in

சிலப்பதிகாரமும், இன்றைய சமூக அவலமும் (சிறுகதை) – ✍ கவிஞர். இரா.அனிதா

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ருகணூர் அடைந்தான் குறுக்கு புத்தி குணா. அந்திப்பொழுது வழக்கம் போல மாடுகளை வண்டியில் இருந்து அவிழ்த்தவன் ஒட்டுத்திண்ணையில் சாய்ந்து படுத்தான்.

சிறந்த உழைப்பாளி மட்டுமல்ல இவன் மிகச் சிறந்த அறிவாளியும் கூட. அரசியல் சார்ந்த அறிவு பயபுள்ளைக்கு தண்ணி பட்ட பாடு.

சாரங்கபாணி அந்த ஊர் பண்ணையாரின் மகன். குணாவின் நெருங்கிய நண்பன்.  இவர்கள் இருவருக்கும் அரசியல் பேசி பொழுதை கழிப்பது தான் வாடிக்கை.

செட்டியார்பாளையம் பள்ளிக்கூடம் மருகணூரிலிருந்து நாலு மைல் தூரத்தில் ஆத்துச்சோலை உள்வாயில் வழியாக உள்ளது. அந்தப் பள்ளியில் தமிழாசிரியராக வேலை பார்க்கும் மோகனசுந்தர வாத்தியார் மருகனூரை சேர்ந்தவர். அவர் சைக்கிளில் பள்ளிக்கு செல்வது வழக்கம்.

ஒரு திங்கள்கிழமை பள்ளியை முடித்துவிட்டு புத்தகங்களை பையில் அடுக்கிக் கொண்டு சைக்கிளில் வீட்டுக்கு விரைந்தார் மோகனசுந்தரம் வாத்தியார். வரும் வழியில் புத்தகத்தை தவற விட்டது அறியாமல் மனைவியிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்.

“ஏண்டி அலமு,  புள்ளையாடி பெத்து வச்சிருக்க. ஒரு பொருளையாவது வீட்டில் வைக்க முடியுதா?”

“ஏன்னா! என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி கத்தறேள்?”

“ஆமாண்டி நேக்கு பைத்தியம் அதான் கத்துறேன்”

“இந்தா பாருடி, உன் பிள்ளையான்டானை தவிர அந்த புத்தகத்தை யாராலும் எடுக்க முடியாது. ஏ… மசமசன்னு நிக்காம அவனை கூப்பிடு, புத்தகத்தை கிழிச்சு வச்சிட போறாண்டி”

“புத்தகமா? ஏன்னா என்ன புத்தகம்? என்ன சொல்கிறீர்? நேக்கு ஒன்னும் புரியல”

“நோக்கு ஒன்னும் புரிய வேணாம், தள்ளேண்டி நந்தி மாதிரி குறுக்க நின்னுன்டு”

“அடேய் குமரேசா, நான் பெத்த நவகிரகமே எங்கடா தொலைஞ்ச”

“என்னப்பா?”

“ஏன்னா அவன அடிச்சு வைக்காதேள், நேக்கு தெரியும் பிள்ளையான்டான் மேல் எந்த தவறும் இல்லை”

“அடேய் சொல்லுடா, எங்க அந்த பெரிய புத்தகம்?  நீ தானே வச்சிருக்கிற, கொடுத்துடு. அப்பா அதை நான் எடுக்கல, அது என்ன புத்தகம்?”

“அடேய் சிலப்பதிகாரமுன்னு எழுதி இருக்கும், அடேய் அத கொடுத்துவிடுடா”

“ஏன்னா அது என்ன தங்கமா வைரமா? வீட்டை ரெண்டு பண்றேள், அவன்தான் தெரியாது என்று சொல்றான் இல்ல”

“அடியே மடச்சி… தங்கத்தை விட வைரத்தை விட, ஏன் என் மகனை விட அந்த புத்தகம் தாண்டி நேக்கு முக்கியம்”

“டேய் குணா நல்ல வேலைடா, நாம இந்த புத்தகத்தை அவசரப்பட்டு கொடுத்திட பாத்தோம்”

“ஆமாண்டா… தங்கம் வைரத்தை விடவெல்லாம் ஏதோ அந்த புத்தகத்தில் இருக்குடா, வா ஓடிடலாம்”

மறுநாள் செவ்வாய்க்கிழமை தோட்டத்து காய்கறிகளை ஏற்றிக்கொண்டு சந்தைக்கு புறப்பட  தயாராகிக் கொண்டிருந்தான் குணா.

