in

சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 3) – By Fidal Castro – December 2020 Contest Entry

சங்கமித்ரா (பகுதி 3)

அத்தியாயம் 6 – நினைத்தேன் வந்தாய்

“படகை திருப்பலாம்னு பாத்தா காத்து சதி செய்யுதே விஜயா” என விஜயனிடம் புலம்பினான் கிட்டு 

 “கிட்டு அங்க பாரேன், செவப்பா என்னமோ வருது” என விஜயன் சுட்டிக் காட்ட 

“ஆமா என்னமோ நம்ம பக்கமா தான் வருது, என்னவா இருக்கும்?”

“கடல்ல என்ன குதிரை வண்டியா வரப் போகுது, கப்பலா தான் இருக்கும்”

“அதுக்கு முன்னாடியே கப்பல் வருதுனு சொல்ல வேண்டியது தான, சோதிக்கிறியே. அழகாபுரி கப்பல் போல தான் இருக்குது. என்ன செய்யறது விஜயா?” என்ற கிட்டுவின் குரல் பயத்தில் நடுங்கியது 

“அவங்க நம்மகிட்ட வர்றதுக்குள்ள, நாமளே அவங்ககிட்ட போய் நடந்தத சொல்லுவோம்” என விஜயன் கூற, வேறு வழியின்றி சம்மதித்தான் கிட்டு 

இருவரும் படகை கப்பல் நோக்கி திருப்பினர்

#ad

அத்தியாயம் 7 – கண்டு கொண்டேன்

கப்பலின் உள்ளே நுழைந்ததும், “எங்களை மன்னித்து விடுங்கள்” என முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாய் கூவினான் கிட்டு 

“யாருமே இல்லாத எடத்துல யாருகிட்ட மன்னிப்பு கேக்கற” என விஜயன் கேலி செய்ய 

“ஆமா யாரும் இல்ல போல விஜயா” என சற்று ஆசுவாசமானான் கிட்டு 

வலம்புரி செல்வந்தர் வாழும் வீடுகளை விட பிரமாண்டமாய் இருந்தது அந்த கப்பல். கடல் மேல் அமைந்த சொர்க்கம் போல காட்சியளித்தது

பல அறைகள் கொண்ட அந்த கப்பல், கண்ணைக் கவரும் ஓவியங்கள் பல இடம் பெற்றிருந்தன  

அதில் ஒரு பெண் குழந்தை ஓவியம் மற்றும் குமரிப் பெண்ணின் ஓவியம், பார்ப்போர் மனதை கவரும் விதத்தில் இருந்தது. அந்த பெண்ணின் ஓவியம் கண்டு, தன்னை மறந்து நின்றான் விஜயன்

“இந்த கப்பல தான் நமக்கு கடைசி அத்தியாயம்னு தெரிஞ்சும் கூட, எப்படி இப்படி ரசிச்சுகிட்டு நிக்கற? சோதிக்காத வா சிக்கிரம் போய் சரணடையலாம்” என்றான் கிட்டு

சற்று கூர்ந்து கவனித்த விஜயன், வாளை கையில் எடுத்துக் கொண்டான்

“உள்ள வாள் வீசற சத்தம் கேக்குது கிட்டு” என்றான் விஜயன் மெல்லிய குரலில்

இருவரும் மறைந்து மறைந்து அடி மேல் அடி வைத்து, ஓசை எழுப்பாமல் உள் நோக்கி நடந்தனர்

ஏழு வீரர்கள் ரத்த காயத்துடன் வெளியே பறந்து வந்தனர். 

