அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம் ஆலயம்:
‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் வடிவத்தை கொண்டவர் விநாயகப்பெருமான். நமது நாட்டில் மிக பழமையான காலம் தொட்டே, விநாயகர் வழிபாடு முறை இருந்து வருகிறது
நமது அனைத்து வினைகளையும் தீர்க்கும் பிள்ளையார்பட்டி அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தின் சிறப்புகளை இங்கு காணலாம்
தல விருட்சம்:
மருதமரம் (கற்பகவிருட்சம்)
வாகனம்:
வெள்ளி மூஷிக வாகனம்
ஊர்:
பிள்ளையார்பட்டி, சிவகங்கை, தமிழ்நாடு.
இரண்டு ராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோயில். கற்பக விநாயகா் கோவில் தமிழ்நாட்டின் மிகப்பழமையான குகைக் கோவில்களுள் ஒன்றாகும்
இது காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது
இடம்:
இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர் குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது
மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும் மற்றும் சிவகங்கையிலிருந்து 47 கி.மீ. தொலைவிலும் உள்ளது
தல வரலாறு:
பிள்ளையார்பட்டி தல வரலாறு சுமார் 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் ஒரு “குடைவரை” கோயிலாகும்.
இந்த வகை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் “பல்லவ” மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆகம கல்வெட்டுக்களில் எழுதியுள்ளபடி இக்கோயில், 1091 மற்றும் 1238ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது எனக் கருதப்படுகிறது.
இக்கோயிலின் மூலவரான விநாயகர் “கற்பக விநாயகர்” என அழைக்கப்படுகிறார்.
தென்னிந்தியாவில் “அர்ஜுன வன திருத்தலங்கள்” நான்கு இருக்கிறது. அதில் தமிழ் நாட்டில் மூன்றும், ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் “பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும்” ஒன்று.
நான்கு ‘அர்ஜுன வன திருத்தலங்கள்’:
திருநெல்வேலி – திருப்புடைமருதூர், தஞ்சை – திருவுடைமருதூர், ஆந்திரா- ஸ்ரீசைலம், சிவகங்கை- பிள்ளையார்பட்டி.
இந்தக் கோயில் கி.பி.12-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் செட்டிநாட்டு நகரத்தார்கள் வசமானது என்பது வரலாறு.
நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் மேற்பார்வையில் மிகச் சிறப்பான முறையில், ஆகம முறை தவறாமல் வழிபாடு நடைபெறுகிறது
இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்
ராஜகோபுரம்:
கோயில் திருமதிலின் கிழக்கு வாயிலில் ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது.
கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் திருமதிலின் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது.
இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது
மூலவர் சுற்றிய பிரகாரங்கள்:
இரு கைகளுடன் மூலவா் கற்பகவிநாயகா் 6 அடி உயரத்தில் வலம்புரி நிலையில் காணப்படுகிறார்
இங்கு 3 லிங்கங்கள் – திருவீசா், மருதீசா் மற்றும் செஞ்சதீஸ்வரா், 3 பெண் தெய்வங்கள் – சிவகாமி அம்மன், வடமலா் மங்கையம்மன், சௌந்திரநாயகி அம்மன் ஒரு சேர அமா்ந்து பக்தா்களுக்கு தரிசனம் கொடுக்கின்றனா்
இந்த குடைவரைக் கோயிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பகுதி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்களுக்கு இடையே தென்வடல் ஓடிய இரட்டைப் பகுதி மண்டபம் காணப்படும்.
அம்மண்டபத்தின் கீழ்புறத்தில் தென்புறம் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர்.
இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார். அதற்கு மேற்கே அதேமலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர். உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள்.
அந்த மேல்புறத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய மாடம் குடையப் பெற்றுள்ளது.
அதன் நடுவிலே கடைந்த பெரிய மகாலிங்கம் உள்ளது. இந்த மூர்த்தி தான் திருவீசர். இவர் திருவீங்கைக்குடி மகாதேவர். அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம்.
