“வெளிச்சம்” என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய சூழ்நிலைக்கேற்ப, அறிவு நிலைக்கேற்ப, அனுபவ நிலைக்கேற்ப, வயதிற்கேற்ப மாறுபட்டே அமைகின்றது. பொதுவாகவே, ஒரு சந்தோஷமான விஷயத்தைக் கேட்கும் போது மனிதனுடைய முகம் பிரகாசமாகின்றது. அதுதான் வெளிச்சம்.
மாணவனுக்கு வெளிச்சம் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுத் தேறும் போது வருகின்றது என்றால், பெற்றோர்க்கு வெளிச்சம் தன் பிள்ளைக்கு வளாகத் தேர்வில் (CAMPUS INTERVIEW) நியமனம் கிட்டும் போது வருகின்றது. அலுவலருக்கு வெளிச்சம் தன் உத்தியோகத்தில் உயரும் போது வருகின்றது என்றால், அந்த நிறுவன முதலாளிக்கு வெளிச்சம் தனது லாபம் பெருகும் போது வருகின்றது. பெண்ணைப் பெற்ற குடும்பத்தலைவனுக்கு வெளிச்சம் தன் மகளுக்கு நல்ல வரன் அமையும் போது வருகின்றது. அரசியல்வாதிக்கு வெளிச்சம் அதிக ஓட்டு வாங்கி தேர்தலில் வெல்லும் போது வருகின்றது.
இப்படி ஒவ்வொருவரும் தங்களது இலக்கினைத் தொடும் போது, வெற்றியினை நுகரும் போது, வெளிச்சத்தைக் காண்கிறார்கள்.
ஆக, வெற்றிதான் வெளிச்சம். வெற்றியை எட்டும் போதுதான் எல்லோருக்குமே வெளிச்சம் தோன்றுகின்றது.
இப்போது தலைப்பை மாற்றிப் படித்துப் பாருங்கள் “வெற்றி வெளியில் இல்லை”.
சிலர் வெற்றி என்பது எங்கோ தொலை தூரத்தில், மந்திரவாதி கதையில் வருமே மந்திரவாதியின் உயிர் ஏழு கடல், ஏழு மலை தாண்டி, ஒரு குகைக்குள் உள்ள ஒரு கிளியின் வயிற்றில் இருக்குமே, அதுபோல் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பாவம் அவர்களுக்குத் தெரியவில்லை வெற்றி என்பது அவர்களிடம்தான் உள்ளது என்பதும், அதன் மீது அவர்கள் ஏகப்பட்ட குப்பைகளைப் போட்டுக் குவித்து மூடி வைத்திருக்கிறார்கள் என்பதும்.
நண்பர்களே! ஒரு குழாயில் தண்ணீர் வராமல் போகும் போது நாம் என்ன செய்கின்றோம்? குழாயைத் தூக்கி எறிகின்றோமா?… இல்லை தண்ணீர் வரட்டும் என்று காத்திருப்போமா? இல்லையே?…. தண்ணீர் வராதபடிக்கு அடைத்திருப்பது என்ன? என்பதைத்தானே ஆராய்கிறோம்? அதே போல்தான், ஒரு விஷயத்தில் நாம் வெற்றி பெற வேண்டுமென்றால் அந்த வெற்றியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை, மாறாக நாம் வெற்றி பெற முடியாமல் நம்மைத் தடுப்பது எது?… அதை எப்படி அடித்து நொறுக்குவது? என்பதைச் சிந்தித்தால் போதும், வெற்றி வரும். கூடவே வெளிச்சமும் வரும்!.
மனிதர்களாகிய நாம் ஏன் பிறந்தோம்?
நம் வாழ்வின் நோக்கம் என்ன?
நம்மைப் படைத்தவன் யார்?
மரணத்திற்குப் பின் என்ன நடக்கும்?
மனிதனின் பிறப்பு, வாழ்வு, இறப்பு –
இவற்றில் எந்த நோக்கமும் இல்லையா?
இப்படி வாழ்க்கை குறித்த பல கேள்விகள் நம் உள்ளத்தில் எழுந்து ஒரு இருளை நம் எதிரே கொண்டு வந்து நிறுத்தலாம். அது இயல்பே. அதே நேரம், இவற்றிற்கான பதில்கள் உங்களுக்குள்ளேயே உள்ளது. தீர்க்கமாய் சிந்தித்தால் அந்த வெளிச்சத்தை நீங்க காணலாம், என்பதுதான் நிதர்சனம்.
வாழ்க்கை நம் எல்லோருக்கும் வாய்ப்பை கொடுத்துக் கொண்டுதானிருக்கின்றது. ஆனால், அதுதான் வாய்ப்பு என்று பல பேருக்கு தெரிவதற்குள் வாழ்க்கையே முடிந்து போய் விடுகின்றது. அதே நேரம், ஆஹா… இதுதான்டா நமக்கான வாய்ப்பு”என்று புரிந்து கொண்டு யார் அதைக் “கப்”பென்று பற்றிக் கொள்கிறார்களோ… அவர்கள்தான் சாதனையாளர்களாக சரித்திரம் படைக்கிறார்கள்.
