பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
திருத்தலம் அறிவோம் – திருக்கருகாவூர்
அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில்
காவிரி கரை புரண்டோடும் தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகாவில், திருக்கருகாவூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது ‘கருக்காத்த நாயகி உடனுறை முல்லைவன நாதர் சுவாமி திருக்கோயில்’. திருக்கருகாவூர் என்னும் திருக்களாவூர் மூவர் பாடல் பெற்ற தலம்
திருஞானசம்பந்தர் வாக்குப்படி..’ தீ அழல் நெருப்பு வண்ணனாக ‘விளங்கும் சிவபெருமான்…அப்பர் பெருமான் வாக்குப்படி எல்லாமுமாய் காட்சி தரும் சிவபரம்பொருள் ‘முல்லைவனநாதர்’ என பெயர் பெற்ற ஈசன்
தாயின் வயிற்றில் உள்ள கருவை சிதையாமல் காக்கும் கருக்காத்த நாயகி ‘கர்பரட்சாம்பிகை’யாக அம்பிகை இங்கே கோவில் கொண்டிருக்கிறாள். எல்லா நலன்களும் நிறைந்து விளங்கும் திருத்தலம் திருக்கருகாவூர்
கோயிலின் அமைப்பு :
அவ்வூரின் நான்கு வீதிகளுக்கிடையே அழகுற அமைந்துள்ள இக்கோவிலின் கிழக்கே ராஜகோபுரமும், தென்புறத்தில் நுழைவு வாயிலும் அமைந்திருக்கிறது.
சுவாமி கோயிலுக்கு முன்னால் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவையும் உள்ளே நுழைந்ததும், வடபக்கம் வசந்த மண்டபம், அடுத்து முதலில் அமைந்துள்ள பெரிய பிரகாரத்தில் சுவாமி கோயிலும், வடபக்கம் அம்பிகை கோயிலும், தனித்தனி பிரகாரத்தில் இருக்கின்றன
இக்கோவிலில் சுவாமி ,விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு மூர்த்திகளாகவும் பின்புறம் லிங்கோத்பவர் இருக்கும் குடவரையில் அர்த்தநாரீஸ்வரர் அமைந்திருப்பதும் சிறப்பாகும்.
சுவாமிக்கு வடகிழக்கில் நடராஜர் சந்நிதியும், நவகிரகங்களும், தென்பக்கம் சோமாஸ்கந்தர் சன்னதியும்,அமைந்துள்ளன. நடராஜருக்கு எதிரில் நால்வர் சன்னதி அமைந்துள்ளது. மற்றும் துர்க்கை,மகாலெஷ்மி , தட்சிணாமூர்த்தி ஆகியோரும் தனித்தனியாக வீற்றிருக்கின்றனர்
நேருக்கு நேராக அமைந்து ஒரே நாளில் தரிசிக்க வேண்டிய பஞ்ச ஆரண்ய தலங்களில் முதல் இடம் பெற்ற தலம் திருக்கருகாவூர்.
இத்தலத்தில் உசத் காலம் தரிசனம் செய்து விட்டு, ஏனைய நான்கு தலங்களில் காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தசாமம் ஆகிய காலங்களில் முறையே அவளி நல்லூர், அரித்துவாரமங்கலம், ஆலங்குடி, திருக்கொள்ளம்புதூர் தரிசிப்பது சிறப்பாக கருதப்படுகிறது
உசத் காலத்தில் இத்தலத்தில் தரிசனம் செய்து விட்டு, ஏனைய காலங்களில் மற்ற தலங்களில் தரிசிப்பதற்கு ஏதுவாக இத்திருக்கோவிலில் அதிகாலை 5:30 மணிக்கு உசத் கால பூஜை செய்விக்கப்படுகிறது
இத்தலத்தின் தல விருட்சம் முல்லைக்கொடி. எனவே இத்தலத்து இறைவன் பெயர் ‘முல்லைவனநாதர்’. மகப்பேறு அளிப்பதால், கர்ப்ப புரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
லிங்கத் திருமேனியில் முல்லைக்கொடி படர்ந்திருந்த வடுவை இன்றும் காணலாம். புற்றுருவாக இருப்பதால், இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது.
அம்பிகை குழந்தைப்பேறு அருளுவதால் ‘கர்ப்பரட்சாம்பிகை’ என்று அழைக்கப்படுகிறார்.
கோயிலின் புராணச்சிறப்பு
படைப்புக் கடவுளாகிய பிரம்மன் ஒரு சமயம் தன் தொழிலின் காரணமாய் ஆணவம் கொள்ள, அத்தொழில் கை கூடாது போயிற்று. எனவே பிரம்மன் இங்கு வந்து தென்மேற்கு மூலையில் தன் பெயரால் ஒரு தீர்த்தத்தை நிறுவி, நீராடி, முல்லைவன நாதரை பூஜிக்க மீண்டும் படைப்பு தொழில் கை வரப் பெற்றார் என்பது வரலாறு
சுவர்ணாகரனுக்கு அருள் புரிந்தது
சுவர்ணாகரன் என்ற வைசியன் தான் செய்த தீவினை காரணமாய் பேயுரு அடைந்து, கார்க்கியர் என்ற முனிவரிடம் புகலடைந்தான்.
அவரும் திருக்கருகாவூரில், திருவாதிரை நன்னாளில், பிரம்ம தீர்த்தத்தில் அவனை நீராட செய்யவே பேயுரு நீங்கி, பெருமானை வழிபட்டான். முனிவரும் முல்லைக் கொடியின் கீழ் இருந்த சிவபெருமானுக்கு ஆலயம் ஒன்று அமைத்தார்
கௌதமர் பூஜித்த வரலாறு
ஒரு சமயம், முனிவர்கள் சிலரது சூழ்ச்சியால், கௌதமர் பசு கொலைக்கு ஆளாக, அந்த சமயம் போதாயனர் என்னும் முனிவரின் வழிகாட்டலில், முறைப்படி கௌதமர் திருக்கருகாவூர் வந்து, புனித நீராடி, சிவலிங்கத்தை பூஜித்தார்
அவருடைய பசு கொலை பாபம் நீங்கியது. அவரால் பூஜிக்கப்பட்ட லிங்கம் கௌதமேஸ்வரர் என்ற பெயருடன் அம்பிகையின் சந்நிதி எதிரில் தனி கோவிலாக இருக்கிறது
மன்னர் குசத்துவனது சாப நீக்கம்
ஒரு சமயம் மன்னன் குசத்துவன் சத்திய முனிவரது சொல்லிற்கு மாறாக, அவர் இருந்த வனத்தில் வேட்டையாடி, அவருடைய சாபத்தால் புலியின் உருவைப் பெற்றார்.
பிறகு முனிவரை வணங்கி வேண்ட ,அவர் கூறிய படி இத்தலத்தின் சத்தியகூப தீர்த்த விசேஷத்தால் மீண்டும் தன் சுய உருவைப் பெற்றார். இக்கோவிலின் சிவாச்சாரியார்களுக்கு இல்லங்கள் அமைத்து கொடுத்தார்
சங்கு கர்ணன் பேறு பெற்றது
இவன் ஓர் அந்தண குமாரன். தன் வித்யா குருவின் விருப்பப்படி அவர் குமாரியை திருமணம் செய்து கொள்ள மறுத்தான். அதனால் அவர் சாபத்திற்கு ஆளாகிப் பேயுரு பெற்றான்.
நல்வினைப் பயனால், திருக்கருகாவூர் எல்லையை அடைந்ததும், பேயுரு நீங்கப் பெற்றான். பின் மார்கழி திருவாதிரை நாளில், பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, சிவபூஜை செய்து, நற்பேறு பெற்றான்.இவ்வாறு பல புராண சிறப்புகளைக் கொண்டது இத்திருத்தலம்.
அன்னையின் சிறப்பு
பல ஆண்டுகள் குழந்தை பேறு இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், திருமணம் கூடி வராத பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரவும், அன்னை அருளுகிறாள்.
அன்னை கருகாத்த நாயகியை வேண்டி, அவள் சன்னதி படியை நெய்யால் மொழுகி, அன்னையின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட நெய்யை 48 நாட்கள் உண்டு வந்தால், குழந்தை பேறு கிட்டும் என்பது கண்கூடு.
மேலும், கருவுற்ற பெண்கள் இத்தலத்து இறைவியை வேண்டி, பூஜித்த அவளது நெய்யை வயிற்றில் தடவி வந்தால், கரு காக்கப்படுவதுடன் சுகப் பிரசவம் நிகழும் என்பது கண்கண்ட உண்மையாகும்
திருக்கோயிலின் மகிமை
முன் காலத்தில்,’ முல்லை வனம்’ என்ற இவ்விடத்தில் முனிவர்களுக்கு பணிவிடை செய்து வந்த நித்துருவர், வேதிகை தம்பதிக்கு குழந்தை இல்லையென்ற குறை. முனிவர்கள் உபதேசித்தபடி, முல்லைவன நாதரையும் இறைவியையும் வணங்கி குழந்தைப்பேறு வேண்டினர்
அன்னையின் அருளால் வேதிகை கருவுற்றாள். தனித்திருந்த சமயம் கர்ப்ப அவஸ்தையால் மயக்கமாக இருந்த போது அங்கு வந்த முனிவர் ஊர்த்துவபாதர் பிட்சை கேட்க, வேதிகையால் அவருக்கு பிச்சையிட முடியவில்லை.
அவள் கருவுற்றிருப்பதையறியாத முனிவர் சாபமிட, வேதிகையின் கரு கலைந்தது. வேதிகை அம்பாளிடம் முறையிட அம்பாள் ‘கர்ப்பரட்சாம்பிகை’ யாக தோன்றி, கலைந்த கருவை ஒரு குடத்துக்குள் ஆவாகனம் செய்து, குழந்தை உருவாகும் நாள் வரையில் அதை காப்பாற்றி,’ நைந்துருவன்’ என்ற குழந்தையாக கொடுத்தாள்
இறைவியின் மகிமையை கண்டு கொண்ட வேதிகை, அன்னையை இத்தலத்தில் ‘கர்ப்பரட்சாம்பிகையாக எழுந்தருளி, கருவுற்றவர்களின் கருவை காப்பாற்ற வேண்டும்’ என்று பிரார்த்திக்க, அவள் வேண்டுகோளை ஏற்று, அம்பாள் அருள்பாலித்தாள்.
அது முதல் அம்பாளுக்கு கர்ப்பரட்சாம்பிகை, கருகாத்த நாயகி என்ற பெயர்கள் வழங்கி வரலாயிற்று
“கமுத முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே” என்று திருஞானசம்மந்தர் போற்றிப் புகழ்ந்த இத்தலத்தின் மகிமையை அறிந்iது கொண்டோம்.
நம்பிக்கையோடு ஆயிரக்கணக்கானவர்கள் ஆண்டு தோறும் வந்து தரிசித்துச் செல்லும் திருத்தலமாம் திருக்கருகாவூர் சென்று, நாமும் தரிசித்து அன்னையின் அருள் பெறுவோம்
(முற்றும்)
‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்
#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇
‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇
GIPHY App Key not set. Please check settings