in ,

நதியன் (சிறுகதை) – ✍ கவிஜி, கோவை

நதியன்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 4)

நான் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இந்த மரத்தில் கத்திக் கொண்டிருக்கும் குயில் போல இருக்குமா…. குரலின் வடிவம் தான் நானா?

காக்கையின் நிறம் தான் என்னில் உதிரும் தினமா. என்னை கூப்பிடுகையில் கூட யாரோ திரும்புவது போல தான் திரும்புகிறேன். இந்த காட்டின் அகல நீளங்கள் எனக்கு அத்துபடி. அந்த வானத்தின் நீலத்தை கூட நான் எட்டி பறித்து பூசிக் கொள்வது நிகழும்.

எப்போதெல்லாம் என்னை விசிறி எறிகிறேனோ அப்போதெல்லாம் நட்சத்திரங்கள் பொறுக்குவார்கள், சுள்ளி பொறுக்கும் எங்கள் நில பெண்கள். அவர்கள் எங்கள் நிலா பெண்கள். 

கதையை சொல்வதை விட கிளைக் கதைகள் சொல்வதில் தான் விருப்பம் எனக்கு. ஆனாலும் கிளிக் கதையை ஆரம்பித்து விட்டு கிழவிக் கதையை சொல்வது சரியாகாது.

நான் என்னைப் பற்றி தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் உங்களைப் பற்றி கூட கேட்டுக் கொண்டிருக்கலாம். நாம் நினைப்பது போல இல்லவே இல்லை இங்கே இருப்பது எல்லாம்.

நீங்களும் நானும் நீங்களும் நானும் அல்ல என்பது போல தான் நம்ப வேண்டி இருக்கிறது. ஒவ்வொரு விடியலிலும் நான் அஸ்தமனம் கொஞ்சம் பூசிக் கொள்வதை விளக்க வழி இல்லை.

ஒற்றையடிகளைப் போல ரகசியமாய் நேசிக்க இக்காட்டில் வேறொன்று என்ன இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் வரும் மழைக்குள் நான் முப்பொழுதின் ரட்ஷகன்.

நனைதலின் நிமித்தம் என் நிர்வாணம் சுத்தமாகிறது. சூடாக முதுகு நெளியும் அட்டைப் பூச்சியின் குதூகலம் தான் அட்டைக்குள் நெளியும் என் நினைப்புக்கும். ஆனாலும் நான் பூர்த்தியாகவில்லை.

யார் உதிர்க்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் ஒவ்வொரு முறையும் மரத்திலிருந்து விழும் பூக்களில், இலைகளில், காய்களில்… நான் உதிர்வதாக படும் நினைப்பை நான் கூடுகளில் அடைப்பதில்லை.

கூதிர்கால குளறுபடிகளை அடிக்கடி சந்திப்பதுண்டு. ஒரு பூவை நசுக்குகையில் என் கழுத்தில் வலி ஏற்படுவதை நான் பற்கள் நெறித்துக் காட்டுவேன். காட்டுதல் என்பது என் எண்ணம். காட்டினேனா என்பதை நான் அறியேன்.

நிகழ்வதெல்லாம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை நான் மறுப்பதும் இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றை பிரித்தறிய தெரியவில்லை என்பதை மறுப்பதற்குமில்லை. ஆகவே நான் பூக்களை பறிப்பது இல்லை. 

தன்னை சிரித்து காட்டும் பூக்களை பறித்து காட்டுவது பரிணாமம் ஆகாது. கன்றுக்கு தான் பால் என்று மாட்டுக்கு தெரிய வேண்டாம், மனிதனுக்கு தெரிய வேண்டும். மட்டற்ற சிந்தனையெல்லாமே பிறகு ஒற்றை புள்ளியில் நானாகி விடுவதைத் தான் வேறு வேறு வார்த்தைகளில் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

‘மசமசன்னே இருக்காதடா’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். 

பெரியவர்களுக்கு எப்படி அதை சொல்வது. எனக்கு சொல்ல வரவில்லை. ஆனால் யாரோ சொன்னது கேட்கிறது.

