sahanamag.com
சிறுகதைகள்

நள்ளிரவில் ஒரு இளம்பெண் (சிறுகதை) – ✍ சி.பி செந்தில் குமார் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

ரே ஒரு வரி பேட்டியின் மூலம், மொத்த மீடியாக்களும், பப்ளிக்கும் பரபரப்பாக பேசிக் கொள்ளும் டாபிக் ஆகியது அது. மொத்த தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது

“பொள்ளாச்சி பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு பெண்களும் ஒரு காரணம், ஊசி இடம் கொடுக்காம நூல் நுழைய முடியுமா?” என ஒரு டைரக்டர் சினிமா பட விழாவில் பேசியது, சென்சேஷனல் நியூஸ் ஆனது 

டைரக்டர் லக்கிகிங் தொட்டதெல்லாம் பொன்னான காலகட்டம், அவரது ஒவ்வொரு படங்களுமே வெள்ளி விழா தான். அதுக்கு முக்கியமான காரணம் அவர் பெண்களை மதித்து படம் எடுத்ததே

பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே அவரது ஒவ்வொரு படக்கதை கருவும் இருக்கும். அவரின் இயற்பெயர் என்னவென அவரை பெற்ற அன்னையே மறந்திருப்பார்

எல்லாப் படங்களும் ஹிட் ஆனதால், அவருக்கு லக்கிகிங் என்பது ஆகு பெயர் ஆனது. அவரின் பட வசனங்கள், பெண்களின் முன்னேற்றத்தைப் பற்றியும், பெண் பெருமை பேசுவதாகவும், தமிழ்க் கலாச்சாரம் , பண்பாடு இவற்றைப் பற்றியதாகவே இருக்கும்

“என் முன்னாள் காதலி உங்க இந்நாள் மனைவி ஆகலாம் சார், ஆனா உங்க இந்நாள் மனைவி  என் காதலி ஆக முடியாது சார்” என ஒரு பட க்ளைமாக்சில் அவர்  வைத்த வசனம் செம ஹிட்

“பாடம் சொல்லித் தர்ற வாத்தியார்  தன்னிடம் பயிலும் மாணவியை லவ் பண்றது தப்பு. அந்தப் பெண்  தானே வலிய வந்து தன் காதலைச் சொன்னாலும் ஏத்துக்கக் கூடாது ஏத்துக்க  மாட்டான்” என பட நாயகன் சொன்ன கருத்து, மக்களால் கொண்டாடப்பட்டன

“சார், ஐ லவ் யூ” என முதலில் அந்தப் படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டு, பின் டைட்டிலில் கூட ஆசிரியர்-மாணவி உறவு கொச்சைப்படுத்தப்படக் கூடாது என டைட்டிலை மாற்றியவர் அவர்

 சிறந்த வசனகர்த்தா, சிறந்த திரைக்கதை என பல விருதுகளைக் குவித்தவர்

இவரைப் பற்றி இன்னொரு முக்கியமான  விஷயத்தையும் சொல்லியே ஆக வேண்டும்

சினிமா உலகில், டபுள் மீனிங் காமெடியை ஆபாசமாக சொன்னவர்கள் பலர் உண்டு. ஆனால், ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் ரசிக்கும்படி சொன்னவர் இவர் ஒருவரே

இப்படிப்பட்ட டைரக்டர் தான், இப்போது சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்

முதல்வன் படத்தில்,  அர்ஜூன் – ரகுவரன் பேட்டி மிக பிரபலம். அதற்கு இணையான அல்லது அதைத் தாண்டிய ஒரு பரபரப்பை  இந்த பேட்டி   உருவாக்கியது, லைவ் ஷோ…..

பேட்டி எடுப்பவரும் அல்பசொல்பமானவர் அல்ல. மாநில முதல்வரில் இருந்து நாட்டின் பிரதமர் வரை கேள்விக்கணைகளால் துளைத்து எடுப்பவர்

‘இவர்கிட்ட ஏண்டா வந்து மாட்டிக்கிட்டோம்’ என நடுங்குபவர்கள் பலர்

கிராஸ் கொஸ்டீன் கேட்பதில் மன்னி. மன்னன் விஜயசாந்தி போல்  பாடி லேங்க்வேஜ், படையப்பா நீலாம்பரி போல் ஒரு தெனாவெட்டு 

வணக்கம் வைக்கறது, இண்ட்ரோ இந்த ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் ஸ்கிப் பண்ணிட்டு டைரக்டா மேட்டருக்கு போவோம்

”சார், நாம 2019ல இருக்கோம், இன்னும் நாம வந்து ஒரு பாலியல் வன்முறை நடந்ததுன்னா தப்பு செஞ்சவனைக் கண்டிக்காம ஊசி இடம் கொடுத்தா தான் நூல் நுழைய முடியும்னு அந்தக்கால பழமொழியை உதாரணம் காட்டிட்டு இருக்கமே? இது அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவா பேசறதா ஆகாதா?”

”நீங்க வெறும் பழமொழியை மட்டும் எடுத்துக்கிட்டு பேசுனா நான் சொன்னது தப்பா தான் தெரியும். அந்த விழா என்ன பட விழா? அந்தப் படத்தோட கதை என்ன? அதைப் பத்தி படத்தோட டைரக்டர் என்ன பேசுனாரு? இதை எல்லாம் கவனிச்சிருந்தா இந்த கேள்விகளே எழுந்திருக்காது. பெண்களிடையே விழிப்புணர்வு பெருகனும், கொஞ்சம் அவங்க ஏமாந்தாக் கூட பாதிப்பு ஏற்படும். அப்படி ஏமாந்த ஒரு பெண்ணோட கதை தான் படமா எடுக்கறாங்க அப்டிங்கறப்போ, அந்த கதைக்கு ரிலேட்டடா பேசுனதை குற்றவாளிகளுக்கு ஆதரவா பேசுனதா திருப்பி விடறது மீடியாவோட பசி தான், வேற என்ன?”

“என் கேள்வி என்னான்னா ஒரு தப்பு நடக்குது, அதுல பாதிப்புக்குள்ளானவங்க பக்கம் நாம நிற்கனுமா? இல்ல பாதிக்கப்பட்ட ஆள்கிட்ட நீ ஏன் இந்த டைமுக்கு இங்க வந்த? உன் மேல தப்பு இருக்குனு அவங்க மேல குற்றம் சாட்டணுமா?”

“பாதிக்கப்பட்டவங்களை நான் குற்றம் சொல்லலையே? இதை தவிர்த்திருக்கலாம்னு தான் சொல்றேன்”

“இல்லையே? பொண்ணுங்க தெருவுல நடக்கறப்போ ஃபோன் பேசிட்டு போறாங்க, தனக்குத் தானே சிரிச்சுக்கறாங்க. இதை எல்லாம் அவங்க தவிர்க்கணும், கிளாமரா டிரஸ் பண்ணக்கூடாது, டிக் டாக் பண்ணக்கூடாது….”

“இருங்க இருங்க,  டிக் டாக் பத்தி இந்த விழாவில் நான் பேசவே இல்லையே?”

“வேற ஒரு பேட்டில சொல்லி இருந்தீங்க”

“அத ஏன் இங்க கொண்டு வந்து கனெக்ட் பண்றீங்க? அது தனியா பேசுவோம். இப்போ 2 நாள் முன்னாடி கூட ஒரு பொண்ணு டிக்டாக்ல 2000 ரூபா மதிப்புள்ள பிராண்ட் பிரா வாங்குனேன், அதை எல்லாருக்கும் தெரியற மாதிரி போடுவேன் அது என் இஷ்டம் நீங்க யார் கேட்கறதுக்குனு ஒரு வீடியோ போட்டுச்சு. நான் எல்லாம் சின்னப் பையனா இருக்கும் போது, பொண்ணுங்க சேலை ஜாக்கெட்ல ஃபுல் கவரா வரும் போது எப்பவாவது பிரா பட்டை வெளில தெரிஞ்சா, சூசகமா சண்டே ஈஸ் லாங்கர் தன் மண்டேனு சொல்வோம். டக்னு அவங்க அதை அட்ஜஸ் பண்ணிக்குவாங்க. ஆனா இப்போ வேணும்னே பிரா வெளில தெரியற மாதிரி போட்டுக்கறாங்க, என்னத்தை சொல்ல?”

