in

சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 2) – By Fidal Castro – December 2020 Contest Entry 7

சங்கமித்ரா (பகுதி 2)

அத்தியாயம் 3  – அல்லிகுகை

அல்லிகுகை என்றால் மர்மம், மரணம் என்றே வலம்புரி அறியும். அதில் புதைந்த மர்மங்கள் பல… அவை  வெளிவரவில்லை

வலம்புரியில் பல குகைகள் உள்ளன, அவற்றில் மிகப் பெரிய குகை இந்த அல்லிகுகை. அதன் நீளம் 3 மைல் என்பது கருத்து. அல்லிகுகை கடந்த 40 வருடங்களாக தான் மர்ம குகை. அதற்கு முன் இது சிறுவர்களின் வசந்த வாசல்.

அல்லிகுகையில்  புதையல் இருப்பதாக எண்ணி மருதபுரி கள்வர்கள் அதை சூறையாடினர். அதன் பின்னர், அங்கு பிணமாக கிடந்தனர். காலம் கடந்தது… செழியன் உயிரை களவாடிய பின் அல்லிகுகை மர்மகுகை ஆகியது.

பறை முழங்க விஜயன் அல்லிகுகையின் உள்ளே சென்றான். இருள் படர்ந்த குகைக்குள், தனது தீப்பந்தத்தை உயர்த்தி பிடித்தபடி சென்றான் விஜயன்.

வவ்வால் ஒலியெழுப்ப வண்டுகள் வட்டமிட, சற்றே பதற்றமான மனநிலையில் அடிமேல் அடி வைத்து சென்றான். கொடிய நாகம் ஒன்று விஜயனை நோக்கி வர, வாள் கொண்டு அதை கொன்றான்.

குகையின் ஒவ்வொரு அரை மைலிலும் இரண்டு பாதை  போல் பிரிந்தது. அதில் ஒன்றை தேர்வு செய்து பயணம் செய்தான் விஜயன். இறுதி மைலில், வழக்கம் போல இரண்டு பாதை, வலது பக்கம் சென்றான் விஜயன். அங்கு இருள் பரவி இருந்ததது, பந்தம் அணைந்தது.

இருள் கண்களை மறைக்க தடுமாறி இறுதியில் ஒரு ஒளி.  அது தான் “மரகதம்”. அதை கையில் பற்றி, கண்களில் நீர் வழிய நின்றான் விஜயன்

மகிழ்வுடன் திரும்பியவன் மேல் மூன்று வாள்கள்  பாய்ந்து வந்தது.  மரகத்தை தனது சட்டை மடிப்பில் முடிந்து கொண்டான் விஜயன்

அவன் எதிரே 3 பேர் அல்ல, 30 பேருக்கு மேல் இருந்தனர். ஒவ்வொரு வீரனும் முகம் மறைத்து கையில் தீப்பந்தம் மற்றும் வாள் கொண்டு இருந்தனர்.

“யார் நீங்கள்” என கேள்வி எழுப்பினான்

“நாங்கள் குலம் காக்க வந்த வீரர்கள். எங்கள் சுயமரியாதை காக்க வந்துள்ளோம்” என்றனர்

 “இது சுயமரியாதை அல்ல சுயநலம்” என்றான் விஜயன்

கூட்டத்தில் இருந்த ஒருவன், “வாய் அல்ல… எங்கள் வாள் தான் உன்னோடு பேசும்” என்று கூறி வாள் வீச வந்தான்

தான் வைத்து இருந்த தீப்பந்த எண்ணெயை, தன்னை சுற்றி ஊத்தினான் விஜயன். கூட்டம் அவனை நெருங்க முடியாமல் திணறினர்

“தீப்பந்தங்களை, அணைத்து உள்ள போகலாம் வாங்க” என்றான் அவர்களில் ஒருவன். எல்லாரும் தீபந்தங்களை அணைத்தனர்

“தவறு செய்து விட்டீர்களே, இந்த கூட்டத்தில் உள்ளவர்களுக்கு நான் ஒரே எதிரி, எனக்கு  இந்த கூட்டமே எதிரி தான்” என்றபடி இருட்டில் வெவ்வேறு திசைகளில், மின்னல் வேகத்தில்  தாக்கினான் விஜயன்

30 பேரையும் கொன்று குவித்தான், விஜயனும் காயப்பட்டான், அவன் முதுகில் ஒரு கத்தி குத்தியது

“யார் நீ, என் புறம் குத்தும் கோழை” என சீறினான் விஜயன்

“பணிந்து பாய்வது என் மூளை, செழியனும் இப்படியெல்லாம் பேசி தான் மடிந்தான். இப்போது நீயும் தரம் அறிந்து வாழ வேண்டும், இல்லையென்றால் மரணம் தான் பரிசு” என கர்ஜித்தான்  அன்புநம்பி

“உனக்கு விளக்கம் சொல்கிறேன் உவமையோடு” என்ற விஜயன், தனது வாளெடுத்து பதினான்கு முறை அன்புநம்பியை வெட்டினான்

“உன்னுடைய இரத்தம் என்னுடைய இரத்தம் போல் சிவப்பு தான். எல்லாம் தெரிந்தும், நாங்கள் உனக்கு அடிமை என்று சொல்லும் உனக்கு, நரகம் பாடம் புகட்டட்டும்” என்றான் விஜயன்

அன்புநம்பி தரையில் வீழ, மதுரமரகதத்தை கையில் எடுத்து கொண்டு, அத்தனை பேரையும் எரித்துவிட்டு, குகையை விட்டு வெளியே வந்தான் விஜயன்

அவனைக் கண்டதும், ஊர் மக்களிடம் மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது. காரணம் அவர்கள் வென்றது “சமத்துவம்”

மதுரமரகதம் குகை கடவுளுக்கு படைக்கப்பட்டது. ஆதிக்கம் செலுத்திய  அந்த கூட்டம் தோல்வியை  எண்ணி, ஊரை விட்டு ஓட்டம் பிடித்தனர்

அப்படித் தான் வலம்புரி எண்ணியது. ஆனால் கைலாசம் குடும்பத்தினர் மட்டுமே உண்மை அறிவர். கைலாசம் தான், அல்லி குகைக்குள் இருக்கும் பாதை மற்றும் உட்கட்டமைப்புகள் பற்றி, விஜயனுக்கு குறிப்புகள் சொன்னார்

கைலாசத்துக்கு பாதை தெரியக் காரணம் “விலாசம்”

சமத்துவம் பரவியது வலம்புரி எங்கும். ஆதிக்க வர்க்கத்தில் ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் ஒரு சாரார் மட்டுமே என்பது, மீண்டும் உலகம் அறிந்தது

அத்தியாயம் 4 – கவியும் கடலும்

காலங்கள் கடந்தது. வலம்புரி முழுவதும் தளபதி என்று அழைக்கப்பட்டு வந்தான் விஜயன்.

பல பெண்கள் விஜயன் மேல் காதல் கொண்டனர். அவன் மனம் யாரையும் நெருங்கவி‌ல்லை. தங்கைக்கு வலம்புரி சத்திரிய குலவீரன், மாறனை மணம் முடிந்தான் விஜயன்

கலப்பு காதல் திருமணங்கள் மலர்ந்தன. விஜயனுக்கு பெண் தோழிகள் இல்லை. காரணம் “கிட்டு”, விஜயனின் அத்தை மகன்

கிட்டுவுக்கு எல்லாவற்றுக்கும் பயம். பெண் என்றால் பயம், பொன் என்றால் பயம், கடல் என்றாலும் பயம் காதல் என்றாலும் பயம். கிட்டு வாழ்கையில் அதிகம் சொல்வது இதைத் தான் “பயமா இருக்கு விஜயா!!!”

கடல் செல்வதை நேசிக்கத் தொடங்கினான் தளபதி. வலம்புரி பஞ்சகாலம் தொடங்கியது. மீன்பிடி ஒன்றை மட்டுமே நம்பி வலம்புரி மக்கள் வாழ்கின்றனர்.

வலம்புரி சுற்றி உள்ள பகுதிகளில் மீன் வளம் குறைந்தது. வறுமை வலம்புரியை வாட்டத் தொடங்கிய காலம். இந்த நிலையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர் கிட்டுவும் விஜயனும்

“டேய் விஜயா, ரொம்ப தூரம் போகிற மாதிரி இருக்குடா பயமா இருக்குடா” என்றான் கிட்டு வழக்கம் போல்

“உனக்கு கடலின் புதிய கோணம் காட்ட போறேன்” என்று சொல்லிக் கொண்டே, படகினை தடை செய்யபட்ட பக்கம் திருப்பினான் விஜயன்

“டேய் முட்டாள் மாதிரி பண்ணாத, இங்க நாம வரக் கூடாது. இது நம்ம ஊர் விதிக்கு எதிரானது” என கிட்டு கூற

“விஜயனின் வில்லுக்கும் சொல்லுக்கும் விதிகள் கிடையாதுடா எனச் சிரித்தான்

“அற்புதமா பேசுறேனு அசட்டுத்தனமா பேசுற நீ” என கிட்டு சொல்வதை காதில் வாங்காமல், தனது தூண்டிலை கடலில் இட்டு மீன் பிடிக்க தொடங்கினான் விஜயன்

“தளபதி இல்ல இப்போ எனக்கு வந்த தலைவலி நீ” என கிட்டு புலம்ப

“எதுகை மோணை போட்டு எட்டுக் கட்டி பேசுறயே கிட்டு” என கேலி செய்தான் விஜயன்

“நல்ல பேசுறனா உண்மையாவா, ஐயோ என் மூளைய வசியம் செய்யறான், பாவி” என மீண்டும் புலம்பத் தொடங்கினான் கிட்டு

கடலில் இட்ட வலையை விஜயன் வெளியே எடுக்க, வலை முழுவதும் விலை உயர்ந்த மீன்கள் இருந்தது

“என்னடா இது, வலை முழுக்க மீன்கள், வலம்புரி பஞ்ச போக போற நேரம் இது தான் போல, எல்லா மீன்களையும் அள்ளிட்டு போகலாம் தளபதி” என மகிழ்வுடன் கூறிய கிட்டு, அடுத்த கணமே “ஆனா பயமா இருக்கே… இது தடைசெய்யப்பட்ட பகுதி வேற” என்றான்.

“நீ கண்ண கொஞ்சம் அசரு கிட்டு, மொத்த மீனையும் நான் பிடிக்கிறேன், வலம்புரி போய் சேர்த்து விட்டுவோம்”

“பயமா இருக்குடா விஜயா”

“நீ கண்ணமூடு நான் பாத்துக்கறேன்” என விஜயன் உறுதியளிக்க, கண் அசந்தான் கிட்டு

அத்தியாயம் 5 – கட்டழகும் கத்தியும்

சூரியன் சுட்டெரிக்க, கண் விழித்தான் கிட்டு. முழித்தவன் கண்ணில் பட்டது வலம்புரி மண்ணல்ல வான்நிறக்கடல். படகு நடுக்கடலில் இருந்தது, அதுவு‌ம் அழகாபுரி எல்லையில். அதைக் கண்டு, அலறினான் கிட்டு 

“உன்னை நம்பி வாழ்க்கைய தொலைச்சுட்டனே, வலம்புரி வறுமைய போக்கறதா சொல்லி, எனக்கு வாழ்க்கையே இல்லாம பண்ணிட்டு உனக்கு தூக்கம் வேறயா?” என்று கூறியபடியே விஜயனை உலுக்கி எழுப்பினான் கிட்டு 

விஜயனோ, “பொறுமை வேண்டு்ம், அந்த கிட்டு கிழவனுக்கு பின்னர் தான் நமக்கு திருமணம் செல்லம்மா!!!” என தூக்கத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தான்

“நமக்கு இனி வாழ்க்கையே இல்ல, இதுல திருமணம் பத்தி பேசுறான், உயிர் இருக்குமானு தெரியல இதுல இவனுக்கு உல்லாசம் கேக்குது” என சொல்லியபடி விஜயனை உதைத்து எழுப்பினான்.

“என்னாச்சுடா கிட்டு?”

“தடை செய்யப்பட்ட பகுதி தாண்டி இப்ப தலை பறிக்கும் பகுதியில் சிக்கிட்டோம், தொலை‌வுல அழகாபுரி கோட்டை தெரியுது”

“அடடா… கொஞ்சம் கண் அசந்துட்டேன் படகு வழி மாறி வந்திடுச்சு கிட்டு”

“கொஞ்சம் வழிமாறி சாவின் விளிம்புல கொண்டு வந்துட்டியே விஜயா”

“வழிமாறி செல்லவில்லை, நம் பஞ்சம் போக்க வழி செய்யவே இந்த வழி வந்தேன்” என மனதிற்குள் நினைத்தான் விஜயன் 

“விடு கிட்டு… வழி மாறி வந்த நாம, தப்பிக்க வழியை தான் யோசிக்கணுமே தவிர, இப்படி தலையெழுத்த நெனச்சு வருந்தக்கூடாது”

“இப்ப நல்லா பேசு, படகு ஓட்ட சொன்னா குறட்டை விட்டு கோட்டை விட்டுட்டு” என புலம்பியபடி நடுக்கடலில் சுற்றி பார்த்தான் கிட்டு 

“மேலும் கீழும் வான் நீலம் என்னைப் போர்த்திட 

மேனியெங்கும் சீறிடும் காற்று சில்லென்று தீண்டிட

கரைந்தேன் கலந்தேன் கடலில் நானும் இன்று” என்று கவி சொல்லி சிரித்தான் விஜயன் 

“முதல் முறையா நீ சரியா பேசுற, நீ மட்டும் இல்ல நானும் கரையத்தான் போறேன் இன்னைக்கு, கடல்ல அஸ்தியா. மரணப் படுக்கைல மல்லாக்க படுத்து, கவிதை வேற உனக்கு!!!” என புலம்பினான் கிட்டு 

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    கிழக்கு கடற்கரைச் சாலையில் ஒருநாள்!! (ஆதி வெங்கட் ) – December 2020 Contest Entry 12

    50 லட்சம் வாசகர்கள் கொண்ட “Story Mirror” & “சஹானா இணைய இதழ்” இணைந்து நடத்தும் “மைக்ரோ கவிதைப் போட்டி 2020”