in

நட்டவனுக்கு தெரியாதா? (சிறுகதை) – ✍ லக்ஷ்மீஸ் பவன் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

நட்டவனுக்கு தெரியாதா? (சிறுகதை)

மதுரை பக்கம் சோழவந்தான்

பாண்டியம்மா வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள்

“ஆரு அது? அட மதியா? என்ன கண்ணு இம்புட்டு வெள்ளன இங்கிட்டு?”

மதுரையில் இருந்து திடீரென்று வந்து நிற்கும் அக்கா மகன் மதிவாணனைப் பார்த்துக் கேட்டாள் பாண்டியம்மா

“என்ன ஐயா மொகம் வாடி இருக்கு? சரி நீ உள்ளார போ. நா ஒரு எட்டு போய் பால் வாங்கியாரேன்” என்று விரைந்தாள்

வீட்டிற்கு வந்து மதிக்கு காபி தண்ணி கொடுக்கும் போதும், அவன் குளிக்க வெண்ணீர் அடுப்பு பற்ற வைக்கும் போதும், மதியிடம் என்ன விஷயம் என்று கேட்கவில்லை. அவள் கேட்க மாட்டாள் என்று மதியும் அறிவான்

“யாரத் தேடுத? சித்தப்பாரா? அவரு ஆத்தங்கர தோட்டத்து பக்கம் போய் இருக்காரு”

பாண்டியம்மா சொல்லும் போதே, சித்தப்பாவிற்கு போன் போட்டான் மதி

“ஐயா, குளிச்சிட்டு வா. மிளகு ரசமும், உனக்கு பிடிச்ச உருளையும் செய்யட்டா?” பாண்டியம்மா கேட்கும் போது மதியின் பைக் தெருவைத் தாண்டியிருந்தது

பாண்டியம்மாளுக்கு தெரியும், அவன் பைக் தோட்டத்தில் தான் நிற்குமென்று

அக்கா, மாமா வேலைக்கு போனதாலும், பாண்டியமாள், கண்ணையனுக்கும் பிள்ளை இல்லாததாலும், மதி இவர்களுக்கும் பிள்ளையாகிப் போனான்.

“என் கையளவு தா இருந்துச்சு, இப்ப என்னமா வளந்து நிக்குது” என தாயுள்ளம் அவன் போகும் திசையைப் பார்த்தபடி நின்றது

ஆத்தங்கரை ஓரம் இருக்கும் தென்னந்தோப்பில், பண்ணையாட்களிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான் கண்ணையன்

பைக் நிறுத்தி வந்த மதியைப் பார்த்த மாத்திரத்தில் கண்ணையனுக்கு புரிந்தது, ஏதோ பிரச்சனை என்று

“ஐயா வாய்யா…” என வரவேற்ற கண்ணையன்

“யாருப்பா அங்க, தண்ணி காய் ஒண்ணு வெட்டி எடுத்தா…” என்றார்

“இல்ல அப்பு, இப்ப தான் வூட்ல காபி தண்ணி குடிச்சேன்” என்றான் மதி

எப்படி பேச்சை ஆரம்பிப்பது என தெரியாமல், கண்ணில்பட்ட செடிகளைப் பார்த்து, “அப்பு இதென்ன இம்புட்டு செடி? களை எடுக்கணுமா?” எனக் கேட்க

சிரித்தவாரே, “இல்ல ராசா, ஊடு பயிரா மிளகு போட்டுருக்கோம்” என்றார் கண்ணையன்

“ஆனா மிளகு மலை பக்கம் தானே போடுவாங்க அப்பு”

“ஆமாய்யா… இப்போ சம நிலைலயும் போடறோம். நம்ம தென்னைக்கு ஊடு பயிரா போடறோம். வெத வெதச்சி ஒரு மாசம் ஆச்சு. இது ஒரு மூணு அடி செடியா வந்ததும், அப்படி கம்பு நட்டு வெச்சிருக்கோம் பாத்தியா? அந்த கம்ப சுத்தி கொடியா வளரும் மிளகுச் செடி”

“அய்யோ அப்பு அங்ஙன பாரு…” என அவன் காட்டிய திசையில் ஒரு பண்ணையாள், கம்பு சுற்றி நன்றாய் வளர்ந்த நான்கு அடி கொடியின் காம்புகளை வெட்டிக் கொண்டிருந்தான். 

மதி பதறியதைப் பார்த்துச் சிரித்த கண்ணையன், “இப்படி கணுவ வெட்டி விட்டா தான்யா கொடி நாலா பக்கமும் படரும், நமக்கும் விளைச்சல் நல்லா இருக்கும். அது மட்டுமில்லையா, விளைச்ச மொத வருஷம், இங்கொண்ணு அங்கொண்ணா பூ பூக்கும். ரெண்டாவது வருஷம், பாதி செடிங்க பூ பூக்கும். மூணாவது வருஷம், எல்லா செடியும் பூத்து காய் காய்க்கும். அய்யா மதி நம்ம வாழ்க்கையும் இப்படி தான். சில நேரம் நல்லா வளருவோம், பல நேரம் வெட்டப்படுவோம்.  நெனச்சது கெடைக்க கொஞ்சம் தாமசம் ஆகலாம். நம்மள நட்டவனுக்கு தெரியாதா எப்போ வளர விடணும், எப்போ வெட்டணும், எப்போ அறுவடை செய்யனும்னு. எல்லாத்தையும் நம்ம 18ஆம் படி கருப்புகிட்ட விடுட்டா அவரு பாத்துப் பாருய்யா. சரி வா பாண்டி தேடும்” என இருவரும் மதியின் பைக்கில் வீடு திரும்பினர்

வரும் வழி நெடுக, மிளகு செடியையும், அப்பு சொன்னதும் மனதில் அசை போட்டதில், மனம் லேசானது மதிவாணனுக்கு

தன்னோடு சுமந்து வந்த எல்லா கவலைகளும் தானாய் காணாமல் போனதாய் உணர்ந்தான்

வீடு திரும்பிய மதிக்கு, பாண்டியம்மாள் பரிமாறிய மிளகு ரசம், இதமாய் இருந்தது தொண்டைக்கும், மனதிற்கும்

(முற்றும்)

“சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

எழுத்தாளர் சஹானா கோவிந்தின் நாவல்கள் மற்றும் சிறுகதைத் தொகுப்புகளை வாசிக்க விரும்புவோருக்கு, இணைப்புகள் 👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

6 Comments

  1. அருமையான கதை எப்போதும் ஏற்ற தாழ்வுகளை சமாளிக்கத்தான் வேண்டும் . வாழ்த்துகள் சகோ . இன்னும் நிறைய எழுதுங்கள்

  2. பிரச்னை என்னனு சொல்லாமலேயே அதைத் தீர்த்து வைத்துவிட்டார் ஆசிரியர். நல்லதொரு கரு.

மடமையை கொளுத்துவோம் (சிறுகதை) -✍ தீபா.P.K – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

அம்ருத்கா ஸப்ஜி (கொய்யாப்பழப் பச்சடி) – ✍ காமாட்சி மகாலிங்கம் – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு