in

வட்டம் (சிறுகதை) – ✍ ஆதித்யன்

வட்டம் (சிறுகதை)

பிப்ரவரி 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

குறுக்குச்சாலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கியபோது இன்னும் முழுவதும் விடிந்திருக்கவில்லை.

இரவு ரயில் பயணத்தில் எப்பொழுதுமே நன்றாக தூங்கியதில்லை, இத்தனைக்கும் மூன்றாம் வகுப்பு ஏசி கோச் தான், டிக்கெட் பதிவு செய்யும் போதே கொரோனா காரணம் காட்டி தலையணையும் போர்த்திக் கொள்ளவும் எதுவும் தரப்படாது என குறுஞ்செய்தி வந்திருந்தது, இருந்தும் மறந்து விட்டிருந்தேன்.

ஏசி குளிரே சரியாக தூங்க விடவில்லை. சிதலமாகிவிட்ட பேருந்து நிறுத்தத்தை இரண்டு கைவிடப்பட்ட மாடுகள் ஆக்கரமித்து, முந்தைய இரவில் தின்றதை மறுபடியும் வாயில் அசுவாரசியமாய் அசை போட்டுக் கொண்டிருந்து .

சாலையின் மறுபறம் ராகவன் டீக்கடையில் நின்று கையசைத்தான். விரலிடுக்கில் சிகரெட் கங்கும் காற்றில் கிறுக்கியது.

“வாடா, டீ சாப்பிடுறியா?” பின்னால் திரும்பி, “அண்ணே ரெண்டு” விரல் சைகையில் சொன்னான்

நெடுஞ்சாலையில் அவ்வப்போது விரையும் வாகனங்களை தவிர, அதிகாலை அமைதியாகவே இருந்தது எனக்குப் பிடித்திருந்தது.

தேனீர் குடித்து முடிக்கும் வரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை

“போலாமா” ஆக்டிவாவை கிளப்பினான்

“புல்லட் என்னாச்சுடா?”

“எங்கடா எண்பதுக்கு மேல போனாலே வைப்ரேஷன், புடிக்கல. அப்புறம் என்னத்துக்கு 350CCனு குடுத்துட்டேன்”

நான் எதுவும் பேசவில்லை. காரணம் அதுவல்ல என்பது நன்றாக தெரியும்.

ஊருக்குள் செல்ல இன்னும் ஒரு ஐந்து கிலோ மீட்டராவது போக வேண்டும். ஒரே ஒரு பேருந்து மட்டுமே செல்லக்கூடிய சிறிய வழித்தடம்.

சாலையின் இருமருங்கிலும் புன்செய் நிலம் உழப்பட்டு மழைக்கு வானம் பார்த்து காத்திருந்தது. நிலத்தின் நடுவே ஆங்காங்கே பிரம்மாண்டமாய் முளைத்திருந்த காற்றாலைகள், அருகில் சென்று பார்க்க வசீகரித்தன.

“ஏக்கரே ஒரு லட்சம் தாண்டா போச்சு, இவிங்க வந்து ஏத்தி வுட்டாய்ங்க”

“ஏண்டா இந்த வர கிராமத்துல வந்து கஷ்டபடுற, பேசாம மதுரைலயாவது இருந்திருக்கலாம்ல”

“இதுல என்னடா கஷ்டம், சந்தோசமா தான் இருக்கேன். கொஞ்ச நாள் இந்த கிராமத்து வாழ்க்கையை அனுபவிப்போம், போரடிச்சா மதுரைக்கு போயிற வேண்டியதுதான்”

ராகவன் எப்பொழுதும் இப்படித்தான். கல்லுரி நாட்களில் இருந்து அவன் குணம் இதுதான். தனக்கான தற்காலிக பின்னடைவை ஒப்புக் கொள்வதே இல்லை. எதிலேயும் தான் ஒரு படி மேல் என்பதை காண்பிக்கமுயலும் குணம்.

பள்ளிப் பருவத்தில் சொல்லிய அற்பப் பொய்களான, “படிக்கவே இல்லடா” என்பதிலிருந்து, எதற்கும் உண்மை சொல்வதில்லை. எதிலும் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் சுயகொளரவம் சற்றும் கறைபட அனுமதிப்பதில்லை.

நண்பர்களுடன் திரைப்படம் பார்க்க அழைத்தால், காசில்லை என்று ஒப்புக் கொள்வதில்லை. வேறு காரணங்கள் சொல்லி தவிர்த்து விடுவான்.

சில நேரங்களில் பரிதாபமாக இருந்தாலும், அவன் சொல்லும் காரணங்களில் அவனின் இயலாமையே ஒவ்வொரு முறையும் வெளிப்படும்.

