in

எம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை) -✍ சஹானா கோவிந்த் 

எம்.குமரன் S/O மகாதேவன் (தந்தையர் தின சிறப்புச் சிறுகதை)

 

(2016ம் ஆண்டு, ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை)

“அம்மா”

“….”

“அம்மா… அம்ம்ம்மாஆஅ…” என அலறினான் குமரன், பொறுமையிழந்த குரலில் 

“சுகி, குமரன் கூப்பிடறான் பாரு” என்ற கணவரின் குரலில் 

“இதோ வரேங்க” என்றபடி வந்தாள் சுகந்தி 

“என்ன கண்ணா? என்ன வேணும்?” என்றவளை முறைத்தான் மைந்தன் 

“ஏண்டா மொறைக்கற?” என புரியாமல் வினவினாள் சுகந்தி 

“நான் கரடியா கத்தறது உன் காதுல விழல, உன் ஹஸ்பண்ட் சுகினதும் ஓடி வரியா?” என அடிக்குரலில் பல்லை கடித்தான் 

“போடா நீ? எப்ப பாத்தாலும் அப்பா கூட போட்டி போட்டுக்கிட்டு” என சிரித்தாள் 

“நான் யார் கூடவும் போட்டி போடல, அதுவும் உன் ஹஸ்பண்ட் கூட நிச்சியமா இல்ல” என்றான் அதே அடக்கிய குரலில் எரிச்சலாய் 

மேலும் ஏதோ சொல்ல தொடங்கியவன், பெற்றவளின் முக வாட்டத்தில் மௌனமானான் 

“எனக்கு லஞ்ச் வேண்டாம், அதச் சொல்ல தான் கூப்ட்டேன்” என்றான் எங்கோ பார்த்தபடி 

“ஏன்ப்பா?”

“என் ப்ரெண்ட் அருணுக்கு கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கு, ட்ரீட் போறோம்” என்றபடி வெளியே செல்ல முயல 

“டேய், நீ இன்னும் டிபனே சாப்பிடல” என சுகந்தி பதற

“எனக்கு வேண்டாம், பசிக்கல” என்றான் குமரன் 

“குமரா, சாப்ட்டுட்டு கெளம்பு” என்ற மகாதேவனின் கண்டிப்பான குரல் உள்ளறையிலிருந்து கேட்க, எரிச்சலுடன் முணுமுணுத்தபடி விரைந்து டைனிங் டேபிள் நோக்கி நடந்தான் குமரன்

அவசர அவசரமாய் இட்லியை முழுங்கியவனை, “டேய் மெதுவாடா, இன்னும் டைம் இருக்கே” என சுகந்தி செல்லமாய் அதட்ட 

“நீயும் ஆரம்பிக்காதம்மா. நான் ஒண்ணும் ஸ்கூல் படிக்கற பையன் இல்ல, வேலைக்கு போய் நாலு வருசமாச்சு. எவ்ளோ சீக்கரம் முடியுமோ அவ்ளோ சீக்கரம் இந்த நரகத்துல இருந்து போறதுக்கு தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்” என்றவனின் கோபக்குரல் மனதை வருத்த 

“ஏண்டா இப்படியெல்லாம் பேசற?” என்றாள் சுகந்தி வேதனையுடன்  

“இங்க பாரும்மா, மிஸ்டர்.மகாதேவன்கிட்ட சொல்லி வெய், இந்த அதட்டற வேலையெல்லாம் என்கிட்ட வேண்டாம், அதெல்லாம் கோர்ட்டோட நிறுத்திக்க சொல்லு. எப்பவும் நான் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்” என சிறு பிள்ளை போல் தலையை சிலுப்பியபடி கூற 

அதை ரசித்தபடி, “அதை நீயே சொல்ல வேண்டியது தான” என சிரித்தாள் சுகந்தி 

“அந்த ஆளுகிட்ட என்னால பேச முடியாது” என அன்னையிடம் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் போதே

“யார்கிட்ட பேச முடியாதுனு சொல்றார் மிஸ்டர்.குமரன்” என்றபடி மகாதேவன் உள்ளே வரவும், அவசரமாய் எழுந்தான் குமரன்

“என்ன பழக்கம் இது பாதி சாப்பாட்ல எந்திரிக்கறது, சாப்பிட்டு முடிச்சுட்டு போ” என வரவழைத்து கொண்ட கண்டிப்புடன் மகாதேவன் கூற, அன்னையை முறைத்தவாறே விரைவாய் உணவை முடித்து சத்தமின்றி வெளியேறினான் குமரன்

மகனின் பைக் புறப்படும் சத்தம் கேட்டதும், “ஏங்க இவன் இப்படி இருக்கான், எப்ப தான் உங்க பாசத்த புரிஞ்சுக்கப் போறானோ?” என்ற சுகந்தியின் வேதனை தன்னையும் தாக்க

“விடும்மா, என்னமோ புதுசா அவன் பேசற மாதிரி” என சமாளித்தார் மகாதேவன்

“அவன் பேசினத கேட்டீங்களா? வீட்ட நரகங்கறான், மனசே தாங்கலப்பா” என கண்ணில் நீர் துளிர்க்க சுகந்தி கூறக் கேட்டதும்  

மனைவியின் கவனத்தை திசை திருப்ப எண்ணி, “சுகி, எனக்கு பசிக்குது” என்றார் மகாதேவன் 

அவர் எதிர்பார்த்த விளைவை அது ஏற்படுத்தியது, “அச்சோ… நீங்க உக்காருங்க, இதோ தட்டு எடுத்துட்டு வரேன்” என விரைந்தாள் 

​​​​​

“ஹாய் சரண்” என்றபடி உரிமையாய் தோள் உரச அருகில் அமர்ந்த குமரனை  

“இதான் நீ நேரத்துல வர்ற லட்சணமா?” என முறைத்தாள் சரண்யா 

“அது…” என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவனை பேச விடாமல்

“அலைபாயுதேல கல்யாணத்துக்கு அப்புறம் தான் ஷாலினி வெயிட் பண்ணுவா, நான் இப்பவே உனக்கு வெயிட் பண்ண வேண்டியிருக்கு” என்றாள் கோபமாய் 

“அப்போ என்னை மாதவன்னு சொல்ற”

“இல்ல, என்னை ஷாலினினு சொல்றேன்” 

“அதை நீயே சொனனா எப்படி?” என வம்பிழுத்தான் 

“ஓஹோ, அப்ப எவ ஷாலினி மாதிரி இருக்காளோ அவளையே போய் லவ் பண்ணு” என எழப்போனவளை கை பற்றி அமர்த்தியவன் 

“எனக்கு என் சரண் தான் வேணும், ஷாலினி வேண்டாம்” என குறும்பாய் கண்சிமிட்டி சிரித்தான்

அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்க மனமின்றி, “சரியான 420” என சிரித்தாள் சரண்யா

“ஓகே, ஐஸ்கிரீம் ஆர் காபி” என பேச்சை மாற்றினான் குமரன்

“நான் ரெண்டும் சாப்ட்டாச்சு”

“என்னை விட்டுட்டா?” என முறைத்தான்

“இன்னும் கொஞ்சம் நேரம் இந்த காபி ஷாப்ல சும்மா உக்காந்திருந்தா தொரத்தி விட்டுருப்பாங்க”

“அம்மா தாயே மறுபடி மொதல்ல இருந்து ஆரம்பிக்காத. சரி, எனக்கு பசிக்குது. காபி அண்ட் டோனட் ஆர்டர் பண்றேன். உனக்கு நிஜமா ஒண்ணும் வேண்டாமா?” 

வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்

அதே நேரம், “சார், எனிதிங் டு ட்ரின்க்?” என்றபடி பணியாள் வந்து நிற்க, வேண்டியதை கூறினான் 

பணியாள் செல்லவும், “அது சரி, அலைபாயுதே ஸ்டோரி சொன்னியே, அதுல வர்ற மாதிரி எப்ப கல்யாணம் பண்ணிக்கலாம்” என குமரன் மறுபடியும் தன் வம்பை ஆரம்பிக்க 

“உன் மாமானார்கிட்ட வந்து கேளு” என்றாள் சரண்யா

“ஏய், என்ன சரண் நீ? கதையவே மாத்தற. அதுல ஓடி போய் தான கல்யாணம் பண்ணிக்குவாங்க” என குமரன் சிரிக்க

“ஹ்ம்ம்… அப்படி வேற ஒரு நெனப்புருக்கா?” என முறைத்தாள் சரண்யா

“பின்ன, நீ ஷாலினி மாதிரியே கியூட், நான் மாதவன் மாதிரியே ஸ்மார்ட், சோ…” என குறும்பாய் சிரிக்க 

சரண்யா அதில் மயங்கிய போதும், மனதில் அழுத்தி கொண்டிருந்த பிரச்சனை அந்த மனநிலையை மாற்ற, “குமார்… முக்கியமான விசியம் பேசணும்னு போன்ல சொன்னேன்ல, என்னனு கேட்டியா இப்ப வரைக்கும்” என முறைத்தாள் 

“நோ டென்சன் பேபி, இப்ப சொல்லு, என்ன பிரச்சனை? யாரத் தூக்கணும்?” என இன்னும் வம்பாய் பேச, சரண்யா கோபமாய் எதுவும் பேசாமல் மௌனமானாள் 

“சரண்…” என்றவனின் கெஞ்சலுக்கும் பதிலின்றி போனது 

“ஏய் என்னடா சும்மா வம்புக்கு பேசினா சீரியசா எடுத்துக்கறியே…” எனவும் 

“நம்ம விசியம் வீட்ல தெரிஞ்சுடுச்சு” என்றாள் சரண்யா 

“ஓ…” என்றான் குமரன் உள்ளடங்கிய குரலில் 

“எங்க மாமா நம்ம ரெண்டு பேரையும் லாஸ்ட் வீக் மாயாஜால்ல பாத்திருக்காரு…”

“போய் போட்டு குடுத்துட்டானா அந்தாளு”

“ப்ச்… விடு. என்னைக்கி இருந்தாலும் தெரிய வேண்டியது தான, எனக்கு சொல்ற கஷ்டம் மிச்சம்”

“ம்ம்…அதுவும் சரி தான். உங்கப்பா என்ன சொன்னாரு?”

“உன்னை இன்னைக்கி சாயங்காலம் வீட்டுக்கு கூட்டிட்டு வர சொன்னாரு”

“வாட்? என்ன?” என அதிர்ந்தான் 

“என்ன ரியேக்சன் இது?” என முறைத்தாள் 

“அது…. இ… இன்னைக்கேவா?”

“ஆமா”

“இன்னொரு நாள்…” என அவன் இழுக்கவும் 

“நீ வர்ற… அவ்ளோ தான்” என்றாள் சரண்யா முடிவாய்

“அதில்ல சரண், நான் டிரஸ் கூட ஒழுங்கா…” என குமரன் தப்பிக்க சாக்கை தேட 

“இந்த டிரெஸுக்கு என்ன குறைச்சல், நல்லாதான் இருக்கு, சீக்கரம் சாப்பிட்டு முடி போலாம்” என்றாள் 

“ஆனா…” என பேச தொடங்கிய குமாரனை இடைமறித்த சரண்யா

“உனக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கற எண்ணம் இருக்கா, இல்ல சும்மா டைம் பாஸுக்கு தான் என் கூட பழகினயா?” என சரண்யா சீண்ட 

“சரண்யா….” என்றான் ஒற்றை சொல்லில் அதட்டலாய்

அவளுக்கு தெரியும், எந்த வார்த்தை அவனை தன் வீட்டுக்கு வரச்செய்யும் என. அறிந்தே அந்த ஆயுதத்தை கையில் எடுத்தாள்  

அவள் எதிர்பார்ப்பை வீணாக்காமல், “கெளம்பு போலாம்” என்றான் குமரன் எங்கோ பார்த்தபடி.

பில் செலுத்தி, வெளியே வந்து பைக்கில் ஏறி சிறிது தூரம் சொல்லும் வரை அவர்களுக்குள் மௌனமே நிலவியது

அந்த மௌனத்தை தாங்காதவளாய், “கோபமா?” என முதுகை சுரண்டினாள் சரண்யா

அவனிடமிருந்து பதில் எதுவும் வராமல் போக, “சாரி” என்றாள் கெஞ்சலாய் 

அதற்கும் அவன் மௌனம் சாதிக்க, “இப்படி உம்முனு இஷ்டமில்லாம ஒண்ணும் நீ வர வேண்டாம்” என்றாள் ஊடலாய் 

சட்டென வண்டியை ஓரம் கட்டியவன், அவள் பக்கம் திரும்பி, “வாய தெறந்தா கொன்னுடுவேன்” என்றான் கோபமாய்

“கொட்டாவி வந்தா கூடவா?” என சரண்யா அப்பாவியாய் கேட்க, அவன் கொலைவெறியுடன் முறைத்தான் 

“சாரிப்பா, நீ வர்ல வர்லனதும் கோபத்துல…” 

“அதுக்காக அவ்ளோ பெரிய வார்த்தை சொல்லுவியா? உன்னை இப்படி பேசினா உனக்கு ஹர்ட் ஆகாதா? நான் உன்னை எவ்ளோ லவ் பண்றேன்னு உனக்கு தெரியாதா சரண்?” என்றான் வருத்தமாய், தன் நேசத்தை அவள் சந்தேகித்தாளே என்ற வேதனையுடன் 

அது அவளையும் வருத்த, “அச்சோ, நீ சொல்லாமையே அது எனக்கு தெரியும் ப்பா. அப்படி சீண்டி விட்டாதான் நீ எங்கப்பாவை பாக்க வருவேனு தான் அப்படி சொன்னேன். சாத்தியமா உன்னை பத்தி ஒரு நாளும் நான் அப்படி நெனைச்சதில்ல. அயம் சோ சாரி. நேத்து நைட்ல இருந்து அப்பா வேற மொறச்சுட்டே இருந்தாரா. என்ன ஆகுமோ அந்த டென்ஷன் மண்டைக்குள்ள ஓடிட்டு இருந்தது. அதான்… சாரி” என மனதார மன்னிப்பு வேண்டினாள் 

“இங்க பாரு சரண், என்ன நடந்தாலும், யார் தடுத்தாலும், நம்ம கல்யாணம் நடக்கப் போறது உறுதி. யாருக்காகவும் எதுக்காகவும் நான் உன்னை விட்டுத் தர மாட்டேன்” என்றான் உறுதியாய்

தன்னை உயிராய் நேசிப்பவனின் வார்த்தைகளில் மனம் உருகி கண்ணில் நீர் துளிர்க்க, அவனை வருத்தப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்வுடன், “ரெம்ப ரெம்ப சாரி பேபி” என்றாள் சரண்யா

அதற்கு மேல் கோபமுகம் காட்ட இயலாமல், “ஏய்… இப்ப எதுக்கு அழுகை?” என ஆதரவாய் அவள் கையை அழுத்தியவன்

அவளை இயல்புக்கு கொண்டு வரும் நோக்கத்துடன், “ஆனா இனி ஒரு வாட்டி இப்படி பேசினா அப்புறம் விளைவுகள் விபரீதமா இருக்கும்” என பொய்யாய் மிரட்டினான்

“எப்பா சாமி… இனி கொட்டாவி விடக் கூட நான் வாய் திறக்க மாட்டேன்ப்பா” என அவன் நோக்கம் புரிந்தவளாய், பதில் கூறினாள் சரண்யா

“கொழுப்புடி உனக்கு” என சிரித்தான் குமரன்

“அப்பாடா சிரிச்சுட்ட” என நிம்மதி பெருமூச்சு விட்டவள், “சரி சரி, டைமாகுது போலாம் ப்ளீஸ்” என கெஞ்சவும், வண்டியை கிளப்பினான் குமரன்

“அது சரி, போன வாரமே உங்க மாமா நம்மள மாயாஜால்ல பாத்து போட்டு குடுத்துட்டாருனு சொன்ன, ஏன் இவ்ளோ நாள் கழிச்சு உங்கப்பா உன்கிட்ட பேசினாரு? உங்க பேமிலியே டியூப் லைட்டா?” என இன்னொரு சண்டைக்கு குமரன் வித்திட, அதற்கு சரண்யாவிடமிருந்து சில பல செல்ல அடிகளை பரிசாய் பெற்றான். அவன் வம்பு செய்ததும் அதற்காகத் தானே 

 

ந்த ஒரு வார அவகாசத்திற்கான காரணம் தன்னை நிலைகுலையச் செய்ய போவதை குமரன் அப்போது அறிந்திருக்கவில்லை 

அதற்குள் சரண்யாவின் வீடு இருக்கும் தெருவில் அவர்கள் பைக் நுழைந்திருக்க, இருவரும் மௌனமாயினர் 

உள்ளே நுழைந்ததும், “வாங்க உக்காருங்க” என குமரனை சம்பிரதாயமாய் வரவேற்ற சரண்யாவின் தந்தை ரங்கநாதன், “சந்திரா” என உள் நோக்கி குரல் கொடுத்தார்

சரண்யாவை முறைத்தபடியே முன்னறைக்கு வந்த அவள் அன்னை சந்திரா, மௌனமாய் கணவன் அருகில் அமர்ந்தார் 

சோபாவில் அமர்ந்த குமரனின் அருகில் சரண்யா அமரப் போக, “சரண்யா, நீ போய் காபி எடுத்துட்டு வா” என்றார் ரங்கநாதன்

“இல்ல இப்ப தான்….” என்ற குமரனை பேச விடாமல்

“சரண்யா…” என்றார் அதட்டலாய், தனக்கே தன் மகளிடம் உரிமை அதிகம் என குமரன் முன் நிரூபிக்க முனைந்தவர் போல். அதற்கு பின் ஒரு நொடி கூட அங்கு நிற்கவில்லை சரண்யா

காபி சம்பிரதாயமெல்லாம் முடிந்த பின், “மிஸ்டர்.குமரன்” என ரங்கநாதன் ஆரம்பிக்க 

“சும்மா குமார்னே சொல்லுங்க அங்கிள், நோ பார்மாலிடிஸ்” என்றான் குமரன் மரியாதையாய் 

அதை சற்றும் மதியாதவராய், “எங்களுக்கு பார்மாலிடிஸ் ரெம்ப முக்கியம்” என்றார் உள்ளர்த்தத்துடன் 

குமரன் புரியாமல் சரண்யாவை பார்க்க, “அப்பா…” என சரண்யா ஏதோ சொல்ல வர 

“நான் இவர்கிட்ட பேசணும்னு தான் கூட்டிட்டு வரச் சொன்னேன், நீயும் நானும் பேசிக்கறதுக்கு இல்ல” என்றார் கண்டிப்புடன்

“ம்…மிஸ்டர் குமரன், என்ன படிச்சுருக்கீங்க?” எனக் கேட்டார். சரண்யா எல்லாம் சொல்லியிருந்த போதும், வேண்டுமென்றே கேட்டார் 

“எம்.டெக்”

“எந்த ப்ராஞ்ச்?”

“ஐ.டி”

“எந்த காலேஜ்?”

“எம்.ஐ.டி”

“எவ்ளோ பெர்சண்டேஜ் வாங்கினீங்க?” எனவும் 

‘உங்கப்பா எனக்கு பொண்ணு குடுக்க போறாரா இல்ல வேலை குடுக்கப் போறாரா?’ என கண்களில் கேள்வியுடன் சரண்யாவை முறைத்தான் குமரன்

சரண்யாவோ, ‘பதில் சொல்லு’ என பார்வையாலேயே கெஞ்சினாள் 

“மிஸ்டர் குமரன்?” என அதற்குள் ரங்கநாதன் பொறுமையிழக்க

“ம்… 92%” என்றான் குமரன், பொறுமையை இழுத்து பிடித்தபடி 

“எங்க சரண்யா யூனிவர்சிட்டி கோல்ட் மெடலிஸ்ட், தெரியுமா?” என்றார் பெருமையாய் 

“தெரியும்”

“ஓ… நீங்க ஏன் கோல்ட் மெடல் வாங்கல?” என்றவரை ‘லூசாயா நீ?’ என்பது போல் பார்த்தான் குமரன் 

“ஐ மீன், எங்க சரண்யா அளவுக்கு நீங்க ப்ரைட் இல்லைனு சொல்ல வந்தேன்” எனவும், ‘கன்பார்ம் லூசே தான்’ என்ற முடிவுக்கு வந்தான் குமரன் 

“மிஸ்டர் குமரன்…” என ரங்கநாதன் மீண்டும் ஆரம்பிக்க

‘ஹ்ம்ம்… இனி ஹைட் வெயிட் எல்லாம் கேப்பாரோ இந்த மனுஷன்’ என பீதியுடன் குமரன் விழிக்க

அவனது நம்பிக்கையை சற்றும் குலைக்காமல், “நீங்க என்ன வெயிட் இருக்கீங்க?” எனக் கேட்டவர்

அதற்கு குமரன் பதில் சொல்லும் முன்பே, “ஏன் கேக்கறேனா, இப்பெல்லாம் ஓபிசிட்டினால தான் சின்ன வயசுல நெறைய பேருக்கு ஹார்ட் அட்டேக் வருது” என குமரனுக்கு ஹார்ட் அட்டாக் வரச் செய்தார் 

‘உங்கள மாதிரி நாலு பேர், இல்ல இல்ல ஒரே ஒரு ஆள், ஊருக்கு ஒருத்தர் இருந்தா போதும், எல்லாருக்கும் ஹார்ட் அட்டேக் வந்துரும்’, என மனதிற்குள் நினைத்ததை வெளியே சொல்ல இயலாமல்

“இல்ல சார், நான் ஹைட்டுக்கு ஏத்த வெயிட் தான் இருக்கேன்” என்றான் குமரன் பல்லை கடித்தபடி 

அதே நேரம், திட்டம் போட்டு தன்னை மாட்டி விட்டவளை கண்களாலேயே எரித்தான். சரண்யா அதை காணாத பாவனையில் பெற்றவரை பார்த்தாள்

‘வெளிய வாடி கவனிச்சுக்கறேன்’ என மனதிற்குள் கறுவினான் 

“மிஸ்டர் குமரன், நான் கேக்கறது உங்க காதுல விழுதா?” என்றார் ரங்கநாதன் சந்தேகமாய்

‘போச்சுடா, இனி இவரு காது சரியா கேக்குதானு டாக்டர் சர்டிபிகேட் கேப்பாரோ?’ என நொந்து போனான் குமரன்

“நீங்க எங்க ஒர்க் பண்றீங்கனு கேட்டேன்?” என ரங்கநாதன் தன் நேர்காணலை தொடர

“டாட்டா குரூப்…” என்றவனை இடைமறித்து, “இல்லையே, சரண்யா வேற இல்ல சொன்னா?” என சந்தேகமாய் மகளை பார்த்தார் 

‘தெரிஞ்சுட்டே கேக்கறியே’ என்ற கடுப்புடன், வேண்டுமென்றே சிரித்தபடி, “அது டாட்டா குரூப்ல வொர்க் பண்ணனும்னு தான் நெனச்சேன், ஆனா ரிலையன்ஸ் குரூப்ல தான் கிடைச்சதுனு சொல்ல வந்தேன். அதுக்குள்ள நீங்க அவசரப்பட்டுட்டீங்க” என அழகாய் ஒரு குட்டு வைத்தான், அது தனக்கே பூமரேங்காய் திரும்பி வரப் போவதை அறியாமல் 

“வெல் செட் மிஸ்டர் குமரன், எனக்கு கொஞ்சம் அவசர புத்தி தான். என் பொண்ணு கல்யாண விசயத்துல அப்படி அவசரப்படக் கூடாதுனு தான் உங்ககிட்ட இவ்ளோ டீடைலா கேட்டுட்டு இருக்கேன்” என்றார், நான் உனக்கு சளைத்தனவல்ல என்பது போல் 

‘ஸ்ஸ்ஸ்ஸ்பப்பா இப்பவே கண்ண கட்டுதே’ என விழித்தான் குமரன், அதோடு இவரிடம் யோசித்து தான் பேச வேண்டும் என்ற முடிவுக்கும் வந்திருந்தான் 

“எங்களுக்கு சரண்யா ஒரே பொண்ணு…” என அவர் முடிக்கும் முன் 

“நானும் ஒரே பையன் தான் எங்க வீட்ல” என்றான் குமரன் அவசரமாய், ஏதோ விளம்பரத்தில் ‘ஈக்வல் ஈக்வல்’னு ஒரு பொண்ணு சொல்ற மாதிரினு அவனுக்கே தோன்றியது 

“ம்… தட்ஸ் ஒகே. மன்த்லி எவ்ளோ சாலரி வாங்கறீங்க?”

