இனி அடுத்தப் பயணம் எப்போது என்று ஆவலாய் காத்திருக்கும் இந்த வேளையில்,சென்று வந்த பயணங்களை மனதால் அசை போடுவதும் நல்ல அனுபவம் தானே
இந்த கட்டுரையில் மூன்றாண்டுகளுக்கு முன்னர் சென்ற ஒரு பயணத்தை உங்களோடு பகிர்கிறேன்
மகிழ்ச்சி என்பது புறக்காரணிகளை சார்ந்தது இல்லை. அது நம்மிடமே இருக்கிறது என்பதையும் பலருக்கும் புரிய வைத்திருக்கிறது இந்த கொரோனா காலம்.
டிசம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு சென்று திரும்பும் அலுவலக நண்பர்கள் மூக்கு மட்டும் கருத்து வருவதைப் பார்த்திருக்கிறேன். ஒரு பத்து பதினைந்து நாட்களுக்கு அவர்களின் மூக்குகள் தான் அவர்களின் முகவரி!
உலகின் வடபாதியில் இருக்கும் நாடுகளில் எல்லாருக்கும் வெயில் காலமாய் இருக்கும் போது, ஆஸ்திரேலியாவில் பனிக்காலம். ஐரோப்பா, ரஷ்யா மற்றும் வட அமெரிக்காவில் டிசம்பர் மாதத்தில் பனிமழை கொட்டும் போது, அங்கே சுட்டெரிக்கும் வெயில் காலம்.
நிலப்பரப்பில் ஆறாவது பெரிய நாடு என்பதால், ஆஸ்திரேலியாவின் எந்த ஊருக்கு போகிறீர்கள் என்பதை வைத்து, சூரிய பகவானின் கருணையின் அளவும் மாறும். நாங்கள் சிங்கப்பூரிலிருந்து 2018 டிசம்பர் மாதத்தில், மெல்பெர்ன் நகரத்துக்கு பறந்தோம்.
அங்கே எங்களின் நெருங்கிய நண்பர் திரு.பாலாஜி இருந்தார் என்பது தான், அங்கே செல்ல முக்கியக் காரணம். கிட்டத்தட்ட எட்டு மணி நேர பயணத்துக்கு பிறகு, எங்கள் நண்பரின் வீட்டோடும், சோற்றோடும் ஐக்கியமாகிப் போனோம்.
சோறும் வரலாறும் எப்பவுமே முக்கியம் இல்லையா?
கிறிஸ்துமஸுக்கு முதல் நாள் சென்று இறங்கிய எங்களை அழைத்துக் கொண்டு அந்த வட்டாரத்தில் எல்லா வீடுகளிலும் செய்திருந்த அலங்காரங்களைக் காட்டினார்கள்.
ஒரு சில வீடுகளில் கூரையை பிய்த்துக் கொண்டு உள்ளே இறங்கியிருந்தார் நம்ம கிறிஸ்துமஸ் தாத்தா!
அன்றைய தினம் பௌர்ணமி.
உண்மையாகவே கிட்ட வந்து சுட்டது நிலா!
இதுவரை பார்த்த நிலவின் பல அவதாரங்களில் விஸ்வரூபம் எடுத்து பெரிதாகவும், ஒளிரும் மஞ்சளோடும் இருந்தது
எங்கள் நண்பரின் வீடு இருந்த பகுதி முழுவதுமே தரை வீடுகள் என்பதால் பகல் பொழுதில் எங்கிருந்து பார்த்தாலும் நீல ஆகாயமும், சீரான வீடுகளின் வரிசையும் கண்களை ஈர்த்தன
அந்த பகுதியில் சுற்றிப் பார்க்க எங்கே செல்லலாம் என்று அவர்கள் பரிந்துரைத்த பட்டியலில் அங்கிருந்து இரண்டு மணி நேர தூரத்தில் இருந்த ஒரு விலங்கியல் பூங்கா, “என்ன விலை அழகே?” என்ற பாட்டில் வருமே அந்த பதினோரு அப்போஸ்தலர்கள் இருக்கும் அழகிய கடற்கரை, சவரன் தங்கச் சுரங்கம், யாரா நதியில் ஒரு சவாரி எனப் பலவும் இருந்தன.
நளதமயந்தியின் மாதவனாய் இருந்த எங்களுக்கு ஆஸ்திரேலியாவை பற்றி ஒன்றும் மனசிலாகலை!
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், பெல்ஜியம் நாட்டின் தலை நகரான ப்ரஸ்ஸல்ஸ் (Brussels) வேலைக்காக சென்றிருந்தேன். அந்த நாட்டு வயதான பெண்மணி ஒருவரின் நட்பு கிடைத்தது.
காங்கோ பெல்ஜியத்தின் காலனியாக இருந்த போது அங்கேயும் வசித்திருக்கிறார். பலநாட்டு கலாச்சாரங்களைப் பற்றி விவாதித்தோம். அவரது பார்வையில் ஆஸ்திரேலியா என்பது சென்ற நூற்றாண்டில், குற்றவாளிகளை நாடு கடத்தும் இடமாக இருந்தது.
அவர் சொன்ன தகவல் உண்மை என்பது போல விக்கி அண்ணன் 1,60,000 குற்றவாளிகளை 1788 முதல் 1868 வரை ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் பிரிட்டிஷ் படையினர் நாடு கடத்தியதாகச் சொல்கிறார்.
ஆனால் இன்றோ பல நாட்டை சேர்ந்தவர்களும் விரும்பி வந்து குடியேறி வாழும் நாடாக இருக்கிறது ஆஸ்திரேலியா. இரு ஆண்டுகளில் நிரந்தர குடியிருப்பாளராகி விடுகிறார்கள் (Permanent Resident)
சிங்கப்பூரின் அளவுக்கு குழந்தை பராமரிப்பு நிலையங்கள் அதிகமாய் இல்லை என்பதால், பல தமிழ் குடும்பங்களில், குழந்தைகளுக்கு ஐந்து வயதாகும் வரை தாத்தா பாட்டிகள் குழந்தைகளைப் பேண உதவுகிறார்கள்.
இன்னொரு கிளைச் செய்தி. ஆஸ்திரேலியாவில் பழங்குடியினர் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருக்கிறார்கள் என்றாலும், உலகத்துக்கு ஆஸ்திரேலியா அறிமுகமாகி இருநூற்றி ஐம்பது ஆண்டுகள் தான் ஆகின்றன.
முதலாவதாக நாங்கள் சென்ற இடம் சவரன் தங்கச் சுரங்கம், பல்லரட் (Sovereign Gold Mines, Ballarat). மெல்பெர்ன் நகரிலிருந்து சுமார் தொண்ணூறு நிமிட கார் பயணம்.
இந்நகரின் ஆரம்ப கால அசுர வளர்ச்சிக்கு இந்தப் பகுதியில் 1855 முதல் அடுத்த பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் கிடைத்த அதிக அளவு தங்கம் தான் முக்கியக் காரணம்.
உலக வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் அமெரிக்காவிலும் நடந்திருக்கின்றன. ஹாலிவுட் திரைப்படங்களான மெக்கன்னாஸ் கோல்ட் (Mackenna’s Gold), சாப்ளினின் கோல்ட் ரஷ் (Gold Rush) போன்றவை தங்கத்துக்காக மனிதர்கள் அலைந்தக் கதைகளை சொல்பவை.
ஒட்டகத்தோடு வாழ்ந்த மத்திய கிழக்கு நாடுகளில், கச்சா எண்ணையின் வரவு என்ன மாற்றத்தை கொண்டு வந்ததோ, அது தான் ஆஸ்திரேலியாவிலும் நடந்திருக்கிறது.
எங்களின் வண்டி அதிவேகத்தில் சென்ற போது, அங்கங்கே கொழுத்த செம்மறி ஆடுகளையும், ஆஸ்திரேலியாவின் அடையாளமான வெள்ளையில் கருப்பு திட்டுகள் கொண்ட பெரிய மாடுகளையும் பார்க்க முடிந்தது.
சவரன் தங்கச் சுரங்கம் இப்போது பயன்பாட்டில் இல்லை. 1970 முதல் இது சுற்றுலா வருபவர்களுக்கான ஒரு இடம்.
சவரன் சுரங்கத்தின் நுழைவு சீட்டு கொடுக்குமிடத்தில் ஒரு பெண்மணி இருநூற்றாண்டுகளுக்கு முந்தைய பாணியில் நீண்ட கையுறைகளும், தரையைத் தொடும் பாவாடையோடும் சுற்றி வந்து கொண்டிருந்தார். இது ஒரு பின்னோக்கிய காலப்பயணம் (Time Travel to Previous Centuries)
நிகழ் அருங்காட்சியகம் என்றார்கள்.
அது சரி, முதலில் என் கேள்விக்கு பதில் சொல்லுங்க!
சவரன்(Sovereign) என்ற சொல்லுக்கு என்ன பொருள்?
உங்களுக்குத் தெரியுமா?
இந்த சொல் லத்தீன் மொழியில் உருவாகி, ஆங்கிலம், பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகள் வழியாக தமிழர் நாக்குகளை வந்தடைந்திருக்கிறது. இந்த சொல்லின் பொருள் “எல்லாவற்றுக்கும் மேலானது”.
தங்கத்தை விட மேலான பொருளை மனிதன் அறியாததால் பொன் பேச்சு வழக்கில் சவரனாகி போனது.
நம் மக்களுக்கும் தங்கத்துக்குமான நெருக்கத்தை பல பெயர்களில் பார்க்கலாம்- தங்கராசுவில் தொடங்கி, கனகா, ஸ்வர்ணா வரை எல்லாமே தங்கத்துக்கான மற்ற பெயர்கள் தானே!
தமிழரின் வாழ்வியலோடு கலந்த இந்த உலோகத்தை பற்றிய நிறைய புதிய தகவல்களைத் தெரிந்து கொள்வோம்.
பல சமூகங்களில் மணமக்களின் நெற்றியில் தங்கக் காசுகளைக் கோர்த்துக் கட்டுவார்கள். சில வீடுகளில், தங்க மோதிரத்தில் தேன் தொட்டு, குழந்தையின் உதட்டில் வைத்து, பிறகே பெயரிடுவார்கள்.
ஆதிசங்கரருக்கு நெல்லிக்கனியை இட்ட ஏழை பெண்ணுக்காக அவர் பாடிய கனகதாரா சோஸ்திரம் (தங்க மழை பெய்ய வைத்த மந்திரம்) இன்றளவும் மிகப் பிரபலம்.
எல்லாத்தையும் பத்தி சொன்ன வள்ளுவர், பொன்னைப் பத்தி சொல்லாம விடுவாரா என்ன?
சுடச்சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு (குறள் 267)
தம்மைத் தாமே வருத்திக் கொண்டு ஒரு குறிக்கோளுக்காக உழைப்பவர்களை எந்த துன்பம் வருந்தினாலும் அவர்கள் பொன்னைப் போல பிரகாசிப்பார்கள் என்று கலைஞர் இந்த குறளுக்கு விளக்கம் அளிக்கிறார்.
சரி. சுரங்கத்துக்குள் நடை போடுவோம்.!
உள்ளே போனதும் நாங்கள் பார்த்த கடைகள் எல்லாமே இருநூற்றண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல இருந்தன.
தார் இல்லாத ஒரு விதமான மண் சாலையில், கொஞ்ச தூரம் நடந்து, பார்வையாளர்கள் கூட்டத்தில் சேர்ந்து கொண்டோம்.
நாடகம் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள்.
பிரிட்டிஷ் சீருடையோடு ஒரு படை அணிவகுத்து வந்தது. கொஞ்சம் சலசலப்பும், உரையாடல்களும்!.
சட்டெனமூன்றுமுறைஆகாயத்தைநோக்கிசுட்டார்கள்.
மேலே மற்றொரு கட்டிடத்திலிருந்த திருடனாக நடித்த வரை விலங்கிட்டு அழைத்து சென்றார்கள்.
எங்கள் மகனுக்கு அவன் எதிர்பாராமல் கேட்ட துப்பாக்கி ஒலி ஒரு வித கிலியை ஏற்படுத்தி இருந்தது.
சிங்கையில் யூனிவேர்சல் ஸ்டுடியோஸில் (Universal Studios) பல சாகசங்கள் நிரம்பிய, சண்டைக் காட்சிகள் நிறைந்த நாடகம் ஒன்றை நீர் நிறைந்த பரப்பில் நிகழ்த்திக் காட்டுவார்கள். இந்த டுமீல் சத்தம் அதைத் தான் நினைவுபடுத்தியது
அந்த நாடகம் முடிந்ததும் குதிரைகள் பூட்டிய சாரியட் வண்டி எங்களைக் கடந்து சென்றது. இந்தச் சுரங்கத்தின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்கு இந்த வண்டியில் அழைத்து செல்லத் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
குதிரைகளின் கால்களில் இருக்கும் அதிகப்படியான ரோமம் குளிர் நிறைந்த இடங்களில் வசிக்கும் குதிரை ரகங்களில் மட்டுமே இருக்கும் ஒன்று.
