sahanamag.com
தொடர்கதைகள்

ஆழியின் காதலி 💕(பகுதி 3) -✍விபா விஷா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

சூரியன் தன் ஆயிரம் கரங்கள் நீட்டி, இந்த பூமித் தாயை அணைக்க விரைந்து கொண்டிருந்தான்.

பூமியின் முக்கால் பாகத்தை நிரப்பிய அந்த நீல நிறத் தேவதை, நம் நாயகர்களின் கண்கள் முழுதும் நிறைத்து இருந்தாள்.

ஏதோ ஒரு தைரியத்தில் ஆபத்தான வேலை என தெரிந்தும் கிளம்பி வந்திருந்த இருவருக்கும் மனதில் பல்வேறு எண்ணங்கள். அதில் முதன்மையானது குருநாதனை கண்டுபிடிப்பது, அடுத்து அந்த ரத்னமணி கிரீடத்தை அடைவது. அனைத்திலும் முக்கியமானது, இருவர் உயிரையும் காத்துக் கொள்வது.

இவற்றுள் அதிகப் பொறுப்பு அர்னவிற்கே இருந்தது. ஏனென்றால் இந்தக் காரியத்துக்குள் விக்ரமை இழுத்து விட்டது அர்னவ் தான்

இது என்னவோ ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயம் போல ஏதோ ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு விக்ரம் கூறினாலும், அர்னவினால் அதை முழுதாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை

அது மட்டுமல்லாமல் விக்ரம் எடுத்து வந்த அவன் தாத்தாவின் புத்தகம் முக்கால் வாசி சிதைந்திருந்தது. அவன் தாத்தாவும் பேச முடியாத நிலையில் இருந்தார்

அந்த புத்தகத்தில் அர்னவிற்கு உறுத்தலாக இருந்த விஷயம், அந்த மச்ச அகழெலி தான்

ஏதோ ஒரு எழுத்தாளர் இந்தத் தீவை பற்றித் தெரிந்து கொண்டு, தன் கற்பனையின் உதவியால் ஒரு கதையை எழுதி இருக்கிறார் என்று வைத்துக் கொண்டாலும், இந்த மீன் மச்சம், அதுவும் சரியாக வலது கை மணிக்கட்டில் இருப்பது போல் எழுதி இருப்பது தான் புரியவில்லை (அந்தப் புத்தகத்தின் சிதையாத பகுதியில் இதுவும் ஒன்று).

இவை அனைத்துமே தற்செயலா?அல்லது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விதியா?

தற்செயல் என்றால் ஏன் தன் தந்தை தனக்கு இப்படி ஒரு மச்சம் இருப்பதை வெளியே சொல்லக் கூடாது, யாருக்கும் காண்பிக்கக் கூடாதெனக் சொல்ல வேண்டும்? அந்த மச்சத்தை மறைக்கும் விதமாக வலது கையில் கடிகாரத்தைக் கட்டுமாறு தந்தை தன்னிடம் ஏன் கூறினார்?

ஒருவேளை அவருக்கு இந்தத் தீவைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்குமா? 

இவ்வாறெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தவனை விக்ரமின் குரல் கலைத்தது…

“என்ன பாஸ்? ஏதோ படு தீவிரமா யோசிச்சுட்டு இருக்கீங்க?”

“ஒண்ணுமில்ல விக்கி, நாம புறப்பட்டு இருக்கற காரியம் பத்தி தான். எல்லாம் நல்லபடியா முடியணுமே, அதான் எந்தெந்த விதத்துல நமக்கு ஆபத்து வரும்னு யோசிச்சுட்டு இருக்கேன். முக்கியமா உன்ன பத்திரமா திரும்பக் கூட்டிட்டு போகணும்.

நாம கிளம்பி இருக்கறது ரொம்பச் சீக்ரெட்டான விஷயம், அதனால என்னால நிறைய ஆளுங்கள நம்மளோட பாதுகாப்புக்காகக் கூட்டிட்டு வர முடியல. அந்த இடத்துக்கு நாம ரெண்டு பேர் போறதுக்கு அனுமதி வாங்கறதே கஷ்டமாகிடுச்சுனு வேலவமூர்த்தி அங்கிள் சொல்லிட்டாரு. எத்தனை பேர கூட்டிட்டு வந்தாலும் ஒவ்வொருத்தரோட உயிரும் ரொம்ப முக்கியம் இல்லையா? ஆனா இப்ப நாம எத யோசிச்சும் பிரயோஜனமில்ல. இந்த விஷயத்துல எத்தனை ஆபத்து வந்தாலும் நாம கண்டிப்பா ஜெயிக்கணும, எனக்கு ஜெயிப்போம்னு நம்பிக்கை இருக்கு” என்றான் அர்னவ் நம்பிக்கையுடன் 

“நீங்க கரையில இருக்கறத விடக் கடல்ல இருக்கறது தான் உங்களுக்கு ரொம்ப பாதுகாப்புனு எனக்குத் தோணுது பாஸ்” என்றான் விக்ரம் பூடகமாய்

“ஏன்டா? ஏன் உனக்கு அப்படித் தோணுது? ஏதாவது சொல்லணும்னா அத என்கிட்ட நேரடியாவே சொல்லலாம் விக்ரம், ஏன் இப்படிச் சுத்தி வளைச்சு பேசற?” என ஆதங்கத்துடன் கூறினான் அர்னவ்

“சுத்தி வளைக்கமா நேரடியா சொல்லணும்னு தான் எனக்கும் ஆசை பாஸ், ஆனா அதுக்கு என்கிட்ட போதுமான ஆதாரம் இல்ல. நாம திரும்பச் சென்னை போறதுக்குள்ள எல்லா ஆதாரமும் கிடைச்சுடும். அப்பறம் சொல்றேன், எல்லாத்தையும் முழுசா” என்றான் விக்ரம்

“என்னமோ போ… என் நினைப்பு முழுக்க இந்தக் கடல் மட்டும் தான் ஆக்கிரமிச்சுருக்கு. வேற எதையும் எனக்கு யோசிக்கக் கூடத் தோணல, ஆனா இந்தக் கடல் அனுபவம் நம்ம வாழ்க்கையில ரெம்பவே மறக்க முடியாததா இருக்கும்னு மட்டும் தோணுது” என்றான் அர்னவ்

“ம்ம்.. எனக்கும் அப்படித் தான் தோணுது பாஸ். சரி இன்னொன்னு கேட்கறேன், இது எதுவுமே உண்மை இல்லனா?ஒருவேல யாரவது நம்மள ட்ரிக்ஆ இந்த ட்ராப்ல மாட்டி விட்ருந்தா என்ன செய்யப் போறோம்?” என விக்ரம் கேட்க 

“நீ என்ன கேட்க வரேன்னு எனக்குப் புரியுது. யாராவது நம்ம வேலவமூர்த்தி அங்கிள ஏமாத்தி இந்த மாதிரி ஒரு பொக்கிஷம் இருக்குனு சொல்லியிருந்தா என்ன செய்றதுன்னு தான கேக்கற? நான் அங்கிளோட பேச்சை மட்டுமே கேட்டு இந்த ரிஸ்க் எடுக்கல விக்கி. என் அப்பாவோட டைரில இதைப் பத்தி குறிப்பு இருந்துச்சு. அது தான் எனக்கு இந்த ஆராய்ச்சியில் இறங்க ஒரு தூண்டுதலா இருந்துச்சு. அத நம்பித் தான் நான் குருநாதன் சார இங்க அனுப்பி வச்சேன்” என்ற அர்னவ்,விக்ரமிடம் தன் தந்தையின் டைரியைக் கொடுத்தான்

அதைப் படித்துப் பார்த்த விக்ரமிற்கு, தனது தாத்தா கூறிய கதையுடன் அந்த டைரி பெருமளவு ஒத்துப் போவது போல் இருந்தது. ஆனால் ஒரு பேச்சுக்கு கூட அந்த வேலவமூர்த்தி தனக்குக் கெடுதல் நினைத்திருப்பான் என்று கூற அர்னவிற்கு வாய் வர வில்லையே, இப்படிப்பட்டவனை அழிக்கத் திட்டமிடுகிறார்களே என எண்ணிக் கொண்டிருந்தான்

#ad

             

         

இருவரும் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்க, அவர்களது SONAR,  கடலில் மிகப்பெரிய புயல் தோன்றி இருப்பதை உணர்த்தியது.

ஆனால் அவர்கள் கடலினுள் 200 அடி ஆழத்தில் இருப்பதால், அலைகளின் கடினம் தங்களை பாதிக்காது என்றே நினைத்திருந்தனர். இருப்பினும் வந்திருக்கும் புயல் மிக மிக வலிமையுடையதாய் இருந்தது.

அவர்களால் கடலின் மேற்பரப்பில் தோன்றும் ஒவ்வொரு அலையையும் உணர முடிந்தது.