“அப்போ பொண்ணுங்க என்ன டிரஸ் போடணும்? எப்படி அதை எஸ்டாபிளிஸ் பண்ணனும்? அல்லது பண்ணக்கூடாதுனு நீங்கதான் ஐ மீன் ஆண்கள் தான் தீர்மானிக்கணுமா?”

“அப்படி நான் சொல்லைலைங்க, நீங்க ஒரு  நிருபரா மீடியா ஹிட்ஸ் ஏத்திக்கறதுக்காக கண்டபடி கேள்வி கேட்கறீங்க. கொஞ்சம் என்னை பேச விட்டாத் தானே? எனக்கும் ஒரு மக இருக்கா, நான் ஒரு பெண்ணோட அப்பாவா, சமூக பிரக்ஞை உள்ள ஆளா பேசறேன். இப்போ பொள்ளாச்சி சம்பவத்துல, கொடூரமான சம்பவங்கள் நடந்திருக்கு. குற்றவாளி கடுமையா தண்டிக்கப்படணும், அதுல எல்லாம் மாற்றுக் கருத்தே இல்ல. யாரும் குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கல. அந்த ஆடியோ டேப்ல ‘அண்ணா உங்கள நம்பித் தான வந்தேன், இப்டி பண்றீங்களே’னு அந்த பொண்ணு கதறும் போது, அந்த மாதிரி இடத்துக்கு அந்தப் பொண்ணு போறதுக்கு முன்னால கொஞ்சம் யோசனை பண்ணி இருக்கலாமே? ஜாக்கிரதையா இருந்திருந்தா அதை தவிர்த்திருக்கலாமேனு தான் சொல்றேன்”

“அப்பக் கூட நீங்க  பொண்ணு மேல தான் தப்பு சொல்றீங்க, அந்தப் பொண்ணு அவனை நம்புனது தப்புங்கறீங்களா? ஒரு அண்ணனா நண்பனா நம்பி தானே போய் இருக்கு, அந்த நம்பிக்கை தப்புங்கறீங்களா? ஏன் அவனைக் கண்டிக்கலை?”

“இப்போ பொதுவா, பெண்களை ஜாக்கிரதையா இரு, ராத்திரி 9 மணி ஆனா வெளில எங்கேயும் இருக்காதே வீட்டுக்கு வந்திடுனு பொண்ணுங்ககிட்ட தான் அதிக அக்கறை எடுத்து சொல்வோம், ஆண்கள்  பற்றி கவலைப்படறதில்லை”

“அதைத் தாங்க நான் ஏன்னு கேட்கறேன். ஒரு எச்சரிக்கைனா ரெண்டு தரப்புக்கும் பொதுவா தானே இருக்கணும், ஆண்கிட்டயும் சொல்லலாமே? நைட் 9 ஆனா வீட்டுக்கு வந்து சேர்னு”

“காந்திஜி அந்த காலத்துலயே என்ன சொல்லி இருக்காரு? நள்ளிரவில் ஒரு  பெண் எப்போ தனியா பயம் இல்லாம நடக்கிறாளோ அப்போ தான் உண்மையான சுதந்திரம் நம்ம நாட்டுக்கு கிடைச்சதா அர்த்தம்’னாரு. அப்ப இருந்து இப்போ வரை நாம அப்படி சுதந்திரமா நடக்க முடியலையே?”

“அப்போ காந்திஜி பெண்களை வீட்டை விட்டு எங்கேயும் வெளியே போகாதேனு சொன்னாரா?”

“அப்படி சொல்லலையே? பெண்களை ஜாக்கிரதையா இருந்துக்கோன்னாரு. ஒரு துறவியா இருந்தாலும் தனிமைல ஒரு பெண்ணைப் பார்த்தா அவன் தூண்டப்படுவான்னு ஒரு இத்தாலியப் பழமொழி இருக்கு. அதனால, அந்த மாதிரி சூழ்நிலையை பெண்கள் தவிர்க்கலாம்னு தான் சொல்றேன்”

“மீண்டும் மீண்டும் நாம பெண்களை தடை பண்றதுல தான் இருக்கோம். நீ வீட்லயே இரு, நீ ஜாக்கிரதையா இரு, அவ்ளோதான். ஆண்களை ஒண்ணுமே சொல்றதில்ல. நீ தப்பு பண்ணாத, நீ பெண்களை மதிக்கக் கத்துக்கோ அப்டினு ஆண்களுக்கு ஏன் அட்வைஸ் பண்றதில்லை?”

“நைட் டைம்ல வெளில போக வேணாம்னு சொல்லலை. நைட் 10 மணிக்கு மேல வெளில போக வேண்டிய சூழல் வந்தா, ஒரு பாதுகாப்போட போ அப்பா அண்ணன் இப்டி யாரையாவது துணைக்குக் கூட்டிக்கோனு சொல்றோம், இது தப்பா?  நைட் டைம்ல தனியா ஒரு பொண்ணு போனா, எதிர்ல  வர்றவங்களுக்கு என்னடா இந்தப் பொண்ணு தனியாப் போகுதேனு தப்பான ஒரு எண்ணம் வர்லாம் இல்லையா?”

“அதைத் தான் நான் ஏன்னு கேட்கறேன். தனியா ஒரு பொண்ணு போனா நீ ஏன் தப்பா பார்க்கறேனு ஆண்களைத் தானே கேள்வி கேட்கணும்? நீ ஏன் தனியாப் போனேனு பொண்ணை நோக்கித் தானே நம்ம கேள்விகள் கிளம்புது”

“குற்றவாளிக்கு சாதகமா யாரும் இங்கே பேசலைங்க, அப்டி தப்பு செஞ்சவன் தண்டிக்கப்பட்டே ஆகனும்கறதுல  மாற்றுக் கருத்தே இல்லை. ஆனா தப்பு நடக்கற மாதிரி ஒரு சூழலை ஏற்படுத்தாம பொண்ணுங்க ஜாக்கிரதையா இருக்கணும்கறேன்”

“இப்போ ஹைதராபாத்ல ஒரு சம்பவம் நடந்தது. டூவீலர்ல போனப்போ பெட்ரோல் இல்லாம வண்டியை நிறுத்துனப்ப, சிலர் வந்து உதவி பண்ற மாதிரி நடிச்சு அவளை ரேப் பண்ணி இருக்காங்க. இதுல அந்தப் பொண்ணோட தப்பு என்ன?”

“நைட் டைம் ட்ராவல் பண்றப்ப ரிசர்வ் விழுந்ததுமே பெட்ரோல் அடிச்சிருக்கலாம், அல்லது பெட்ரோல் ஃபுல்லா இருக்கானு செக் பண்ணி இருக்கலாம்”

“சரி, உன் அப்பா உன் பாதுகாப்புக்காக செல்ஃபோன் வாங்கி தந்திருக்காரு. அதுல நீ ஏன் யார்கிட்டயோ குசு குசுனு ரகசியமா பேசறே சிரிக்கிறேனு  கேட்டிருக்கீங்க. இதை ஏன் ஆண்கள்கிட்ட நீங்க கேட்கலை? மறுமுனைல பேசுனது ஒரு ஆண் தானே? அவன் மட்டும் பேசலாமா?”

“யாருக்கு இதனால பாதிப்பு வருதோ அவங்ககிட்ட தான் பேச முடியும். இப்போ  ஃபேஸ்புக்ல எத்தனை பேர் லைக் போடறாங்கனு பாத்துக்கிட்டு ஓப்பன் பண்ணி வெச்சிருக்கு ஒரு பொண்ணுன்னா அதுல லைக் போடறவன் எத்தனை பேர் கெட்டவனா இருப்பான், அவன் சந்தர்ப்பத்துக்காக காத்துட்டு இருக்கலாம், இதுல பெண்கள் ஜாக்கிரதையா இருக்கணும்”

“திரும்பவும் நீங்க பெண்களை ஃபேஸ்புக் வர்றது தப்புனு அவங்களைத் தானே குற்றம் சொல்றீங்க? ஏன் லைக் போடற கமெண்ட் போடற ஆண்களை குற்றம் சொல்லலை?”

