in

தங்கக்  கழுகு (சிறுகதை) – ✍ ஜேஸு G, ஜெர்மனி

மே 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

மாலை மணி ஆறு என்று சுவர் கடிகாரம் ஆறு முறை ரீங்காரமிட்டது. காலை முதலே வீடு முழுவதும் எனக்குத்தான் சொந்தமென ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பத்தியின் மணம்,  போட்டிக்கு யாரும் வராததால் களை  இழந்து மெதுவாக வெளியேறிக் கொண்டிருந்தது. ரோஜா, சாமந்தி, அரளி என மலர்களிலிருந்து உதிர்ந்த இதழ்கள் வீடு முழுக்க விரவிக் கிடந்தன.

முன் வீட்டில் கிடந்த மரக்கட்டில் வெறுமையாக இருந்தது.  அதை உரிமை கொண்டாடும் ஞானப்பழம் இப்போது உயிரோடு இல்லை. கட்டிலின் அருகே இரண்டு நாற்காலிகள் கலைந்து கிடந்தன. இடது பக்க சமையலறையில் ஒரு வாரம் சமைத்த அறிகுறி எதுவும் இல்லை.

சாத்தியிருந்த வெளிவாயிலின் அரைக் கதவில், துள்ளி ஏறி வீட்டுக்குள் வந்த பூனை, சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த பூபாலனின் கால்களை பிராண்டியது. எப்போதும் போல் கைகளில் அள்ளி முதுகில் மசாஜ் செய்வார் என்று எதிர்பார்த்த பூனை ஏமாற்றத்துடன் வீடு முழுக்க ஞானப்பழத்தை தேடியது. வேறு யாரும் வீட்டில் இல்லாததால் மீண்டும் கதவில் ஏறி ‘மியாவ்’  என்று சத்தமிட்டு கொண்டே வெளியே ஓடியது.

பூனை சத்தம் கேட்டு வாசலைப் பார்த்தார் பூபாலன். அந்திநேரம் வெளிச்சத்தை ஏறத்தாழ தின்று முடித்து விட்டது. மழை இன்னும் விடவில்லை. மழை இரைச்சலைத் தவிர, பைக் சத்தம்  மட்டும் அந்த சிறிய கிராமத்தில் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. மின்சாரமும் கட்டாகிப் போயிருந்ததால் ஊர் முழுவதையும் வீட்டுக்குள் அடக்கிப் போட்டிருந்தது மழை.

திருமணமாகி 50 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், இன்று தான் மனைவி இல்லாமல் வீட்டில் தனியாக இருக்கிறார் பூபாலன்.  வழுக்கை தலையில் ஆங்காங்கே சில முடிகள் மட்டும் வெள்ளையாய் நீட்டிக் கொண்டிருந்தன. தொடர்ந்து அழுததன் காரணத்தால், ஒட்டிய கன்னங்களில் கால்வாய் போட்டிருந்தது கண்ணீர். சட்டையில் கதம்ப மலர்களின் வாசம் இன்னும் ஒட்டிக் கொண்டிருந்தது.

செருப்பை காலில் மாட்டிக் கொண்டு வெளியே வந்து கதவை சாத்தினார். சிறிய பால்கனியை கடந்து ஐந்து படிகளை கைப்பிடியைப் பிடித்துக் கொண்டே மெதுவாக இறங்கினார்.  70 வயதிற்கான தள்ளாட்டமும் மனைவியை இழந்த சோகமும் நடையில் தெரிந்தது. வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டார்.

வீட்டிற்கு முன்பிருந்த 15க்கு 30 அடி காலி இடத்தில், காலையில் கட்டி இருந்த சாமியானா இப்போது இல்லை. அங்கு நின்றிருந்த நான்கு தென்னை மரங்களும் ‘போகாதே’ என்பது போல காற்றில் வேகமாக அசைந்தன. உடன்பிறப்பின்றி தனியாக வளர்ந்த கறிவேப்பிலையும் கண்ணீரை மழை நீராய் சிந்திக் கொண்டிருந்தது.

காம்பவுண்டு கேட்டை திறந்து தெருவில் இறங்கியவர், திரும்பி வீட்டைப் பார்த்தார். மொட்டை மாடி குழாயிலிருந்து மழை நீர் வழிந்து கொண்டிருந்தது. தெருவில் யாரும் இல்லை.

வடக்கு நோக்கி நடந்தவர், கடைசியிலிருந்த ஓலைக் குடிசையின் இடது பக்கமாக மேற்கு நோக்கி திரும்பினார். தூரத்தில் மயானம் தெரிந்தது. ஒத்தையடி பாதையில் தொடர்ந்து நடந்தார்.

