in

காதல் சடுகுடு (சிறுகதை) – ✍ பானுமதி வெங்கடேஸ்வரன்

காதல் சடுகுடு (சிறுகதை)

ந்தப் பெரியவரை விட்டு விட்டு திரும்பினான் வெங்கிட்டு. அந்த பெயர் சொல்லி விளித்தால் அவனுக்கு கோபம் வரும்.

என்னவொரு கர்நாடகமான பெயர்! ஆனால் அவனை குடும்ப நண்பரான கணேசன் அங்கிள் அப்படித் தான் அழைப்பார்  

வெங்கட் பிரபு என்ற பெயர் கொண்ட அவனை, வெங்கி என்று சிலரும், பிரபு என்று சிலரும் கூப்பிடுவார்கள். கணேசன் அங்கிள் மட்டும் ‘வெங்கிட்டு’ என்பார். சின்ன வயதில் அவனை சீண்டுவதற்காக அப்படி கூப்பிட்டார்.

“அங்கிள், கால் மீ வெங்கி ஆர் பிரபு” என்றான் இவன் எரிச்சலாய் 

“என்னடா வெங்கி மங்கினு, நன்னாவே இல்ல. என் பையன் பேரும் பிரபு, உன்னைக் கூப்பிட்டால் அவன் திரும்பிப் பாக்கறான். அதனால நீ எனக்கு வெங்கிட்டு தான்” என்பார் 

இப்போது அந்த பெயரின் சாயல் கூட அவனிடம் இல்லை. தன் அப்பா அம்மா பெயர்களை இணைத்து ரவி சித்ரா என்று மாற்றிக் கொண்டிருந்தான், தற்போது திரையுலகில் ஒரு பிரபல இயக்குனருக்கு உதவியாளராக இருக்கும் வெங்கட் பிரபு

ஏனென்றால் திரை உலகில் தான் வெங்கட், பிரபு, வெங்கட் பிரபு என்ற பெயர்களிலெல்லாம் ஏற்கனவே ஆட்கள் இருக்கிறார்களே. 

அந்த ரவிசித்ரா என்னும் வெங்கிட்டுவிற்கு ஆச்சர்யமும், கோபமும் வந்தது அந்த பெரியவர் சொன்னதைக் கேட்டு

பெண் பாவம் பொல்லாததாமே..?

எதை வைத்து இப்படி சொல்கிறார்? அல்லது ஏதாவது தெரியுமா? அல்லது அப்பா சொல்லுவாரே அசரீரி என்று, அந்த மாதிரி விஷயமா?

ண்மையில் வெங்கட் இந்த கல்யாணத்திற்கு வந்ததே அந்த பச்சை கலர் தாவணி பெண்ணை முன்னிட்டு தான்.

அவனுடைய டைரக்டர் தன்னுடைய அடுத்த படத்திற்கு ஒரு புது முகத்தை தேடிக் கொண்டிருந்தார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை

“அனுஷ்கா மாதிரி ஒரு பொண்ணு வேணும்பா. அந்த கம்பீரம், அழகு, முகத்தில் ஒரு புத்திசாலித்தனத்தோடு கூடிய இன்னொசன்ஸ்..”

“அனுஷ்காவையே போட்டுடலாமே சார்…”

“விளையாடறயா? அவ்ளோ பட்ஜெட் கிடையாது”

இந்தப் பச்சை தாவணிப் பெண், உயரம்  தவிர 75% சதவீதம் அனுஷ்கா போல இருந்தாள். மேக்கப்பில் மிச்சத்தை நிரப்பி விடலாம்.

தன்னால் வர முடியாது என்பதால் அம்மாவிற்கு துணையாக அப்பா இவனை இந்த கல்யாணத்திற்கு போகச் சொல்லியிருந்தார். நேற்று பார்த்தவுடனேயே மனதில் ஒரு பொறி தட்டியது. 

அவளைப் பற்றி விவரங்களை எப்படியோ சேகரித்து விட்டான். அவளறியாமல் அவளை செல்போனில் புகைப்படம் எடுத்து, இயக்குனருக்கு அனுப்ப, “டேய்! விடாதடா” என்று பதில் அனுப்பியிருந்தார்

இன்றைக்கு மற்றொரு உதவி இயக்குனராகிய சேதுவை அழைத்து வந்து, அவனிடம் அந்த பச்சை தாவணி பெண்ணை அடையாளம் காட்டினான்.

“நீ கவலையே படாதே, ஆளை அடையாளம் காட்டிட்டல்ல, காரியத்தை கச்சிதமா முடிச்சர்றேன்” என்றான் அவன் 

அவன் அசகாயசூரன். வெறும் வாய்ச்சொல் வீரன் மட்டுமல்ல, செயல் தீரனும் கூட. நிச்சயம் அந்தப் பெண்ணையும், அவள் பெற்றோர்களையும் சம்மதிக்க வைத்து விடுவான்

அந்த சமயத்தில் தான், கணேசன் அங்கிள் இவனை கூப்பிட்டு யாரோ ஒரு பெரியவர் அட்ரஸ் மாறி வந்து விட்டார் என்றும், அவரை சரியான மண்டபத்தில் கொண்டு விட்டு விட்டு வரும்படியும் கூறினார் 

பெரியவர் சும்மா வராமல் ஏதோ கேள்விகள் கேட்டுக் கொண்டே வந்தார், முதலில்  “என்ன வேலை பார்க்கிறாய்?” எனக் கேட்டார் 

கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற மரியாதைக்காக

“அஸிஸ்டெண்ட் டைரக்டர்” என்றான்

“எந்த கம்பெனில..?”

“கம்பெனி இல்ல, சினிமால. சினிமா டைரக்டர் ராஜீவன்கிட்ட அசிஸ்டெண்ட் டைரக்டராக இருக்கேன்”  

“ஓ!.. உன் வேல என்ன? வசனம் எழுதுவியா?”

எப்படி சொன்னால் இவருக்குப் புரியும் என ஒரு கணம் யோசித்தேன் 

“வசனம் எழுதணும், அந்த வசனத்த நடிகர்,நடிகைகளுக்கு சொல்லித்தரணும். சீன் சொல்லத் தெரியணும். கண்டினியூட்டியை ஞாபகம் வெச்சுக்கணும். கதாநாயகி தொலைச்ச காதணியப் போல இன்னொண்ணு வாங்க கடைவீதில அலையணும், ட்ராலி தள்ளணும். ஹீரோவையோ, ஹீரோயினையோ திட்ட முடியாத நேரத்தில் இயக்குனரின் கோபத்தை பொறுத்துக்கணும்”

“ஓ…”

“அது மட்டுமில்ல, பல விஷயங்களில் உதவணும்”

“ம்..ம்..ம்” என தலையாட்டியவர், “வெரி ட்ரிக்கி ஃபீல்ட்” என்றார்

அதன் பிறகு இறங்கும் இடம் வரும் வரை எதுவும் பேசவில்லை.

இறங்கும் பொழுது, அவன் கையைப் பிடித்து, “என்னவோ சொல்லணும்னு தோண்றது… பெண் பாவம் பொல்லாது..” என்றவர், “எனிவே, தாங்க் யூ, காட் ப்லெஸ் யூ” என்றதோடு அவன் தலையைத் தொட்டுச் சென்றார்.  

கணேசன் அங்கிளுக்காக ஏதோ செய்யப் போக, ,’பெண் பாவம் பொல்லாது’ என அசரீரி மாதிரி ஏதோ சொல்கிறாரே என குழம்பினான் 

ப்பாவுக்கு இந்த மாதிரி விஷயங்களில் அதீத நம்பிக்கை உண்டு. எதையாவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது தெருவிலோ, அல்லது டி.வி.யிலோ, “கவலைப்படாதே, எல்லாம் நல்லவிதமா நடக்கும்” என்று யாரோ யாருக்கோ சொன்னால், “பார் அசரீரி மாதிரி சொல்றான்” என்பார்.  

இவர் யாரென்றே எனக்குத் தெரியாது. என்னையும் இவருக்குத் தெரியாது. ஆனாலும் தனக்கு மட்டும் தெரிந்த ஒரு விஷயத்தை சொல்கிறாரே? என்ற வியப்பு வந்தது. 

தான் மிகவும் நெருங்கிப் பழகும் மாலினியை கழட்டி விட்டு விடலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறான்.

