in ,

மறு வீடு…! (சிறுகதை) – ✍ டெய்சி மாறன், சென்னை

மறு வீடு...! (சிறுகதை)
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 69)

விடியற்காலை நேரம்…

கதவை யாரோ லொட்..லொட்…என்று தட்டும் சத்தம் கேட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த வேதவள்ளி தூக்கம் கலைந்து எழுந்தமர்ந்தாள்.

மீண்டும் கதவு தட்டும் சத்தம் அருகில் கணவனை காணாததால் கொல்லப் பக்கம் போயிருப்பான் என்று உள்ளுணர்வு உணர்த்த, வேக வேகமாக எழுந்து கலைந்திருந்த கூந்தலையும் நலுங்கியிருந்த உடையையும் சரி செய்த படி கதவை திறந்தாள்.

எதிரில் அள்ளி சொருகிய புடவையும், அவிழ்த்துவிட்ட ஈர கூந்தலுமாய் நின்றிருந்தாள் மாமியார் வடிவு

“என்னடியம்மா இன்னமும் உனக்கு விடியலையா? இம்முட்டு நேரம் தூங்குறே…? என்ன தான் புதுசா கல்யாணமானவளா இருந்தாலும், அதுக்குன்னு ஒரு நேரம் காலம் இல்லையா? போ…போயி வாசலை கூட்டி கோலத்தை போடு” நீட்டி முழங்கியப்படி பேசினாள் வடிவு.

“இதோ ஒரு நிமிஷத்திலே போட்டுடுறேன் அத்தை” தலையை தாழ்த்தியப்படி கூறினாள் வேதா

“ம்ம்…சீக்கிரம் போய் குளிச்சிட்டு கோலத்தை போடுடுட்டு அப்புறமா ரெடியாகு. இன்னக்கி மறுவுக்கு உங்க வீட்டுக்கு போகணுமில்லையா?” வடிவு குரலை உயர்த்தியபடி கூறினாள்.

ஒரு நிமிடம் வேதாவின் முகத்தில் ஒளி கற்றைகள் தோன்றி மறைந்தன. தாய் வீட்டுக்கு போகப் போகிறோம் என்ற நினைப்பே, நடுவானத்தில் பறப்பது போன்று ஒரு உணர்வை உண்டாக்கியது.

அடுத்த நிமிடம் மனதில் நீருற்று எழுந்தது. ஓட்டமும் நடையுமாக சென்று கிணற்றில் ஊறிக் கிடந்த குளிர் நீரை கயற்று வாளியை கொண்டு மொண்டு, தலைக்கு ஊத்திக் கொண்டு வந்தாள்.

கணவன் முதல் முதலாக எடுத்துக் கொடுத்த பூணம் புடவையை எடுத்துக் கட்டிக் கொண்டாள். புடவை ஓரம் அடிக்காததால் நடக்கும் போது கொலுசில் சிக்கியது.

“இந்த புடவை ஏது?”னு வீட்டுக்கு போனவுடனே அம்மா கண்டிப்பா கேக்கும்.

“இது என் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்ததுன்னு சொன்னா அம்மா ரொம்ப பூரித்துப் போகும்..” என்று வேதா தன் மனதுக்குள் நினைத்து சந்தோஷப்பட்டுக் கொண்டாள்.

வேதாவின் நினைப்பெல்லாம் தாய் வீட்டையே சுற்றி சுற்றி வந்தது.

அப்பா இருக்குற வரைக்கும் துணிமணிக்கு எந்த குறையுமில்லை. ஒவ்வொரு தீவாளிக்கும் முதல் நாள் இரவே பிள்ளைகளுக்கு புது துணியும் பட்டாசும் வாங்கிக் கொடுத்து விடுவார்.

சின்னதுங்க ரெண்டு பேரும் புது துணியை வாங்கி பிரோவுல வச்சிட்டு தூங்கி விடுங்கள். ஆனா வேதாவுக்கு மட்டும் தூக்கமே வராது. வீட்டுல இருக்கும் குண்டு பல்பு வெளிச்சத்துல துணியின் நிறம் சரியா தெரியவில்லைன்னு எதிர்வீட்டு சாந்தியக்கா வீட்டுக்கு எடுத்துட்டு ஓடுவாள்.

அவங்க வீட்டு டியூப் லைட் வெளிச்சத்துல புது துணியின் நிறத்தை பார்த்தவுடன் தான் வேதாவுக்கு திருப்தியே ஏற்ப்படும்.

“பெரியபுள்ள… துணி உனக்கு பிடிச்சிருக்கா இல்லையான்னு சொல்லு? இப்பவே போய் மாத்திட்டு வேற எடுத்துட்டு வரேன்” என்பார் வேதாவின் அப்பா.

“ட்ரெஸ் சூப்பரா இருக்குப்பா, இந்த கலர் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா…” என்று வேதா சொன்னப் பிறகு தான் விடுவார்.

ஆனா இப்பல்லாம் வேதா அப்படி இல்லை? அம்மாவோட கஷ்டத்தை புரிஞ்சிகிட்டு குடும்ப சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி அனுசரிச்சு போறாள்.

தங்கச்சிங்களுக்காக தன்னுடைய தேவைகளை ஒதிக்கி வைக்க பழகி விட்டாள். அம்மாவின் பாரத்தை குறைக்க அம்மா தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினாள்.

“வேதா எந்த சூழ்நிலையா இருந்தாலும் கோவிச்சிக்கிட்டு மட்டும் தாய் வீட்டுக்கு வந்துடாதே? எப்ப வந்தாலும் மாப்பிள்ளை கூடத் தான் நம்ப வீட்டுக்கு வரணும் புரியுதா? அடுத்து உன் மாமியாரை தாய் போல பாத்துக்கணும். அவங்க மனசு நோக நடந்தால் நீ மட்டுமல்ல, நாங்களும் நல்லா இருக்க முடியாது புரியுதா?” வேதா புகுந்த வீட்டுக்கு வரும் போது, அம்மா கடைசியா சொன்ன வார்த்தைகள் இது.  

இந்நேரத்துக்கு அம்மா எழுந்து கொல்லப்பக்கம் அடுப்புல சோறாக்கி முடிச்சிருக்கும். பெரியவ வெண்ணிலா தூங்கமூஞ்சி இன்னமும் எழுந்திருச்சிருக்க மாட்டாள். சின்னது வேம்பு எழுந்து கோயில் பைப்புக்கு தண்ணி எடுக்க போயிருக்கும்.

தினம் நாலு கொடம் தண்ணீர் எடுத்துட்டு வர்றது தான் வேம்போட வேலை. நான் இருந்தாலாவது இந்த வேலையெல்லாம் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வேன்.

பாவம் வேம்பு மூனு தெரு நடந்துப் போயி தண்ணி எடுத்துட்டு வரணும், அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கெளம்பனும். இந்த பத்து நாளா ரெண்டு பேரும் எப்படி கஷ்டப்படுதுங்களோ தெரியில?

வாசல் தெளிச்சி கூட்டி முடிக்கும் போது சுரீரென்று உரைச்சது. ‘அட இன்னைக்கு ஞாயிற்றுகிழமையாச்சே, ரெண்டுத்துக்கும் இன்னக்கி லீவுங்குறதே மறந்துப் போச்சே’

அம்மாவுக்கும் இன்னக்கி லீவு தான். அப்பாவுக்கு பிறகு அந்த வேலையை அம்மாவுக்கு கொடுத்திருக்காங்க. பேரு தான் அரசாங்க உத்தியோகம், ஆனா வீட்டுல செய்யிற அதே பெருக்குற தொடைக்கிற வேலை தான் அங்கேயும்

கழிவுநீர் தொட்டியை சுத்தம் பண்ணும் போது விஷவாயு தாக்கி செத்து போயிட்டார் அப்பா. இந்த புரட்டாசி வந்தா அப்பா செத்து வருஷம் ஆறு முடியப் போகுது.