நிலப்படியில் இருந்து கத்திக் கொண்டே வந்தான் சாரங்கபாணி, “குணா… குணா எங்கடா போன? அந்த புத்தகத்தை என்கிட்ட கொடுத்து வைத்திருக்க சொல்லிட்டு நீ மட்டும் சந்தைக்கு கிளம்பிட்டியா?  என்னடா எங்கடா இருக்கிற?”

“அடேய் சாரங்கா, உன் வீட்டு வழியாக போகும்போது உன்னையும் கூட்டிகிட்டு போகலாம் என்று தான் நினைச்சேன். நீ காலையில சாப்பிட்டியா, வா கிளம்பு ரெண்டு பேரும் சந்தைக்கு போகலாம்”

“நல்ல யோசனை. எங்க அப்பா என்ன சொல்றாருன்னு தெரியல, சரி அவர் கிடக்கிறார் விடு. வா நாம ரெண்டு பேரும் போகலாம்”

“அடேய் சாரங்கா வர்றதுக்கு ராத்திரி ஆயிடும்,  இல்லாட்டி பொழுது விடிஞ்சிடும் சில நேரம், எப்படின்னு நீயே பாத்துக்க. நாளைக்கு உங்க அப்பா என்கிட்ட வந்து சண்டை போட்ர போறாரு, அதையும் கொஞ்சம்  மனசுல வச்சுக்க. தயவு கூர்ந்து என்னை மாட்டி விடாதே”

ஆற்றை கடந்தது வண்டி. “ஏய் குணா நம்ம ஊருகாரனுக யாருமே இல்லடா. இங்க யாரும் வரவும் மாட்டாங்க. இந்த புத்தகத்தை நாம இங்க வெளியில எடுத்து படிச்சா யாரும் போய் மோகனசுந்தரம் வாத்தியார்கிட்ட சொல்லிட மாட்டாங்க.  இந்த புத்தகத்தை நான் எடுத்து படிக்க வாடா? என்னதான் இருக்குன்னு உள்ள பார்ப்போமே டா”

“அது சரி, பொழப்பே இப்ப உனக்கு அந்த புத்தகமா தாண்டா இருக்குது. சரி எடுத்து படிச்சு தொல”

“குணா என்னடா பேசுற நீ?  பேசாம வண்டிய பார்த்து ஓட்டு” என்றவாறு புத்தகத்தை திறந்து முதல் பக்கம் முதல் இறுதி பக்கம் வரை மேலோட்டமாக புரட்டிக் கொண்டு வந்தவன், ஒரு பெண் தலைவிரி கோலமாக கையில் ஒரு வளையம் போன்ற ஒரு பொருளை ஏந்தி கொண்டு நிற்பதை பார்த்தவுடன் அதிர்ந்தான்.

“ஏ குணா, என்னடா இது? இந்த படத்தை பாரு ஒரு பொண்ணு அழுதுகிட்டு தலையை விரிச்சு போட்டுகிட்டு பாக்கவே பயமா இருக்குதுடா”

“பேயா இருக்குமோ?  ஏண்டா சாரங்கபாணி… நீ பேய் புத்தகத்தை தான் உன் கையில வச்சு இருக்கியாடா?”

“என்னடா சொல்ற குணா? எனக்கு பயமா இருக்கு”

“அடேய் லூசு மாதிரி பண்ணாம நான் சொல்றேன் இல்ல, அந்த புத்தகத்தை படிக்க ஆரம்பி. இன்னும் சந்தை எட்ட நாலு மைல் தூரம் இருக்கு” என்றவாறு இரு கால்களாலும் மாட்டை குத்தி வேகத்தை கூட்டினான்.

படிக்க ஆரம்பித்தான் சாரங்கபாணி. நேரம் ஓடிக்கொண்டே இருந்தது, சந்தை எட்டினதும் குணா வியாபாரத்தை தொடங்கினான்.

