சஹானா
சிறுகதைகள்

பாலம்…(சிறுகதை) – ✍ லக்ஷ்மிஸ் பவன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

விதாவிற்கு ஆபீஸில் இருப்பு கொள்ளவில்லை. 

வீட்டில் நடந்தவற்றை மறக்க எவ்வளவு தான் முயன்றாலும், முடியாமல் தவித்தாள். அன்று பார்த்து முடிக்க வேண்டிய கோப்புகள், அவளின் மனநிலை புரியாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தன

“இது சரி வராது. பிரச்சனைய உடனே தீர்க்கணும். ஆனா எப்படி? யாருகிட்ட யோசனை கேட்கலாம்” என்று எண்ணும் போதே, கவிதாவின் வாடிய முகத்தைப் பார்த்து அவளருகில் வந்தாள் தோழி மாலதி.

“என்ன மச்சி இன்னிக்கு ஃபேஸ் டல்லா இருக்கு? அந்த மூன்று நாட்களா?” என்று எப்போதும் போல் கலாய்த்தாள் மாலதி

“அட நீ வேற சும்மா இரு, நானே பயங்கர கடுப்புல இருக்கேன். இன்னிக்கு என்ன சீண்டாத கண்ணு” என கெஞ்சினாள் கவிதா.

“என்ன ஆச்சு டா? எனி திங் சீரியஸ்? சரி நீ வா, நம்ம கேன்டீனுக்கு போய் பேசலாம்” என்று மாலதி சொன்னதும், மறுப்பேதும் இல்லாமல் பின் தொடர்ந்தாள் கவிதா.

வழக்கத்தை விட அன்று கேன்டீனில் கூட்டம் குறைவாக இருந்தது

உள்ளே நுழைந்ததும், கேன்டீன் அலுவலர் கோபு அண்ணா, “வாங்கம்மா” என புன்னகையுடன் வரவேற்றதோடு, “வழக்கமான ரெண்டு செட் தோசை, ரெண்டு காபி தானேமா?” என்றார்

மாலதி புன்னகையால் “ஆம்” என்றாள்

வழக்கமான டேபிளில் அமர்ந்தார்கள் தோழிகள். 

உடனே விஷயத்திற்கு வந்தாள் கவிதா.

“மாலு, ரொம்ப கடுப்பா வருதுடா. பிரபுவோட பொண்டாட்டியா, சன்னிக்கு அம்மாவா, நான் எவ்வளவு செய்தாலும், பிரபுக்கு எப்பவும் அவங்க அம்மா தான் பெரிசு”

கவிதா புலம்ப ஆரம்பித்த போதே, “சரி சரி, இது தான் பத்து வருஷமா புலம்பரியே. இன்னிக்கு என்ன பிரச்சனை, அதச் சொல்லு” என்றாள் மாலதி.

கவிதா பேசத் தொடங்கிய நேரம், கோபு அண்ணா சுடச்சுட தோசை, தேங்காய் சட்னி, சாம்பார் சகிதம் மேசையை நிரப்பினார்.

அவர் நகர்ந்த பின், கவிதா, சட்னியைக் காட்டி, “இது தான் ப்ராப்ளம் மாலு” என்றாள்

“மச்சி எனக்கு புரியர மாதிரி சொல்லு” மாலுவின் வாய் பாதி அடைக்கப்பட்ட தோசையால் குழறியது.

“பத்து வருஷமா, நானும் பல ஆயிரம் வாட்டி இந்த தேங்காய் சட்னிய செய்துட்டேன். ஒருவாட்டி கூட மனுஷன் வாயிலிருந்து, நல்லா இருக்குனு வந்ததில்ல. அப்படியே நல்லா இருந்தாலும், எங்கம்மா செய்யற மாதிரி இல்லேங்கறாரு. நானும் எல்லா சமையல் குறிப்பும் படிக்கிறேன். இந்த தேங்காய் சட்னில மட்டும் எப்பவுமே நான் தோத்துப் போறேன் மாலு”

வழக்கமான பாணியில் மாலு, “அட இது தானா மேட்டர், சரி பண்ணிரலாம். நீ தோசைய சாப்பிடு முதல்ல” என்றவள், “கவி, எனக்கு ஒரு அக்கவுண்ட்ஸ்ல பேலன்ஸ் டேலி ஆகவே மாடேங்குது. என்ன செய்ய?”

“இது என்ன கேள்வி மாலு? நம்ம அக்கவுண்ட்ஸ் செக்‌ஷன் சாரி சார் இருக்காரே”

“ரைட்டு. மார்கழி ஆச்சே இது, ஆண்டாள் திருப்பாவை யாருகிட்ட கத்துக்கலாம்?

“என்ன மாலு ஒண்ணும் தெரியாத மாதிரி கேக்கற! அதுக்குத் தான் நம்ம குவாலிட்டீல ஜானகி மாமி இருக்காங்களே”

“கரெக்ட் கவிதா. இப்போ உன் விஷயத்துக்கு வரேன். கோபு அண்ணா மாதிரி காபி போடணும்னா அவர்கிட்ட கேக்கணும், ஒத்துக்கறியா நீ? அப்போ உன் மாமியார் மாதிரி தேங்காய் சட்னி அரைக்கணும்னா?”

“…..”

“என்ன முழிக்கற? சொல்லு யாருகிட்ட கேக்கணும்?” என்ற கேள்விக்கு தோழி மௌனமாய் புன்னகைக்க 

“அசடு வழியுது முகத்துல, துடைச்சிக்கோ” என்று தன் கைக்குட்டையைக் கவிதாவின் மேல் வீசினாள் மாலதி.

“இங்க பாரு மச்சி, பிரபுக்கு நீங்க ரெண்டு பேரும் வேணும். அதுவும் உங்க ரெண்டு பேருக்கும் உறவு நல்லபடியா இருக்கணும்னு நினைக்கிறாரு. அதுக்கு இப்படி சட்னி, தோசை வெச்சி பாலம் கட்டறாருமா, புரிஞ்சிக்கோ. ஈகோ பாக்காம, உன் அத்தைகிட்ட பேசு. அப்பறம் பாரு சட்னி என்ன சாட்டிலைட்டே விடலாம். கம் ஆன் பேபி, சியர் அப்” 

“அட ஆமா… எவ்வளவு சுலபமான தீர்வு ! தாங்க்ஸ் அ லாட்  மாலு. என் தப்பு என்னனு புரிஞ்சிக்கிட்டேன். இன்னிக்கே அத்தைக்கு போன் பண்றேன்”

“தட்ஸ் குட்” என மாலதி சொன்ன அதே நேரம்

பில்லுடன் வந்த கோபு அண்ணா, “இன்னிக்கு தேங்காய் சட்னி சில மாறுதலோட ஸ்பெஷலா செய்திருக்கேன். எப்படி இருந்ததுனு நீங்க சொல்லவே இல்லையே” என இவர்களிடம் கேட்டவுடன், தோழிகளின் வெடிச்சிரிப்பலை கேன்டீனையே மூழ்கடித்தன

(முற்றும்)

புத்தக விமர்சன போட்டிகள்

விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவை பாருங்கள். விமர்சனம் அளித்து, Rs.1000 Amazon Gift Card / Special Gift, மெடல் மற்றும் சான்றிதழ் வெல்லுங்கள்.

விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Similar Posts

2 thoughts on “பாலம்…(சிறுகதை) – ✍ லக்ஷ்மிஸ் பவன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு
  1. மனசு வைச்சால் எதுவுமே எளிதுனு புரிய வைச்சுட்டாங்க! வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: