in

ஊருக்குப் போலாம் (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி 

ஊருக்குப் போலாம் (சிறுகதை)

“அம்மா… எப்பம்மா ஊரு வரும்?”

“நாளைக்கு வந்துரும் ராசு”

“தெனமும் இப்படித் தான்மா சொல்ற, ஊரு வரவே மாட்டேங்குது. வெயில்ல நடக்க முடியலம்மா. கால்லாம் வலிக்குது… சாப்பிடவும் ஒழுங்கா எதுவும் தர மாட்டேங்கறே. போம்மா… நீ பொய் சொல்லிட்டே இருக்க…” என்று கோபமாக கூறினான், மழலை மாறாத ஐந்து வயது ராசு

“இல்லடா ராசு… அம்மா வேணும்னேவா இப்படி இருக்கேன். சாப்பிட இன்னைக்கு ஏதாவது கிடைக்கும்டா, கவலப்படாத” என்று ஆதரவாக அவன் தலையைத் தடவினாள் பூமாரி

“ம்… ம்மா… இப்ப எதுக்கு இங்க நின்னுட்டிருக்கோம்? நடக்கலாம் வா… அப்பத் தான் நாளைக்காவது ஊருக்குப் போவ முடியும். ஜீவிதா, என்னைக் கொஞ்சம் தூக்கிக்கறியா?” என சுருண்டு உட்கார்ந்திருந்த தன் அக்கா ஜீவிதாவிடம் ராசு கேட்க

“எலேய்… ராசு… ஜீவியத் தொந்தரவு பண்ணாத, பேசாம இரு. இப்ப சாப்பாடு கிடைக்கும், அத வாங்கிட்டு நடக்கலாம். வா… நா உன்னத் தூக்கிக்கறேன்” என ராசுவைத் தன்னோடு அணைத்துக் கொண்ட பூமாரியின் கண்கள் கலங்கின

இருக்காதா பின்னே…. நடக்க ஆரம்பித்து நாலு நாட்கள் ஆகிவிட்டன. சரியான சாப்பாடு இல்லை. வெயில் வேறு தகிக்கிறது. “பஞ்சம் பொழைக்க பட்டணம் போலாம் வா” என்று பாலுவை அவன் நண்பன் குமரேசு அழைக்க, மனைவி பூமாரி, மகள் ஜீவிதாவுடன் நெல்லையில் இருக்கும் லிங்கம்பட்டி கிராமத்தில் இருந்து ஏழு வருடங்கள் முன் சென்னை வந்தான் பாலு

வந்தவர்களுக்குக் கட்டுமான வேலை கிடைக்க, வாழ்க்கை ஓரளவுக்கு ஓடியது. பட்டணத்தில் மாற்றி மாற்றி ஏதோ ஒரு பெரிய அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும் இடத்தில் வேலை இருந்து கொண்டே இருந்தது.

பாலுவும், குமரேசனும் கட்டிட வேலையில் இருக்க, பூமாரி கீரை விற்றாள். ஓரளவுக்குப் பணப் புழக்கம் வந்ததும், பாலுவை குடி தொற்றிக் கொண்டது

குமரேசும், பூமாரியும் எவ்வளவோ புத்திமதி சொல்லியும், அவன் அடங்கவில்லை. இதற்கு நடுவில் பூமாரிக்கு ராசு பிறந்தான்.

ஒரு நாள், கண்மண் தெரியாமல் குடித்துவிட்டு வந்த போது, விபத்தில் அடிபட்டு உயிரை விட்டான் பாலு

ஆயிற்று… பாலு போய்ச் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. தனி ஆளாய் கிடைத்த வேலைகளைச் செய்து, ஜீவிதாவையும், ராசுவையும் வளர்த்துக் கொண்டிருந்தாள் பூமாரி.

ஆனால் ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்து சரியான வேலை இல்லை, கையில் பணமும் இல்லை. சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுப் போனாள். ஒவ்வொரு நாளும் போராட்டமாகக் கழிந்தது.

எதேச்சையாக ஒரு நாள், குமரேசு அண்ணன் மூட்டை முடிச்சுகளோடு வந்து, ஊருக்குத் திரும்பிப் போவதாகச் சொல்ல, தானும் வாரிச் சுருட்டிக் கொண்டு கிளம்பினாள் பூமாரி.