வரலாற்றில் மிகப்பெரிய சாதனைகளும், வெற்றிகளும் ஒரு மாபெரும் தோல்வியாலும், ஒரு அதீத அவமானத்தினாலும்தான் நிகழ்கின்றன. அந்த தோல்வியையும் அவமானத்தையும் வெகுமானமா மாற்றப் பழகிக் கொள்ள வேண்டும்.
உங்கள் மனம் என்னும் கடையில் உற்சாகம், நம்பிக்கை, வலிமை, ஆரோக்கியம், துடிப்பு, அன்பு, உண்மை, பரிவு, உதவி என்று பல நல்ல பழக்கங்களையும், பகைமை, பொறாமை, வெறுப்பு, கோபம், சுடுசொல், பொய் என்று பல அழுகிய பழங்களையும் அடுக்கி வைத்திருக்கிறான் அந்த ஆண்டவன். இதில் நீங்கள் எதைத் தேர்ந்தெடுத்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
வாழ்க்கையின் வெளிச்சத்தைத் தெளிவாகக் காண விரும்புகிறவர்கள் முதலில் தங்களை பற்றி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். தங்களிடம் ‘மனம் எனும் அற்புத விளக்கு’ உள்ளது என்பதைதெரிந்துக் கொள்ள வேண்டும்.
செக்கு மாட்டு வாழ்வை உதறித்தள்ளுங்கள். சவால்களை நாடுங்கள். சவால்களை மேற்கொள்ளும் போதுதான் நம்மிடமுள்ள முழுத்திறமையும் புடம் போடப்படுகிறது. முழுத்திறமையும் வெளிவருகிறது. எனவே சவால்களை பொறுப்பு களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
சாதனைகளை உங்களுடைய தாக்குங்கள். ஆம், உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில்!
சலிப்பின்றி வாழுங்கள். வாழ்க்கையை நரகமாக செய்வதற்கு சலிப்பு ஒன்று போதும். இயற்கை சலிப்படைந்து ஒரே ஒரு நாள் தன் இயக்கத்தை நிறுத்தினால் இவ்வுலகம் என்னவாகும்?
எனவே மனச்சலிப்பு, மனச் சோர்வு என்னும் சரிவுகளில் உங்களை வீழ்த்தி விடாமல் இருக்க நம்பிக்கை இறகுகளை விரித்து உதறுங்கள். வானத்தில் வட்டமிடுங்கள். உங்களுக்குள் உள்ள வெளிச்சம் வெளிப்படும் வெற்றியாய்.
அழகுணர்ச்சியோடு செயல்படுங்கள். எந்தச் செயலையும் அழகுணர்ச்சியுடன் அனுபவித்து செய்யும் போது அது கலையாகிறது. எப்போதும் பரபரப்போடும், படபடப்போடும் பறந்து கொண்டிருப்பவர்களால் வாழ்க்கை ஏட்டின் இன்பப் பக்கங்களை புரட்ட முடியாமலேயே போய் விடும். எனவே எப்போதும் அழகுணர்ச்சியோடு இருங்கள். எதிலும் அழகுத்தன்மை மிளிருமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
வாழ்க்கை என்பது பரந்த வானம் போன்றது. அதில் சுட்டெரிக்கும் சூரியன் வரலாம். குளிர்ச்சி தரும் சந்திரன் வரலாம். இரண்டின் வரவையும் ஏற்றுக்கொண்டு பயன் பெறுங்கள். எனவே வாழ்வில் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகுங்கள்.
மாற்றம் என்பது எங்கிருந்தோ வருவதல்ல. நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். தொடர வேண்டும்.
உன்னை நீயே அறிந்து கொள். குறைகளை திருத்திக் கொள். அது உன் வளர்ச்சிக்கான வழி. எண்ணம், சொல், செயலால் உண்மையை பின்பற்று. எப்போதும் நற்செயலில் ஈடுபடு. மன வலிமை, நல்ல புத்தி, மகிழ்ச்சி போன்ற பண்புகள் அமைதியில் இருந்தே உருவாகின்றன.
பாவம் செய்தவன் தினையளவு நன்மை செய்தால் அவனுக்கு கடவுளின் அருள் கிடைக்கும். பகைவரை விட, பலவீனமான எண்ணங்களே ஆபத்தானவை. ஒழுக்கமே மகிழ்ச்சியின் திறவுகோல். ஒழுக்கமுடன் வாழ்வது அவசியம். வாய்ப்பு ஒருபோதும் காத்திருக்காது.
நற்செயலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் உடனே செய்.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings