in

நீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 4) – விபா விஷா

நீரினைத் தேடிடும்...❤ (பகுதி 4)

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

முன்தினம் ஜானகியின் நினைவுகளில் சிக்கிச் சுழன்று, விடியற்காலையில் தான் கண் அயர்ந்தான் யாதவ்

மறுநாள் அவனது ஸ்பெஷல் டூட்டி மலையூர் சைட்டில் என்று ஏற்கனவே சொல்லி இருந்ததால் தான், முன் தினமே அவனும் குகனும் அங்குச் சென்று ஒருமுறை பார்த்து விட்டு வந்தனர். எனவே இன்று நேரடியாக சைட்டுக்கே சென்று விடலாம் என்றெண்ணி இருந்தான்

காலை விழித்து, இன்னமும் கண்முன் நிழலாடும் ஜானகியின் நிழலைக் கடந்தவாறே, புறப்பட்டு அறையை விட்டு வெளியே வந்தவன், திகைத்து நின்றான்

நண்பர்கள் படை அவனுடன் கிளம்ப அங்கே தயாராக நின்றிருந்தனர்

“நீங்கல்லாம் எங்க காலங்காத்தால இங்க?” என யாதவ் வினவ

“நீ எங்கயோ நாங்களும் அங்க தான்” என்று பதிலுரைத்தவாறே சாதனா வந்தாள்.

அதைக் கேட்டதும், தலையில் கைவைத்து அமர்ந்து விட்டான் யாதவ்

“நீ என்ன பண்ணினாலும் இவங்ககிட்ட இருந்து தப்பிக்க முடியாது ராஜா, இன்னைக்கு இவங்க வரட்டும், நான் நாளைக்கு உங்க கூட வந்து சேந்துக்கறேன்” என்றவாறு வந்தார் அவர்களது வயதான தோழி, செல்லம்மா பாட்டி

“அட என்ன பாட்டி அவங்க தான் ஏதோ புரியாம பண்றாங்கன்னா, நீங்களும் அவங்க கூடச் சேர்ந்து விளையாடறீங்க?” என யாதவ் கேட்க

“என்ன யாதவ் கண்ணா, நம்ம பசங்க தான. எந்த வாலுத் தனமும் பண்ண மாட்டாங்க” என்று அவனுக்குப் பதிலுரைத்தவர்

மற்றவர்களிடம் திரும்பி,”என்ன பசங்களா… உங்க வாலை எல்லாம் சுருட்டி உள்ள வச்சுக்கணும். அங்க போய் ஏதாவது சேட்டை பண்ணுனீங்கன்னா, உங்கள இனிமே யாதவ் எங்கயும் வெளியே கூட்டிட்டுப் போக மாட்டான், சரியா?” என்று அவர் சிறு பிள்ளைகளுக்குக் கூறுவது போலக் கூறவும்

மற்றவர்களும், “சரி செல்லி…” என்று கோரஸ் பாடினர்.

யாதவ் மட்டுமே அவரைப் பாட்டி என்றழைப்பது. மற்றவர்களுக்கு அவர் என்றுமே ‘செல்லி’ தான்

அவர்களது கோரஸைக் கேட்டவன், “சரி தான் இன்னைக்கு எல்லாரும் செம பார்ம்ல இருக்காங்க” என்று நினைத்துக் கொண்டு, தனது விதியை நொந்தவாறே அவர்களை அழைத்துச் சென்றான்

மலையூர் அகழ்வாராய்ச்சி நிகழுமிடம்

ஆதித்யன் தன் கையால் எழுதிய குறிப்புகளை ஜானவியிடம் அளித்து, “ஜானவி இத நீ நாளைக்கு ஒரு நகல் எடுத்துட்டு வா. உனக்குத் தெரிஞ்ச கடையில எடுக்காத, வேற எங்கயாவது எடுத்துட்டு வா. அதுமட்டுமில்லாம இதுல என்ன விஷயம் இருக்குனு யாருக்கும் தெரியக் கூடாது, இது ரொம்ப ரகசியமான விஷயம். உன்னோட ப்ரொபஸர் மாசிலாமணி உன்ன பத்தி சொன்னதால தான் உன்கிட்ட இவ்வளவு பெரிய பொறுப்பு ஒப்படைச்சுருக்கேன்” என்று மிகவும் தீவிரமாகக் கூறியவாறு, நிறையப் பக்கங்கள் கொண்ட கோப்பை அவளிடம் அளித்தார்

மேலும் அவர் சொன்ன மற்ற வேலைகளைச் செய்தவாறு, அவள் அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்க, நம் தலைவனின் சேனை அவள் மீது போர் தொடுக்க ஆரம்பித்தனர்

அதாவது அவளைச் சும்மா சும்மா அருகே அழைத்து, அதென்ன இதென்ன என சிறு பிள்ளைத்தனமாகக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஒரு கட்டத்தில் அவர்களது தொல்லை பொறுக்க முடியாத ஜானவி, அங்குப் பாதுகாப்பிற்காக நின்றிருந்த குகனிடம் சென்று, “நீங்கல்லாம் போலீஸா? அங்க ஒரு கும்பல் என்னை வேலை செய்ய விடாம தொல்லை பண்ணிட்டு இருக்காங்க. நீங்க சைட்டுல சைட்டடிக்கவா வந்தீங்க?” என்று கேட்கவும், திணறிய குகனை அமைதி படுத்திவிட்டு, தானே பதில் சொன்னான் அவனருகில் இருந்த யாதவ்.

“மேடம், அவங்க உங்க சைட்டுக்குள்ள வந்தாங்களா?” யாதவ்.

“இல்ல” ஜானவி.

“உங்ககிட்ட சைட் பத்தி ஏதாவது விவரம் கேட்டு தொல்லை பண்ணாங்களா?” யாதவ்.

“இல்ல” ஜானவி.

“ஏதாவது மிஸ்பிஹேவ் பண்ணாங்களா?” யாதவ்.

“இல்ல” என்று இம்முறை பல்லைக் கடித்துக் கொண்டே கூறினாள் ஜானவி

“பின்ன உனக்கு என்ன பிரச்சனை? எங்களை இந்தச் சைட்டுக்குத் தான் செக்யூரிட்டி கொடுக்கச் சொன்னாங்க, உனக்கு இல்ல. அப்படி உனக்கு வேணும்னா அவங்க மேல ஒரு கம்பளைண்ட் கொடு, நாங்க ஆக்சன் எடுக்கறோம்” என்று அசால்ட்டாக யாதவ் கூற, அவனை முறைத்தவாறே, காலைத் தரையில் உதைத்துக் கொண்டு சென்றாள் ஜானவி.

மீண்டும் அவள் வேலை செய்து கொண்டிருந்த பொழுது அவளருகே வந்து அவளது சொந்த ஊர் எது? உடன் பிறந்தவர்கள் யார் யார் என்று சார்விக் கேட்க, மித மிஞ்சிய கோபம் பெருகியது ஜானவிக்கு.

“ஹேய் இங்க வா” என்று அவனை அழைத்தவள்

“என்ன நீ ஸ்கூலுக்கு எல்லாம் போக மாட்டியா? உன்ன உங்க மிஸ் திட்ட மாட்டாங்க? போடா போ” என்று கூறவும், சார்விக்கின் மூக்கு உடைந்து கீழே விழுந்தது

“என்னடா இவ நீ சின்னப்புள்ளத்தனமா கேள்வி கேக்கறத இப்படிக் கலாய்ச்சுபுட்டா?” என்று மாதுரி கேட்க, சார்விக் தலை குனிந்தவாறு நின்றிருந்தான்.