“ஒன் பாயிண்ட் டூ லேக்ஸ்” என்றான் குமரன் பெருமையாய் 

“கிராஸ் ஆர் டேக் ஹோம்?” என விடாகொண்டனாய் வினவினார் ரங்கநாதன்

“கிராஸ்” என்றான் குமரன் பெருமூச்சுடன் 

“ம்… ஒகே” என்றார், போனால் போகட்டும் என்ற பாவனையுடன் 

“உங்க டிரைவிங் லைசன்ஸ் நான் பாக்கலாமா?” எனவும்

“வாட்?” என வெளிப்படையாய் அதிர்ந்தான் குமரன்

“அப்பா, திஸ் இஸ் டூ மச்” என்றாள் சரண்யா பொறுமையிழந்து 

“சரண்யா, நாங்க பேசிட்டு இருக்கோம்” என்றார், என்னவோ அவள் அறியாத ஒன்றை சொல்வது போல் 

“மிஸ்டர் குமரன், டிரைவிங் லைசன்ஸ்?” என்றார் மீண்டும்

மனதிற்குள் சபித்தபடி தன் அடையாள அட்டையை எடுத்து நீட்டினான் குமரன் 

அதை தொடர்ந்து மதம், இனம், மொழி, குலம், கோத்திரம்,  இரத்தவகை, பிறந்ததேதி, நட்சத்திரம், ராசி, பிறந்தநேரம், பிறந்த ஆஸ்பத்திரி முதல் கொண்டு எல்லாம் கேட்கப்பட்டது

குமரனும் தன் பொறுமையை இழுத்து பிடித்து பதில் சொன்னான், சரண்யாவை பார்வையால் எரித்து கொண்டே, அவளும் கெஞ்சும் பார்வையால் அவன் கோபத்தை தணிக்க முயன்றாள்

“சொந்த ஊர் எது?”

“திருநெல்வேலி”

“திருநெல்வேலில எங்க?”

“கல்லிடைக்குறிச்சி”

“ஓ… மொதல்ல சரவணன் மீனாட்சி வந்துச்சே அந்த ஊரா?” என சரண்யாவின் அன்னை தான் அறிந்த ஒரே ஒரு விசியத்தை பிரதாபிக்க முயல, மனைவியை எரித்து விடுவது போல் பார்த்தார் ரங்கநாதன். குமரனுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் இருந்தது 

“உங்க அம்மா பேரு?”

“சுகந்தி… ஹவுஸ் வொய்ப்” என்றான் அடுத்த கேள்வியை யூகித்து 

“அப்பா பேரு?” எனவும், குமரன் சற்றே தயங்கி 

“மகாதேவன்” என்றான் சற்றே இறங்கிய குரலில் 

“ஐ ஸீ, என்ன பண்றார்?” என்றார் யோசனையுடன் 

“லாயர்” எனறான் 

“உங்கப்பா பேரு மகாதேவன் தானே சொன்னீங்க?” என ரங்கநாதன் கேள்வியாய் பார்க்க

‘பெரிய நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ஏங்கர் இவரு, ஆர் யு ஸூர், கான்பிடன்ட்னு மொக்க போட்டுக்கிட்டு’ என மனதிற்குள் சபித்தபடி 

“ஆமா” என்றான் எரிச்சலாய் 

அதன் பின் ரங்கநாதன் கேட்ட கேள்வியும் சொன்ன வார்த்தைகளும் முற்றுபெறும் முன்னே, “ஏய்….” என்ற கர்ஜனையுடன் குமரனின் கைகள் ரங்கநாதனின் சட்டைக் காலரை கொத்தாக பற்றி இருந்தது 

“ஐயோ…” என சரண்யாவின் தாய் அலற 

“குமார், என்ன இது, ப்ளீஸ் விடு?” என சரண்யா பதறினாள் 

“ஹ்ம்ம்… உண்மைய சொன்னா கோபம் வருதோ? ஒரு வாரமா எல்லாம் விசாரிச்சுட்டு தான் வரச் சொன்னேன், சும்மா பொண்ணை தூக்கி குடுத்தர முடியுமா? நான் சொன்னது பொய்னு ப்ரூவ் பண்ணு, அடுத்த முஹுர்தத்துல என் பொண்ண கல்யாணம் பண்ணித் தரேன்” எனவும், சரண்யா தடுக்கத் தடுக்க கேளாமல், புயலாய் வெளியேறினான் குமரன்

 

“எனக்கு ரெம்ப பயமா இருக்குங்க, இவன இன்னும் காணோமே. மணி பதினொண்ணு ஆச்சு, மறுபடி போன் பண்ணி பாருங்களேன்” என சுகந்தி புலம்ப 

“போன் ஸ்விட்ச் ஆப்னு வருது சுகி, எதாச்சும் வேலையா இருக்கும், நீ டென்சன் ஆகாத” என்றார் மகாதேவன் தன் கலக்கத்தை மறைத்தபடி

அவர் அறிந்த குமரனின் நண்பர்களுக்கு அழைத்து விசாரித்து ஓய்ந்தார்

அழுகையும் சமாதானமுமாய் மேலும் இரண்டு மணி நேரம் ஓட, குமரனின் பைக் சத்தம் கேட்டதும், சுகந்தி ஓட்டமாய் சென்று கதவை திறந்தார் 

குமரன் வண்டியை முழுதாய் நிறுத்தும் முன்னே, “கண்ணா…” என அவனருகே சென்றார் சுகந்தி

அவரை இடிப்பது போல் வண்டி அருகில் வர, “டேய் பாத்து, இத்தனைக்கு உங்கம்மா மேல இடிச்சுருப்ப” என மகாதேவன் பதற 

“கவலைப்படாதீங்க, உங்க வெய்புக்கு ஒண்ணும் ஆகல” என்றவனின் குரலில் இருந்த ஒட்டாததன்மை, சுகந்தியின் நெஞ்சில் குளிர் பரவச் செய்தது 

“ஏன் இவ்ளோ லேட், ஒரு போன் பண்ண மாட்டியா குமார்? எங்க போ…” என சுகந்தி பேசிக் கொண்டே போக  

“ஸ்டாப் இட், ரெம்ப அக்கறை இருக்கற மாதிரி யாரும் நடிக்க வேண்டாம்” என எரிச்சலாய் மொழிந்தவன், அதிர்ந்து நின்ற சுகந்தியை தவிர்த்து வேகமாய் உள்ளே சென்றான் 

“உள்ள நட சுகந்தி, போய் டிபன் எடுத்து வெய். அவனப் பாத்தா சாப்ட மாதிரி தெரில” என மகாதேவன் கூற, சுகந்திக்கு மற்றது மறந்து பிள்ளையின் பசியே பிரதானமானது 

தன் அறைக்குள் செல்ல முனைந்த குமரனை, “குமரா, அம்மா டிபன் ரெடி பண்றா, சாப்டுட்டு படு” எனவும்

மகாதேவன் சொன்னதே காதில் விழாதது போல், அவன் கதவை தாளிடப் போக, “உன்கிட்ட தான் சொல்லிட்டு இருக்கேன்” என அவனை மறித்தபடி நின்றார் மகாதேவன்

“நான் என்ன பண்ணனும்னு சொல்றதுக்கு நீங்க யாரு?” என முதல் முறையாய் முகத்திற்கு நேராய் எதிர்ப்பு காட்டினான் குமரன்

அவனை நன்கு அறிந்தவராய், இன்று குமரனின் மனதை பாதிக்கும்படி ஏதோ நடந்திருக்கிறது என்பதை யூகித்தார் மகாதேவன்

மகாதேவன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அதற்குள் சுகந்தி “குமரா, என்ன பேச்சு இது, அப்பாகிட்ட மன்னிப்பு கேளு”, என கண்டிப்புடன் கூற, எப்போதும் தன் நலனை மட்டுமே யோசிக்கும் தன் தாயின் கோபம், குமரனை நிதானம் இழக்கச் செய்தது 

“அப்பாவா? யாரு யாருக்கு அப்பா?” 

“குமரா, மொதல்ல அப்பாகிட்ட மன்னிப்பு கேளு” என அதிலேயே நின்றாள் சுகந்தி 

“முடியாது, என்ன பண்ணுவீங்க? அதிகபட்சம் இந்த வீட்ட விட்டு வெளில போகச் சொல்லுவீங்க, அவ்ளோ தான. உங்களுக்கு அந்த சிரமமே வேண்டாம், நானே இங்கிருந்து போற முடிவோட தான் வந்தேன்” என்றவன், தன் உடமைகளை சேகரிக்க ஆரம்பிக்க, செயலற்று நின்று விட்டாள் சுகந்தி 

“என்ன நடந்தது?” என்ற மகாதேவனின் கேள்விக்கு, பதிலேதும் கூறாமல் தன் துணிகளை அடுக்க பெட்டியை தேடிக் கொண்டிருந்தான் குமரன்  

“கண்ணா, மொதல்ல வந்து சாப்பிடு. பசில சின்ன பிரச்சன கூட பெருசாத் தான் தெரியும்” என சுகந்தி கெஞ்ச, எதுவும் காதில் விழாதது போல் தன் வேலையில் கருத்தாய் இருந்தான் 

பொறுமையிழந்த மகாதேவன் குமரனின் கையிலிருந்த பெட்டியை வாங்கி கிழே வைத்தவர், “என்ன நடந்ததுனு கேக்கறேன்ல” எனவும்

கோபமாய் அவரை ஏறிட்ட குமரன், “தெரியணுமா? சொல்றேன், மகாகணம் பொருந்திய மிஸ்டர் மகாதேவனும் மிஸஸ் சுகந்தி மகாதேவனும் நிச்சயம் தெரிஞ்சுக்க வேண்டிய விஷயம் தான். நான் லவ் பண்ற பொண்ணோட அப்பா ‘ஓடுகாலி பெத்த புள்ளைக்கு பொண்ணு குடுக்க முடியாது’னு கழுத்த புடிச்சு வெளிய தள்ளிட்டார், போதுமா?” எனவும், மற்ற இருவரும் ஒரு கணம் திகைத்து நின்றனர் 

முதலில் சுதாரித்த மகாதேவன், “எவன் அப்படி சொன்னான்? சொன்னவன் கைய கால ஒடைச்சுட்டு வந்திருந்தா, என் வளர்ப்பு சோட போகலனு சந்தோசப்பட்டிருப்பேன்” என்றார் கோபமாய்

“சொன்னது பொய்யா இருந்திருந்தா நானும் அதைத் தான் செஞ்சுருப்பேன்” என்ற குமரனின் வார்த்தையில், உடைந்து போனாள் சுகந்தி

மனைவியின் வேதனை தன்னையும் தாக்க, “டேய்… யார்கிட்ட என்ன வார்த்த பேசற?” என சீறினார் மகாதேவன்

“யார்கிட்டயா? பழைய லவ்வர் கிடைக்கணுங்கறதுக்காக, வக்கீல் பவர யூஸ் பண்ணி, எங்கப்பாவ பொய் கேஸ்ல உள்ள தள்ளி, எங்கம்மாவ ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்ட ஒரு தேர்ட் ரேட் கிரிமினல், மிஸ்டர். மகாதேவன்கிட்ட பேசறேன்” என குமரன் சொல்லி முடித்த நொடி, சுகந்தியின் கைகள் குமரனின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது 

பிறந்தது முதல் அன்னையின் அணைப்பை மட்டுமே அறிந்த குமரனுக்கு, அந்த அடி பேரிடியாய் மனதில் அறைந்தது. தன் கோபம் மொத்தத்தையும் மகாதேவன் மேல் திருப்பினான்  

“இப்ப உங்களுக்கு திருப்தியா? மொதல்ல எங்கப்பாவ என்கிட்ட இருந்து பிரிச்சீங்க, இப்ப என் அம்மாவை எனக்கு எதிரா திருப்பியாச்சு. இதுக்கு தான இவ்ளோ நாளா காத்துட்டு இருந்தீங்க, சந்தோசமா இருங்க. குட் பை” என குமரன் வெளியேற 

“நில்லுடா” என சுகந்தியின் அலறலில், தன்னையும் அறியாமல் குமரனின் கால்கள் நின்றன 

“நீ தாராளமா போ, இனி உன்னை நான் தடுக்கப் போறதில்ல. அதுக்கு முன்னாடி சில விசயங்கள தெரிஞ்சுட்டு போ” 

“என்ன சுகந்தி இது? அவன் தான் ஏதோ கோவத்துல பேசறான்னா, நீயும்…” என்ற கணவனை

“இல்லங்க, அவன் இவ்ளோ தூரம் பேசினப்புறம் நானும் பேசித் தான் ஆகணும்” என்றவள் 

“உன்னோட ஒம்பது வயசுல நான் இவர ரெண்டாம் கல்யாணம் பண்ணிகிட்டது மட்டும் தான் உனக்குத் தெரியும். அதுக்கு காரணம் என்னனு தெரியுமா? அடி ஓத சூடுனு எல்லா கொடுமையையும் பொறுத்துகிட்டு பத்து வருஷம் உங்கப்பாவோட குடும்பம் நடத்தினேன், காரணம் நீ.

உனக்கு அப்பா’ங்கற உறவு வேணும்னு தான் அத்தனை கஷ்டங்களையும் தாங்கினேன். வேல வெட்டி எதுவுமில்லாம, நான் சம்பாரிச்ச பணத்தையும் சேத்து குடிச்சு அழிச்சுட்டு வந்தாரு அந்த மனுஷன்.

