sahanamag.com
தொடர்கதைகள்

நீரினைத் தேடிடும் வேரென நான் ❤ (பகுதி 17) -✍ விபா விஷா

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

ருஞ்சுனையனுக்குத் துரோகம் இழைத்து எதிரி நாட்டு மன்னனுடன் கைகோர்த்தது அநங்கன் என்று அனைவரும் கூற, ஜானவியோ , அது அநங்கன் அல்ல.. அந்த குரூரத்தை செய்தது உதயசேனன் என்றாள் 

அதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள்

“என்ன யாதவ்  இது? ஜானு சொல்றது நிஜமா?” என விபின் கேட்க 

மிகவும் உணர்ச்சிவயப்பட்டு இருந்த யாதவ், “இதுக்கு மேல எல்லாத்தையும் ஜானு சொல்லுவா” என்றான் பெருமூச்சுடன்  

பாதியில் நின்ற சரித்திரம், ஜானவியின் வார்த்தைகளாக… அருஞ்சுனையன், ஞமலியின் (தமிழினி) இறுதி சந்திப்பில் இருந்து தொடர்கிறது…

அருஞ்சுனையனிடம் இருந்து விடைபெற்ற தமிழினி தன் வீட்டிற்குச் செல்லும் வழியில், தனது மாமனான அநங்கனை பார்த்து ஒரு வார்த்தை பேசிவிட்டுச் செல்லலாம் என்றெண்ணி அவன் இருக்கும் ஆயுதக் கிடங்கிற்குச் சென்றாள்.

அவள் முதன்மை அமைச்சரின் மகளென்பதாலும், அடிக்கடி அவள் அங்குச் சென்று பழக்கப்பட்டவள் தான் என்பதாலும், எப்பொழுதும் அவள் எங்குச் செல்வதற்கும் தடை ஏதும் இருந்ததில்லை

ஆனால் இம்முறை, ஆயுதக்கிடங்கின் வாயில் காப்போன் அவளை அனுமதிக்க மறுத்தான் 

அவள் நீண்ட நேரம் வாதாடிய பிறகும் கூட, “நான் உள்ளே சென்று அனுமதி கேட்டு பிறகு உங்களை அனுமதிக்கிறேன்” என்று கூறி சென்று விட்டான்.

அவனது இச்செய்கை தமிழினிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் அவனது வரவுக்காகப் பொறுமையுடன் காத்திருந்தாள்

சிறிது நேரம் கழித்து வெளியே வந்த வாயில்காப்போன், அவளை உள்ளே செல்ல அனுமதியளிக்க, அவனை முறைத்துக் கொண்டே சென்றாள் தமிழினி.

ஆனால் உள்ளே சென்று அவள் கண்ட காட்சி, அவளைக் குலை நடுங்க வைத்தது.

ஏனெனில் அங்கு அநங்கன் இரு கைகளும் பின்புறம் கட்டப்பட்டிருக்க, அவன் குரல்வளையைச் சுற்றி இரும்புச் சங்கலிகள் பிணைக்கப்படு , உடல் முழுதும் ரத்தக் களரியாக இருந்தான்.

அதைக் கண்டு பயந்து வெளியே செல்ல முயன்றவளை, இரு வலிய கரங்கள் தடுத்து நிறுத்தின 

அது யாரென அவள் அதிர்வுடன் திரும்பி பார்க்க, அங்கு அருஞ்சுனையனின் தம்பி உதயசேனன் நின்றிருந்தான் 

அவனைக் கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளானவள், “உதயசேனரே.. என்னதிது? இங்கு என்ன நடக்கிறது? எதற்காக இவரை இப்படிச் சங்கலியால் பிணைத்து வைத்துள்ளீர்கள்?” என்று அதிர்ச்சியும் படபடப்பும் மிகக் கேட்டாள்.

“என்ன தமிழினி.. முதன் முறையாக, என்னிடம் நீ உதிர்க்கும் வார்த்தைகள் இப்படிப் பயமும், படபடப்பும் கொண்டதாகத் தானா இருக்க வேண்டும்? இந்தக் கனி இதழ்களிலிருந்து மதுர வார்த்தைகள் அல்லவா சிந்த வேண்டும்?” என  உதயசேனன் சிறுநகைப்புடன் கூறவும்

அருவருப்பினால் உடல் சிலிர்த்தவள், “சீ.. யாரிடம் என்ன பேசவேண்டுமெனத் தெரியாதா உனக்கு? உன் தமையனை மனத்தால் நினைப்பவள் உனக்குத் தாயைப் போல் அல்லவா? அந்தத் தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் அறியாது பிதற்றாதே” என்றவள் கூற, கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான் உதயசேனன்.