மேடும் பள்ளமுமாக இருந்த பகுதிகளில், சுட்டெரிக்கும் வெயிலில் நடந்து வந்தோம்
அங்கங்கே குடிசைகளில் அந்நாளில் தங்கச் சுரங்கத்தில் வேலையில் இருந்தவர்களுக்கான உணவு கூடாரங்களும், தங்குமிடங்களும் இருந்தன.
இங்கே பொன் கிடைத்த ஆரம்ப கால வருடங்களில், நிறைய மக்கள் இந்த ஊரை நோக்கி வர ஆரம்பித்தார்கள். அத்தனை தங்கமும் கடைசியில் பிரிட்டிஷ் அரசுக்கு தான் சொந்தம் என, மற்ற இனமக்கள் வருவதைக் குறைக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது.
கீழே உள்ள படத்தில் நீங்கள் காணும் காப்பிக் கடையில் இருப்பவர் என்னவர். அவரின் வலப்புறத்தில் அந்நாளைய அறிக்கை ஒன்று இருக்கிறது.
அதில், ராணி சமூக ஒழுங்கை அனைத்து பிரஜை / பிரஜை அல்லாதவர்கள் கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.
என் புள்ள சொக்கத் தங்கம்னு சொல்ற அம்மாக்கள், உங்க பிள்ளையோட எடைக்கு எடை பொன்னும் கிடைச்சா, நீங்களும் திருவிளையாடல் படத்துல வர தருமி மாதிரி ஆயிரம் பொன்னும் எனக்கே கிடைக்குமானு கேப்பீங்க இல்லையா?
என் மகனுக்கு அவன் எடைக்கு நிகரான தங்கத்தின் இன்றைய விலையில் ஒரு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது எடை இயந்திரம்.
வண்டல் மண் இருக்கும் பகுதி இது. இங்கு முதன் முதலில் தங்கம் கண்டெடுக்கப்பட்ட இடம் வறுமை புள்ளி(Poverty Point).
ஜான் டன்லப் மற்றும் ஜேம்ஸ்ரீகன் என்ற இரண்டு பேருக்கு தான் முதலில் தங்கம் கிடைத்திருக்கிறது. முதலில் வறுமை புள்ளி (Poverty Point) என்ற பெயருள்ள இடம் தங்கம் கிடைத்ததும் தங்கப்புள்ளி (Golden Point) என்று புதுப்பொலிவு பெற்றிருக்கிறது.
கிட்டத்தட்ட ஒரு வாரம் அவர்களைத் தவிர யாருக்கும் தங்கம் இருப்பது தெரியாமல் இருந்ததாம்.
பண்டமாற்றிலிருந்து மனிதன் நாணயங்களை நோக்கி நகரும் போது, உலோகங்கள் அதிகம் பயன்பட்டிருக்கின்றன. மூன்றில் ஒரு பங்கு வெள்ளியும் இரு பங்கு தங்கமுமாய் நாணயங்கள், எலெக்ட்ரம் என்ற பெயரில் செய்யப்பட்டிருக்கின்றன.
ஐரோப்பாவின் மிகப்பழமையான பிரூஜ் (Brugges) நகரின் தேவாலயத்தில் இருக்கும் இயேசு பிரானாக இருந்தாலும், நம்ம ஊரின் ஆயிரமாண்டுக்கு மேல் பழமையான கோயில்களின் மூர்த்திகளாக இருந்தாலும், பாங்காக்கில் பள்ளி கொள்ளும் பிரமாண்டமான புத்தராக இருந்தாலும் அனைவரையும் மனித மனம் தங்கத்தால் தான் அழகு பார்க்கிறது.
உலகில் இருக்கும் மொத்தத் தங்கத்தில் இந்தியாவின் பங்கு என்னவாக இருக்கும்?
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
பழசுக்கு புதுசு ஆஃபர் என்று அட்சயத்ருதியைக்காக கூவி விற்ற விளம்பரங்களைப் பார்த்து, நம் ஊரில் கணவர்கள் எங்கே தங்களையும் பண்டமாற்று செய்து விடுவார்களோ என்று பயந்து தான் போகிறார்கள்.
இந்தியாவின் கோலார் தங்கச் சுரங்கங்கள் இரண்டாயிரம் ஆண்டுக்கு பிறகு மூடப்பட்ட பின்னர், சர்வேத சந்தையிலிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
உலகின் மொத்தத் தங்கத்தில் பத்து சதவீதத்துக்கும் குறைந்த தங்கம் தான் இந்தியாவில் இருக்கும் என்று மதிப்பிடுகிறார்கள்.
இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் பெருவாரியான மின்னணு சாதனங்களில் தங்கமும் இருக்கிறது என்று அறிவீர்களா?
தங்கம் மின்சாரத்தை செவ்வென கடத்தும் இயல்புடையது.
எத்தனை மெல்லிய இழையாகவும் தங்கத்தை இழைக்க முடியும்.
இதனால் ஒரு சில இதயம் சார்ந்த கருவிகளில் கூட தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நாளின் முக்கியமான அனுபவம் தங்க சுரங்கத்தை உள்பரப்பில் சென்று பார்த்தால் எப்படி இருக்கும் என்பது தான்.
மரத்தால் ஆன ஒருவித ரயில். நம்ம மம்மி ரைடு போற மாதிரி ஒரே கும்மிருட்டு. உள்ளே இரண்டு மூன்று இடங்களில் நிறுத்தி, அத்தனை ஆழத்தில் அவர்கள் பயன்படுத்திய கருவிகளை விளக்கினார்கள்.
சுரங்கத்தின் உள்ளே குறைந்தபட்சம் பன்னிரண்டு மணி நேரம் வேலை இருக்குமாம். உள்ளே கும்மிருட்டில் எடுத்த படம் இது.
அந்நாளில் அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்ற பிம்பத்தை இந்த அனுபவம் உண்டாக்கியது. நம்மூரில் கோயில் சிற்பங்களை எப்படி செய்கிறார்கள் என்பதான ஒரு நிகழ்கலை அருங்காட்சியகம் வருங்காலத்தில் வந்தால் நன்றாக இருக்கும்.
அங்கிருந்த சிற்றோடையில் தங்கம் இன்னமும் கிடைக்கிறதென்று அலசிக் கொண்டிருந்தார்கள். எங்க வீச்சில் அதிர்ஷ்டம் ஒன்றும் அடிக்கல!
ஒரு காலத்தில் இதே இடத்தில் குவார்ட்ஸ் கற்களில் தங்கம் இருந்திருக்கிறது
இப்படிக் கிடைக்கும் தங்கத்தை எப்படி சுத்தப்படுத்துகிறார்கள் என்று ஒரு செயல் முறையாக செய்து காட்டினார்கள்
அங்கேயே தங்கமுலாம் பூசிய கங்காரு போன்றவற்றையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். தற்படம் எடுக்காமல், பழங்கால பாணியில் கருப்பு வெள்ளை புகைப்படம் எடுத்துக் கொண்டோம்
நம்ம ஊரு பட்டுப் புடவையை கத்திரி வெயிலில் அணிவதை போல தான் நான் அணிந்திருந்த ஆடையும் கனமாக இருந்தது
எந்த ஊராக இருந்தாலும் இருநூற்றண்டுகளுக்கு முன்பு பெண்களின் உடை அவர்களின் எடையில் ஒரு பங்காகவே இருந்திருக்கிறது.
இந்தப் புகைப்படத்தோடு, பல்லரட் தங்க சுரங்கத்தை விட்டு வெளியேறி, மீண்டும் மெல்பெர்ன் நகரத்துக்குச் சென்றோம்
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
நல்ல விவரணம். போகும் வாய்ப்பெல்லாம் கிடைக்காது உங்கள் பதிவின் மூலம் அறிய முடிகிறது. வாழ்த்துகள்
துளசிதரன்
நல்ல விவரணம். போகும் வாய்ப்பெல்லாம் கிடைக்காது உங்கள் பதிவின் மூலம் அறிய முடிகிறது. வாழ்த்துகள்
துளசிதரன்
ஆஸ்திரேலியா அழகான நாடு. அதன் ஒரு சுற்றுலா இடத்தைப் பற்றி இங்கு அழகா எழுதியிருக்கிறார்.
வாழ்த்துகள்
கீதா
மிக்க நன்றி – வித்யா அருண்