in

நினைக்கத் தெரிந்த மனமே ❤ (குறுநாவல் – இறுதிப் பகுதி) – ✍ சுஸ்ரீ, சென்னை

நினைக்கத் தெரிந்த ...❤ (இறுதிப் பகுதி)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

இந்த குறுநாவலின் மற்ற பகுதிகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

மாலு என்னைப் பார்த்தாள். விடிந்தும் விடியாத காலை என்பதால் ஆள் அரவமில்லை, தைரியமாய் என்னை நோக்கிவந்த மாலு, கைகளால் என் கழுத்தை சுத்திக் கொண்டாள். என் கைகளும் வளைத்து இழுத்துக் கொண்டன

பொங்கும் அழுகையை அடக்கத் திறனற்று என் இரண்டு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டு, “திரும்ப வட்டியோட குடுத்திட்டேன் இனி நான் கடனாளி இல்லை”னு கொஞ்சலுடன் விக்கினாள்

பின்னால பாட்டு சத்தம் கேட்டது , “கட்டிக் கொள், ஒட்டிக் கொள் காற்று நம்மிடையில் நுழையாமல்” அம்மா தான். சட்டென விலகினோம்.

துக்கம், வெட்கம், பயம் கலந்த ஒரு பார்வையுடன் அம்மாவை பார்த்தாள் மாலு. அந்த பார்வையை என் வாழ்நாளில் மறக்க முடியாது. அம்மா அவளை ஆதரவுடன் இழுத்து அணைத்துக் கொண்டார்

“என் செல்லமே, எனக்கு இன்னும் நேரம் வரலையே உன்னை மருமாளாக்கிக்க. அந்த பகவான் தான் உதவணும். போயிட்டு வா பரதேசம், ஜாக்ரதையா இரு. வேற என்ன சொல்லப் போறேன். மூர்த்திக்கும் நீதான் தைரியம் கொடுக்கணும், பாவம் ரொம்ப உடைஞ்சு போயிட்டான்” என அம்மா கூற 

மாலு என்னைப் பாத்து, “தைரியமா இரு”ன்னா, அம்மா கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிண்டா

திரும்ப அழுகை வரதுக்கு முன்னால திரும்பி ஓடியே போயிட்டா. அடுத்த ஒரு அரைமணி நேரத்தில், 3 பெரிய சூட்கேஸ், 3 சின்ன கேபின் லக்கேஜ் காரில் திணிபட்டது

கடைசி நேரத்தில கரீம் பாய் வந்து சாவி வாங்கிண்டார். நாராயணன், அவன் அம்மா ரெண்டு பேரும் அம்மாகிட்டயும் என்கிட்டயும் சொல்லிண்டா. மாலு யாரையும் பாக்காம கார்ல ஏறிண்டா. கார் ஒரு உறுமலோட என் சொத்தை பிடிங்கிண்டு புறப்பட்டது. மாலுவோட அந்தக் கடைசி பார்வை நினைச்சா, இன்னும் மனசை பிராண்டி எடுக்கும்.

அதுக்கப்பறம் நாள், வாரம், மாசம், வருஷம் பந்தயக் குதிரையா ஓட ஆரம்பிச்சது. நான் டிகிரி முடிச்சேன், எம்.எஸ்ஸி படிச்சேன். சின்ன சின்ன வேலை பார்த்தேன், எங்கயும் நிலையா நிக்கல. 

சென்னைல அத்தான் ஒரு மல்டி நேஷனல் கம்பனில வேலை ஏற்பாடு பண்ணி 2 மாசம் வேலை பாத்தேன், அம்மாவை விட்டு இருக்க முடியாதுன்னு வந்துட்டேன். 

நண்பர் குழாம் மாறியது, பார் போய் உக்கார மனசு ஏங்கியது. ஒரு நாளைக்கு ஒரு சிகரட்னு ஆரம்பிச்சு இப்ப நினைக்கறப்பல்லாம் வேண்டியிருக்கு. பகலெல்லாம் வெட்டி சுத்து, ராத்திரி திண்ணை, எப்ப முடியும் இந்த கதைங்கற மாதிரி ஆச்சு.

இத்தனை வருஷத்தில ஆஸ்திரேலியால இருந்து ஒரு விஷயம் கூட வரல்லை. எதுத்த வீட்டுக்கு வருஷம் ஒரு குடும்பம் வரும், கரீம் பாய் மட்டும் மாசம்தோறும் 5 தேதிக்குள்ளே ஒரு நாள் வந்து வாடகை வாங்கிண்டு போவார்.

அம்மாவும் இப்பல்லாம் சிடுசிடுப்பு முகம் காட்டறா, என்ன பண்ண, என்னை மாத்திக்க முடியல்லை. திண்ணை ஒண்ணு தான் இன்னும் என்னை ஸ்நேகத்தோட ஏத்துக் கொள்றது. 

திடீர்னு ஒரு நா மத்யான வாக்கில அஞ்சாறு ஆட்கள் சுத்தியல் கடப்பாரையோட வந்தா, மாலு வீட்டை இடிக்க ஆரம்பிச்சா. திண்ணைல இருந்து பாஞ்சு எழுந்த நான் அவங்களோட சண்டை போட்டேன் 

“வீட்டை இடிக்கிற கையை உடைப்பேன்”னு சத்தம் போட்டேன்

அதுல ஒரு ஆள் ஓடிப் போய், கரிக்கடைல ஆட்டை கொத்திண்டிருந்த கரீம் பாயை கூட்டி வந்தான். 

கரீம் பாய் என்னிடம், “என்னாச்சு அய்யரே, தகறாரு பண்றயாம்” னார்

“இல்லை வீட்டை உடைக்கறானுங்க இந்த ஆட்க” ன்னேன். 

“ஆமா அய்யரே, உடச்சு பங்களா ஆக்க போறாரில்ல நாரயணய்யரு”

அதைக் கேட்டு என் மனசு உடைஞ்சது. என் மாலு இருந்த வீடும் போகுமா. 

“ஐயரே… பாத்துட்டே இரு, ஆறே மாசத்தில நாயக்கர் மகாலாட்டாம் நிக்கும், நீங்க இடிங்கடா” னு சொல்லிட்டு போயிட்டாரு பாய் 

மெல்ல மெல்ல எதிர் வீடு தரை மட்டமாச்சு, திண்ணைல உக்காந்து அழத் தான் முடியும்

பீர்ல இருந்து க்வாட்டருக்கு பிரமோஷன் ஆனேன். அம்மா கொடுக்கற பணம் பத்தாம கொஞ்சம் திருடினேன், அம்மா கிட்ட இருந்துதான். அம்மா தெரிஞ்சிண்டே சும்மா இருந்த மாதிரி தான் தெரிஞ்சது.

எங்கேயோ இழுத்துண்டு போயிட்டேன் இல்ல எல்லோரையும். சிகரட் சுட்ட கைய உதறிண்டே திலகர் திடலை விட்டு வீட்டை நோக்கி நடந்தேன்.

இன்னியோட 17 வருஷம் ஆச்சு, என் மாலு என்ன விட்டு போயி. அவ இருந்த அந்த இடத்தில வேறு ஒரு அன்னியமான கட்டிடம். அழகான திண்ணைகள் இல்லை, 5 படி இல்லை, பித்தளை குமிழ் வச்ச பர்மா தேக்கு நிலைக்கதவு காணோம்.

படில நின்னு, “ஏ பயந்தாங்குளி”னு கூப்பிட்ட என் மாலுவையும் காணோம். 

கண் பனித்தது, மெதுவா நடந்து வீட்டுக்கு போனேன். செருப்பை உதறிட்டு திண்ணைல உக்காந்தேன். இந்த சுவாரசியம் இல்லாத சப்பை வாழ்க்கை எதுக்கு. ஆனா தற்கொலை’லாம் பண்ணிக்க மாட்டேன், அவ்வளவு தைரியம் கிடையாது.

தற்கொலைங்கறது தைரியமா, கோழைத் தனமா? இப்படித் தான் ஏதாவது பட்டிமன்றம் மனசுக்குள்ளே தினம் வேற வேற டாபிக்ல, பொழுது போகணுமே. படிக்கிற பழக்கம் இல்லை, நண்பர்கள் இல்லை, வேலை பாக்க இன்ட்ரஸ்ட் இல்லை, என்ன செய்வேன்.

12 மணிக்கெல்லாம் லஞ்ச் சாப்பிட்டு திண்ணைல தஞ்சம். நடுநடுவே தெருமுனைக்கு போய் சில சமயம் முழுசிகரட், காசு இல்லன்னா பாதியை அணைச்சு பையில் போட்டுப்பேன், அடுத்த தடவைக்கு. உதடு சுடற வரை குடிச்சுட்டு தான் தூக்கி போடுவேன்

இன்னிக்கு பொழுதும் போச்சு. ராத்திரிக்கு குவாட்டர் பாட்டில், பாதிய கிணத்துகிட்ட ஒளிச்சு வச்சிருக்கேன். 

அம்மாவும் நானும் ராத்திரி சாப்பிட்டு முடித்தோம். அம்மா தூங்கப் போனதும், மெல்ல தெருமுனைக்கு போய் பையில் இருந்த முழுசிகரட்டை எடுத்து சரி பாதி ஆக்கினேன் 

ஒரு பாதியை பத்திரமாய் பையில் போட்டுண்டு, அடுத்த பாதியை பற்ற வைத்து கை சுடற வரை ஊதி தள்ளிட்டு வீடு திரும்பினேன். ஒரு 10 நிமிஷம் திண்ணையோட உறவாடிட்டு, கிணத்தடிக்கு போய் பாட்டிலை எடுத்து தண்ணி சேத்து பத்து நிமிஷத்திலே காலி பண்ணிட்டேன் 

ஒரு மண்ணும் ஏறல்ல, வேற வழியில்லை. திரும்ப திண்ணை, சப்பி போன தலகாணி, ஒரு 8 முழ வேஷ்டி போத்திக்க. இப்ப டிசம்பர் மாசம் அதனால கார்த்தாலே லேசா குளிரும். படுத்தவுடனே தூங்கிட்டேன் 

மாலுவோட பாரிஸ் ஐபில் டவர் மேல ஏறி செய்ன்(seine) ரிவரின் அழகை கை கோத்துண்டு ரசிச்சோம்.

 மாலு, “டியர் இன்னிக்கு கார்டன் பிஸ்ஸா மெக்டில சாப்டலாம்”னா

“ஆஸ்திரேலியாக்கு ஐபில் டவர் எப்ப வந்தது?”ன்னு கேட்டேன். பதில் வரதுக்கு முன்னாலே முழிப்பு வந்துட்டது.

யாரோ ரொம்ப மெதுவா பேசற சத்தம், மேலே போத்தியிருந்த வேஷ்டிய லேசா தூக்கி தெருவை பாத்தேன்

ஒரு பெரிய வெள்ளைக் கார் நின்றிருந்தது, டிரைவர் சீட்டில் டிரைவர் ஸ்டியரிங்ல தலை வச்சு தூங்கிண்டிருந்தான். உடனே எனக்கு ஞாபகம் வந்தது மாலு இங்கிருந்து கிளம்பின நாள் தான். 17 வருஷத்துக்கு அப்புறம் அதே சீன். 

டக்னு பூரா முழிச்சிண்டேன், எதுத்தாத்தில இருந்து புது மாதிரி பாம்பே டைப் சல்வார் கமீஸ்ல, தேவதை மாதிரி தேன் கலர் மற்றும் கருப்பும் இல்லாம கிரேயும் இல்லாத ஒரு கலவை உடைல மாலு வருவாளா?

புது பெயின்ட் பொலிவோட வேற ஒரு மாடி வீடு கம்பீரமா நின்றது. அந்த ரெண்டு திண்ணை, நடுவில் 5 படி, பித்தளை குமிழ் பர்மா தேக்கு கதவு எல்லாம் எங்கே போச்சு. உள்ளே ஆடின ஊஞ்சல் எங்கே? அதில் ஒய்யாரமாய் கவிழ்ந்து படுத்து பத்திரிகை படித்த என் தேவதை எங்கே?

ஒரு சிகரட் பிடிக்க மனம் தூண்டியது, சட்டை பையில் பாதி சிகரட் இருக்கணுமே. உள்ளே போனா அம்மா எழுந்துப்பாளே. அட முன் ரூம்ல லைட் எரியறதே, அம்மா சீக்கிரம் எழுந்தாச்சா. 

கைலியை சரியா கட்டிண்டு உள்ளே போனேன். ரூம்ல அம்மா யார் கூடவோ மெதுவா பேசற சத்தம், அக்காவா? இல்லையே. கதவை லேசா தட்டிட்டு திறந்தேன். உள்ளே அம்மாவோட யாரு அது

கண்ணை நன்றாக தேச்சி விட்டுண்டு பாத்தேன். அம்மா முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சிய பாத்து எத்தனை வருஷம் ஆச்சு. கூட அது கன்னம் குழிய சிரிக்கிறது மாலுவா? கனவுல இருந்தோமே நிஜமா இது. 

அம்மா கேக்கறா, “என்னடா முழிக்கறே, என் மருமக தான். பேசின்டிருங்கோ, காபி கலந்துண்டு வரேன்”

ரொம்ப நாளைக்கப்பறம் அம்மா பாடறா. “காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா, பிரிந்தவர் மீண்டும் சேர்ந்து விட்டால் அழுதால் கொஞ்சம் நிம்மதி”

என் அம்மா மாதிரி மனிதரை படிக்கத் தெரிந்தவர்கள் மிகக் கம்மி. மாலுவின் கண்களுடன் உறவாடிய கண்கள் வாய் பேச விடவில்லை. மாலுவின் கடந்த 17 வருட வாழ்க்கை தெரியாமல் அருகே நெருங்க தயங்கினேன்

மாலு தான் முதலில் என் கழுத்தை கட்டியவாறு விம்மினாள், “நான் இன்னும் உன்னோட தேவதை மட்டும் தான்” என்று 

ஏன் அழுதோம், எவ்வளவு நேரம், கணக்கில்லை. அம்மாவின் காலடி சத்தம் எங்களை பிரித்தது.

“ஏன்பா இப்படி ஆயிட்டே, முதல்ல போ இந்த தாடி மீசையெல்லாம் எடுத்துட்டு குளிச்சிட்டு வா, பழைய மூர்த்தியாக நான் பாத்தாகணும்” மாலு உரிமையோடு கண்டித்ததை அம்மா ரசித்தாள்

“நமக்கு நிறைய வேலை இருக்கு, சீக்கிரம் வா. அம்மா நீங்களும் தயாராகி புறப்படுங்க, வெளில போகணும் . இன்னிக்கு உங்க சமையல் கடைக்கு லீவு” என மாலு கூற, அம்மா முகத்தில் அளவற்ற பெருமை

“சரிடா கண்ணா”னு எழுந்துண்டா

மாலுகிட்ட இருந்து தெரிஞ்சுண்ட கடந்த ஆஸ்திரேலிய வருடங்களின் சுருக்கம், அவ அம்மா அங்க போன ஒரு வருஷத்திலேயே போய் சேந்துட்டா, மாலு அங்கே படிச்சு டிகிரி முடிச்சு ஒரு ஸ்கூல்ல வேலை பாக்கறா.

அண்ணா ஆஸ்திரேலிய பொண்ணை கல்யாணம் பண்ணின்டுட்டான், ஒரு பெண் குழந்தை அவாளுக்கு. மாலு இப்ப தனியா இருக்கா. 

அண்ணாகிட்ட தெளிவா சொல்லிட்டா, மூர்த்தி தான் தனக்குன்னு. 

“மூர்த்தி வேற கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியோட இருப்பான் நீ இந்தியா போறப்ப”னு அண்ணா சொன்னான்.

“பரவாயில்லை, நான் இப்படியே இருப்பேன், இல்லை மூர்த்தி என்னை சின்ன வீடா வச்சிண்டா கூட இருப்பேன்”னு சொன்னேன்

அண்ணா “வெட்கம் கெட்ட நாய்”னு அடிக்க வந்தான்.

இப்ப ஆஸ்திரேலிய குடியுரிமை கிடச்சாச்சு, 18 நாள் லீவுல வந்திருக்கா.

நான் நேரா பக்கத்து சலூன் போய் ஹேர் கட், ஷேவிங் பண்ணின்டு அவசரமா வந்தேன் (இதெல்லாம் கனவு, திண்ணைல தான் படுத்திண்டிருக்கேன்னு அம்மா எழுப்பிடுவாங்கற பயம் போகல்ல)

அம்மாவும் ரொம்ப நாளைக்கப்பறம் பளிச்னு டிரஸ் பண்ணிண்டிருந்தா. மாலுவும் பிரஷ் ஆகி தயார். என்னைப் பாத்த அம்மா மாலுவிடம், “என் பிள்ளை இப்படி ஆவானான்னு இருந்ததுடா, உனக்கு என்ன பிரதி உபகாரம் செய்யப் போறேன்”

“போங்கம்மா, ஒரு குடும்பத்துல இப்படியெல்லாம் பேசலாமா” ன்னா மாலு 

என்னைப் பாத்து, “முகத்தை பாத்துண்டே நிக்காம, சீக்கிரம் குளிச்சுட்டு வந்தா தேவலை, நிறைய புரோக்ராம் இருக்கு”ன்னா. அம்மாவுக்கு முகம் பூரா மத்தாப்பு.

என்னையும் அம்மாவையும் உக்கார வச்சு பேசினா

“இனிமே இந்தாத்துல நான் தான் சட்டவதி, ஆட்சேபணை இருந்தா இப்பவே சொல்லலாம்”

நானும் அம்மாவும் மாலுவை நெருங்கி உக்காந்து, மேலே என்னனு கேக்க, “நம்பர் 1 – அனுபமா அக்கா, அத்தான் நாளைக்கே இங்கே வந்தாகணும். நம்பர் 2 – கரீம் பாயை கூப்பிட்டு நம்ம வீட்டை விக்க ஏற்பாடு பண்ணணும், மதுரை காலி பண்ணப் போறோம், வீடு என் பேர்லதான் இருக்கு.

நம்பர் 3 – பாலஸ் ரோட் பக்கத்தில உள்ள ஒரு ஏஜன்ட்டை பாக்கறோம், Register marriage, முடிஞ்சா இந்த புதன்கிழமை காலைல கோவிலில் கலயாணம், 12 மணிக்கு ரிஜிஸ்டிரார் ஆபீஸ். வியாழக்கிழமை ஆஸ்திரேலியாக்கு மூர்த்திக்கு டிபென்டனட் விசா அப்ளிகேஷன் யாராவது ஏஜன்ட் பிடிச்சு, வர திங்கள்கிழமைக்குள் விசா. 