பஞ்சாயத்து ஆபிஸ்ல அம்மாவுக்கு ஒரு வேலை போட்டு கொடுத்திருக்காங்கள். பஸ் ஏறி போகணும்.

பேரு தான் அரசாங்க வேலை, அங்க போய் பார்த்தா தான் தெரியுது. ஆபிஸை பெருக்குறதும் தொடைகிறதும், பைலை எடுத்துட்டுப் போய்  ஒவ்வொருத்தர்கிட்டேயும் கையெழுத்து வாங்கிட்டு, அங்க இருக்குற எல்லாருக்கும் டீ வாங்கிட்டு வந்து கொடுக்குறதுமா, அம்மாவுக்கு கொஞ்ச நேரங்கூட ஓய்வே  இருக்காது.

இந்த லட்சணத்துல, ஒரு பக்கம் அப்பா வாங்கின கடனை அடைச்சிக்கிட்டு, மறுபக்கம் யார் யார்கிட்டயோ கடனை வாங்கி எனக்கும் கல்யாணத்தை பண்ணிடிச்சி அம்மா.

அதுமட்டுமில்ல எனக்கு கீழ வயசுக்கு வந்த ரெண்டு பெண் பிள்ளைங்க இருக்குங்க, அதுங்கள படிக்கவச்சி கரை சேர்க்கணும்.

“உன் பெரிய மக வேதவள்ளி பத்து படிச்சிருக்கில்ல, அதை வேலைக்கு அனுப்பிட்டு நீ வீட்டுல இருக்க வேண்டியது தானே?” என்று ஆபீசர் கேட்ட போது

“என் கஷ்டம் என்னோட போகட்டும் சார், அதுங்க இங்க வந்து கஷ்டப்பட வேணா”ன்னு  அம்மா சொல்லிச்சாம்

பாவம் அம்மா தனக்குன்னு ஒரு நல்ல புடவ கூட எடுத்துகிட்டது இல்லை. புள்ளைங்க புள்ளைங்கன்னு புள்ளைங்களுக்காகவே வாழ்ந்திட்டு இருக்கு.

“என்ன தான் தாலி கட்டிகிட்டு புகுந்த வீட்டுக்கு வந்தாலும், என் நெனப்பெல்லாம் தாய் வீட்டுல தான் இருக்கு”

“ஆரம்பத்துல அப்படிதான்டீ இருக்கும்… கொஞ்ச நாள் போனா எல்லாம் சரியாயிடும்..” எதிர்வீட்டு சாந்தி அக்கா சொல்லிச்சி

ஆனா என்னால அப்படி நிம்மதியா இருக்க முடியிலே? புதுத்துணிமணி போடும் போதும், கறிசோறு சாப்பிடும் போதும், தங்கச்சிங்களோட நெனப்பு வந்துடுது. அதுங்க நெனப்பு வரும் போதெல்லாம் சோறு தொண்டையிலே சிக்கிக்குது.

அவங்க அங்க தண்ணி சோறு சாப்பிடும் போது, என்னால மட்டும் விதவிதமா கறிசோறு சாப்பிட முடியுமா? பெரியதாய் வறுமை இல்லை என்றாலும், வகைவகையாய் சாப்பிட வக்கத்து கெடக்குதுங்கள்.

கண்டிப்பா இன்னக்கி ஆட்டுகறி கொழம்பா தான் இருக்கும். வேதா மருவுக்கு(மறுவீடு) வரும் போது தான், மேஸ்திரி சம்சாரத்த கூப்பிட்டு டவுன் மாடல்ல நல்லா ருசியா ஆட்டுக்கறி கொழம்பு வைக்க சொல்லன்னுன்னு அம்மா அன்று சொன்னது நினைவுக்கு வர, வேதாவுக்கு நாவுல நீர் சுரந்தது.