காலையில் தூவிய அரளிப்பூக்கள் மழையில் குளித்து, குளிரில் வாடிக் கொண்டிருந்தது. காலையில் அவர் வீசி எறிந்த மெதுவடையின் சிறிய துண்டை எங்கிருந்தோ பறந்து வந்த மழைக் குருவி, கொத்திக் கொண்டு சென்றது.  

சற்று நின்று நிதானமாக அந்த மழைக்குருவியை பார்த்தார். அவர் பார்வையையும் இழுத்துக் கொண்டு சென்ற மழைக்குருவி, தூரத்து இருட்டில் மறைந்து போனது. அவரின் நினைவுகளோ இன்றைய நாளின் அதிகாலையில் போய் நின்றது.

விடியற்காலை ஐந்து மணிக்கு அமெரிக்காவில் இருக்கும், மகன்  மீண்டும் பேசினான்.

“இப்போ எனக்கு லீவு கிடையாது. அதனால வர முடியாதுப்பா. நீங்களே காரியத்தை முடித்து விடுங்கள்”, சற்று கோபமாகத்தான் சொன்னான் ரமேஷ்.

மழைத் தூறலுக்காக தலையில் கட்டி இருந்த கர்சீப்பை எடுத்து பிழிந்தார். அதில் நிறைய ஈரம் இருந்தது. போனை துண்டித்தார். அதன் பின் அவனிடம் பேச அவருக்கு விருப்பமில்லை.

மருத்துவமனைலியிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மனைவியை வீட்டுக்கு கொண்டு வந்து விட்டார். ஆம்புலன்ஸ்காரர்கள் ஞானப்பழத்தை முன் வீட்டில் கிடந்த மரக்கட்டிலில் கிடத்திவிட்டு பணத்தை வாங்கிச் சென்றார்கள். அப்படியே அருகில் இருந்த நாற்காலியில் இருந்து விட்டார். கண்கள் மட்டும் மனைவியை பார்த்துக் கொண்டிருந்தன. உறவுகள் ஒவ்வொன்றாய் வரத் தொடங்கின.

“ஏழா! புருஷனை தனியா தவிக்க விட்டுட்டு போயிட்டியேடீ…..” என்று அழுத சந்தனம் பாட்டியின் காதோர பாம்படமும், கொண்டை முடியும் ஒப்பாரிக்கு ஈடுகொடுத்து தாளம் போட்டு ஆடின.

“பையன், மருமக, பேரப்பிள்ளைகளெல்லாம் வரவில்லையா சார்?”  மெதுவாக அருகில் வந்து கேட்டார், ஊர் பெரியவர் ரங்கநாதன்.  

நாடிக்கு சப்போட்டு கொடுத்திருந்த இடது கையை மெதுவாகத் தூக்கி, ‘இல்லை’ என்று அசைத்துக் காட்டினார் பூபாலன்.

“அப்போ அடக்கத்துக்கு ஏற்பாடு பண்ணிடட்டுமா?”

“சரி” என்று தலையசைத்தார் பூபாலன்.

சமுதாயம் இப்பல்லாம் ரொம்பத்தான் மாறிப் போயிருக்கிறது. பூபாலனின் சிறு வயது காலங்களில் அவரையும்  குடும்பத்தினரையும் கீழ்ஜாதி என்று சொல்லி யாரும் மதிப்பது கிடையாது. ஆனால் தாசில்தார் அலுவலகத்தில் அவர் வேலைக்கு சேர்ந்த பின், மரியாதையும் அவரைத் தேடி வந்தது.

அதற்கு அவரின் படிப்பும், அரசாங்க வேலையும் இன்னும் சொல்லப் போனால் அரசின் பல நடவடிக்கைகளும் கூட காரணமாக இருக்கலாம். இப்பொழுது அவரின் மகன் அமெரிக்காவில் இருந்ததும் கூடுதல் காரணம். கீழ் ஜாதி என்று முன்னொருகாலத்தில் பேசிய ஊர்த் தலைவர் கூட இப்போது ‘சார்’ என்று தான் கூப்பிடுகிறார்.

பூபாலன் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது. மீண்டும் இடது கையை நாடிக்கு கொடுக்க, சில கண்ணீர் துளிகளை வீட்டின் தரைதளம் உள்வாங்கிக் கொண்டது.

பட்டம் கட்டியாயிற்று. நீர் மாலைக்கு  ஊரின் கிழக்கே இருந்த கிணற்றுக்குப் போய் நீர் எடுத்து வந்து  ஞானப்பழத்தை குளிப்பாட்டி அனைத்து காரியங்களையும் செய்து முடித்தனர். சொர்க்க ரதம் வீட்டின் முன் வந்து நின்றது.

ஞானப்பழத்தை பெட்டிக்குள் வைத்து அப்படியே வண்டியில் ஏற்றினார்கள். மையப்பெட்டியின் மூடியையும் வண்டியில் ஒருபுறமாக ஒதுக்கி வைத்தனர். நாலைந்து இளம் விடலை பையன்கள் வண்டியை மெதுவாக தள்ளிச் செல்ல, பெரியவர் சிறுவர் என உறவினர்கள் அனைவரும் பின்னால் நடந்து சென்றனர்.

சிறிது தூரம் வண்டி கூடவே நடந்து வந்த பூமிநாதன், நடக்க முடியாமல் தள்ளாடவே, அவரையும் சொர்க்க ரதத்தில் ஏற்றினார்கள். வண்டியின் டயருக்கு மேல், உட்புறத்தில் சற்று மேடிட்டு இருந்த தகரத்தில் உட்கார்ந்து கொண்டார். குனிந்து மனைவியின் கன்னங்களை மெதுவாக வருடினார்.

நேற்று இரவு மருத்துவமனை கேண்டீனில் சாப்பிட்ட மெதுவடையின் சின்ன துண்டு பாக்கெட்டில் இருந்ததை பாக்கெட் விரிந்து காட்டி கொடுத்தது. இடது கையின் ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் பாக்கெட்டில் நுழைத்து அதை வெளியே எடுத்து வீசினார்.

புதிய சேலையில் ஞானப்பழம் அழகாகத் தெரிந்தாள். அப்படியே மனைவியை கட்டிக் அணைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது பூபாலனுக்கு. கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது. அடக்கி கொண்டார்.

உதடுகள் இருபுறமும் நீண்டு விரிந்து, விசும்பலை வெளி தள்ளியது. உடன் நடந்து வந்த யாரோ ஒருவர், அவரின் முதுகில் தடவிக்  கொடுத்தார்.

“வண்டிய மேக்க லாத்தி தள்ளுங்கப்பா! இங்க பெரிய பள்ளம் கிடக்கு” என ஒரு பெரியவர் கூற, இளைஞர்கள் வண்டியை சற்று மேற்குப் புறமாக ஒதுக்கி முன்னேறினர்.

மயானம் வந்தது. பூபாலன் கையைப் பிடித்து மெதுவாக கீழே இறங்க உதவினான் ஒரு விடலை. அருகிலிருந்த ஒரு பெரிய கல்லில் உட்கார்ந்து கொண்டார்.

மையப்பட்டியை நான்கு பேர் சேர்ந்து மெதுவாக இறக்கி  குழி  அருகே வைத்தனர். ஒரு எவர் சில்வர் தட்டு குழி அருகே வைக்கப்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே சில்லறைகளும் பணமும் சில்வர் தட்டை நிறைத்தன.

“பார்க்கிறவங்க எல்லாம் பார்த்துக்குங்க மூடப் போறேன்” என்றவரின் குரல், பூபாலனை எழுப்பியது. அருகில் வந்தார். சிறிது நேரம் மனைவியே உற்றுப் பார்த்தார்.

‘சரி மூடுங்கப்பா’ என்ற ரங்கநாதனின் குரலை, உத்தரவாக எடுத்துக் கொண்டவர்கள், உடனே பெட்டியை மூடி ஆணி அடித்தார்கள். பெட்டியானது, குழிக்குள் இறக்கப்பட்டு மண் மூடப்பட்டது. அனைவரும் கலைந்தனர்.

பைக்கில் பூபாலனை ஏற்றிக்கொண்டு வீட்டில் விட்டவர், “சாயந்திரம் வரேன் மாமா! இப்ப கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறி தன் வீட்டுக்கு சென்று விட்டார்.

வீட்டுக்குள் நுழைந்த பூபாலன் நாற்காலியை இழுத்து போட்டு அதில் உட்கார்ந்தார். சுவர் கடிகாரம் காலை 10 மணி என்று காட்டியது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு எதுவும் தெரியவில்லை.

கண்களை மூடியவர் அப்படியே தூங்கிப் போனார். கண்விழித்த போது மாலை 4 மணி. வெளியில் ‘ச்சோ’ என்று மழை பெய்து கொண்டிருந்தது.

வயிறு பசித்தது பூபாலனுக்கு. எப்படி சமைக்க வேண்டும் என்று தெரியவில்லை. தொடர்ந்து ஐம்பது வருடங்களாக மனைவியை நம்பி இருந்ததால் அடுப்பங்கரை பக்கம் கூட போனதில்லை. எந்த பாத்திரத்தை எடுத்து எப்படி சமைக்க வேண்டும் என்று எதுவுமே புரியவில்லை.

