in ,

செல்வி அக்கா எப்போ வரும்? (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி

செல்வி அக்கா எப்போ வரும்? (சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 70)

“கோதை… அடியே பூங்கோதை, அம்மா கொஞ்சம் வெளில  போயிட்டு, மதியத்துக்கு வந்துருவேன். அதுவரைக்கும் வீட்டுக்குள்ளாறயே  இருக்கணும் என்னா…. நான் வீட்டை வெளிப்பக்கமா பூட்டிட்டுத் தான் போறேன். அதனால வீட்டுக்குள்ளாற விளையாடிட்டிரு. புரியுதா?” 

அம்மாவிடம் குழப்பத்துடன் தலையாட்டினாள் கோதை. ஆறு வயது கோதைக்கு, இந்த ஒரு வாரமாக என்ன நடக்கிறது என்றே புரியவில்லை

கடந்த ஒரு வாரமாக, அம்மா எங்கேயும் போகாமல், கோதையையும் வீட்டு வாசலுக்குக் கூட வர விடாமல், கூடவே இருந்து பார்த்துக் கொண்டாள். 

கோதை எப்போதும் பக்கத்து வீட்டில் இருக்கும் செல்வி அக்காவுடன் தான் பொழுதைப் போக்குவாள். குழந்தையாக இருக்கும் போதிலிருந்தே, செல்வியுடன் மிக நெருக்கமாகி விட்டாள் கோதை 

செல்விக்கு அடுத்து, அவள் அம்மாவுக்கு ஒரு குழந்தை பிறந்து சில நாட்களிலேயே தவறி விட்டது. அந்தக் கவலையில் இருந்த செல்விக்கு, பக்கத்து வீட்டில் கோதை பிறந்த போது, மிகவும் ஆறுதலாக இருந்தது. பாசத்துடன் கோதையைத் தூக்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்தாள். 

அன்று ஆரம்பித்த பாசப் பிணைப்பு…. இப்போது  கோதைக்கு ஆறு வயது ஆகிறது. செல்வி கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள். இன்னும் ஒரு வருடத்தில் படிப்பைமுடித்து விடுவாள். 

துப்புரவுத் தொழிலாளியாக வேலை செய்யும் அப்பாவும், வீட்டு வேலை செய்யும் அம்மாவும் கஷ்டப்பட்டு செல்வியைப் படிக்க வைத்தனர். குடும்பத்தில் முதல் பட்டதாரி ஆகும் கனவுடன், செல்வியும் நன்றாகப் படித்தாள். கிடைக்கும் நேரத்தில் அக்கம்பக்கத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு ட்யூஷன் எடுத்தாள். 

எல்லாவற்றையும் விட, கோதையுடன் இருக்கும் நேரம் செல்விக்கு மிகவும் பிடிக்கும். அதென்னவோ கோதை மேல் கொள்ளைப் பிரியம் செல்விக்கு. கோதை பேசுவதை ஆசையாக, மெய் மறந்து கேட்டுக் கொண்டிருப்பாள். 

வீட்டில் இருக்கும் நேரங்களில், இருவரும் யாராவது ஒருவர் வீட்டில் சேர்ந்தே இருப்பார்கள். செல்வி, கோதையின் இந்த பாசப் பிணைப்பு இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.  

இப்படி நினைவு தெரிந்த நாளிலிருந்து, மிகவும் நெருக்கமாக இருந்த செல்வி அக்காவை, ஒரு வாரமாகப் பார்க்க முடியவில்லையே என்று கோதைக்கு மிகவும் ஏக்கமாக இருந்தது. 

“செல்வியக்கா எங்க போயிருக்கும்? என்கிட்ட சொல்லாம, அக்கா எங்கேயும் போகாது. அக்காவை போன வாரம் கடைசியா பார்த்தது. அதுக்கப்புறம் செல்வி அக்காவைப் பார்க்கவே இல்ல. அம்மாகிட்ட கேட்டா, அம்மாவும் பதில் சொல்ல மாட்டேங்குது. பக்கத்து வீட்ல இருக்கற பரிமளா அத்தை…. அதான் செல்வி அக்காவோட அம்மா, அவங்களையும் பார்க்க முடியல” 

“ஒருவேளை…. செல்வி அக்காவுக்குக் கண்ணாலத்துக்குப் பார்த்துட்டு இருந்தாங்க. திடீர்னு கண்ணாலம் முடிஞ்சிருக்குமோ? அப்ப வேற ஊருக்குப் போயிருப்பாங்களோ? அதனாலத் தான் செல்வி அக்காவப் பாக்க முடியலையா? அப்படி இருந்தாலும், செல்வி அக்கா கண்ணாலத்துக்கு என்னைய கூப்பிட்டு இருப்பாங்களே….” 

“படிப்பு முடிச்ச பிறகு தான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு, அக்கா பரிமளா அத்தைகிட்ட கூட ஒரு நாள் சண்டை போட்டுச்சே. அக்காவுக்கு நிறைய படிக்கணும்னு ஆசை. என்னையவும் நிறைய படிப்பு படிக்கணும்னு சொல்லிட்டே இருக்கும். ஆனா பரிமளா அத்தை தான், மேல மேல படிச்சுட்டா மாப்பிள்ள கிடைக்காதுன்னு சொல்வாங்க.

என்ன நடந்துச்சுன்னு தெரியல. செல்வி அக்கா என்னைய பார்க்காம, வீட்டுக்குள்ள இருக்காது. எங்கனாச்சும் ஊருக்குப் போறதுன்னா கூட, என் கிட்ட சொல்லிட்டு, ஆசை தீர என்னைய கொஞ்சிட்டு தான் போவும்” 

“ஆனா ஒரு வாரமா அதெல்லாம் இல்லாம, எனக்கு அழுகை அழுகையா வருது. அப்படியே ஓடிப் போய் செல்வி அக்காவைக் கட்டிக்கணும் போல இருக்கு. அக்கா தாவணி வாசம் நல்லாயிருக்கும். அக்கா மடில உக்காந்து, அக்கா பேசறதைக் கேக்கணும் போல இருக்கு” 

“அம்மா என்னைய எதுக்கு  வீட்டுக்குள்ளேயே பூட்டி வச்சிருக்குன்னு தெரியல. வெளில போய் விளையாட முடியல. பக்கத்துல இருக்கற பிள்ளையார் கோயிலுக்குப் போக முடியல. செல்வி அக்கா கூட தெனமும் சாயங்காலம் பிள்ளையார் கோவிலுக்குப் போவேன். அங்க சுண்டல் தருவாங்க. சுண்டல் சாப்பிட்டுக்கிட்டே, செல்வி அக்கா கையப் புடிச்சுக்கிட்டு, தெருவுல நடந்து வரதே தனி சந்தோஷமா இருக்கும்” 

“கடைசியா போன வாரம் வெள்ளிக்கிழமை, செல்வி அக்கா கூட கோவிலுக்குப் போனது. கோவிலுக்குப் போயிட்டு வரும் போது, அக்கா என்கூட பேசிட்டே வந்துச்சு”

“கோதை… குமரன் நாலு நாளா ட்யூஷனுக்கு வரல. என்ன, ஏதுன்னு அவங்க வீட்ல கேட்டுட்டு வரேன். நீ வீட்டுக்குப் போ, சரியா…”

இப்படி என்கிட்ட சொல்லிச்சு. அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு எதுவுமே தெரியல 

கோதையின் குழந்தை உள்ளத்திற்கு வெளியே நடப்பது என்ன, ஏது என்று தெரியவில்லை. குழப்பத்துடன் பூட்டிய வீட்டிற்குள் தவித்துக் கொண்டிருந்தாள். எப்படியாவது செல்வி அக்காவைப் பார்த்து விட வேண்டும். வேறு எதுவும் அவளுக்குத் தேவையில்லை. 

அம்மா ஒரு வாரமாக, ஜன்னல் பக்கம் கூட போக விடவில்லை. ஏன் இவ்வளவுகெடுபிடி என்று புரியாமல் விழித்தாள் கோதை. இப்போது அம்மா தான் இல்லையே. ஜன்னல் பக்கத்தில் ஆர்வமாக வந்து உட்கார்ந்து கொண்டு, வெளியே யாராவது வருகிறார்களா என்று பார்க்க ஆரம்பித்தாள்.   

கோதையை  வீட்டில்  விட்டுவிட்டு, ரேஷன் கடை வரை வந்த கோதையின் அம்மா மங்களத்திற்கு, ரேஷன் கடை வரிசையில் நிற்கும் போது கூட, மனம் வீட்டையே சுற்றிக் கொண்டு இருந்தது.  