“அய்யோ, ஃபேஸ்புக் வர்றதை தப்பு சொல்லலைங்க.  ஃபேஸ்புக்ல தன்னோட ஃபோட்டோவை ப்ரொஃபைல் பிக்சரா வெச்சிருக்கறவன் தன் உண்மையான முகவரியை பகிர்ந்தவன், ஃபோன் நெம்பர் கொடுத்தவன் இப்படி யாராவது இருந்தா பேசி பழகறதுல தப்பு இல்ல. நாளைக்கு ஒரு பிரச்சனை நடந்தாக் கூட அவன் இடத்துக்கு போய் கேட்கலாம். அட்ரஸ் தெரியாது, ஆள் யார்னே தெரியாது, ஃபோன் நெம்பர் தெரியாது அப்டிங்கற அனானிகூட சேட் பண்ணிட்டு ஏமாந்து, கடைசில இப்படி நடந்து போச்சுனு சொன்னா அதுக்கு யார் பொறுப்பு?”

“சரி, நாம் தெரிஞ்சவன்கிட்ட தான் பேசணும் தெரியாதவங்க கிட்டே பழகக்கூடாது அது தப்புனு அட்வைஸ் பண்றோம், இதெல்லாம் சரி. ஆனா ஆண்கள்கிட்ட ‘நீ ஏன் யார்னே தெரியாத பொண்ணுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் குடுக்கறே? ஏன் லைக் போடற? உன் நோக்கம் என்ன?’ இப்டி அவனைக் கேட்க தவறிடறமே? பிரதமரோட முதல் சுதந்திர தின உரைல பேசுனதைக் கேட்டீங்களா? சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா பொண்ணுங்க வீட்டுக்கு வந்தாச்சானு தான் பாக்கறோம், என்னைக்காவது ஆண்கள் வீட்டுக்கு வந்தாச்சானு பார்க்கறமா? ஆண்கள் லேட்டா வந்தா ஏன் அதைக் கண்டிக்கறதில்லை? கண்டுக்கறதில்லை? மாற்றம் அங்கே இருந்து அல்ல ஆரம்பிக்கணும்?”

“ஏங்க  கற்பழிப்புகள் ஆண்களுக்கா நடக்குது? பெண்கள் தானே பாதிக்கப்படறாங்க?”

“அப்டி இல்லைங்க. ஆண் குழந்தையோட பெற்றோர்களும் அவங்களை கண்காணிக்கணும். அவனால யாருக்கும் பாதிப்பு இல்லைங்கறதை உறுதி செய்யணும்”

“அது பெற்றோர்களின் மெண்ட்டாலிட்டி பொறுத்தது, நீங்க நல்லா கவனிச்சுப் பாருங்க. வீட்டுக்கு தன் மகனோட ஃபிரண்ட்ஸ் யாராவது வந்தா, அவங்களோட சேர்ந்து நீ கெட்டுப் போய்டாதனு அவங்க மேல தான் தப்பு சொல்வாங்க. தன் மகன் நல்லவனா தான் இருப்பானு நம்பிக்கை. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சுங்கற மாதிரி“

“அது தப்புன்னு நீங்க நினைக்கலையா? எப்படி எங்க மகள் பாதுகாப்பா இருக்கணும்னு நினைக்கறமோ, அதேப் போல மகனும் தப்பான ஆள்  ஆகிடக் கூடாதுனு நினைக்கணும் இல்லையா?”

“ஆமா, ஆனா தன் மகள் தப்பான ஆள்கிட்ட மாட்டிக்கக் கூடாது என்பதில் அதிக அக்கறை இருக்கும்” 

“ஆனா ஒரு தப்பு நடந்தா அந்த தப்பை செஞ்ச ஆண்  வீட்டில் பெற்றோர்கள் கவனிக்கலைனு தானே அர்த்தம்?”

