in

காதலெனும் தேர்வெழுதி❤ (பகுதி 2) – ✍️சஹானா கோவிந்த்

காதலெனும்...❤ (பகுதி 2)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

“நாம காலேஜ்ல பாத்தது தான், அப்புறம் பாக்கவே இல்லல்ல விஷ்ணு” என இமயா கேட்க

“ஆமா… உன்னோட எம்.எஸ்.சி பைனல் எக்ஸாம் அன்னைக்கு பாத்தது”

“ம்… நீங்க ஏதோ வேலையா அந்த பக்கம் வந்துட்டு அப்படியே வந்ததா சொன்ன ஞாபகம்”

“எஸ்… அன்னிக்கி தான் நீ உன்னோட வெட்டிங் இன்விடேஷன் குடுத்த” என்றவன் கூற, அவள் முகம் மாறியது

“என்னாச்சு இமயா?” எனறவனின் பார்வை, அவள் முகத்தில் பதிய 

“ஹ்ம்ம்… என்ன சொல்றது? அதுக்கப்புறம் என்னென்னவோ நடந்துருச்சு?” என்றாள் பெருமூச்சுடன்

“புரியல இமயா, எனி ப்ராப்ளம்?” என்ற விஷ்ணுவின் கேள்விக்கு

“சொல்றேன்…” என, அவனுக்கு தன் திருமண அழைப்பிதழ் அளித்த அந்த நாளின் நிகழ்வில் இருந்து விவரிக்கத் தொடங்கினாள் 

“தம்பி, பிரின்சிபால் இப்ப பிரீயா இருக்கார், பாக்கணும்னு சொன்னீங்களே” என பியூன் சேகர் வந்து அழைக்க

“இதோ வரேன் ‘ண்ணா” என்றபடி எழுந்தான் விஷ்ணு

“கண்டிப்பா நீங்க கல்யாணத்துக்கு வரணும் விஷ்ணு” என இமயா உரிமையுடன் கூற 

“கண்டிப்பா… ஓகே இமயா, டேக் கேர் பை” என விடைபெற்றுச் சென்றான் விஷ்ணு

அடுத்த சில நொடிகளில், “கல்யாணப் பொண்ணு இன்னும் டூயட் பாடக் கிளம்பாம இங்க என்ன பண்ற?” என கலாட்டாவுடன் வந்து சேர்ந்தனர் இமயாவின் நெருங்கிய தோழிகள் 

“இன்னும் ஒண்ணு ரெண்டு பேருக்கு இன்விடேஷன் தரணும், அப்பறம் கிளம்ப வேண்டியது தான்” என புன்னகையுடன் பதில் கொடுத்தாள் இமயா 

“பாத்தியா தாரணி, எப்படா கழட்டி விட்டுட்டு ஓடலாம்னு காத்துட்டுருக்கா” என கேலி செய்தாள் இமயாவின் தோழி பவித்ரா  

“அதெல்லாம் இனி அப்படித் தான் பவி, அடுத்த வாரம் போன் செஞ்சாலே யார் நீன்னு கேட்டாலும் கேப்பா” என கிடைத்த வாய்ப்பை விடாமல் வம்பு செய்தாள் மற்றொரு தோழி தாரணி 

“நேரம் டி, எனக்கு ஒரு சான்ஸ் கிடைக்காமயா போய்டும். அப்ப கவனிச்சுக்கறேன் உங்கள” என இமயா பொய்யாய் மிரட்ட

“வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல. எங்கக்கா கல்யாணம் முடிஞ்சு, என் தம்பி படிச்சு வேலைக்குப் போய், அப்புறம் தான் என் கல்யாணமெல்லாம்.  நான் என்ன உன்னை மாதிரி ஒரே செல்லப் பொண்ணா? எனக்கு எப்படியும் இன்னும் ஏழெட்டு வருஷமாகும், அநேகமா அப்ப நீ கைல ஒண்ணு இடுப்புல ஒண்ணு, வயித்துல ஒண்ணுனு இருப்ப” என பவித்ரா கேலி செய்ய 

“அதெல்லாம் ஒண்ணுமில்ல” என மறுத்தாள் இமயா

“அதெப்படி இப்பவே சொல்ற?”

“இப்பவே பேசி முடிவு பண்ணியிருப்பாங்கடி, ஐந்தாண்டு திட்டம் வரைக்கும் போட்டு இருப்பாங்களா இருக்கும்” என வம்பிழுத்தாள் தாரணி

“அப்படியா இமயா, போன் வெடிச்சற போகுதுடி பாத்து” என தோழிகள் மாற்றி மாற்றி கலாட்டா செய்ய

“போதுண்டி சும்மா வம்பு பண்ணிட்டு. கண்டிப்பா முன்னாடி நாளே வந்துடணும், எந்த சாக்கும் சொல்லக் கூடாது” என பேச்சை மாற்றினாள் இமயா 

“அதெல்லாம் நீ சொல்லவே வேண்டாம், வந்துடுவோம்” எனும் போதே 

“ஹாய் டோலிஸ்” என வகுப்புத் தோழன் பிரதீப் வந்து சேர்ந்தான் 

சற்று நேர அளவளாவலுக்கு பின், “பிரதீப், இந்தா என்னோட வெட்டிங் இன்விடேஷன். கண்டிப்பா வரணும்” என அழைப்பு விடுத்தாள் இமயா 

“ஹேய்… சொல்லவே இல்ல” என ஆவலுடன் பத்திரிகையை பிரித்தான் பிரதீப்

“போன மாசம் தான் பிக்ஸ் ஆச்சு. அப்ப ஸ்டடி லீவ்ல இருந்ததால, நம்ம கிளாஸ்ல நிறைய பேருக்கு தெரியல. இன்னக்கி காலைல தான் நம்ம பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் இன்விடேஷன் குடுத்தேன், நீ லேட்டா வந்த போல”

“ஓ சூப்பர், என்ன பண்றார் மாப்பி?”

“சி.ஏ முடிச்சுட்டு மும்பைல ஒரு ஆடிட் கம்பெனில ஒர்க் பண்றார். கவர்ன்மெண்ட் ஜாப்’க்கு எக்ஸாம்’ஸ் எழுதிட்டு இருக்கார்” என்றவளின் குரலில், தன்னை மீறி பெருமிதம் வெளிப்பட்டது 

“வாவ் கிரேட், பெஸ்ட் விஷஸ் இமயா” என பிரதீப் வாழ்த்த

“தேங்க்ஸ் பிரதீப்” என நன்றி தெரிவித்தாள் இமயா 

சிறிது நேரம் மற்ற தோழிகளுடன் சேர்ந்து இமயாவை கேலி செய்த பிரதீப், “நம்ம சீனியர் விஷ்ணு வந்திருக்கார்னு அரவிந்த் சொன்னான், நீ பாத்தியா இமயா?” எனக் கேட்க 

“ஆமா பிரதீப், அவருக்கும் இப்பத் தான் இன்விடேஷன் குடுத்தேன். அதுக்குள்ள பிரின்சிபல பாக்கணும்னு போனார்”

“ஓ ஓகே, என் ஜாப் விஷயமா அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்” என எழுந்தவன், “ஓகே இமயா, கல்யாணத்துல பாக்கலாம் பை, பை பவி பை தாரணி” என விடைபெற்று கிளம்பினான் 

“ஹ்ம்ம்… இன்னியோட ஜாலிலோ ஜிம்கானா எல்லாம் முடிஞ்சது, இனி ஆபீஸ் பாஸ் டெட்லைன் மீட்டிங்னு ஓடணும். காலேஜ்ல மாதிரி பஸ் மிஸ் பண்ணிட்டேன் மேம்னு சாக்கு சொல்ல முடியாது, டைமுக்கு ஆபிஸ்ல இருக்கணும்” என வருத்தத்துடன் பவித்ரா கூற 

“வாஸ்தவம் தான் பவி, என்ன புண்ணியமோ நம்ம ரெண்டு பேருக்கும் கேம்பஸ்ல ஒரே ஆபிஸ்ல ஜாப் கிடைச்சது. பெங்களூர் ஹாஸ்டல் மால் எல்லாம் கலக்கலாம் விடு” என்றாள் தாரணி 

“நான் தான் இதெல்லாம் மிஸ் பண்றேன்” கேம்பஸில் அதே நிறுவனத்தில் வேலை கிடைத்தும், திருமணமாகி மும்பை செல்வதால் பணியில் சேர இயலாத வருத்தத்தில் கூறினாள் இமயா

“உனக்கென்னடி, ஜாலியா மும்பைல போய் செட்டில் ஆகப் போற. கொஞ்ச நாள் போய் அங்கயே வேலைக்கு போலாம், இங்க விட பே இன்னும் பெட்டரா இருக்கும். அவங்க வீட்ல அதுக்கு ஓகே சொன்னதா சொன்னியே, அப்பறமென்ன? ஹேப்பியா கல்யாணத்துக்கு ரெடியாகு இமயா” என தோழியை உற்சாகமூட்டினாள் தாரணி  

“ம்… சரிடி, அம்மா எதோ ஷாப்பிங் போகணும்னு சொல்லிட்டுருந்தாங்க, கெளம்பலாமா?” என எழுந்தாள் இமயா

“இப்பவே கெளம்பணுமா இமயா? லன்ச் முடிச்சுட்டு மால் போய்ட்டு அப்படியே மூவி ஏதாச்சும் போலாம்னு நெனச்சேன்” என பவித்ரா கூற 

“எனக்கும் ஆசையா தான் இருக்கு, அம்மா நேரத்தோட வா’னு பத்து வாட்டி சொல்லி அனுப்பினாங்க, சாரிடி. கெளம்பலாமா?” எனவும் 

“லைப்ரரி புக் ரிட்டர்ன் பண்ணனும், அப்புறம் லேப்ல சைன் வாங்கணும், நீ வேணா கெளம்புடி” என்றாள் தாரணி  

“சரிப்பா அப்புறம் பாப்போம்” என தோழிகளிடம் பிரியாவிடைபெற்று கிளம்பினாள் இமயா 

எப்போதும் தோழிகளுடன் அரட்டை அடித்தபடி கல்லூரியை விட்டு கிளம்பி பழகியவளுக்கு, இன்று தனியே செல்வது ஏனோ வருத்தமாய் இருந்தது 

திருமணம் உறுதி செய்யப்பட்டாலே தளைகள் பூட்டப்பட்டு விடுகிறது போலும். தோழிகள் போல் தானும் இன்னும் சிறிது காலம் சுதந்திரமாய் இருந்திருக்கலாமோ என இமயாவின் மனம் சுணங்கியது 

பெண் பார்க்க வருகிறார்கள் என்ற போதே, “கேம்பஸ்ல வேலை கிடைச்சிருக்கு, கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு அப்புறம் கல்யாணம் பண்ணிக்கறேன்” என பெற்றவர்களிடம் தன் விருப்பமின்மையை வெளிப்படுத்தினாள் இமயா 

“நாம நினைக்கறப்ப நல்ல இடம் அமையாது பாப்பா… கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போ, இப்பெல்லாம் எல்லாரும் போறது தான” என சமாதானம் செய்தார் அன்னை 

வீட்டுக்கு ஒரே வாரிசு என செல்லமாய் வளர்க்கப்பட்டவள் தான் என்ற போதும், நல்ல வரனை விட மனமின்றி, அவளிடம் வாதம் செய்து சம்மதிக்க செய்தனர் பெற்றோர் 

பெண் பார்க்க வந்த அன்று, கார்த்திக்கை நேரில் கண்டதும், இமயாவும் முழு மனதோடு சம்மதித்தாள் 

தோற்றம் அவளுக்கு ஏற்றபடி இருந்ததோடு மட்டுமின்றி, நட்பான அவனது அணுகுமுறையும் அவளை சம்மதிக்கச் செய்தது 

பெண் பார்த்த அன்று அவனை நேரில் பார்த்ததோடு சரி, இனி திருமணத்திற்கு முதல் நாள் தான் வருவதாய் கூறியிருந்தான் கார்த்திக் 

மும்பை என்ன தினம் வந்து செல்லும் தொலைவா? அதோடு, திருமணத்திற்கு நிறைய விடுமுறை எடுக்க வேண்டியிருப்பதால், இடையில் வந்து செல்வது சிரமம் என்றான் 

திருமணம் நிச்சயமான இந்த தலைமுறை மற்ற ஜோடிகளைப் போல, அலைபேசியிலேயே உறவை வளர்த்தனர் இவர்களும் 

கார்த்தியை பற்றிய யோசனையுடன் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்தவள், கேட் அருகில் நின்று ஒருமுறை திரும்பிப் பார்த்தாள் 

பெருமூச்சு ஒன்று வெளியேறியது அவளிடமிருந்து

இனிமையான இந்த சூழல், இனி நினைவுகள் மட்டுமே. இந்த இடம் நமக்கு இனி உரிமையானதல்ல என்ற எண்ணம் மனதில் வந்ததும், தனிச்சையாய் அவள் கண்கள் பனித்தது 

இது எல்லோரும் கடந்து வரும் தருணம் தான். சொல்லப் போனால், இது ஆரம்பம் மட்டுமே

இனி பிறந்து வளர்ந்த வீட்டை, பெற்றவர்களை, உறவு, நட்பு என அனைத்தையும் பிரிய, மனதை தயார் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தாள் இமயா

கனத்த இதயத்துடன் வீடு நோக்கி பயணித்தாள் 

டுத்து  வந்த நாட்கள் திருமண ஏற்பாட்டிலும், அதைச் சார்ந்த வேலைகளிலும் வேகமாய் நகர்ந்தது 

திருமணத்திற்கு பத்து நாட்கள் இருந்த நிலையில், மாப்பிள்ளைக்கு அரசு வங்கி ஒன்றில் வேலை கிடைத்த செய்தி வர, அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்  

“நம்ம பொண்ணு ராசி தான் மாப்பிள்ளைக்கு கவர்மண்ட் வேலை கிடைச்சிருக்கு” என இமயாவின் தந்தை சண்முகம் பெருமையாய் கூற 

“அவர் கஷ்டப்பட்டு படிச்சு பரிச்சை எழுதி வேலை வாங்கினா, உங்க மக ராசியா?” என கேலி செய்தார் இமயாவின் அன்னை தேவி 

கணவரை கேலி செய்த போதும், அந்த அன்னையின் குரலிலும் மகிழ்ச்சியும் பெருமையும் அப்பட்டமாய் வெளிப்பட்டது 

“எப்படி கிடைச்சா என்ன? கவர்மண்ட் உத்யோகம், அதுவும் சென்னைல. அவ்ளோ தூரம் பம்பாய்க்கு அனுப்பறமேனு மனசுல ஒரு சங்கடம் இருந்தது. இது நைட் ட்ரெயின் ஏறுனா காலைல போயிரலாம், வம்பில்ல” என பெற்றவராய் அவர் மனம் நிம்மதியானது 

இமயாவும் அதை  நினைத்தே பெரிதும் மகிழ்ந்தாள். அதோடு பெங்களூரில் வேலை கிடைத்த நிறுவனத்தின் கிளை சென்னையிலும் இருப்பதால், இடமாற்றம் பெற்று பணியில் சேர்ந்து விடலாம் எனவும் திட்டமிட்டாள் 

கார்த்திக் வேலை கிடைத்த செய்தியை கூற காலையில் அழைத்த போதே, இதைப் பற்றி கூற நினைத்தாள். அதற்குள் அவனுக்கு வேறு ஏதோ அழைப்பு வர, பின்னர் அழைப்பதாய் கூறி அழைப்பை துண்டித்தான் 

திருமணத்திற்கு ஒரு வாரம் இருந்த நிலையில், அழகு நிலையம் செல்ல வேண்டும், அதோடு இன்னும் சில பொருட்களும் வாங்க வேண்டுமென்றாள் இமயா 

அன்னை தேவி ஏதோ வேலை இருப்பதாய் கூறியதோடு, தனியே அவளை அனுப்பவும் மறுக்க, தன் அத்தை மகளுடன் செல்ல திட்டமிட்டாள் 

“மணி பதினொன்னாச்சு, சாப்டுட்டு போயிருங்க”

“போம்மா நீ, இப்பவே எப்படி சாப்பிடறது? எனக்கு பசியே இல்ல” என்றாள் இமயா 

“போனா எப்படியும் நேரமாகும் பாப்பா, நீ பசி தாங்க மாட்ட. கொஞ்சமாச்சும் சாப்பிட்டு போங்க” எனவும் 

“ஐயோ… நாங்க என்ன பாலைவனத்துக்கா போறோம். அங்கயே ஏதாச்சும் சாப்பிட்டுக்கறோம் விடும்மா” என்றாள் இமயா

“ஆனா…” என தேவி ஏதோ சொல்ல வர 

“விடுங்கத்த, நான் பாத்துக்கறேன். அவளை டைமுக்கு சாப்பிட வெச்சர்றேன்” என்றாள் இமயாவின் அத்தை மகள் உஷா 

“போனா போன இடம் வந்தா வந்த இடம்னு நிக்காதீங்க. இன்னும் கல்யாணத்துக்கு ஒரு வாரம் கூட இல்ல, நேரத்தோட வந்து சேருங்க. பாத்து பத்திரம், இன்னைக்கினு பாத்து உங்கப்பா ஊர்ல பத்திரிக்கை வெக்க போய்ட்டாரு” என ஒரு மணி நேரம் பாடம் எடுத்த பின்னே, வெளியே செல்ல அனுமதித்தார் தேவி

“வண்டி எடுத்துட்டு போகாட்டி, ஆட்டோ வரச் சொல்லி போனா என்ன?” என முன் வாசலில் அமர்ந்து கால் வலி தைலம் தடவிக் கொண்டிருந்த இமயாவின் தந்தையை பெற்றவள் கேட்க

“சொன்னா உங்க பேத்தி கேட்டாத் தான அத்த” என புகார் வாசித்தார் தேவி 

“மாமியாரும் மருமகளும்  கொஞ்ச நேரம் போய் டிவி சீரியல் பாருங்க, அதுக்குள்ள நாங்க வந்துருவோம்” என கேலி செய்து விட்டு, வண்டி சாவியை விரலில் சுழற்றியவாறே, அத்தை மகளுடன் வெளியேறினாள் இமயா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad இந்த தொடர்கதையை எழுதி வரும் எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website and promoted across our social media pages

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. நல்ல விறுவிறு, சுறுசுறு! தொடருங்க. எப்படியும் ஒரு நாள் சஸ்பென்ஸை உடைச்சுத் தானே ஆகணும். இஃகி,இஃகி,இஃகி! (தமிழில் சிரிச்சேன்.)

காத்திருப்பேன் காதலோடு ❤ (சிறுகதை) – ✍கரோலின் மேரி

ரவையைக்  காணோம்😂😜🤣 By அனன்யா மஹாதேவன்