இப்படி வைத்துக் கொள்ளலாம். நான் தேடுகிறேன். என்ன தேடுகிறேன். என்னைத் தேடுகிறேன். நான் இன்னொருவனாக இருக்க விருப்பம் இல்லை. அப்படி என்றால் நான் இன்னொருவனா. இல்லை என்று சொல்லத் தான் ஒரு வடிவத்தில் வர முடியவில்லை. இறுதியில் நான் எங்கு இருக்கிறேன் என்று கூட கேட்டு வைக்கலாம். 

எங்கள் குடிசைக்குள் எங்கள் ஆடுகளும் நாங்களும் எங்கள் நாய்களும் கோழிகளும், நாங்கள் எல்லாரும் பொது. கோழி எப்படி இருக்கும் என்று கோழிக்கு தெரியுமா… நான் எப்படி இருப்பேன் என்று எனக்கு தெரியாத போது நாய்க்கும் அது தானே.

நேரம் இந்த காட்டில் இல்லை. இல்லாமல் இருப்பது என்பது பற்றி இல்லை. நேரமே எப்படி இருக்கும் என்று இல்லை…. நான் உளர்கிறேன். யாரோ காதில் சொன்னதை வைத்துக் கொண்டு உங்களிடம் பிதற்றிக் கொண்டிருக்கிறேன். 

யாரோ காடென்று சொன்னால் நான் நம்பியிருக்க மாட்டேன். நானே காடென்று சொல்வதற்கும் ஒரு நம்பிக்கை தான் இடையில் காற்றாய் வீசுகிறது. பச்சையம் பூத்த பெரு வெளியில்… சிறு துளியெல்லாம் நானாகவே உருண்டது போல ஒரு தோற்ற மயக்கம். எவன் தொகுத்த வழக்கம் அறியேன்.

வண்டுகளின் பின்னால் பறப்பதை விடவும் வேறு என்ன வேலை இருக்கிறது. மலர்களை காத்துக் கொள்ள காற்றுக்கு தெரியும்…….காற்றிலும் கள்வன் உண்டென மலருக்கும் தெரியும். 

மனதுக்குள் அசையும் திசைகளை கடந்து, சில போது நான் மலை ஏறி களைத்து உச்சியில் அமர்ந்து  சூரியன் பிடித்துக் கொண்டிருப்பது உங்களுக்கும் வேடிக்கை தான். ஆனாலும் நிமிர்ந்த முகத்தில் சூரியன் தான் இருந்தான் நான் இல்லை. 

எத்தனை சமாதானம் சொல்லிக் கொண்டாலும், நான் சோர்ந்து தான் அலைகிறேன்

“என்னனு சொல்லி தொலை” என்று கருமியன் தாத்தா கூட கேட்டார்.

“நான் என்னை மாதிரி இருப்பனா, உன்னை மாதிரி இருப்பனா?” என்றேன்.

வேர்க்கடலையை ஊதி ஊதி உள்ளங்கையில் உலர்த்தி வாய்க்குள் போட்டபடி, ஈயென பார்த்த கருமியன் தாத்தாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. யாரோ மாதிரி பார்த்தார். அப்படி பார்ப்பது சுலபமாக இருந்தது அவருக்கு

யாருக்கும் யார் மாதிரி என்ற கேள்வியே புதிதாக இருந்தது

வேட்டைக்கு செல்வதை வேண்டுதல் செய்வது போல செய்த எங்களுக்கு, நாங்களே வேடிக்கை தான். சாவதை போலவே வாழ்வதையும் எடுத்துக் கொண்டோம். அதுவரை எல்லாம் சரி தான்.

கொஞ்ச நாட்களாகத்தான் நான் இப்படி இருக்கிறேன். இது எங்கிருந்து முளைத்தது என்று தெரியவில்லை. ஓட்டை வழியாகத் தான் இந்த பூமியை பார்ப்பது போல இருக்கிறது.

