in

சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 5) – By Fidal Castro – ஜனவரி 2021 போட்டிப் பதிவு

சங்கமித்ரா (குறுநாவல் - பகுதி 5)

அத்தியாயம் 11 – நாயகன்

விஜயன் மற்றும் கிட்டுவுக்கு அழகாபுரியை சுற்றிப் பார்க்க பரதன் என்ற நபரை நியமித்தது அரசு

அழகாபுரி அழகினை கண்டு மெய் சிலிர்த்தது விஜயனுக்கு. அரண்மனையில் தங்குவதை மறுத்து பரதன் இல்லத்தில் தங்கினர் விஜயனும் கிட்டுவும்

பரதன் தன் தாய் தந்தை மற்றும் தங்கை ‘தங்கா’வுடன் வசித்து வந்தான். முதல் நாள் இரவில் வலம்புரி பற்றி கிட்டு தனக்கே உரிய நகைச்சுவையோடு சொல்ல, அனைவரும் ரசித்து கேட்டனர் 

அப்போது இன்ப அதிர்ச்சியாய் பரதனின் தந்தை பவளநாயகன், வலம்புரியில் தனக்கு ஒரு நண்பர் இருப்பதாக கூறினார்

“யார் அவர்?” என கிட்டு கேட்க 

“அவன் ஒரு வினோத பிறவி, இருபது வயதில் 60 தீவுகள் சுற்றியவன், அவன் பெயர் கைலாசம்” என்றார்

“எங்கள் தந்தை தான் கைலாசம்” என்றான் விஜயன் 

“நீ சண்ட போட்டு பண்ணத உங்கப்பா சத்தமில்லாம பண்ணியிருக்காரு” என்றான்

“அவனுக்கு பயணம் பண்ண ரொம்ப பிடிக்கும். நான் மங்களபூரியில் அவனை முதல பார்த்தேன். அப்போ அவன் வயசு 18 இருக்கும். அழகாபுரிக்கு வரதுக்கு 14 தீவுகள் சுற்றி சிங்கபூரி வழியா வந்தான். பயணங்களில் இணைத்தோம்.கடைசியா அவன் இங்க வந்த போது இங்கு போர் காலம்” என்கிறார் பவளநாயகன் 

திடீரென கதவு தட்டும் சத்தம் கேட்க, வெளியே சென்று பார்த்தனர். அங்கு ஒரு காவலன் ஓலை வந்து இருப்பதாக கூறினான். வாங்கி படித்த பரதன் கண் கலங்கினான். வேகமாக வந்து கதவைத் தாளிட்டான் 

“என்ன நடக்கிறது பரதன்?” என கிட்டு வினவ  

“திருமணம் நடந்த நாளன்றே என் தங்கை கணவன் நாகத்திற்கு இறையானான். அழகாபுரி விதிப்படி கைம்பெண்கள் கோவில்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டவர்கள். இந்த பெண்கள் வீடு உறவுகள் இன்றி ஊழியம் செய்ய வேண்டும். நாளை, என தங்கை தங்காவை கோவிலுக்கு சமர்பிக்க வேண்டும்” என பரதன் வருத்தத்துடன் கூற, குடும்பமே கலங்கி நின்றது 

சற்று முன் இருந்த சிரிப்பும் உற்சாகமும் இருந்த இடம் தெரியாமல் போனது 

அழகாபுரி குகை கோவில் முன் ஊர் மக்கள் கூடி நிற்க, அரசன் முதலில் வணங்கிச் செல்ல, பின் மக்கள் தங்கள் நேர்த்தி கடன் செலுத்த வேண்டும் என்பது விதி

அன்றும் அரசன் வணங்கி விட்டு வெளியே வர, அரச வாகனத்தை வழிமறித்தான் விஜயன். மக்கள் அதிர்ந்தனர்

“என்ன செய்கிறாய்?” என காவலன் முன்னே வர 

“ஒரு சந்தேகம் எழுந்துள்ளது, அதை தீர்க்க வேண்டும்” என்றான் விஜயன் 

“யாரிடம்?” என கேட்க 

“உன்னிடம் தான்… உனக்கு எத்தனை மனைவி?” என கேள்வி எழுப்பினான் விஜயன் 

“அரச வாகனத்தை மறிப்பது குற்றம்” என காவலன் கோபமுற 

“என் கேள்விக்கு பதில் இதுவல்ல”  என்றான் விஜயன் என்றா விஜயன்

“பதிலை சொல்லி விட்டு வண்டியை எடு” என்றாள் சங்கமித்ரா விஜயனை முறைத்தபடி

“மூன்று பேர்” என்றான் காவலன் 

“சங்கமித்ரா போன்ற யுவராணி இருந்தும் கூட, உங்கள் நாட்டில் பெண்களுக்கு நீதி இல்லையே” என்றான் விஜயன் 