பாயிண்ட் நம்பர் 4 – இந்த வீட்டை காலி பண்ணிட்டு அம்மா சென்னைல கொஞ்ச நாள் வாசம், மூர்த்தி ஓரளவு ஆஸ்திரேலியால கால் பதிச்ச உடனே, அம்மாவையும் ஆஸ்திரேலியாக்கு அழைச்சுக்கிறது. நம்பர் 5 – எதுத்த வீட்டை வித்திட்டு 10 லக்ஷம் அம்மா பேர்ல FD போடணும், நம்மகிட்ட வர வரை அடுத்தவாளுக்கு தொந்தரவு இல்லாம சமாளிக்க. அவ்வளவு தான். ஏதாவது சந்தேகம் இருக்கா?”னு மாலு கேக்க, அம்மா தாரை தாரைய கண்ணீர் விட்டா

எனக்கோ பேச்சே வரலை, நான் இந்த தேவதைக்கு தகுந்தவனா?

இதெல்லாம் பட்டியல் போடறது சுலபம், சாதிக்கறது அவ்வளவு சுலபம் இல்லை. மாலுவோட ஆளுமை சக்தியும், ஆஸ்திரேலிய சம்பாத்யமும் எல்லாவற்றையும் கச்சிதமா சாதிச்சது. வேறென்ன… மதுரைக்கு குட்பை சொல்ற நாள் இது

மிகக் குறைஞ்ச லக்கேஜ், அம்மா நான் மாலு டாக்சியில் மதுரை ஏர்போர்ட் புறப்படறதுக்கு முன்னால, கிட்டத்தட்ட 39 வருஷம் என்னை வளத்த அந்த வீடு, முக்கியமா என் நண்பன் அந்த திண்ணை கலங்குவது போல உணர்ந்தேன்.

கலங்கியது நானா அந்த உயிரற்ற கல்லும் மண்ணுமா? விடை இல்லா வினா அது.

2 பெரிய சூட்கேஸ், 2 சின்ன கேபின் லக்கேஜ் சகிதம் அம்மா, அனுபமா, அத்தான், நான், என் மாலு, அஞ்சு பேரும் டாக்சில வந்து இறங்கினப்போ, அறிஞர் அண்ணா இன்டர்நேஷனல் ஏர்போர்ட் சென்னை, எப்போதும் போல சுறுசுறுப்பா இருந்தது, அந்த அதிகாலை 3 மணிக்கும்.

ஒரு காலி புஷ் டிராலி எடுத்துண்டு வந்தார் அத்தான். எல்லா பெட்டிகளும் அதிலேயே உக்காந்தது. உறவுக்கு விடை கொடுப்பதும், உறவிடம் விடை பெறுவதும், ஒரு கலவை உணர்வு. விடை கொடுக்க வருபவருக்கு பிரிவு துக்கம், பிரிந்து போவோருக்கு புது தேசம் போகும் ஆர்வம், பிரிவு சோகம், சரி விகித கூறுகள். 

அம்மா, அக்கா, அத்தான் மூவரும் செக்யூரிடி நிக்கிற இடம் வரை வந்தார்கள். பின்னர் நான் புஷ்கார்ட்டை வாங்கி நிதானமாக தள்ளிக் கொண்டு போய் பெட்டிகளை பெல்டில் போட்டு போர்டிங் பாஸுடன் முன்னேற, மாலு சரளமாய் முன்னே நடந்தாள். 

சட்டென திரும்பின மாலு, “ஏன் மூர்த்தி இவ்வளவு பின்னால வரே?”

“இல்லை சிவமணி டிரம்ஸ்னா எனக்கு உசுரு”ன்னேன்

மூக்கையும் கண்ணையும் அழகாய் சுருக்கி என்னை பாத்தா என் தேவதை. சட்டென புரிந்து கையை ஓங்கினாள்

“ரவுடி பையா, ஆஸ்திரேலியாவுக்கு வா உன்னை வச்சிக்கிறேன்”

புன் முறுவல், புது உற்சாகத்துடன், புது வாழ்க்கை நோக்கி கை கோர்த்து முன்னேறினோம்.

(முற்றும்)

‘சஹானா’ சிறுகதைப் போட்டி 2021 முடிவுகள் அறிய இங்கு கிளிக் செய்யவும்

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    பாவத்தின் சம்பளம் (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு

    வட்டம் (சிறுகதை) – ✍ ஆதித்யன்