in

மறக்க முடியா 2020 – ✍ சக்தி ஸ்ரீநிவாஸன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

மறக்க முடியா 2020

2020… சில எண்கள் வரிசை, பெயர் அமைப்பு நம் கவனத்தை ஈர்க்கும்

அதைப் போன்று 2020ம், தன் எண் வரிசையில்… மக்கள் மத்தியில் பிரபல்யத்துவம் பெற்றது. 

பெரியவர்களைப் பொறுத்தவரை, எண் கூட்டமைப்பில் நான்கு என்ற கூட்டு எண் சிறிது  மனக்கலக்கத்தை ஏற்படுத்தியது.

ஏற்கனவே பலதரப்பட்ட அனுபவங்களை இவ்வெண்ணின் தாக்கத்தால் உலகம் சந்தித்த விளைவுகள், பேரபாயத்தையும் அச்சுறுத்தலையும் மக்களுக்கும் அவர் தம் உடைமைகளுக்கும் ஏற்படுத்தியது.

அந்நினைவின் பாதிப்பில் மனம் சிறிது தடுமாறினாலும்,  உற்சாகமாகவே மத்திய மூத்த வயதினர் வரவேற்றனர்.

வழக்கமான வருட ராசிப்பலன்கள் குறித்த ஆரூடங்கள் சுபிக்க்ஷ வருடத்தின் சாயலை இவ்வாண்டின் மேல் பூசியதால், நம்பிக்கைத் சுடர் பிரகாசமாகவே அனைவர் மனதிலும் வளர்ந்தது.

அந்நம்பிக்கைக்கு வேட்டு வைத்தது வருடப் புத்தாண்டின் முதல்நாள் பெய்த திடீர் மழை. நம்மவர்க்கு புதுமை என்றுமே தர்க்கத்துக்குரியதாயிற்றே!

சென்னைவாசிகளைப் பொறுத்த வரையில் மழையென்றால்  நவம்பர் மாதமே ஏறக்கட்டிவிட வேண்டும். 

கார்த்திகை தீபத்தன்று மழையேதுமில்லாமல், அனைத்து  விளக்குகளிலும் தீபம் சுடர் விட்டு எரிய, அந்த சோதி தரிசனத்தில் இறையைக் கண்டு பக்தியில் திளைத்தோம். மழையும் திட்டிலிருந்துத் தப்பியது.

மழைக்குப் பெரிய கும்பிடுப் போட்டு, பாசிப்படிந்த   தரையை  சுத்தப்படுத்துவதில் தொடங்கி, வீட்டிற்குப் பெயிண்ட், புதுப்பொருட்கள் வரவிற்கான பட்ஜெட்  என டிசம்பர் மாத வருடாந்தாரப் பணிகளில் வழக்கம் போல் ஈடுபட்டோம்.

புதுவருடத்தை வரவேற்கும்  முகமாய் இரவே வண்ணக் கோலங்களில் தங்கள் எண்ணக் கலவையை இழைத்து இட்ட மகிழ்வில், அதையே வாட்ஸ்அப் ஸ்டேடஸாகப் பதிவிட்டு, புத்தாண்டு வாழ்த்துக்களை நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருடன் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

புத்தாண்டும் பகலவன் உதயத்துடன் நன்றாய் புலர்ந்தது. வைகறையில் மாக்கோலமிட்ட அம்மணிகள் வாசல் தாண்டி வீடு நுழைகையிலேயே “சடசட” சத்தம்.

லேசான தூறலுடன் தொடங்கிய மழை, ஒருமணிநேரம் வலுத்தது. ஐன்னல் வழியே மழையைத் திட்டிய இல்லத்தரசிகளின் கோபம், புத்தாண்டின் சுவாரஸ்யத்தைக் கொஞ்சம் குறைக்கத்தான் செய்தது.

அம்மாவுடன் வண்ணமிட்ட பெண் குழந்தைகள், வாசலில் கோலம் வண்ணக் கால்வாயாய் ஓடக்கண்டு ஏமாற்றம் கொண்டு, அவர்கள் பங்கிற்கு மழையைத் திட்டத் தொடங்கினர்.

வருடாவருடம் கோவில்களுக்கு சாமிதரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் பலரும் மழைக் காரணமாகவே செல்லத் தவறினர். புத்தாண்டின் மூடை, மவுசை அன்றுப் பெய்த மழைக் குறைத்ததை அன்று அவர்கள் பெரிதாக எடுத்துக்  கொள்ளவில்லை. 

ஜனவரியும் பிப்ரவரியும் சுமூகத்தைக் கைக் கோர்த்துக் கொண்டு பொங்கலின் தித்திப்போடு இனிதாய் நகர்ந்தன.

வருட ஆரம்பத்திலேயே,  சீனாவில் பிறப்பெடுத்திருந்த கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், ஒரு பெட்டிச் செய்தியாக செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளில் உலகச் செய்திகளில் கடைநிலைச் செய்தியாக இடம் பெற்றன.

ஏற்கனவே டெங்கு, நிலா, ஜிகா, ஸ்வைன் ஃபுளூ போன்ற நோய்த் தொற்றுக்களை எதிர் கொண்ட மமதையில், உலக சமுதாயமே இறுமாந்திருந்த வேளையில்,  இந்திய மக்களாகிய  நாமும்  கொரோனாவை ஒரு சாதாரண நோய்த் தொற்றாகவே கருதினோம்.

முக்கியமாக, சீனர்களின் உணவுப் பழக்கம் காரணமாகவே இந்நோய்த் தொற்று பரவியதாக முதற்கட்ட தகவல்கள் பெறப்பட்டதால், நாம் அந்நோய்க்கான ஆபத்திலிருந்து விலகிவிட்டதாக எண்ணி அலட்சியமாகத் தான் இருந்தோம்.

எப்போதுமே பிறர்க்கான துன்பமும் துயரமும்  பார்ப்பவர்களுக்கு வேடிக்கையானது தான். அது போன்று தான் கொரோனாவைப் பொறுத்த வரையில், நாம் பார்வையாளர்களாகத் தான் நமது அன்றாட அலுவல்களில் ஆழ்ந்திருந்தோம்.

மார்ச் மாதத்தில் 2020 கால் வைத்தது. தேர்வுக்காலமும் சூடுபிடித்தது. ஒன்றாம் தேதியே ஆரம்பிக்கப்பட்ட பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வும் நன்றாகவே நடைபெற்றது.

தங்களின் ஒரு வருடத்து உழைப்பின் பலனைப் சுவைக்கக் காத்திருந்த மாணவச் செல்வங்களும், தொடர்ந்து தேர்வெழுத ஆயத்தமாயினர்.

ஆனால் சில நாட்களிலேயே… கொரோனா – இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளின் தலைப்புச் செய்தியானது

கேரளாவில் கொரோனா நோயாளியாக ஒருவர் கண்டறியப்பட்டார். அதன்பின் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய மாநிலங்கள் அனைத்திலும் நோய்த் தொற்று வேகமாகப் பரவச் தொடங்கியது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தல்படி, கொரோனா தொற்று நோயாக அறிவிக்கப்பட்டது. மனிதரிலிருந்து இன்னொரு மனிதருக்கு சுவாசம் மூலமாகவே பரவும் என்பதால், தனிமனித சுகாதார ஒழுங்குக் குறித்த  கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டன.

முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். அடிக்கடிக் கைகளைக்  கழுவுவதன் மூலமாகவும், தொற்றுக்குள்ளானவர் நம்மைத் தனிமைப் படுத்திக் கொள்வதன் மூலமாக, கொரோனாத் தொற்று சமூகப் பரவலாக மாறும் அபாயம் தவிர்க்கப்படும் எனவும் அறிவியலாளர் உபாயம் கூறினர்.

