in

தேன்மொழி (சிறுகதை) – ✍ பானுமதி பார்த்தசாரதி

தேன்மொழி (சிறுகதை)

#ads – Deals in Amazon👇மாத போட்டிக்கான பதிவு (நவம்பர் 2021)

மெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை செல்லும் விமானத்தில் ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து தன் அலுவலக வேலைகளை செய்து கொண்டு வந்தான் ஜவஹர்

சிறிது நேரத்தில் போர் அடித்து விடவே, எதிரே உள்ள டி.வி’யை ஆன் செய்தான். தமிழ் படமாகப் பார்க்க ஆசைப்பட்டு ‘மொழி’ என்ற சினிமாவைப் பார்த்துக் கொண்டு வந்தான். அந்த படத்தில் வந்த அர்ச்சனா என்ற கதாபாத்திரம், அவன் மனதை மிகவும் கவர்ந்தது

உடம்பில் ஊனம் உள்ள ஒரு பெண், அந்த குறைகளை ஈடுகட்டுவது போல், மனதில் அத்தனை உறுதியாக இருந்தாள். நிஜ வாழ்க்கையில் அப்படி இருக்க முடியுமா என்று சந்தேகம் வந்தது. கதை எழுதியவருக்கும், படத்தை எடுத்தவருக்கும் நன்றி சொல்லியது மனம்

அவன் நினைவுகள் உடனே தேன்மொழியிடம் சென்றது. அவளும் சினிமாவில் வரும் அர்ச்சனாவைப் போலத் தான். காது கேட்காது  வாய் பேசாது, ஆனால் நல்ல அழகு

அவர்களுக்கான தனிப் பள்ளியில் ஏதோ படித்துக் கொண்டிருந்தாள். ஜவஹரின் மாமா பெண், இவனை விட இரண்டு வயது இளையவள்

அவன் மாமா ரகுவிற்கு எப்படியாவது தேன்மொழியை ஜவஹரின் பெரிய அண்ணா மோகனிற்கு திருமணம் செய்து வைத்துவிட விரும்பினார். ஆனால் அதற்குக் காரணமே ஜவஹரின் தந்தை பாலு தான்

ஒருநாள், மாமா அவர்கள் வீட்டிற்கு வந்திருந்த போது, “ரகு, மோகன் பி.ஈ. முடித்து விட்டான், மேல் படிப்பிற்கு அமெரிக்கா போக வேண்டும் என்று விரும்புகிறான். ஆனால் அதற்கு நிறைய பணம் செலவாகும் என்று நினைக்கிறேன், என்ன செய்வது என்று தான் புரியவில்லை”

“என்னிடம் ஏன் தயங்குகிறீர்கள் மாப்பிள்ளை? மோகன் அமெரிக்கா போய் படித்தால் நமக்குத் தானே பெருமை. என்னால் முடிந்த அளவு நான் தருகிறேன், மேற் கொண்டு ஆக வேண்டியதை கவனியுங்கள்”

“மாமா நிஜமாகவா சொல்கிறீர்கள்?” என்றான் மோகன் வியப்புடன்.

“உண்மையாகத் தான் சொல்கிறேன்” என்றார் மாமா சிரித்துக் கொண்டே

“நீ செய்யும் இந்த உதவிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்? உன் மகள் தேன் மொழியை என் மருமகளாக்கிக் கொள்ள முடியும். காலத்தினால் செய்த உதவி இது” என்றார். மோகனும் அதை ஆமோதித்தான்

ஆனால் மோகன் படிப்பை முடித்து விட்டு வரும்போது தனியாக வரவில்லை, நீரஜா என்ற பெண்ணின் கணவனாக அவளையும் அழைத்து வந்தான்.

மாமாவிற்கு அது பெரிய ஏமாற்றமே, ஆனால் தன் வருத்தத்தை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. அம்மா மட்டும் தன் ஏமாற்றத்தை அடிக்கடி ஏதாவது ஒரு வகையில் வெளிக்காட்டுவாள் .

