in

ஸ்வீட் சிக்ஸ்டி சீனியர் ஹோம் (சிறுகதை) – ✍ சுசி  கிருஷ்ணமூர்த்தி

ஸ்வீட் சிக்ஸ்டி சீனியர் ஹோம் (சிறுகதை)

ஸ்வீட் சிக்ஸ்டி சீனியர் சிட்டிசன் ஹோம் – அபார்ட்மெண்ட் எண் 555

சோபாவில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருக்கிறார் அண்ணாசாமி

அவர் மனைவி அன்னம்மாள் கைபேசியில் மெஸேஜ் பார்த்துக் கொண்டே, அண்ணாசாமி கையில் இருந்த கிண்ணத்தில் பாதாம் பருப்பு வேகமாக குறைவதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்

அவளுக்கு இரண்டு கவலைகள். பாதாம் பருப்பை டீவி பார்த்துக் கொண்டே அளவு தெரியாமல் சாப்பிட்டு விட்டு, பிறகு அவளிடம், “அன்னம், நான் இவ்வளவு பாதாம் சாப்பிட்டிருக்க கூடாது,  இப்போ வயத்தை வலிக்கிறது. ஈனோ கொஞ்சம் கலக்கிக் கொடேன்”  என்ற டயலாக் எப்பணும்னாலும் வரலாம் என்பது ஒன்று. 

அடுத்து பாதாம் பருப்பு  தீர்ந்து விட்டால் இந்தக் கொரோனா நேரத்தில் வேறு பாதாம் பருப்பு வாங்க எப்படி ஏற்பாடு செய்வது என்பது இரண்டாம் கவலை

ஆனால்  டீவி பார்த்துக் கொண்டே சாப்பிடும் போது அண்ணாசாமி கொஞ்சம் வேற மாதிரி மாறி விடுவார். எப்போது கோபம் வரும் என்று சொல்ல முடியாது. அதனால் அவள் தடுத்து ஏதாவது சொன்னால், ஒருவேளை பாத்திரம் பறக்கலாம், அல்லது ரிமோட் பறக்கலாம் என்ற பயம் கொஞ்சம் உண்டு

பாத்திரம் பறந்தால் பரவாயில்லை, நிறைய பாத்திரம் இருக்கிறது. ரிமோட் பறந்தால், கொரோனா காலத்தில் புது  ரிமோட் கிடைப்பது கஷ்டம்

அதுவும் தவிர மொபைலில் வந்த மெஸேஜ் வேறு உறுத்தியது. அது அந்த ஹோமை நடத்தும் நிர்வாகத்திலிருந்து வந்திருந்த ஒரு வாட்ஸ்அப் தகவல். அதில் அறிவித்திருந்தது இது தான்

“இரண்டாவது கொரோனா அலை தாக்கத்தை சமாளிக்க  ஹவுஸ் கீப்பிங் முறையில் சில மாற்றங்கள் செய்யப் படுகின்றன. கட்டாயம் தங்கள் வீட்டிற்கு  ஹவுஸ் கீப்பிங் செய்ய வேண்டும் என்று விரும்புவர்கள் மட்டும் ஹவுஸ் கீப்பிங் இன்சார்ஜிடம் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிப்பவர்களுக்கு, வாரம் இரண்டு நாட்கள் மட்டும் ஹவுஸ் கீப்பிங் சிப்பந்திகள் அனுப்பி வைக்கப்படுவார்கள். கட்டாயம் வேண்டும் என்பவர்கள் மட்டுமே இந்த வசதியை உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”

இந்த அறிவிப்பை படித்து முடிப்பதற்கும் தொலைக்காட்சியில் விளம்பரம் வருவதற்கும் சரியாக இருந்தது. அதே சமயம் அண்ணாசாமி கையில் இருந்த பாதாம் பருப்பும் தீர, அவரின் பெரிய கண்கள் பரிதாபமாக அன்னம்மாளைப் பார்த்தது

இந்த சமயத்தை சரியாக உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்த அன்னம்மாள், அண்ணாசாமியை பேசவே விடாமல், “இதோ பாருங்கோ. நேத்திக்கு டைனிங்லருந்து  மெசேஜ் வந்தது. இன்னிக்கு ஹவுஸ் கீப்பிங் மெசேஜ் படியுங்கோ” என்று தன் மொபைலை அவரிடம் கொடுத்தாள்

அண்ணாசாமியின் கண்கள் அந்த மொபைலில் பதிந்தாலும், அவர் மனம் கொஞ்சம் கூட அதில் இருந்த மெஸேஜில் பதியவே இல்லை. அவர் மனதில் இருந்தது ஒரே ஒரு கேள்வி தான்.

ஷேக்ஸ்பியரின் ஹேம்லட் மனதில்  இருந்த கேள்வி “To do or not to do?”  போல் “ to ask or not to ask?” என்பது தான்

புரியும்படி சொன்னால், அவருக்கு இன்னும் கொஞ்சம் பாதாம் பருப்பு வேண்டியிருந்தது. அதை அன்னத்திடம் சொன்னால் அவள் ரியாக்‌ஷன் எப்படி இருக்குமோ என்று பயம் 

அவள் நல்ல மூடில் இருந்தால், தன்னுடைய அன்புக் கணவர் கேட்கிறாரே என்று அந்தக் கால பதிவிரதை நளாயினி போல் இன்னும் கொஞ்சம் பாதாம் பருப்பு தரலாம், அல்லது இந்தக் கால கணவரின் உடல்நலம் பேணும் மனைவி போல், “பாதாம் பருப்பு இதுக்கு மேலே சாப்ட்டா வயிறு கெட்டுப் போயிடும்” என வள்ளுனு விழலாம். 

கொஞ்ச நேரம் மெசேஜ் படிப்பது போல பாவ்லா செய்தவர்,  “அன்னம், நீதானே எல்லா முடிவும் எடுக்கிறே, இதுக்கும் என்ன பண்ணனும்னு நீயே சொல்லு, எப்பவும் போல நான் கேக்கறேன்” எனவும், தோளே ஒடிந்துவிடும் போல் கழுத்தை தோளில் இடித்துக் கொண்டாள் அன்னம் 

“ஆமா… இந்த வீட்ல நீங்க ஒண்ணும் பண்ண மாட்டேள். நானே எல்லா வேலையும் பண்ணனும், முடிவும் எடுக்கணும்“ என சலித்தவள், இன்டர்காமை எடுத்தாள்

தப்பினோம் பிழைத்தோம் என ரிமோட்டை எடுத்து சேனலை ஒரு சுத்து சுத்த ஆரம்பித்தார் அண்ணாசாமி 

அன்னம் இன்டெர்காமில், கமலா, வசந்தி, காந்தா, ‘நோ நான்சென்ஸ்’ மாமி எல்லோரையும் கூப்பிட்டு ஹவுஸ் கீப்பிங்க் பற்றி ஒரு நிமிஷமும், வேறு விஷயங்கள் பற்றி ஒம்பது நிமிஷங்களும் என ஒரு சர்வே எடுத்தாள். 

அவள் இன்டர்காமில் பிஸியாக இருந்த நேரம், அவள் கண்ணில்படாமல் தண்ணீர் குடிப்பது போல் உள்ளே சென்ற அண்ணாசாமி, கிண்ணத்தில் பாதாம் பருப்பை நிரப்பி, அந்த கிண்ணத்தை ஒரு புத்தகத்தை வைத்து மூடி தன் இடத்தில் அமர்ந்து விட்டார்  

அவர்  முகத்தில் வெற்றியின் மதமதப்பு. ரிமோட் ஊர்வலத்தை திரும்பவும் ஆரம்பித்தார். ஆனால் நம்  ஷெர்லாக் ஹோம்ஸ் அன்னத்தின் கண்ணில் அவர் முகம் பட ‘முகத்தில் என்ன இவ்வளவு மலர்ச்சி?’ என்ற கேள்வி எழ, எழுந்து சத்தமே போடாமல் அவர் முன் வந்தாள்  

அன்னம் வருவதற்கு முன் கிண்ணத்திலுள்ள பாதாம் பருப்பை தீர்த்து விட வேண்டுமென்ற அவசரத்தில், ஒரு கை பாதாம் பருப்பை  அள்ளி வாயில் போட்டு ஆனந்தமாக மென்றுக் கொண்டிருந்தார்  அண்ணாசாமி

அவளை பார்த்ததும் அப்படியே ‘Statue’ விளையாட்டில் சிலை ஆவோமே அது போல் ஆனார்.  ஆனால் வாயில் அள்ளிப் போட்டிருந்த பாதாம் பருப்பு அவர் முகத்தை ‘அமுல் பேபி’ போல் ‘chubby cheeks’  உடன் காண்பித்து அவர் குட்டு வெளிப்பட, அன்னம் அவர் மேல் விட்ட வார்த்தை அம்புகளை எழுத இன்னொரு எபிசொட் வேண்டும் 

எல்லாவற்றையும் வாயைத் திறக்காமல் (வாயை எப்படி திறக்க முடியும்? திறத்தால் பாதாம்பருப்பு எல்லாம் தரையில் விழுந்து அதுக்கு வேறு அர்ச்சனை கிடைக்குமே) கேட்டுக் கொண்டார் அண்ணாசாமி.

‘கிராதகி… கொஞ்சம் பாதாம் பருப்பு தான? ஏதோ தங்க பிஸ்கட் சாப்ட்டா மாதிரி இந்த சத்தம் போடறா’ என மனதிற்குள் திட்டியது அன்னத்துக்கு தெரியாமல் இருக்க, ‘பாவமாக’ முகத்தை வைத்துக் கொண்டு நின்றார்

அர்ச்சனையை முடித்த அன்னம், ஹவுஸ் கீப்பிங் இன்சார்ஜை இன்டர்காமில் அழைத்து, அவளும் மத்த மாமிகளும் முடிவு செய்த படி, தங்களுக்கு வாரம் இரண்டு நாட்கள் ஹவுஸ் கீப்பிங் மெய்ட் அனுப்பும்படி சொல்ல, அவரும் மறுநாள் அனுப்புவதாக கூறினார் 

அந்த வேலை முடிந்ததும், “இதோ பாருங்கோ… இனிமே வாரத்துல ரெண்டு நாளைக்குத் தான் மெய்ட் வருவா. அதனால் தரையில் குப்பை போடாம இருக்கணும். அதுவும் தவிர மெய்ட் வரும் போது அவ இந்த ரூமில் இருந்தா நீங்க அந்த ரூமுக்கு போயிடணும். அவ அந்த ரூமுக்கு வந்தா நீங்க இந்த ரூமுக்கு வந்துடணும்“ என்றாள் அன்னம் 

இதைக் கேட்ட அண்ணாசாமிக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை 

‘ஏதாவது புதுசா மெய்ட் வரப் போறாளா? எனக்கு எவ்வளவு வயசாச்சு, இவ என்னத்துக்கு இவ்வளவு கண்டிஷன் போடறா?’ என மனதில் நினைத்துக் கொண்டார்.

அதே சமயம் அவருக்கு உள் மனசுலே ஒரு சின்ன கிளுகிளுப்பு வேறே, ‘நான்  இந்த வயசிலும் அழகா இருக்கேன், அதான் அன்னத்துக்கு என்னை யாராவது கொத்திண்டு போய்டுவாளோனு பயம் போல’ என நினைத்து சிரித்துக் கொண்டார்.

அடுத்த கணமே அவரின் அந்த இன்பக் கற்பனையில் குண்டைத் தூக்கிப் போட்டாள் அன்னம். 