“வேதவள்ளி கோலம் போட்டு முடிச்சிட்டியா? அப்படியே கொல்லப்புறமாக போயி  ரெண்டு கொத்து கருவேப்பிலை பறிச்சிட்டு வா…” மாமியாரின் குரல் தெருகோடி வரைக் கேட்க

வாசலில் புள்ளி வைத்தாளே தவிர கோலம் போட்டு முடிக்கவில்லை என்பதை, அப்போது தான் உணர்ந்தாள் 

‘அச்சச்சோ’ என பதறியபடி, சிக்கு கோலத்துக்கு வச்ச புள்ளியில பூ கோலத்தை போட்டு முடிச்சிட்டு கருவேப்பிலை பறிக்க ஓடினாள்.

“ஏய்… பார்த்து பார்த்து, ஏன் இந்த ஓட்டம் ஓடுறே…?”எதிப்பட்ட கணவன் கண்ணனுக்கு பதில் கூட சொல்ல தோன்றாமல், வெட்கத்துடன் கொல்லப்புரத்தை நோக்கி ஓடினாள்.

“வந்த இத்தனை நாளுல இவ்வளவு சுறுசுறுப்பா இவளை நீ பார்த்திருக்கியா கண்ணா?  தலைகால் புரியாம ஓடுறா பாரு, எல்லாம் தாய் வீட்டுக்கு போகப் போகிற குஷி தான். இதெல்லாம் முலையிலேயே கிள்ளி வைக்கணும். இல்லே நம்ம தலையில ஏறி மொளகா அறைச்சிடுவாளுங்க? நீ ஜாக்கிரத்தையா இருந்துக்கோ புரியுதா…?” வடிவு தடித்த தன் குரலை மேலும் கடுமையாக்கி மகனிடம் எச்சரித்தாள்.

“அம்மா.. காலங்காத்தால ஏன் கூச்சல் போடுறீங்க? அவ தான் சின்னப்புள்ள, ஏதோ தாய் வீட்டுக்கு போகப் போற சந்தோஷத்துல ஓடுறான்னா, நீங்க அத ஒரு தவறா நினைத்து பேசுறீங்களே? ”

“க்கும்… நான் வாயை திறந்தா உனக்கு பிடிக்காதே? ம்ம்… இப்ப உனக்கு புரியாது. என்னைக்காவது ஒரு நாள் நான் சொல்றது உனக்கு புரியும்” முகத்தை வலதுபக்க தோள்பட்டையில் இடித்தப்படி, சமையல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள் வடிவு.

ஒரு பெருமூச்சோடு அங்கிருந்து நகர்ந்தான் கண்ணன்

வடிவுக்கு கண்ணன் ஒரே பிள்ளை. கண்ணனுக்கு மூணு வயசு இருக்கும் போதே. வடிவோட புருஷன் அவகூட சண்டை போட்டு ஓடிப் போனவர் தான், வருஷம் இருபத்தி ஐந்து ஆவுது

மனுஷன் இருக்காரா செத்தாரான்னு எந்த விவரமும் தெரியவில்லை. வடிவு நாலு வீட்டு பத்து பாத்திரம் தேய்ச்சி, மகனை பனிரெண்டாவது வரைக்கும் படிக்க வச்சி, சொந்தமா காய்கறி கடையும் வச்சிக் கொடுத்திருக்காள்

வடிவு குணத்துல நல்லவள் தான், ஆனா பையன் எங்கே பொண்டாட்டி பேச்சை கேட்டுட்டு தன்னை அம்போன்னு விட்டுட்டு போயிடுவானோ என்ற பயத்தில், மாமியார் கெத்தை காட்டுறாள், அவ்வளவு தான்.

ற்று நேரத்தில் கணவனோடு தாய் வீட்டுக்கு கிளம்பினாள் வேதா.

போகுற வழியில் ஒரு பழக்கடை அருகே வண்டியை நிறுத்திய கண்ணன், சக்கர பூந்தியும் ஆரஞ்சி பழமும் வாங்கினான். எதிரில் இருந்த துணிக்கடையை ஏறிட்டவளுக்கு, பொம்மைக்கு போட்டிருந்த நீள கவுன் கண்ணில் பட்டது.

இந்த ட்ரெஸ்சை வெண்ணிலாவுக்கு போட்டா அவ நிறத்துக்கு எடுப்பா இருக்கும். அதோ அங்க தொங்குதே அந்த மிடி டாப் வேம்புவுக்கு பொருத்தமா இருக்கும்

“ம்ம்…” என பெருமூச்சோடு பார்வையை திருப்பிக் கொண்டாள். பழக்கடையில் ஸ்டாபெரி பழத்தை பார்த்ததும், தங்கச்சி வேம்பு ஞாபகம் வந்துடிச்சி.

“அக்கா ஸ்டாபெரீ பழம் வேணுன்னு அம்மாகிட்ட கேட்டா, அதெல்லாம் பணக்காரங்க சாப்பிடுறது, அந்த காசுக்கு மூணு கிலோ அரிசி வாங்கலான்னு சொல்லுது. நீ கடைக்கு போனீன்னா எனக்கு வாங்கிட்டு வந்து தரியா?”

“வேதா வேற ஏதாவது வேணுமா…?” பழக் கவரோடு வந்த கண்ணன் கேட்டான். தொண்டை வரை வந்த வார்த்தையை மென்று விழுங்கினாள்.

“உன் புருஷன் செலவாளி. பார்க்குற பொருளை எல்லாம் வாங்கணுன்னு நினைப்பான், நீதான் அவனை கண்ரோல் பண்ணி கூட்டிட்டு வரணும்” கிளம்பும் போது மாமியார் சொன்ன வார்த்தை நெற்றிக்கோடாய் நினைவில் மின்னியது.

“வேணாங்க… இதுவே போதும் போகலாம்…” புது மனைவி கேட்டால், நீள கவுனும் ஸ்டாபெரியும் வாங்கித் தரத்தான் செய்வான். ஆனா இவளுக்குத் தான் கேட்க தயக்கமா இருந்திச்சி

தாய் வீட்டுக்குன்னு ஒரு கவுரவம் இருக்கு இல்லையா?. சரி நம்மகிட்ட பணம் இருக்கும் போது பார்த்துக்கலாம் என்று விட்டு விட்டாள்.

தெருவுக்குள் நுழையும் போதே எதிர்வீட்டில் பந்தல் போட்டிருந்தது கண்ணில் பட்டது. நமக்கு தெரியாம சாந்தியக்கா வீட்டுல என்ன விசேஷம்?

‘டிவிஎஸ் பிப்டி’யை ஓரமாக நிறுத்தி விட்டு இருவரும் வீட்டிற்குள் நுழைந்தார்கள்.

“அம்மா… அக்கா வந்திடிச்சிம்மா…” பெரியவ வெங்காயம் உரிப்பதை விட்டுவிட்டு கத்தி கொண்டே உள்ளே ஓடினாள் சின்னவள்

“வாம்மா…வாங்க தம்பி…” என்று அம்மா புடவை தலைப்பை போர்த்தியப்படி மருமகனை வீட்டிற்குள் அழைத்தாள்

“நல்லா இருக்கீங்களா அத்த…?” கண்ணன் மாமியாரிடம் நலம் விசாரித்தான்.

“நல்லா இருக்கோம் தம்பி…அம்மா நல்லா இருக்காங்களா? வெண்ணிலா அந்த சேரை எடுத்துட்டு வந்து இப்படி போடு, மாமா உக்காருமில்லே…” என்றவள், உள்ளே சென்று குடிப்பதற்கு மோர் எடுத்துட்டு வந்து இருவருக்கும் கொடுத்தாள்.

“இருக்கட்டும் அத்த… நான் பாயில உட்காந்துக்குறேன்”

“ஐயோ பாயில… கொஞ்சம் இருங்க தம்பி, பீரோ மேல ஜமுக்காளம் இருக்கு, எடுத்துட்டு வரேன்…” என்று உள்ளே ஓடினாள்.

“சரி அத்தை…”சிரித்துக் கொண்டே சொன்னான். 