“இப்போன்னு பார்த்தா மாமாவுக்கு, வெளியூர்ல கட்டட வேலை வரணும்?ரெண்டு மாசம், கோதையை  வச்சுட்டு தனியா இருக்கணுமேன்னு கவலைப்பட்டுட்டு இருக்கும் போது, செல்விக்கு இப்படி ஆகும்னு எதிர்பார்க்கல” 

“ஒரு வாரமா கோதையை வீட்டுக்குள்ள அடைச்சு வச்சுட்டு, நானும் வெளில வராம சமாளிச்சுட்டேன். ரேஷன்ல அரிசி வாங்கலாம்னு வந்தா, இவ்வளவு கூட்டமா இருக்கு. நான் வீட்டுக்குத் திரும்பிப் போற வரைக்கும், கோதை யார்கிட்டயும், எதையும் சொல்லாம இருக்கணும் மாரியாத்தா” 

தனியாக மனதுக்குள் புலம்பித் தவித்த மங்களத்திற்கு, அன்று நடந்த சம்பவம் ஞாபகத்திற்கு வந்து மிரட்டியது.  

போன வாரம் கோவிலில் இருந்து திரும்பிய செல்வி, குமரன் வீட்டிற்குப் போவதாக கோதையிடம் சொன்னதும், கோதை கையில் வைத்திருந்த சுண்டலுடன் வீட்டிற்குள் ஓடி வந்தாள்.  

கோவிலில் இருந்து திரும்பியதும், கோதையுடன் தினமும் வீட்டிற்கு வரும் செல்வி, அன்று வராததால், மங்களம் கோதையிடம் கேட்டாள். 

“கோதை, செல்வி வரலையா? பரிமளமும் வீட்டுல இல்லையே…. இங்கே வந்து இருக்கலாமே…” 

“யம்மா, செல்விக்கா குமரன் வீட்டுக்குப் போறேன்னு சொல்லிச்சு.” 

“யாரு… பெரிய வீட்டு செந்திலு தம்பி குமரன் வீட்டுக்கா?” 

“ஆமா மா.” 

கேட்டதுமே திக்கென்றது மங்களத்திற்கு. வேகமாக வந்து வாசலில் எட்டிப் பார்த்தாள். செல்வி கண்ணில் பட்டால் கூப்பிடலாம் என்று தேடினாள். செல்வி அதற்குள் அந்தத் தெருவைத் தாண்டியிருந்தாள். 

மங்களம் பதறினாள். அவளால் வாய் விட்டுப் புலம்பவும் முடியவில்லை. விவரம் தெரியாத கோதை முன்னால் என்னவென்று புலம்புவது? மானசீகமாக அய்யனாரை வேண்டிக் கொண்டாள். 

“அய்யனாரப்பா, வயசுப் பொண்ணு, இந்த நேரத்துல அந்த வீட்டுக்குப் போயிருக்கு. அந்த செந்திலு பயலப் பத்தி ஊரு முழுக்க தப்பா பேசுது. பொல்லாத பயலோட தம்பிய ட்யூஷனுக்குச் சேர்த்துக்காதேன்னு அப்பவே சொன்னேன். கேக்கல” 

“குமரன் நல்லவன், சின்னப் பையன் என்ன தப்பு பண்ணான்னு என்கிட்ட மல்லுக்கு நின்னா செல்வி. ஆனா குமரனைத் தூண்டிலா வச்சு, செல்விக்கு வலை விரிப்பான் செந்தில்னு எடுத்துச் சொல்லியும் கேக்கல” 

“இப்ப எந்த தைரியத்துல இந்த செல்வி புள்ள அவங்க வீட்டுக்குப் போயிருக்கு. வீட்டுல பரிமளாக்கா வேற இல்ல. நேரா நாமளே குமரன் வீட்டுக்குப் போயிரலாமா? அதுவும் பயமாத் தான் இருக்கு. என் கூட வீட்டுல மாமா இல்லாம தனியா இருக்கேன்னு தெரிஞ்சதுமே, அந்த செந்திலு என்கிட்ட பல்லைக் காட்ட ஆரம்பிச்சான். அவனைத் திட்டி விட்டிருக்கேன். இப்போ எந்த தைரியத்துல நான் அவன் வீட்டுக்குப் போக முடியும்…” 

“செல்வி சீக்கிரம் பத்திரமா திரும்பி வரணும் மாரியாத்தா, அய்யனாரப்பா…. செல்வி எனக்குக் கூடப் பொறக்காத தங்கச்சி” 

கண்ணீர் பெருகியது மங்களத்திற்கு. அனலில் விழுந்த புழு போலத் தவித்தாள். அடிக்கடி பக்கத்து வீட்டை எட்டிப் பார்த்துக் கொண்டாள். செல்வி வரவில்லை. 

