in

நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1  பகுதி 2  பகுதி 3  பகுதி 4  பகுதி 5  பகுதி 6  பகுதி 7  பகுதி 8  பகுதி 9  பகுதி 10

பகுதி 11  பகுதி 12  பகுதி 13  பகுதி 14 பகுதி 15  பகுதி 16  பகுதி 17  பகுதி 18

மீனாட்சி கிருத்திகாவிடம் பேசினாள்.

“டியூட்டியில் சேர்ந்து சார்ஜ் எடுத்தவுடன் பில்டர்ஸ் மீட்டிங் வைத்து விடு. இளங்கோவும், ஷீலாவின் சித்தப்பாவும் கண்டிப்பாக வருவார்கள். யாரையும் உறவினர் என்றோ, தெரிந்தவர்கள் என்றோ காட்டிக் கொள்ளாதே. எல்லோருடைய பேச்சையும் ரெகார்ட் செய்து கொள். அடுத்த மாதம் கலெக்டர்ஸ் கான்பரன்ஸ் இருக்கிறது. கலெக்டர் யார் தெரியுமா?”

“தெரியும், ஸூரஜ் ஐ.ஏ.எஸ். உங்கள் நண்பர்” என்றாள் கிருத்திகா.

“உனக்கு தெரிந்தது அவ்வளவுதான். அவன் இளங்கோவிற்கும் ப்ரண்ட்.  நேர்மையைவிட பணத்தின் மேல் அதிக நம்பிக்கை அவனுக்கு. பணத்திற்காக யாரையும் கை தூக்கி விடுவான், அதே நேரத்தில் யாரையும் கை கழுவியும் விடுவான். கொஞ்சம்  பயந்தாற்போல்  இருந்தால் அதிகமாகக் கேள்விகள் கேட்டு விரட்டுவான். எனக்குக் கொஞ்சம் பேமிலி பேக்கிரவுண்ட் பலமாக இருப்பதால் என்னுடன் நண்பன் போல் நடிப்பான், வேறு ஒன்றுமில்லை. பி கேர்புல்” என்று மேலும் பல அறிவுரைகள் கூறிவிட்டுப் போனை வைத்தாள் மீனாட்சி.

கிருத்திகா பணியில் சேர்ந்து விட்டாள். மீனாட்சி சொன்னது போல் ‘பில்டர்ஸ் கான்பரன்ஸ்’ வைத்தாள். இளங்கோ வரவில்லை.  அவன் தன் மனைவி ஷீலாவையும், கம்பெனியின் இன்னொரு பங்குதாரர் அவள் சித்தப்பாவையும்  அனுப்பி  வைத்தான். கிருத்திகா பொதுவாக எல்லோரிடமும் பேசுவது போல் கான்பரன்ஸில் பேசி முடித்தாள்.

கான்பரன்ஸ் முடிந்து சில நாட்களில் இவளே இன்ஸ்பெக்ஷன் கிளம்பினாள். ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் சமீபத்தில் சென்னைப் பெருநகர குழுமத்திடம் அனுமதி பெற்ற ஒரு பத்து கோப்புகளை எடுத்துக் கொண்டாள். அதற்குப் பொறுப்பான இஞ்ஜினீயர்களை அவர்கள் ஜீப்பில் வரச் சொன்னாள்.

பத்து கட்டிடங்களில் இரண்டு ஷீலா கன்ஸ்ட்ரக்‌ஷனைச் சேர்ந்தது.  மூன்று  அடுக்குமாடி  கட்டுவதற்கு அனுமதி வாங்கி விட்டு  ஐந்து அடுக்குகள்  கட்டப்பட்டிருந்தன. நான்கு பக்கமும்  திறந்தவெளி விடுவதிலும் தவறு செய்யப்பட்டிருந்தது.

அதிகப்படியாக இரண்டு அடுக்குகளை ஏன் டெமாலிஷ் செய்யவில்லையென்றும், ஓப்பன் ஸ்பேஸ் குறிப்பிட்ட அளவு விடாமல் கட்டப்பட்டதற்காக இதுவரை பெனால்டி கட்டும்படி நடவடிக்கை எடுக்கவில்லையென்றும், இரண்டு அபார்ட்மென்ட்டுகளுமே இலாக்காவின் விதிமுறையை மீறிக் கட்டப்பட்டிருப்பதால், அதைக் கட்டியவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவரை பில்டர் லிஸ்ட்டில் இருந்து  ஏன் நீக்கக்கூடாது என்றும் கேட்டு, மேலதிகாரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பினாள்.