இவையெல்லாம் மனதில் நிறுத்தி உலக சுகாதார நிறுவனம் உரைத்த சிறந்த தடுப்பு முறையாக ஊரடங்கு உணரப்பட, பிற உலக நாடுகள் போலவே,  இந்தியாவிலும் பொது ஊரடங்கு சென்ற வருடம் இதே நாளில் அறிவிக்கப்பட்டது.

ஒட்டு மொத்த வாழ்வியல் இயந்திரங்களும் முடக்கப்பட்டன. அத்தியாவசிய தேவைகள், மருத்துவம் தவிர்த்து பிறத் வேலைகளுக்கான மக்கள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்கள், அரசு இயந்திரங்கள், அனைத்து வகையான போக்குவரத்தும் காலவரையின்றி மூடப்பட்டன. தனிமனித சுகாதாரம் மட்டுமே இந்நோய்க்கான தடுப்பு மருந்தாகக் கருதப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதற்கான மருத்துவம் அறியப்படும் வரை, ஊரடங்கும் சமூக இடைவெளியும் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் என்பதால், காவல்துறையினரின் உதவியுடன் அரசின் நோய்க் குறித்தான வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மக்களால் சரிவரப் பின்பற்றப்பட்டன.

முக்கியமாக, தொற்றுக்கு மிக எளிதாக இலக்காகும் வரிசையில் உள்ள பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், அறுபது வயதைக் கடந்த முதியோர், நீண்டகால மருத்துவ சிகிச்சை மேற்கொள்வோரும் கவனத்தில் கொள்ளப்பட்டு, நோய்த் தடுப்பு நெறிமுறைகளும் கட்டாய வீட்டு முடக்கும்  அவர்கட்கு அறிவுறுத்தப்பட்டது.

அலுவலக ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரியப் பணிக்கப்பட்டனர். கல்வி வரலாற்றிலேயே முதன்முறையாக… பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

சமய வரலாற்றிலேயே… முதல் தடவையாக,  திருப்பதி திருமலை தேவஸ்தானம், தஞ்சை பெரிய கோவில், மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பழமையான,  உலக புகழ்மிக்க மற்றும்  அனைத்து இந்து கோவில் வழிபாட்டுதலங்களும், கிறித்தவ தேவாலயங்களும் இஸ்லாமிய மசூதிகளும் பௌத்த சமண மடாலயங்களும் மூடப்பட்டன. 

நேரக் கட்டுப்பாட்டுடன்  சிறு வணிகக் கடைகள் மட்டும் இயங்கின.  இந்நூற்றாண்டில்,  மக்கள் இதுவரை சந்தித்திராத இந்த இக்கட்டான நிலைக் கண்டு முதலில் நிலைகுலைந்தனர்.

இந்நோய்த் தொற்றுக் குறித்த அனுபவங்களை அனைவரும் பெற்றது போலவே நானும் பெற்றேன் என்ற முறையில், அனைவரது பார்வையில் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் 2020ல் நிகழ்ந்த அனுபவங்கள் குறித்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.

புதிய ஆண்டின் துவக்கத்திலேயே வாழ்க்கை சரிவை நோக்கிப் போவதாகவே எல்லோரும் கருதினோம்.

விடியல் கதிரவனின் அன்றாட அலுவல் என்பதைப் போன்று, என்னைப் போன்ற இல்லத்தரசிகளுக்கு கணவரையும் குழந்தைகளையும்  முறையே அலுவலகத்திற்கும் பள்ளி, கல்லூரிக்கும் அவர்கள் தினமும் நேரம் தவறாமல் செல்ல துணை நிற்பதே அன்றாட வேலை.

ஆனால், முதல் இரு மாதங்களில் சோம்பல் காரணமாக எழுந்த பல மெத்தன செயல்பாடுகள், வீட்டில் சலசலப்பை ஏற்படுத்தின. முக்கிய ஒழுங்கீனமாக காலம் தாழ்த்தி எழுவது, நேரந்தவறி  உணவருந்துவது, அதிக தொலைக்காட்சி செல்பேசிப் பயன்பாடு, உடல் உழைப்பு அதிகமின்மை, அதன் காரணமாக எடை அதிகரிப்பு முதலான அசௌகரியங்கள் உணரப்பட்டன.

