in

காத்திருப்பேன் காதலோடு ❤ (சிறுகதை) – ✍கரோலின் மேரி

காத்திருப்பேன் காதலோடு ❤ (சிறுகதை)

கெட்டிமேளம் ஒலிக்க, தன்னருகே பதுமை போல் அமர்ந்து இருந்தவளின் கழுத்தில் மூன்று முடிச்சை போட்டு, தன்னில் சரிபாதியாக ஏற்றுக் கொண்டான் மாறன் பாண்டியன்

அவளின் நெற்றியில் குங்குமம் இடும் போதும், நிலம் நோக்கியே இருந்தாள் அவனின் மனைவி

அக்னி வலம் வரும் போது, அவளுடைய நடுங்கும் கரம் கூறியது அவளின் நிலையை

‘எதற்கு இப்படி நடுங்குகிறாள்?’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டான்

அனைத்து சடங்குகளும் முடிந்த பிறகு, மணமக்களை தனித் தனி அறையில் ஓய்வெடுக்க அனுப்பினர் 

அறைக்குள் வந்தவுடன், சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் பெருமூச்சை வெளியிட்டாள்

கொஞ்ச நேரம் படுக்கலாம் என்றெண்ணி கண்களை மூடி உறங்க ஆரம்பித்தாள்.

அவள் பெயர் அமிழ்தமொழி

விண்ணரசு – மதியொளி தம்பதியின் ஓரே மகள். அழகும், அறிவும் நிரம்பப்  பெற்றவள். அமைதியான சுபாவமும், அதிர்ந்து பேச தெரியாத குணமும் கொண்டவள்.

கல்லூரிப் படிப்பை முடித்த மகளுக்கு வரன் பார்க்க தொடங்கினர் பெற்றோர்

அப்படி அலசி ஆராய்ந்து தேர்ந்தெடுத்த மாப்பிள்ளை தான் மாறன் பாண்டியன். ஆதிபகவன் – தமிழ்வாணி தம்பதியின் மகன். இராணுவத்தில் பணிபுரிகிறான்.

பெற்றோரின் நச்சரிப்பில் பெண் பார்க்க வந்தவன், அமிழ்தமொழியின் அழகு மற்றும் அமைதியான குணத்தில் தடுக்கி விழுந்து திருமணத்திற்கு சம்மதம் கூற, உடனே நடந்த அவசர திருமணம் தான் இவர்களுடையது

அதன்பின் இருவரும் சந்திக்கும் இரவு நேரமும் வந்தது.

கலவையான உணர்வுகளோடு,  அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் அமிழ்தமொழி

கதவை சாற்றி விட்டு திரும்ப, அங்கே மாறன் இவளை விழி அகலாது பார்த்து, தன்னுள் நிரப்பிக் கொள்ள முயன்றான்.

அவனுடைய பார்வையின் அர்த்ததை அறியாத பாவையோ, ‘என்ன இப்படி பார்க்கிறார்?’ என்று நினைக்க

அவளின் நிலையை உணர்ந்து “அம்மு” என்றழைத்தான் அவன்

அவனின் இந்த அழைப்பில் ‘யாரை கூப்பிடறார்?’ என சுற்றும் முற்றும்  பார்வையால் அலச

“உன்ன தான்” என்றவாறு அருகில் வந்தான்

“என்னயா?” என்று வினவ

“ஆமா” என்றான்

“என் பெயர் அமிழ்தமொழி” என மெல்லிய குரலில் கூற

“பேர் கூட தெரியாமயா உன்ன கல்யாணம் பண்ணிக்கிட்டேன்” என புன்முறுவல் பூத்தவன்

“மத்தவங்க அப்படி கூப்பிடட்டும், எனக்கு நீ அம்மு தான் எப்பவும்” என்றான்

அவளின் முகம் தெளிவில்லாது இருக்க, “இங்க வா” என கரம் பற்றி அழைத்துச் சென்று, அங்கிருந்த நாற்காலியில் அமரச் செய்தான்

மற்றொரு நாற்காலியில் அமர்வான் என அவள் எதிர்பார்க்க, அவளின் காலடியில் அமர்ந்தான்.

அவள் பதறி எழ, “ஷ்… உட்காரு” என அதட்டி அமரச் செய்தான்

“நீங்க கீழ உக்கார வேண்டாமே” என கெஞ்ச, அமைதியாக அவளின் முகத்தை பார்த்தான் அவன்

“என்னங்க” என்றழைக்க

“மேடமுக்கு இப்ப தான் எங்கிட்ட பேச மனம் வந்தது போல” என்றான் கேலியாய்

“அப்படியில்ல” என உடனே மறுத்தாள்

“வேற எப்படி?” என்று அடுத்த கேள்வி கேட்க

“அது… எனக்கு உங்கள பாத்து தான் பயம்” என தயங்கியவாறு கூற

“என்ன பயம் டா?” என ஆதரவாக கரம் பற்றி வினவினான்

“உங்க தோற்றத்த பாத்து… கொஞ்சம் பயம். நீங்க பாக்க முரடன் மாதிரி…” என்று இழுக்க

“அடிப்பாவி… என்னைப் போய் முரடன்னு சொல்ற. உன்ன என்ன செய்யலாம்” என்று கோபமான குரலில் கூறியவாறு எழுந்தான்

அவன் குரலில் நடுங்கியவள்,  சட்டென விலகி சுவரோடு ஒன்றினாள் 

“இல்லங்க நான்…” என்று அவளின்  வார்த்தைகள் தந்தியடித்தது

தன் அழுத்தமான காலடிகளோடு நெருங்கியவன், அவளின் இருபக்கமும் தன் கைகளால் அரண் அமைத்தான்.

“உனக்கு கண்டிப்பா தண்டனை இருக்கு” என்றவாறே கையை உயர்த்த

‘அடிக்க போகிறான்’ என்று நினைத்து கண்களை இறுக மூடினாள்

நிமிடங்கள் கரைந்தும், எதுவும் நடக்கவில்லை என்பதை உணர்ந்து, கண்களை திறந்தாள்.

“என்ன மேடம்?” என மயக்கும் மாயக் கண்ணனின் சிரிப்போடு அவன் கேட்க, அந்த சிரிப்பில்  மயங்கினாலும், முகத்தில் எதுவும் காட்டாமல் அமைதியாக நின்றாள்

“உன்கிட்ட சில விஷயங்கள் சொல்லணும். எனக்கு மொதல்ல இந்த கல்யாணத்துல விருப்பமில்ல. ஆனா எப்ப உன்னை பாத்தனோ, அப்பவே நீதான் எனக்கு எல்லாம்னு முடிவு பண்ணிட்டேன்”

‘நிஜமா?’ என்பது போல் அவள் கண்கள் கேள்வியில் விரிய

“இந்த  பேசும் கண்கள் தான் என்னை உன் பக்கம் இழுத்தது” என்றான்

அவளுக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை.

தாலி கட்டிய கணவன் தான் என்றாலும், சட்டென அவன் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் நின்றாள்

அவளுடைய உணர்வுகளை படித்தவன் போல், “நீ இப்ப எதை நினைச்சும் குழம்ப வேண்டாம், வா தூங்கலாம்” என்றழைக்க

புரியாத பார்வை பார்த்தவளிடம், “என்னோட காதலை நீ உணர்ந்த பிறகு தான் எல்லாம், அதுவரை காத்திருப்பேன்” என காதலோடு கூறினான்

அன்றிரவு, மலர்ந்த முகத்துடன் நித்திரை கொண்டாள் அவள்

அடுத்து வந்த நாட்களில், சின்ன சின்ன செயல்கள் மூலம் தன் காதலை உணர்த்திக் கொண்டே இருந்தான் அவன்

அவனுடைய காத்திருந்த காதலில் அவள் கரைய, ஒரு சுபநாளில் இருவரும் இல்லற வாழ்வில் இணைந்தனர்

விடுமுறை முடிந்து கிளம்பும் தருவாயில், தன் துணிகளை பெட்டியில் அடுக்கும் மனைவியை பார்த்தவாறு அறைக்குள் நுழைந்தான் மாறன் பாண்டியன்

அவன் வரவை உணர்ந்தும், அவள் திரும்பவில்லை.

அருகே வந்து, “அம்மு” என மெல்லிய குரலில் அழைக்க, மெளனம் மட்டுமே பதிலாக வந்தது.

தோள் தொட்டு திருப்ப, அங்கே அழுகையில் சிவந்த கண்களுடன், துடிக்கும் உதடுகளுடன் நின்றவளை இறுக அணைத்தான்

அவனின் அணைப்பில் கட்டுண்டு நின்றாள். வெளியே பேச்சு குரல் கேட்க, இருவரும் விலகினர்.

மாறனின் முகம் வேதனையில்  சுணங்கியது

தன்னால் கணவன் வருந்துகிறான் என்பதை உணர்ந்தவள், “என்னை நினைச்சு கவலைப்பட வேண்டாம், நீங்க போயிட்டு வாங்க” என வரவழைத்த தைரியமான குரலில் கூறினாள்

தயங்கி நின்றவனின் கரம் பிடித்து,  “எதுவும் யோசிக்கக் கூடாது… வாங்க” என  அறையை விட்டு வெளியே அழைத்துச் சென்றாள்

அங்கே அனைவரும் அவனை  வழியனுப்ப தயாராக இருந்தனர்.

எல்லோரிடமும் விடைபெற்றவன், மனைவியிடம் கண்களால் விடைபெற்று, தன் கடமையை நிறைவேற்ற புறப்பட்டான்.

அங்கே சென்ற பிறகு, நேரம் கிடைக்கும் போது மனைவியை அழைத்து பேசினான்.

ப்படியே நாட்கள் நகர்ந்தது.

ஒரு நாள் தொலைக்காட்சி செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த போது, அதில் தீவிரவாத தாக்குதலில் மாறனும், அவனுடன் சேர்த்து நாற்பது வீரர்களும் வீரமரணம் அடைந்தனர் என்று ஒருவர் வாசிக்க, தன் காதில் விழுந்த செய்தியை கேட்டு இடிந்து போனாள் அமிழ்தமொழி.

மஞ்சள் பூசிய தாலி கயிற்றை நடுங்கும் விரல்களால் பற்றியவாறு இருக்க, யார் யரோ வந்து அவளை கட்டிப் பிடித்து அழ ஆரம்பித்தனர்

அதில் ஒரு வயதானவர், “இன்னும் தாலி பிரிச்சு கூட மாத்தல, அதுக்குள்ள…” என வாய்மூடி அழுதார்

அவளின் நிலைகண்டு இருவரின் பெற்றோரும் கண்ணீர் வடித்தனர்.

நிமிடங்கள் யுகங்களாக மாறியது.

அனைவரையும் நிலைகுலைய செய்யும் அந்த நிமிடமும் வந்தது.

மூவர்ண கொடி படற, ஒரு பெட்டியை தங்கள் தோளில் சுமந்து வந்தனர் ராணுவ வீரர்கள்

அங்கு சூழ்ந்து இருந்தவர்களின் அழுகுரல் மட்டுமே எங்கும் ஒலித்தது.

விடுமுறை முடிந்து கிளம்பியவனோடு, விதியும் தன் விளையாட்டை சத்தமில்லாமல் அரங்கேற்றச் சென்றதை யாரும் அறியவில்லை.

அந்த பெட்டியை நெருங்க சக்தி இல்லாமல் நெருங்கினாள் அமிழ்தமொழி… அவனின் அம்மு

முகம் கூட காண முடியாதவாறு வெள்ளை துணியால் சுற்றப்பட்டு இருந்தது.

புன்னகை தவழும் அவனின் முகத்தை இனி காணப் போவதில்லை என்ற உண்மையை, அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

“அய்யோ” என்று கதறியவாறு அந்த பெட்டியின் மீது விழுந்தாள்

“அய்யோ” என்று பதறியவாறு படுக்கையில் இருந்து எழுந்தாள்

நெஞ்சம் பதற, தான் இருக்கும் இடத்தை உணர்ந்தாள். ‘கனவா’ என்று தண்ணீர் குடித்து தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்

என்ன தான் கண்களை மூடித் திறந்து என திடப்படுத்தி கொள்ள முயன்ற போதும், அவள் மனம் சமாதானமாகவில்லை.

அமிழ்தமொழியிடம் எப்போதும் ஒரு அமைதி இருக்கும் ஆனால் இந்தக் கனவு, அவளின் அமைதியை இழக்க செய்து விட்டது.

தன்னவனை இழந்து விட்டால் தன் வாழ்க்கை இருளில் முழ்கி விடும் என்பதை உணர்ந்து, பொறுமையை காற்றில் பறக்க விட்டு, அவனை அலைபேசியில் அழைத்தாள்

மனையாளின் நினைவில் இருந்தவனை, பேசியின் ஒலி  கலைத்தது.

புன்னகை தவழ, காதல் பொங்கும் குரலில் “அம்மு” என்றழைத்தான்

இளகத் தொடங்கிய மனதை இரும்பாக்கியவள், “நான் சொல்றதை மட்டும் தான் கேட்கணும், வேற எதுவும் நீங்க பேச கூடாது சரியா?” என கறாராக கூற

அவள் குரல் வேறுபாட்டை உணர்ந்து, “சரி”  என்று மட்டும் பதிலளித்தான்

“நீங்க இந்த வேலையை நிரந்தரமாக விட்டுட்டு வரணும். இங்க நம்ம ஊர்ல வேற வேலை பார்த்துக்கலாம். அப்புறம்…” என்று கூறிக் கொண்டே போனவளை

“ஏன்?” என்ற உணர்ச்சியற்ற அவன் குரல் தடை செய்தது.

“என்ன ஏன்?  உங்களோட நம் குழந்தைகளோட நூறு வருஷம் வாழணும். நான் சாகும் வர நீங்க கட்டிய தாலிய  சுமக்கணும்”

“எதுக்கு இப்படியெல்லாம் பேசற? எனக்கு தான் எதுவும் ஆகலையே, அப்புறம் எதுக்கு இந்தப் பேச்சு?” என சற்று எரிச்சலாகவே கேட்டான்

“எதுவும் ஆகக் கூடாதுனு தான் இப்படி சொல்றேன். புதுசா திருமணம் ஆனவங்க ஜோடியாக கைகோத்து நடக்கும் போது, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? என்னருகில் நீங்க இல்லையேனு மனசு வலிக்குது. அது மட்டுமில்ல, ஏதும் தவறா நடந்துட்டா, உங்கள இழந்து என்னால வாழ முடியாது.

எனக்கு என் புருஷன் நல்லபடியா இருக்கணும். நீங்க நினைக்கலாம் நான் சுயநலமா யோசிக்கிறேனு. ஆமா, இந்த விஷயத்தில நான் சுயநலவாதி தான். உங்களை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாத சுயநலக்காரி தான்” என, தான் கண்ட கொடிய கனவின் விளைவாய் மனதில் எழுந்த அழுத்தத்தை எல்லாம், வார்த்தைகளாய் கொட்டினாள்

அதற்கு அவன் பதிலேதும் கூறாமல் மௌனம் சாதித்தது, அவளை கொல்லாமல் கொன்றது

இருந்தும் அதை கருத்தில் கொள்ளாது, “இதுக்கு நீங்க சம்மதிக்கவிலைனா, நான் நிரந்தரமா என் அம்மா வீட்டுக்கு போய்டுவேன். வாழ்வோ, சாவோ இனி எல்லாம் அங்க தான். என் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்யுங்க, இல்லாட்டி என்னோட பேச வேண்டாம்” என்று கோபமாக பேச முயன்று, தோல்வியை தழுவியவாறு அழைப்பை துண்டித்தாள் 

தன் கையில் இருக்கும் அலைபேசியை நம்ப இயலாமல் வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தான் அவன்

‘என் அம்மு தானா இப்படி பேசியது?’ என நூறு முறைக்கு மேல் தன் மனதோடு கேட்க

அவன் மனம், ‘ஆமாம் உன் அம்மு தான்’ என பதில் கொடுத்தது

தினமும் மனைவியின் முகம் பார்த்து வாழும் வரம் அவனுக்கு கிடைக்கவில்லை என்றாலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளோடு பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்தது

இப்போது அதுவும் இல்லை என்றால் தன் நிலை என்னவோ, தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று சிந்தித்தவனின் மூளையும் இதயமும் ஒரு நொடி நின்று, பின் அதன் வேலைகளை செய்யத் தொடங்கியது

சிறிது நேரம் அமைதியாக இருந்தவன், அவளிடம் பேசி புரிய வைக்கலாம் என நினைத்து அவளுக்கு அழைக்க, அவளின் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

“எதிர்பார்த்தேன்” என வாய் விட்டே கூறியவன், ‘சரி கொஞ்ச நேரம் ஆகட்டும், பிறகு பார்த்து கொள்ளலாம்’ என்ற முடிவுடன் தன் வேலையை பார்க்கக் கிளம்பினான்

கோபமாக தன்னவனிடம் பேசிவிட்டு, அவள் ஒன்றும் நிம்மதியாக இருந்து விடவில்லை.

கண்களில் வழியும் கண்ணீருக்கு அணைகட்ட முடியாமல், சுவற்றை அலங்கரித்த அவனின் புகைப்படத்தை துயரத்துடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்

‘நானா அப்படி பேசினேன்?’ என யோசித்தவளுக்கு, ‘ஆமாம் நீயே தான்’ என்ற பதிலை தந்தது மனம்

‘கேள்வி கணைகளை பாரபட்சம் இல்லாமல் வீச வேண்டியது, அப்புறம் நானா? நீயா? என்று நம்மிடம் கேள்வி கேட்டு தொல்லை செய்வது’ என்று இருவரின் மனங்களும் சத்தமில்லாமல் திட்டியது 

சார்ஜ் இல்லாமல் செல்பேசி அணைந்திருந்ததை சிறிது நேரத்துக்குப் பின் உணர்ந்து, சார்ஜ் போட்டாள்.

‘ச்சே என்ன இது? இதை கவனிக்கத் தவறி விட்டேன். அவங்க அழைத்து இருப்பாங்களா? திரும்ப பேசுவாங்களா?’ என ஏக்கத்துடன் உடையவனின் அழைப்பை எதிர்நோக்கி காத்திருந்தாள் 

அவளை அதிக நேரம் காத்திருக்கச் செய்யாமல், மீண்டும் அழைத்தான் மாறன்

அவன் பெயரை பேசியில் பார்த்ததும், அவளுக்கு ஆவலை விட பயம் தான் முதலில் வந்தது.

‘என்ன சொல்லப் போறாங்க? நீ வேண்டாம் என்றா’

‘அம்மா வீட்டுக்கு போய்விடு என்றால் என்ன செய்வது?’

வெடித்து கதறத் தொடங்கிய மனதை அடக்கி, அழைப்பை ஏற்றாள்

என்ன பேசுவது என அவளும், எப்படி புரிய வைப்பது என அவனும், சற்று நேரம் மௌனமாய் இருந்தனர்

நிமிடங்கள் கரைய, மெல்ல, “ஹலோ” என்றவளுக்கு, எத்தனை முயன்றும் அழுகையை கட்டுப்படுத்த இயலவில்லை

“அம்மு” என்றவனின் அழைப்பில், மொத்தமாய் உடைந்தாள்.

“உன் கோபத்தை கூட தங்கிப்பேன், ஆனா உன் அழுகையை தாங்கற சக்தி எனக்கில்லடா” என வருத்தம் இழையோடும் குரலில் அவன் கூற, அழுகையை விழுங்க முயன்று விசும்பினாள் 

“நீ எதுவும் பேச வேண்டாம், நான் சொல்றதை மட்டும் கேளு சரியா?” என்றவன் கூற 

“ம்ம்ம்…” என்றாள் 

“இங்கப் பாரு அம்மு. இந்த வேலைல ஆபத்து இருக்கும்னு நல்லா தெரிஞ்ச பின்னாடி தான் சேந்தேன். ராணுவத்துல வேலை செய்யணுங்கறது என்னோட கனவு, அதனால தான் எத்தனையோ கஷ்டங்களை தாங்கிட்டு இந்த வேலைல இருக்கேன்

குடும்பத்தை எல்லாம் பிரிஞ்சு தனியா குளிரில், மழையில், வெயிலில் வாடுவது நம் நாட்டை பாதுகாக்கத் தான். இது தான் ஒரு வீரனின் வாழ்க்கை. நாட்டுக்காக சேவை செய்யணும்னா, நம் ஆசைகளை துறக்கணும்

உன் மேல எனக்கு இருக்கற காதல்ல பொய்யில்ல. அதே சமயம், நாட்டு மேல இருக்கற பற்றை விட முடியாது. நீயும், நாடும் என்னோட ரெண்டு கண்கள். ரெண்டு கண்ணுல ஒண்ண இழந்து நான் குருடனா வாழணும்னா இந்த வேலையை விட்டு வர்றேன்” என தன் மனதில் இருந்ததை எல்லாம் கூறி முடித்தவன், அமைதியானான் 

நாட்டின் மீது அவனுக்கு இருக்கும் நேசத்தை, அன்று தான் அவள் தெளிவாக உணர்ந்தாள்

கணவனுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்டவள், “நீங்க உங்க வேலைய எவ்ளோ நேசிக்கறீங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன். என் பயம் அப்படியே தான் இருக்கு, அதை மாத்த முடியல. நான் வணங்கும் கடவுள் மேல நம்பிக்கை வெச்சு, உங்களுக்காக காத்திருப்பேன் காதலோடு” என்றாள் உறுதியான குரலில் 

“அம்மு” என ஆனந்த அதிர்ச்சியோடு அழைத்தவன், செல்பேசியிலேயே தன் பரிசுகளை வாரி வழங்கினான், அவளின் இதயத்திருடன்

மீண்டும் பயணிப்போம்…

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

     

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                          

         

             

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website and promoted across our social media pages

(முற்றும்)                    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 17) -✍ விபா விஷா

காதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 2) – ✍️சஹானா கோவிந்த்