“டேய் சாரங்கபாணி, ஒரு நல்ல யோசனை சொல்றேன். நீ இங்கே நின்னுகிட்டு எவ்வளவு நேரம் இருப்ப?  நீ எனக்கு எந்த உதவியும் செய்ய வேண்டாம். நீ அந்த கொன்ன மரத்தடில உட்கார்ந்து படி, சாப்பாடு வாங்கிட்டு வந்து தாரேன். இந்த வேலை எல்லாம் உனக்கு தெரியாது”

“நானும் அதைத்தான் சொல்ல வந்தேன்” என்றவன், விருட்டென்று  கொன்ன மரத்தடியில் இருந்த கட்டையில் ஏறி அமர்ந்து படிக்க தொடங்கினான்.

சிறிது நேரம் கழித்து சாரங்காவை பார்த்து, “குணா, என்னடா டீ குடிக்கிறியா? சத்தமே இல்லாம புத்தகத்தை பார்த்துகிட்டே இருக்கிறியே? படிக்கிறியா இல்ல நீ தூங்குறியா?” என்று கேட்டான்.

“டேய் குணா… இது யாருடைய கதை?  இல்ல யாருடைய கற்பனை? எனக்கு ஒண்ணுமே புரியல”

“டேய் முதல்ல நீ எல்லாத்தையும் படிச்சு முடி,  இது கற்பனையா கதையா எல்லாத்தையும் நான் சொல்றேன்”

“இல்லடா இத படிக்கும் போது எனக்கு ஏதோ தோணுது அதான் உன்கிட்ட கேட்டேன்”

“குணா இன்னும் அதிக பக்கம் ஒன்னு இல்லடா, ரெண்டு பக்கம்தான் இருக்கு”

“ரெண்டு பக்கமா இருந்தாலும் அத படிச்சு முடி. அப்பதான் உனக்கு முழுசா புரியும் இந்த புத்தகம் என்ன சொல்லுதுன்னு.  சரி நான் போய் மாட்டை வண்டியில மாட்டை பூட்டிகிட்டு வரேன்”

“சாரங்கா ஏதோ கேள்வி எல்லாம் கேட்டியே, இப்ப மௌனமா வர்ற? படிச்சு முடிச்சிட்டியா?  இப்ப உன்னோட கேள்வியை தொடங்கு”

வண்டியில் மௌனமாக அமர்ந்திருந்தான் சாரங்கபாணி.

“அடேய் சாரங்கா, உனக்குத்தான் சிலப்பதிகாரம் புதுசு. என்ன பொறுத்த வர சிலப்பதிகாரம் சொல்லிக் கொடுத்தது தாண்டா ஜனநாயகம்”

“என்னடா சொல்ற?”

“ஆமாம்.  மன்னராட்சி என்பது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. அந்த சாமானியனின் மனைவி மன்னனை கேள்வி கேட்டாளே, தன் கணவனின் மரணத்திற்காக நாட்டையே கொளுத்தினாளே அந்த கண்ணகி யார்?”

“சொல்லு இந்த கண்ணகி யார் சாரங்கி?”

“அவள் ஒரு சாமானியன்களின் மகளாகவும், மனைவியாகவும் இருந்தவள். அவளுக்கு எப்படி அவளுடைய நாட்டு மன்னனை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம்  எங்கிருந்து வந்தது?”

“தன் ஓட்டை விற்றுப் பிழைக்கும் இந்த வஞ்சக கூட்டத்தை எப்படி பாமரன் என்றும், சாமானியன் என்றும், அவர்கள்  இந்நாட்டின் சீரழிவுக்கு காரணமில்லாதவர்கள் என்றது போல பேசிக் கடக்கிறோம்”

“நீ  கேட்கலாம் கண்ணகி நாட்டிற்காகவா போராடினாள், தன் கணவனுக்காக தானே போராடினாள் என்று. அது புரிந்ததால் தான் இந்த பாமரனை இந்த சாமானியனை எதார்த்த போக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நான் சொல்கிறேன்”

“ஏன் இன்று சமுதாயத்தில் தனி மனிதனுக்கு எந்த பிரச்சினையும் இல்லையா?”

“இன்றைய ஜாதி அரசியலில் வேட்பாளர் தேர்ந்தெடுக்க மட்டுமே ஜாதி பயன்படும் போது, ஒரு தனி மனிதனின் சமுதாய பிரச்சனையை எதிர்கொள்ள ஜாதிகள் ஏன் ஒன்றிணைவதில்லை?  இதிலிருந்து என்ன புரிகிறது? பாமரன்,  அந்த சாமானியன் ஒன்றும் புரியாதவன் அல்ல”

“ஆமாண்டா குணா… நாம ஜனநாயக நாட்டில் இருந்துகிட்டு வார்டு கவுன்சிலரை கூட கேள்வி கேட்க முடியலடா. உண்மையிலேயே நமக்கு இந்த கண்ணகியின் செயல் ஜனநாயக உரிமையை கையில் எடுக்க சொல்லி கொடுக்குதடா”

“இது ஒரு காப்பியம்  மற்றும் இலக்கிய வகை என புரிந்து கொள்வது தவறுடா, நல்லா புரிஞ்சுக்கடா. வரலாற்றுக்கு முந்தைய சமூகம், சமயம், அரசியல் வரலாற்றையோ,  ஏதோ ஒரு வரலாற்றை நம் நம்பிக்கையை அடிப்படையாய் கொண்டு பின்னப்பட்ட முந்தைய அரசியல் தர்மம், சமூக தர்மம், சமய தர்மத்தினை எடுத்து சொல்லுதடா இந்த சிலப்பதிகாரம்”

“இதுல இன்னொரு வேடிக்கையான விடயம் என்னன்னா, காப்பியங்களில் முதல் காப்பியம் சிலப்பதிகாரம் பல நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் தன் கணவனுக்காக நாட்டை தீக்கிரையாக்கி இருக்கிறாள். இருந்த போதிலும்  இந்த நவீன உலகத்தில் பெண் அடிமைத்தனத்தை பற்றி பேசுவதும் ஒரு அரசியலோ என்று என்ன தோன்றுகிறது”

“சாரங்கா… அப்போ நமது மூத்த சமூகத்தை சேர்ந்த ஆண்கள், பெண்களை மதித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதனால் தான் தன் கணவனின் மரணத்திற்காக நியாயம் தேடி இருக்கிறாள் அந்தக் கண்ணகி. இதிலிருந்து என்ன தெரிகிறது தெரியுமா? வரலாறு சூழ்நிலைக்கேற்றவாறு தவறாக பின்னப்பட்டுள்ளதே தவிர, இது ஒன்னும் உண்மை அல்ல என்று நாம் புரிந்து கொள்வதிலும் தவறில்லை”

“அதேபோல் இந்த மன்னனை பாருடா சாரங்கா,  தவறா  நீதி வழங்கிட்டோம்னு செத்தே போயிட்டாப்ள”

“நான் இந்த கதையை படிச்சிட்டு ஆச்சரியப்பட்ட விஷயம் என்ன தெரியுமா?”

“எவ்வளவோ வரலாற்று திரிபுகள் இருந்தும்,  வரலாறுகளை மாற்றி அமைத்த போதிலும்,  மன்னன் தவறுக்காக உயிர் விட்டான் என்பதை மட்டும் ஏன் மாற்றாமல், திரிக்காமல்  விட்டு விட்டார்கள் என்பதுதான் இந்த ஆட்டையை போடுபவர்கள் மீது எனக்கு சந்தேகம் வருகிறது”

“இது கதையோ கற்பனையோ அல்ல உண்மை கதையா என்று யோசிக்கிறதை விட சமூக தர்மத்தை காப்பியம் ஒரு பெண்ணின் கற்பை ஏன் முன்னுறுத்தி பேசுது தெரியுமா? ஒரு பெண் உடலால் தூய்மை பெறும் போது தான் உள்ளத்தால் துணிவடைகிறாள். பெண்ணால் மட்டுமே தான்டா எதையுமே ஆக்கவும் முடியும், அளிக்கவும் முடியும். அவள் எந்த சூழலிலும் புனிதமற்று போகக் கூடாது, அப்படி தவறாக எதுவும் நடந்தால் அந்த சமூகம் நாசம் அடையும் என்பதை கருத்தில் கொண்டுதான் கண்ணகி சிறந்த கற்புக்கரசியாக இளங்கோவடிகள் உடும்புப்படியாக அவளை உன்னதப்படுத்துகிறார்”

