in ,

தேங்க் யூ எதிரியே (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

“என்னது எதிரிக்கு தேங்க் யூ”…வா? என்று புருவம் உயர்த்தும் நண்பர்களே புரிந்து கொள்ளுங்கள், நம்மை அவமானப்படுத்துவதன் மூலம் அவர்கள் நமக்கு உதவுகிறார்கள், உறங்கிக் கிடந்த நம்மை உசுப்புகிறார்கள்,  சோம்பிக் கிடந்த நம்மை செறிவாக்குகிறார்கள், நம் திறமைகளை நமக்கே அறிமுகப்படுத்துகிறார்கள்.  நண்பர்கள் கூட சில நேரம் நமது சலிப்பை அங்கீகரித்து ஓய்வுக்கு ஒப்புதல் தருவார்கள். ஆனால், எதிரிகள் நம் சலிப்பை தங்கள் களமாக்கி கொண்டு நம்மை இகழ்ந்துரைப்பார்கள். அந்த இகழ்ச்சியின் முதல் அத்தியாயம்தான் நம் முயற்சி, இறுதி அத்தியாயம்தான் நமக்குக் கிடைக்கும் புகழ்ச்சி.

பொது வாழ்வில் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் எதிர்த்துக் கேள்வி கேட்பவா், தவறுகளை சுட்டிக் காட்டுபவா் இல்லையென்றால் அவரால் நல்ல தலைவராக இருக்க முடியாது.  அந்தக் கேள்விகள்தான், அந்த விமர்சனங்கள்தான் அவருக்குத் தூண்டுகோல்.

என்னுடைய நண்பர் ஒருவர்.  அவரும் எழுத்தாளர்.  எந்தப் போட்டிகளிலுமே பரிசு வாங்காத எழுத்தாளர். அவரிடம் ஒரு நாள், அடுத்த நடக்கப் போகும் ஒரு சிறுகதைப் போட்டி பற்றிக் கூற, “ம்ஹும்.. நான் எழுதப் போவதில்லை… என்ன எழுதினாலும் பரி வரப் போவதில்லை… அதனால் எழுதப் போவதில்லை” என்றார்.

அவரை ஊக்கப்படுத்த வாயெடுத்த நான், ஒரு யோசிப்பிற்குப் பின், “எழுத வேண்டாம்… நீயெல்லாம் என்ன எழுதிக் கிழிச்சிடப் போறே?… உன் கதைகளை மனுஷன் படிப்பானா?… வீணா நேரமும் பணமும் தான் வேஸ்ட்” என்றேன்.

தொடர்ந்து இதே போல் நான் அவரது எழுத்தைப் பற்றி எதிர்மறை விமர்சனமே செய்ய, கோபமானார்.  அடுத்த நிமிடமே அங்கிருந்து அகன்றார்.

சில் நாட்களுக்குப் பிறகு அந்த சிறுகதைப் போட்டியின் முடிவுகள் வந்திருந்த போது அவருடைய சிறுகதை மூன்றாம் பரிசு பெற்றிருந்தது.  அவர் என்னைத் தேடி வந்து, “தேங்க்யூ” என்றார்.  நான் விழிக்க, “நீங்கள் மட்டும் அன்னிக்கு என்னைக் கேவலமாய் திட்டி அவமானப் படுத்தலேன்னா… நான் போட்டிக்கு எழுதியே இருக்க மாட்டேன்!… உங்கள் வசை எனக்குள் ஒரு பொறியைத் தூண்டி விட, “பார்த்து விடலாம் ஒரு கை” என்றுதான் எழுத ஆரம்பித்தேன்… ஜெயித்தேன்” என்றார்.

யோசித்துப் பாருங்கள், வில்லன் இல்லாவிட்டால் கதாநாயகன் சோபிப்பானா?… அவன் வீரம் வெளிப்படுமா?… அவன் நற்குணங்கள் காட்சிக்கு வருமா?… கை தட்டல்கள் அவனுக்குக் கிடைக்குமா?. ஆம், எதிரிகள் இல்லை என்றால் வாழ்க்கையில் விறுவிறுப்பு இல்லை.  சோதனைகள் இல்லா வாழ்வில் சாதனைக்கு இடமேது நண்பர்களே?. வாழ்க்கைப் பயணத்தில் நம்மை அவமானப்படுத்தும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஏற்படலாம். அப்போதெல்லாம் அவற்றுடன் வேகம் காட்டி மோதுவதை விட, விவேகத்துடன் எதிர் கொண்டால் வெற்றி நமதே.

சிலர் கேட்கலாம், “அதெப்படி எதிரிகள் நம்மை வார்த்தைகளால் காயப்படுத்தும் போது, அதற்கு தகுந்த பதிலடி கொடுக்காமல், அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்க முடியுமா?” என்று.  முடியும்! அதற்குத் தேவை மனக் கட்டுப்பாடும், மன முதிர்ச்சியும்.  ஒருவர் நம்மை அவமானப்படுத்தும் போது, உடனே நாம் கோபமடைந்தால் நாம் தோல்வியை ஒப்புக் கொள்வதாக அர்த்தம்.  நம்மைக் கோபப்படுத்த வேண்டும் என்பதுதானே அவரது நோக்கம்?… அது நிறைவேறி விடுகிறதல்லவா?.  அதே நேரம் அவரது செயலையே நாம் நெம்புகோலாக உபயோகித்து அவரிடமே நம் வெற்றியைப் பதிவு செய்யும் போது, அவர் தன் தோல்வியை ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லையே.

அவமானம்! வாழ்வில் எல்லோரும் எதிர்கொள்ளும் ஓர் கசப்பான உணர்வே. எனினும் அதிலிருந்து நாம் எப்படி மீண்டு வந்து மீதும் மிளிர்கிறோம் என்பது அவரவரின் மனநிலையை பொறுத்ததே. “அவர் என்னை இப்படி சொல்லிவிட்டார்” என்பதற்காக வருத்தத்துடன் ஓர் மூலையில் உட்காராமல், “இனி அவர் என்னை இப்படி சொல்வதற்கு நான் வாய்ப்பளிக்க கூடாது” என்ற மனநிலையுடன் முன்னோக்கி செல்லுதல் வேண்டும். தோல்விகள் மட்டும் அல்ல, அவமானங்களும் வெற்றிக்கு முதல் படியே!.  அதை ஏற்படுத்தும் எதிரி நமக்கு ஊக்கமூட்டும் ஒரு நெம்புகோல்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு பேராற்றல் ஒளிந்து கொண்டிருக்கின்றது.  அது சரியாகத் தூண்டி விடப் படுமானால் அவன் சரித்திரப் புகழ் பெறுகிறான்.  அவ்வாறு தூண்டி விடும் கைகள் எதிரியின் கைகளாகவும் இருக்கக்கூடும், என்பதை உணர்வதே பெரும் மன முதிர்ச்சி.

உதாரணத்திற்கு,  முதல் மார்க் வாங்கும் சகமாணவன், படிக்காத மாணவனை ஏளனம் செய்யும் போது,  அம்மாணவன், அந்த ஏளனங்களை அவமதிப்பு என்று எண்ணாமல், “சரி… இனி நன்றாகப் படித்து இவனை விட அதிக மார்க் வாங்கி இவன் வாயை அடைக்க வேண்டும்!” என்று எண்ணுவானேயானால், அதுதான் மனக் கட்டுப்பாடு, மன முதிர்ச்சி. மாறாக, மாணவன் கோப வயப்பட்டால் அடிதடி, கைகலப்பு, போன்றவற்றால் படிப்பிற்கே இடையூறுதான் ஏற்படும்.  அதே போல்தான், கோபப்படும் கணவனின் வார்த்தைகளை, குத்தீட்டி என்று எண்ணாமல், தூண்டுகோல் என எண்ணும் மனைவி, சந்தோஷமான இல்லறத்தை வெல்கிறாள்.

அதைவிடுத்து, அவள் பதில் வார்த்தைகளை அடுக்கினால், குடும்பத்தில் மகிழ்ச்சி காணாமல் போய்விடுவதோடு, விவகாரம் விவாகரத்து வரை கூட போய்விடும்.   பொதுவாகவே, பொது வாழ்வில் ஈடுபடுவோர்க்கு அவமானங்கள் அதிகம் வரும்.  அவர்கள் அதை அடிகளாக எண்ணாமல் படிகளாக எண்ணினால்தான் பயணிக்க முடியும்.  பதிலுக்கு பதில், பழிக்குப் பழி, என்று ஆரம்பித்து விட்டால், காயங்கள் பெரிதாகி, வடுக்கள் வளர்ச்சியாகி, வஞ்சனையே மிஞ்சி நிற்கும்.  அதன் மூலம், மன அமைதி மறைந்தே விடும்.

தெளிவான, தேர்ந்த மனசுக்குத் தெரியும், அறிவுரைகள் மட்டுமல்ல, அவமானங்கள் கூட ஜெயிக்க வைக்கும்,  நண்பர்கள் மட்டுமல்ல எதிரிகள் கூட ஏற்றத்தைக் காட்டுவார்கள், என்னும் மறைமுக சூத்திரம்.  விட்டுக் கொடுத்தல், விலகிச் செல்லுதல், இறங்கிப் போதல், ஆகியவை நமது பலவீனம் அல்ல, அதுவே நமது பலம்.

(முற்றும்)     

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வெளிச்சம் வெளியில் இல்லை (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்

    தடைகளை மடைகளை உடைக்கலாம் (சுயமுன்னேற்றக் கட்டுரை) – முகில் தினகரன்