“பாருங்கோ… இந்தக் கொரோனா சமயத்தில் நாம ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். மெய்ட் வந்தா  அந்த ரூமில இருக்கக் கூடாது. அதுவும் தவிர நம்ம பிள்ளை அனுப்பினானே அந்த N95 மாஸ்க், அது போட்டுக்கணும். அது போட்டுண்டா வீணாயிடுமேனு இத்தனை நாள் உள்ளே வச்சது போறும். இப்ப கொரோனா அங்கே இங்கே ரொம்ப சுத்தறதாம். அதனால ரெண்டு மாஸ்க் போட்டுக்கணும் நீங்க” என்றதும், வெறுத்துப் போய் விட்டார்  அண்ணாசாமி. 

மறுநாள் காலையிலிருந்தே ‘மெய்ட்’ வருகைக்கான ஆயத்தங்களை ஆரம்பித்தாள் அன்னம். சானிடைசர் வாஷ் பேசினில் – மெய்டுக்கு தனி – தங்களுக்கு தனி. கதவு தாழ்ப்பாள் எல்லாம் மெய்ட் போன பிறகு துடைக்க தனி  கிழிசல் துணி.

ரெண்டு பேர் முகத்திற்கு இரண்டிரண்டு என்று 4 மாஸ்க், எல்லாம் தாயாராய் எடுத்து வைத்தாள். 

மெய்ட் 9.45 க்கு வருவாள் என்பதால், 9.40க்கு அண்ணாசாமியை அழைத்து, “இப்பவே டாய்லெட் போகணும்னா போயிட்டு வந்துடுங்கோ – அப்புறம் அவ போனதும் குழாயை எல்லாம் சானிடைஸ் பண்ணினப்புறம் தான் நாம் யூஸ் பண்ண முடியும்” என்றாள் அன்னம் 

9.45 ஆனதும் வாசல் பெல் அடித்தது.  உடனே அண்ணாசாமியிடம் கண்ணைக் காட்டி  மாஸ்கை போடச் சொல்லி விட்டு தானும் போட்டுக் கொண்டாள்

பிறகு ஏதோ பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டார் வரும் பொழுது எல்லாம் தயாராக இருக்கிறதா என்று ஃபைனலா ஒரு பார்வை பார்ப்பாங்களே, அதேப் போல் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்து விட்டு கதவைத் திறந்தாள்.

வெளியில் நின்ற உருவத்தை பார்த்தவுடன் ஒரு நிமிடம் திகைத்துப் போய் விட்டாள். அங்கு ஏதோ நாஸா ஸ்பேஸ் ஸ்டேஷனிலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு  போகும் போது போடும் காஸ்ட்யூமில் ஒரு உருவம்

ஒரு மாஸ்க் – அதன் மேல் ஒரு ஃபேஸ் ஷீல்ட்.  கையில் க்ளவுஸ், யூனிஃபார்ம் கோட். க்ளவுஸ் போட்ட கையில் ஒரு சானிடைஸர் பாட்டில் என்று உள்ளே நுழைந்த உருவம் தான் அன்று அவர்கள் வீட்டுக்கு வரும் மெய்ட் என்று, அவள் கையில்  இருந்த நோட் புக்கை பார்த்து தெரிந்தது அன்னத்திற்கு.

உள்ளே நுழைந்த மெய்ட், முதலில் தன் கையில் இருந்த சானிடைஸர் திரவத்தை வாஷ் பேசின் குழாய் மேல் பீச்சி விட்டு, குழாயை திறந்து கையை கழுவிக் கொண்டாள்.

அன்னம் அவளிடம் தனியாக வைத்திருக்கும் சானிசைஸர் பாட்டிலை காட்டியதும், “பரவால்லம்மா, நான் இத வுட்டுக்கறேன்“ என்றாள் அப்பெண் 

ஆனா அந்த பெண்ணின் மைன்ட்வாய்ஸ், ‘இவங்க எப்படி நிரப்பி வச்சாங்களோ, எந்தக் கையால தொட்டாங்களோ, நாம தான்  ஜாக்கிரதையா இருக்கோணும்’ என்றது 

அதன் பின் எல்லா அறைகளிலும் போடப்பட்டிருந்த பாத்ரூம் மேட்களை, ஏதோ  செத்த எலியைத் தூக்குவது போல் இரண்டு விரலால் தூக்கி பால்கனியில் போட்டாள்

அந்த சமயம் மெய்ட், ‘இவங்க காலை அலம்பிட்டு  கால் துடைச்சாங்களோ இல்ல அப்படியே வந்து துடைச்சாங்களோ? இப்ப எல்லாம் கொரோனா எப்படி வேணா பரவலாம்னு சொல்றாங்க. இந்த அம்மா வேறே அதைச் சொல்றேன் இதைச் சொல்றேனு கிட்ட கிட்ட வருது, பயமா இருக்கு’ என மனதிற்குள் நினைத்தாள் 

பெருக்க துடப்பத்தை எடுத்து அதுமேல் கொஞ்சம் சானிடைசரை அடிக்க, பின்னோடு வந்த அன்னம், “என்னம்மா துடைப்பத்தை ஈரம் பண்றே, அப்புறம் பெருக்க முடியாது” எனவும், மெய்ட் முகத்திலே வந்த கோபத்தை நல்ல வேளையாக மாஸ்க் மறைத்து விட்டது 

“அம்மா கவலைப்படாதீங்க காஞ்சுடும், இதுல முழுக்க சாராயம் தான் இருக்கு. நம்ம வீட்டு பக்கத்துல ஒத்தர் சாப்ட்டு  நேத்து மேல போயிட்டாரு” என சாந்தமாக சொன்னாலும்

‘ஆமா இவங்ககுக்கு துடைப்பம் கெட்டுப் போற கவலை, நமக்கு உசுரு போற கவலை. தொணதொணனு நம்ம பின்னாலயே வராங்க, வயசானவங்க வேற, இவங்களுக்கு தான் கொரோனா மொதல்ல வரும்னு சொல்றாங்க. நாம தான் ஜாக்கிரதையா இருக்கணும். இவங்களுக்கு ஓடம்புக்கு வந்தாலும் கையில காசு இருக்கு,  பாத்துக்க டாக்டர்மாருங்க  இருக்காங்க. நமக்கு வந்தா செலவழிக்க காசு ஏது?  நாம வேலைக்கு போகலேன்னா பொழப்பு எப்படி ஓடும்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் 

அவள் மனதில் ஓடும் எண்ணங்கள் தெரியாமல், மெய்ட் அந்த ரூமுக்கு போனதும் கண்ணைக் காட்டி, அண்ணாசாமியை  இந்த ரூமுக்கு போகச் சொன்ன அன்னத்தை பார்த்து, “அம்மா ! நீங்களும்  இந்த ரூமிலேயே இருங்க, கூட கூட வந்தா உங்களுக்கு நல்லதில்ல. மேனேஜ்மென்ட்ல சொல்லியிருக்காங்க, தள்ளி தள்ளி இருக்கோணும்னு. உங்களுக்கு வயசாச்சு, நீங்க தள்ளி அந்த ரூமிலேயே இருங்க. நான் மத்த வேலையை முடிச்சிட்டு கடோசியா இந்த ரூம் பண்றேன்” என அந்த மெய்ட் கூற   

‘இந்த மெய்டுக்குத் தான் நம்ம மேல எவ்வளவு அக்கறை? நாம நன்னா இருக்கணும்னு பாவம் இந்த ரூமிலே இருக்கச் சொல்றது’னு நினைச்சுண்டு, பகவானிடம் ‘எல்லோரையும் கொரோனாவிலிருந்து காப்பாத்துப்பா’ என வேண்டிக் கொண்டாள் அன்னம் 

சில நேரங்களில்  மைன்ட் வாய்ஸ் மைன்ட்வாய்சாகவே இருப்பது உலகிற்கு எவ்வளவு நல்லது. அன்னத்திற்கு மெய்ட் மைன்ட் வாய்ஸ் மட்டும் கேட்டிருந்தால்? 

(முற்றும்)

#ad

             

         

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

தக்காளி தொக்கு செய்முறை – 👩‍🍳 சியாமளா வெங்கட்ராமன் 

பிள்ளையார்பட்டி (ஆன்மிக பயணம்) – ✍ சூரியசக்தி ஜானகிராமன்