அழுகை முட்டிக்கொண்டு வந்தது. அழுதார், அழுதார், அழுது கொண்டே இருந்தார். மழை சாரல் பால்கனியை தாண்டி அவர் முகத்தில் அடித்தது. டவலை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டார்.

ஞானப்பழம் இருந்திருந்தால் இந்தச் சாரலுக்கு உடனே ஸ்வட்டர் எடுத்து போட்டு இருப்பாள். தனக்கும் சூடாக காபி போட்டு தந்திருப்பாள் என்று எண்ணியவர், வேகமாக எழுந்து பீரோவை திறந்து ஸ்வெட்டரை எடுத்தார். கூடவே ஒரு தடிமனான போர்வையையும் எடுத்துக் கொண்டார்.

தன் மனைவிக்கு ரொம்ப குளிரும். இந்த இரண்டையும் மையப்பெட்டிக்குள் கொண்டு போய் வைத்து விட வேண்டும் என எண்ணி புறப்பட்டார். வேகமாக நடந்து மயானத்துக்கு வந்தவரை மழைக் குருவி திசை திருப்பியது.

பழைய நினைவுகளிலிருந்து மீண்டவராய், மயானம் நோக்கி நடந்தார். இருட்டில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. ஆனாலும் வேகமாக நடந்தார். கையில் இருந்த பையில் ஸ்வட்டரும் பெட்ஷீட்டும் இருந்தன.

மண் மேட்டிட்ட கல்லறை மழையில் நனைந்து கொண்டிருந்தது. பையை பத்திரமாக  இன்னொரு கல்லறை இடுக்கில் நனையாதவாறு நுழைத்து வைத்தார். ஞானப்பழத்துக்கு குழி வெட்டிய மண்வெட்டி அருகில் கிடந்தது. எடுத்து தோண்ட ஆரம்பித்தார்.

சாதாரண நிலையில் இருந்திருந்தால், இந்த அளவுக்கு தோண்டி இருப்பாரா என்பது சந்தேகம்தான். ஆனால் அவரின் மனைவியின் மீது இருந்த பாசம் இப்போது குழியை வேகமாக தோண்ட வைத்தது. வேகமாக தோண்டி பெட்டியை வெளியே எடுத்தார்.

மண்வெட்டி உதவியுடன் ஆணிகளை நெம்பி மூடியை திறந்தார். மின்னல் வெளிச்சத்தில் ஞானப்பழம் முகம் பளிச்சென்று தெரிந்தது.

“என்னை தனியா விட்டுட்டு இப்படி போயிட்டியேடி……..எழும்பி வீட்டுக்கு வா…….” சத்தமாய் அழுதார். அவருக்கு போட்டியாய்  வானம் இடி சத்தத்தை பூமிக்கு அனுப்பியது.

“எனக்கு வயிறு பசிக்குது, வந்து சோறு போடு பழம்!… எழும்பி வா …..” தேம்பித் தேம்பி அழுதார். மனைவியின் முகத்தில் வழியும் மழை நீரை கைகளால் துடைத்தார்.

“வா…பழம்….. வீட்ல தனியா இருக்க எனக்கு பயமா இருக்கு, என் கூடவே வந்துடுடி” மனைவியின் கையைப் பிடித்து அழுதார்.

அப்படியே சிறிது நேரம் அழுது கொண்டிருந்தவர், ஏதோ ஒரு  முடிவுக்கு வந்தவராய், மெதுவாக எழும்பி மனைவியின் மீது தானும் பெட்டிக்குள் படுத்தார். அங்கிருந்த வேப்பமரத்திலிருந்து இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த, தங்கக் கழுகு  மெதுவாகப் பறந்து வந்து அவர் அருகில் அமர்ந்தது.

ஏதோ நினைத்தவராய், மையப்பெட்டியிலிருந்த ஒரு ஆணியை பிடுங்கி தன் பிட்டத்தில் குத்தி கிழித்தார். ரத்தம் பீறிட்டது. அப்படியே மனைவி மீது படுத்து கட்டிக்கொண்டார். தங்கக் கழுகு அருகில் வந்து அவரை குத்தி கிழிக்க ஆரம்பித்தது.

சந்தோஷமாய் புன்னகைத்துக் கொண்டே மனைவியின் உதட்டுடன் உதடு சேர்த்து கண்கள் மூடினார். இப்பொழுது அவருக்கு பயமோ வலியோ இருக்கவில்லை.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிலப்பதிகாரமும், இன்றைய சமூக அவலமும் (சிறுகதை) – ✍ கவிஞர். இரா.அனிதா

    குரங்கு புத்தி (சிறுகதை) – ✍ சசிகலா ரகுராமன்