“தேன்மொழி ரொம்ப  ஏமாந்து விட்டாளா அண்ணா?” என்று கேட்டாள் அம்மா, ரகுமாமாவிடம்

“அவள் திருமணத்திற்கே இப்போது தயாராக இல்லை போல்  இருக்கிறது. திருமணத்தில் பண்டமாற்று முறை வேண்டாம் அப்பா. நான் பணம் கொடுக்கிறேன், நீ பிள்ளையைக் கொடு என்றால் அசிங்கமாக இருக்கிறது அப்பா என்றாள். அதுவுமல்லாமல் அவளுக்கு நீரஜாவை மிகவும் பிடிக்கும் என்கிறாள்” என்றார் மாமா

அம்மாவும் அப்பாவும், இரண்டாவது அண்ணா சதீஷைத் ‘தேன்மொழியைத் திருமணம் செய்து கொள்வானா?’ என்று கேட்கலாமா என்று நினைத்து, உடனே அந்த எண்ணத்தைக் கை விட்டனர் . ஏனென்றால் அவன் பேச்சே முரட்டுத்தனமாக இருக்கும்

வாயைத் திறந்தால் “ஊமைக் கோட்டான்” என்பான். சின்ன வயதில், “யாரடி  மொழியே இல்லாத உனக்குத் தேன்மொழி என்று பேர் வைத்தது” என்று அவள் தலையில் குட்டுவான்

‘இப்படி ஏதாவது கேட்கப் போகிறார்களோ?’என்று, தன்னுடன் கல்லூரியில்  பணிபுரியும் ரோகிணி என்னும் பெண்ணை, எல்லோரையும் சம்மதிக்க வைத்து திருமணம் செய்து கொண்டான் சதீஷ்

நீரஜா மிகவும் நல்ல அண்ணி, ஆனால் ரோகிணி அப்படியல்ல. தேன் மொழியை ஏளனம் செய்வாள். தேன்மொழியின் பால் போன்ற வெண்மை நிறமும், கடல் அலை போல் சுருண்ட முடியும், பெரிய கண்களும், லிப்ஸ்டிக் இல்லாமலே சிவந்த சிறிய உதடுகளும், அவளுடைய உயரமும் ரோகிணிக்கு மேலும் எரிச்சலைக் கொடுத்தது

அதிகமாக கேலி செய்யத் தொடங்கினாள். அதனால் தேன்மொழி இவர்கள் வீட்டிற்கு முன்பு போல் அடிக்கடி வருவதில்லை. அவளைப் பார்த்தே கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியிருக்கும்

இப்போதெல்லாம் ரோகிணி அண்ணி, அவள் தங்கை மதுபாலாவின் படத்தை அடிக்கடி பேஸ்புக்கில் அனுப்புகிறாள். ஐ.டி.யில் வேலை செய்கிறாள் என்றும், அவளை ஜவஹர் மணந்து கொண்டால் குடும்பம் ஒற்றுமையாக இருக்கும் என்றும் குறிப்பிடுவாள்

ரோகிணியின் மேல் ஜவஹருக்கு அவ்வளவு நல்ல அபிப்பிராயம் கிடையாது. ஆதலால் அவன்  மனதில் அந்த எண்ணம் இல்லை

அமெரிக்காவில் பணி  புரியும் ஜவஹர், இப்போது ஒரு மாத விடுமுறையில் சென்னை திரும்புகின்றான். வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் தன்னிடம் எப்படி நடப்பார்களோ என்று பலவும் நினைத்தவாறே தூங்கி விட்டான்.

சென்னை விமான நிலையத்தில் ஜவஹரை வரவேற்க, அவன் அம்மா அப்பா, மாமா, இரண்டு அண்ணன்கள், அண்ணிகள் அவர்களுடன் மதுபாலாவும் வந்திருந்தாள்

ஜிலுஜிலு’வென்று  கண்ணாடி போல் உடம்பு தெரிய ஒரு புடவை, முதுகில் துணியே  இல்லாமல் ஒரு ஜாக்கெட். பார்க்கவே அவனுக்கு கண் கூசியது.

வாய் நிறைய லிப்ஸ்டிக் என அவள் செய்திருந்த அலங்காரம், அவள் மதிப்பைக்  குறைக்கத் தான் செய்தது. வலியப் பேச வந்தவளைத் தடுத்து விட்டு, தன் அம்மாவுடன் போய் சேர்ந்து கொண்டான் ஜவஹர்

தேன்மொழியையும் அவள் அம்மாவையும் தவிர யாவரும் வந்திருந்தனர் .

“ஏன் மாமா தேன்மொழி வரவில்லையா ?” என்று கேட்டான் ஜவஹர்.

“தேன்மொழியை அவள் படித்த கல்லூரியில் கணினித்துறையில் அதிக மதிப்பெண்கள் பெற்றதற்காகவும், காம்பஸ் இன்டர்வியூவில் எச்.எஸ்.பி.ஸி.யில் ப்ரோகிராமராகத்  தேர்வு பெற்றதற்காகவும் பிரான்ஸில் அவர்கள் கல்லூரியின் தலைமை அலுவலகத்தில் ஒரு விழா வைத்து பரிசளித்திருக்கிறார்கள். அதை முடித்துக் கொண்டு நாளை மாலை சென்னை வருகிறாள்” என்றார் மாமா

ஜவஹர் ஆச்சர்யத்துடன், “அடேயப்பா… தேன் மொழி இவ்வளவு பெரிய ஆளா?” என்று வியந்தான்

ரண்டு நாட்கள் கழித்து, நீரஜா  ஜவஹரிடம் வந்து, “ஜவஹர், நான் தேன்மொழியைப் பார்க்கப்  போகிறேன், நீங்களும் வருகிறீர்களா?” என்றாள்

“வருகிறேன் அண்ணி, நானும் அவளைப் பார்த்து நிறைய வருடங்கள் ஆகின்றன” என்று அவளுடன் கிளம்பினான் ஜவஹர்

அவனைக் கண்டதும், “ஜவஹர் மாமா, வாருங்கள்” என்றாள் தேன்மொழி, அவள் மொழியில்

அவளைப் பார்த்து மயங்கி நின்றான் ஜவஹர். இளமை அவளுக்கு வஞ்சனையில்லாமல் முழு அழகையும் வாரி வழங்கியிருந்தது. அவள் பிரான்ஸில் பரிசாகப் பெற்ற கோப்பையையும், ஷீல்டையும் இவர்களுக்குக் காட்டினாள்

அதை எடுத்துக் கொண்டு, தான் படித்த அடையாரில் உள்ள செயின்ட் லூயிஸ் கல்லூரிக்குப் போவதாகவும், அவர்களும் வர வேண்டும் என்று கூறினாள். ஜவஹரும் நீரஜாவும் அவளுடன்  சென்றனர்

கல்லூரியில் எல்லோரும் அவளை வரவேற்றனர், அவர்கள் மொழியில்  வாழ்த்தினார்கள் போலும். அங்கு பாடம் சொல்லும் ஆசிரியர்களும், பிரின்ஸ்பலும் கூட இருந்தனர்

ஒரு பாதர்  கூட சிரித்த வண்ணம் நின்று கொண்டிருந்தார். ஜவஹரும், நீரஜாவும் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்

பாதர் அருகில் வந்து, “என்ன நினைக்திறீர்கள்?” என்றார்

ஜவஹர் சிரித்துக் கொண்டு, “வெளிஉலகிற்கு அவர்கள் ஊமைகள். இங்கே நாங்கள் தான் ஊமைகள். எப்படி சிரித்துக் கொண்டு  அவர்கள் மொழியில் பேசுகிறார்கள், நம் மூளைக்கு ஒன்றும் புரியவில்லை. நாம் அவர்களைப் பார்த்து பரிதாபப்படுகிறோம், வாட் எ பிட்டி” என்றான்

மாமா வீட்டுக்கு  போய் வந்ததிலிருந்து ஜவஹரில் ஏதோ ஒரு மாற்றத்தை கண்டாள் நீரஜா. வெளியில் ஒன்றும் சொல்லவில்லை

தேன்மொழி எச்.எஸ்.பி.சி. வங்கியில் கணினிப் பொறியாளராகப் பணியில் சேர்ந்து விட்டாள்

ஒருநாள் மாமா, தேன்மொழியைப் பெண் பார்க்க யாரோ வருவதாகவும், கட்டாயம் அந்த நேரத்தில் தன் சகோதரியின் ஒட்டு மொத்தக் குடும்பமும் வந்திருக்க வேண்டும் என்று நேரில் வந்து அழைத்தார்

நிச்சயம் இந்த இடம் தகைந்து விடும் என்றும் மிகுந்த சந்தோஷத்துடன் கூறினார். ஆனால் நீரஜாவிற்கு மட்டும் ‘எல்லோர் முகத்திலும் தெரிந்த அந்த சந்தோஷம், ஜவஹர்  முகத்தில் இல்லையோ?’ என்று நினைத்தாள்.

பெண் பார்க்கும் படலம் முடிந்து, பிள்ளை வீட்டார் பேச்சு லௌகீக  விஷயத்தில், அதாவது வியாபாரத்தில் வந்து நின்றது

செவிட்டு ஊமைப் பெண்ணைத் திருமணம் செய்யும் தியாகத்திற்கு ஈடாக, ரகுவின் மொத்த சொத்துக்களையும் திருமணத்திற்கு முன்பே பெண்ணின் பெயரில் எழுதி பத்திரப்பதிவு செய்தால், உடனே நிச்சயதார்த்தம் செய்து திருமணமும் முடிக்கலாம் என்றனர் மாப்பிள்ளை வீட்டார்