ஒரு நாள் நான் குடிக்க காசு குடுக்க மாட்டேன்னு சொன்னதுக்கு, பெத்த புள்ள உன்னையே கடத்தி வெச்சுட்டு, பணம் குடுக்கலேனா கொன்னுடுவேன்னு மெரட்டுச்சு அந்த மிருகம்” என்றவள், அந்த நாள் நினைவின் தாக்கத்தில் தொய்ந்து போய் அமர, அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் குமரன்

“சுகிம்மா… வேண்டாண்டா. எதுக்கு பழசெல்லாம் பேசி மனச வருத்திக்கற” என மகாதேவன் தடுக்க

“இல்லைங்க, இவனுக்கு எல்லாமும் தெரியனும். இவ்ளோ நாள் சொல்லாம இருந்ததே தப்புனு தோணுது” என்றபடி தொடர்ந்தார் சுகந்தி

“அன்னைக்கி வேற எந்த வழியும் தெரியாம, நான் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுக்க போனப்ப தான், ரெம்ப வருசத்துக்கப்புறம் இவர சந்திச்சேன்” என மகாதேவனை கை காட்டினாள் 

“ஆமா, உங்கப்பாவ கல்யாணம் பண்ணிக்கறதுக்கு முன்னாடி இவர நான் விரும்பினது நிஜம் தான். எங்க அண்ணனோட வறட்டு கௌரவத்துல எங்க காதல் செத்து போச்சு. விதிச்சது இதான்னு நானும் ஏத்துக்கிட்டேன். உங்கப்பா என்னை அவ்ளோ சித்ரவதை பண்ணினப்ப கூட, அவருக்கு துரோகம் செய்யணும்னு நான் ஒரு நாளும்   நெனைச்சதில்ல.  ஆனா உன்னை பணயம் வெச்சு அந்த மனுஷன் காசு கேட்டப்ப, எல்லாமே வெறுத்துப் போச்சு” என அந்த வேதனை நிறைந்த நாளின் நினைவில் விசும்பினாள் 

ஆதரவாய் மனைவியின் அருகே அமர்ந்து தோளில் கை பதித்த மகாதேவன், “போதும் சுகி” என்றதை காதில் வாங்காதவளாய் தொடர்ந்தாள் சுகந்தி

“இவர் தன் வக்கீல் பவர மட்டுமில்ல, தன்னோட உயிரப் பணயம் வெச்சு உன்னை காப்பாத்தினாரு. உன் மேல படவேண்டிய கத்திய இவர் தாங்கினாரு. கொலை பண்ணிடோமோங்கற பயத்துல,  உங்கப்பா ஊரை விட்டே ஓடிட்டாரு. ஒரு மாசம் ஹாஸ்பிடல்ல இருந்து மறுஜென்மம் எடுத்து வந்தார் இவர்” என தாய் சொன்னதை கேட்ட குமரன், குற்ற உணர்வுடன் மகாதேவனை பார்த்தான் 

“அதுக்கப்புறம் கொஞ்ச நாள் தலை காட்டாம இருந்த அந்த மிருகம் மறுபடி வந்தது. என்னையும் இவரையும் பத்தி தப்பு தப்பா பேசி ஊரார் முன்னாடி கேவலப்படுத்தினான். அதோட, நீ அவருக்கு பொறக்கவே இல்லைனு…” என அதற்கு மேல் பேச இயலாமல் சுகந்தி முகத்தை மூடிக்கொண்டு அழ 

பெற்றவள் படும் வேதனையை காணச் சகியாத குமரன், விரைந்து அருகே வந்து காலடியில் அமர்ந்தவன், “அம்மா போதும்மா, நீ எதுவும் சொல்ல வேண்டாம், சாரி’ம்மா தெரியாம பேசிட்டேன் சாரி’ம்மா. இன்னும் நாலு அடி வேணாலும் அடிச்சுடும்மா” என அன்னையின் கையை கொண்டு தன்னை தானே கன்னத்தில் அறைந்து கொண்டான்

அவனிடமிருந்து கையை விலக்கிய சுகந்தி, “இல்ல, என்ன நடந்ததுனு நீ முழுசா தெரிஞ்சுக்கணும்” என்றார் தீர்மானமாய் 

“அதே நேரம் இவர் அங்க வந்தாரு. அந்தாளு பேசின வார்த்தைகள தாங்க முடியாம, ஆமா குமரன் எனக்கும் சுகந்திக்கும் பொறந்தவன் தான், இனி என் பிள்ளையா என்கிட்ட தான் வளருவான்னு சொல்லி என்னையும் உன்னையும் கூட்டிட்டு வந்துட்டாரு.

அதோட அந்த பாவி அடங்கல. என்னை பழி வாங்கறதுக்காக, மறுநாள் தனக்கு தெரிஞ்ச ரௌடிங்க மூலமா உன்னை ஸ்கூல் வாசல்ல வெச்சு கொல்லப் பாத்தான்” என அந்த நாளின் அதிர்ச்சி தந்த தாக்கம், இன்றும் மனம் பதறச் செய்ய, பேச இயலாமல் ஒரு கணம் நிறுத்தினாள் சுகந்தி

“ம்மா…” என்ற குமரனின் அழைப்பே காதில் விழாதது போல் தொடர்ந்தாள் 

“அந்தாள் வெளிய இருந்தா உனக்கு ஆபத்தாகிடும்னு, வேற வழியில்லாம, தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் மூலமா கஞ்சா கேஸ்ல உள்ள தள்ளினோம். அதுக்கப்புறம் தான் நம்ம பாதுகாப்புக்காக மறுகல்யாணம் பண்ணிக்க சொல்லி இவர் கேட்டாரு.

அப்பவும் நான் ஏத்துக்கல, எனக்கு என் புள்ள போதும்னு சொன்னேன். எனக்கும் இவன் தான் புள்ள, இன்னொரு கொழந்த வேண்டாம்னு மறுநாளே போய் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் பண்ணிட்டு வந்துக் கேட்டப்ப, என்னால மறுக்க முடியல. உன்னோட எதிர்காலமும் என்னோட முடிவுக்கு ஒரு காரணம்

சொந்தம் பந்தம் எல்லாரையும் பகைச்சுக்கிட்டு, தன் வாழ்க்கையையே நமக்காக தியாகம் பண்ணின இவரையாடா தப்பா பேசற. சொல்லுடா? இவராடா கிரிமினல்? நான் இவரை கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்பா?” என சற்று முன் இருந்த நெகிழ்வு தன்மை மாறி, கோபமாய் மகனை வினவினாள் சுகந்தி

குமரனுக்கு உலகமே ஸ்தம்பித்தது போலானது. எத்தனை பெரிய தியாகம் இது

எந்த ஆணுக்கும் தன் வாரிசு, தன் ரெத்தம் என கை காட்டுவது எத்தனை பெருமை அளிக்கும் விஷயம். அதை ஒருவர் விட்டு தருவதென்றால், அவர் எவ்வளவு பெரிய மனம் படைத்தவராய் இருக்க வேண்டும். தாய் பாசம் தான் உலகில் பெரியது என்பதை இங்கு ஒருவர் பொய்யாக்கி விட்டாரே 

பெற்றால் தான் பிள்ளையா, இவன் என் பிள்ளை என தன்னை வரித்துக் கொண்டவரை பார்த்தவன், “அப்பா…” என்ற கதறலுடன் சிறுபிள்ளையாய் மகாதேவனின் காலைக் கட்டிக் கொண்டு அழுதான் குமரன்

சிறுவயது முதலே, நடந்ததை சரியாய் அறிந்து கொள்ளாமல் தன்னிடம் ஒரு விலகலுடனே இருந்த மகன், முதல் முறையாய் மனதார “அப்பா” என அழைத்ததில், மகாதேவனின் கண்கள் பனித்தது 

“டேய் கண்ணா, அழாதடா” என தேற்ற முயன்றார்

“சாரிப்பா… எனக்கு தெரியலப்பா” என அரற்றியவனை எழுப்பி தோளோடு அணைத்தவர்

“எனக்கு உன்மேல எந்த கோபமும் இல்ல ராஜா, மனசப் போட்டு கொழப்பிக்காத” என சமாதானம் செய்தார்

“இதெல்லாம் ஏம்’ப்பா என்கிட்ட மொதலே சொல்லல, உங்கள புரிஞ்சுக்காம எவ்ளோ வருசத்த வீணடிச்சுட்டேம்பா” என குமரன் வருந்தவும்  

“எவ்ளோ மோசமானவனா இருந்தாலும் அவர் உன் அப்பா, அவரப் பத்தி உன்கிட்ட தப்பா சொல்ல மனசு வரல” என மகாதேவன் கூறவும் 

“ஒ காட்… யு ஆர் கிரேட் ப்பா. உங்க புள்ளயாவே நான் பொறந்திருக்க கூடாதானு பீல் பண்றேம்ப்பா” என ஏக்கமாய் கூறவும் 

“என்னை பொறுத்த வரைக்கும் நீ எனக்கு பொறந்த புள்ள தான்டா கண்ணா” என்றார் மகாதேவன்

“ஆமாம்ப்பா, நான் பெருமையா சொல்லிக்கறேன்.  அயம் எம்.குமரன் S/O மகாதேவன்” என தலை நிமிர்த்தி கூறியவன், அன்புடன் தந்தையை அணைத்துக் கொண்டான் 

இருவருக்கும் நடந்த பாச பரிமாற்றத்தைக் கண்டு கண் பனிக்க நின்றிருந்த மனைவியை பார்த்த மகாதேவன், மகனிடம் ஜாடை காட்டினார் 

“அம்மா….” என அழைத்தபடி குமரன் அருகில் செல்ல, மகன் சற்று முன் பேசிய வார்த்தைகளின் நினைவில் முகம் திருப்பினாள் சுகந்தி

“ம்மா… சாரி மா, நான் ஏதோ கோபத்துல… ப்ளீஸ்மா” என சிறுபிள்ளையாய் கெஞ்சும் மகனை கண்டதும், சுகந்தியின் மனம் உருகியது

இருந்தும் அதை வெளிக்காட்டாமல், “என்னங்க, யாரோ வீட்டை விட்டு போறேன்னு சொன்னாங்க, சீக்கரம் போகச் சொல்லுங்க, நான் வீட்டை பூட்டிட்டு தூங்கனும்” என சுகந்தி பிகு செய்ய

“ஏன் சுகி அவன டென்சன் பண்ற?” என மகாதேவன் பிள்ளைக்கு பரிந்து கொண்டு வர

“அவன் என்னை எவ்ளோ டென்சன் பண்ணினான்” என சுகந்தி பொய்க் கோபம் காட்ட 

அது புரிந்தவராய், “அப்படியா? என்ன பனிஷ்மெண்ட் தரலாம். ஹ்ம்ம்… இப்படி பண்ணினா என்ன சுகி? அவன் லவ் பண்ற பொண்ணையே கல்யாணம் பண்ணி வெச்சு, தினமும் அவன டார்ச்சர் பண்ணனும்னு மருமகளுக்கு ஆர்டர் போட்டுடலாமா?” என சிரித்தார் 

“அப்பா… அது… சரண்யா வீட்ல….” என குமரன் இழுக்க

“எல்லாம் நான் பாத்துக்கறேன், டோன்ட் வொர்ரி பீ ஹாப்பி” என மகாதேவன் கட்டை விரலை உயர்த்திக் காட்ட 

“டேய்… பேரு சரண்யாவா, போட்டோ காட்டுடா” என சுகந்தி மருமகளை பார்க்கும் ஆவலில் சண்டையை மறந்து மகனிடம் பேச 

“அப்பா, உங்க வொய்ப் என்னை ரெம்ப மெரட்டறாங்க. இதெல்லாம் நல்லா இல்ல சொல்லிட்டேன்” என குமரன் கண் சிமிட்ட

“அடிங்க…” என சுகந்தி அவனை அடிக்கத் துரத்த, புரிதலுடன் பிணைந்த அக்குடும்பத்தில், நிரந்தர மகிழ்ச்சி குடியேறியது

இந்த சிறுகதை, “இரண்டாவது அத்தியாயம்” என்ற சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அந்த புத்தகத்தின் இணைப்பு இதோ 👇 

(2016ம் ஆண்டு, ‘தமிழ் வலைப்பதிவர் குழுமம்’ நடத்திய சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற சிறுகதை)

(முற்றும்)

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் மற்ற புத்தகங்கள் 👇 

              

                  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. புதிய கரு. முடிவு எதிர்பார்த்தது தான் என்றாலும் கோர்வையாய்ச் சொல்லி இருக்கீங்க. நல்லதொரு கதை சொல்லி. அதிலும் உண்மைக் கதை சொல்லி. வாழ்த்துகள்.

காலத்துக்கும் வாழ்த்துமய்யா எம் மனசு (கவிதை) – ✍தமிழ் முகில் பிரகாசம்

அவள் வந்து விட்டாள்! (சிறுகதை) -✍ சக்தி ஸ்ரீநிவாஸன்