“அதனால்தான் வழக்கு பேச்சில் பத்தினி  கைப்பட்டால் பச்சை மரமும் பற்றி எரியும் என்று சொல்வார்கள். ஏனென்றால் கண்ணகி உடலாலும் உள்ளத்தாலும் தூய்மையானவளாக இருந்ததால் தான் அவள் சொன்னதும் மதுரை பற்றி எரிந்தது என்ற உட்கருத்தை கற்பு என்ற உவமையை கொண்டு நாம் அறிய செய்கிறார்”

“அடேங்கப்பா குணா நீ சொல்வது போல் இந்த காப்பியம் கூறும் அரசியல் தர்மம். புனைவு இல்லாமல் காப்பாற்றப்பட்டது ஆச்சரியம் தான்”

“ஆமா… தவறு இழைத்தவன் மன்னனோ தலைவனோ உயிரோடு இருந்தாலும் அவன் இறந்ததற்கு சமமாவான். உயிர் இருக்குமேயானால் அறம் ஒரு நாள் அவனைக் கொன்றளிக்கும்”

“தவறுக்குப் பின் தவறில் இருந்து பிழைத்து வாழ்தல் சில நாள் அது வாழ்வல்ல கொடிய இழிவே”

“இவ்வாறாக அரசியல் தருமத்தை நமக்கு இந்த காப்பியம், அடுத்தவர்களுக்கு நீ தெரிந்தோ தெரியாமலே செய்யும் தீங்கு ஏதோ ஒரு வகையில் உன்னை கொன்றளிக்கும்.  அது அல்லாமல் தவறிலிருந்து தப்பித்து, உன்னால் சில காலம் தான் வாழ முடியும்.  அப்படி வாழ்வது வாழ்வல்ல. அது பெரிய அசிங்கம் என்று  காப்பியம் விளக்குவதாக நான் புரிந்து கொள்ள வேண்டும்”

“அடேய் குணா பேசிக்கிட்டே ஊருக்குள்ள வந்துட்டோம்டா”

“அட போடா எதுடா நம்ம ஊரு? வாரா வாரம் வந்துட்டு போற எனக்கு தெரியாதா நம்ம ஊரு எப்ப வருமுனு”

“சாரங்கா உன்கிட்ட ஒன்னு நான் சொல்லியே ஆகணும். வைரமும் இருக்குன்னு சொன்னதும் நீ புத்தகத்தை தூக்கிட்டு ஓடி வந்தபோது நான் ஏன் உன் கூட வந்தேன்னு தெரியுமா? காப்பியம், காவியம், இலக்கியம், இலக்கணம் என்று தொகைப்படுத்தி வைத்திருக்கிற நம்முடைய வரலாற்றுக்கு முந்தைய அற்புதமான வாழ்க்கை முறையை தாண்டா அது. அதை படிக்காவிட்டாலும் அந்த புத்தகத்துக்குள் உள்ள தூசியை கூட தட்டி விட மனமில்லாமல் இருக்கும் உன்னை போன்றோர்களை படிக்க வைப்பது தான் என் நோக்கமாக அந்த சமயத்தில் தோன்றியது”

“அது சரி குணா நீ சமய தர்மத்தை சொல்லாமல் விட்டுட்டியே”

“அதுவும் சரிதான் சமயம் எதை சொல்லிக் கொடுக்கிறது தெரியுமாடா? அதுவும் மனித ஒழுக்கத்தை தான் முன் வைக்கிறது.  நீ நல்லவனாக அறத்தை போற்றி வாழ்ந்தால் இறைவனை சென்றடைவாய். நான் உனக்கு இறைவனை சென்றடைவதற்கான வழியை சொல்லிக் கொடுக்கிறேன் என்று மனித ஒழுக்கத்துடன் நம்மை கை பிடித்து வழி நடத்துகிறது சமயம்”

“சரி குணா…  இறைவன் என்று சமயம் எதை சொல்கிறது?”

உரக்கச் சிரித்தான் குணா… பளபளவென பொழுது விடிந்தது.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 18) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    தங்கக்  கழுகு (சிறுகதை) – ✍ ஜேஸு G, ஜெர்மனி