in

பரமதிருப்தி (ஆன்மீகம்) – வைஷ்ணவி

அன்றைய நாள் (15-09-2022) மாலை வரை  சுமூகமாகவே சென்றது. கண நேரத்தில் பல நாட்களாக தீராத சொந்தப் பிரச்சனை ஒன்று விஸ்வரூபமெடுத்து பூகாகரமாக நின்றது. ஒன்று இரண்டு என்றால் பயப்படலாம். ஓராயிரம் இருந்தால் எதற்கு கவலைப்படுவது என எக்சலில்தான் file போட வேண்டும்.

அழுகையும் வரவில்லை. (இருந்தாதான வரும். எல்லாம் வற்றி போய்விட்டது) சரி நடக்கறது நடக்கட்டும், மார்க்கெட்டாவது போகலாம் என அலுவலகம் முடிந்து கிளம்பினேன்.

எத்தகைய சிக்கலாக இருந்தாலும் என் சகோதரனாக பாவிக்கும் உயரதிகாரி பார்த்துக் கொள்வார் என துணிவாக இருந்தாலும் யோனையாகவே நடந்தேன். அவரின் அலுவலகத்தில் சந்தித்து பேசலாமா? இதற்கு மேல் கிளம்பினால் அவரை பார்த்துவிட்டு வீடு திரும்ப நேரமாகிவிடும் என அந்த எண்ணத்தையும் கைவிட்டேன்.

பெரியரோட்டின் ஆரம்பத்தில் என் அலுவலகமும் முடிவில் மார்க்கெட்டும் இருக்கும். ஈரோட்டின் பிரபலமான வ.உ.சி பூங்கா அருகே மார்க்கெட் உள்ளது. மார்க்கெட்டின் மறுபுறம் உள்ள நிறுத்தத்தில் இறங்கி அலுவலகம் வரவேண்டும்.

இரண்டு வருடம் அங்கே ஸ்மார்ட் சிட்டிக்கான வேலை நடந்ததால் தற்காலிகமாக அந்த சாலை ஒருபுறம் மூடப்பட்டது. அதனால் அந்த வழியை உபயோகித்து வருடமாகிவிட்டது. அதனால் நிறைய மாற்றங்கள் சாலையில்.

நானும் பராக்கு பார்த்துக் கொண்டே சென்றேன். அங்கே ஒரு சிறு கும்பல் தெரிந்தது. வழக்கமாக அது சுமைதூக்குவோர் ஒன்று கூடுமிடம். ஆனால் நிற்பவர்களை பார்த்தால் அப்படி தெரியவில்லை.

பிறகு தான் நினைவு வந்தது, அட இங்கே விநாயகர் ஆலயம் ஒன்று இருக்குமே என்று. ஆனால் இன்று சதுர்த்தியும் இல்லையே வேறு என்னவாக இருக்கும் என்று மூளை சிந்தித்தாலும் கால்கள் அனிச்சையாக கோவிலை நோக்கியே சென்றன.

முதலில் விநாயகரை வழிபட்டுவிட்டு அந்த கூட்டத்தினருகே சென்றேன். என்ன ஆச்சரியம்!  கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல் சுவாமியின் திரை விலகுவதற்கும் அந்த உயரதிகாரி என் கண்களில் படுவதற்கும் சரியாக இருந்தது. வற்றிய கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது.

இந்த முறை வந்தது புன்கண்ணீர் அல்ல, ஆனந்தக் கண்ணீர். அந்த உயரதிகாரி வேறு யாருமல்ல சாட்சாத் அந்த உமை மைந்தனே! என் சிக்கல்களை தீர்ப்பவன் அந்த சிக்கல் சிங்கார வேலனே! உயரதிகாரியின் அலுவலகம் என்று சொன்னது ஈரோட்டிற்கு அருகிலுள்ள திண்டல்மலை வேலாயுத சுவாமி திருக்கோவிலைத் தான்.

ஓ! இன்றைக்கு கிருத்திகை என மண்டையில் உறைத்தது. “நீலச்சிகண்டியில் ஏறும் பிரான் எந்த நேரத்திலும் கோலக் குறத்தியுடன் வருவான்” என அருணகிரிநாதர் சும்மாவாகவா சொன்னார்? அவனைப் பார்த்தவுடன் அனைத்து துயர்களும் என் சிந்தையிலிருந்து மறைந்தன. தன்னிலைக்கு திரும்ப சிறிது நேரம் ஆனது.

அந்த சாலையை சில காலமாக உபயோகிக்காததால் அந்த ஆலயத்தை விரிவுபடுத்தி முருகன் சன்னதி அமைத்துள்ளார்கள் என்பதை நான் அறியவில்லை. இது போல் ஒரு முறை அல்ல இருமுறை அல்ல, பல முறை எனக்கு ஒரு துயர் என்றாலும் அவமரியாதையான சூழல் ஏற்படுவது போல இருந்தாலும் அங்கே முன் நின்று என்னைக் காத்தருள்வது என் சொந்தக் கடவுளான அந்த கந்தக் கடவுள்தான்.

இதை பரமதிருப்தி என்று ஒற்றை வார்த்தையில் கூறுவது எப்படி இருக்குமென்றால், காதலிக்க நேரமில்லைல நாகேஷ் சச்சுவிடம் சொல்வாரே, “அத்தான் உங்கள் நினைவால் உலகத்தையே மறக்கிறேன்” உலகத்தை மறக்கிறது அவ்ளோ சின்ன விஷயமா சொல்லிட்டியேனு. அது போல் இந்த பரம திருப்திங்கிற தலைப்புக்கு இதை எழுதினாலும் வெறும் வார்த்தைகளால் அந்த நிலையை வடிக்க முடியாது. நன்றி.

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    போங்கடா… நீங்களும் உங்க உறவும் (சிறுகதை) – முகில் தினகரன், கோவை

    கோவில் கண்ணாடி (சிறுகதை) – ச.பூங்குழலி, வடசேரி, தஞ்சாவூர் மாவட்டம்.