இரவு 9:30 மணி. பரிமளம் வந்து கதவைத் தட்டினாள். நல்லவேளை கோதை தூங்கி விட்டாள். மங்களம் பதைபதைப்புடன் கதவைத் திறந்தாள். 

“மங்களம்… செல்வி புள்ள இன்னுமா இங்கே இருக்கு? கல்யாண வீட்டுல இருந்து ஒம்போது மணிக்கு வந்துருவேன், சோறு பொங்கி வைடின்னு சொல்லிட்டுப் போனா, பொறுப்பில்லாம கோதை கூட விளையாடிட்டிருக்காளா?” 

“பரிமளாக்கா, செல்வி இங்க வரவேயில்ல. சரி, வெள்ளிக்கிழமை, வீட்டுல வெளக்கு கொளுத்தப் போயிருக்கும்னு நினைச்சேன். வீட்டுல செல்வி இல்லையா….” 

அவ்வளவு தான்…. அலறினாள் பரிமளம். அக்கம்பக்கம் எல்லாம் வர, தெருவே அல்லோகலப்பட்டது. ஆளுக்கொரு பக்கமாய்த் தேடினார்கள். 

மங்களமும் வீட்டைப் பூட்டி விட்டு, குமரன் வீட்டருகில் எல்லாம் போய்த் தேடினாள். செல்வி கிடைக்கவில்லை.  

மறுநாள் ஏரிக்கரை அருகே, புதரில் சிதைந்த நிலையில் செல்வியின் உடல் தான் கிடைத்தது. குற்றவாளி யார் என்று யாருக்கும் தெரியவில்லை. தெரிந்தவர்களுக்கு சொல்லும் தைரியம் இல்லை.  

மங்களம், ஒரு வாரமாக செல்வியை நினைத்து, இரவு முழுவதும் அழுது அழுது ஓய்ந்தாள். உண்மையை வெளியே சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. சொன்னால் தனியாக இருக்கும் தனக்கும், கோதைக்கும் ஆபத்து வரும் என்றும் தெரியும். அதனால் சொல்லவும் முடியவில்லை. 

கோதை தெரியாத்தனமாக ஏதாவது உளறி விடக் கூடாது என்று தான், ஒரு வாரமாக வீட்டிற்குள்ளேயே அடக்கி வைத்திருந்தாள்.  

வேறு வழியின்றி, இன்று வெளியே வந்திருக்கிறாள். மனசெல்லாம் வீட்டில் இருந்தது. செல்வியின் இழப்பும், கோதையின் பாதுகாப்பும் அவளை பயத்தில் ஆழ்த்தியிருந்தது. 

ரேஷனில் அரிசியை வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு விரைந்தாள் மங்களம்.  

ஜன்னல் ஓரமாக உட்கார்ந்திருந்த கோதை, யாராவது வந்தால், அவர்களிடம் சொல்லி, செல்வி அக்காவை வரச் சொல்ல முடியுமா என்று காத்திருக்க  ஆரம்பித்தாள்

தெரு முக்கில் இருக்கும் அண்ணாச்சி கடையில், காய்கறிகளை வாங்கிக் கொண்டு, சொக்கி பாட்டி போவதைப் பார்த்ததும் குஷியானாள் கோதை. 

“பாட்டி, பாட்டி… ஒரு நிமிஷம் நில்லுங்க.” 

“யாரு கோதையா? என்ன பாப்பா, வீட்டுக்குள்ள பத்திரமா இரு. உங்க அம்மா கொஞ்ச நேரத்துல வந்துடும்.” 

“அதில்ல பாட்டி, பக்கத்து வீட்ல செல்வி அக்கா இருக்குதான்னு பார்த்துட்டு, கொஞ்சம் வரச் சொல்றீங்களா? நான் அவங்களைப் பார்த்து ஒரு வாரம் ஆகுது. இவ்வளவு நாள் செல்வி அக்காவை நான் பாக்காம இருந்ததே இல்ல பாட்டி.” 

கண்களைச் சுருக்கிக் கொண்டு கோதையைப் பார்த்தாள் பாட்டி. 

“பாட்டி, உங்ககிட்ட தான் சொல்றேன். பக்கத்து வீட்டு செல்வி அக்காவ கொஞ்சம் வரச் சொல்லுங்க. ஜன்னல் வழியா பார்த்துக்கறேன்.” 

“பேசாம வீட்டுக்குள்ள இரு. அவுகளப் பாக்கணும், இவுகளப் பார்க்கணும்னு சொல்லாதே. நீ விவரம் தெரியாத பிள்ள. அம்மா சொல்ற படி கேட்டு பத்திரமா இருந்துக்கோ. காலம் கெட்டுக் கெடக்கு. நீ  பச்ச மண்ணு, பத்திரமா இரு. எனக்கு ஜோலி கெடக்கு.” சொல்லி விட்டு, சொக்கி பாட்டி விடுவிடுவென்று நடந்தாள். 

“நான் ஏதோ கேட்டா, பாட்டி ஏதோ பதில் சொல்றாங்க. எதுக்கு செல்வி அக்காவக் கூப்பிட மாட்டேங்கறாங்கனு தெரியல.” 

அழுகை முட்டிக் கொண்டு வர, ஜன்னல் வழியாக, கோதையே குரல் கொடுத்தாள். 

“செல்விக்கா… செல்விக்கா… ஒரு நிமிஷம் இங்க வாங்களேன். ஏன் என்னைய பாக்க வர மாட்டேங்கறீங்க? என் மேல கோவமா?” இரண்டு மூன்று முறை கத்திப் பார்த்தாள். யாருமே வரவில்லை

பாவம்… பிஞ்சு முகம் வாடிப் போயிற்று. ஜன்னல் கம்பியைப் பிடித்துக் கொண்டு. ஏக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள் கோதை. 

சற்று நேரத்தில் செந்தில் அண்ணன், சைக்கிளில் அந்த வழியாகப் போகவே, முடிந்த மட்டும் பலமாகக் கத்தினாள் கோதை. 

“அண்ணே….. செந்தில் அண்ணே. ஒரு நிமிஷம் சைக்கிளை நிப்பாட்டுங்க. அண்ணே, அண்ணே… போயிடாதீங்க.” 

கோதையின் அலறல் கேட்டு,  சைக்கிளின் வேகத்தைக் கட்டுப்படுத்தினான் செந்தில். அப்படியே சைக்கிளைப் பின்னால் நகர்த்திக் கொண்டு வந்து, கோதையை உற்றுப் பார்த்தான். 

“செந்தில் அண்ணே, போன வாரம் செல்விக்கா, உங்க வீட்டுக்கு வரதா சொல்லிச்சு. குமரன் ட்யூஷனுக்கு வரல, என்னன்னு  கேட்டுப் போக உங்க வீட்டுக்கு வந்துச்சு. அதுக்கப்புறம் அக்காவ நான் பாக்கவே இல்ல. பக்கத்து வீட்டுல அக்கா இருந்துச்சுன்னா, வரச் சொல்லுங்கண்ணே. நான்  பாக்கணும்.” 

செந்தில் கோதையையே வெறித்துப் பார்த்தபடி நின்றிருந்தான். ஆனால், கோதை செந்திலிடம் பேசியதை, செல்வியின் அம்மா பரிமளம், வீட்டு வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்தாள். ரத்தம் கொதித்தது பரிமளாவிற்கு. 

அதற்குள் கோதையின் அம்மா மங்களமும் வந்துவிட, “மங்களம்… கேட்டியா. செல்வி இன்னிக்கு நம்ம கூட இல்லாம போனதுக்கு, இந்த செந்தில் பய தான் காரணம். அன்னிக்கே உன்கிட்ட கெஞ்சினேன்…. கோதைகிட்ட கேளுன்னு. கோவில்ல இருந்து திரும்பி வந்த பிறகு, செல்வி எங்கே போனான்னு கோதைக்குத்  தெரிஞ்சிருக்கும். அவகிட்ட கேட்டா, செல்விய சீரழிச்சது யாருன்னு கண்டுபிடிக்க முடியும்னு சொன்னேன், கேக்கலியே மங்களம்…..” 

“ஒரு வாரமா என் கண்ணு…. செல்விக்கு இப்படி ஒரு நெலம யாரால வந்துச்சுன்னு தெரியாம தவிச்சேனே…. அடேய்…. செந்திலு…. எடுபட்ட பயலே…. என் மவள இல்லாம பண்ணிட்டு, நீ ஊருக்குள்ள சந்தோஷமா  சுத்திட்டிருக்கியா…..” 

“மாமா…. ஓடியா. ஏ…. மாரி, கொமரேசு, வடிவு, சரவணா  எல்லாரும் ஓடி வாங்க. என் புள்ளையக் கெடுத்து, கொன்னது இந்த செந்திலு தான். ஏற்கனவே அவன் இப்படிப் பண்ணவன் தானே. அப்பவே தைரியமா போலீஸ்ல சொல்லியிருந்தா, செல்வி இன்னிக்கு உசுரோட இருந்திருக்கும். ஆனா அவங்க அப்பனோட செல்வாக்குக்குப் பயந்து, எல்லாரும் அமைதியா இருந்துட்டோம். அடேய்….  பணங்காசிருந்தா என்ன வேணா செய்வீங்களாடா.  அவன விடாதீங்க,” என்று சொல்லவும், திபுதிபுவென்று அக்கம்பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்து, செந்திலைத் துரத்த ஆரம்பித்தனர். 

மங்களம் தன் வீட்டுக்  கதவைத் திறந்து, வேகமாக உள்ளே வந்து கோதையைத் தன்னோடு அணைத்துக் கொண்டாள். 

“ஏ… புள்ள கோதை,  வீட்டுக்குள்ள சத்தம் காட்டாம இருக்கச் சொன்னா, நீ எதுக்குடி அந்த செந்தில் பய கூட எல்லாம் பேசிட்டிருக்கே. தேவையில்லாத பிரச்சனைல  மாட்டிக்கிட்டயேடி. விவரம் தெரியாத புள்ள. ஒரு வாரமா உன்னக் கட்டிக் காப்பாத்தி, வீட்டுக்குள்ளேயே வச்சிருந்தேன். கொஞ்ச நேரம் வெளில போயிட்டு வரதுக்குள்ள, ஏதேதோ உளறி வச்சுட்டியே.” 

“செந்திலும், அவங்க அப்பாவும் லேசுப்பட்டவங்க கிடையாது. உன்னால தான் விஷயம் ஊர்ல எல்லாருக்கும் தெரிஞ்சதுன்னு செந்திலோட அப்பாவுக்குத் தெரிஞ்சா, உன்னைய சும்மா விட மாட்டாங்களே. அய்யனார் சாமி… அறியா புள்ள கோதை. விளையாட்டுத்தனமா  ஏதோ சொல்லிட்டா. ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு பெத்து வச்சிருக்கேன். அந்தப் புள்ளைக்கு எந்த ஆபத்தும் வராம, நீ தான் காவலா இருந்து காப்பாத்தணும் அய்யனாரே,” என்று கோதையை கட்டிக் கொண்டு, ஆற்ற மாட்டாமல் அழுதாள் மங்களம். 

ஒன்றுமே புரியவில்லை கோதைக்கு.  

“செல்வி அக்கா எங்கேன்னு செந்தில் அண்ணனைக் கேட்டதுல என்ன தப்பு? செந்தில் அண்ணனோட தம்பி குமரன், ட்யூஷனுக்கு வராததால, அவங்க வீட்டுக்குத் தானே செல்வி அக்கா அன்னிக்கு  போச்சு. அதனாலத் தான்  செந்தில் அண்ணனுக்கு விவரம் தெரியுமான்னு கேட்டேன். அதுக்கு ஏன் எல்லாரும் செந்தில் அண்ணனைத் துரத்திட்டுப்  போறாங்கன்னு தெரியல. செல்விக்கா எங்க போச்சுன்னு தெரியல. ஒருவேளை செல்வி அக்காவைக் கூட்டிட்டு வரதுக்குத் தான் எல்லாரும் போயிருக்காங்களோ”  “செல்விக்கா பாவம்.  அய்யனார் சாமி…. அம்மா வேண்டிக்கிட்ட மாதிரியே நானும் வேண்டிக்கறேன். செல்விக்காவை சீக்கிரம் வரச் சொல்லுங்க. எனக்கு அக்காவப் பாக்கணும் போல இருக்கு.” 

வேண்டிக் கொண்ட கோதை, செல்வியின் வரவிற்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள். விவரம் தெரியாத கோதையின்  பாதுகாப்பையும், தன் நிலையையும் நினைத்து,   எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று பதைபதைப்புடன் மங்களத்தின் மனம் துடித்தது.   

 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோhttps://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

மறு வீடு…! (சிறுகதை) – ✍ டெய்சி மாறன், சென்னை

கொசுவா (சிறுகதை) – ✍ உடுமலை கி. ராம்கணேஷ்