அதன்பின் காலத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வினால், நேர மேலாண்மையை உணர்ந்து அதனை செயல்படுத்தினர்.

அனைவருமே  இணையதள வகுப்புகளைப் பயன்படுத்தி ஆன்மீக, யோகக்கலை, தியானம் முதலான குழுக்களுடன் இணைந்துக் கற்றுக் கொள்ள முடிந்தது.

புற்றீசல் போல் அனைத்து தரப்பட்ட செய்திகளுக்கு யூ.டியூப் சேனல்கள் தொடங்கப்பட்டதால்,  பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. அதில் நன்மை,தீமை என இரு அம்சங்களும் இருந்தன.  செய்திகள் உண்மையானதாக இருக்கும் பட்சத்தில், நேரம் பயனுள்ளதாக கழிந்ததில் மகிழ்ச்சியும் திருப்தியும் ஏற்பட்டது.

ஆனால் வெறும் வதந்தி, புரளிச் செய்திகளையும் போகிற போக்கில், அதாவது ஸ்க்ரோல் செய்யும் போது ஆர்வக்கோளாறில் படித்துவிட்டு நேரத்தை வீணடித்ததை எண்ணி வருந்தவும செய்தோம். வெறுமனே கைபேசியிலேயே பொழுதைப் போக்குவது போன்ற உணர்வு, குற்ற உணர்வாய் வருத்தியது.

அலுவல், படிப்புச்சுமை காரணமாக சுவையும் ஆரோக்கியமும் மிக்க உணவுகளை கணவரும் குழந்தைகளும் சுவைக்க தவறியதால், நீண்ட விடுமுறைக் காலமாக விரும்பியோ விரும்பாமலோ அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கொரோனாக் காலக்கட்டத்தை, பயனுள்ள முறையில் பயன்படுத்த எண்ணிய இல்லத்தரசிகள், சேலையை வரிந்துக் கட்டிக் கொண்டு (சில நேரங்களில் குடும்பத்தலைவர்கள் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டும்) களத்தில் இறங்கினர்.

இருக்கவே இருக்கின்றன ஆயிரத்தெட்டு சமையல் சேனல்கள். எல்லோருமே சமையல் கலை நிபுணர்கள் போல் சத்தியம் செய்யாத குறையாக தங்கள் நிபுணத்துவத்தைக் காட்டியதை நம்பி, அந்த சமையல் குறிப்புகளையெல்லாம் பின்பற்றி ஒவ்வொரு நாள் ஒவ்வொரு ரகம் என்று விதவிதமான தம் கைவண்ணத்தைக் காட்டினர்.

ஏனைய உறுப்பினர்களின் வாய் வண்ணம் உண்ணுவதோடு சரி… பாராட்டில் இல்லை. உடல் அலுப்போடு பாராட்டுக் கிடைக்காத  வெறுப்பில் “பழையத்திருடி கதவைத் திறடி” என்ற சொல்லுக்கேற்ப, “பேக் டு த  பெவிலியன்” கணக்காய் திரும்ப பழைய சமையல் பல்லவியை குடும்பத் தலைவிகள் அனைவரும் வாசித்தோம்

வாய்க்கு ருசியான எல்லாம் கிடைத்தாலும், பட்ஜெட் எகிறுவதை எண்ணி, இந்த விஷயத்தில் மட்டும் இல்லத்தரசியோடு ஒத்துப் போய், நவீன சமையலுக்கு மூடுவிழா நடத்தினர் கணவன்மார்கள்

வாட்ஸ்அப் இருக்கும் வரையில் எங்களுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை என்ற மமதையோடு பிள்ளைகள். இது அனைத்தும், பொருளாதாரத்தில் வலுப்பெற்றிருந்த மேல்தட்டு, மத்திய வர்க்க குடும்பத்தாரின் நிலைமை.