“யார் யாருக்கடி தமையன்? அந்த அருஞ்சுனையன் எனக்குத் தமையனா? என் தந்தையின் சிரம் கொண்ட பாவியடி அவன். நீ அவனை உன் மனத்தால் நினைக்கிறாயோ? அப்படியெனில் என் காதல் என்னாவது?” என்றவன் கூற திகைத்தாள் தமிழினி

“யாருக்கு யார்மேல் காதல்?” என்று காற்றாகிவிட்ட குரலில் கேட்டாள்.

“ஹா.. ஹா.. நல்ல கேள்வி தான். யார் மேல் யாருக்கு காதல் என்றா கேட்கிறாய், எனக்குத் தான் இந்தத் தேசத்தின் மேல், இந்த மணி கிரீடத்தை மேல், ரத்தினமும் மாணிக்கமும் பதித்த இந்தச் சிம்மாசனத்தின் மேல் காதல். இவை எல்லாவற்றையும் விட, கோபத்தில் கோவையாய் சிவக்கும் உன் விழியின் மேல் காதல். என்னிடத்தில் வந்து சிக்கியிருக்கும் பொழுது கூட, அதிகாரமாய் என்னை அதட்டும் உன் இதழின் மேல் காதல். 

இதோ என்னைக் கண்டு ஆத்திரத்தில் விம்மித் தணியும் நெஞ்சினுள் இருக்கும் உன் குழந்தை மனத்தின் மேல் காதல். அதைவிட, எவருக்கும் பயப்படாது நிமிர்ந்தே இருக்கும் உன் கர்வத்தின் மேல் காதல். பேரெழில் கொண்டு நித்தமும் என்னைக் காந்தமாய் ஈர்க்கும் உன் அழகின் மேல் எனக்குத் தீராக் காதல்

உன்னை என்று முதன்முதலாகப் பார்த்தேனோ, அன்றே என் மனம் உன்னையே மனையாளாக வரித்து விட்டது. இதோ என் உடைவாளுடன் உறங்கிக் கொண்டு உன் இதயத்தைத் தொடவேண்டுமென்று இந்தத் திருமாங்கல்யம் காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் நீ அந்த அருஞ்சுனையனிடம் காதல் வயப்பட்டிருக்கிறாயா? அதுமட்டுமல்லாது அவனுடைய மனையாள் என்றா கூறுகிறாய்?” என சினத்துடன் உரைத்தவன், அவள் கன்னத்தில் மீண்டும் பலமுறை அறைந்தான் 

உதயசேனன் அறைந்ததில் உண்டான வலியிலும், அவனது அரக்கத்தனத்திலும் வாய் விட்டு அலறினாள் தமிழினி.

அப்பொழுது அவள் குரல் கேட்டு மெல்லக் கண் விழித்தான் அநங்கன். 

அவளும் உதயசேனனிடம் மாட்டிக் கொண்டதை அறிந்தவனின் முகம் மேலும் வேதனையில் கசங்க, “ஐயோ தமிழினி என்னதிது? நீ எப்படியம்மா இவர்களிடம் சிக்கினாய்” என கலக்கமுடன் கேட்டான் 

தமிழினியின் கன்னம் உதயசேனன் அடித்ததில் சிவந்திருப்பதைக் கண்ட அநங்கன், “உதயசேனா விட்டுவிடு.. தயவு செய்து தமிழினியை விட்டுவிடு. அவள் எங்கள் குலதெய்வமடா, நீ என்னிடம் கேட்டதை நான் உனக்குத் தந்து விடுகிறேன். அவளை விடுவித்து விடு உதயசேனா” என்று கதறினான்.

அதைக் கேட்ட உதயசேனன், “அட அட அட.. எவ்வளவு பாசம் உனக்கு தமிழினியின் மீது. அப்படியானால், அவளை விடுவித்து விட்டால் நிஜமாகவே நான் கேட்டதை எனக்கு அளித்து விடுகிறாயா?” என்று கேட்டான்.

தனது மனதை திடப்படுத்திய அநங்கன், “நீ தமிழினியை விடுவித்து விட்டால், நீ கேட்டதைத் தந்துவிடுகிறேன்” என்றான் கடினமான குரலில் 

“ஹ்ம்ம் ஹும்.. முதலில் என் ஆணை நிறைவேற வேண்டும், அதன் பின்பே உன் கோரிக்கை நிறைவேறும்” என்று அதிகாரமாகக் கூறியவன்

“சொல்… எங்கே இருக்கிற அந்த வெடி திரவம்? இப்பொழுதே கூறுகிறாயா? அல்லது… இவளை செதில் செதிலாகச் சீவட்டுமா?” என்றவன், வார்த்தையோடு நில்லாமல், உடைவாளை எடுத்து தமிழினியின் கையில் கீறினான்.

அதைக் கண்டு தமிழினியை விட, அதிகம் கதறினான் அநங்கன் 

அக்கணமே அந்தத் திரவம் இருந்த இடத்தை அநங்கன் கூற, உதயசேனனின் ஆட்கள் அதைத் தேடி கண்டுபிடித்து அவனிடம் ஒப்படைத்தனர் 

“நீ கேட்டது தான் கிடைத்துவிட்டதே, இப்பொழுதாவது தமிழினியை விடுவித்து விடு” என்று அநங்கன் கூறவும்

சிறிது யோசனை செய்த உதயசேனன், “தமிழினியின் விடுதலை பிறகு இருக்கட்டும், முதலில் உனக்கு விடுதலை அளிக்கிறேன்” என்றதோடு அநங்கனின் கழுத்தைச் சுற்றியிருந்த இரும்பு சங்கலியை இறுக்க, கழுத்து நரம்புகள் அறுபட்டு தமிழினியை ஞமலியைப் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டே உயிர் நீத்தான் அநங்கன்.

அதைக் கண்ட கதறிய தமிழினி, “பாவி பாவி.. நீயெல்லாம் மனிதனா? இப்படி ஒரு உயிரைக் கொடூரமாக கொன்று விட்டாயே? உன்னை நம்பியவருக்கு இப்படித் துரோகம் இழைத்து விட்டாயே. உனக்கெல்லாம் நற்கதியே கிடைக்கப் போவதில்லை.” என்று சபித்தாள் 

குரூரச் சிரிப்புடன் அவளைப் பார்த்த உதயசேனன், “அப்படியா? அப்படியெனில், விருப்பமில்லாத பெண்ணை மணமுடிப்பதற்கு என்ன தண்டனை கிடைக்கக் கூடும்?” என்று கேட்டவன், அவன் கூறிய வார்த்தையின் பொருள் உணர்ந்து அவள் சுதாரிக்கும் முன், அவள் கழுத்தில் மங்கள நாணை பூட்டியிருந்தான் 

அவன் செயலில் அதிர்ச்ச்சியுற்ற தமிழினி, கோபாவேசத்துடன் அவனைத் தள்ளிவிட்டு, அவனது கையிலிருந்த வெடிதிரவம் அடங்கிய குடுவையை பிடுங்கி அங்கிருந்து ஓடினாள் 

ஒரு கணம் நிலை தடுமாறிய உதயசேனன், சுதாரித்து தமிழினியைப் பிடிக்கத் தானும் விரைந்து ஓடினான். அவனுடன் அவனது ஆட்களும் பின் தொடர்ந்தனர்.

வெகுதூரம் வரையில் அந்த மையிருட்டில் குத்து மதிப்பாக அவளைப் பின் தொடர்ந்தவர்கள், ஒரு வீதியின் சந்து பிரியும் இடத்தில் அவளைக் கைநழுவ விட்டிருந்தனர்.

அதில் ஆவேசமுற்ற அநங்கன், திசைக்கு ஒருவராய் அனைவரையும் அனுப்பி விட்டு, தானும் அவளைத் தேட ஒரு திசையில் சென்றவன், வெகுவிரைவில் காந்தார வனத்தில் அவளைக் கண்டறிந்து விட்டான். 

அவளைப் பிடிக்க முயன்ற தருணம், அவனிடமிருந்து தப்பிப்பதற்காக எதிர்சாரியில் ஓடிய தமிழினி, ஒரு சிறு பள்ளத்தாக்கில் உருண்டு சரிந்து, அங்கிருந்த புதை குழியில் விழுந்தாள்.

அவள் அவ்வாறு புதைக்குழியில் விழுந்ததைப் பார்த்த உதயசேனன், “ஹா ஹா ஹா… என்னிடமிருந்து அவ்வளவு எளிதில் தப்பி விடலாம் என்று எண்ணினாயா தமிழினி? என்னால் மட்டுமே உன்னைக் காக்க இயலும். என்னை விட்டு உன்னால் எங்கும் ஓடி ஒளிய முடியாது. நீ என்றுமே எனக்குத் தான், அதை நினைவு கொள்” என்றவன், அவளைக் காப்பாற்ற ஏதுவான பொருள் ஏதும் அருகில் இருக்கிறதா எனத் தேடினான்

ஆனால் அந்த நிலையிலும் கூட, அவனை நோக்கி எகத்தாளமான சிரிப்பொன்றை உதிர்த்தாள் அருஞ்சுனையனின் காதலி.

“இந்த நிலையிலும் கூட என்னைப் பார்த்து எள்ளலாக நகைக்கிறாயா? ஆணவம் தான் உனக்கு” என்று உதயசேனன் கூற

“இந்த நிலை என்ன, நான் எந்த நிலையில் இருந்தாலும் என் மனதில் நீ என்றுமே தரம் தாழ்ந்து தான் இருப்பாய். ஆமாம் என்ன கூறினாய்? இங்கிருந்து என்னை மீட்க உன்னால் மட்டும் தான் இயலும் என்றா? என்னை மீட்க ஒருவன் இருக்கிறான், அவன் யாரென்று தெரியுமா? அது தான் எவராலும் எதிர்க்க இயலாத மரணத் தேவன். என்ன அப்படிப் பார்க்கிறாய் உதயசேனா? இந்த உயிர் உன்னை யாசித்துத் தான் வாழ வேண்டும் என்ற அவசியம் இல்லை, உனது மனையாளாக இருப்பதைக் காட்டிலும் இந்த மண்ணுள் புதைவதே எனக்குப் பேரின்பம்” என்றாள் தமிழினி 

அவளது வார்த்தைகளைக் கேட்டு சிறிது விதிர்த்துத் தான் போனான் உதயசேனன்

இருப்பினும் தலைக்கேறிய ஆணவத்தில், “எது எப்படி ஆனாலும், நீ என் மனைவி தான் தெரியுமா?” என்று அரக்கத் தனத்துடன் கூற, 

கணமும் தாமதியாமல், அவன் கட்டிய அந்தக் கயிற்றைக் கழற்றி தூக்கி எறிந்தாள் தமிழினி 

அதைக் கண்டு ஆவேசமடைந்த உதயசேனன், மனதினுள் பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினான்.

பிறகு அவள் அந்தப் புதைமணலில் அமிழ்ந்து மூச்சு திணறி இறப்பதை முழுதும் கண்டவன், அநங்கனின் உடலையும் எவரும் அறியாது அழித்து விட்டான்

அதன் பின் தன் இருப்பிடத்திற்கு வந்தவன், ரணகிங்கனுக்குச் செய்தி அனுப்பி விட்டு போருக்காகக் காத்திருந்தான்.

றுபுறம் அருஞ்சுனையனோ, அநங்கனும் தமிழினியும் காணாமல் போனதை அறிந்து, மிகுந்த குழப்பத்திற்கும் மனவேதனைக்கும் ஆளானான்.

முதன்மைமந்திரி பரமனும் கூட அவர்கள் எங்கே சென்றிருப்பார்கள், என்ன ஆபத்தில் சிக்கியிருப்பார்கள் என்று அறியந்திருக்கவில்லை.

அருஞ்சுனையன் எண்ணியதெல்லாம், அவர்கள் இருவரும் ஒருவேளை எதிரிநாட்டினரிடம் சிக்கியிருப்பார்கள், போரில் அவர்களை ஆயுதமாகப் கொண்டே ரணசிங்கன் தன்னை பலவீனப்படுத்த முயல்கிறான் என்று தான்.

ஆனால் அவனுக்கு மேலும் ஒரு விடயம் பெருங்குழப்பத்தை அளித்தது. அது என்னவென்றால், அவன் தயாரித்த அந்த வெடிபொருள் தான். அது இருந்த இடம் அவனும் அநங்கனும் மட்டுமே அறிவர்

இப்பொழுது அநங்கனுடன் அந்த வெடிபொருளும் காணாமற் போகவே, என்ன செய்வது.. என்னவென்று எண்ணுவதென்றே தெரியவில்லை அருஞ்சுனையனுக்கு.

றுதியாகப் போருக்கான நாளும் வந்தது. ரணசிங்கனுடனான போர் ஆரம்பித்தது. அப்போரின் ஆரம்பம் முதலே, அருஞ்சுனையனின் படைகள் மிகச்சிறப்பாகவே போர் புரியத் துவங்கின.

ஆனால் போர்களத்திற்குள் சென்றதுமே, ரணசிங்கனின் கொடி பறந்த அவனது தேரினை நோக்கி தனது ரதத்தைச் செலுத்தத் துவங்கினான்  அருஞ்சுனையன்

வழியில் வந்த எண்ணற்ற எதிரிநாட்டினரை வீர சொர்க்கம் அனுப்பியவாறே ரணசிங்கனின் இருப்பிடத்திற்குச் சென்றான்

ரணசிங்கனின் தேருக்கருகில் சென்றவன், ஒரே தாவலில் தாவி அந்த தேரில் நின்றிருந்தவனை கீழே தள்ளிவிட்டு வாட்போர் புரிந்தான்.

முடிவே இல்லாத காலச்சக்கரமாய் இருவரின் வாட்களும் சுழன்று கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ரணசிங்கனின் கை தாழும் நேரம், அருஞ்சுனையனின் முதுகினை துளைத்தது ஒரு வாள்.

அந்த வாளுக்குரிய கையைப் பற்றி இழுக்க முயன்றவன், முடியாததால் அந்த வாளையே தனது உடலிலிருந்து உருவி எடுத்தான்.

அந்த வாளை அருஞ்சுனையன் உருவி எடுக்கவும், அதில் அவனுடைய உதிரத்துடன், துரோகமும் சேர்ந்து வழிந்தது. 

ஆம்.. அது அவனது நாட்டில் தயாரிக்கப்பட்ட, அவனது நாட்டின் சினம் பொறிக்கப்பட்ட, உதயசேனனின் வாள் தான்.

பெரும் அதிர்ச்சியுடன் அருஞ்சுனையன் திரும்பிப் பார்க்க, கண்களில் கொலைவெறியுடன் நின்றிருந்தான் உதயசேனன்.

வேறெதுவும் பேசும் சக்தியற்ற அருஞ்சுனையன், “ஏன்?” என்ற ஒற்றைக் கேள்வியை மட்டும் கேட்டான்.

“ஏன் என்றா கேட்கிறாய்? கேட்டுக் கொள், முதற்காரணம் என் தந்தையின் மரணம். இரண்டாம் காரணம் ,காதல். இந்தத் தேசத்தின் மீது எனக்கிருக்கும் காதல்” என்று கூறி அவன் மார் மீது உதைத்துத் தள்ளினான் உதயசேனன் 

“வாள் கொண்டு என்னை நேரடியாக வீழ்த்தியிருக்கலாமே? இப்படி வஞ்சத்தால் என்னை வீழ்த்திவிட்டாயே?” என்று கேட்டான் 

“இதுவே துரோகமெனப்படுகிறதா உனக்கு? அப்படியானால் உனக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரும் துரோகத்தை யான் கூறவா? அதை அறியாமல் நீ அறிதுயில் புரிய யான் விடுவேனோ?” என்று கேட்டவன்

அவன் காதில், “உன் ஆத்ம நண்பனான அநங்கனும், உன் ஆருயிர் காதலி தமிழினியும் காணாமல் போய் விட்டார்கள் என்றா எண்ணினாய். ஹா ஹா ஹா… அது முற்றிலும் தவறு. அவர்கள் இருவரும் நீ கண்டுபிடித்தாயே அந்த வெடிபொருள், அதனுடன் ரணசிங்கனுடன் சேர்ந்து விட்டார்கள். உன் காதலி இப்பொழுது வெறும் தமிழினி அல்ல, அவள் அநங்கனின் மனைவி” என்றவன் 

“போதுமா? இந்த உண்மைகளுடன் நீயும் சேர்ந்தே உறங்கிவிடு, இனி மீண்டெழ இயலாதவாறு” என்று சொல்லிக் கொண்டே  அருஞ்சுனையனின் இதயத்தில் தனது வாளை இறக்கினான் உதயசேனன் 

அதைக் கேட்டு அந்த உயிர் பிரியும் வினாடியிலும் கை முஷ்டி இறுக்கிய அருஞ்சுனையன், “வஞ்சம் தீர்க்க, உன் உயிர் குடித்து, யான் எம் பழி முடிக்க, இனி ஒரு பிறப்பெடுத்தாவது உண்மை யாதென்று உணராமல் விடேன்” என்று உறுமியவாறே கண் மூடினான்

“இதுவரைக்கும் சொன்னதெல்லாம் முன் ஜென்மத்தில் நாங்க நேரடியா அனுபவிச்சதும், ஆதி சார் ஆராய்ச்சில கண்டுபிடிச்சதுல இருந்து நாங்க தெரிஞ்சுக்கிட்ட விஷயங்கள்” என்று முடித்தாள் ஜானவி

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

(தொடரும்… வெள்ளி தோறும்)

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

                                               

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!