மாலினி என்ன தான் அழகும், திறமையும் இருக்கும் நடிகையாக இருந்தாலும், பெரிதாக வாய்ப்புகள் அமையவில்லை

கதாநாயகியின் தோழிகளில் ஒருத்தியாக நிற்பாள், அதுவும் கதாநாயகிக்குப் பின்னால். கதாநாயகியின் அருகில் நின்றால் அவளை விட இவள் அழகாக தோன்றி விடும் அபாயம் உள்ளதே. 

இருந்தாலும் விடாமல், சினிமாக்காரர்களுக்கே உரிய நம்பிக்கையோடு காத்திருக்கிறாள். படப்பிடிப்பு இடைவேளைகளில் பேசி, பழகி நெருங்கி விட்டார்கள்

இருவரில் யாரவது ஒருவர் செட்டிலானால் கூட திருமணம் செய்து கொண்டு விடலாம். ஆனால் அது சுலபத்தில் நடக்கும் விஷயமாகத் தெரியவில்லை.

இந்த தருணத்தில்தான் மாமா மூலம் காட்சி டி.வி.யின் தலைமை இயக்குனர் அறிமுகமானார். 

மாமா வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு மாமாவின் நண்பரான பிரகாஷ் வந்த போது, மாமா அவரிடம் அறிமுகப்படுத்தி,”நீதான் மீடியாவில் இருக்க, பிரகாஷுக்கு கம்பெனி குடு” என்றார்

அவர்கள் இருவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தன. விடைபெறும் சமயம், விசிட்டிங் கார்டை கொடுத்து,”வீ வில் மீட்” என்று கூறியதை பிரபு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. 

ஆனால் அவனுடைய ஸ்நேகிதனும், காமிராமேனும் ஆன கிருஷ்ணா தான்  அவனை உந்தித் தள்ளினாள்

“அவர் மீட் பண்ணலாம்னு சொன்னா, அவரே கூப்பிடுவார்னு எப்படி எதிர்பார்க்கற? உன்கிட்ட இருக்கற ஸ்க்ரிப்ட்டை எடுத்துக்கிட்டு அவரைப் போய் பாரு” என்றான் 

“டி.வி. சீரியல் இயக்கவா?”

“வாட்ஸ் ராங்? வழக்கமான சீரியலா இல்லாம, புதுசா ஏதாவது யோசி”

அவன் சொன்னபடி பிரபல எழுத்தாளர்களின் சிறுகதைகளுக்கு திரைக்கதை வடிவம் கொடுத்து ஸ்க்ரிப்ட் தயாரித்தான். 

அவனும் கிருஷ்ணாவும் சேர்ந்து, ஐந்து நிமிடங்களுக்கு ஓடும்  குறும்படங்கள் எடுத்தார்கள். அந்த யூ.எஸ்.பி.டிரைவை எடுத்துக் கொண்டு பிரகாஷின் அலுவலகத்திற்குச் சென்றார்கள்

“ஓ! நீ ரெங்கராஜன் நீஸ் இல்லையா? இத என் செகரெட்டரிகிட்ட குடுத்துட்டு போ.. பார்த்துட்டு சொல்றேன்” என்றார்

கொஞ்சம் பட்டுக் கொள்ளாமல் தான் பேசினார். சினிமா உலகில் இதெல்லாம் சகஜம் தானே. இப்படி எத்தனை பேரை பார்த்திருக்கிறான்? எனவே, நம்பிக்கை இல்லாமல் திரும்பினான் பிரபு 

ரு வாரத்தில் அவரிடமிருந்து அழைப்பு வந்தது

“உன்னோட ஷார்ட் ஃபிலிம் பாத்தேன். எங்ககிட்ட ஸ்லாட் இருக்கு. வழக்கமான சீரியலா இல்லாம புதுசா ஏதாவது செய்யலாம்னு தான் உன்னைக் கூப்பிட்டேன். ஆனால், ரெண்டு மாசம் தான் குடுப்பேன். அதுக்குள்ள டி.ஆர்.பி. ரேட்டிங் பிக் அப் ஆகலைன்னா நிறுத்திடுவேன்” என்றார் கறாராய் 

இந்த செய்தியை மாலினியிடம் பகிர்ந்து கொள்ள அவளை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதாக பதிவு செய்யப்பட்ட குரல் கூறியது

மறுநாள் அவளே தொடர்பு கொண்டாள்

“எங்க போயிட்ட? போனை எடுக்கல..?” என்ற கேள்விக்கு

“ஊட்டில இருக்கேன்” என்றாள் 

“ஊட்டிலயா? அங்க என்ன பண்ணற?”