பணம் ஒரு பொருட்டல்ல என்ற நிலையிலுள்ள செல்வந்தர்க்கு, கொரோனா எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. நிலையான வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தும் மத்திய வர்க்கத்தினரும் சுலபமாகவே இந்த நோய்த் தொற்றை அணுகினார்கள்

பெரிய வணிக நிறுவனங்கள் சேமிப்பைக் கொண்டிருந்ததால், நோய்த் தொற்றால் ஏற்பட்ட இழப்பை, நிலைமை சரியான பிறகு சரிக்கட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில், இதை பெரும் விடுமுறைக் காலமாக அனுபவித்தனர்.

ஆனால், கொரோனாவினால் பெரும் இன்னலுக்கு ஆளானவர்கள், அன்றாடத் தொழில் புரிந்து வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் மட்டுமே.

சாலையோர வியாபாரிகள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் குறு வியாபாரம் செய்வோர், ஆட்டோ மற்றும் வாடகை கார், வேன் ஓட்டுநர்கள் என பட்டியலில் இன்னும் பலர் வருவர்.

ஆயினும், முதலில் மனதளவில் தடுமாறிய அந்நண்பர்கள், தாமாகவே பிழைப்பிற்கான மாரக்கத்தைத் தேடிக் கொண்டனர். மாற்றுவேலைகள் பல புரிந்துப் பொருள் ஈட்டினர். 

ஆட்டோக்கள் அனைத்தும் காய்கறி, பழ வகைகளைக் கொண்ட நடமாடும் மினி வாகனங்களாக மாறின.  இதனால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் சென்று அவைகளை வாங்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

சமைத்த உணவின் தேவையுள்ளோருக்கு  நேரடியாக குறிப்பிட்ட நேரத்தில் வழங்கியும் சேவை ஆற்றியதோடு, தங்களுக்கான வருமான வழியாகவும் இவ்வழியைப் பார்த்தனர்.

அதைப் போன்று நல்லுள்ளம் கொண்டோர் பலர், சாலைகளில் வறுமையில் வாடும் பலருக்கும் உணவு வழங்கி பசிப்பிணிப் போக்கினர்.

கொரோனா களப்பணியாளர்கள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் சேவையும் பணியும் மிகுந்த பாராட்டுக்குரியவை.

நோய் அறிகுறிகளோடு வரும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவமும் ஆறுதலும் கூறி அவர்களுக்குத் துணை நின்றனர் மருத்துவர் மற்றும் செவிலியர்

விடுப்பு எதுவுமின்றி எல்லா நாட்களிலும் துப்புரவுப் பணியாற்றிய சுகாதாரப்  பணியாளர்களின் ஒப்புமை இல்லாதது.

முக்கியமாக,  தனிமைப் படுத்தப்பட்டோரின் உடைமைகளை பத்திரமாக அப்புறப்படுத்துவதிலும், கிருமிநாசினி தெளிப்பானை மூலை முடுக்கெல்லாம் பயன்படுத்தி நோய்த் தொற்றில் இருந்துப் பாதுகாப்பதிலும் அவர்கள் சேவை அளப்பரியது.

இக்களப்பணியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் முகத்தான், நமது இந்திய அரசாங்கமும் தமிழக அரசும்…. கைகள் தட்டியும்… விமானம் மூலமாக அவர்களின் மீது பூமாரி பொழிந்தும், அனைத்து குடிமக்களின் சார்பாகவும் தமது நன்றியை தெரிவித்தனர்.  அவர்களை வாழ்த்துவதற்காக கைகள் தட்டியதை எண்ணி, இன்றும் நன்றியுடன் பெருமைக் கொள்கிறேன்.

இக்கொரோனாவின் வீர்ய பாதிப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றியதில் இயற்கையின் பங்கு பெரியது.

நமது தீபகற்ப இந்தியாவின் நில அமைப்பினால்… கொரோனா காலகட்டம் கோடைகாலம் என்பதால், வைரஸ்கிருமிக்கு உகந்த காலநிலை நிலவாததால், ஏனைய நாடுகளை விடவும் பாதிப்புக் குறைவாகவே இருந்தது. 

சாதகமான தட்பவெப்பதிலைக் கொண்ட இந்திய துணைக்கண்டம்….பேரிடர் காலங்களில் என்றும் தான் ஆற்றும் காக்கும் பணியையே… இந்த இக்கட்டான  நிலையிலும் ஆற்றி துணை நின்றது.

மேலும், தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வர இயற்கை மருத்துவமுறைகளும் பரிந்துரைக்கப்பட்டு, அவையும் வெற்றிகரமாக செயல்பட்டன. இந்திய சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவப்  பயன்பாடுகளின் தனித்துவமும் முக்கியத்துவமும் நம் நாட்டில் மட்டுமின்றி, பல உலக நாடுகளிலும் உணரப்பட்டு பயன்படுத்தப்பட்டன.

தொற்று குணமாக்கலில் ஹோமியோபதி மருத்துவத்தின் பங்கும் குறிப்பிடத்தக்கது.

மக்களும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், இஞ்சி, எலுமிச்சை, சீரகம், மஞ்சள் மிளகு இவற்றின் பயன்பாட்டை தங்கள் அன்றாட சமையலில் புகுத்தி, தாமாகவே தங்கள் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரித்து தொற்றிலிருந்துப் பாதுகாத்துக் கொண்டனர். 

அனைவரது வீட்டு வாசலிலும் வேப்பிலைத் தோரணம், வேப்பிலை மஞ்சள் கலந்த தண்ணீர் வாளி அவற்றை சாணத்துடன் கலந்துக் தெளிப்பது போன்ற  புதுமையில் பழமை என்னும்படியாக பழங்கால சுகாதார அம்சங்களைக் காண முடிந்தது.

வேப்பிலைக் கொழுந்து, மிளகு, வெற்றிலையும் கலந்த மருந்துக் கலவையும் உட்கொள்ளப்பட்டன.

பொருளாதார ரீதியாக மக்கள் பாதிப்புக்குள்ளாமல் இருக்க, உதவித்தொகை வழங்கியும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கியும் தமிழக அரசு மக்களின் சுமையைக் குறைத்தது.

நோய்த்தொற்றுக் குறித்த விழிப்புணர்வு மற்றும் தடுப்பு வழிமுறைகள், இலவச கபசுர குடிநீர், கிருமிநாசினி விநியோகம் அளித்தது. இளைஞர் நற்பணிமன்றங்கள் மற்றும் சேவை அமைப்புகள் அரசின் நலத்திட்டங்கள் மக்களைச் சென்றடைய உதவினர்.

வீடுவீடாகச் சென்று தொற்றுப் பரிசோதனை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கொண்டு சேர்த்தனர். இலவச உணவு  மற்றும் உடை, மருந்துகள் வழங்கியும் சேவையாற்றினர்.

இக்கட்டான காலகட்டத்தில் சரியான விழிப்புணர்வை இடைவெளியின்றி வழங்கியதில், ஊடகம் மற்றும் தொழில் நுட்பத்தின் சேவை வார்த்தைகளில்  விவரிக்க முடியாத மகத்தான சேவை

வீண் பழி மற்றும் வதந்தி செய்திகளில் மக்கள் வீழாவண்ணம்  பல்வேறு ஊக்க மற்றும் ஆக்க செய்திகளை தொடர்ந்து வழங்கி வந்தன.

ஆனால், அனைவராலும் சாபக்கேடாகக் காணப்பட்ட இந்த 2020ம் வருடத்தில் தான், மாதம் மும்மாரி பெய்ததா என்ற புலவரணியைப் போன்று மாதம் பலமாரிப்  பெய்து சுபிக்க்ஷத்தை உணரச் செய்தது.

தென்மேற்கு பருவகாலத்தில் பெய்த மழையால் தலைநகரம் சென்னை மட்டுமின்றி, தமிழகமே தண்ணீர் பஞ்சத்தில் இருந்து தப்பியது.