லோயர் மிடில் க்ளாஸ் என்கிற இருக்கு ஆனா இல்ல என்கிற வட்டத்தனுள் வருகின்ற ஆளாயிருந்தான். தேவைக்கு மீறி செலவழிக்கின்ற ஒவ்வொரு காசும் அவனுக்கு ஆடம்பரமாய் போயிற்று.

வண்டி அந்த குறுகிய சாலையின் மேடு பள்ளங்களில் திணறித்திணறி தான் சென்றது. ரியர்வியூ மிரரில், மின்னல் ஓடிய தடம் போல கீறல்கள்.

எதிரே வந்த டிவிஎஸ் எக்ஸெல் எங்களை பார்த்து வேகம் குறைந்தது. வெள்ளை சட்டை அணிந்து மேல் துண்டு போட்டிருந்த பெரியவர், ஒருமுறை பின்னால் பார்த்து விட்டு ரோட்டை கடந்து அருகில் வந்தார்.

“என்ன மாமா?”

“சேகருட்ட பேசிட்டேன் மாப்ள, இப்ப ஜேசிபி கொண்டாந்துருவான். காட்டுல கம்மாய ஒட்டி இருக்குற கருவேலத்த ஒதுக்கி விட சொல்லிட்டேன்”

“சரி மாமா”

முகம் திருப்பி இருமுறை இருமி காரி உமிழ்ந்தி விட்டு, “மணிக்கு 500 பேசியிக்கு”

“சரி மாமா, அப்படியே தொரசாமி காட்டு பக்கமா மேவி உட்றனும்”

“சொல்லிட்டேன் மாப்ள, பண்ணிருவான்”

“பிரெண்டு மாமா, அப்பா விசேசத்துக்கு வந்துருக்கான்” திரும்பி என்னை பார்த்தபடி அறிமுகப்படுத்தினான்

“வாங்க தம்பி” என்னை பார்த்து நட்பாய் சிரித்து ஆமோதித்தார்.

“சரி நா தூத்துகுடி வரைக்கும் போய்ட்டு வந்துறேன்”

“சரி மாமா”

நாங்கள் கிளம்பினோம்

“குதிரைவாலியும் தெணையும் போடுறோம்டா… அதுக்குத்தான்”

கேட்காமலேயே சொன்னான்.

“ஓ… இன்னும் எவ்ளோ தூரம்டா “

“பத்து நிமிசம் தான்…”

விவசாய நிலங்களின் நடுவே நின்ற காற்றாலையின் பிரம்மாண்ட இறக்கைகளுக்கு பழகிய ஆட்டு மந்தை, அதனருகிலேயே புல்தேடி சலித்து தலை நிமிர்த்தி தூரத்து கானலை வெறித்து நின்றன

இன்ஜினியரிங் காலேஜ் முடியும் வரை அவன் தன்னை மாற்றிக் கொள்ளவேயில்லை. நான் இப்படித்தான் என்பதை அழுத்தம் திருத்தமாய் ஒவ்வொரு விசயத்திலும் சொன்னான்.

ராதிகாவை தியாகராஜா காலேஜ் வரை விரட்டி விரட்டி காதலித்து, பின் அவள் தான் முதலில் பிரபோஸ் செய்ததாக சொல்லிக் கொண்டான்.

சிதலமடைந்த “சந்திரகிரி” என்கிற பலகையை தாண்டி, வாட்டர் டேங்கில் வலதாய் திரும்பி சாக்கடை ஓடும் தெருக்களையும், கண்மாயில் நீரெடுக்க குடங்களை கை வண்டியில் வைத்து தள்ளிச் செல்லும் ஆண்களையும் கடந்து அந்த வீட்டை அடைந்தோம்.

வெய்யில் இப்போது சுள்ளென்று அடிக்க ஆரம்பித்தது, காற்று அவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டியாய் தெருக்களில் உற்சாகமாய் புகுந்து ஓடியது.

கைவிடப்பட்ட ராஜபாளையம் ரக நாய்கள் வீடுகளின் எச்சில் சோற்றுக்காக காத்திருந்தன.

ஒன்றிரெண்டு சிமெண்ட் வீடுகளைத் தவிர, பெரும்பாலும் காரை வீடுகளும், ஓட்டு வீடுகளும் தான்.

இரண்டு மூன்று எளிய திருப்பங்களுக்குப் பின், வண்டியை நிறுத்தி வாசலில் இருந்தே, “ராதிகா, சரவணா வந்திருகான்” என்று உள்ளே குரல் கொடுத்தான்.

என் வருகையை எதிர்பார்த்திருந்தவள், ஈரக்கையை சேலையில் துடைத்தபடி “வாங்கண்ணா” என்றவள், ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த காபியை கொடுத்தாள்.