“எஸ்டேட்டில் டீ பறிக்கறேன்”

“கம் ஆன், ஒழுங்கா சொல்லு”

“நிஜமாத்தான் சொல்றேன். பாலகுமார் டைரக்சன்ல டீ எஸ்டேட்டில் வேலை செய்யும் பொண்ணா ஒரு ரோல்..”

“யாரு பாலகுமார் டைரக்சன்லயா? சொல்லவேயில்ல… அவ்ளோ பெரிய மனுஷியாகிட்ட?”

“திடீர்னு நேத்து அவங்க ஆபிஸிலேர்ந்து கூப்ட்டாங்க. அதான் சொல்ல முடியல. நீ எங்க போயிருந்த?”

“எனக்கு காட்சி டி.வி.ல ஒரு சீரியல் பண்ற சான்ஸ் கிடைச்சிருக்கு”

“சீரியலா? என்னை சீரியல் வேண்டாம்னு சொல்லிட்டு நீ சீரியல் டைரக்ட் பண்ணப் போறயா?

“ஆமா, எவ்ளோ நாள் கிளாப் அடிச்சுட்டே நிக்கறது? வாழ்க்கைல செட்டில் ஆக வேண்டாமா?”

 “ம்ம்ம்!  ஆல் தி பெஸ்ட்! என்ன கூப்பிடறாங்க… அப்புறம் பேசறேன்..” எனவும் 

“ஓகே” என தொடர்பை துண்டித்த ரவி சித்ராவாகிய வெங்கட் பிரபுவிற்கு சந்தோஷமாக இருந்தது. 

காட்சி டி.வி.யில் இணைந்தால் எதிர்காலம் பற்றிய கவலை இருக்காது. நிலையான வருமானம், தொழில் திருப்தி

அடுத்து திருமணம் தான் என அவன் நினைத்திருந்த நிலையில், மாலினி நடித்த அடுத்த படம் வெளியாகி அவனுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது 

காரணம் அந்த படத்தில் மாலினி கொஞ்சம் கவர்ச்சியாக நடித்திருந்தாள்

அவன் கேட்க, “அந்த  பாத்திரம் அப்படி” என அலட்சியமாக அவள் பதில் கூறியது அவனுக்கு ஆத்திரமூட்டியது.

“நான் எங்க வீட்டுல நம்ம கல்யாணத்தைப் பத்தி பேசலாம்னு இருக்கேன், இப்போ எப்படி பேசறது?”

“எனக்கு ஆச்சர்யமா இருக்கு பிரபு, வேற யாராவது இப்படி கேட்டா பரவாயில்லை, நீ எப்படி கேட்கலாம்?”

“எனக்கு எந்த பிரச்னையும் இல்ல மாலினி, எங்க அம்மா இப்ப கூட நம்பியாரும், அசோகனும் கெட்டவன்னு நினைக்கறவங்க”

“அந்த எண்ணத்தை நீதான் மாத்தணும்..”

“எனக்கு நல்லா புரியுது, நீ இப்ப பெரிய டைரக்டர் படத்துல நடிக்க ஆரம்பிச்சுட்ட, நான் ஒரு சாதாரண அசிஸ்டெண்ட் டைரக்டர் தான… பணம் கண்ட..” என ஆரம்பித்தவன், சட்டென்று நிறுத்தினான்.

“ஏன் நிறுத்திட்ட? கம்ப்ளீட் பண்ணு, பணம் கண்ட…? வெரி குட்! நீயும் சாதாரண ஆள் தான்” முகம் சிவந்து, கண் கலங்கி அவள் நிற்க

“மாலினி ஐ ஆம் சாரி, இ டிண்ட் மீன் இட்..” என அவள் அவன் கையைப் பற்ற முற்பட, சட்டென்று விலகினாள்  அவள்

“ப்ளீஸ், வேண்டாம், போய்டு” என்றாள் முடிவு போல் 

அவன் குற்ற உணர்ச்சியோடு வெளியே வந்தான்

அதற்கு பின் அவனது குறுஞ்செய்திகளுக்கு அவள் பதிலளிக்கவில்லை. அவன் செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அழைப்பை துண்டித்தாள் 

“ஏம்ப்பா, இத்தன நாளா செட்டில் ஆகணும்னு சொல்லிட்டிருந்த. இப்ப தான் நிரந்தரமா வேலை கிடைச்சிடுச்சே.  எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?” என்றார் அவனின் அன்னை

“பண்ணிக்கலாம்மா, பொண்ணு கிடைக்க வேண்டாமா?”

“தேடினா தான கிடைக்கும். மேட்ரிமோனியல் சைட்டில் ரிஜிஸ்டர் பண்ணலாமா?”

“உம்…” என சம்மதம் கொடுக்க, அம்மாவும் அப்பாவும் ஒருவரை ஒருவர் சந்தோஷமாக பார்த்துக் கொண்டனர்

“உனக்கு யார் மேலாவது இஷ்டம்னா சொல்லு, எங்களுக்கு ஒரு ஆட்சேபனையும் இல்ல” என அப்பா கூற, அம்மா ஆமோதிப்பாய் தலையசைத்தாள்

“இல்லப்பா, அப்படி யாரும் இல்ல” என்றான் 

மனசுக்குள் மாலினிக்கு தலைமுழுகி விட்டதாய் நினைத்தான்.

அப்படி நினைத்த பின், எதோச்சையாய் சந்தித்த அந்தக் கிழவர், “பெண் பாவம் பொல்லாது” என்கிறார்

என்ன பாவம்? அது பாவம் என்றால் அதற்கு அவள் முழு மனதோடு ஒத்துழைத்தாள். நான் ஒன்றும் பொய்யாக உன்னைக் கை விட மாட்டேன் என்று சத்தியமெல்லாம் செய்யவில்லை. 

கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்கு இத்தனை ரோஷமா? இவ்வளவு சென்சிட்டிவாக இருக்கும் பெண்ணை மணந்து கொண்டு வாழ்க்கை நடத்துவது கஷ்டம்.

அதனால் தான் அப்பா, அம்மா பார்க்கும் பெண்ணையே திருமணம் செய்து கொண்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்தான். இந்தக் கிழவரானால் குறுக்குச்சால் ஓட்டுகிறார்

ன்று வீடு திரும்பியதும், அப்பா அவனிடம்,”நான் சில ப்ரோஃபாய்ல்ஸ் செலெக்ட் பண்ணி வெச்சிருக்கேன். பார்த்து விட்டு சொல்” என்றார்.

“என்ன ஏதாவது உனக்கு பிடிச்சிருக்கா?”

“இதுல எதுவும் பிடிக்கல”

அப்பா அவனை கூர்ந்து பார்த்தார். “இதுல பிடிக்கலைன்னா? வேற யாரையாவது பிடிச்சிருக்கா?”

“மாலினினு ஒரு பொண்ணு…” என ஆரம்பித்தவன், ஆதியோடு அந்தமாய் அனைத்தும் கூற, முழுமையாக கேட்டுக் கொண்டார் அவன் தந்தை 

“அந்தப் பொண்ணு தான் இப்ப லேட்டஸ்டா பாலகுமார் டைரக்ஷனில் நடிச்சிருக்கா?”

“ஆமா…”

“நீலச்சட்டை கூட அவளோடு நடிப்பை பாராட்டியிருக்கானே..”

“அப்படியா? நான் இன்னும் நீலச்சட்டையோடு ரெவ்யூ பார்க்கல..”

“எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்ல. உங்கம்மா ஒத்துக்கணும்” என சற்று நேரம் யோசித்தவர், “ஒண்ணு பண்ணலாம், நாளைக்கு கார்த்தால இந்த டாபிக்கை உங்க அம்மா முன்ன ஓபன் பண்ணலாம்” என்றார்

றுநாள் காலை உணவின் போது மெல்ல ஆரம்பித்தார் அப்பா 

“பொண்ணு வீட்டுக்காரங்க யாராவது போன் பண்ணினாங்களா சித்ரா?” என அப்பா அம்மாவிடம் கேட்க 

“இல்லையே, யாரு பண்றாங்க? நாம் போன் பண்ணினாலும் நோ ரெஸ்பான்ஸ்” என்றாள் அம்மா 

உடனே என் பக்கம் திரும்பி,” ஏண்டா? நீயோ மீடியாவில் இருக்க, அங்க எத்தனை பொண்ணுங்கள பாப்ப? ஒருத்தரை கூடவா உனக்கு பிடிக்கல?”