சென்னையிலிருந்து நெல்லையில் இருக்கும் லிங்கம்பட்டி கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து, இன்றோடு நாலு நாட்கள் ஆயிற்று. வெயில், பசி, இயலாமை எல்லாம் சேர்ந்து, நடக்கும் வேகத்தை சற்றுக் குறைத்திருந்தது

ரண்டு நாட்கள் முன்பு, இரவு ஒன்பது மணியிருக்கும். எந்த ஊர், என்ன இடம் எதுவும் தெரியவில்லை. மதியம் 12 மணிக்கு, ஏதோ ஒரு இடத்தில், கொஞ்சம் சாப்பாடு கிடைத்ததைச் சாப்பிட்டு இரவு வரை சமாளித்தாயிற்று.

ஏதாவது சாப்பிடக் கிடைக்குமா எனப் பார்த்துவிட்டு, அங்கேயே இரவு ஓய்வெடுக்கலாம் என மூட்டைகளை வைத்தார்கள்.

குமரேசு, உடன் வந்திருந்த நாலைந்து பேருடன் ஏதாவது சாப்பிடக் கிடைக்கிறதா எனப் பார்த்து வருவதாகச் சொல்லி விட்டுப் போனான். பூமாரி ஜீவிதாவையும், ராசுவையும் மூட்டைகளைப் பார்த்துக் கொண்டு, இடத்தை விட்டு நகராமல் இருக்கும்படி சொல்லிவிட்டு, மறைவிடம் தேடினாள்.

பூமாரிக்கு இந்த நாலு நாட்களில் இது பெரும் தொல்லையாக இருந்தது. ஆத்திர அவசரத்துக்கு ஒதுங்க இடம் கிடைக்காமல் தவித்துப் போனாள்.

ஆண்களுக்குக் கவலையில்லை. ஆனால் பூமாரி மிகவும் சிரமப்பட்டாள். நடக்கும் வழியில் கடைகளும் இல்லை, கழிப்பறைகளும் இல்லை. புதர் மறைவில், பட்டப்பகலில் எப்படி…? இப்போது இருட்டி விட்டதே என்பதால் அவசரமாகப் போனாள்.

திரும்பி வந்து பார்த்தால், ராசு மட்டும் கையில் மிட்டாயுடன் உட்கார்ந்திருந்தான்.

“ஜீவிதா எங்கே….?” என பதறியபடி ஓடி வந்தாள் பூமாரி.

“ஏலே… ராசு, ஜீவி எங்கடா? இதென்னடா முட்டாயி கைல? யாரு குடுத்தா?” பரபரத்தாள் பூமாரி.

ராசுவின் கவனம் முழுதும் முட்டாயைச் சுவைப்பதிலேயே இருந்தது. பாவம் ஐந்து வயதுச் சிறுவன்… பசியும், மிட்டாயும் அவனுக்கு பெரிசு.

“எலேய் ராசு…” என்று மிட்டாயைப் பிடுங்க, திடுக்கிட்டான்

“யம்மா… குடும்மா… நல்லாருக்கு… ஏன் புடுங்கற?” என்று அழ ஆரம்பித்தான்.

“ராசு… இங்கன பாரு, முட்டாயி உனக்குத் தான். ஆனா ஜீவி எங்கன போனா? முட்டாய் ஆரு கொடுத்தா? சொல்லு… நான் முட்டாயத் திருப்பித் தாரேன்”

“யம்மா… ரெண்டு மாமா வந்து முட்டாய் கொடுத்தாங்க. நான் சாப்பிட ஆரம்பிச்சுட்டேன். இன்னும் நெறைய முட்டாயி தரேன்னு சொல்லி, ஜீவிதாவைக் கூட்டிட்டுப் போனாங்க. முட்டாயக் கொடு… அதான் சொல்லிட்டனே” என்றான்

‘பக்’கென்றது பூமாரிக்கு. 12 வயது அறியாப் பெண் ஜீவிதா, தனியாக அழைத்துப் போய்… மனம் பதறியது பூமாரிக்கு.

“என்னடா சொல்ற ராசு? எந்தப் பக்கம் போனாங்க? ஜீவி எதுக்கு அவங்க கூப்ட்டதும் போச்சு? இதே எடத்துல இருங்கனு சொல்லிட்டுத் தான போனேன். ஒண்ணுக்கு இருந்துட்டு வாரதுக்குள்ள என்னடா…?”

பூமாரி கையில் இருந்த முட்டாயைப் புடுங்கிக் கொண்டே, அவர்கள் போன திசையில் கைகாட்டினான் ராசு.

புயல் போல் ஓடினாள் பூமாரி. “என் சாமி… எம் புள்ளைக்கு ஒண்ணும் ஆவாம எங்கிட்ட சேர்த்துரு…” மனம் அலறியது, வயிற்றில் ஏதோ இம்சை.