அங்கிருந்த அந்த பழைய டிவியை ஆன் பண்ணி, ஒவ்வொரு சேனலாய் மாத்திக் கொண்டிருந்தான் கண்ணன். அதற்குள் ஜமுக்காளத்தை எடுத்து வந்து விரித்து அதில் மருமகனை அமர சொன்னாள். அந்த கேப்பில் சமையல் அறைக்குள் நுழைந்தாள் வேதா

அஞ்சறைப்பெட்டி காலியாக இருந்ததைக் கண்டு, “அம்மா இந்த மாசம் மளிகை சாமான் வாங்கலையா?” என வேதா தாயிடம் கேட்டாள்.

“இல்ல வேதா…உன் கல்யாணத்து வாங்கின பொருட்களே கொஞ்சம் மிஞ்சி கிடக்கு, அதான் வாங்கல…” தடுமாற்றத்துடன் பதில் சொன்னாள் வேதாவின் அம்மா.

“இல்லக்கா அம்மா பொய் சொல்லுது… கடைக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை கொடுத்துட்டு அப்புறமா சாமான் வாங்கிக்கங்கன்னு அண்ணாச்சி கட்டன் ரைட்டா   சொல்லிட்டார். அதனால இருக்குறதை வச்சி இந்த மாசத்தை ஒட்டிடலான்னு ஒன்னும் வாங்கல…”

வேம்பு சொன்னப் போது,“ஏய் ஓட்ட வாயி,  கொஞ்சம் அமைதியா இரு…” தங்கையை அடக்கினாள் வெண்ணிலா

கலங்கிய கண்ணீரை மறைத்தப்படி ஜன்னல் பக்கம் திரும்பிய வேதாவுக்கு, மீண்டும்  அந்த பந்தல் கண்ணில் பட்டது.      

“அம்மா சாந்தி அக்கா வீட்டுல பந்தல் போட்டிருக்கே, என்ன விசேஷம்?”

“சாந்தி பொண்ணு தேவி பெரியவளாயிட்டா. வர்ற புதன்கிழமை விசேஷம் வச்சிருக்காங்க, உனக்கு கூட போன் பண்ணி சொல்லனுன்னு சொன்னாங்க?”

“என்னம்மா சொல்ற தேவியா பெரியவளாயிட்டா?” வேதா அதிர்ச்சியோடு கேட்டாள்.

“நல்ல விஷயம் தானே வேதா. தேவி ஆறாவது தான் படிக்கிறா, இன்னும் ரெண்டு வருஷம் ஆகுன்னு தான் நெனைச்சோம். இவ்வளவு சீக்கிரம் வருவான்னு யாரும் நெனச்சி பார்க்கல தான். நம்ம கையில என்ன இருக்கு, அதது நடக்க வேண்டிய நேரத்துல தானே நடக்கும்…”

“அம்மா நீ தெரிஞ்சி தான் பேசுறீயா? கல்யாணத்துக்கும் ரெண்டு நாளைக்கு முன்னாடி அவருக்கு செயின் வாங்க காசு இல்லாம கையை பெசஞ்சிகிட்டு நின்னோமே, அப்போ சாந்தி அக்கா தேவியோட செயினை தானே கழற்றி கொடுத்திச்சி? அவ வயசுக்கு வரும் போது திருப்பி கொடுத்தா போதுன்னு தானே சொன்னுச்சி. இப்ப தேவியோட விசேஷத்துக்கு கொடுக்கனுமில்லையா? என்ன பண்றதும்மா? பேசாம அவருகிட்ட இருக்குற செயினை கேட்டு வாங்கி தரேன்ம்மா, சாந்தி அக்காகிட்ட கொடுத்துடும்மா”

“உஸ்…மெதுவா பேசு வேதா. உன் வீட்டுகாரர் காதுல கீதுல விழப்போவுது? போட்ட நகையை கழற்றி கொடுங்கன்னு கேட்டா நல்லாவா இருக்கும்? வக்கத்த குடும்பன்னு நம்மள தப்பா நினைக்க மாட்டார்? இந்த விஷயத்தை நான் பார்த்துக்குறேன். நான் வேலப்பாக்குற எடத்துல அஞ்சு வட்டிக்கு ஒருத்தருகிட்ட கேட்டிருக்கேன், அம்பதாயிரம் பணம் வாங்கி சாந்திக்கிட்ட கொடுத்துட்டா, அவ ஜெயின் வாங்கிப்பா…” சமாதானப்படுத்தினாள் அம்மா

“அம்மா என்னம்மா இது, இன்னும் எவ்வளவு தான் கடன் வாங்குவே? திருப்பி கொடுக்க வேணாமா…” கண் கலங்கியபடி கேட்டாள் வேதா.

“வேதாவல்லி… நான் உயிரோட இருக்குற வரைக்கும் நீ கண் கலங்க கூடாது. போ மாப்பிள்ளை தனியா இருக்கார், போய் பேசிகிட்டு இரு…” என்று மகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டு, கலங்கிய கண்ணீரை முந்தாணையில் துடைத்துக் கொண்டாள்.  

மதியம் வடை, பாயசம், கறிக்குழம்போடு வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட்டு, குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டார்கள். அம்மா படும் கஷ்டத்தை நினைச்சி, இந்த முறையும் வேதவள்ளிக்கு சாப்பாடு இறங்க மறுத்தது.

அது மட்டுமல்லாமல், செயினை பற்றின நினைப்பு,  பாம்பாய் நெளிந்துக் கொண்டிருந்தது.

மாலை புகுந்த வீட்டிற்கு கிளம்பும் போது, “சாந்தி வீட்டுக்கு ஒரு எட்டு போய் பார்த்துட்டு போ” என்றாள் அம்மா.

அருகில் நின்றிருந்த கண்ணன், “வேதா இந்தா, அப்படியே இந்த செயின சாந்தி அக்காகிட்ட கொடுத்துட்டு வா…” என்று தன்னுடைய கழுத்தில் இருந்த செயினை கழற்றிக் கொடுத்தான் கண்ணன்

அதிர்ச்சியோடு தாயும் மகளும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்ள, “என்ன அப்படி பார்க்குறீங்க? நீங்க ரெண்டு பேரும் பேசியது அரைகுறையா காதுல விழுந்தது. ஆம்பளை துணையில்லாம ஒரு பொம்பள குடும்பம் ஓட்டுறது அவ்வளவு லேசுபட்ட காரியமில்லை. அதுவும் தனி மனுஷியா நின்னு கல்யாணத்தை நடத்துறதென்பது சாதாரண விஷயமில்லை.

எங்க அம்மா பட்ட கஷ்டத்தை கண்ணால பார்த்தவனாச்சே, எனக்கு நல்லாவே தெரியும். இப்போதைக்கு அத்தையோட கடன நம்மால அடைக்க முடியாட்டியும், அவங்க மேலும் மேலும் கடனை வாங்கி பெரிய கடன்காரங்களா ஆகக் கூடாது. அதுக்கு நாமளும் ஒரு காரணமா இருக்க கூடாது இல்லையா?” என்ற கணவனை, கண் நிறைய காதலோடு பார்த்தாள் வேதவல்லி

“தம்பி…அது வந்து…” என தயங்கினாள் வேதாவின் அன்னை

“அத்த… தம்பினு வாய் நிறையா சொல்லுறீங்க, உங்க தம்பி சொன்னா கேட்கணும், கேப்பீங்க தானே?” என்றவன்

மனைவியின் புறம் திரும்பி, “வேதா இந்தா செயினைப் பிடி…” என அவளின் கையில் திணித்தான்

வேதவள்ளியின் கண்களுக்கு அவள் கணவன் தெய்வமாக தெரிந்தான்.

 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

(முற்றும்)

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ சிறுகதைப் போட்டியில் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இணைப்பு இதோ – https://sahanamag.com/short-story-contest-2021-entries/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

  1. நல்ல குடும்பப் பாங்கான கதை. பெண் வீட்டாரின் கஷ்டத்தையும் நட்டத்தையும் உணர்ந்தவன் தான் மாப்பிள்ளை . பாராட்டுகள்.

தேன்மொழி (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

செல்வி அக்கா எப்போ வரும்? (சிறுகதை) – ✍ ஸ்ரீவித்யா பசுபதி