என்ன ஆச்சரியம். கண்களை மூடிக் கொண்டால் பூமி அடைபட்டுக் கொள்வது. பூமியின் கதவுகளை அடைத்து மூடுவது… மூடித் திறப்பது மிக சுலபமான செயல். அதனால் தான் எல்லாரும் செய்கிறார்களோ

திடுமென இருண்டு விடும் எல்லாமும் சுழல மறுக்கும் சூத்திரம் என்கிறேன். மெய் மறந்து செத்து செத்து மீள்வதை மீண்ட பிறகு கடுமையாக நினைத்துக் கொள்கிறேன். தூங்குகையில்… மரணம் கண்ட சுகம் சொல்வதற்கில்லை……சொக்கி சரிவதற்கு.

மரம் ஏறி கிடைத்ததை தின்று விடுகிறேன். ஆனாலும் தலைக்குள் எதுவோ பசி. கேள்வியே தெரியாத போது அதன் தீர்வை உங்களிடம் எப்படி நான் கேட்பேன். நீங்களே நான் எதற்கு அலைகிறேன் என்று சொல்லுங்களேன். நீங்களே என்னை சரி செய்து விடுங்களேன். 

முடியாது. 

இன்னொருவனை இன்னொருவன் சரி செய்து விடவே முடியாது. நான் குழப்பத்தில் இருக்கிறேன். அதனால் தான் தெளிவாக பேசிக் கொண்டிருக்கிறேன். நம்பாத தூரத்தில் நிலவொளியை விரட்டிப் பிடித்து விளையாடுகையிலும் நான் காரியத்தில் கண்ணாகத்தான் இருக்கிறேன். இருக்க வேண்டும்.

வழி வழியாய் உருவான மனித வாசம் இது. அதை சுவாசிக்காமல் விட்டு விட்டு மேகம் பிடித்து விளையாடி என்ன பயன். இயற்கை எனது அரண். அந்த வானம் தான் இங்கே பூமியாக படந்திருக்கிறது. எல்லாம் வட்டம் தான். திட்டம் போட்டதெல்லாம் என்னை போல உங்களை போல ஒரு கூட்டமோ தான். ஒன்று கிடைக்காத போது இன்னொன்றை பிடித்துக்கொண்டு அலைவது மானுட சுகம். 

ஆனாலும் நான் மறுதலித்து மேலெழும்புகிறேன். மேற்சொன்ன எல்லாமும் தான் இனி சொல்வதும். 

இடையில்…. என்னை பிடித்து வந்து நிறுத்தி விட தான் இத்தனை முயக்கம். 

என்ன தான் வேண்டும்… உள்ளே துள்ளும் வடிவத்தை ஒரு நேர்த்தியோடு வெளிக்கொணர பார்க்கிறேன். வார்த்தைகளில் எப்படி அது சாத்தியம். இங்கே விழும் வாக்கியங்கள் கூட என் வசதிக்கு… வருங்காலம் வடிக்கும் பரிணாம கற்பனை தான்.

மற்றபடி என் சிந்தனைக்கு சொற்களை இப்படியெல்லாம் வளைத்து சொல்ல எனக்கு அறிவில்லை. நான் இறந்த காலத்தில் இருக்கிறேன். வெகு தூரத்தில் நீங்கள் கற்பனையிலும் காண முடியாத உங்கள் முப்பாட்டனின் முப்பாட்டனின் முப்பாட்டனின் காலத்தில் இருக்கிறேன்.

மூன்றாம் தலைமுறையே தெரியாத மிருக வகையில் கொஞ்சம் மினுக்கிக் கொண்டு திரியும் வகைமை தான் நான். உடல் மூலமாகத் தான் ஒருவனின் இருத்தலை நிரூபிக்க முடியும் பழம் பெரும் சிந்தனை இது.

உடலின் உட்பகுதியில் இயந்திரம் இருக்கிறது. பழகிக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொருவராய். நெடுங்காலமாய் வந்து கொண்டிருக்கும் ஒரு நெடுந்தொடரின் நேர்த்தியை எதன் வழியே ஆராய வேண்டும் என்று தான் பிடிபடவில்லை.