கொரோனாவோடு தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்திருந்தால், நிச்சயம் நிலைமை மிக வருந்தத்தக்கதாய் இருந்திருக்கும். அடுத்த வருடத்திற்கும் தண்ணீர் பஞ்சமில்லாதபடி இயற்கை அன்னை கருணையினால் அக்டோபர் நவம்பர் மாதங்களில் முழுமையான மழைப் பொழிந்து மக்கள் மனது நிறைந்தது. இவ்வகையில் 2020 அதிர்ஷ்ட ஆண்டாக பார்க்கப்பட்டது.

பண்டிகைக் காலங்களும் மிக உற்சாகமாகவேக் கொண்டாடப்பட்டன.

ஆனால் வழிபாட்டுத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட வழக்கமான திருவிழாக்களை கொண்டாடவில்லை என்ற மனக்குறை மட்டுமே பெரிதாக இருந்தது. அனைத்துமே நமது பாதுகாப்புக் காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதும் கவனத்துக்குரியவை

2020ம் வருடம் பாடம் கற்றுக் கொடுத்த முன்மாதிரி வருடம் என்றே கூறலாம். இல்லையெனில் எல்லா வரூடங்களைப் போன்று சகஜவாழ்வு நடத்தி, பத்தோடு பதினொன்றாக ஒரு சுமாரான ஆண்டாகவே அமைந்திருக்கும்.

நமது தலைமுறைக் கண்ட  சாதனை ஆண்டாக, நமது அனுபவங்களை  நினைவிற்கொள்ளத் தக்க தடயங்களாக, வரலாற்றுப் பொன்னேட்டில்  பதியவைக்கக்கூடிய  அற்புத ஆண்டே 2020

நாம் சந்தித்த தருணங்கள் நல்லதொரு அனுபவத்தை தந்தது. “வீழ்வது எழுவதற்கே” என நாம் வீறுகொண்டு எழுந்த காலம்.

“இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்”  என்ற மன துணிச்சலுடன் செயலாற்றிய காலம் 

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”, “கூடிவாழ்ந்தால் கோடிநன்மை” என்னும் மூத்தோர் சொற்களை நாம் மெய்யாக்கிய காலம்

வாழ்வின் மீதான நேர்மறைத் எண்ணங்களுடன்  ஊரடங்கு விலங்கும் கண்காணிப்பு  வேலியும் ஏதுமின்றி நாமே நமக்கான சுகாதார ஒழுங்கு எனும் பூட்டுக் கொண்டு, மந்திரக்கட்டை பூண்டால், எந்தவொரு இடரையும் சந்தித்து வெற்றிக் கொள்ள முடியும்.

இன்னும் தொற்று முழுமையாக நீங்காத நிலையில், இனி வர இருக்கும் நாட்களிலும் தொடரும் என்ற நிலையில், நாம் செய்ய வேண்டியது இது தான்

தனி மனித சுகாதாரமும் சமூக இடைவெளியும் நமது பாதுகாப்பு அம்சங்கள் என்பதனை உணர்ந்து, என்றும் முக கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு  கைகளை தூய்மைப் படுத்துவது, சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவது, வீண் வதந்திகளை நம்பாமல் விழிப்புணர்வோடும் பொறுப்புணர்வோடும் நடப்பது  ஒவ்வொரு குடிமகனுடைய தலையாய கடமை என்பதோடு, வருங்கால சந்ததியருக்கும் நாம் சிறந்த வழிகாட்டி ஆகவும், முன்னுதாரணமாகவும் விளங்க முடியும்.

2020 அளித்த அனுபவங்களின் கசப்பை மறந்து, கற்ற பாடத்தை வாழ்வை  செதுக்கிய  உளியாக எண்ணி  கல்வெட்டாவோம்.

எவ்வாண்டிலும்  இவ்வகையில் நாம் குடும்பத்தினருடன்  ஒன்றுக்கூடி இனிமையாக இணைந்து இருந்ததில்லை.

மறந்த உறவுகளை தோழமைகளை செல்பேசி மூலமாக புதுப்பித்தோம். குடும்பமாக சேர்ந்து சமைத்தோம். உண்டு மகிழ்ந்து பகிர்ந்தோம். இயன்ற நிதியுதவி அளித்தோம். வாழ்வின் நிதர்சனம் புரிந்தது.

