச்சியும் கண்ணீருமாக என் கணவரை நான் நிமிர்ந்து பார்த்தேன்

அதே மனநிலையில் இருந்த வசுவும், “பெற்றால் மட்டும் தான் பிள்ளையா அனு? எடுத்து வளர்த்தால் அவங்க நமக்கு குழந்தைகள் ஆக மாட்டாங்களா? இல்ல  நாம தான் அவங்களுக்கு அப்பா, அம்மா ஆக மாட்டோமா?” என வினவினார்.

நான் உடனே அவரது மார் மீது சாய்ந்து கொள்ள, அவர் சட்டை என் கண்ணீரினால் நனைந்து விட்டிருந்தது.

சற்று உணர்ச்சி வசப்பட்டாலும், சீக்கிரம் தன்னை நிலைப்படுத்திக் கொண்ட வசு, “கண்ணீரே கண்ணீரே சந்தோஷ கண்ணீரே” எனப் பாட்டு பாட, மனம் கொள்ளாத மகிழ்ச்சியில் சிரித்தேன்

 “சீக்கிரம் ஒரு குழந்தையை தேர்ந்தெடு மா” என்றார்  

உடனே திரும்பி சுற்றும் முற்றும் பார்த்த நான், சட்டென ஒரு குழந்தையைத் தூக்க, அருகிலிருந்த மற்றோரு குழந்தை ஏக்கத்துடன் என்னைப் பார்த்தது.

மின்னலடித்தாற் போல் ஒரு எண்ணம் என்னைத் தாக்கியது. உடனே மனம் நொறுங்கித் தரையில் அமர்ந்துவிட்டேன்

உடனே அருகில் வந்த வசு. “என்னாச்சு அனு?” என பதறினார்

“இதுல ஒரு குழந்தையை மட்டும் நாம கூட்டிட்டு போய்ட்டா மத்த குழந்தைகளெல்லாம் என்ன பண்றதுங்க” என நான் விழிகளில் நீருடன் கேட்க, என் மனமறிந்த மணாளனுக்கு புரிந்தது எந்தன் மனம்.

சற்று யோசித்தவர், முகம் தெளிவுற, “நீ என்ன செய்யணும்னு சொல்ற அனு?”எனக் கேட்டதும், என் யோசனையை கூறினேன்

அதை முழுமையாகக் கேட்டவர்,”நீ சொல்றது சரி தான்னு எனக்கும் தோணுது அனு. வா நாம இந்த ஆஸ்ரமத்தோட டைரக்டர போய் பாக்கலாம்” என என்னை அழைத்துச் சென்றார்.

அங்கு அந்த ஆஸ்ரம நிர்வாகி மிகுந்த வயதானவராக இருந்தாலும் கூட, அந்தக் குழந்தைகளின் மீது அதிப்பிரியமாக இருந்தார்

எங்கள் எண்ணத்தை அறிந்ததும், “இங்க பாருங்க ப்பா.. இங்க இருக்கற குழந்தைகளை பார்த்ததும் ஏதோ ஒரு உணர்ச்சி வேகத்துல நீங்களே இந்த ஆஸ்ரமத்தை எடுத்து நடத்தறேன்னு சொல்றீங்க.

ஆனா இதெல்லாம் நடைமுறைக்கு சரிப்பட்டு வருமானு யோசிக்கணும். அது மட்டுமில்லாம இங்க எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? உங்கள பார்த்த நல்லா வசதியானவங்க மாதிரி தான் தெரியுது. ஆனா டொனேஷன் இல்லாம இந்த மாதிரி ட்ரஸ்ட் நடத்தறது ரொம்ப கஷ்டம்

நாங்க ஏற்கனவே ரொம்ப கஷ்டத்துல தான் இந்த ஆஸ்ரமத்தை நடத்திட்டு இருக்கோம். எனக்கும் வயசாகிடுச்சு தான். ஆனாலும் நீங்க இப்படி வந்து கேக்கறதுக்காக அவசரப்பட்டு இந்த குழந்தைங்களோட வாழ்க்கையை பணயம் வைக்க முடியாது” என மறுத்தார் அவர்

மனம் விட்டுப் போன நாங்கள், குழந்தையின்றி நாங்கள் படும் வேதனையை அவரிடம் எடுத்து கூறினோம்.

சற்று யோசித்தவர் இரண்டு நாட்கள் கழித்து எங்களுக்கு பதிலுரைப்பதாகக் கூறினார் 

இரண்டு நாட்கள் கழித்து எங்களை வரச் சொன்னவர், அந்த ஆஸ்ரமத்தின் பொறுப்புகள் அனைத்தும் எங்கள் பெயரில் மாற்றப்பட்டதற்கான ஆவணங்களை எங்களிடம் அளித்தார்

இது கனவா நிஜமா என எங்களுக்கு புரியவில்லை. மகிழ்ச்சியின் உச்சியில் ஓடோடிச் சென்று அங்கிருக்கும் அத்தனை குழந்தைகளையும் அள்ளி எடுத்து, கட்டி அணைத்து முத்தமழை பொழிந்தேன்

அதன் பின் நாளொரு குழந்தையும் பொழுதொரு அழு குரலுமாய் என் நாட்கள் அர்த்தமுடன் கழிந்தது

கண்டிக்கும் நேரத்தில் கடுமையாகவும், கனிவு காட்டும் நேரத்தில் கட்டி அணைத்தும் என் பிள்ளைகளை பாசத்துடன் வளர்த்தேன்.

என் குழந்தைகளும் கூட, யாருடைய உந்துதலும் இன்றி தானாகவே மனதார உணர்ந்து என்னை ‘அம்மா’ என விளிக்கத் தொடங்கினர்

ஒவ்வொரு குழந்தையும் என்னை ‘அம்மா’ என்றழைக்கும் போது, கருவுறாமலேயே தாயமுது சுரந்தது எனக்கு

இதோ இன்று நாற்பது வருடங்கள் கடந்து விட்டிருந்த நிலையில், எங்கள் குழந்தைகள் எங்கு இருப்பினும், எப்படி இருப்பினும், அவர்களுக்குத் தாய் தந்தையாக நானும் என் வசுவும்

இதில் சற்று வருத்தமான விஷயம் என்னவென்றால், எங்கள் பிள்ளைகளின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகியது தான்.

ஆனால் பெற்ற தாய் அவர்களை கைவிட்டு விட்டால் என்ன?  அவர்களை சந்தோசத்துடன் அள்ளி அணைக்க நான் இருக்கிறேனே?

அதனால் தான் இன்று சற்று தொலைவில் நின்று என் பிள்ளைகள் ஒவ்வொருவரையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூடவே சற்று வருத்தத்துடன்.

அனைவரும் முகத்தில் அதிக வேதனையுடன் எனக்கு இறுதி முறைமை செய்வதற்காக “அம்மா அம்மா” என அழுதபடி நின்றிருக்கின்றனர்

ஆம்… மலடியாக இருந்த நானும் இப்பொழுது அம்மாவாகி விட்டேன். அந்த மலட்டம்மனைப் போல. அதே நிறைவுடன் என் வாழ்வும் முடிந்தது

(முற்றும்)

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

தேவதை 💕 (சிறுகதை) – ✍ ப. சிவகாமி

காதலெனும் தேர்வெழுதி ❤ (பகுதி 4) – ✍️ சஹானா கோவிந்த்