மக்கள் மூணு மூணுக்கத் தொடங்கினர். குதிரை கணைக்க அரசன் அருணதேவன் ரதத்திலிருந்து இறங்கினார்

மன்னரை கண்டதும், “தாய்க்கு நிகரான தாரம் இருக்கும் போதே இங்கு இன்னொரு பெண்ணை கரம் பிடிக்க ஆடவருக்கு அதிகாரம் உண்டு, ஆனால் பெண் கைம்பெண் ஆகிவிட்டால் அவள் கோவிலில் தனித்து வாழ வேண்டுமா? இது கொடுமை மன்னா? அழகாபுரிக்கு சங்கமித்ரா மட்டுமே யுவராணி அல்லவே.  இங்கு பிறந்த ஒவ்வொரு பெண்ணும் யுவராணியே. நம்மை படைத்த பெண்கள் எவருக்கும் அடிமை இல்ல, நம்மை ஆள பிறந்தவர்கள்” என்றான் விஜயன் 

விஜயன் சொல்வது சரி என்று சிலரும் தவறு என்று சிலரும் மக்கள் கூட்டத்தில் பேசத் தொடங்கினர். இன்னும் சிலர், பயமின்றி விஜயன் மன்னரிடம் பேசுவது கண்டு திகைத்து நின்றனர் 

“விஜயா… நீ வேற வசனம் பேசிட்டே இருக்க. உலகின் தலை சிறந்த சொல் செயல்” என்று கூறியபடி, பாரத்தின் தங்கை தங்காவின் நெற்றியில் குங்குமம் இட்டான்

விஜயன் உட்பட அனைவரும் உறைந்தனர். திடீரென ஒரு கூட்டம் கைத்தட்ட தொடங்கியது. கோவிலில் சமர்பிக்கபட்டு வாழும் கைம்பெண் கூட்டம்அது. 

பெண்கள் ஆரவாரம் செய்ய, மன்னன் “மகிழ்ச்சி” என்று உரைத்து விட்டு, அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்றார்

கிட்டு அன்று நாயகனாக நின்றான்

அத்தியாயம் 12 – வேதம் புதிது

புதிய புரட்சி செய்த கிட்டு, நாயகனாக நின்றான் அங்கு

அன்று பரதன் இல்லத்தில் மட்டுமல்ல,  அழகாபுரி முழுவதுமே ஆனந்த வெள்ளத்தில் மிதந்தது 

உறவுகளை அழைத்து விருந்து வைக்கும் வேலையை தொடங்கினர் பரதன் குடும்பத்தினர் 

காய்கறிகள் பழங்கள் வாங்க சந்தை வரை சென்றனர் பரதனும் விஜயனும்

“உனக்கு காதல் வந்ததில்லையா?” என பரதன் கேட்க 

“ஏன் கேக்குற?” என சிரித்தான் விஜயன் 

“அழகும் வீரமும் பொருந்திய ஆண்மகன் நீ, உன் மீது காதல் வராமலா இருக்கும் பெண்களுக்கு?” என கேலி செய்தான் பரதன் 

“நீ வேறு… நான் தான் காதல் வந்து கஷ்டப்படுகிறேன்” என்றான் புலம்பலாய்

“யார் அந்த அதிர்ஷ்டம் கொண்டவள்?” என ஆர்வத்துடன் கேட்டான் பரதன் 

“காரம் கல‌ந்த கனி சுவை கொண்டவள், வளையோடு வாள் கொண்டவள், முள்ளோடு இருக்கும் மலர் அவள், ‌மேகத்தில் மறைத்த நிலவு அவள்” என தன் மனம் கவர்ந்தவளை வர்ணித்தான் விஜயன் 

 “யாருன்னு கேட்ட கவிதை சொல்லுற” என சிரித்தான் பரதன் 

“என் மனம் வென்றவள் உங்கள் யுவராணி தான் பரதா” என புன்னகையுடன் விஜயன் கூற, சொல்லிய கணம் அம்பு ஒன்று விஜயன் முன் வந்து நின்றது