சுற்றிலும் பார்த்துக் கொண்டே ஓடினாள். கொஞ்ச தூரத்தில் ஒரு புதர் தெரிந்தது. தேடினாள்…. யாரும் இல்லை.

இன்னும் சிறிது தொலைவில் இரண்டு, மூன்று சின்னக் கட்டிடங்கள் தெரிந்தன.

இருக்கும் பலத்தையெல்லாம் திரட்டி ஓடினாள். அங்கே… ஜீவி தப்பி வர முயற்சித்துக் கொண்டிருந்தாள். நடுத்தர வயதுடைய இருவர், அவளின் கை காலைப் பிடித்து உள்ளே தூக்கிப் போக முயன்று கொண்டிருந்தார்கள்.

“ஜீவி…. ஓடியாந்துரு… எலே…ய்… பொறுக்கிகளா, விடுங்கடா அவள. பொண்ணு வயசுல இருக்கற சின்ன பொண்ணுகிட்ட போயி…. டே…ய்… எடுபட்ட பயலுவளா….” கத்திக் கொண்டே ஓடினாள் பூமாரி.

இவள் ஓடிவரும் வேகத்தையும், பின்னாலேயே இன்னும் நாலைந்து பேர் ஓடி வருவதையும் பார்த்து விட்டு, ஜீவிதாவை அப்படியே விட்டு விட்டு, தப்பித்து ஓடினார்கள் அந்த இருவரும்.

ஓடிவந்து அம்மாவைக் கட்டிக் கொண்டாள் ஜீவிதா

“ஏட்டி… கோட்டிக்காரி…. யாரு கூப்ட்டாலும் ஓடியாந்துருவியா? செத்த நேரம் என் ஈரக் கொலையே நடுங்கிருச்சுடி. புத்தி கித்தி கெட்டுருச்சா? பொறுப்பா உன் தம்பியப் பாத்துப்பேன்னு நெனச்சா…. இப்புடி முட்டாய்க்கு ஆசப்பட்டு காரியத்தக் கெடுக்கப் பாத்தியேடி….” என்று அன்பும், ஆத்திரமும், படபடப்பும் கலந்து பொரிந்து தள்ளினாள்.

அதற்குள் குமரேசும், மற்றவர்களும் வந்து சேர்ந்தனர்.

“என்னாச்சு மாரி…? ராசு சொன்னதால உன் பின்னாலயே எல்லாரும் ஓடியாறோம்…”

“யண்ணே…. கொமரேசண்ணே… செத்த நேரம் ஒதுங்கிட்டு வாரதுக்குள்ள ரெண்டு தடியனுக வந்து, முட்டாயக் கொடுத்து, நம்ம ஜீவிய தனியாக் கூட்டியாந்து…. நல்ல வேளண்ணே…. சரியான நேரத்துல நான் வந்துட்டேன். ஒரு நிமிஷம் எனக்கு உசுரே இல்லண்ணே” பொலபொலவென அழுதாள் பூமாரி.

“சரி சரி… விடு மாரி… அறியாப் பிள்ள, அத திட்டாதே. வா… ஜீவி. பயப்படாத தாயி… வா போலாம். சாப்பாடு வாங்கியாந்திருக்கேன், சாப்டலாம் வாங்க”

“இல்லண்ணே… நானே ஒத்தையில இதுக ரெண்டையும் ஆளாக்கணும்னு பாடுபட்டுட்டிருக்கேன். பாவி மனுசன்…. குடிச்சு குடிச்சு என்னைய இப்படி அம்போனு விட்டுட்டுப் போயிட்டான். இதுக இப்படி வெவரம் இல்லாம இருந்தா, நான் என்ன செய்வேன் ‘ண்ணே…” என்று புலம்பியபடி ஜீவிதாவைத் தன்னோடு அணைத்தபடியே நடந்தாள் பூமாரி

மலங்க மலங்க விழித்தபடி, தாயின் அணைப்பில் ஒண்டியபடியே நடந்தாள் ஜீவிதா

“யண்ணே… ராசு தனியா இருக்கானே… அய்யோ சாமி… இவளத் தேடி வார அவசரத்துல, அவனப் பத்தி யோசிக்கவேயில்லண்ணே” என்று பரபரத்தாள். அதன்பின் கடந்த இரண்டு நாட்களாக இருவரையும் தனியாக விட்டு, எங்கேயும் போவதில்லை பூமாரி

தோ, இன்று காலை சீக்கிரமே நடக்க ஆரம்பித்து, கொஞ்ச நேரத்தில் ஜீவி வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதாள். சாப்பாடு சரியில்லை, வெயிலுக்கு சூடாகியிருக்கும் என்று சமாதானப்படுத்தி, மேற்கொண்டு நடந்தாள்.

கொஞ்ச நேரத்தில் ஜீவியின் பாவாடையில் ரத்தக் கறையைப் பார்த்ததும், சப்த நாடியும் ஒடுங்கியது அவளுக்கு. சந்தோஷமான விஷயம்… ஆனால் இப்போது சந்தோஷப்படும் மனநிலையில் இல்லை.

“கொமரேசண்ணே… நம்ம ஜீவி சடங்காயிருச்சுண்ணே. என்னண்ணே செய்யறது? சுத்திமுத்தி ஒரு கடைகண்ணி கூட இல்ல. சனங்களும் யாருமில்ல. என்ன சோதனையோ…? அடியே ஜீவி… உனக்கு ஆச்சி வீட்டுக்குப் போறதுக்குள்ள அவசரமாடி? நடு ரோட்ல, தெரியாத ஊர்ல…. நா என்னடி செய்யட்டும்…?” அரற்றினாள் பூமாரி.

“ஏ… மாரி… சமஞ்ச புள்ளகிட்ட என்னாத்த பேசறதுன்னு இல்லயா? சும்மா இரு. பாப்பம்…. யாராவது இங்கிட்டு வாராகளானு?”

“இந்நேரத்துக்கு யாருண்ணே வருவாக? நாளைக்காவது ஊருக்குப் போய்ச் சேந்துடலாம்னு நெனச்சா… இவளுக்கு அதுக்குள்ள என்ன அவசரமோ? ரெண்டு நா முன்னாடி நடந்ததே இன்னும் என்னைய தூங்க வுடமாட்டேங்குது. இப்போ வயசுக்கு வந்த புள்ளைய பத்திரமா கூட்டிட்டுப் போற பொறுப்பும் சேர்ந்துகிச்சு. எனக்கு பயமா இருக்கு கொமரேசண்ணே…”

“இந்தா… மாரி…. ச்சும்மா சலம்பிட்டு கிடக்காதே. அதான் நாங்கெல்லாம் கூட இருக்கோம்லா. பயப்படாத மாரி”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, இரண்டு இளைஞர்கள் அந்த வழியாக வந்தனர். இவர்களின் பதட்டத்தையும், சுருண்டு உட்கார்ந்திருந்த ஜீவிதாவையும் பார்த்தார்கள்.

அவர்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டார்கள். பூமாரியும், குமரேசும் கவனித்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்களிடம் உதவி கேட்கலாமா என யோசித்துக் கொண்டிருந்த போதே, அந்த இளைஞர்கள் இவர்களிடம் வந்தார்கள்

குமரேசிடம், “என்னண்ணே பிரச்சனை? நடந்தே ஊருக்குப் போறீங்களா? எந்த ஊருக்குப் போறீங்க? பாப்பாவுக்கு உடம்பு முடியலையா? ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க” என்றார்கள்.

“ஆமா தம்பி. நடந்தே ஊருக்குப் போறோம். திருநெல்வேலில லிங்கம்பட்டி கிராமம் தம்பி. பாப்பாக்குக் கொஞ்சம் முடியல. அதான்…”

பூமாரி வேண்டாம் என்பது போல் சைகை காட்டவே, பாதியில் நிறுத்தினான் குமரேசு.

அதற்குள் அந்த இளைஞர்கள் ஃபோனில் ஏதோ பார்த்துவிட்டு, “அண்ணே… நாளைக்கு நீங்க ஊருக்குப் போயிரலாம். இப்பதான் ஃபோன்ல பார்த்தோம். பாப்பாவுக்கு மருந்து ஏதாவது வேணுமா? காய்ச்சலா இருக்கா? உங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு பண்ணணுமா? என்ன பண்ணணும்… தயங்காம கேளுங்க. அக்கா… நீங்க சொல்லுங்க என்ன வேணும்?”

பூமாரி கையைப் பிசைந்து கொண்டு நிற்க, குமரேசு தைரியமாக, “அது… வந்து தம்பி, பாப்பா… பெரிய மனுஷியாயிருச்சு. அதான்….”

இருவரும் சிறிது யோசித்து விட்டு, “அண்ணே… அக்கா… ஒண்ணும் கவலப்படாதீங்க. ஒரு அரைமணி நேரத்துல வந்துடறோம். இங்கேயே இப்படி அந்த மர நிழல்ல உட்கார்ந்திருங்க. கண்டிப்பா உங்களுக்குத் தேவையான ஏற்பாடோட நாங்க வரோம். எங்களை நீங்க தாராளமா நம்பலாம். தைரியமா இருங்க…” என்று சொல்லி விட்டு வேகமாகப் சென்றனர்

அதனால் தான் இவர்களின் இந்தக் காத்திருப்பு, கதையின் ஆரம்பத்தில் வந்த ராசுவின் நச்சரிப்பு எல்லாம்.

