sahanamag.com
சிறுகதைகள்

காதல் எந்தக் காலத்திலும் இனிமை தானே ❤ (✍ சுசி கிருஷ்ணமூர்த்தி) – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

முதலிலேயே கூறி விடுகிறேன். இது அந்தக்கால காதல் கதை. கண்களால் மட்டுமே பேசி காதல் செய்தக் காலம் அது. ஒரு காதல் கடிதம் கொடுக்கக் கூட ஆயிரம் தடவை கடவுளை வேண்டிக் கொண்டு, கடிதத்தின் ஓரத்தில் மஞ்சள் தடவிக் கொடுத்த காலம். அதனால், இது ‘மசாலா’ இல்லா காதல் கதை

நம் கதாநாயகன் கோவைக் கல்லூரியில் வணிகவியல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவன். டிகிரி முடித்த பின், ‘சார்ட்டர்ட் அக்கவுண்டன்சி’ படிக்க வேண்டும் என்ற கனவில், ஓரளவு நன்றாகப் படிக்கும் மாணவன். ஆனால் அவன் கனவைக் கலைக்க வந்தாள் நம் கதாநாயகி

நம் கதாநாயகிக்கு 17 வயது. பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் நின்று பார்த்து விட்டு செல்லும் களையான முகம். நீண்ட கூந்தலில் இருவாட்சி மலர் சூடி, மையிட்ட மருண்ட கண்களால் அவள் பார்க்கும் பொழுது, இந்த அழகுப் பெட்டகத்தை அடைய எவன் கொடுத்து வைத்திருக்கிறானோ என்று பெருமூச்சு விடாதவர் இல்லை.

பத்து கிளாஸ் படித்தவுடன் படிப்பு போதும் என்கிற காலக்கட்டம் அது. ஆனால் 10வது படித்த நம் கதாநாயகியோ, இன்னும் பாண்டி விளையாடுவதையும், பரணில் ஏறுவதையும் விடாத நேரமது.

அவ்வப்பொழுது சினிமா கதாநாயகி போல் தன்னை நினைத்துக் கொண்டு, உள் முற்றத்தின் கைப்பிடி சுவரில், தலைப் பின்னல் தரையில் தவழ படுத்துக் கொண்டு, கனவு காண்பதும் நடப்பதுண்டு.

கதாநாயகனுடன் டூயட் பாடும் கனவுகள் வரவிட்டாலும், தனக்கு வரும் கணவன் எப்படி இருப்பானோ என்ற எண்ணம் ஒரு நொடிக்குத் தோன்றி மறைவதும், பிறகு அதைப் பற்றி மறந்து குழந்தையைப் போல் கண்ணாமூச்சி ஆடுவதுமான இரண்டாங்கெட்டான் பருவத்தில் இருந்தாள் அவள்

அவள் நினைக்காவிட்டாலும் அவளுடைய தந்தைக்கு அவளின் திருமணத்தை முடித்து விட வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. ஜாதகம் பார்க்கத் தொடங்கிய நேரம், அவள் தன் தந்தையுடன் அவ்வப்பொழுது கோவை செல்வதுண்டு.

அப்பொழுது அவளைப் பார்த்த குடும்ப நண்பரும் அவர் மனைவியும், மேல் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் தங்கள்  மகனுக்கு (நம் கதாநாயகன் தான்) அவளை மணம் முடித்துத் தர முடியுமா என்று கேட்க, நண்பரின் குடும்பம் பற்றி அறிந்திருந்த தந்தையும் சம்மதித்தார்

உடனே நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

ஆனால் நம் கதாநாயகனோ, பட்டம் பெற்ற பின்பே திருமணம் எனக் கறாராகக் கூறி விட்டதால், திருமணம் ஒரு ஆண்டிற்குப் பிறகு என்று முடிவு செய்யப்பட்டது.

நம் கதாநாயகி, திருமணம் பற்றிக் கவலையேபடாமல், தான் உண்டு, தன் பாட்டு / விளையாட்டு உண்டு என்றிருக்க, படிப்பு முடிந்த பின் தான் திருமணம் என்று கூறிய மணமகனோ, அவ்வப்பொழுது அவள் நினைவில் திளைக்கத் தொடங்கினான்

அதன் காரணமாய், படிப்பு கொஞ்சம் மந்த நிலையில் ஆனது என்பது தான் உண்மை.

நம் கதாநாயகியும் தந்தை கோவை செல்லும் பொழுது அவர் கூடவே வழக்கம் போல் போவதும், மகள் இல்லாத வருங்கால மாமியார் ஆசைப்பட்டதால், அவ்வப்பொழுது அவர்கள் வீட்டிற்கும் செல்வதுண்டு.

வருங்கால மாமியார் ஆசையாக இட்டு விடும் மருதாணியும், அவர் செய்துக் கொடுக்கும் இனிப்பையும் சாப்பிட்டு விட்டு, மாலையில் கதாநாயகன் வந்தவுடன் ஒரு கடைக்கண் பார்வை தரிசனம் கொடுத்து விட்டு, தன் ஊருக்குத் திரும்புவதும் வழக்கமானது

இன்னும் ஒரு படி மேலே போய், நான்கைந்து முறை, இரு குடும்பமும் சேர்ந்து சினிமா பார்ப்பது கூட நடந்தது.

‘சிவாஜி’ படத்தில் ரஜனிகாந்த் பழகிப் பார்க்க வேண்டும் என்று கதாநாயகி வீட்டிற்க்கு செல்வாரே, கிட்டத்தட்ட அது மாதிரி தான்.  