கோபத்துடன் விஜயன் திரும்ப, அம்பு  எய்திய சங்கமித்ரா அங்கு நின்று கொண்டிருந்தாள் 

“நான் உனது காதல் கன்னியா, இப்படி நினைத்தற்கே உன் சிரம் துண்டாடப்படும்” என்றபடி சங்கமித்ரா வாள் வீச, விஜயன் வளைந்து வளைந்து விலகி தப்பித்துக் கொண்டிருந்தான்

திடீரென சங்கமித்ராவை நோக்கி விஜயன் வாள் வீச, அதை எதிர்பாராத சங்கமித்ரா பயத்துடன் விலகினாள் 

விஜயன் வீசிய வாள், அவள் பின்னால் நின்றவனை தாக்கியது. கப்பலில் சங்கமித்ராவை தாக்க வந்தவர்களில் ஒருவன் அவன் என இனம் கண்டு கொண்டான் விஜயன் 

அழகாபுரி காவலர்கள் அவனை கைது செய்ததோடு, சங்கமித்ராவையும் உடன் அழைத்துச் சென்றனர்

அடுத்த நாள் மக்கள் சபை கூடியது

மன்னர், “இப்போது 8வது முறையாக தாக்குதல் நடக்கிறது, நாம் பொறுமை காத்து வாழ்ந்தது போதும். இனி நம் குருதியில் உள்ள வீரம் உலகமறிய செய்யலாம். அழகமித்ரா போர் நடந்து 27 வருடங்களுக்கு பின், நாம் சண்டை செய்யும் கட்டாயம் வந்துள்ளது. சங்கமித்ராவை தாக்க அவர்களுக்கு என்ன காரணம், யார் அவர்கள் என நம் ஒற்றர்கள் விவரம் சேகரித்து கொண்டுள்ளனர்” என மன்னர் கூற 

“ஆம் மன்னா, அவர்களுக்கு அழகாபுரி மண்ணின் வீரத்தை புரிய வைக்க வேண்டும்” என்றனர் மக்கள் 

“யுவராணி உயிரை இரண்டு முறை காத்து அழகாபுரிக்கு வரவிருந்த தலைகுனிவை தடுத்த விஜயனுக்கு என்ன பரிசளிப்பது” என மன்னர் வினவ 

“கேள்வியெல்லாம்  எதற்கு? உங்கள் கேள்வியிலேயே பதில் உள்ளது” என்றார்  முத்துவேலர் 

“புரியும் படி சொல்லும் முத்துவேலரே” என்றார் அமைச்சர்

“இருமுறை தன் உயிரை பணயம் வைத்து யுவராணியை காத்த விஜயன், வாழ்க்கை முழுவதும் இமை போல் காக்க தகுதி வாய்ந்தவன்” என முத்துவேலர் கூற, அரங்கமே அதிர்ந்தது

மக்கள் சிலர் இது தவறு என்றும் சிலர் சரி என்றும் கூக்குரல் எழுப்பினர்

“அரசாழ இவன் சத்ரியன் அல்ல” என கேலியாக சிரித்தபடி அமைச்சர் தேவராயர் உரைக்க 

“’சங்கமித்ரா வைரத்தை’ மீட்டு தந்த ‘மக்கள் மன்னன்’ யார் என்று மறந்தீரா?” என கூட்டத்தில் இருந்த நூறு வயது கடந்த மூதாட்டி புஞ்சைஅம்மாள் கோபமாய் கேட்க, அரங்கம் அதிர்ந்தது. சங்கமித்ராவும் அதிர்ந்தாள்

அத்தியாயம் 13 – கதைகளின் கதை

மக்கள் மற்றும் மன்னரின் மனத்திரையில், அழகாபுரியின் பழைய வரலாறு தோன்றியது

முன்னாள் அழகாபுரி மன்னர் மிதிலைவரதனின் ஒரே மகள் சக்திமேகலை. அழகாபுரி மண்ணின் யுவராணி சக்திமேகலை உடன் பிறப்பு இல்லாதவர்

மிதிலைவரதன் மனதில் இருந்த பெரிய சுமை சங்கமித்ரா வைரம். பழங்காலத்தில் அழகாபுரியின் அடையாளமாக விளங்கியது ‘சங்கமித்ரா வைரம்’

முன்னோர்கள் நினைவாக இருந்த ‘சங்கமித்ரா வைரம்’ கால மாற்றத்தில் இடம் பெயர்ந்து, இருக்கும் இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. பல அழகாபுரி மன்னர்கள் அதை அடையும் முயற்சியில் தோல்வியடைந்தனர்

மிதிலைவரதன் தனது இளம் வயதில் பல முறை முயன்றும் தோற்றான். அழகாபுரியில் பாலசந்திரர் என்னும் வரலாற்று அறிஞர் ‘சங்கமித்ரா வைரம்’ அழகாபுரியின் மேற்கு திசையில் உள்ள குறிஞ்சி குகையில் இருக்கும் என்று சில குறிப்புகள் வைத்து கூற, அதை அடையும் முயற்சிகள் தொடங்கியது

அந்த குறிப்பில், அழகாபுரி மண்ணில் தோசம் இருப்பதாகவும், அதை சரி செய்ய ‘சங்கமித்ரா வைரம்’ உள்ள இடத்தில் குகை கோவிலில் கட்ட வேண்டும், இல்லையெனில் அழகாபுரி அழியும் என்றும் சொல்லப்பட்டிருந்தது 

மிதிலைவரதன் ஒரு முடிவெடுத்தான். “66 தீவுகளில் உள்ள இளவரசர்கள் கலந்து கொள்ளும் ஒரு சுயம்வரம் நடத்த முடிவு செய்தான். குறிஞ்சி குகையில் உள்ள ‘சங்கமித்ரா வைரத்தை’ யார் அடைந்து வருகிறார்களோ, அவர்களுக்கே என் மண்ணும் பொண்ணும்” என அறிவித்தான் 

   சுயம்வரத்தின் விதி என்னவெனில், சுயம்வரத்தில் கலந்து கொள்ளும் மன்னன் மற்றும் ஒரு தளபதி குகைக்குள் செல்லலாம். முழுமையாக குகைக்குள் சென்று, சங்கமித்ரா வைரத்துடன் வெளியே வந்தால் வெற்றி

அன்று முழு நிலவு நாள். சுயம்வரம் நடக்க திடல் அமைக்கப்பட்டது

பெருநில மன்னர்கள் முதலில் செல்ல அனுமதிக்கபட்டனர். சூரியன் உதிக்கும் போது மங்களபூரி மன்னன் மற்றும் அவன் தளபதி முதலில் உள்ளே சென்றனர் 

இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் வெளியே வந்தனர். சங்கமித்ரா வைரத்தை எடுத்து வரவில்லை. அவன் கண்ணில் பயம் இருந்ததது, வெறுமை இருந்ததது

இளவரசி சக்திமேகலை சற்று ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைத் தொடர்ந்து பலர் சென்றனர். சூரியன் அஸ்தமனத்தை அடைந்தது 

சுயம்வரம் காண வந்த மக்கள் கூட்டம் கலையத் தொடங்கினர். 66வது நாடு “ருத்ரபூரி”. சூரியன் மறைந்தது சக்திமேகலை மனத்திலும் இருள் சூழ்ந்தது

“ருத்ரபுரி” நாட்டு இளவரசன் மற்றும் அவர் தளபதி குகைக்குள் சென்றனர். குகை இருள் சூழ்ந்த நிலையில் இருந்தது. தனது கையில் தீப்பந்தத்தை எடுத்தான் தளபதி. வவ்வால் கூட்டம் வர, தடுமாறினான்  அரசன்

தீப்பந்தத்தை அணைத்தான் தளபதி. இருட்டில் இருவரும் வழிமாறினர். சரியாக ஒரு மணி நேரம் கழித்து, அரசன் வெளியே வந்தான். இவருக்கும்  ‘சங்கமித்ரை’ கிட்டவில்லை

“சுயம்வரம் முடிந்தது. அடுத்த ஆண்டு மீண்டும் சுயம்வரம் நடத்தி அரசர் தேர்வு செய்யப்படுவார். இருள் சூழ்ந்த இந்த மண்ணில் சங்கமித்ரா கிட்டிய பின் ஒளி பிறக்கும்” என்றார்   மிதிலைவரதன் 

ஏக்கத்துடன் உ‌ள்ளே சென்றாள் சக்திமேகலை. அப்போது குதிரைகள் கணைக்க, குகை துவாரத்தில் மணல் புழுதி பறந்தது. ஒரு ஒளி மிளிர்ந்தது. வவ்வால்கள் குகையை விட்டு வெளியே பறந்து வந்தது

இரத்தம் சிந்திய சிங்கம் போல கர்ஜனையோடு வீர நடை போட்டு வந்தான் “ருத்ரபுரி தளபதி”. அவன் கையில் வைத்திருந்த ‘சங்கமித்ரா வைரம்’ மிளிர்ந்தது

மிதிலைவரதன் ஆனந்தத்தில் கையசைக்க, வான வேடிக்கைகள் சூரியன் இல்லாத குறையை நீக்கி பளிச்சென்று மிளிர்ந்து

சக்திமேகலை கீழே வந்தாள். மக்கள் கூட்டம் கூடியது. “அழகாபுரி இனி  என் உயிர் நண்பனுக்கே” என்றபடி ‘சங்கமித்ரா வைரத்தை’ ருத்ரபுரி இளவரசர் கையில் வைத்தான் அவனின் தளபதி 

ருத்ர நாடு வெ‌ன்றதாக மதிலைவரதன் அறிவித்தார். சக்திமேகலையை, வென்ற மன்னனின் கழுத்தில் மலையிடுவதை காண மக்கள் ஆர்வமாக இருந்தனர். சற்று வெட்கத்துடன் காத்திருந்தார் ருத்ரபுரி இளவரசர்

தரையை பார்த்தபடி மாலை எடுத்து வந்தசக்தி மேகலை, தளபதி கழுத்தில் மாலையிட, அரங்கம் அதிர்ந்தது. தளபதியும்  அதிர்ந்து நின்றான் 

“இவர் தான் நான் மணமுடிக்க இருப்பவர்” என சக்திமேகலை கூற 

“என்ன செல்கிறாய்?” என்றான் மிதிலைவரதன் கோபமாய் 

“சங்கமித்ரா வைரம் கொண்டு வருபவருக்கு பெண் என்பதே உங்கள் வாக்கு, எனவே அதைக் கொண்டு வந்த இவரே என் மணாளன்” என்றாள் அவள் 

“இவன் சத்திரியன் அல்ல சூத்திரன்” என அமைச்சர் கூற 

“சங்கமித்ரா வைரத்தை மீட்ட போது, இவர் சூத்திரன் என்பது தெரியவில்லையா?” என கேள்வி எழுப்பினாள் சக்திமேகலை

“அருமை… இதுதான் மேன்மை… இது தான் பெண்மை” என்றான் ருத்ர நாட்டு மன்னன்

“இந்த வெற்றி உன் பாதங்களில் சமர்பிக்கபட்டவை ருத்ரஅரசே, உலகம் தீண்டாத என்னை அணைத்து, நண்பனாய் ஏற்று வாழ்கையில் உயர்த்திய என் நண்பன் இந்த அரியாசனத்தை அலங்கரிக்க வேண்டும்” என வேண்டிக் கொண்டான் தளபதி

“நானும் அதையே வழி மொழிகிறேன், அரசன் அவரே, அதில் மாற்றமில்லை. ஆனால் நான் மணக்க விரும்புவது உன்னைத் தான் தளபதி” என சக்திமேகலை கூற 

“எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை, இது என் மகளின் வாழ்க்கை மற்றும் மக்களின் வருங்கால அரசன் குறித்து, மக்களே முடிவு செய்ய வேண்டும். இறுதி முடிவு என் மகள் மற்றும் மக்களின் கரங்களில் தான்” என விலகி நின்றார் மன்னர் மிதிலைவரதன்

“வாழ்வில் நான் கண்ட மாவீரன், நன்றி மறவாத மனிதன், போர் கலையில் சாணக்கியன், பிறப்பால் இவன் சூத்திரன் என்றாலும், இவன் பிரபஞ்சம் போற்றும் சத்திரியன். அழகாபுரிக்கு அணி செய்யப் போவது இவனே. உங்கள் அரசன், நான் இவன் ஆட்சிக்கு அச்சாணி போல் இருப்பேன். இதோ அழகாபுரி புதிய மன்னன் என தளபதி சூரியமித்ரன்” என்று கர்ஜனை செய்தான் ருத்ர நாட்டு மன்னன்

(தொடரும்… ஜனவரி 17, 2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எழுத்துக்களும் பிரிவினைகளும் (கவிதை) – விக்னேஸ்வரன் – January 2021 Contest Entry

    பரிசு அறிவிப்பு – “டிசம்பர் 2020 பிரபல பதிவுப் போட்டி” வெற்றியாளர்