முகத்தில் சோர்வை மலர்ச்சியாக்க வைக்க முயன்றது தெரிந்தது. வளையல்கள் கவரிங் என்பது அப்பட்டமாய் தெரிந்தது.

காபி உறிஞ்சியபடியே சாதாரணமாய் பார்த்தாலே தெரிந்தது, சுத்தமாய் வற்றிவிட்டானென்று. பேருக்கு ஒரு சாம்பல் நிறத்தில் வண்ண தொலைக்காட்சிப்பெட்டி இருந்தது, அதன் மேல் ஒரு பட்டன் கைபேசி சார்ஜ் போடப்பட்டிருந்தது.

நேரெதிரே தங்கமயில் ஜுவல்லரியின் காலண்டர் போன வார தேதியை காண்பித்தது. திதி சாமான்கள் ஐயரின் வருகைக்காக காத்திருந்தன.

பெரிதாக பொருட்கள் ஏதுமில்லாமல் அறை காலியாகத் தான் இருந்தது.

கொரோனா கடித்து குதறிய பல லட்சம் வாழ்க்கையில் ராகவனுடையதும் தப்பவில்லை.

கல்லூரி முடித்த கையோடு யாரையோ பிடித்து மஸ்கட்டில் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் வேலை வாங்கி விட்டான். சம்பளமே அன்று எழுபதாயிரம். வருடம் ஒருமுறை வருவான், மஸ்கட் பெருமை பேசுவான்.

இரண்டாம் வருடம் ராதிகாவை நகைகளால் அலங்கரித்தான். அடுத்த வருடம் வீடு கட்டி விட வேண்டும் என்றான்.

பின் நாட்களில் தனது சம்பளம் பற்றி பேசுவதில்லை. நிச்சயம் ஏறி இருக்கும். ஒருமுறை தான் வாங்கிய புது ஹோண்டா சிட்டியில் ‘சலாலா’ சென்ற படத்தை வாட்ஸப்பில் பகிர்ந்து இருந்தான்.

மூன்றாம் வருடம் வந்த போது, “எப்படா வீடு வாங்கப் போற?” என்றதில், நான் எப்படி வாழுறேன் பாரு என்ற ஏளனம் தான் இருந்தது.

சென்னையில் நான் பார்க்கும் வேலை பழுதில்லை என்றாலும், பொறுமையாகத் தான் சம்பளம் உயரும். என்னால் அவனளவு வாழ்வில் வேகமாக செல்வம் சேர்க்க இயலவில்லை. 

ஓவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து வரும் போதும், அவனுடைய தோற்றத்திலும் பேச்சிலும் நான் உன்னை விட பெட்டர் தான் என்று மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டே இருந்தான்.

அப்போது கொரோனா முதல் அலை வேகமாக பரவ, ராகவனின் அப்பா சாதாரண காய்ச்சல் என்று யாரிடமும் சொல்லாமல் பக்கத்து மருந்து கடையில் மருந்து வாங்க சாப்பிட்ட மூன்றாம் நாள் சீரியஸாகி நான்கு நாளில் நாலு லட்சம் செலவழித்து போய் சேர்த்து விட்டார்.

அதிஷ்டவசமாக விமான சேவை இன்னும் நிறுத்தப்படாமல் இருந்ததால், விமானமேறி வந்து விட்டான்.

அப்பாவின் இறுதி சடங்குகள், 16 ஆம் நாள் காரியம் என்று எல்லாம் முடித்து மறுபடியும் கிளம்புவதற்குள் உலகமே லாக்டவுனுக்குள் சென்று விட்டது .

மறுபடியும் மஸ்கட் செல்ல பிட்னெஸ் டெஸ்ட் எடுத்த போது, சிறிதாக ‘லங்க்ஸ்காரிங்’ உள்ளது லங்க் பைரோசிஸிஸாக இருக்கலாம் என்று பயமுறுத்தி விட்டனர். பிட்னெஸ் ரிஜெக்டாகி விட்டது.

எல்லாம் சரியாகிடும் என காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி வேலையை விட்டு விட்டான். கையிலிருந்த சேமிப்பு ஆறே மாதத்தில் கரைய, வேறு வழியில்லாமல் மதுரையிலிருந்து கிளம்பி இயற்கை விவசாயம் செய்யப் போகிறேன் என்று இந்த வர கிராமத்திற்கு வந்து விட்டான்.

அப்பாவின் பூர்வீக நிலமென்பதால், ராகவின் மாமா உதவி செய்ய ஒரு வருடத்தை ஓட்டி விட்டான். உள்ளூரிலும் வேலை கிடைக்கவில்லை.