லாகவமாய் நகர்ந்து நின்ற விஜயன், “வா கிட்டு உள்ள போலாம், இவர்களை பந்தடிய மாவீரனை பார்க்க வேண்டும்” என ஆவலுடன் உள்ளே சென்றான்

விஜயன் வாசல் கதவில் சாய்ந்து நிற்க, ஒரு வீரன் தாக்கப்பட்டு சந்தனம் வைக்கபட்டிருந்த தட்டில் விழுந்தான். சந்தனம் காற்றில் பறக்க, அந்த  சந்தனம் கலந்த மஞ்சள் காற்றின் நடுவே, ஒரு பெண்ணின் விழி மற்றும் உருவம் அரை குறையாக தெரிந்தது

ஓவியத்தில் பார்த்த அதே முகம், ஓவியத்தை பார்த்து மெய்மறந்து நின்றது போல் இப்போதும் தன்னை மறந்து ரசித்து நின்றான் விஜயன் 

அப்போது ஒருவன் விஜயனை தாக்க வர, “அழகை ரசிக்கும் போது அடிதடி எதற்கு?” என நினைத்தவனாய், தன் வாளின் பின் புறத்தில் தாக்கியவனை ஒரு தட்டு தட்டினான்

தாக்கப்பட்டவன் “ஐயோ” என கத்த, மற்ற வீரர்கள் விஜயனை நோக்கி பாய்ந்தனர்

கிட்டு மன கலக்கத்துடன் ஒதுங்கி நின்றான். அடுத்த அரைமணி நேரம், தனது அசுர வாள் வீச்சால் அனைத்து வீரர்களையும் சாய்த்தான் விஜயன் 

இறுதியாக  ஒரு சத்தம் கேட்டது, திரும்பி பார்க்க அங்கு மங்கையவள் வாள் வீசி நின்றாள் 

“அழகிய நிலவொன்று ஆயுதம் தனை கொண்டு அடியனை நோக்கி பாய்கிறதே” என்று கவி பாடியபடி அவளின் வாள் தீண்டல்களில் இருந்து தப்பிக் கொண்டே இருந்தான் விஜயன் 

“அப்பாவி ஆண் இனத்தை அடித்து துவைத்தான், அழகு மங்கையிடம் சினம் மறந்து சிறு பிள்ளை போல் விளையாடுகிறான்” என நகையாடினான் கிட்டு 

“அழகும் அறிவும் ஒரே இடத்தில் இருப்பதில்லை போலும், நான் உன்னை காத்தேன், நீ என்னை தாக்குகிறாயே” என்ற விஜயனின் சொல் வீச்சுக்கு 

“நீ சொன்ன இரண்டோடு இன்னும் ஒன்று எனக்கு இருக்கிறது, அது வீரம்” என பதில் வீசினாள் பெண்ணவள் 

பின் விஜயன் கைகளை கட்ட முயன்றவளுக்கு சிரமம் தராமல், தானாகவே கைகளை கட்டிக் கொண்டு நின்றான் விஜயன் 

தொடர்ந்து கிட்டுவின் கைகளும் கட்டப்பட, விஜயன் அருகில் வந்து அமர்ந்த கிட்டு “எல்லாம் உன்னால தான்” என முறைத்தான் 

அந்த பெண்ணின் கையசைவில், அங்கிருந்த வீரர்கள் அவளுக்கு சிம்மாசனம் அமைத்தனர். அவள் கை சொடுக்க, ஒருவன் கம்பளம் விரித்து மயில் இறக்கை விசிறினான்

விரிக்கப்பட்ட சிவப்புக் கம்பளம் மேல் அவள் நடக்கத் தொடங்க,

 “அழகாபுரி மண்ணின் அழகு சிற்பமே

ஆண்மைக்கு மிஞ்சும் அசுர சக்தியே

சாத்திரம் படித்த படைகள் பல தகர்த்த சிங்கப்பெண்ணே..

சரித்திரம் படைக்க வந்த எங்கள் சங்கமித்ராவே!!!” 

என ஒருவன் முழக்கமிட, பறை இசைத்தனர்.

சிம்மாசனத்தில் சிங்கம் போல் அமர்ந்தாள், சங்கமித்ரா!! 