“எனக்கு பிடிச்சிருந்தா மட்டும்… உடனே நீங்க ஓகே சொல்லிடுவீங்களா?”

“உன் பையன் என்னவோ கேட்கறான் பாரு, பதில் சொல்லு சித்ரா” என அம்மாவிடம் பந்தை எறிந்தார் அப்பா

“என்ன, ரெண்டு பெரும் ஏதாவது பேசி வெச்சுண்டு கேட்கறீங்களா? என்ன விஷயம்?”

(அப்பாவின் மைண்ட்வாய்ஸ் – கண்டுபிடித்து விட்டாளே கிராதகி!)

“ச்சே ச்சே… அப்படியெல்லாம் இல்ல, இந்த விஷயத்துல உன் அபிப்பிராயம் என்னனு தெரிஞ்சுக்கலாமேனு தான்”

“இதுல  என் அபிப்ராயம் என்ன இருக்கு? ஒரு பொண்ணோட பழகி, அவ மனசுல ஆசையை விதைச்சுட்டு, அப்புறம் மாறுவது தப்பில்லையா?பிடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான்” என்றாள் அம்மா 

அம்மா இத்தனை சுலபமாக இதை ஒப்புக்கொண்டு விடுவாள் என்று அப்பா, பிள்ளை இருவரும் எதிர்பார்க்கவில்லை. அம்மா கோடு போட்டு விட்டாள், இனி ரோடு போடுவது கடினம் இல்லை.

ஆனால் வெங்கட் பிரபுவிற்கு ஒரே ஒரு பிரச்சனை தான் இப்போது. அம்மா சம்மதித்து விட்டாள். 

ஆனால், கோபித்துக் கொண்டிருக்கும் மாலினியை எப்படி சமாதானப்படுத்துவது? 

சினிமாவாக இருந்தால் ஒரு பாட்டில் சமாதானப்படுத்தி விடலாம், உங்களில் யாருக்காவது வழி தெரிந்தால் அவனுக்கு உதவுங்களேன், புண்ணியமாப் போகும்

(முற்றும்)

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                   

                

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 thousand Visitors) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

7 Comments

 1. நல்லா இருக்கு. சரளமான ஓட்டம், ஆனால் முடிக்கும்போது தான் சொதப்பிட்டீங்க! ஏன் இருவரும் கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க என்பதை ஒரு சின்ன தொலைபேசி உரையாடல் மூலம் சொல்லி இருக்கலாமோ? இப்படிப் பட்டுனு நிறுத்திட்டு நம்மளையே யோசனை கேட்டிருக்கீங்க! என் யோசனையை நான் சொல்லிட்டேன். ஒழுங்காத் தொலைபேசி உரையாடல் மூலமா இரண்டு பேரும் கல்யாணத்துக்குச் சம்மதம்னு ஒத்துக்கொண்டதை எழுதி முடிங்க! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

 2. பானுக்கா கதை ரொம்ப நல்லாருக்கு.

  வாழ்த்துகள்!

  நிறைய முடிவுகள் தோன்றுகிறது. இதைத் தொடரவும் செய்யலாம்…..எனக்கு நிறையவே தோன்றுகிறது…

  கீதா

 3. கதை மிக யதார்த்த நடை. முடிவு வாசகர்களிடம் இல்லையா?

  தமிழ் சினிமா என்றால் கண்டிப்பாக சுபம்.

  மலயாள சினிமா என்றால் பெரும்பான்மை இப்படிக் கேள்விக்குறியுடன் முடிக்க வாய்ப்புண்டு.!!!

  வாழ்த்துகள்!

  துளசிதரன்

  • அப்படியா? ஹிந்தி, தெலுங்கு எல்லாமே சுபம்தான் இல்லையா? நன்றி.

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 19) -✍ விபா விஷா

மந்திராலயம் – மகான் ஆலயம்…! (கவிதை) – ✍ சி. கோவிந்த்