ஆனால் நம் கதாநாயகிக்கு வாய்த்த அருமையான மாமியாரோ,  தன் வருங்கால மருமகள் தன் குடும்பப் பழக்க வழக்கங்களை நன்கு அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் கதாநாயகியை வீட்டிற்கு வரவழைத்து அன்பைப் பொழிந்தார்.

நாளடைவில் கதாநாயகியும் வித விதமான பாவாடை தாவணியில் (அவ்வப்பொழுது தன் சகோதரியின் பாவாடை தாவணியும் உடுத்துவதுண்டு) தன்னை ஸ்பெஷலாக அலங்கரித்துக் கொண்டு, கோவை செல்லும் நாளை எதிர்பார்க்கத் தொடங்கி விட்டார்

அதுவும் சினிமா செல்லுவதென்றால் மேலும் ஒரு படி கூடுதல் அலங்காரம் தான். கதாநாயகன் ஒரு மூலையில் உட்கார, கதாநாயகி தன் குடும்பத்தருடன் மறு மூலையில் உட்கார்ந்து சினிமா பார்த்தாலும், அவ்வப்பொழுது ஒரு கடைக்கண் பார்வை பறிமாற்றம் மட்டும் நடந்து கொண்டிருந்தது

ஒரு வார்த்தைக் கூடப் பேசாமல் ஒரு வருடம் சென்றது, அந்தக் காலத்தில் மட்டுமே நடக்கக் கூடியது. ஆனால் வாய் பேசா விட்டால் என்ன, – கண்கள் பேசிக் கொண்டனவே

ஆயிற்று, ஒரு வருட காலக்கெடு . அதன் பின்னும் நம் கதாநாயகனின் படிப்பு மட்டும் முடியவில்லை

எப்படி முடியும்? மனம் படிப்பில் ஒன்றினால் தானே? ஆனால் கதாநாயகியின் தந்தையோ, திருமணத்தை சடுதியில் முடிக்க வேண்டும் என்று அவசரப்படத் தொடங்கி விட்டார்.

கதாநாயகிக்கு மணம் முடித்தால் தானே அவளுக்கு அடுத்து இருக்கும் சகோதரிக்கும், சகோதரனுக்கும் மணம் முடிக்க முடியும் என்பது அவர் எண்ணம்.

உடனே கதாநாயகனின் தந்தையை அவர் அணுக , கதாநாயகனின் தந்தை கதாநாயகனை நெருக்க, கதாநாயகனின் முன்னால் ஒரு பெரிய கேள்விக்குறி.

‘கல்வியா? – காரிகையா? என்ற கேள்விக்குறி தான் அது

தந்தையிடம் இரண்டு நாள் அவகாசம் வாங்கிக் கொண்டு நிம்மதியாக யோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று ‘திப்பு சுல்தான்’ கோட்டைக்குச் சென்று விட்டார்.

ஆனால் அங்குச் சென்றும் நிம்மதியாக யோசிக்க முடிந்ததா என்றால் அது தான் இல்லை.

கோட்டையில் கூட்டமும் இல்லை, நிம்மதியாக அமர்ந்து யோசிக்க பல இடங்களும் இருந்தன. ஆனால் நம் கதாநாயகனால் ஒரு நொடி கூட அமைதியாக யோசிக்க முடியவில்லை.

எங்குத் திரும்பினாலும் சரி கண்ணை மூடிக் கொண்டாலும் சரி, 70mm திரையில் தெரிவது போல் கதாநாயகியின் மையிட்ட மருண்டக் கண்கள் அவன் கூடவே வர, ஒரே நாளில் தந்தையிடம் சென்று திருமணத்திற்கு சம்மதம் கூறி விட்டார்.

பிறகு என்ன – டும் டும் கல்யாணம் தான்

பிப் பிப் பிப் மேளம் தான்

சரி கல்யாணம் தான் முடிந்து விட்டதே, பிறகாவது கதாநாயகன் படிப்பை முடித்தாரா என்று கேட்கிறீர்களா?

எங்கே? சம்சாரக் கல்லூரியில் மட்டுமே அவரால் டிகிரி வாங்க முடிந்தது. ஆனால் இந்த 78 வயதிலும் டிகிரி வாங்காத குறை இன்னும் இருக்கிறதாம்.

சரி! இதெல்லாம் எப்படித் தெரிந்தது என்றுக் கேட்கிறீர்களா?

அந்தக் கதாநாயகனும் நாயகியும் இப்போது நான் வசிக்கும் ‘Apartment Complex‘ல் தான் வசிக்கிறார்கள்

ஒருமுறை எல்லோரும் சேர்ந்து ‘திப்பு சுல்தான்’ கோட்டைக்குச் சுற்றுலா சென்ற போது, ஒரு நெகிழ்வான நேரத்தில் நம் கதாநாயகன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டார்

அந்த நேரம் நம் கதாநாயகியின் (60+ வயது) முகத்தில் படர்ந்த சிகப்பைப் பார்க்க வேண்டுமே!

காதல் எந்தக் காலத்திலும் இனிமை தானே❤ 

புத்தக விமர்சன போட்டிகள்

விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவை பாருங்கள். விமர்சனம் அளித்து, Rs.1000 Amazon Gift Card / Special Gift, மெடல் மற்றும் சான்றிதழ் வெல்லுங்கள்.

விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

(முற்றும்)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!