 அத்தியாயம் 8 – நிழல்கள் நிஜமாகிறதே

“என்ன நடக்கிறது இங்கே? உன்னை தாக்க வந்தவர்கள் உனக்கு சேவகம் செய்கின்றனர்” என கேள்வியாய் பார்த்தான் விஜயன் 

சங்கமித்ராவின் கண் அசைவில், “எங்கள் ராணியை ஒருமையில் பேசுவதை நிறுத்து… இல்லையென்றால் ஒவ்வொரு பாகமாக உன் உடல் உறுப்புகள் பறக்கும்” என மிரட்டினான் ஒரு வீரன் 

“தளபதி, உன்கிட்ட இவ்ளோ நேரம் அடி வாங்கி பறந்தவர், இப்ப உன்னை பறக்க விட போறதா பேசறார்” என கிட்ட மெல்லிய குரலில் விஜயனிடம் கூற, புன்னகைத்தான் விஜயன் 

“நீங்கள் யாரெனெ அறிந்து கொள்ள ஆசைப்படுகிறோம்” என விஜயன் கேட்க 

“அழகாபுரியின் மன்னன் மாமன்னர் ரகுவரதன் அவர்களின் ஒரே புதல்வி எங்கள் இளவரசி சங்கமித்ரா. எதிரிகளை எளிதில் வெல்ல, பயி்ற்சி பெற எங்கள் வீரர்கள் இப்பிடி தாக்க, அவர் அதை தடுத்து முறியடிப்பார்” என்றார் அமைச்சர் இடியரசு 

“நீங்கள் யார்?”என கேள்வி எழுந்தது 

“நாங்கள் வலம்புரி மீனவர்கள், திசை மாறி இங்கு வந்துவிட்டோம்” என்றான் கிட்டு 

“இவனை பார்த்தால் மீனவன் போல தெரியவில்லையே, இவன் கரங்கள் களம் கண்டது, பெயரென்ன?” என சீறிய குரலில் கேட்டாள் சங்கமித்ரா

“நான் கிட்டு, இவன் பெயர்” என்ற கிட்டுவை கையுயர்த்தி இடைமறித்த சங்கமித்ரா, “நீ‌ நிறுத்து அவன் சொல்லடும்” என விஜயனை கை காட்டினாள் 

“தந்தை வைத்த பெயர் குமரன், ஆசான் வைத்த பெயர் விஜயன், வலம்புரி வைத்த பெயர் தளபதி” என திமிருடன் கூறினான் விஜயன் 

“இவர்கள் சொல்லில் சுத்தம் இல்லை அமைச்சரே, வலம்புரிக்கு  ஒற்றனை அனுப்புங்கள். அழகாபுரிக்கும் இவர்கள் பற்றிய தகவல் சொல், இவர்களுக்கு தண்டனை மக்கள் சபையில் முடிவு செய்யப்படும்” என ஆணையிட்டாள் சங்கமித்ரா 

அழகாபுரியின் பெருமைகளில் ஒன்று, மக்கள் சபை. நாட்டின் வழக்குகள் மற்றும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் இடம்

அழகாபுரியின் மையப் பகுதியான அரிநல்லூரில், சுமார்  30,000 பேர் அமரும் ஒரு மைதானத்தில், அரசன் அமைச்சர்கள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் 

ஒற்றன் ரதிவரதன் வேவு பார்த்து சொல்வதில் கில்லாடி. ரதிவரதனின் கையில் குறிப்பு ஒன்றை கொடுத்த சங்கமித்ரா, “அதை வலம்புரி மண்ணில் சென்று படித்துக் காட்டு” என்றாள் 

பின் “இருவரையும் இருட்டு அறையில் கட்டிப் போடு. இனி இவர்கள் வாழ்வில் ஒளி இல்லை” என்றாள்

“விஜயா, இவளிடம் அழகு, அறிவு, வீரம் மட்டும் அல்ல அகந்தையும் அதிகமா இருக்கு” என கிட்டு கூற

“பெண்மைக்குள் பூத்திருக்கும் ஆண்மையின் அடையாளம் அது, அதுவே அவளுக்கு அழகு” என்றான் விஜயன் மென் நகையுடன் 

“உனக்கு இப்ப நான் சொல்ற எதுவும் கேக்காது, ஏன்னா உனக்கு இப்ப வந்திருக்கும் நோய் அப்படி” என முறைத்தான் கிட்டு 

இருட்டு அறையில் அடைக்கபட்டதும், சங்கமித்ராவை எண்ணி விஜயன் கவி பாட, அவனை வசைபாடிக் கொண்டிருந்தான் கிட்டு 