“என் வீட்ல எல்லாம் நைட் 9 மணி ஆகிட்டா ஆளைக் காணோமேனு தேடுவாங்க, லேட்டா வீட்டுக்கு வந்தா அடி பட்டையைக் கிளப்பிடுவாங்க. ஆனா  இப்போ காலம் மாறிடுச்சு”

“பெண்கள் முன்னே எல்லாம் கட்டுப்பாடா இருந்தாங்க, இப்போ ரோட்ல  பசங்க கூட சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கறது தப்புனு சொல்லி இருக்கீங்க”

“அப்படி சொன்னது என்ன தப்பு? 4 பேர் பார்த்தா தப்பா நினைப்பாங்க” 

“சரி தப்பா நினைச்சா என்ன ஆகும்?”

“தவறான கண்ணோட்டத்துல அந்தப் பொண்ணு பார்க்கப்பட  வாய்ப்பு இருக்கு. ஆண்கள்கிட்ட நாம் அட்வைஸ் பண்றோம், நீ தங்கையா நினை, அக்காவா நினை அப்டினு  கற்பிக்கறோம்”

“ஆணோட தவறான பார்வையை தவிர்க்க பொண்ணுங்க மாடர்ன்  டிர்ஸ் போடக் கூடாது   கிளாமரா டிரஸ் போடக் கூடாது அப்டினு தடை போடறது எந்த விதத்துல சரி?”

“நான் பொண்ணுங்க டிரஸ் பற்றி அப்படி ஒரு கருத்து தெரிவிக்கவே இல்லையே? நீங்களா க்ரியேட் பண்ணி சிக்க வைக்கப் பார்க்கறீங்க”

“ஒரு தவறான ஆண் பெண் குழந்தைனு பார்க்கறதில்லை, வயதான மூதாட்டினு பார்க்கறதில்லை, அவன் தப்பு செஞ்சுடறான். ஆனா நாம பொண்ணுங்க டிரஸ் பத்தித் தானே விவாதிக்கிறோம்? அவன் செஞ்ச தப்ப பத்தி யாரும் பேசறதில்லை. இவ ஏன் அப்டி டிரஸ் பண்ணிப் போனா  அப்டினு பெண்களைத் தானே குற்றம் சொல்றோம்?”

“கிளாமரா டிரஸ் பண்றதுக்கும், செக்சியா டிரஸ் பண்றதுக்கும் வித்தியாசம் இருக்கு”

“ஃபுல் கவர் பண்ணி டிரஸ் போடறவங்களை ஆண் தவறான கண்ணோட்டத்துல பார்க்கறதில்லைனு உங்களால உத்தரவாதம் கொடுக்க முடியுமா?” 

“அப்படிப்பட்ட ஆண்களும் இருக்காங்க, நாம தான் ஜாக்கிரதையா இருந்துக்கணும். சில பெண்கள் முதல் பார்வையிலேயே இவன் தவறான ஆண்னு கெஸ் பண்ணிடுவாங்க, சிலரால அது முடியறதில்லை, மாட்டிக்கறாங்க” 

“சரி விழாவில் நீங்க பேசுன அடுத்த பாய்ண்டுக்கு வருவோம். ஆண் தப்பு பண்ணா ஐ மீன் ஒரு சின்ன வீடு வெச்சிருந்தா அதனால பெரிய பாதிப்பில்லை, அவன் பாட்டுக்கு சின்ன வீட்டுக்கு போய்ட்டு வந்து இந்த மனைவியையும் கவனிச்சுக்குவான். ஆனா ஒரு பெண் வேற ஒரு ஆள் கூட கனெக்சன்ல இருந்தா அவ புருஷனை, குழந்தையைக் கொலை பண்ணக்கூட அஞ்சறதில்லை அப்டினு சொல்லி இருக்கீங்க. அப்போ ஆண் தப்பு செய்யலாம், ஆனா பொண்ணு தப்பு செய்யக் கூடாதுனு ஆண்கள் பண்ற தப்பை நியாயப்படுத்தற மாதிரி பேசி இருக்கீங்க”

“நீங்க பேப்பர்ல நியூஸ் எல்லாம் பார்க்கறதில்லை போல, ஒரு ஆண் எப்போ கொலை செய்யறான்? தன் மனைவி வேற ஒருத்தன் கூட தொடர்புல இருக்கறதை நேர்ல பார்த்துட்டா ஆவேசத்துல கொலை பண்றான். சின்ன வீடு வெச்சிருந்தா அதை மெயிண்ட்டெய்ன் பண்றதுக்காக மனைவியைக் கொலை பண்றதில்லை. ஆனா ஒரு பொண்ணு வேற ஒரு கனெக்சன் வெச்சிருந்தா கணவனைக் கொலை செஞ்சுடறா”

“சின்ன வீடு வெச்சிருக்கறதே ஒரு க்ரைம் தானே? அதுல போய் அவன் மனைவியைக் கொலை பண்ணலைனு சர்ட்டிஃபிகேட் கொடுக்கறீங்க?”

“அப்டி இல்லை, நீங்க குதர்க்கமாவே கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க. ஒரு பெண் தவறு செஞ்சா அவ எக்ஸ்ட்ரீம் லெவல்’க்கு போய்டறா. கள்ளக் காதலன் இருந்தா,  இனி புருசன் இருக்கறது இடைஞ்சல்.  குழந்தை இருந்தா ஆபத்துனு கொலை பண்ணத் துணியறா. இந்த மாதிரி நியூஸ் வரும் போது, பெண்கள் இந்த மாதிரி பண்றதை ஜீரணிக்கக் கஷ்டமா இருக்கு”

“அப்போ ஆண்கள் பண்ற தப்பை ஜீரணிச்சுக்கலாமா?”

“ஆண்கள் தப்பு பண்றது எதிர்பார்த்தது தான், ஆனா பெண்கள் தப்பு பண்றது எதிர்பாராதது இல்லீங்களா?”

“அப்போ ஆண்கள் தப்பு பண்ணலாம், பெண்கள் தப்பு பண்ணக் கூடாது?”

“நீங்க என்னை ஆணாதிக்கவாதினு சொல்லிட்டு பெண்ணாதிக்கவாதியா உங்களை வெளிப்படுத்திக்கிறீங்க. இப்போ டாஸ்மாக் வாசல்ல ஒரு பொண்ணு தண்ணி அடிச்ட்டு மப்புல விழுந்து கிடந்ததா ஒரு நியூஸ் படிச்சேன். ஸ்கூல் பொண்ணுங்க க்ரூப்பா தண்ணி அடிச்சதை வாட்சப்ல பார்க்கறப்ப அதிர்ச்சியா இருக்கு. இதே ஆண்கள் பண்ணா நமக்கு அது பழகிடுச்சு. பெண்களும் இப்போ ஆரம்பிச்சு இருக்காங்கனு தான் அதிர்ச்சியா இருக்கு. இப்போ நியூஸ் சேனல்ல ஒரு பொண்ணு டாஸ்மாக்ல லைன்ல நின்னு சரக்கு வாங்கறதை  ஃபோகஸ் பண்ணி காட்றான், இதைப் பார்க்கும் ம்ற்ற பெண்கள் ‘அட, இது சகஜம் ஆகிடுச்சு போல’னு அவங்களும் பப்ளிக்கா வாங்க ஆரம்பிக்க மாட்டாங்களா?”

“இந்த மாதிரி ஆண்களும் பெண்களும் சரக்கு அடிகக்றதுல அல்லது அந்தப் பழக்கம் ஏற்பட அதிகரிக்க சினிமாவும் ஒரு காரணம்னு ஒரு குற்றச்சாட்டு இருக்கே?” 