சற்று நேரத்தில் அவர்களது கப்பல் அந்தப் புயலில் சிக்குண்டு கடலின் மேற்பரப்புக்கு வந்து விட்டிருந்தது. ஒரு நீர்மூழ்கி கப்பலுக்கு இப்படிப் புயலில் சிக்குவது மிகக் கடினமான ஒன்று 

“ஐயோ என்ன பாஸ் இந்த நேரத்துல இப்படிப் புயல் வரும்னு யாருமே நம்மள எச்சரிக்கல? நாம எல்லா வெதர் ரிப்போர்டும் அலசி ஆராய்ஞ்சுட்டு தான இந்த டைம்ல பிரயாணம் செஞ்சா ரொம்ப பாதுகாப்பா இருக்கும்னு பிளான்  செஞ்சோம். ஆனா அந்த மகானுபவர் வடிவேலானந்தாவோட தத்துவம் இப்படிப் பொய்யா போச்சே பாஸ்” என விக்ரம் புலம்ப (ஏதா இருந்தாலும் பிளான் பண்ணி பண்ணனும்னு வடிவேலு சொன்னார் இல்ல, அதைத் தான் நம்ம விக்ரம் சொல்றார்)

“அடேய் நீ வேற, நீயும் பயப்பட்டு என்னையும் பயமுறுத்தாத. கொஞ்ச நேரம் வாய் பேசாம இரு, என்ன செய்யலாம்னு நான் யோசிக்கறேன்” என கடுகடுத்த அர்னவ் 

“சரி இங்க பாரு நம்ம BALLAST (BALLAST என்றால் கப்பலை சமநிலையில் வைத்திருக்க நீர்மூழ்கி கப்பலின் அடிப்பாகத்தில் ஒரு சிறு பகுதியில் தேவையான அளவு நீரினை சேமித்து வைத்திருப்பார்கள். அந்த நீர், கப்பல் நீரினுள் மூழ்கத் தொடங்கியதுமே நிறைய ஆரம்பிக்கும். தேவையான அளவு வந்து விட்ட பிறகு அதன் வால்வு மூடிக் கொள்வது போல் அமைந்திருக்கும்)ல இருக்கற தண்ணி எல்லாம் வெளில போய்டுச்சுனு நினைக்கறேன்.

அதனால தான் நம்ம கப்பல் கடலுக்கு மேற்பரப்புல இப்படி ஒரு பக்கமா சாஞ்சுட்டுருக்கு. முதல்ல அந்த BALLASTல தண்ணிய நிரப்பணும்” என்றதுடன் அர்னவ் அந்த வேளையில் இறங்க, கப்பல் புயலின் தாக்கத்தால் அங்கும் இங்கும் தூக்கி எறியப்படாமல் கடலின் மேற்பரப்பிலாவது இருக்கும்படி அதனைக் கட்டுப்படுத்ததும் வேலையில் இறங்கினான் விக்ரம்

“பாஸ் நம்ம கப்பல் இப்போ 40 டிகிரி கோணத்துல சரிவா இருக்கு. இன்னும் நிறையத் தண்ணி ஒவ்வொரு பகுதியிலயும் நிரப்பணும். இல்லனா இந்தப் புயல்ல நம்ம கப்பலோட சேர்ந்து நாமளும் காணாம போயிடுவோம்” என்றான் விக்ரம்

“டேய் அபசகுனமா பேசாத. இது ரொம்பக் கஷ்டமான ப்ரோசஸ் தான், ஆனா நம்மால இத கண்டிப்பா தாண்டி வர முடியும், நம்பிக்கையைக் கை விடாத” என நம்பிக்கையுடன் கூறினான் அர்னவ்

“ஓகே பாஸ். we can do it.வெற்றி நமதே” என தானும் நம்பிக்கையானான் விக்ரம்

புயலின் வேகத்தால் அந்தக் கப்பல் பூமி சுற்றும் வேகத்தினைக் காட்டிலும் அதிவேகமாகச் சுற்றிக்கொண்டிருக்க, நண்பர்கள் இருவரும் உயிர் பிழைத்தலைத் தாண்டியும், தங்கள் கொண்ட லட்சியத்தை அடைய வேண்டுமென்ற குறிக்கோளில் அதிதீவிரமாக இருந்ததால், அரும்பாடு பட்டு தங்களையும், கப்பலையும் காக்க போராடிக் கொண்டிருந்தனர்

மிக நீண்ட இரவு, பிரசவத்திற்காகக் காத்திருக்கும் அந்த ஒரு இரவு தான் என்பார்கள். இதுவும் அதுபோல ஒரு நீண்ட இரவாக தான் நீண்டது இருவருக்கும் 

அந்த நீண்ட நெடும் இரவில் கருந்துளைக்குள்ளே புகுந்து விட்டதினைப் போல் காரிருளில் இரு உயிர்கள் உற்றார், சுற்றோர் என எவர் துணையும் இன்றி உயிர் வாழ்தலுக்கெனத் தங்கள் ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

முடியா இரவே விடியாப் பகலே என்பது போல இது முடியவே முடியாதா என இருவரும் சலிப்படைந்து மனம் தளர்ந்த நேரத்தில், கையில் Ballastல் தேவையான அளவு நீர் நிரம்பி கப்பலை கடலின் அடிப்பாகத்துக்கு செல்ல உதவியது.

