இங்கு யாரும் மறுக்கவோ, மாற்றுக் கருத்துக் கூறவோ, முடியாத ஒரு விளக்க நிலை என்னவென்றால், “மனித வாழ்க்கையில் வெற்றியும்… தோல்வியும், ஏற்றமும்… தாழ்வும், இன்பங்களும்… இடர்பாடுகளும், மாறி, மாறித்தான் வந்து கொண்டிருக்குமே தவிர, யாருக்கும் நிரந்தரமாக வெற்றியும், நிரந்தரமாக ஏற்றமும், நிரந்தரமாக இன்பங்களும் மட்டுமே வந்து கொண்டிருக்காது!” என்கின்ற உண்மைதான்.
சிகரம் தொட்ட சிங்க மனிதர்களுடன் உரையாடிப் பார்த்தால் தெரியும், அவர்கள் எந்தெந்த இடங்களிலெல்லாம் சருக்கியிருக்கிறார்கள், வாடியிருக்கிறார்கள், உடைந்து போயிருக்கிறார்கள், என்கிற நிதர்சன உண்மை. இந்த அனுபவ உண்மை நமக்கு எடுத்தியம்பும் பாடம் என்னவென்றால், அவர்களெல்லாம் அந்த நேரங்களில் தங்களுக்கு ஏற்பட்ட விரக்தி நிலையை விருப்ப நிலையாக மாற்றிக் கொண்ட நேர்மறைக் கோட்பாடுதான் அவர்களை சிகரம் தொட வைத்தது! என்கின்ற வாழ்க்கைப் பாடம்.
நாம் கேட்கலாம், “அதெப்படி சார்?…ஒரு தேர்வில்… ஒரு தொழிலில்… அல்லது ஒரு முயற்சியில் நாம் தோற்றுவிடும் போது நமக்கு ஏற்படும் விரக்தி மன நிலையை எப்படி சார் விருப்ப நிலையாக்க முடியும்?… நாமெல்லாம் சராசரி மனிதர்கள்தானே?… யதார்த்த உணர்வுகள் பிறவியிலேயே தோன்றியவையல்லவா… அவற்றை மாற்ற முடியுமா?” என்று.
உண்மைதான், தோல்வியில் விரக்தி என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றுதான், அதற்காக அந்த விரக்தி நிலையையே வஜ்ர பிடியாகப் பிடித்துக் கொண்டு, “இனி எந்த முயற்சியிலும் ஈடுபட வேண்டாம்!…ஒரு தடவை வாங்கிய சூடே போதும்!” என்று ஓய்ந்து போய் அமர்வது நம்மை நாமே முட்டாளாக்கிக் கொள்ளும் செயலல்லவா?. அந்தத் தோல்வியில் கற்றுக் கொண்டதை தகுதியெனக் கொண்டு எழுந்து பாருங்கள், எளிதாய் அடுத்த முயற்சியில் ஜெயிக்கலாம். அந்தத் தோல்வி கொடுத்த பொருளாதார நஷ்டத்தை அறிவைக் கொள்முதல் செய்ய செலவழித்த முதலீடு, என்று எண்ணிக் கொண்டு, அடுத்த முயற்சியுடன் மோதிப் பாருங்கள், நஷ்டம் லாபமாகும், கஷ்டம் களிப்பாகும், இஷ்டம் கைகூடும்.
அடுத்து, இந்த விரக்தி நிலை என்பது, முயற்சிகள் தோல்வியடையும் போது ஏற்படும் நிலைக்கு மட்டுமே சொந்தமானவையல்ல. சாதாரண மனிதர்களும் கூட தங்கள் அன்றாட வாழ்க்கையில் பல நேரங்களில் இந்த விரக்தி நிலையை அடைகின்றனர். உதாரணமாக, ஒரு மத்திய வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், தன் குழந்தையின் பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாட நினைக்கின்றார். ஆனால், அவரது துரதிர்ஷ்டம் அந்த பிறந்த நாளானது மாதக்கடைசியில் வந்து விடுகின்றது. கை வற்றிய நிலையில், அவர் மனம் ஒரு கட்டாய விரக்தி நிலையை கடுமையாகச் சந்திக்கின்றது. இது எதனால் என்றால், “இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம்” அவர் கற்றுக் கொள்ளாததுதான். “மிக ஆர்ப்பாட்டமாக்க் கொண்டாடினால்தான் சந்தோஷமா?…இருப்பதைக் கொண்டு எவ்வளவு தூரம் கொண்டாட முடியுமோ, அவ்வளவு தூரம் கொண்டாடி, விரக்தி நிலையையே விருப்ப நிலையாக மாற்றிப் பார்க்கலாமே.
அதே போல் சிலர், “ப்ச்!… நான் பார்க்கும் இந்த வேலை எனக்குப் பிடிக்கவே இல்லை!… என் விருப்பமே வேறு…ஆனால் இங்கு இருப்பதோ வேறு!… ஏதோ கொஞ்ச நாளைக்கு அப்படி… இப்படின்னு இதுல ஒட்டிக்கிட்டிருப்பேன், அப்புறமா வேற டிரை பண்ணி போயிடுவேன்!” என்று விரக்தி மனநிலையில் ஈடுபாடே இல்லாமல் பணி செய்வர். யோசித்துப் பாருங்கள், அவ்வாறிருந்தால் அவரது பணியின் தரம் எப்படி இருக்கும்?… அவரது பணித் திறமை எப்படி இருக்கும்?