என்னைப் பற்றிய ஆர்வம் என்னிடம் இல்லை. என்னில் இருக்கும் எதன் பற்றியோ தான் அது. நான் உருவத்தில் தான் இருக்கிறேனா என்று தெரியவில்லை. உள்ளத்தில் உருளுவதை உணரவும் தடுமாறுகிறது. சரியான கேள்வியை பின் தொடர்கிறேனா என்றும் தெரியவில்லை. 

சரிக்கு நிகரான பதில் கிடைத்து விடுமா என்றும் தெரியவில்லை. நேற்றையும் இன்றையும் என்னிடம் எப்படி கண்டு பிடிப்பது. என்னை அளப்பது எப்படி… இல்லை.. இப்படி கேட்கலாம். நான் யார்…. எனக்கு கொம்பு முளைத்தது போல பார்க்கும் அணில் குட்டிகள்.

முன்னம் பற்களில் கொட்டையை சுரண்டி பார்த்து இன்று உண்ணவா நாளை உண்ணவா என்று யோசித்துக் கொண்டிருந்ததை நான் அறிவேன். அணிலே உன் முதுகில் மூன்று கோடுகள் உண்டு. ஐந்து கோடுகள் கொண்ட உங்கள் இனம் பற்றியும் நான் அறிவேன். என்னை நீ அறிவாயா?

நான் அணில் பாஷையில் பேசினேன். அதற்கு புரியவில்லை. மறதிக்கு மறுபெயர் அணில். மாற்றி யோசித்த போது மரமேறி ஒளிந்து கொள்ள தோன்றியது. 

நாட்கள் கடந்து கொண்டே இருந்தது. நான் நடப்பதினால் தான் நாட்கள் நகர்கின்றன என்று நினைத்து இரண்டு நாட்கள் புதருக்குள் மறைந்திருந்து பார்த்தேன். நெஞ்சுக்குள் மரம் முளைத்தது போல மூச்சு விட சுலபமாக இருந்தது. விட்ட மூச்சில் பல கிளைகள் அசைந்தன. சித்திரத்தில் நின்று பார்த்தேன். சீக்கிரத்தில் விடித்திருந்தது. 

சில போது குரங்காகி தாவி பார்த்தேன். உள்ளே யாரோ சூனியம் வைத்தது போல நெற்றியில் அந்த கேள்வி நமநமத்துக் கொண்டே இருந்தது. யாரிடமாவது கேட்கலாம் என்றால், என்னவென்று கேட்பது. கிறுக்கு பிடித்தால் கூட தப்பித்துக் கொள்ளலாம் போல.

கிளைக்கு கிளைக்கு தாவுதல்…. மாட்டிக் கொண்ட மானுடம் தான் போல. பாம்பாகி ஊர்ந்த போதும் நன்றாக ஊர்வது தான் பழக்கமானதே தவிர பாதி மண்டையில் நிறைந்திருந்த மீதி வடிவத்தை காண முடியவில்லை.

அடிவயிறெல்லாம் அனல் பறக்கும் அரூப மணற்பரப்பில் சருகுகள் நொறுங்க கடந்து செல்வது காலம் விட்டு காலம் போவது போல அத்தனை பிரகாசம்….மினுமினுப்பு….எல்லாம் சரி. மீந்தவைகளின் அன்றைய மிச்சமென ஒவ்வொரு பகலும் இரவுக்கு அலைவதை, ஒவ்வொரு இரவும் பகலுக்கு அலைவதை வேடிக்கை பார்க்கும் நான், ஒரு நாய் வாலைப் போல திரும்பிக் கொண்டே இருக்கிறேன்.

உடல் முழுக்க திரும்பினாலும் நான் வாலில் ஒளிந்து கொண்டிருப்பதை நினைக்க நினைக்க நித்திரை இல்லை. எத்தனை குனிந்து பார்த்தாலும் நிமிர்ந்து பார்த்த மாதிரி இல்லை. எல்லாம் தலைகீழ் தத்ரூபங்கள் தான். தவமைப்பை கண்டுபிடித்து விடும் நோக்கம் ஈயென சிரித்துப் பார்த்து அமைதியாகி விடுகிறது.