பூமாரிக்கு பயம் மட்டும் இன்னும் போகவில்லை. வாலிப வயசுப் பசங்கள நம்பி இப்படி உட்கார்ந்திருக்கமே… என்ன ஆபத்து வரப் போகுதோ என அவள் மனம் வேகமாக அடித்துக் கொண்டது.

“கொமரேசண்ணே… வயசுப் பசங்ககிட்ட இந்த விஷயத்தை எல்லாம் சொல்லிட்டு, அவங்களை நம்பி இப்படி உக்காந்திருக்கமே… ஏதாவது ஏடாகூடமா… பயமாயிருக்குண்ணே. ஜீவி அப்பா வயசுல இருந்த தடியனுகளே அன்னைக்கு அப்படி நடந்துட்டானுக. வாலிபப் பசங்க… இன்னும் அஞ்சாறு பேரைக் கூட்டியாந்துட்டானுகன்னா….”

“மாரி…. ஆபத்துக்கு பாவமில்லேனு தான் அந்தப் பசங்ககிட்ட நிலமையைச் சொன்னேன். நல்ல பசங்களா தெரியறாங்க. நீ பயந்து போய் கிடக்கே”

சிறிது நேரத்தில், அங்கு இரண்டு வேன் வந்து நின்றது. ஒன்றிலிருந்து அந்த இளைஞர்களும், அவர்களுடன் இன்னும் இரண்டு இளைஞர்கள், இரண்டு பெண்கள் எல்லாரும் இறங்கினார்கள்.

“அண்ணே… இவங்க எங்க ரெண்டு பேரோட அம்மா. அவங்க எங்க நண்பர்கள். உங்களுக்கு வேணும்ங்கற சாப்பாடு, தண்ணி எல்லாம் இந்த வேன்ல இருக்கு. இந்த ட்ரைவர்கிட்ட உங்களை உங்க ஊர்ல கொண்டு போய் விடச் சொல்லியிருக்கோம். இந்தாங்க… கைச் செலவுக்கு வச்சுக்கோங்க” என்று குமரேசுவின் கைகளில் பணத்தைத் திணித்தார்கள்.

அதற்குள் அந்த இரு பெண்மணிகளும் பூமாரியையும், ஜீவிதாவையும் வேனுக்குள் அழைத்துச் சென்று, ஜீவிதாவுக்கு வேண்டிய உதவிகளைச் செய்தார்கள்.

ஜீவிதாவுக்கு இரண்டு மாற்று உடைகள், ராசுவுக்கு பொம்மைகள், தின்பண்டங்கள் எல்லாவற்றையும் ஒரு பையில் கொடுத்தார்கள்.

“கவலைப்படாதீங்கம்மா… வேன்ல உன் பொண்ணைக் கூட்டிட்டு இன்னைக்கு மதியத்துக்குள்ளேயே நீங்க ஊருக்குப் போயிரலாம். பொண்ணை பத்திரமா பார்த்துக்குங்க, சரியா..” எனவும், கண்களில் கண்ணீர் வழிந்தோட, அவர்களின் காலில் விழுந்தாள் பூமாரி.

“யம்மா…. குலசாமி மாதிரி ரெண்டு பேரும் வந்து உதவி பண்ணியிருக்கீங்க. ஆயுசுக்கும் மறக்க மாட்டேன்மா. நீங்க பெத்த புள்ளைங்கள நான் சந்தேகப்பட்டேன். மன்னிச்சுருங்கம்மா. தங்கமான புள்ளைங்களப் பெத்திருக்கீங்க. அந்தப் புள்ளைங்க நல்லாயிருக்கணும்னு நான் நெதமும் சாமியக் கும்பிட்டுக்குவேன்மா,” என்று கையெடுத்துக் கும்பிட்டாள் பூமாரி

பூமாரி மனதில் நம்பிக்கையுடன் வேனில் மூட்டை முடிச்சுகளை ஏற்ற, வேன் கிளம்பியது.

சந்தோஷமாக பிஸ்கட்டைக் கையில் வைத்துக் கொண்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான் ராசு

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

(முற்றும்)

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

                                               

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

பெண்ணே (கவிதை) – ✍ காமாக்ஷி வெங்கட்ராமன்

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 17) -✍ விபா விஷா