அவரே, “இப்போதைக்கு இந்த வேலைதான் நம்முடைய வேலைன்னு ஆயிடுச்சு… ஓ.கே!… இதையே செய்வோம்!… இதுல நம்மோட முழுத் திறமையையும் காட்டுவோம்!… அப்புறம் அந்தத் திறமையின் அடிப்படையில் உயர்வோம்!” என்று அந்த விரக்தி நிலையை விருப்ப நிலையாக மாற்றிக் கொண்டு முழு ஈடுபாட்டுடன் பணி புரிந்தார் என்றால், நிச்சயம் அவரது உழைப்பு வீண் போகாது.
சிலர், சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் விரக்தியடைந்து விடுவர். அதற்கு காரணம் அவர்களது மனம் எதிர்பார்ப்புக்களை ஏகமாய் அடைகாத்து வைத்திருப்பதுதான். எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றங்களாக மாறும் போது விரக்தி வருவது இயல்புதான். ஆனால், அந்த விரக்தியே நம்மைச் சாப்பிட்டு விடும் பூதங்களாக மாறி விடாமல் நாம் சுதாரிப்புடன் கவனமாகப் பார்த்துக் கொண்டோமானால், எதிர் காலத்தில் வரும் எல்லா விரக்திகளும் தாமாகவே வலுவிழந்து போய் விடும்.
நமது உடலில் முக்கிய உறுப்பு மூளை. அதுவே நமது எல்லா காரணிகளுக்கும் மூலம். மூளையின்றி எதுவுமே இல்லை என்பதே உண்மை. இந்த மூளைதான் நம்முடைய எண்ணவோட்டங்களை இயக்குகிறது.
பொதுவாகவே, விரக்தி நிலை என்பது எதிர்மறை எண்ணங்களால் உண்டாவது. அதே நேரம், விருப்ப நிலை என்பது நேர் மறை எண்ணங்களால் உண்டாவது. இப்போது நேர்மறை எதிர்மறை எண்ணங்களும் இந்த மூளையாலே உருவாக்கமும் பெறுகிறது இயக்கமும் பெறுகிறது.
நம்முடைய உடலை இயக்கும் மூளைக்கு நம் எண்ணவோட்டங்களின் தாக்கம் அதிகம். நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நாம் என்று கூறுவதே உண்மை.
எப்படியென்றால் வாந்தி எடுப்பதை நினைக்கையில் வாந்தியெடுப்பது போன்ற ஒவ்வாமை ஏற்படும். ஆக, நம்முடைய நினைவலைகளைக் கொண்டு நம் மூளை நம் உடலையும் நம்மையும் இயக்குகிறது. இது ஆய்வின் மூலமும் நிரூபிக்கபட்டுள்ளது.
உளவியல் பாடத் திட்டத்தில் வரும் ஒரு உண்மைச் சம்பவம் என்னவென்றால், அமெரிக்காவில் ஒருவருக்கு சில நாட்களாக பெரும் தலைவலி. மருத்துவ மனைக்குச் சென்றார். மருத்துவரும் சோதித்து விட்டு, ஒரு அதிர்ச்சியான பதிலைத் தருகிறார். ஆம் அவருக்குப் புற்றுநோய் முற்றிய நிலையில் இருப்பதாகவும் அதனைச் சரிசெய்ய இயலாததையும் மிகுந்த வருத்தத்துடன் தெரிவிக்கிறார். மேலும் அந்த மனிதர் வெறும் 10 முதல் 15 நாட்கள் மட்டுமே உயிர் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கிறார் மருத்துவர்.
மிகுந்த வேதனையுற்ற அந்த மனிதர் வீட்டிற்கு வந்தார். 10 நாட்களில் இறந்தும் விட்டார். ஆனால் உடற்கூறாய்வில் அவருக்கு எந்த ஒரு உடல் உபாதையும் இல்லை எனவும். புற்றுநோய் என எதற்கான அறிகுறியும் இல்லை எனவும் முடிவு வந்தது. ஆம் அவருக்கு எந்த நோயும் இல்லாமலேயே ஒரு கவனக்குறைவாக நடந்த தவறால் 10 நாட்களில் இன்னுயிர் நீத்தார்.
காரணம்? புற்றுநோய் என்றவுடன் மனமுடைந்து வாழ்வதற்கான நம்பிக்கை இழந்து எதிர்மறைச் சிந்தனை கொண்டிருந்ததால் நம்மை இயக்கும் மூளைக்கு சரியான தகவல்கள் சேராமல் அதற்கான வேலைகள் முடங்கியது. அதனால் சரியான கலவையில் ரசாயண சமிக்ஞைகளை உடலின் பாகங்களுக்கு தர முடியாமற் போய்விடும். ஆதலின் உடலின் எதிர்ப்பு சக்தியிலிருந்து எல்லாமே முடங்கிப் போய் விடும். அவ்வாறான நிகழ்வே அவரின் உயிரைப் பறித்தது.
மருத்துவர் அறிக்கையை மாற்றிக் கூறியதால் அவர் மரணித்து விட்டார். இல்லாவிட்டால் இன்னும் பல காலம் வாழ்ந்து இருப்பார் என்பதில் ஐயமில்லை.
இதுதான் நேர்மறை எதிர்மறை சிந்தனைகளின் விளைவு. உண்மையில் நாம் மகிழ்ச்சியாக சுறுசுறுப்பாக இருக்கையில் நமது மூளையும் சுறுசுறுப்பாக இயங்கும். எதிர்மறை சிந்தனைகளுடன் சோர்ந்து இருக்கையில் மூளையின் செயல்பாடும் மந்தமாகத் தான் இருக்கும். இதுவே வெற்றி தோல்வியின் ரகசியம். நமக்கான ஆற்றல் நமக்குள்ளே இருக்கும். அது நேர்மறை சிந்தனைகளால் மட்டுமே சாத்தியம். விரக்தி நிலையை விருப்ப நிலையாக்கும் சக்தி நம்மிடமே உள்ளது.
(முற்றும்)
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings