in

ஒரிசா பயணம் (இறுதிப் பகுதி) – சுபாஷினி பாலகிருஷ்ணன்

கோனார்க் சூரியனார் கோவிலைப் பார்த்து விட்டு, காலை சிற்றுண்டியை முடித்துக் கொண்டு, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்திரபாகா கடற்கரைக்குச் சென்றோம்

சந்திரபாகா கடற்கரை

தூய்மையாக இருக்கும் கடற்கரைகளுக்கு மத்திய அரசு வழங்கும் தூய்மை கடற்கரைக்கான “நீலக்கொடி விருது” இந்த கடற்கரைக்கு கொடுக்கப்பட்டுள்ளது

கடற்கரைக்கு வருபவர்கள், நடப்பதற்கு நடைபாதை தனியாக போடப்பட்டு, குழந்தைகள் விளையாடுவதற்கு பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது

பரந்து விரிந்திருக்கும் வங்காள விரிகுடா. அலைகளின் சப்தம். இங்கு கடல் நீர் மிகவும் தூய்மையாக இருக்கிறது. மக்கள் தங்கள் கவலைகளை மறந்து நிம்மதியாக குடும்பத்துடன் கடற்கரையில் விளையாடுகின்றனர்

நாங்களும் ஒரு மணி நேரம் நிம்மதியாக குடும்பத்துடன் விளையாடி சந்தோஷமாக இருந்து விட்டு, அங்கிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சில்கா ஏரிக்கு கிளம்பினோம். போகும் வழியில் மணல் சிற்ப கண்காட்சியையும் பார்த்து விட்டு கிளம்பினோம்.

சில்கா ஏரி

சந்திரபாகா கடற்கரையிலிருந்து கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும், ஆசியாவிலேயே மிகப் பெரிய ஏரிகளில் ஒன்றான சில்கா ஏரிக்கு காரில் பயணப்பட்டோம். மதியம்  1.30 மணிக்கு சில்கா ஏரியை அடைந்தோம்

நல்ல வெயில் வேறு. கார் டிரைவர் படகில் செல்லும் போது, ஷால் மற்றும் ஜாக்கெட் மறக்காமல் அணிந்து கொண்டு செல்லுங்கள் என்று அறிவுறுத்தினார்.

மதிய உணவை எடுத்துக் கொண்ட நாங்கள், படகை வாடகைக்கு எடுப்பதற்காக சென்றோம். 12 மணிக்குள்ளாக நாம் சென்று விட்டால், பொதுப் படகில் செல்ல முடியும். நாங்கள்   தாமதமாக சென்றதால், தனி மோட்டர் படகினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு  கிளம்பினோம்.

படகில் அரை மணி நேரப் பயணம். ஒரு சிறிய மணல் திட்டில் படகை நிறுத்தினார்கள். அங்கிருந்த ஒரிசா மாநில அரசு அலுவலர், ஏரிக்குள் இருக்கும் சிகப்பு நண்டுகளை எங்களுக்கு காண்பித்தார்.

ஏரியில் தண்ணீர் நிறைய இருக்கும் பொழுது, சிகப்பு நண்டுகள் தண்ணீருக்குள் இருக்குமாம். ஏரியில் தண்ணீர் குறையும் பொழுது, அந்த மணல் திட்டு முழுவதும் குவியும் நண்டுகளால், அந்த மணல் திட்டு, சிவப்பு நிறத்தில் மாறி விடும் என்ற தகவலைத் தெரிவித்தார்.

பின்பு கடலிலிருந்து எடுக்கப்பட்ட சிப்பிகள் மற்றும் பவளப் பாறைகளில் இருந்து கிடைக்கும் கற்களை நம் கண் முன்னாலேயே உடைத்து காண்பிக்கின்றனர்

வைரத்தை தவிர மற்ற எல்லா நவரத்தின கற்களும் கடலுக்கு அடியில் இருந்தே கிடைக்கின்றன. எல்லா சிப்பி மற்றும் பவளப்பாறைகளில் நவரத்தின கற்கள் இருக்க வாய்ப்பில்லை.

அப்படி உங்களுக்கு நவரத்தினகற்களில் ஏதாவது கிடைத்தால், நீங்கள் அதை தாராளமாக விலை கொடுத்து வாங்கிக் கொள்ளலாம். இது முழுக்க முழுக்க உங்களின் விருப்பத்தை பொறுத்ததே ஆகும். இதற்கு ஒரிசா மாநில ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம்.

சாகர்மிலன்

பின்பு அங்கிருந்து “சாகர்மிலன்” என்னும் இடத்திற்கு  படகில் கூட்டிச் செல்கின்றனர். ஏரி முடியும் இடமும் கடல் தொடங்கும் இடமும் ஒரு புள்ளியில் அமைவதால், அந்த இடத்தை “கடல் சங்கமிக்கும் இடம்” (சாகர்மிலன்) என்கின்றனர்

அதிக கூட்ட நெரிசல் இல்லாமல் அழகாக இருக்கும் வங்காள விரிகுடாவை பார்க்கும் பொழுது மனது மிகவும் லேசாகி விடுகிறது.

குடும்பத்தோடு நாங்கள் நால்வரும் கடற்கரை மணலில் கால் பதித்து நடக்க, கடல் அலைகள் கால் தடயங்களை தண்ணீரில் அழிக்க, நேரம் போனதே தெரியவில்லை.

டால்ஃபின் பாயிண்ட்

பிறகு அங்கிருந்து டால்ஃபின் பாயிண்ட்டிற்கு படகிலேயே ஒரு மணி நேர பயணம். வானம் அதற்குள் தனது மதிய வெயிலை தொலைத்து  மாலைக்கு தயாராகிக் கொண்டிருந்தது.

திடீரென கண்ணுக்கெட்டிய தூரத்தில் இரண்டு டால்பின்கள் தண்ணீருக்குள் இருந்து இங்கும் அங்கும் குதித்ததை மகிழ்ச்சியுடன் பார்த்து விட்டு அங்கிருந்து ஏரிக்கரைக்கு திரும்பினோம்.

டால்பின் பாயிண்ட்டிற்கு சென்று வர கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணம். கடுமையான குளிர்.

அப்பொழுது தான் டாக்ஸி டிரைவர் ஏன் ஷால், ஜெர்க்கின் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார் என்று புரிந்தது. படகு நிறுத்தத்திற்கு மாலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்தோம்.

வரும் வழியிலேயே இரவு 9 மணி போல  இருட்டிவிட்டது. படகோட்டிக்கு எங்களுடைய நன்றியைக் கூறிவிட்டு அங்கிருந்து டாக்சி நிறுத்தத்திற்கு வந்தோம்.

பூரி ஜெகந்நாதர் கோவில்

சில்கா ஏரியிலிருந்து புறப்பட்ட நாங்கள் முக்கால் மணி நேர பயணத்தில் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

இது ஒரு வைஷ்ணவ ஸ்தலமாகும். விஷ்ணு இங்கு ஜெகன்நாதராக, பலராமர்  மற்றும் தங்கை சுபத்திரையுடனும் வீற்றிருக்கிறார்.

ஆதி சங்கரரின் 4 பீடங்களில் பூரி ஜெகன்நாதர் ஆலயமும் ஒன்று. தலவரலாற்றின்படி ஜரா என்ற வேடன், கிருஷ்ணரை காட்டில் மான் என்று நினைத்து அம்பு எய்திவிட, கிருஷ்ணர் இறந்து மரக்கட்டை போல் ஆகி விடுகிறார்.

சில காலம் கழித்து, கலிங்கத்தை ஆண்டு வந்த அரசர் அனந்தவர்மனின் கனவில், கடலில் வரும் பொருளைக் கொண்டு கோவில் எழுப்புமாறு கட்டளை வருகிறது. அதே போல் கடலில் மரக்கட்டை வந்து சேர, சிற்பங்களை செதுக்குவதற்கு அரசர் எல்லாத் தச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கிறார்.

விஷ்ணுவே முதுமையான தச்சர் வேடத்தில் வந்து, அரசர் குறிப்பிட்ட நாட்களுக்குள் சிலைகளை செய்து முடிப்பதாகக் கூறி அதற்கு ஒரு நிபந்தனையையும் விதிக்கின்றார்.

சிலைகளை செய்து முடிக்கும் முன்பாக யாரும் கதவினை திறந்து யாரும் பார்க்கக் கூடாது என்று தச்சர் வேடத்தில் இருந்த விஷ்ணு கேட்டுக் கொள்கிறார்.

மூன்று நாட்கள் அறையின் உள்ளே இருந்து வந்த உளியின் சத்தம் நான்காவது நாள் நின்று போகவே, தச்சர் வேலையை முடித்து விட்டார் என்று நினைத்த அரசன், கதவை திறந்து பார்த்தார்.

அப்போது முற்றுப் பெறாத மரக்கட்டையாலான சம அளவிலான முகமும், கைகளும், பெரிய அளவிலான கண்களும் உடைய ஜெகன்நாதர், பலராமர், சுபத்திரை சிலைகள் காணப்பட்டன.

அதே சிலைகளைக் கொண்டு பூஜை செய்யுமாறும், வாழ்க்கையில் மக்கள் அவசரப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும் என்ற பாடம் இந்த புனிதத் தலத்தால் அறியப்படும் பாடம் என்றும் அசரீரி கூறியது.

ஆண்டுதோறும் நடக்கும் பூரி ஜெகன்னாதர் யாத்திரை மிகவும் பழமையான ரத யாத்திரையாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது மரக்கட்டையால் மூலவர் சிலைகள் செதுக்கப்படுகின்றன.

கோவிலின் மேற்கூரையில் இருக்கும் கொடி, காற்று வீசும் எதிர் திசையில் வீசுவது இக்கோவிலின் சிறப்பு. கோவிலின் மேற்கூரையில் இருக்கும் சுதர்சன சக்கரம், கோவிலின் எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் நேராக பார்ப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.

பாத்திரங்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்து, கோவில் பிரசாதங்கள் சமைக்கப்படுகிறது. ஆனால் மேலே உள்ள பாத்திரத்திலேயே முதலில் சமையல் தயாராகிறது. பின்பு அதற்கடுத்த பாத்திரம் என்று மேலிருந்து கீழாக சமையல் தயாராவது  இங்கு விசேஷமாக கருதப்படுகிறது.

எல்லா கோவில்களின் கூரைகளிலும் பறவைகள் உட்கார்வதைப் பார்க்க முடியும். ஆனால் பூரி ஜெகன்நாதர் கோவிலில் பறவைகள், கோவிலின் மேற் கூரைகளில் உட்காருவது இல்லை.

கோவிலுக்கு உள்ளே சென்றவுடன் அலையின் சப்தம் கேட்பதில்லை. ஆனால் கோவிலின் வாசலுக்கு வரும் பொழுதே, அலையின் சப்தத்தை கேட்க முடிகிறது. கோவிலின் நிழல் எப்பொழுதும் கீழே விழுவதில்லை.

கோவில் தரிசனத்தை முடித்து விட்டு, ஊரில் இருந்து கிளம்பிய நாங்கள் இரவு 10.15 மணிக்கு புவனேஷ்வர் ஹோட்டலைச் சென்றடைந்தோம். நாள் முழுக்க அலைந்த களைப்பில் சாப்பிட்டு விட்டு நன்றாக அயர்ந்து தூங்கி விட்டோம்.

உதயகிரி கந்தகிரி குகைகள்

இரண்டாம் நாள் காலையில் புவனேஸ்வரில் உள்ள உதயகிரி கந்தகிரி குகைகளுக்குச் சென்றோம். 2-ஆம் நூற்றாண்டில் அரசன் காரவேந்தன் காலத்தில், இயற்கையும் செயற்கையுமாக கட்டப்பட்ட குகைகளே உதயகிரி கந்தகிரி குகைகள்.

உதயகிரியில் 18 குகைகளும், கந்தகிரியில் 15 குகைகளும் இருக்கின்றன. ராணிகும்பா குகை நல்ல அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கற்சிற்பங்களால் செதுக்கப்பட்டிருக்கிறது.

விநாயகரின் உருவ அமைப்பை கொண்டிருக்கும் குகை “கணேஷ்கும்பா” என்று அழைக்கப்படுகிறது.

“ஹத்திக்கும்பா” எனப்படும் குகையின் வாசலில், இரு யானை சிற்பங்கள் காணப்படுகின்றன. ஹத்திக்கும்பாகு கையில் பிராமி எழுத்துக்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை காண முடிகிறது.

சமணத் துறவிகளும் பௌத்த துறவிகளும் தங்குவதற்காக, நிறைய குகைகள் கட்டப்பட்டிருக்கின்றன.

உதயகிரி கோட்டை அருகிலேயே, லலித்கிரி எனுமிடத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் செயல்படுகிறது. தொல்லியல் ஆராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட நான்கு புத்தவிகாரங்களையும், பிராமி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டுக்களையும், புத்தரின் பழமையான சிலைகளையும் நாம் அருங்காட்சியகத்தில் காணலாம்.

இரண்டு குகைகளைப் பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பிய நாங்கள் தௌலி சாந்தி ஸ்தூபத்திற்கு சென்றோம்.

தௌலிசாந்தி ஸ்தூபம்

உலகத்தில் அமைதியே சிறந்தது என்பதை நிரூபிப்பதற்கான அமைதிச் சின்னம் “தௌலி சாந்தி ஸ்தூபம்”

கலிங்கப் போர் கி.மு.268-ல் நடைபெற்றது. மிகப் பெரிய போரானகலிங்கப் போரில் வெற்றி பெற்ற அசோகர், தன்னைச் சுற்றி ரத்த ஆறு ஓடுவதைக் கண்டு மனம் மாறினார். போரின் தாக்கத்தை உணர்ந்த அசோகர், புத்தமதத்தை தழுவினார்.

புத்த மதத்திற்கு மாறிய பின் எல்லா இடங்களிலும் அமைதிக்கான சாந்தி ஸ்தூபங்களை அமைத்தார். கலிங்கப் போர் நடைபெற்ற தயாநதிக் கரைக்கு அருகில் ஃபுஜி குருஜி என்ற புத்தமத துறவியின் உதவியுடன் அமைக்கப்பட்டதே சாந்தி ஸ்தூபமாகும்.

ஸ்தூபத்தில் அசோகர் போர் புரிந்த முறை, போரில் வெற்றி பெற்றது, போதி மரத்தின் அடியில் புத்தர் அமர்ந்துள்ளது, அசோகர் தன் உடைவாளை புத்தரின் சரணத்தில் ஒப்படைத்து புத்தமதத்தை தழுவியது போன்ற சிற்பங்கள் காணப்படுகின்றது.

நம்பர் ஒன் மார்க்கெட்

தௌலி சாந்தி ஸ்தூபத்தைப் பார்த்துவிட்டு, புவனேஸ்வரின் யூனிட் நம்பர் ஒன் மார்கெட்டிற்குச் சென்றோம்.

வீட்டிற்கு தேவையான சாமான்கள், துணிக்கடைகள், அழகு சாதன பொருட்கள், குளிர் காலத்துக்கு தேவையான ஸ்வெட்டர்  என அனைத்து கடைகளும் இருந்தன.

வேண்டிய அனைத்தையும் வாங்கிக் கொண்டு ரூமிற்கு வந்த நாங்கள், நைட் ஹோட்டலில் கீழே சென்று சாப்பிட்டு விட்டு, களைப்பில் நன்றாக படுத்து தூங்கி விட்டோம்.

மறுநாள் காலை டிபனை முடித்துக் கொண்டு, புவனேஸ்வரில் இருந்து 6 கிலோ மீட்டரில் உள்ள முக்தேஸ்வரர் மற்றும் ராஜா ராணி கோவிலை தரிசிக்கச் சென்றோம்.

முக்தேஸ்வரர் கோவில்

கிபி 10-ஆம் நூற்றாண்டில், கலிங்கர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அழகிய வேலைப்பாடு கொண்ட கோவில் முக்தேஸ்வரர் கோவிலாகும்.

சிற்பக் கலைகளுடன் உள்ள தோரணவாயில் ஒரிசா கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாக நிற்கிறது. கோவிலின் மேற்கூரை விமானம் மிகவும் கூராக நேர்த்தியாக கட்டப்பட்டிருக்கிறது.

கோவிலில் விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, கணபதி ஆகிய கடவுள்கள் சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். யாழி முகங்கள், நடன மங்கைகள், சிங்கங்கள் குரங்குகள், மயில்கள் போன்ற சிற்பங்கள் கோவிலில் மிகவும் அழகாக செதுக்கப்பட்டுள்ளன.

ராஜா ராணி கோவில்

கிபி 11-ஆம் நூற்றாண்டில் கலிங்கர்கள் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட கோவில் ராஜா ராணி கோவில். இங்கு மூலவர் சிலை இல்லை. கோவிலில் ஆண் பெண் இரட்டை சிற்பங்கள் நிறைய காணப்படுகிறது.

கருவறை, முகப்பு என இரண்டு பிரிவுகளாக கோவில் கட்டப்பட்டிருக்கிறது கோவிலின் உயரம் 18 மீட்டர் உயரத்தினைக் கொண்டு கோவிலின் முகப்பு பிரமிடு வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. சிகப்பு மற்றும் மஞ்சள் நிற கற்களைக் கொண்டு கோவில் கட்டப்பட்டுள்ளது.

கோவில்களை தரிசித்து விட்டு மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஹோட்டல் ரூமிற்கு திரும்பியவர்கள், சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு, சென்னை திரும்புவதற்கு எல்லா பொருட்களையும் எடுத்துக் கொண்டு தயாராகினோம்.

மாலை  4.30 மணிக்கு ஹோட்டல் அறை காலி செய்து விட்டு, காரில் விமான நிலையத்திற்கு பத்து நிமிடத்தில் வந்து விட்டோம். மாலை 6 மணிக்கு புவனேஸ்வரில் இருந்து விமானத்தில் புறப்பட்டவர்கள், சரியாக இரவு 7.30க்கு சென்னை திரும்பினோம்.

வீட்டிற்கு வரும் வரை, போய் வந்த பயணத்தினை மனதில் அசை போட்டுக் கொண்டே வந்தோம். ஒரிசா பயணம், மனதிற்கு நிறைவைத் தந்தது.

இந்தியா, கலாச்சாரத்திற்கும் பண்பாட்டிற்கும் கட்டிடக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தேசம். ஒவ்வொரு மாநிலத்திலும் போற்றப்பட வேண்டிய கோவில்களும் பண்பாடுகளும் நிறைந்து காணப்படுகின்றது.

நவீனம் என்ற பெயரில் நம் பொக்கிஷங்களை மறக்காமல், பண்பாட்டிலும், அறிவியலிலும், வானசாஸ்திரத்திலும், சமூக வாழ்வியலிலும் மிகவும் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் இந்தியாவின் பண்பாட்டை, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பணியில், ஒரு துரும்பாக இந்தப் பயணக் கட்டுரை அமையும் என நம்பிக்கை கொண்டு, ஒரிசா பயணக் கட்டுரையை இனிதே முடிக்கின்றேன்

என் நினைவுகளோடு பயணித்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

#ad

Valentine Gifts 👇


Gift your better half these Romance Novels for Valentines Day – Amazon India Site👇

Gift your better half these Romance Novels for Valentines Day – Amazon.com (USA) Site👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அசோகா அல்வா (சியாமளா வெங்கட்ராமன்)

    நீரினைத் தேடிடும் வேரென நான்❤ (அத்தியாயம் 4) – விபா விஷா