குறிப்பாக நாளைய தலைமுறையினராம் குழந்தைகளுக்கும் இளைஞர்கட்கும், எந்தவொரு இன்னலையும் எதிர்கொள்ளும் துணிவும் தன்னம்பிக்கையும் அளித்தது 2020

இனி வரும் நாட்களில்,  குழந்தைகள் பள்ளிக்குச் சிட்டுகளாகவும் பதினென்மர் கல்லூரிக்கு  இளஞ்சிங்கங்களாகவும் வெற்றிநடையிட்டு செல்லட்டும். பணி செல்வோர் அலுவலகம் சென்று தங்கள் சகாக்களுடன் மகிழ்ந்து அளவளாவி தம் கடன் ஆற்றட்டும். 

தொழிலாளர்கள் தம்தொழிலைத் தடையின்றி புரிந்து வருமானம் பெருக்கட்டும். நம் தமிழகமும் இந்திய தேசமும் பொருளாதாரத்திலும் மனிதவளத்திலும் வல்லரசாகவும் நல்லரசாகவும் திகழ்ந்து, அதன் கீர்த்தி பட்டொளி வீசி ஒளிரட்டும் தரணி போற்றவே!!! 

“புத்தம்புது பூமி வேண்டும்

நித்தம் ஒரு வானம் வேண்டும்” 

என்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் இப்படித் தொடர்கின்றன.

“யுத்தம் இல்லாத பூமி, ஒரு சத்தம் இல்லாமல் வேண்டும்.
சாந்தி சாந்தி என்ற சங்கீதம், சுகம் ஏந்தி ஏந்தி வந்து வழி வேண்டும்”

போனவை அட போகட்டும்
வந்தவை இங்கு வாழட்டும்
தேசத்தின் எல்லைக் கோடுகள்
அவை தீரட்டும்
தெய்வங்கள் இந்த மண்ணில்
வந்து வாழட்டும்!!! 

ஆம், இனி வரும் நாட்கள், இளைய தலைமுறைவசம்

புதியதோர் உலகம் படைக்க, வேடிக்கை மனிதரைப் போல் வீழாத இலட்சிய யுக புருஷரான  காந்திஜி, நேதாஜி, மகாகவி, விவேகானந்தர், வ.உ.சிதம்பரனார் போன்றோர் ஒத்தவராய் அவர்களை சமைப்போம்.

வேதாத்ரி மகரிஷி அவர்களின் வாழ்த்துரையாம்,

“உலகமெலாம் பருவமழை ஒத்தப்படி பெய்யட்டும்!!
உழவரெல்லாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!!
நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளிவீசட்டும்!!
நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தே  நிற்கட்டும்!
வாழ்க வையகம்!!
வாழ்க வளமுடன்!!”
என்பதனை நாம் ஏற்புரையாக்குவோம். பிரார்த்தனைகள் நிறைவேறட்டும். கனவுகள் நனவாகட்டும்!!!

(முற்றும்)

புத்தக விமர்சன போட்டிகள்

விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள பதிவை பாருங்கள். விமர்சனம் அளித்து, Rs.1000 Amazon Gift Card / Special Gift, மெடல் மற்றும் சான்றிதழ் வெல்லுங்கள்.

விமர்சனம் அனுப்ப கடைசி நாள் : மார்ச் 30, 2021 👇

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

  1. நல்லதொரு அலசல். இந்த வருடமும் மார்ச் மாதம் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதும் குறிப்பிடத் தக்கது. அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் பெருகப் பிரார்த்திப்போம். இந்த ஆண்டு மாணவ, மாணவிகளுக்குப் பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பையும் தர ஆண்டவனைப் பிரார்த்திப்போம்.

பாலம்…(சிறுகதை) – ✍ லக்ஷ்மிஸ் பவன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

வாழ்கிறேன் நானாக!!! – ✍ கவிதைக்காரி – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு