சிறுகதைகள்

முள் (சிறுகதை) – ✍ நஸ்ரின் ரமேஷ்

“அப்பா….”

மகளின் அலறல் கேட்டு பயந்து தான் போனான் ராமு 

“இது நம்ம பவிகுட்டியோட சத்தம் தான?” என்றபடி சீட்டு விளையாடி கொண்டிருந்த நண்பர்கள் எழுந்து ஓடினார்கள்

பவித்ரா ராமுவின் ஒரே மகள். அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள். கொரோனா காலம் என்பதால் அனைவரும் வீட்டில் இருந்தார்கள்

ஊரடங்கில் அதிகம் வெளியே செல்ல இயலாத காரணத்தால், ராமுவும் அவனது நண்பர்களும் மதிய உணவிற்கு பின் சீட்டு விளையாடுவது வழக்கமானது. சில சமயம் இரவு உணவு நேரம் வரை கூட சீட்டுக் கச்சேரி நீளும் 

அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது தான், பவித்ராவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு விரைந்தார்கள் 

“பவி என்னம்மா ஆச்சு?” என ராமு பதற 

“அப்பா… முள் குத்திடுச்சுப்பா,  ரொம்ப வலிக்குதுப்பா” என அழுதாள் பிள்ளை 

சமாதானம் செய்து, நல்லெண்ணெய் மஞ்சள் என கை வைத்தியங்கள் எதுவும் பலனளிக்கவில்லை. நேரமாக ஆக, பவித்ராவின் அழுகை கூடியது 

“அண்ணே பாப்பாவை தூக்குங்கண்ணே, ஆஸ்பத்திரிக்கு போலாம். முள்ளு ஆழமா குத்திருக்கும் போலருக்கு, அதான் பாப்பா வலி தாங்காம அழறா” என்றான் ராமுவின் நண்பன் ராஜா

“ஆஸ்பத்திரி ரொம்ப கூட்டமா இருக்கும், அதுவும் இந்த சமயத்துல ஆஸ்பத்திரி பக்கமெல்லாம் போறது வம்பு, நம்மூரு வைத்தியர்கிட்ட கூட்டிட்டு போலாம்” என இன்னொரு நண்பன் சொல்ல, வைத்திய சாலைக்கு தூக்கிச் சென்றனர் 

கூட்டமாய் சிறுபெண்ணை அழைத்துக் கொண்டு வர கண்டதும், “என்னாச்சு? எதுனா பூச்சி பொட்டு தீண்டிடுச்சா?” எனக் கேட்டார் வைத்தியர் 

“இல்லீங் ஐயா, முன்னாடி வாசல்ல புள்ளைங்களோட வெளையாடிட்டு இருந்த புள்ள கால்ல முள்ளு குத்திடுச்சு.  என்ன செஞ்சும் வலி கொறயல, புள்ள ரொம்ப அழுவுது, அதான் பயந்து போய் கூட்டிட்டு வந்தோம்” என பதற்றமாய் ராமு கூற 

“சரி… அந்த கட்டில்ல படுக்க வைங்க… நீங்க வெளியே இருங்க, நான் பாக்கறேன்” என்றார் வைத்தியர்

ஐந்து நிமிடத்திற்கு பின் வெளியே வந்த வைத்தியர், “ராமு… உங்க மக காலுல விஷ முள்ளு குத்தியிருக்கு. மருந்து குடுத்திருக்கேன், அரை மணி நேரத்துக்குள்ள விஷம் எறங்கிட்டா பிரச்சனை இல்ல, இல்லேனா நான் உத்திரவாதம் தர முடியாது” எனவும், பதறி அழ ஆரம்பித்தான் ராமு

“வேற ஆஸ்பத்திரி எங்காச்சும் கூட்டிட்டு போய் நான் என் தங்கத்த காப்பாத்திக்கறேன்” என ராமு உள்ளே செல்ல முயல, அவனை தடுத்தார் வைத்தியர் 

“மருந்து குடுத்துருக்கேன், அப்படி பாதில மாத்து மருந்து ஊசி எதுவும் போட்டா புள்ள உயிருக்கே ஆபத்தாயிரும்” என வைத்தியர் கூற, செய்வதறியாது, கண்களில் நீர் வழிய நின்றான் ராமு  

திருமணமாகி ஐந்து வருடம் கடந்தும் பிள்ளை செல்வம் கிடைக்காமல் போக, மருத்துவமனை கோவில்கள் என  அலைந்து வரமாய் பெற்ற பிள்ளைக்கு ஆபத்து என்றால், தந்தையின் மனம் பதறத் தானே செய்யும்

“தவமா தவமிருந்து பெத்த புள்ள, கோகிலா வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன். ஐயோ பவிகுட்டிக்கு ஏதாவது ஆச்சுன்னா நான் உயிரோடயே இருக்க மாட்டேன்” என கதறினான் ராமு 

“ஒண்ணும் ஆகாதுடா ராமு, தைரியமா இரு” என தேற்றினார் உடன் வந்த நண்பர்கள் 

சற்று நேரத்தில், “அப்பா…” என மகள் அழைக்கும் குரல் கேட்டு விரைந்து உள்ளே ஓடினான் ராமு 

“பவி குட்டி, தங்கமே. உனக்கு சரியாய்டுச்சா ராஜாத்தி?” என மகளை ஆரத்தழுவி கண்ணீருடன் முத்தமிட்டான்

“எனக்கு ஒண்ணும் இல்லப்பா, நான் நல்லா தான் இருக்கேன்” என பவித்ரா கூற, கேள்வியாய் வைத்தியரை பார்த்தான் ராமு 

“உண்மை தான் ராமு, உங்க மக காலுல குத்தினது சாதாரண நெருஞ்சி முள்ளு தான், விஷ முள்ளு இல்ல” என வைத்தியர் கூற

“அப்புறம் எதுக்கு அப்படி பொய் சொன்னீங்க? எனக்கு கொஞ்ச நேரத்துல உசுரே போய்டுச்சு” என கோபமாய் கேட்டான் ராமு 

“உங்க பொண்ணு தான் அப்படி சொல்ல சொல்லுச்சு. அதுக்கு அவ சொன்ன காரணம் சரினு பட்டதால நானும் அந்த பொய்யைச் சொன்னேன்” என சிறுமியை கை காட்டினார் வைத்தியர்

“என்ன பாப்பா இதெல்லாம்? எதுக்கு அப்படி சொல்ல சொன்ன, அப்பா எவ்ளோ பதறி போய்ட்டேன் தெரியுமா?” என குரல் நடுங்க கண்ணில் நீர் பனிக்க கேட்டான் ராமு 

“எனக்கு ஏதாச்சும் ஆகிடும்னு நீங்க எவ்ளோ பயப்படறீங்க இல்லப்பா, அதே மாதிரி தான் நானும் அம்மாவும் தினமும் உங்களுக்கு ஏதாச்சும் ஆகிடுமோனு பயந்துட்டே இருக்கோம்” என மகள் கூற 

“எனக்கு என்னடா ஆகப் போகுது? நான் நல்லா தான இருக்கேன்” என்றான் ராமு புரியாமல் 

“அப்பா, எல்லா பக்கமும் கொரோனா அதிகமா இருக்குனு தான கவர்ன்மென்ட் எல்லாருக்கும் லீவ் விட்டு வீட்டுல இருக்க சொல்றாங்க. ஆனா நீங்க தினமும் பிரெண்ட்ஸ் பாக்க போறேன் கடைக்கு போறேன் சீட்டு விளையாட போறேன்னு வெளிய போறீங்க. உங்களுக்கு ஏதாச்சும் ஆனா நாங்க என்னப்பா செய்வோம். அதை உங்களுக்கு புரிய வெக்க தான் இப்படி பொய் சொல்ல சொன்னேன். தயவு செஞ்சு தேவையில்லாம வெளியே போகாதீங்கப்பா” என மகள் கெஞ்சலாய் கூற 

மகள் தன் மீது கொண்ட அளப்பரிய அன்பையும், சமயோசிதமாய் யோசித்து தன் தவறை உணர்த்தியதையும் கண்டு பெருமிதம் கொண்டான் ராமு 

“கண்டிப்பா இனிமே தேவையில்லாம வெளிய போக மாட்டேன் பவிக்குட்டி” என மகிழ்வுடன் மகளை அணைத்துக் கொண்டான் 

தந்தையின் மன மாற்றம் பவித்ராவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது 

மகளுடன் வீட்டுக்குள் நுழைந்தவனை, “ரேஷன்ல போய் சாமான் வாங்கிட்டு வர்றதுக்குள்ள எங்க போனீங்க? அதுவும் இந்த சமயத்துல புள்ளைய கூட்டிட்டு வெளிய சுத்தறீங்களே, ஏதாச்சும் வந்துட்டா என்ன செய்யறது?” என ராமுவின் மனைவி கோகிலா கோபமாய் கேட்க, நடந்ததை விவரித்தான் ராமு 

மகளின் சமயோசித அறிவை மெச்சி, ‘ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க’ அன்புடன் அணைத்துக் கொண்டாள் கோகிலா 

கணவனின் மனமாற்றம் கோகிலாவிற்கு பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அளித்தது

#ad

             

         

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Similar Posts

2 thoughts on “முள் (சிறுகதை) – ✍ நஸ்ரின் ரமேஷ்
  1. நல்ல குழந்தை! பெரியவங்க புரிஞ்சுக்கணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!