கப்பல் மீண்டும் பாதுகாப்பாக 200 அடிக்கு கீழே கடலினுள் வந்துவிட, இருவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்

அதிலும் விக்ரமிற்கு, தான் உயிரோடு இருப்பதே சந்தேகமாகத் தான் இருந்தது.

“பாஸ் நான் உயிரோட இருக்கனா?” என மணிக்கு ஒரு முறை கேட்டுக் கொண்டே இருந்தான். (மணிக்கு என்றால் ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒருமுறை அல்ல, ஒவ்வொரு வினாடிக்கும் ஒருமுறை)

முதலில் ஒரு பரிதாபத்தில் பொறுமையாகப் பதிலளித்து வந்த அர்னவ், இறுதியில் கடுப்பானான் 

“டேய் என்னடா வேணும் உனக்கு? நீ இதுவரைக்கும் உயிரோட தான் இருக்க. ஆனா இன்னொரு முறை இதே கேள்வியைக் கேட்ட, நானே உன்ன கொன்னு கடலுகுள்ள வீசிடுவேன். என்னமோ கப்பல்ல வந்த முதல் நாள் இப்போ தான் தாய் மடி வந்த மாதிரி இருக்கு, ஏன்னா,எல்லா உயிரும் முதன்முதலா கடல்ல தான உருவாச்சு, சோ நம்ம மூதாதையர்களும் கடல்ல தான் உருவாகி இருப்பாங்கனு தத்துவம் எல்லாம் பேசின? இப்ப ஒரு சின்னப் புயலுக்கு இப்படிப் பயப்படற? இனி நீ வாயத் திறந்த அவ்ளோ தான்” என அர்னவ் பொங்கியெழ

‘இது சின்னப் புயலா? உங்களுக்கே இது அநியாயமா இல்ல? உங்க அப்பா ஆசைக்காக நீங்க ரிஸ்க் எடுக்கலாம், ஏதோ நீங்க தனியா கஷ்டப்படுவீங்கனு ரிஸ்க் எடுத்து நானும் கூட வந்தா,  இப்படி  மிரட்டறீங்க?” என வாய்விட்டு சொல்ல பயந்து, ‘ஆத்தீ வாயத் தொறந்தா இந்த ஆளு வாயிலேயே வெட்டிப்புடுவாரு’ என மனதிற்குள் பேசிக் கொண்டான் விக்ரம் 

என்ன தான் ஒரு போருக்குத் தேவையான ஆயுதங்கள் எடுத்து வந்திருந்தாலும், எதிரி யார் என்னவென்றே தெரியாத நிலையில், அதுவும் கடலில் இந்தப் பெரும் புயலில் இருந்து தப்பித்த பின்பு, இது மிக ஆபத்தான காரியம், இதிலிருந்து தாங்கள் இருவரும் பிழைத்த மீள்வது அரிது என தோன்ற தொடங்கி விட்டிருந்தது அர்னவிற்கு

ஏற்கனவே பயந்து போயிருக்கும் விக்ரமிடம் இதை பகிர வேண்டாமென மௌனமான அர்னவ் 

இப்படியே இன்னும் சில நாட்கள் பயணித்த பின்பு…

திடீரென்று ஒருநாள், இரவா பகலா எனத் தெரியாத வேளையில், கடலின் தூரத்தில் ஏதோ ஒரு பொருள் இருப்பது போல அவர்களது SONAR காண்பித்தது

அது என்ன பொருள் என எவ்வளவு முயன்றும் தெரியவில்லை. அருகே செல்லச் செல்ல, அதன் ஒளி… அந்தக் கருநீலக் கடலையே தங்க நிறமாக ஜொலிக்கச் செய்து கொண்டிருந்தது

நண்பர்கள் இருவரும் தங்களது மூளை மரத்துப் போனது போல, ஏதும் செய்ய விழையாமல் சிலையெனச் சமைந்திருந்தார்கள்

திடீரென அந்த நீர்மூழ்கிக்கப்பல் ஒரு இடத்தில் நின்றுவிட, பைத்தியம் பிடித்தது போல அலாரம் அலற ஆரம்பித்தது