அதைக் கண்டு சிறிதும் இரக்கப்படாத கவினோ, “என்ன மச்சி உன் மூக்கு எங்கனு தேடறியா?” என்று மேலும் கலாய்க்க, நிமிர்ந்து பார்த்தவனின் கண்களில் பயம் தெரிந்தது.

அதை உடனே கண்டுகொண்ட விபின், “என்ன மச்சி உன் கண்ணுல கலவரம் தெரியுது?” என்று சிறிது நக்கலாகக் கேட்க

“இல்லடா, முன்னப் பின்னத் தெரியாத ஒருத்தனையே இவ்வளவு ஓட்டு ஓட்டறாங்க. ஒரு போலீஸ் ஆஃபீசருக்கு, அதுவும் தன் அண்ணனோட சீனியர் ஆஃபீசருக்கு வேணும்னே காபியில உப்பு போட்டு கொடுக்கறாங்க, இவங்க மட்டும் என் அண்ணியா எங்க வீட்டுக்கு வந்தா என் நிலைமையும், என் அண்ணன் நிலைமையும் என்ன ஆகறதுனு யோசிச்சனா, எனக்குப் பயந்து பயந்து வருதுடா” என்று சார்விக் சொல்லவும், அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

இதில் இடை புகுந்த சாதனாவோ, “இன்னும் கொஞ்சம் யோசிச்சு பார் சாரு, இவங்க மட்டும் நம்ம செல்லி கூடக் கூட்டணி வச்சுக்கிட்டாங்கனு வையேன், நாம அதோ கதிதாண்டா” என்று கூறவும்,

மாதுரி அவள் காதைப் பிடித்துத் திருகியவாறே, “உங்க குடும்பத்துக்கு இப்படி ஒருத்தி தான் சரிப்பட்டு வருவா, அதுவும் பேசறதுக்குக் காசு கேக்கற உங்க அண்ணனுக்கு, பேசியே ஊர விக்கறவ தான் பொண்டாட்டியா வரணும். உங்க அண்ணனுக்கும் அவ மேல கொஞ்சம் இன்டெரெஸ்ட் இருக்குன்னு தான் நினைக்கிறேன். நேத்து அவ யாருன்னு தெரியாம அவ வீட்டுக்கு போனேன்னு சொன்னதெல்லாம் பொய்யா தான் இருக்கும்” என்று மாதுரி கூறியதும்

“ஆமா மாதுக்கா.. அதனால தான் இன்னைக்கும் அவன் அந்தப் பொண்ண பார்க்க போறான்னு தெரிஞ்சதும் நாமளும் அவன் கூடவே போய்ப் பாக்கலாம்னு பிளான் போட்டேன்” என்றாள் சாதனா

“அது சரி… உங்க அண்ணன் எங்க போறான், வரான்னு உனக்கு எப்படி தெரியுது?” என மாதுரி கேட்கவும்

“அதுவா… ஜானவி வீட்டுக்கு பக்கத்துல தான் என்கூட வேலை செய்யற யாமினி இருக்கா. அவளும் ஜானவியும் பிரண்ட்ஸ், எதுவா இருந்தாலும் ரெண்டு பேரும் ஷேர் பண்ணிப்பாங்க. ஜானவி என் அண்ணனைப் பத்தி அவகிட்ட சொல்லிருக்கா, உடனே அவ எனக்கு அத forward பண்ணிட்டா, அவ்வளோ தான்” என்று சிரித்துக் கொன்டே கூறவும்

“டேய் நானும் கூட இவ ஏதோ சின்னப் பொண்ணுனு நினச்சேன் டா சாரு, ஆனா குட்டிச் சாத்தான் என்னென்ன வேலையெல்லாம் செய்யுது பாரு” என்று சாதனாவை பார்த்துக் கொண்டு சார்விக்கிடம் கூறினான் விபின்

“ஆமாமா நான் குட்டிச் சாத்தான்னா அத கட்டிக்கப் போறவரு யாரு? இப்போ உங்க ரூட் க்ளியர் ஆகிடுச்சுல்ல, அடுத்து எங்க அண்ணனுக்கு ஒரு ரூட் பாக்கணும். அதனால நீங்க கொஞ்சம் சும்மா இருங்க” என்று தன வருங்காலக் கணவனை அவள் அடக்கிய வேகத்தினைக் கண்டு, மற்றவர்கள் நமட்டுச் சிரிப்பு சிரித்தனர்.

“சாரு இன்னைக்கு இவ்வளவு போதும், மீதி நாளைக்கு வந்து பார்த்துக்கலாம்” என்று கவின் கூறியதும் கலைந்தவர்கள்

 மாதுரி “ஒரு நிமிஷம்” என்றதும் நின்றனர்

“நீங்க எல்லாரும் தினமும் வேலைக்கு லீவ் போட்டுட்டு இங்க வந்துட்டு இருக்க முடியாது. சோ, நான் தினமும் யாதவ் கூட வரேன். இன்னமும் ஜானவிக்கு நாம யாதவ்’க்கு தெரிஞ்சவங்க தான்னு தெரியல.

அதனால கொஞ்ச நாளைக்கு நாம அத மெய்ன்டைன் பண்ணனும். ஒரு ரெண்டு மூணு நாள் கழிச்சு, நான் அவகிட்ட கொஞ்சம் நெருங்கினதுக்கு அப்பறம், வேற யாராவது என் கூட வாங்க. அப்பறம் ரெண்டு நாள் கழிச்சு இன்னொருத்தர். இப்படி எல்லாம் உட்டாலக்கடி வேலை செஞ்சா தான் நாம இவளைப் பிரண்டு பிடிக்க முடியும்” என்று கூறி மாதுரி நிறுத்தவும்

அவளைத் தொடர்ந்த சார்விக், “அடேங்கப்பா… முதல்ல நாம எல்லாரும் ஒவ்வொருத்தரா அவங்க கூட பிரண்டு ஆகி, அப்பறம் அண்ணனை பிரண்டு பிடிக்க வச்சு, அதுக்கப்பறம் அவனுக்கு அவங்கள கல்யாணம் பண்ணி வச்சு… கஷ்டம் கஷ்டம்…” என்று புலம்பவும்

சாதனா அவனிடம், “இதுல உனக்கென்ன கஷ்டம்?” என்று வினவினாள்

அதற்குச் சார்விக் பதில் கூறும் முன்பாகவே கவின்,”அது ஒண்ணும் இல்ல சது, உனக்கு மாப்பிள்ளை ரெடி, அடுத்து உங்க அண்ணனுக்குக் கல்யாணம் பண்ணினா தான அவனைப் பத்தி  யோசிப்பீங்க. அந்த அக்கறை தான்” என்று கூறவும்

அனைவரும் அவனை “அப்படியா” என்பது போலப் பார்க்க, சார்விக்கோ, “அதே..” என்பது போல் தலையை ஓர் பக்கமாக ஆட்டினான்

“அடப்பாவி” என்று அவனை மேலும் கேலி செய்து விட்டே, அனைவரும் அங்கிருந்து கிளம்பினார்.

இவ்வாறு முதல் நாள் கழிய, அன்றிரவு…”மறுபடியும் நாளைக்கு யாராவது வந்து என்ன தொந்தரவு பண்ணட்டும், நிஜமா போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கறனா இல்லையானு பாரு?” என்று மனதிற்குள் கருவியவாறே உறக்கத்தைத் தழுவினாள் ஜானவி.

ஆனால் மறுநாள் இவர்களில் யாருமே அங்கு ஜானவியைச் சந்திக்க வரவில்லை. இவ்வளவு ஏன்… யாதவ் கூட அந்த அகழ்வாராய்ச்சி நடைபெறும் இடத்திற்கு வரவில்லை.

“ஒரு நாள் முழுக்க வந்து என்ன தொல்லை பண்ணினாங்க. ஆனா அடுத்த நாள் யாருமே வரல? என்ன விஷயமா இருக்கும்?” என்று யோசித்தவள்

“சரி அவங்க வந்து நம்மள தொந்தரவு பண்ணலேன்னா நமக்கு நல்லது தான்” என்று எண்ணியவாறே அந்த யோசனையைக் கை விட்டாள்

ஆனால் இரண்டு நாட்கள் கழித்து மாதுரி மட்டும் அங்கு ஜானவியைப் பார்க்க வந்தாள். அதை பார்த்த ஜானவிக்கு, ஒரே ஆயாசமாக இருந்தது

ஆனால் வந்த மாதுரியோ, அவளிடம் எதுவும் பேசாது, ஆதித்யனிடம் சென்று பேச ஆரம்பித்தாள்.

“என்னது இது, அன்னைக்கு வந்தவங்கள்ல இந்தப் பொண்ணும் ஒருத்தி, ஆனா இன்னைக்கு இங்க மறுபடியும் நம்மள தொல்லை பண்ண வந்துருக்கானு பாத்தா, இவ பாட்டுக்கு ஆதி சார்கிட்ட போய்ப் பேசிட்டு இருக்கா? என்ன விஷயமா இருக்கும்?” என்று எண்ணியவாறே, மெதுவாக அவர்களின் அருகே சென்றவள், அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்டதும் திகைத்தாள்

பின்ன என்னவாம்..

ஏதோ ஒரு பைத்தியக்கார கும்பல் தன்னிடம் வந்து வம்பு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தால், இந்த மாதுரி, ஆதித்யனை அப்பா என விளித்துப் பேசிக் கொண்டிருந்தால், திகைக்கத் தானே செய்வாள் ஜானவி

அவள் அவ்வாறு நின்றிருக்க, அவள் வந்ததைக் கண்ட ஆதித்யன், மாதுரியைத் தனது மகளென்று அறிமுகம் செய்தார். மாதுரியும் தன் தந்தை அறியாத வண்ணம், ஜானவியைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்

எது எப்படியோ… ஒத்த சிந்தனை உடைய இருவரும், வெகு விரைவில் தோழிகள் ஆகி விட்டனர். முதல் நாள் சம்பவத்தைப் பற்றி மட்டும் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை.

ஒரு வாரம் கழித்து, ஆதித்யன் கூறியது போலவே மேலும் நான்கு பேர், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என அவளுடன் வேலை செய்ய வந்தனர்.

இன்னும் ஒருவன் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவன் வந்து சேர இன்னும் பத்து, பதினைந்து தினங்கள் ஆகுமெனவும் ஆதித்யன் கூறினார்.

மற்ற நால்வருக்கும் மலையூரைப் பற்றி எடுத்துச் சொல்லி, இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆராய்ச்சி பற்றியும் எடுத்துக் கூறினாள் ஜானவி 

அடுத்த நாள் காலை, அவர்கள் ஐவரையும் அழைத்த ஆதித்யன், “இன்னைல இருந்து தான் நம்ம வேலை தொடங்குது, ஸ்பெஷல் பெர்மிசன்ல இங்க வேலைக்கு வந்துருக்கோம். நம்ம கூட இன்னும் நிறையப் பேர் வேலை செய்றாங்க தான், ஆனா அவங்க எல்லாரும் மலையடிவாரத்துல வேலை செஞ்சுட்டு இருக்காங்க.

எனக்கு இந்த மலை மேல ஒரு கோவில் இருக்கறதா தகவல் வந்துச்சு. அதனால, நாம இப்போ மலையோட உச்சியிலே தான் ஆராய்ச்சி செய்யப் போறோம். என்ன ஜானவி, உனக்கு இந்த மலைக் கோவில் பத்தி ஏதாவது தெரியுமா?” என்று ஜானவியைப் பார்த்துக் கேட்க

“ஆமா சார், அதைப் பத்தி என்னோட பாட்டி சொல்லிருக்காங்க. அது பெருமாள் கோவிலுன்னும், அவங்க சின்ன வயசுல அவங்களுக்கு யாரோ அதைப் பத்தி சொன்னாங்கன்னும் சொல்லிருக்காங்க. ஆனா அவங்களுக்கே அது உண்மையை இல்லையானு முழுசா தெரிலயாம் சார்” என்று கூடி முடிக்கவும்

“எஸ்…அது உண்மையா இல்லையானு தெரிஞ்சுக்கறதுக்குத் தான் இந்த ஆராய்ச்சி. ஓகே எல்லாரும் இன்னைக்கே வேலைய ஆரம்பிச்சுடலாம்” எனவும், அனைவரும் ஆர்வமாக வேலையில் ஈடுபட்டனர்

மலை உச்சியில் அகழ்வாராய்ச்சி செய்ய ஆரம்பித்த இரு தினங்களிலேயே, அங்குக் கோவில் இருந்ததாகச் சொல்லப்படும் கூற்றுக்கு உண்மை சேர்க்கும் விதமாக, அங்கு ஏதோ கோபுரம் இருந்ததற்கான சிதை படிமம் கண்டறியப்பட்டது

அவர்கள் குழுவில் உள்ள அனைவரும் ஆனந்தமும், அதிசயமும் ஒருங்கே கொண்டனர்.

அவர்கள் அனைவரையும் விட, ஆதித்யனே பேரானந்தத்துடனும், முகத்தில் கர்வத்துடனும் விளங்கினார்.

அந்தச் சிதை படிமத்தைக் கண்டறிந்த அன்றிரவு, ஒரு மணியளவில், மொபைலில் இருந்து ஜானவிக்குக் கூப்பிட்ட ஆதித்யன், “ஜானவி… நம்ம சைட்ல இருந்து எனக்கு முக்கியமான விஷயம் கிடைச்சிருக்கு” என்று கூறினார்.

அதைக் கேட்டு ஜானவி, ” அப்படியா சார்? அது என்ன முக்கியமான விஷயம்” என்று கேட்கவும்

“அது என்னனு நாளைக்குக் காலையில் சொல்றேன் மா, ஆனா இந்த விஷயத்தை நம்ம டீம்ல இருக்கறவங்ககிட்ட கூடச் சொல்ல வேணாம். நானே உனக்கும் இன்னொரு ஆளுக்கும் தான் சொல்லிருக்கேன்” எனவும், ஆச்சர்யப்பட்டாள் ஜானவி

“ஓ… அப்படியா சார். அப்போ எனக்குக் காலையிலேயே சொல்லுங்க. இப்போ நீங்க எங்க இருக்கீங்க?” என்று கேட்கவும்

“நான் இப்போ தான் மலையை விட்டு  கீழ இறங்கறேன் மா…” என்று கூறிக் கொண்டிருந்தவரின் குரல், எதையோ பார்த்துப் பயந்ததைப் போலிருக்க

“ஜானவி நான் அப்பறம் பேசறேன்” என்று கூறியவர், அவளது பதிலைக் கூடப் பொருட்படுத்தாது போனை கட் செய்தார்

இந்த தொடரின் அனைத்து பகுதிகளையும் வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

    • உங்கள் கருத்துக்கு நன்றி சகி.. அடுத்த அத்தியாயத்திலிருந்து கதையின் வேகம் கூடும்.. தொடர்ந்து வாசியுங்கள்..

  1. மிக அருமையான கதை… நிறைய கதாபாத்திரங்கள் இருந்தாலும் அனைவருக்குமே முக்கியத்துவம் கொடுத்துள்ளீர்கள்.. 💐வாழ்த்துக்கள் விபா☺️

ஒரிசா பயணம் (இறுதிப் பகுதி) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

நீ வருவாயென❤ (கவிதை) மா.பிரேமா