அன்றிரவு இருவரும் நித்திரையில் மூழ்கியிருக்க, வெளியே கேட்ட வாள் சத்தத்தில் பதறி எழுந்த கிட்டு, விஜயனை எழுப்பினான் 

“சங்கமித்ரா வழக்கம் போல சண்டை பயிற்சி செய்வாளாயிருக்கும், நாடெல்லாம் போற்றும் அரசி… நடுக்கடலில் சண்டை பயிற்சி… அவளுக்கு நிகர் அவளே” என விஜயன் சிலாகிக்க 

“நடுகடலில் சண்டை பயிற்சி செய்தால் நிகர் அற்றவள் அல்ல, அறிவாற்றவள்” என முறைத்தான் கிட்டு 

“கடலுக்குள் கயல் போன்ற கண்கள் கண்டேன்

 கண்ணுக்குள் கட்டுக்குள் அடங்கா கர்வம் கண்டேன்

 கர்வம் கொண்ட கன்னி மேல் காதல்  கொண்டேன்” 

என விஜயன் மீண்டும் கவி பாடத் துவங்க, சலித்து போய் உறக்கம் கொண்டான் கிட்டு 

சிறிது நேரத்தில் சங்கமித்ரா அலறும் சத்தம் கேட்க, பலம் கொண்ட மட்டும் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறைக் கதவின் கம்பியை வளைத்து வெளியே வந்தான் விஜயன் 

வெளியே வந்தவன், அங்கு கண்ட காட்சியில் அதிர்ந்து போனான்

முகமூடி அணிந்து வாளேந்திய பத்து பேர் சங்கமித்ராவை சூழ்ந்திருக்க, அவளின் கைகள் கட்டப்பட்டு நிராயுதபாணியாய் நின்றிருந்தாள். அவளின் வீரர்களும் சிறைபிடிக்கபட்டிருந்தனர்  

அவர்கள் சங்கமித்ராவை தாக்க பாய, அருகில் இருந்த மேஜை மேல் கால் வைத்து சுவற்றில் மேவி மேற்கூறையில் வைக்கப்பட்டிருந்த ராட்சச விளக்கினை உடும்பாய் பற்றி தாவினான் விஜயன் 

விளக்கை இழுத்து உந்தி வில்லென பாய்ந்தவன், சங்கமித்ராவின் அருகில் சென்று இறங்கினான். அவர்களில் ஒருவன் சங்கமித்ராவை நெருங்க, அவளை தன் கரங்களால் காத்தபடி, தாக்க வந்தவனை பந்தாடினான் விஜயன்

அந்த கூட்டத்தில் ஒருவன் வீசிய வாள், விஜயனின் மேலாடையை கிழித்தது. விஜயன் சீறிப்பாய தயாராக, அவனின் பலம் உணர்ந்தவர்களாய், வேகமாக ஓடி ஒருவர் பின் ஒருவராய் கடலுக்குள் குதித்து தப்பித்தனர்

அவர்களை பின் துரத்திச் சென்று தாக்க முனைந்த விஜயனை, “யுவராணி வேண்டாம் வேண்டாம்… கடலில் குதித்து விடாதீர்கள்” என்ற சங்கமித்ராவின் வீரர்கள் போட்ட அலறல், இழுத்து வந்தது 

கப்பலின் மறுபக்கத்தில் இருந்து சங்கமித்ரா கடலுக்குள் பாய்ந்திருக்க, வீரர்கள் கதறிக் கொண்டிருந்தனர் 

அவளை நெருங்கிய விஜயன், “சங்கமித்ரா கைகளை பற்றிக் கொள்” எனவும்

“ஒரு அகதி தரும் உயிர் பிச்சை எனக்கு வேண்டாம். நான் மித்ரா சங்கமித்ரா!!! தோல்வி அறிந்தவள் அல்ல வெல்லப் பிறந்தவள்” என்றபடி, விஜயன் வலிந்து பற்றிய கைகளை உதறி, கடலில் விழுந்தாள் சங்கமித்ரா

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்?!?! (மீரா ஜானகிராமன்) – December 2020 Contest Entry 17

    Banana Walnut Cake (Mahi Arun) – December 2020 Contest Entry