மீதியிருந்த எட்டு அபார்ட்மென்ட்களிலும் சில தவறுகள் இருந்தன. ஆனால் ஒரேயடியாக வரம்பு மீறிய இவன் செயலை யாரும் செய்யவில்லை. கிருத்திகாவின் கோபம் இளங்கோ மீது மட்டுமல்ல. அவளுடைய சபார்டினேட் ஆபீசர்ஸ் மீதும் பாய்ந்தது. கட்டிடம் கட்டி முடிக்கும் வரை ஏன் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கவில்லை என்று அவர்களுக்கு ‘மெமோ’ கொடுத்தாள்.

அவளுடைய ஜூரிஸ்டிக்‌ஷனில் மட்டும் இளங்கோவிற்கு  ஐந்து கட்டிடங்கள்  இருந்தன. எல்லாமே விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருந்தன. சி.எம்.டி.ஏ’வின் விதிகளைக் கடைபிடிக்காததால் அவனுக்கு தொடர்ந்து பில்டராக கட்டிடங்கள் கட்ட அனுமதி அளிக்கக்கூடாது என்று மேலதிகாரிகளின் உத்தரவிற்கு அனுப்பி வைத்தாள்.

அது  ரகசியக் கோப்பு என்று பாதுகாத்து வைக்கப்பட்டதால் விஷயம் அவ்வளவாக வெளிப்படவில்லை. ஆனால் எத்தனை நாட்களுக்கு விஷயம் ரகசியமாக இருக்கும்? அவளுடைய சபார்டினேட் ஆபீசர்கள் இருவருக்கு இடமாற்றம் அளிக்கப்பட்டது. ஒரு இன்கிரிமென்ட் கட் செய்யப்பட்டது. இளங்கோவின்  சி.எம்.டி.ஏ. ஆதரைஸ்ட் பில்டர் என்ற  உரிமம் பறிக்கப்பட்டது.

இளங்கோவின் கட்டிடங்களில் உள்ள அத்துமீறல்கள், போலீஸ் உதவியுடன் இடிக்கப்பட்டன. மேலதிகாரிகளும் இளங்கோவிற்கு எந்த விதத்திலும் உதவ முடியவில்லை.  ‘பென்  இஸ் மைட்டியர் தன் ஸ்வார்ட்‘ என்பதை நிரூபித்தாள்.

அந்த மாதிரி நேரங்களில் வீட்டில் கூட அவள் அவ்வளவு அமைதியாக, சந்தோஷமாகக் காணப்படவில்லை. கொஞ்சம் டென்ஷனாகவே இருந்தாள்

“ஆபீசில் என்னம்மா விஷயம்?” என்றனர் சாம்புத் தாத்தாவும், கருத்திருமனும்.

“ஒன்றுமில்லை அங்கிள். நீண்ட நாள் தீராத சில பிரச்சினைகள் தீர்க்கப்பட்டன, அதனால் தான் கொஞ்சம் டென்ஷன்” என்றாள். சபரீஷிடம் மட்டும் உண்மையைக் கூறினாள்.

“பி கேர்புல், இளங்கோவைப் பற்றி நான் முன்பே எச்சரித்திருக்கிறேன். தினம் நான் தான் உன்னை ஆபீஸில் கொண்டு போய் விடுவேன், நான் தான் உன்னை பிக்-அப் செய்வேன். கரெக்டாக உன் ஆபீஸிற்கு ஐந்த மணிக்கு வந்து விடுவேன். நீ உன் வேலைகளை முடித்துக் கொண்டு வரக் காத்திருப்பேன் நான்” என்றான் சபரீஷ்.

“எத்தனை நாள் நீங்கள் உங்கள் வேலையெல்லாம் விட்டு என் பின்னால் சுற்ற முடியும்? நடக்கிற காரியமா அது?” என்றாள் கிருத்திகா.

“எல்லாம்  நடக்கும். கொஞ்ச நாள் அவன் கோபம் தணிகிற வரை நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவன் நல்ல பாம்பு மாதிரி” என்றான் சபரீஷ்வர் கவலையுடன்.

அருகில் வந்து அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாகக் கோர்த்துக் கொண்டாள்.

“சபரீஷ்… நீங்கள் என்னிடம் காட்டும் இந்த அன்பு, எனக்கு இது போதும்… இது மட்டுமே போதும். இந்த அன்பில் நெகிழ்ந்து போகிறேன் நான், எனக்கு வேறெதுவும் வேண்டாம்” என்று தன் முகத்தை அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள். அவள் முகத்தை நிமிர்த்தி நெற்றியில், கன்னங்களில், அவள் இதழ்களில் தன் இதழ்களைப் பதித்தான்.

“இப்படிப்பட்ட கடமை உணர்வுமிக்க, தைரியமான, நேர்மையான மனைவியை அடைந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றான் அவளை இறுக அணைத்து.

“ஆனால்… இதனால் ஷீலாவிற்குத் தான் மனம் மிகவும் கஷ்டப்படும். அவள் உங்களுக்கு மிகவும் விருப்பமான தங்கை இல்லையா?”

“ஆம்… நான் விரும்பும் தங்கை தான். அவளுக்கு என் மேல் உண்மையான அன்போ, பாசமோ இல்லை என்றாலும் கூட என்னால் அவளை வெறுக்க முடியவில்லை” என்றான் சபரீஷ்வர்.

“ஏன் வெறுக்க வேண்டும்? அவளுக்கு, அவள் கணவன் இளங்கோவின் மேல் மிகுந்த நம்பிக்கை. அவன் நம்மையெல்லாம் வெறுப்பதால் அவளுக்கும் நம்மைப் பிடிக்கவில்லை. அவள் ஒரு முட்டாள் குழந்தை மாதிரி இருக்கிறாள்” என்றாள் கிருத்திகா வருத்தத்துடன்.

அலுவலகத்தில் கிருத்திகாவிற்கு இப்போதெல்லாம் ஏக மரியாதை, ஏன்… பயம் கலந்த மரியாதையும் கூட. ஆள் எதிரில் மரியாதையும் காட்டுவார்கள், ஆனால் அவர்களில் சிலர் இளங்கோவின் கையாளகவும் வேலை செய்கிறார்கள் என்றும் புரிந்து கொண்டாள். அதனால் அவள் எந்த போலி மரியாதைக்கும் ஏமாறுவதில்லை.

ஏறக்குறைய எல்லா தமிழ் தினசரிகளிலும் இளங்கோவின் ஏமாற்று வேலை, அவன் படத்துடன் வெளியாகியது. ஒரு நாள் ஷீலாவும், அவள் சித்தப்பாவும் போனில் சபரீஷையும் கிருத்திகாவையும் கண்டபடி திட்டினார்கள். இளங்கோவின் இந்த நிலைக்கு இவர்கள் இருவரும் தான் காரணம் என்று குத்திக் காட்டினார்கள். அவர்கள் பேச்சைக் கேட்க முடியாமல் பாதியிலேயே போனை ‘கட்’ செய்து விட்டான் சபரீஷ்.

கிருத்திகாவிற்கு அன்று வீட்டிலிருந்து அலுவலகத்திற்குக் கிளம்புவதற்கே கொஞ்சம் நேரமாகிவிட்டது. இப்போதெல்லாம் தினம் வீட்டிலும் அலுவலகக் கோப்புகளைப் பார்த்துவிட்டுப் படுக்கவே மணி பன்னிரண்டை தாண்டி விடுகிறது. அதனால் காலையில் சாம்புத் தாத்தாவிற்குக் கூட உதவி செய்ய முடியவில்லை.

அவர் செய்து வைத்த சமையலைத் தன் கணவனுக்கு ‘ஹாட் பேக்’கில் அடுக்கி விட்டு இவள் டப்பாவிலும் அவசரமாக அடைத்துக் கொண்டு கிளம்பி விட்டாள்.

முன்பெல்லாம் சபரீஷ்வர் காலை எட்டு மணிக்கெல்லாம் தன் கம்பெனிக்குக் கிளம்பி விடுவான். இப்போது அவளைக் கொண்டு போய் ஆபீசில் விடுவதை முக்கியமான வேலையாகக் கொண்டதால் அவனுக்கு காலதாமதம் ஆகாமல் சீக்கிரமாகக்  கிளம்ப இவள் முயற்சி செய்வாள். அப்படியும் இன்று கொஞ்சம் நேரமாகி விட்டது.

சபரீஷின் காரிலிருந்து இறங்கி அவனுக்கு ‘பை’ சொல்லி விட்டு வேகமாகத் தன் ஆபீஸிற்குப் போனாள் கிருத்திகா. முக்கியமான இன்ஸ்பெக்‌ஷன் ‘ரிப்போர்ட்டை’ சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது மீனாட்சியிடமிருந்து  போன் வந்தது.

“ஹலோ கிருத்திகா, இன்று  நியூஸ் பேப்பர் பார்த்தாயா?”

“இல்லயே மேடம், ஏதாவது முக்கியமான விஷயமா என்ன?” என்றாள் கிருத்திகா.

“யாரையாவது அனுப்பி இன்றைய நியூஸ் பேப்பர் வாங்கு, ஆன்லைனில் கூடப் பார்க்கலாம். பேப்பரின் முதல் பக்கத்திலேயே  இளங்கோவைக் கைது செய்த விவரங்கள் விரிவாகப் போட்டிருக்கிறார்கள். வருமான வரித்துறையை ஏமாற்றினானாம். இப்போது ஷீலாவிடமும், அவள் சித்தப்பாவிடமும் ‘என்கொயரி’ நடந்து கொண்டிருக்கிறது  என்று பேப்பரில் போட்டிருக்கிறது. சபரீஷிற்கும் விஷயம் தெரிவித்து விடு” என்றாள்.

கிருத்திகா ‘ஆன்லைனில்’ பார்கலாமென்று நினைத்தாள். அப்போது தான் பவர்கட் என்று தெரிந்தது, அதனால் பியூனை அழைத்து  ஒரு செய்தித்தாள் வாங்கி வரச் சொன்னாள். அதில் போட்டிருந்த விவரங்கள் அவளுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

உடனே சபரீஷிற்குப் போன் செய்து மீனாட்சி கூறிய விஷயத்தையும், பேப்பரில் படித்த விஷயங்களைப் பற்றியும் கூறினாள். சபரீஷ்வரனோ, அவன் இந்த விஷயத்தை காலையில் படித்து விட்டதாகவும், இவளே இரவெல்லாம் ஆபீஸ் பைலைப் பார்த்துக் கஷ்டப்பட்டதால் இவளிடம் விஷயத்தைக் கூறி டென்ஷன் படுத்த விரும்பவில்லையென்றும் கூறினான்.

கிருத்திகாவிற்கு ஷீலாவை நினைத்தால் தான் மனம் மிக வேதனை அடைந்தது. ஆனால் இவள் எதைச் சொன்னாலும் அவர்கள் குடும்பமாக குற்றம் மட்டுமே கண்டுபிடிப்பதால் நாம் என்ன செய்ய முடியும் என்று யோசித்தாள்.

மீனாட்சியிடம் யோசனை கேட்டாள். “ஷீலா சின்னப் பெண்ணாயிற்றே, இந்த இளங்கோவின் மேல் வைத்த பிரியத்தால் இப்படி வம்பில் மாட்டிக் கொண்டாளே. நாம ஏதாவது உதவி செய்ய முடியுமா?” என்று கேட்டாள் கிருத்திகா.

“வேலியில் போகின்ற ஓணானை எடுத்து மடியில் விட்டுக் கொள்வதைப் போலத்தான் இருக்கிறது நீ சொல்வது. வேலையைப் பாரடி பைத்தியக்காரி” என்றாள் மீனாட்சி.

மேலும் தொடர்ந்தாள், “ஷீலா கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் மோசடி கும்பல் என்று நீ தான் ஸ்டேட்மென்ட் கொடுத்திருக்கிறாய். இப்போது  நீயே அவர்களுக்கு உதவி செய்தால், அந்த இளங்கோ நல்லவனாகி விடுவான். நீ தான் லஞ்சம் வாங்கிக் கொண்டு அவனுக்கு உதவி செய்கிறாய் என்று ஆகி விடும். வாயை மூடிக் கொண்டு வேலையைப் பார்.  சபரீஷிற்கும் நான் போன் பண்ணி சொல்லி விடுகின்றேன். தங்கை என்று பாசத்தால் அப்படியே தத்தளிப்பான். போனை வை, எனக்கு நிறைய வேலை இருக்கிறது. எது செய்வதாக இருந்தாலும் என்னைக் கேட்டுச் செய்” என்று அட்வைஸ் மழை பெய்து விட்டு போனை வைத்து விட்டாள் மீனாட்சி.

ஆனாலும் கிருத்திகாவின் மனது ஷீலாவிற்காக வருத்தப்பட்டது. மீனாட்சி அரசாங்க அதிகாரி அல்லவா? அதனால் ‘கட் அண்ட் ரைட்’டாகப் பேசுகிறாள்.

பாதர் தான், கருணையோடு சரியான சரியான அட்வைஸ் தருவார். அவரைக் கேட்டால் ஏதாவது வழி பிறக்கும் என்று நினைத்து ஹோமிற்குப் போன் செய்தாள். பாதர் தான் எடுத்தார்.

பாதரிடம் ஏற்கெனவே இளங்கோவைப் பற்றி விவரித்திருந்தாள். இப்போது அந்தப் பெண் ஷீலாவிற்காக தன் மனம் அலைப்புற்றதைத் தெரிவித்தாள்.

பாதரும், மீனாட்சி  சொன்னது தான் ‘சரி’ என்றார்.

மேலும், “நீ உன் கடமையைச் செய்தாய், பலனைப் பற்றிக் கவலைப்படாதே. நீ வேலை செய்யும் ஸ்தாபனத்திற்கும், சட்டத்திற்கும் தான் கட்டுப்பட்டவள். மேற்கொண்டு நடக்க வேண்டிய வேலைகளைப் பார். உன் ஆபீசையும் உன் குடும்பத்தையும் பார். சபரீஷ்வர் நல்லவன், அவனுக்கே எல்லா நியாயதர்மங்களும் தெரியும். நீ ஏன் கவலைப்படுகிறாய்?” என்று முடித்து விட்டார்.

மும்தாஜின் திருமண நாளும் வந்து விட்டது. நல்லவேளையாக எல்லோருக்கும் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையன்று திருமணம். மீனாட்சியும், சுமனாவும் அவர்கள் பெற்றோரும் வருவதாகக் கூறினார்கள்.

கோபி… பார்வதியின் கணவன், தன் மனைவி குழந்தையோடும், பெற்றோர்களுடனும் தங்கள் காரில் வருவதாகக் கூறினான்.  அவன் பெற்றோர்கள் காரைக்கால் வந்து திருமணம் பார்த்து விட்டு அப்படியே வேளாங்கண்ணி, நாகூர், நாகப்பட்டினம் எல்லாம் பார்க்க விரும்புவதாகக் கூறினாள்.

சபரீஷின் காரில் கிருத்திகா, கருத்திருமன், சாம்புத் தாத்தா ஏறினர். வயலட்டும் இவர்களோடு வரப்போவதாக போனில் தெரிவித்தாள், அதனால் டிரைவர் வேண்டாமென்று சபரீஷ்வரே தன் பென்ஸ் காரை எடுத்தான். கருத்திருமனுக்கும் டிரைவிங் நன்கு தெரியுமாதலால் டிரைவரைப் பற்றிக் கவலைப்படவில்லை.

மும்தாஜிற்கும் திருமணப் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கு செக் கொடுத்தான் சபரீஷ்வர்.

“எதற்கு சார் இவ்வளவு பெரிய தொகை? நீங்களும் கிருத்திகாவும் எங்களிடம் காட்டும் அன்பே போதும் சார்” என்றாள் மும்தாஜ்.

“ஆமாம், இவ்வளவு பெரிய தொகை வேண்டாமே” என்றனர் அவள் பெற்றோரும்.

“மும்தாஜ் எங்கள் கம்பெனியில் வேலை செய்யும் போது வெறும் சம்பளத்திற்காக வேலை செய்யவில்லை. வேலை மேல் உள்ள ஆர்வத்தால் வேலை செய்தது எங்கள் எல்லோருக்கும் பிடித்த ஒன்று. கிருத்திகாவும் வயலட்டும் அப்படியே, அதனால் தான் அவர்கள் மூவராலும் இன்றளவும் நட்புடன் இருக்க முடிகிறது. அது மட்டுமல்ல, கிருத்திகாவிற்கு ஆபத்து நேரும் போது கூடவே ரூம் மேட்’டாக இருந்தாள். எல்லாவற்றிற்கும் மேலாக, எங்கள் அன்புச் சகோதரி” என்றான் சபரீஷ்.

எல்லாவற்றையும் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா. பார்வதியும் அவள் கணவரும் இரண்டு பெரிய வெள்ளிக் குத்துவிளக்குகள் பரிசாகக் கொடுத்தனர். மீனாட்சியும் சுமனாவும் வயலட்டும் தனித்தனியாக ஏதோ பரிசுகள் கொடுத்தார்கள்.

(தொடரும் – திங்கள் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வைராக்கியம் ❤ (இறுதிப் பகுதி) – ✍ சுபாஷினி பாலகிருஷ்ணன், கோவை

    சிலப்பதிகாரமும், இன்றைய சமூக அவலமும் (சிறுகதை) – ✍ கவிஞர். இரா.அனிதா