sahanamag.com
மற்றவை

இவர்கள்  மாக்கள்…✍சக்தி ஸ்ரீநிவாஸன்

மீபத்தில் ஒரு வீடியோப் பதிவைக் காண நேர்ந்தது.  பார்த்தவுடனே  மனம் உடல் இரண்டும் பதறியது. கண்கள்  தன்னிச்சையாக உப்புக் கரைசலைக் கொட்டின. 

ஆம்… வயதான பெற்றோரை, தவறு… பழுத்தப் பழமாயிருக்கும் அம்முதியோரை   ஈவிரக்கமின்றி, மனித உடல் போர்த்திய ஒரு ஜந்து தூக்கியெறிந்தது

இருசக்கர  வாகனத்தில் அவர்களை  ஏற்றி  வந்து இறக்கியதோடு அவர்கள் சுமந்து வந்த பையையும் அவர்களோடு  சேர்த்து  எறிந்தது.

மூட்டைகளோடு இவர்களும் அவல மூட்டையாய், சுயநினைவற்ற நிலையில், சுயமரியாதையை  இழந்த நிலையில், மலங்க மலங்க விழித்தபடி அவர்கள் நின்ற  கோலம் கண்களில் செந்நீரை வரவழைத்தது

எங்கே  சென்றுக்  கொண்டிருக்கின்றோம்? எதை நோக்கி நமதுப் பயணம்? மனிதம் எங்கே? ஈரம்  எங்கே? ஏனிந்த  அவலம்?

பெற்றோரின்   அருமைப்பெருமைக்  குறித்து  எவ்வளவோப்  பேசியிருக்கிறோம்…. அனுபவங்களில் உணர்ந்தும்  இருக்கிறோம்

இருந்தும்கூட, இப்படிப்பட்ட தொடர்கதையான இந்நிகழ்வுகளைக்  காணும்  போது  நாம்  செயலற்றுப் போகின்றோம்.  இதுவும்  ஒரு  செய்தி  எனக்  கடந்துப்  போகின்றோம்

இவர்களை  யாராலும்  மாற்றவோ  திருத்தவோ  முடியாது

பெற்றோர் தாம்  திருந்த வேண்டும்.  பிள்ளைகளுக்காக  வாழவேண்டியதுதான். ஆனால்  அவர்களுக்காகவே வாழ்நாளைத்  தியாகம்  செய்ய வேண்டிய அவசியமில்லை.  மாக்களாக  விளங்குபவர்களுக்கு…  மாக்களிடமே  நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்

பேணிப்  பாதுகாக்கும்  குட்டிகளை…  அவை வளர்ந்தவுடன்  விரட்டி  விடுபவை விலங்குகள்.  தனக்கென  வாழ்வை அவை அவை  அமைத்துக் கொள்ளும்.

அதைப் போன்று தான், பிள்ளைகளை வளர்த்து  படிக்க வைத்து, அவர்களுக்கென்று  வாழ்க்கை  அமைத்துக் கொடுத்தவுடன், பெற்றோர்  தம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும்

தனக்கென்று  நிலையான  வருவாய்க்கு  வழிவகை செய்துக் கொள்ள வேண்டும். தமது உற்றார் உறவினர் நண்பர் கருத்தினைக் கேட்டு  நடக்கலாம்.

எல்லாப்  பிள்ளைகளும்  பொல்லாப்  பிள்ளைகளல்லர்.  விதிவிலக்குகளுக்கு  மட்டுமே  இந்த  அணுகுமுறை  தேவை.

பிள்ளைகளால்  பெற்றோர்  கைவிடப்படுவது நடுத்தர வர்க்கத்தினரிடம் மட்டுமே அதிகமாகக்  காணப்படுகிறது

மேல்தட்டு மக்களின்  வாழ்க்கை  முறையே வேறு. “அவரவர் கூட்டுக்கு அவரவரே  ராஜா”  என்பதைப்  போல்  தந்தையின் வாழ்வில் மகன் தலையிடுவதில்லை,  மகன் வாழ்வில் தந்தை தலையிடுவதில்லை  

கீழ்த்தட்டு  மக்கள்  அவரவர்  உழைப்பை  நம்பி  வாழ்பவர்கள்.  மேல் வர்க்கத்தில்  பணம்  பேசுவதுப் போல், இங்கு உழைப்பு ஒன்றே மூலதனம்

“யாரை  நம்பி  நான் பொறந்தேன்” என்று  மற்றவரை  நம்பி இன்னொருவர்  இருப்பதில்லை. வாழும் காலம் வரைக்கும் தம் உழைப்பை நம்பியே  ஜீவனம்  பிழைப்பதால்  ஏமாற்றமும்  இல்லை, அவலமும்  இல்லை

நடுத்தர  வர்க்கத்துப்  பெற்றோர், தங்கள் மொத்த வருவாயையும், பெண்ணின்  திருமணத்திற்காகவும்   மகனின் வேலை வாய்ப்பிற்காகவும் செலவிட்டு, பின்னர் அவர்களை எதிர்பார்க்கும் சூழலில் இருக்கின்றனர்

தங்கள்  சொத்துக்களை  அவர்களிடம்  பறிகொடுத்து விட்டு  சம்பளமில்லா  வேலைக்காரர்களாக  இருக்கும்  நிலை

“தனக்கு மிஞ்சி தான்  தானம்” என்பதை  உணர வேண்டும்.

எனவே,  பெற்றோர் தமக்கான சுயமரியாதையை  விட்டுக் கொடுத்து, பாச வலையில்  சிக்குண்டால்  அவ்வலையே மீளாச் சிறையாய் அவர்களை  காலமெல்லாம்  வருந்த  வைக்கும்

பார்த்தசாரதி கண்ணன்  அர்ச்சுனனுக்கு “பற்றைத்  துற” என்று  அறிவுறுத்தியதைப்  போல், அதீதப் பற்றுக் கொள்ளாமல்  இருக்க  வேண்டும்.   

தாமரை இலைத்தண்ணீர் போன்று, பிள்ளைகளை அதிகம் சாராமல் இருக்க வேண்டும்.  பிள்ளைகளுக்கு வேண்டிய ஒத்துழைப்பைக் கட்டாயம் கொடுக்க வேண்டும்.  

நான் வீடியோவில்  கண்ட  அப்பெற்றோர் நிலைமை, எச்சூழலால்  எழுந்தது  என்பதை நாம் அறியோம். 

ஒன்று,   கண்ணிருந்தும்  குருடராய் நடப்பதையெல்லாம் கண்டும்  காணாதவராய்  இருக்கின்றோம். இல்லை, செயலற்றவர்களாய் வேடிக்கைப் பார்க்கின்றோம்

ஆனால்,  அம்முதியவர்களுக்கு  தகுந்த   உதவி கிடைத்திருக்க வேண்டும் என்று மனதார கடவுளைப் பிரார்த்திக்கிறேன்

அப்பெற்றோரைக்  கண்டதும், “வியட்நாம் வீடு  திரைப் படத்தில், நடிகர்  திலகம் பாடும் பாடல்  நினைவுக்கு  வருகிறது. உடன்  நாட்டியப்  பேரொளி  பத்மினி உணர்ச்சிப்பூர்வமான பாவங்களை வெளிப்படுத்துவார்

கண்ணதாசன்  கவிதை வரிகள்  கண்களைக்  குளமாக்கும். பாரதியார்,  காதலி  கண்ணம்மாவிற்குப்  பாடிய  பாடல்  வரிகளுடன்  ஆரம்பிக்கும்.

உன் கண்ணில்  நீர்  வழிந்தால்  

என் நெஞ்சில்  உதிரம்  கொட்டுதடி
என்  கண்ணில்  பாவையன்றோ- கண்ணம்மா
என்னுயிர்  நின்னதன்றோ

கால  சுமைதாங்கி போல
மார்பில் எனைத்தாங்கி
வீழும்  கண்ணீர்  துடைப்பாய்
அதில்  என்  விம்மல்  தணியுமடி

ஆலம் விழுதுகள்  போல்
உறவு  ஆயிரம் வந்தும்  என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில்  நான் விழுந்து விடாதிருந்தேன்

முள்ளில்  படுக்கையிட்டு
இமையை  மூடவிடாதிருக்கும்
பிள்ளைக்   குலமடியோ
என்னை  பேதைமை செய்ததடி

பேருக்கு  பிள்ளையுண்டு
பேசும்பேச்சுக்கு  சொந்தமுண்டு
என்  தேவையை  யார்  அறிவார்
உன்னைப் போல்  தெய்வம் ஒன்றே அறியும்

இப்பாடல் வரிகள்  நிதர்சனத்தைக்  காட்டுகிறது.  வயதான கணவன் மனைவி  இருவரும் ஒருவரையொருவர்  விட்டுக் கொடுக்காமல்  வாழவேண்டும்

பிள்ளைகளுக்காகவே வாழ்வில்  முக்கால் பாகத்தை செலவிட்டிருந்தால், மீதமிருக்கும் கால் பாகத்தையாவது தமக்கென வாழ  வேண்டும். 

இருவரின்  தேவையை  இவரின்றி  வேறொருவரும்  அறியர் என்பதால்,  தன் வளையில்  சுயமரியாதையுடன்   வாழ வேண்டும். 

சுயநல  மாக்களை  நம்மால்  தட்டிக்  கேட்க  முடியாவிட்டாலும்…. நாம் மக்கட் பண்போடு மனித நேயத்தோடு  நடப்போம்.

நமது  பிள்ளைகளுக்கு  நாம்  கற்றுக்கொடுக்க  வேண்டிய  பால பாடம் மூத்தோரிடம் பணிவு, சொற்களில் மரியாதை, இரக்க சிந்தனை, மனிதநேயம், கருணை முதலியவை தாம்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

              

                  

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website &

Promoted across our Social Media Platforms

Similar Posts

One thought on “இவர்கள்  மாக்கள்…✍சக்தி ஸ்ரீநிவாஸன்
  1. கொடுமை! பெற்றவர்களைத் தூக்கி எறிய எப்படி மனம் வருகிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!