ஐயர் வந்து மந்திரங்கள் ஓத ஆரம்பிக்க, நான் நைசாக நழுவி வெளியே வந்தேன். மொபைலை நோண்டலாமென்றால் சுத்தமா டவர் இல்லை. பி.எஸ்.என்.எல், ஏர்டெல் லேசாக வருமாம், அதுவும் மொட்டை மாடியில் நின்றால் தான்.

வந்து வந்து சென்ற ஒற்றை பாரில் கொஞ்ச நேரம் ஓட்ட முடிந்தது, பேச வேண்டிய கால்களை மட்டும் மேலே சென்று பேசி விட்டு வந்தேன்.

எல்லாம் முடிந்து ராகவன் வெற்றுடம்புடன் பூணுல் தரித்து மேனியெல்லாம் விபூதி அணிந்து முதலில் சாப்பிட்டு முடிக்க, பிறகு எல்லாரும் மௌனமாய் சாப்பிட்டோம். எளிய உணவு.

ராதிகா பரிமாற வரவில்லை, தவிர்த்து விட்டாளா இல்லை சமையலறையில் வேறு வேலையிருந்ததா தெரியவில்லை. கோபமாய் வந்தது, சுருக்கமாய் முடித்து எழுந்து விட்டேன்.

ராகவன் அப்பா இறந்த போது நான் டெல்லியில் பதினைந்து நாள் கம்பெனி மேனேஜ்மென்ட் ட்ரொய்னிங்கில் இருந்ததால் வர இயலவில்லை, அதனால் தான் இப்போது கண்டிப்பாக வர வேண்டியதாயிற்று.

இப்போது கிளம்பினால் தான் ஆறு மணிக்குள் மதுரை போய் சேர முடியும். அங்கிருந்து சென்னைக்கு ரயிலேற சரியாக இருக்கும் .

“இருடா பஸ் ஸ்டாப்பில் ட்ராப் செய்து விடுகிறேன்” ராகவன் சட்டை அணிந்து கிளம்ப, அம்மாவிடமும் ராதிகாவிடமும் சொல்லி கிளம்பினேன். ராதிகா மௌனமாய் தலையசைக்க, அந்த டப்பா வண்டியில் கிளம்பினோம்.

பஸ் ஸ்டாப்பில் ஆசுவாசமாய் மற்றொரு சிகெரட்டை பற்ற வைத்து வைத்து கொண்டான்.

“நாளைக்கு ஆபிஸ் போணுமாடா?”

“ம்ம்” தலையசைத்தேன்.

மறுபடியும் மௌனம் சூழ்ந்து கொண்டது. அவன் தனது சிகெரட்டை தரையில் குனிந்தவாறே ஆழமாக பிடித்து கொண்டிருந்தான். பேசவில்லை, ஆனால் ஏதோ கேட்க வருவது போலிருந்தது.

“என்னடா?”

மறுத்து தலையசைத்து விட்டு சிகரெட்டை காலிலிட்டு நசுக்கினான், கடைசி புகையை முகந்திருப்பி ஊதிவிட்டு.

“பஸ் வந்திருச்சு பாரு”

ஏறிக்கொண்டேன், அவனிடம் என்ன சொல்வதென்று தெரியவில்லை.

“எதுனாலும் போன் பண்றா”

“ம்ம்…” உறுமி நகர எத்தனித்த பேருந்தின் பின்புற தகரத்தை தட்டினான்.

“பார்ப்போம்” கையசைத்து திரும்பி தளர்ந்து நடந்தவன் பழைய ராகவனில்லை.

நல்லவேளை அமர்வதற்கு சன்னலோற இருக்கை கிடைத்தது. இப்போது மெல்ல மெல்ல டவர்கோடுகள் வரத்துவங்க, காத்திருந்த எஸ்.எம்.எஸ் மற்றும் வாட்ஸ்அப் தகவல்கள் வரத்துவங்கின.

இது என்ன ராகவனின் நம்பரில் இருந்து, மதியம் தான் அனுப்பியிருக்க வேண்டும்

‘மச்சான் ஒரு 5k ட்ரான்ஸ்பர் பண்ண முடியுமா?’ 

வாட்ஸ்அப் டிபியில், ‘சலாலா ட்ரிப்பில்’ ராதிகாவுடன் வெடித்து சிரித்துக் கொண்டிருந்தான் ராகவன்.

பிப்ரவரி 2022 சிறந்த படைப்பு போட்டிக்கு தேர்வாகி பிரசுரிக்கப்பட்ட படைப்புகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் 

#ads தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நினைக்கத் தெரிந்த மனமே ❤ (குறுநாவல் – இறுதிப் பகுதி) – ✍ சுஸ்ரீ, சென்னை

    சிறந்த படைப்பு போட்டி முடிவுகள் – டிசம்பர் 2021, ஜனவரி 2022 & பிப்ரவரி 2022 – ‘சஹானா’ இணைய இதழ்