in

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 19) -✍ விபா விஷா

நீரினைத்...❤ (பகுதி 19)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ஜானுவை உதயசேனன் கடத்தி விட்டான் என யாதவ் அறிவிக்கவும், மற்ற இருவரும் பதறித் துடித்துப் போனார்கள்.

“இப்ப உங்களுக்கு போன் செஞ்சது யாரு?” என குகன் கேட்க

“யாரா? யாருன்னா கேட்கற? இப்ப எனக்கு போன் செஞ்சது அந்த இளங்கோ தான். அவனும் அந்த உதயசேனனுக்கு கூட்டு. அவனுக்கு உதவி செய்யறதுக்காக தான் அவன் மறுபடி ஜானவியைத் தேடி வந்தது. நம்ம வீட்டுல நடந்த அந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கு கூட அவன் தான் காரணமா இருப்பான்னு நான் நினைக்கறேன்

பெத்த பொண்ண நல்லபடியா காப்பாத்தலைனாலும் பரவாயில்லை. ஆனா இந்த மாதிரி பொறுக்கி கூடச் சேர்ந்துட்டு, பொண்ணையே அழிக்க முயற்சி பண்றான். ச்சே.. இவனெல்லாம் என்ன அப்பன்” என வாய்க்கு வந்தபடி கத்தத் துவங்கினான் யாதவ் 

அதைக் கேட்டு மேலும் கலக்கமடைந்த குகன், “யாதவ் அவங்க எதுக்காக ஜானுவை கடத்தியிருக்காங்க? ஜானவிய அடையறதுக்காக மட்டுமா? இல்ல வேற எதும் உள்நோக்கமா, அதைப் பத்தி ஏதாச்சும் சொன்னாங்களா?” என கேட்க

மனதை திடப்படுத்திக் கொண்ட யாதவ், “நான் சொல்றது ரெம்பவே கஷ்டமான விஷயம் தான், அதனால நீங்க உங்க மனச திடப்படுத்திக்கணும். அந்த பிறவில நானும் ஜானவியும் காதலிச்சதுக்கே அவளைக் கொலை செய்யத் துணிஞ்சவன் அவன். இப்ப எங்களுக்குக் கல்யாணமே ஆகிடுகிச்சு, அதனால அவன் அவளை என்ன செய்வான்னு என்னால யூகிக்க முடியல.

அதோட அந்த இளங்கோ நான் கண்டுபிடிச்ச வெடிபொருளோட மூலக்கூறு பத்தி தான் கேட்டான். நான் அத கொடுத்துட்டா, ஜானுவ திருப்பிக் கொடுத்துடுவானாம். ஆனா அந்த வெடிபொருள் பத்தின தகவலை அவங்களுக்கு குடுக்கறதும், நமக்கு நாமே மரண சாசனம் எழுதறதும் ஒண்ணு” என்றான் சோர்வுடன் 

“யாதவ், மனசை விட வேண்டாம். வாங்க நாம உடனே போய் ஜானவிய காப்பாத்தலாம். இன்னொரு முறை அவ அந்த உதயசேனன்கிட்ட சிக்கி ரணவேதனை அடையறத என்னால தாங்கிக்கவே முடியாது” என மரணக் காயத்துடன் படுத்திருந்த ஆனந்தன் எழவும், தாங்கள் இருவரும் பார்த்துக் கொள்வதாய்ச் அவனை சமாதானப்படுத்திவிட்டு யாதவும், குகனும் விரைந்தனர்

வீட்டிற்குச் செல்லும் வழியிலேயே குகன் சார்விக்குக்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட, இவர்கள் இருவரும் வீடு செல்லும் முன்பே மற்றவர்கள் யாதவ் வீட்டு மாடியில் குழுமியிருந்தனர்.

வேதனையுடன் வீடு சென்றவர்களை அழைத்துச் சமாதானப்படுத்தியவர்கள், அடுத்து என்ன செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டார்கள்.

அதன்படி, முதலில் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் கொடுத்து, ஜானவியின் செல்போன் சிக்னலை அறிய முயன்றனர்.

அது மலையூரின் மலைப்பகுதியில் இறுதியாக செயல்பாட்டில் இருந்ததை காட்ட, அதற்கு மேல் எப்படி தேடுவதென தெரியாமல், அந்த ஆராய்ச்சி நடக்கும் இடம் தேடி யாதவும், குகனும் சென்றனர்.

வெளியே கிளம்பும் முன், “நீங்க எல்லாரும் ஒரே இடத்துல பாதுகாப்பா இருங்க, அப்பறம் நான் ஆனந்தனோட பாதுகாப்புக்கு ரெண்டு கான்ஸ்டபிளை வர சொல்லியிருக்கேன். இருந்தாலும் அடிக்கடி அவனுக்குப் போன்ல பேசிக்கிட்டே இருங்க. 

அதோட, எங்களைத் தவிர வேற யார் உங்களுக்குப் போன் செஞ்சு எங்களுக்கு ஆபத்து வாங்கனு சொன்னா கூட நீங்க யாரும் எங்கேயும் போகக்கூடாது. அப்பறம் நம்ம வீட்டு பெரியவங்க யாருக்கும் இது தெரிய வேணாம், முக்கியமா அவங்கள பாதுகாப்பா பார்த்துக்கோங்க” என்ற யாதவ், இறுதியாக, “நாங்க சீக்கிரமே ஜானுவோட வர்றோம்” என்றதுடன் அனைவரையும் தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு கிளம்பினான் 

அவன் பின்னோடு, மனமெல்லாம் பதற குகனும் கிளம்பினான்.

என்ன தான் காவல் துறையில் இத்தனை வருடங்கள் பணிபுரிந்திருந்தாலும், எண்ணற்ற பல சவாலான வழக்குகளைச் சிறப்பாகக் கையாண்டிருந்தாலும், தன் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு, அதுவும் தனது செல்லத் தங்கைக்கு ஒரு துயரம் என்றதும், நாடி நரம்பெல்லாம் நடுநடுங்கித் தான் போய் விட்டது குகனுக்கு.

எங்கே எல்லார் முன்னிலையிலும் அழுது விடுவோமோ என்று மனதையும் கண்ணீரையும் மிகவும் முயன்று கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான் குகன்.

யாதவின் நிலையோ அதற்கும் மேலே என்று கூறலாம். குகனை விட, யாதவுக்கு ஜானவியை நினைத்துப் பயமாக இருந்தது.

அதைவிட அந்த உதயசேனனை நினைத்து அதிபயமாக இருந்தது. ஏனென்றால் அவன் வெளிப்பார்வைக்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும், மனத்திற்குள் எவ்வளவு அரக்கத்தனமானவன் என்பதை யாதவ் அறிந்திருந்தான்.

ஆனால் இப்பொழுது அவன் எங்கே இருக்கிறான், எப்படி அவனுக்கு அமைச்சர் இளங்கோவின் அறிமுகம் கிடைத்தது என்று யாதவுக்கு புரியவில்லை 

இப்படிப்பட்டவனிடம் ஜானவி சிக்கியிருப்பதை எண்ணி யாதவுக்கு அடிவயிற்றில் பயப்பந்து ஒன்று உருண்டு கொண்டு தான் இருந்தது.

அதுமட்டுமின்றி, இரண்டு குயுக்தி கொண்ட மூளை இரண்டும் ஜானவியை என்ன செய்யத் திட்டமிட்டிருக்கின்றன என்று எண்ணி மிகவும் பயந்து போய் இருந்தான்.

அன்று காலையில் ஜானவி காணாமல் போனதிலிருந்து, யாதவும், குகனும் அன்ன ஆகாரமின்றி பரட்டைத் தலையும், நலுங்கிய உடையுமாய் தெருத் தெருவாக ஜானவியைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர்.

நேரமாக ஆக, ஜானவி தன்னை விட்டு வெகுதூரம் சென்று கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது யாதவுக்கு.

இறுதியில், அவர்கள் மனம் களைத்து, உடலின் நீர் சக்தியெல்லாம் வடிந்து போகும் தருவாயில், யாதவுக்கு மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

தை உயிர்ப்பித்த கணம், “அருஞ்சுணையரே…” என்று ஒரு குரல் ஒலிக்கவும், அதுவரை சோர்ந்திருந்த யாதவின் விழிகள் இரண்டும் விரிய, “யார்.. யார் பேசறது?” என கோபமும் வன்மமும் இழையோடிய குரலில் கேட்டான்.

“என்ன அருஞ்சுணையரே… என்னோட குரல் உங்களுக்கு மறந்துடுச்சா? ஓஹோ… என் குரலை கேட்டு பல ஆயிரம் வருஷம் ஆச்சே… அதனால மறந்து போயிருப்பீங்க?” என நக்கலுடன் கூறி சிரித்தான் அவன்.

அதைக் கேட்ட யாதவோ ஆத்திரத்தில் குரல் நடுங்க, “உதயசேனா…” என்று அகிலம் அதிரக் கத்தினான்.

“ஹ்ம்ம்.. அருஞ்சுனையரின் திறமையை சந்தேகிக்க முடியுமா? சரியா கண்டுபிடிச்சிட்டீங்களே? ஆமா நான் உதயசேனன் தான், இப்ப உதய். உதய் கெமிக்கல்ஸ் பத்தி கேள்விப்பட்டிருக்கியா? உன்னோட கண்டுப்பிடிப்பை மீட்டெடுக்கறதுக்காக, பல கோடி செலவு செஞ்சு ஆரம்பிச்ச தொழில். ஆனா இன்னும் என்னால கண்டுபிடிக்கவே முடியல”  என உதய் கூற 

“இப்ப எனக்கு உன் சரித்திரம், பூகோளம் எதுவும் தேவையில்ல, எனக்கு வேண்டியது என்னோட ஜானு” என கோபமாய் கூறினான் யாதவ் 

“ஹ்ம்ம்… அதான் எனக்கு தெரியுமே.. உனக்கு உன் ஜானு தான் முக்கியம்னு. ஆனா அண்ணா, எப்படி ஒவ்வொரு முறையும் நீயே என்னை முந்திக்கற?” என ஆச்சர்யப்படுபவனைப் போல் உதய் கேட்க, கோபம் தலைக்கேறியது யாதவுக்கு

“இங்க பாரு, உன்கிட்ட வெட்டிக்கதை பேசறதுக்கு எனக்கு நேரமில்ல. முதல்ல என் ஜானு எங்க இருக்கா எப்படி இருக்கானு சொல்லு? நான் அவகிட்ட உடனே பேசணும்” என யாதவ் துடியாய் துடிக்க, அதைக் கேட்டு உதயசேனனின் மனம் கூத்தாடியது.

“ஆஹா.. மரணப்படுக்கையில் கூட உயிர்ப்பிச்சை கேட்காத அருஞ்சுனையர்… ஒரு பெண்ணுக்காக இவ்வளவு தவிக்கறாரா? அட அட அட.. காதல்னா இது தான் காதல்… இல்ல?” என மீண்டும் அவன் யாதவை கடுப்பேற்ற, அவன் மீது கொலை வெறி வந்தது யாதவுக்கு

அதை உணர்ந்தும் கூட, அந்த உதயசேனன், “ஹ்ம்ம்.. போதும் போதும்… உனக்கு உன் பொண்டாட்டி மேல அவ்வளவு பாசமிருந்தா, நீ மட்டும் என் கெஸ்ட் ஹவுஸுக்கு வா… சொன்னது நல்லாப் புரிஞ்சுதா? நீ மட்டும் வா.. சரியா? வழக்கம் போல உன் போலீஸ் மூளையை உபயோகிக்காத. அது தான் உனக்கும் நல்லது, உன் பொண்டாட்டிக்கும் நல்லது” என்றவன், ஒரு முகவரியை கூறினான் 

“நான் மொதல்ல ஜானுகிட்ட பேசணும்” என யாதவ் கேட்க

“உனக்கு உன் பொண்டாட்டி மேல காதல் இன்னமும் இருந்தா வா… இல்லன்னா வராத” என்றதுடன் அழைப்பை துண்டித்தான் உதயன் 

அதைத் தொடர்ந்து யாதவ் தனியாளாய் உதயன் சொன்ன முகவரிக்கு செல்ல தயாரானான். குகன் எத்தனை முயன்றும், அவன் உடன் வருவதை மறுத்து கிளம்பினான் யாதவ் 

ங்கு ஜானவியோ, உதயசேனனைப் பார்த்துக் கேலியாக நகைத்துக் கொண்டிருந்தாள்

அதைக் கண்ட மேலும் கோபமுற்ற உதயசேனன், “இப்ப கூட உன் திமிரு அடங்கல இல்ல” என அவள் குரல்வளையை நசுக்கினான். அடுத்த கணமே அவளை விடுவித்தான் 

“போன ஜென்மத்துல தான் உங்கள பிரிச்சு வச்சுட்டேன். இந்த ஜென்மத்துலயாவது நீங்க ஒன்னு சேருங்க. அதாவது ஒண்ணா செத்துப் போங்க” என குரூரமாகக் கூறியவன், “ஆமா எதுக்கு நீ இப்ப சிரிச்ச?” எனக் கேட்டான் 

அந்த வேதனையான தருணத்திலும் எள்ளலான சிரிப்புடன், “ஹ்ம்ம்.. என் புருஷன நீ உன் இடத்துக்கு வர சொல்லியிருக்க, அதுவும் தனியா. ஆனா என் புருஷன் ஆம்பள, அவர் தனியாத் தான் இங்க வருவாரு. ஆனா நீ…” என கூறிவிட்டு, இளக்காரமாக அவனையும் அவனை சுற்றி இருந்த அவனது அடியாட்களையும் பார்த்தாள் ஜானவி 

அவளது சீண்டலான பேச்சும், இளக்காரமான பார்வையும், ஜானவி போட்ட கணக்கின்படியே அவனைத் தூண்டிவிட, தனது ஆட்களைக் கோபமாக அங்கிருந்து அனுப்பினான் உதயன் 

“ஹேய்.. என்ன சொன்ன? உன் புருஷன் ஆம்பளையா? அவன் இங்க வந்ததும் தெரியும்டி யாரு ஆம்பளைனு” என்றவன், யாதவின் வரவிற்காகக் காத்திருக்கலானான் அவன்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                   

                

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website (Crossed 50 thousand Visitors) 

(தொடரும்… வெள்ளி தோறும்)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    Menstrual Cup Awareness Post (மென்சஸ் கப் விழிப்புணர்வு பதிவு) – ✍ பிரதீபா புஷ்பராஜ் (United Kingdom)

    காதல் சடுகுடு (சிறுகதை) – ✍ பானுமதி வெங்கடேஸ்வரன்