“சினிமாங்கறது வாழ்க்கை தான். வாழ்க்கைல இருக்கறதைத் தான் சினிமால காட்றோம். சில நேரங்கள்ல என்ன ஆகிப் போகுதுன்னா,  எங்கேயோ நடக்கற ஒரு விஷயத்தை சினிமாவா எடுக்கும் போது, அதைப் பார்க்கற எல்லாருமே ஓ இப்படி எல்லாம் இருக்கானு? அவனும் தெரிஞ்சுக்கறான். அதனால இதை சொல்லலாமா? வேணாமா? இதனால பலர் மனம் பாதிக்கப்படுமா? அப்படிங்கறதை எல்லாம் ஒரு படைப்பாளி தான் தீர்மானிக்கனும்”

“அப்போ நீங்க ஒரு பொறுப்பான படைப்பாளியாத் தான் இருந்து இருக்கீங்களா?”

“அதை ஜனங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்குங்க. சினிமாலயே நடக்காத சம்பவங்கள் பல வாழ்க்கைல நடக்குது. ஒரு வாரம் முன் ஒரு தம்பதி நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் வெட்டிங் ஷூட் நடத்தி அதை ஃபேஸ் புக்ல அப்டேட் பண்ணி இருக்காங்க. ரொம்ப நெருக்கமான ஃபோட்டோஸ், மேரேஜ்’க்கு முன்பே அதை அப்டேட் பண்றாங்க. எங்க காலத்துல எல்லாம் மேரேஜ் ஃபிக்ஸ் ஆனாலும், ஃபோன்ல கூட பேச விட மாட்டாங்க. இப்போ காலம் மாறிடுச்சு, கோயில் சினிமா பீச்னு கூட்டிட்டுப் போய் பேசறாங்க. ஆனா இந்த வெட்டிங் ஷூட்  ஓவரோ ஓவர்ங்க. திடீர்னு ஏதோ ஒரு காரணத்தால கல்யாணம் நின்னு போனா பாதிப்பு யாருக்கு? வேற மாப்ளை மறுபடி கட்டிக்கிட்டாக்கூட அவன் என்னஎன்ன கேள்வி எல்லாம் கேட்பானோ? புரியாத புதிர் ரகுவரன் கேரக்டர் மாதிரியோ, கல்கி பிரகாஷ்ராஜ் கேரக்டர் மாதிரியோ ஒரு கணவன் அமைஞ்சா அந்தப் பொண்ணோட வாழ்க்கை க்ளோஸ்”

“அதனால பொண்ணுங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும்கறீங்க?” 

“ஆமா அது தான் அவங்களுக்கும் நல்லது, இந்த சமூகத்துக்கும் நல்லது”

பேட்டியை முடிச்சுட்டு வீட்டுக்குக் கிளம்பிய பெண் நிருபர், காரில் வீட்டுக்குப் போகும் போது “எப்படியாவது இயக்குநரை மடக்கி மன்னிப்புக் கேட்க வைக்கணும்னு  எம்.டி கொடுத்த டார்கெட்டை முடிக்க முடியாம போச்சே” என்ற கவலையோடு   யோசித்த போது,  அலைப்பேசியில் அழைப்பு வந்தது 

“எஸ்”

“டியர், செகண்ட் ஷோ சினிமாக்குப் போன நம்ம பொண்ணு இன்னும் வீடு திரும்பல. எனக்கு பயமா இருக்கு. அவ செல் ஃபோன் வேற ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு, கவலையா இருக்கு. அவளுக்கு அதிகமா சுதந்திரம் கொடுத்து  செல்லமா வளர்த்திட்டமோனு பயமா இருக்கு” என்றார்

(முற்றும்)

புத்தக விமர்சன போட்டிகள்

விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவை பாருங்கள். விமர்சனம் அளித்து, Rs.1000 Amazon Gift Card / Special Gift, மெடல் மற்றும் சான்றிதழ் வெல்லுங்கள்.

விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Similar Posts

4 thoughts on “நள்ளிரவில் ஒரு இளம்பெண் (சிறுகதை) – ✍ சி.பி செந்தில் குமார் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு
  1. முடிவு எதிர்பாராதது. நல்ல முடிவு. நம்ம பெண் என்றால் நாம் பார்க்கும் கோணமே வேறே தானே! ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!