ஜவஹரின் தந்தை பாலு உடனே “மொத்த சொத்துக்களுக்கும் தேன்மொழி தான் ஒரே வாரிசு. எதற்காக இப்போது பத்திரம், பதிவு எல்லாம்?” என்றார்

“ஊமைப் பெண்ணைக் கட்ட வேண்டும் என்றால் அதுதான் கண்டிஷன்” என்று எகிறினார் பிள்ளையின் தந்தை

மூன்றாவது ஆள் மாதிரி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் மணமகன்

“ஊமைப் பெண் என்று ஒவ்வொரு முறையும் வாய் கூசாமல் சொல் கிறீர்களே, உங்கள் பிள்ளையை விட எந்த விதத்தில் குறைந்திருக்கிறாள் எங்கள் பெண்? சொல்லுங்கள்” என்றான் ஜவஹர்

“அது யாரப்பா கூப்பிடாமலே வக்காலத்து வாங்குவது?”

“நியாயம் பேசுவதற்கு யாராக இருந்தால் என்ன?” என்றான் ஜவஹர்.

“இவ்வளவு பேசுகிறாயே, இந்த ஊமைப் பெணணை நீ கல்யாணம் செய்து கொள்வது தானே” என்றான் மாப்பிள்ளை என்று வந்திருப்பவன்

ஜவஹர் எழுந்து தேன்மொழி அருகில் சென்று, “தேன்மொழி, நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன், உனக்கு சம்மதமா?” என்று கேட்டான்

அவளோ, கண்களில் நீர் வழிய இல்லையென்று தலையாட்டினாள் .

ஜவஹர் திகைத்து, “ஏன்?” என்றான்

“அவர்கள் பேசுவது வியாபாரக் கல்யாணம், நீங்கள் சொல்வது பரிதாபக் கல்யாணம். நான் செவிட்டூமை எனற பரிதாபம், ஏற்கெனவே உங்கள் அண்ணாவோடு நடக்க வேண்டிய திருமணம் நடக்கவில்லையே என்ற பரிதாபம். எனக்கு திருமணத்தில் வியாபாரமும் வேண்டாம் பரிதாபமும் வேண்டாம், மொத்தத்தில் திருமணமே வேண்டாம்” என்றாள் அவள் மொழியில், கண்களில் கண்ணீர் வழிந்தோட

“அசடு, உன் மொழியில் நீ பேசுகிறாய், அது எனக்குப் புரியவில்லை. நான் செவிடா? ஒரு மராத்திக்காரனோ இந்திக்காரனோ பேசினால் நம்மால் புரிந்து கொள்ள முடியுமா? அவர்களுக்கு நாம் செவிடா? அதுவுமன்றி வெகு நாட்கள் கழித்து நான் உன்னைப் பார்க்கும் போது உன் அழகும் அறிவும் என்னை பிரமிக்க வைத்தது, இது தான் உண்மை. இப்போது சொல், உனக்கு சம்மதமா?”

தேன்மொழி சிரிப்பால் தன் சம்மதம் தெரிவித்தாள். மாலையில் தோட்டத்தில் குபீரென்று நித்தியமல்லி மலருமே, அதைப் போல் இருந்தது அவள் சிரிப்பு. மயங்கி நின்றான் ஜவஹர்

நீரஜா உடனே, “மாமா… ஜவஹர் இருக்கும் நிலையே சரியில்லை. அதனால் நிச்சயம் திருமணம் இரண்டையும் ஒன்றாக முடித்து விடுங்கள்” என்று கேலியாய் கூறியவள், ஜவஹரிடம், “என் குற்ற உணர்ச்சியைப் போக்கினீர்கள்” என்றாள்

ஜவஹரின் பெற்றோரோ, “எங்கள் நன்றி கடனையும் தீர்த்து விட்டாய்” என்றனர் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு

திருமணம் முடிந்து எமிரேட்ஸ் விமானத்தில் தன் மனைவி தேன் மொழியுடன் பயணம் செய்து கொண்டிருந்தான் ஜவஹர்

அப்போது கையில் ஜூஸுடன் வந்த விமானப் பணிப்பெண், “யார் இந்த தேவதை?” எனக் கேட்டாள்

“வானத்திலிருந்து சிறகு விரித்துப் பறந்து வந்த தேவதை” என்ற ஜவஹர்,  தேன்மொழியை உறுத்துப் பார்த்தான். அவளின் சிவந்த முகம் மேலும் சிவந்தது

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

(முற்றும்)

 

#ads – Deals in Amazon👇

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    காவேரியின் கைபேசி (சிறுகதை) – ✍ வைகை,  சிங்கப்பூர்

    மறு வீடு…! (சிறுகதை) – ✍ டெய்சி மாறன், சென்னை