இந்த அளவில் உள்ள குடைவரைக் கோயில் தான் முதல்திருப்பணி ஆகும்
வயிறு, ஆசனத்தில் படியாமல் ‘அர்த்தபத்ம’ ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்கிறார் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்
பிள்ளையாரின் சிறப்பு:
- இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது
- சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது - வயிறு, ஆசனத்தில் படியாமல் ‘அர்த்தபத்ம’ ஆசனம், போன்று கால்கள் மடித்திருக்க அமர்ந்தருள்வது
- இடக்கரத்தை கடிஹஸ்தமாக இடையில் நாட்டிப் பெருமிதக் கோலம் தோன்றப் பொலிவது
- வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது
- ஆண், பெண் இணைப்பை புலப்படுத்தும் முறையில் வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது. ஆகிய இவை பிள்ளையார்பட்டி பெருமானிடம் காணப்பெறும் சிறப்பாகும்.
விழா நாட்கள்:
- விநாயகா் சதுா்த்தி விழா
- மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தி விழா.
- ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார்.
- திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார்.
- பிள்ளையார், மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும்.
- மார்கழிதிருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார்.
- ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும்.
- 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க வேண்டிக் கொள்ளலாம்
- விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்
- ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூஜையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து படைக்கப்படும். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்
கற்பக விநாயகர் பிரசாதம்:
முக்குறுணி கொழுக்கட்டை செய்முறை:
18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள்.
தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்
பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூஜையில் படையல் செய்வர்.
மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக் கொடுப்பார்கள்
திருக்குளம்:
விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப்பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.
திருக்குளத்தில் துள்ளி விளையாடும் மீனும், கோயில் அமைந்துள்ள சிறு குன்றமும் பிள்ளையார்பட்டியை இயற்கை அழகு தவழும் இடமாக ஆக்கியிருக்கின்றன
வேறு பெயர்கள்:
இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும், 1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர், 2. மருதங்குடி, 3. திருவீங்கைகுடி, 4. திருவீங்கைச்வரம், 5. இராசநாராயணபுரம் என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு.
மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன
வேண்டுதல்கள் மற்றும் பரிகாரங்கள்:
- வியாபாரம் செழிக்க வேண்டிக்கொள்ளும் பக்தர்கள் இத்திருக்கோவிலில் கணபதி ஹோமமும், இவ்விநாயகருக்குப் பால் அபிஷகமும் செய்வது வழக்கம்
- பொதுவாக இந்த விநாயகரின் உடல் பகுதியில் ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு கிரகம் வீதம் நவக்கிரகங்கள் வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது
- இந்த விநாயகரை வணங்கினால் கல்வி, கேள்வி, ஞானம், திருமணம், குழந்தை பாக்கியம், குடும்ப நலம், உடல் பலம், வியாபாரச் செழிப்பு உட்பட சகல நற்பலன்களும் ஏற்படும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக வந்து வழிபடுகிறார்கள்
- கற்பக விருட்சம் என்னும் மரத்தினடியில் அமர்ந்து மனதார வேண்டினால், வேண்டுவனவற்றை எல்லாம் தருமாம் அக்கற்பக மரம்
நேர்த்தி கடன்:
இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுகோள் நிறைவேறியதும், இத் தலத்தில் உள்ள பிள்ளையாருக்கு, முக்குறுணி மோதகம் (கொழுக்கட்டை) படைத்து வழிபடுகிறார்கள்.
தொழில் அபிவிருத்தி வேண்டுவோர் இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து பயனடைகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்
நடை திறப்பு:
கோயில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும். மாலை 4 மணிமுதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்திருக்கும்
முகவரி:
அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயம்,
பிள்ளையார்பட்டி, சிவகங்கை மாவட்டம் 630207
தொலைபேசி எண்: 04577 -264182, 264797, 264240, 264241.
GIPHY App Key not set. Please check settings