அந்த அலாரம் அடித்த ஒலியில் தான் இருவரும் சுயநினைவு மீண்டனர். இந்தச் சூழ்நிலையில் மீண்டும் புயலில் சிக்குண்டது விக்ரமிற்கு நினைவில் வந்து விட, அதுவரை அவன் வாய்க்கு போடப்பட்டிருந்த பூட்டுப் பயத்தினால் வெடித்துச் சிதறியது

“டேய் இப்ப நீ வாய மூடல உன்ன கொன்னுடுவேன். அங்க என்னமோ வெளிச்சம் தெரியுது பாரு” என அர்னவ் அதட்ட

தைரியத்தை வரவழைத்து அந்தப் பொன்னொளி வந்த இடத்தை கூர்ந்து பார்க்க, அங்கு இருந்தது அந்தக் கிரீடம் தான்

ஆனால் அந்தக் கிரீடம், ஒரு பெண்ணின் கைகளில் இருந்தது

இத்தனை பேரெழிலுடன் ஒருத்தி இருப்பாளா? அவளுடைய மோகனப் புன்னகை தான் அந்த ரத்ன கிரீடத்திற்கே பொன்னொளியைப் பாய்ச்சியதோ என்றிருந்தது.

தகதகக்கும் இளசூரியன் கொண்டு படைத்தது போல் பொன்னிறமேனி…

இந்திர வில்லான வானவில்லே புருவங்களென…

அப்பப்பா பெண்களின் விழிகளை ஏன் வாளுடன் ஒப்பிடுகிறார்கள் என உணர்ந்தனர் இருவரும் 

அவள் விழிகளின் கூரிய முனை கொண்டு, வைரம் பாய்ந்த இவ்வாலிபர்களின் இதயத்தை கூறிட்டாள் அவள் 

அந்த வசீகர விழியின் வலையில் இருந்து எவரும் தப்பி விடக்கூடாதென, கருங்கடலின் வர்ணம் குழைத்து அதை கருவிழியில் பூசி, விழி வலைக்கு மேலும் வலுவூட்டி வைத்திருந்தாளோ?

ஆஹா இவ்வளவு அழகிய சரிவினை யாரும் கண்டிருக்க மாட்டார்கள். ஆமாம்… அத்துணைச் சீராக இருந்தது அவள் மூக்கின் சரிவு

கடலின் நித்திலம் அனைத்தும் அவள் கன்னங்களில் அடைக்கலம் என்பது போல, பார்ப்பதற்கே தொடுவது போல எவ்வளவு மென்மை

கடலின் செம்பவளம் அனைத்தும், அவள் உதடுகளில் இருந்து தான் உருப்பெறுகிறதோ

அவள் கன்னம் தழுவி, தோள்களில் விளையாடும் அந்தக் கார்மேகக் கூந்தலாய்ப் பிறந்திடும் வரம் கிடைத்திருக்கலாகாதா? எந்நேரமும் அவளை ஆரத்தி தழுவி மகிழ்ந்திருக்கலாமே? 

எவ்வளவு மென்மையான குரல்வளை… அதிலிருந்து வரும் வார்த்தைகள் என்ன மதுர மொழி விளம்பப் போகிறதோ…

நீண்ட கைகளும், மலர் காம்பினை ஒத்த விரல்களுமாக, அடடா ஒரு பெண் எவ்வாறு இவ்வளவு மென்மையாக இருக்க முடியும்… அழுந்தப் பற்றினால் கூடஒடிந்து விடுவதைப் போல

இவர்களது கைக்காப்பு கூட அவள் இடையினைச் சுற்றி வளைத்து விடும், மெல்லிடையாள் என்பதின் இலக்கணம் இவளோ..?

அவளின் இடை தாண்டிய இருவரின் கண்களும் பேரதிர்ச்சியில் விரிந்தன

இது என்ன மாயத் தோற்றம் என ஒருவரை மற்றவர் திரும்பிப் பார்த்தும், கண்களைக் கசக்கி விட்டுப் பார்த்தும் கூட ,அது மறைய வில்லை

அப்படியென்றால், இது மாயத் தோற்றம் அல்ல. இதுவரை கதைகளில் கேட்டது.. கற்பனையில் மட்டுமே உயிர்கொண்டிருக்கும் என நினைத்துக் கொண்டிருந்த ஒன்று

ஒன்று அல்ல ஒருத்தி, அவளா? அதுவா? யார் அது? என அர்னவும் விக்ரமும் சிலையாய் சமைந்தனர்

#ad

              

                  

(தொடரும்… வெள்ளி தோறும்)

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!