நான் என்ற ஒன்றை நான் அறிந்ததே இல்லை. எப்போதும் அறிந்ததும் புரிந்ததும்…நாங்கள் தான். ஒவ்வொரு முகமும் அது மற்றவர் முகம். மற்றவருக்கும் அது மற்றொரு முகம் தான். தலையை எத்தனை திருப்பினும் திரும்புதல் தொடர்கிறதே தவிர திரும்பியதை காணோம். 

தோளில் ஒரு சிறு பூமி இருக்கிறது என்று வியாக்கியானம் வேறு. துவண்டாலும் இருள் சூழ்ந்த பிரகாசம் வரும் என்று வித்தைகள் நூறு. நிழலில் நுழைந்து விட தத்தளித்த ஒவ்வொரு முறையும்…. நிழலும் தத்தளித்து முறையிட்டதை நான் பாறையில் படுத்து கனா கண்டேன். ஆனாலும் காண்பவனைக் காணவில்லை. எல்லாரும் இருக்கும் இடத்தில் நான் மட்டும் இல்லை. நான் இருக்கும் இடத்தில் எல்லாரும் இருக்கிறார்கள். 

உண்டு உறங்கி அதுவாகவே இருக்க வாய்க்கவில்லை எனக்கு. நான் மரங்களில் ஏறிப் பார்த்தேன். மரமாகவே நின்று பார்த்தேன். இலைகளின் வழியே காற்றினில் பறக்க தெரியும். சருகுகள் சொரிய சுகம் காணும் எனது உள்ளங்கால்கள். உண்மையில் மண் பூசி திரியும் மாங்கொட்டை வடிவத்திலும் நான். என் முதுகறியும் எனக்கு என் முகமறியாத துக்கத்தை இன்னமும் நீட்டி முழக்கி சொல்ல வேண்டுமா. 

“நதியன்…….நீ தான் இந்த காட்டுக்கே ராஜா” என்று இலையாள் சொல்கையில்….

“சரி” என்று கேட்டுக் கொண்டாலும், “சாட்சி எங்கே என்பேன்.  

அவள் என்னைக் காட்டினாலும், நான் அவளைத் தான் காண்கிறேன். என்னை அல்ல.

நான் கேட்பது என்னைத் தான். என்னென்னவோ செய்து பார்த்தார்கள். சொல்லி பார்த்தார்கள்.

“இது தானே வழக்கம். புதிதாக என்ன பூச்சு கேட்கிறாய்” என்றார்கள்.

“புதிரோடு இருப்பது புதருக்குள் இருப்பது” என்றேன்

“புத்தி பிசகி விட்டது” என்றார்கள்

“பூத்து விட்ட முளை விடுதல் மூளையின் ஓரத்தில்” என்றேன். 

“போய் பொழப்ப பாரு” என்றார்கள். என்னையே பிளந்து பார்த்து விடத்தான் பேராசை.

“சரி தான்… தலை குனிந்தே கவனமற்று வாழ பழகினோர் நீங்கள். மீண்டும் உண்டு உறங்கும் அதுவாகவே இருக்க இயலாது” என்று உரக்க கத்தி விட்டு இல்லாத ஒற்றையடியில் இறகாக்கினேன் பாதங்களை. இல்லாத வழியில் இசை இருக்கிறது. கேட்கிறது.

நடந்து நடந்து ஆற்றங்கரைக்கு வந்து விட்டேன். 

காட்டாறு காது பொத்தி வேட்டையாடி போகும் வழக்கத்தில் இது புதிதாக இருந்தது. மெல்ல பூனை நடை பழகியது நதி. போவதே தெரியவில்லை. போதை தான்.. தெளியவில்லை போல.

பிற்காலத்தில் பிக்காஸாவோ வான்காவோ வரையப்போகும் ஓவியத்தில் அமர்ந்திருந்தேன். எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை. மனதுக்குள் இலைகள் விழுந்து கொண்டே இருந்தன.

பச்சை வண்ணம் தாண்டியும் மிச்ச வண்ணங்களும் தான் இலைகளின் முதுகில். தலைக்கு மேல் முளைத்திருந்த மரத்தில் அசைவில்லை. ஆசையே இல்லை என்பது போல. 

அதற்கு மேல் நிலைத்திருந்த வானத்திலும் விசை இல்லை. இடையே மேகத்தின் பெருமூச்சு மட்டும் ‘நுண் பகல்’ என்றது காட்சியை. பூமி சுழலுவதை விட்டு என்னை ஒளிந்து நின்று பார்ப்பதை உணர முடிந்தது.

நியூட்டன் என்றொரு ஆப்பிள் மனிதனின் முந்தைய வெர்சன் தான் நானோ. அத்தனை தீர்க்கத்தில் அந்த கண்டுபிடிப்பு நிகழ்ந்தே ஆகவேண்டும் என்று தான் தவத்தில் அமர்ந்திருக்கிறேன். திகைத்த எல்லாமும் ஒதுங்கி சென்றது. ஒரு முக்கோண வெளியில்… மூச்சடக்கி காண்கிறேன். 

என் கண்களில் மினுமினுப்பு ஜொலி ஜொலிக்க……..நதியில் தக தகப்பு, தவிப்பின் ஜுவாலை என சூரிய குளியல் நிகழ்கிறதோ

“வா வந்து பார்” என்று வான் முட்டிய நதியின் வளையா வனப்பு இழுத்தது.

மனதுக்குள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்த காட்டின் கூக்குரல்கள் சடுதியில் உடல் மூடி அமைதியானது. நான் பிறந்ததிலிருந்து இந்த காட்டில் இப்படி ஓர் அமைதியை நான் கண்டதே இல்லை.

‘எல்லாமும் இல்லை ஆதலால் நீ தான் எல்லை’ என்று உள்ளே தெளிவான குரல். சலனமற்ற தெளிவின் வடிவத்தில் ‘போ’ என்றது.

நான் நதியை நெருங்கினேன். கண்களை நெருக்கினேன். நின்று ஒரு கடவுளின் தோற்றத்தோடு ஆழமாய் என்னை சுவாசித்தேன்.

நதியில் அசைவில்லை. நின்று காத்திருக்கிறது போல. 

இதுவரை இப்படி அசையாத நதியை நான் பார்த்ததே இல்லை. குளிப்போம். மீன் பிடிப்போம். நீர் களைப்போம். நீந்துவோம்… மீந்து வெளியேறுவோம். அவ்வளவே. 

இன்று இப்போது இந்த ஸ்தம்பித்தல் சக்கரமற்ற காட்டை காட்டுகிறது. ஒரு பக்கம் சூரிய கதிர்கள் நீரில் குளிர்ந்து கொண்டிருந்தன. ஒரு பக்கம் நெடுங்கால வாசத்தோடு நான்…….துளிர்த்துக் கொண்டிருந்தேன்.

மனதில் சற்று முன் வரை இருந்த அலைகள் இல்லை. சட்டென நடுக்கடலின் அமைதி. 

நான் நதியை எட்டி பார்த்தேன். சூரியன் மினுங்கும் ஜொலி ஜொலிப்போடு பளபளக்கும் நதிக்குள் இன்னதென தெரியாத வண்ணத்தில் என் முகம் தெரிந்தது. என் உடல் தெரிந்தது. இப்படி நான் பார்ப்பது இது தான் முதல் முறை. 

இன்னும் உற்று பார்த்தேன். உள்ளே பொங்கிய எதுவோ பூரித்து ஆழமாய் பார்க்க சொன்னது. பார்த்துக் கொண்டே இருந்தேன். பார்த்த நொடியில்….. நேரம் கிடைத்தது போல… மண்டைக்குள் மணி அடித்தது. 

இதுவரை தேடிக் கொண்டிருந்த நான்……இது தானா என்று உள்ளே பூத்த பெரும் பூதம்……..பற்கள் விரித்து பலமாக சிரித்தது.

தான் என்பது இப்படித்தான் இரு கண்களோடு ஒரு மூக்கோடு புடைத்த கன்னங்களோடு சுருங்கிய நெற்றியோடு மீசை முளைத்த ஒரு சிறு பாறையில் செதுக்கிய வடிவத்தோடு தான் இருக்குமா….

நான் குனிந்து என் முகம் விழுந்த நீரையே பார்த்துக் கொண்டிருந்தேன். எத்தனை நேரம் என்று தெரியவில்லை. அத்தனை நேரமும் பேரார்வம் தான். சிரித்து பார்த்தேன். அதிசயத்து பார்த்தேன். ஆச்சரியத்தோடு பார்த்தேன்

என் இரு கைகளும் நீர் கொண்ட முகத்தை அசையாமல் தடவின. நீருள் அவன் செய்வதெல்லாம் நான் செய்கிறேனா… கரையில் நான் செய்வதெல்லாம் அவன் செய்கிறானா.

ஆனால் அவன் தான் நான் என்று உணர முடிகிறது. இத்தனை நாட்கள் தேடி அலைந்த கேள்வி கிடைத்து விட்டது. நன்றாக குனிந்து பார்த்தேன். கண்களை அகலமாக திறந்தேன்.

தலையை இடது வலதென்று அசைத்து பார்த்தேன். எல்லாம் சரியாக இருந்தது. இதுவரை நான் பார்த்தே இராத என்னை கண் குளிர பார்த்தேன். நான் இன்னொருவன் இல்லை என்ற என் வடிவத்தை பார்த்து விட்டேன். இதைத்தான் இத்தனை நாட்களாக தேடி அலைந்திருக்கிறேன். நான் உணரும் நான் தான் நான். சுயம் முளைக்கும் சில்லிடல் பிம்பத்தின் வழியே முகத்தில் பாய்ந்தது.

எதிரே இருப்பவர் முகம் தான் தனக்கு என்று இனி நம்ப தேவை இல்லை. நான் இன்னொருவன் இல்லை. நான் கூட்டத்தில் இல்லை. நான் தனியன். நான் தான் நான் என்று முகத்தை தடவிக் கொண்டே அங்கிருந்து திரும்பி காட்டுக்குள் ஓட துவங்கினேன். இந்த காட்டில் இனி நான் தான் முதல் மனிதன்.

ஊருக்குள் சென்று எல்லாரையும் அழைத்து வந்து நதியில் காட்ட வேண்டும். அவரவர்க்கு தனி தனி முகம் இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டும். நம்மை கூப்பிட்டால் இனி நாமே திரும்பலாம் என்று கத்தி சொல்ல வேண்டும். 

அதுவரை அசையாமல் இரு… நதியே… நீ தான் எங்கள் முதல் கண்ணாடி

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad – தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

5 Comments

 1. அற்புதமான சொல்லாடல்…
  ஒரு பெரும் கவியின் கவிதை
  நிஜமாய்
  உறைந்து
  உரைநடையில்,
  சிறுகதையின் நிழலாய் உருவாக்கப்பட்டுள்ளது..
  அருமை நண்பரே

 2. Sorry, that the story neither reflects a real/practical life nor impacts with a different think. Couldn’t cope up with the feel which the story teller trying to convey. Felt like something artificial. Sorry don’t take it as a negative feedback. Just felt so.

 3. முகம் பார்க்கும் கண்ணாடியாக நதியை அப்படியே நிற்கச் சொன்ன கற்பனை ரசிக்க வைக்கிறது.

  இளவல் ஹரிஹரன்

உறுத்தல்… (சிறுகதை) – ✍ சந்துரு மாணிக்கவாசகம், மாங்காடு, சென்னை

முடியாத பாதைகள் (சிறுகதை) – ✍ வித்யசுகி, வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்