in ,

முடியாத பாதைகள் (சிறுகதை) – ✍ வித்யசுகி, வாணியம்பாடி, திருப்பத்தூர் மாவட்டம்

முடியாத பாதைகள்
இந்த போட்டிக்கான சிறப்புப் பரிசுகளை வழங்குபவர்கள், Madhura Boutique நிறுவனத்தார். அவர்களின் https://madhuraboutique.in/ என்ற தளத்திற்கு சென்று, உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கு பரிசு தரவோ, தரமான புடவைகள், வெள்ளி நகைகள், ஜெர்மன் சில்வர் நகைகள் பெற்றுக் கொள்ளலாம்

சிறுகதைப் போட்டி 2021 (கதை எண் 5)

மீனாவிற்கு யாரிடம் போய் கேட்பதென்றே தெரியவில்லை

‘இவ்ளோ தூரம் வந்துட்டோம். இடத்தைக் கண்டுபிடிச்சிட்டா எப்படியாவது கைல கால்ல வுழுந்தாவது கொணாந்து சேர்த்துடுவேன்’ என சுற்றும் முற்றும் தேடியவாறே நின்றாள்

அவள் விழித்துக் கொண்டு நிற்பதை பார்த்த அங்கிருந்த கடைக்காரர், “எங்க’மா போகணும்? பஸ் இறங்கி அரைமணி நேரமா முழிச்சுட்டு நிக்கிற” 

“எனக்குப் பேர் தெரியலைங்கய்யா, அப்பா இல்லாத புள்ளைங்களை தங்க இடம் குடுத்து படிக்க வைக்கிறாங்களாமே, அந்த இஸ்கூலுக்கு போகனும்” எனவும்

“ஏம்மா அது அடுத்த ஸ்டாப்பிங்ல இல்ல இருக்கு, கண்டக்டரை கேட்டிருந்தா சொல்லியிருப்பாரே. இருங்க இப்போ டவுன் பஸ் வரும். அதுல ஏறி அடுத்த ஸ்டாப்பிங்ல இறங்கி சோத்துக்கை பக்கமா நடந்தா மஞ்சக் கலர் பில்டிங், பெரிய கேட் போட்டிருக்கும்” என்றார் அவர்

“சரிங்கய்யா” என கைகூப்பி நகர்ந்தாள்

இருபத்தி நாலு வயசு மீனா, ஒல்லியாய் பார்க்க சின்னப் பெண்ணாய் தெரிந்தாள்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும், பழைய நினைவில் மூழ்கினாள் மீனா

‘படுபாவிங்க ஒழுங்கா விசாரிக்காம இந்த குடிக்கார கூட்டத்துல தள்ளிட்டானுங்க. கட்டைல போறவனுங்க இவனுங்க குடிக்காம இருந்தாத் தானே இது தப்பாத் தெரியும்’என புலம்பியவள் ஒரு நாள் கணவனின் அடிதாங்காமல், அப்பாவிடம் போய் அழுது கொண்டே நின்றாள்

“டேய் பெரியவனே இப்போ எவன்டா குடிக்காம இருக்கான், போய் கட்டிக் குடுத்த இடத்தில் வாழ்ற வழியைப் பார்க்கச் சொல்லுடா. சரி வந்தது வந்துட்டா, அந்த கருப்பியை அறுத்து பொங்கிப் போட்டு அனுப்பச் சொல்லு மருமகக்கிட்ட” என்றார் சாதாரணமாய்

“ஆமா உங்க கோழிக்கறிக்கி ஏங்கிப் போய் தான் வந்திருக்கேன். இதுக்கு என்னை உயிரோட புதைச்சுருக்கலாம். நீங்க நல்லா இருக்க மாட்டீங்கடா நாசமா தான் போவீங்க” என மண்ணள்ளித் தூற்றி படியிறங்கினாள்

ஓடி வந்து தடுத்த அவளின் அண்ணி “வேணாந்த்தா… வீட்ல பொறத்த பொறப்பு மண்ணள்ளி தூத்துனா அப்படியே பலிக்கும்னு சொல்லுவாங்க. வா மீனா ஒரு வா சாப்பிடு, அப்புறம் பேசுவோம்” என சமாதானம் செய்தாள் குணவதி

“விடு என்னை, அன்னிக்கு நீயும் தானே இவனுங்களோட போன. அக்கம் பக்கம் விசாரிச்சிருந்தா எனக்கு இந்த நெலம வந்திருக்குமா” என மீனா சாட அதிர்ச்சியோடு பார்த்தாள் அண்ணி

‘அண்ணி என்ற வார்த்தையைத் தவிர என்றுமே மரியாதைக் குறைவாக பேசாதவள், இன்று இப்படி பேசுகிறாள். அவளின் ஆற்றாமை பேச வைக்கிறது பாவம்’ என மனதை சமாதானம் செய்து கொண்ட அண்ணி, “சரி இந்தா இந்த டீத்தண்ணியக் குடி” எனவும், படீரென்று தட்டி விட்டாள்

“நான் போறேன், இனி நான் செத்தா எனக்கு கோடித் துணி கூட எடுத்தாரக் கூடாது. இன்னியோட உங்க உறவு அத்துப் போச்சி. பாவிங்களா அப்பனும் மகனும் சேர்ந்து சாராயக்டைல மாப்பிள்ளைப் பாத்துட்டு வரும் போதே அடிச்சிகிட்டேனே. இப்படி பண்ணிப் புட்டானுங்களே” என அங்கலாய்த்தாள்

மீனாவின் அண்ணனும் அப்பாவும் ஜல்லி உடைக்கும் கம்பெனியில் வேலை செய்கிறார்கள். வாங்கும் கூலியில் பாதி, சாராயக் கடைக்கு தான் போகும். சாராயக்கடையில் பழக்கமானதில் சம்மந்தம் பேசி முடித்து விட்டார்கள். 

மீதியை வைத்து தான் குடும்பத்தை ஓட்டினாள் குணவதி. மீனா பதினெட்டு வயது நிரம்பிய பெண் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் பள்ளி சிறுமி மாதிரி தான் இருந்தாள். தாயில்லா பெண், அண்ணி வந்தவுடன் அரவணைத்துக் கொண்டாள். ஏதோ எழுதப் படிக்கத் தெரிந்திருந்தாள். 

வீட்டிலிருந்தே வத்தி தேய்க்கும் வேலை செய்தாள் குணவதி. மீனாவிற்கு ஒரு இடத்தில் அமர்ந்து செய்ய வளையாமல்  வயல் வேலைக்குப் போவாள். ஆட்களோடு சிரித்துப் பேசி கேலியும் கிண்டலுமாய் நகர்ந்த வாழ்க்கையில் சூறாவளியாய் வந்து சுழட்டிக் கொண்டு அள்ளிப் போனான்  குடிக்காரன் தர்மன், கல்யாணம் என்ற பெயரில் 

அவனோடு  மல்லுகட்டி முடியாமல் தவித்தாள் மீனா. இங்கேயும் அப்பன் மகன் வித்யாசமில்லாமல் குடித்துப் புரண்டார்கள். 

‘கூலி வேலை என்றாலும் குடும்பத்தில் சந்தோசம் பொங்க வாழ ஆசைப்பட்டேனே. இவனுங்க சாராயம் குடிக்கிற இடத்துல இல்லே சம்பந்தம் பேசியிருக்கானுங்க’என மருகினாள்

புகுந்த வீட்டிற்கு வந்த முதல் நாளே தன் கை வரிசையைக் காட்டினான் தர்மன். இருந்த ஒற்றை அறையில் தந்தை ஒரு பக்கம் போதையில் விழுந்திருக்க, இவளை அழைத்தான். பயந்து  வெளியே செல்ல முயற்சித்தவளை எட்டிப் பிடித்து இழுத்து தள்ளினான் 

கொஞ்சமும் லஜ்ஜையின்றி, தந்தை அருகில் இருப்பதை கூட பொருட்படுத்தாது, தன் தேவையை தீர்த்துக் கொண்டு, மனைவியை எட்டி உதைத்து விட்டு உறங்கிப் போனான். 

அருவருப்பில் பயத்தில் பச்சாதாபத்தில் கதறினாள் மீனா. செத்த பிணம் போல் மாமனார் போதையில் உறங்கிக் கொண்டிருக்கக் கண்டு, மனம் வெறுத்தாள்

புழக்கடையில் இருந்த பிளாஸ்டிக் குடத்து நீரை தலையிறங்க கொட்டிக் கொண்டவள், அங்கேயே அமர்ந்து அழத் தொடங்கினாள். 

தினமும் இந்த கூத்து அரங்கேறவும், ஒரு நாள் தூக்கு மாட்டிக் கொள்ள புடவையைமின் விசிறியில் மாட்டியவள், ஒரு குடத்தை கொண்டு வந்து கவிழ்த்து விட்டு, அதன் மேல் ஏறி மாட்ட முயலவும், கனம் தாங்காமல் குடம் கவிழ, குப்புற விழுந்தாள் 

எழமுடியாமல் தவிக்க, அதற்குள் கதவைத் தட்டி ஆர்பாட்டம் செய்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்த மீனாவின் கணவன், இவள் நிலையைப் பார்த்து புடவையை உருவி வீசி, அந்த நிலையிலும் அடித்தான்

“ஏன்டி என்னை போலீசில் மாட்டிவுட பாக்கறியா?” என எத்தித் தள்ளினான்

வலியில் இவள் அலறவும், பக்கத்து வீட்டில்  இருந்த விஜயா ஓடி வந்து மீனாவைத் தூக்கி நிறுத்தி, அவள் கணவனை திட்டித் தீர்த்தாள். 

அவனுக்கு போதையெல்லாம் இறங்கி விட்டிருந்தது. 

“ஏண்டா தர்மா புள்ளத்தாச்சிப் பொண்ணைப் போட்டு இந்த அடி அடிக்கிற?” என விஜயா கேட்க

“என்னாக்கா சொல்றே? புள்ளத்தாச்சியா?” என தர்மன் அதிர்வுடன் கேட்க

“ஏன்டா நாலு மாசமாச்சே, தெரியாதா உனக்கு?” என சாடியவள், “ஏன் மீனா நீ சொல்லலையா? என மீனாவிடம் கேட்டாள்

“சொல்றத கேக்கற நிலமையிலா அக்கா அப்பனும் மகனும் வீட்டுக்கு வர்றாங்க. அக்கா இவன், அவங்கப்பன் முன்னாடியே என்னை…” என்றவள், சத்தமாக கதறி அழுதாள். 

விஜயாவுக்கு கோபத்தில் என்ன சொல்வதென்றே புரியாமல் மீனாவின் மாமனாரை வார்த்தைகளால் விளாசினாள்

“ஏய்யா அறிவில்ல உனக்கு, வெளிய படுக்க வேண்டியது தான? த்தூ” என துப்பினாள்

“இல்ல விஜயா, போதைல ஒண்ணும் தெரியறதில்ல. காலைல தெளிஞ்சப்புறம் நாளைக்கு வெளில தூங்கனும்னு நினைப்பேன். ஆனா போதையேறினதும் எங்கே இருக்கேன்னே தெரியாது” என்றவன், மருமகளைப் பார்த்து கை கூப்பினான்

“என்னை மன்னிச்சிடு தாயி, நான் வேணுமின்னு பண்ணலை. சாராயம் குடிச்சாத் தான் தோல் கழிவுத் தொட்டியில் எறங்கும் போது நாத்தம் தெரியாது. இல்லேன்னா அதுல எறங்கி சுத்தம் பண்ண முடியாது. அதனால தான் நாங்க ரெண்டு பேருமே தண்ணியடிக்க ஆரம்பிச்சோம். அதுவே பழக்கமாப் போச்சி. இதுக்கு மேல வேற வேலைக்கும் போக முடியாது” எனவும்

“இதெல்லாம் ஒரு சாக்கு” என முணுமுணுத்த விஜயா, ஆனாலும் ‘தோல் தொழிற்சாலையின் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் இவர்களைப் போன்றவர்களுக்கும் இது தான் நிலை’ என நினைத்துக் கொண்டாள்

றுநாளில் இருந்து, மீனாவே மாமனாரை இழுத்து திண்ணையில் படுக்க வைத்தாள். பிரசவ நேரத்தில் அண்ணி துணைக்கு வர, சேர்க்க மறுத்து விட்டாள்

விஜயாவின் துணையோடு குழந்தைப் பெற்றுக் கொண்டு புகுந்த வீட்டிற்கே மீனா வரவும், கடுப்பாகிப் போனான் தர்மன்

“ஏன்டி குழந்தைக்கி சீர் வாங்கக் கூட போக மாட்டியா?” என தர்மன் கத்த

“ஆமா… அது மட்டுந்தான் கொறை இப்ப? வெள்ளி அருணாக்கொடி கொணாந்து குடுத்தவுடனே சாராயக்கடைக்கு  போறதுக்கு சீர் ஒரு கேடு. இங்கப் பாரு, எனக்கு அப்பன் வூடு கிடையாது. போய் உன் வேலையைப் பாரு” என்றாள் மீனா பதிலுக்கு

ஒரு வாரம் கழித்து மீனாவின் அப்பாவும் அண்ணனும் குழந்தையைப் பார்க்க வர, வந்தவர்களை உள்ளேயே விடாமல், அவர்கள் கொண்டு வந்த பையை தூக்கி வெளியே வீசினாள் மீனா

அரிசி காய்கறி  சட்டைத்துணி அனைத்தும் தெருவில் இறைந்தது. விக்கித்து போய் நின்றார் மீனாவின் அப்பா

“தாயி…”

“யாருக்கு யாரு தாயி? நான் அனாதை, எனக்கு யாருமில்லை. நீங்க போகலாம்” என்றவள், இத்துப் போன கதவை இழுத்து மூடினாள். 

கண்ணீருடன் திரும்பியவர்கள், மீண்டும் அவளைத் தேடி போகவேயில்லை. 

“நல்லவேளை மீனா, ஆம்பளப் புள்ளைய பெத்துருக்க, எப்படியோ இதை வளர்த்து ஆளாக்கிடு, உனக்கு விடிவுகாலம் பொறக்கும்” என விஜயா ஆறுதலாய் கூற

“நீ வேற விஜயாக்கா, பொட்ட புள்ளையா இருந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பேன். ஹ்ம்ம்.. இன்னொரு குடிக்காரன இல்ல பெத்திருக்கேன்” என விரக்தியாய் கூறிய மீனாவை அதட்டினாள் விஜயா

“ஏன் மீனா இப்படி பேசற? நம்ம கைக்குள்ள வெச்சு வளத்தினா புள்ள நல்லா தான் வளரும்” எனவும் 

“பாப்போம் விஜயாக்கா” என்றாள் சலிப்பாய் 

கன் வளர்ந்து பள்ளி செல்ல ஆரம்பித்ததும், தானும் தோல் தொழிற்சாலைக்கு பணிக்கு செல்ல ஆரம்பித்தாள் மீனா 

வேலைக்கு செல்ல ஆரம்பித்ததும் நடை உடையில் மாற்றம் வந்தது, ஆளும் சற்று நன்றாக இருந்தாள். தன் தேவைகளை தானே பார்த்துக் கொண்டாள் 

ஆனால் தர்மனுக்கு அது பிடிக்கவில்லை 

‘தன் கையை எதிர்பார்த்து இருத்தவள் அவள் இஷ்டத்திற்கு இருக்கிறாள், தன்னை மதிப்பதில்லை, இவளை அடக்கியே வைக்கனும்’ என நினைத்தான்   

“நாளைக்கிருந்து நீ கம்பெனிக்கு போகக் கூடாது” என்றான்  

“ஏன்?” என மீனா கேட்க  

“கூடாதுன்னா கூடாது, இப்படி மினுக்கிட்டுப் போய் சம்பாதிக்கணுமா? கண்டவன்கிட்ட பல்லைக் காட்டிட்டு நிக்கணுமா? இனி போகக் கூடாது” என கை ஓங்கிக்கொண்டு அடிக்க வந்தான் 

அவனின் ஆவேசத்தில் பயந்து பின் வாங்கியவள், கணவனின்   அடிக்கு பயந்து வேலையை விட்டு நின்றாள்

மீண்டும் பழைய குருடி கதவைத் திறடி என வறுமையில் உழன்றாள். 

“கிராமத்துல இருந்தாலாவது வயல் வேலைக்கு போலாம். இந்த நாத்தம் புடிச்ச எடத்துல என்ன பண்றது” என மனம் நொந்தாள் 

சற்று நேரத்தில் வந்த விஜயா , “வீட்லயே கொண்டு வந்து தர்றாங்களாம், கேன்வாஸ் ஒட்ட. பீஸ் ரேட் தான், ஒட்டறியா மீனா” எனக் கேட்க 

“சரிக்கா வாங்கிக் குடுங்க” என்றாள் மீனா 

இரண்டு நாள் கேன்வாஸ் ஓட்டும் வேலை தொய்வின்றி நடக்க, அதை அறிந்ததும் அடித்தான் தர்மன்

“பணம் பார்த்துட்டா உனக்கு கொழுப்பு ஜாஸ்தியாயிடும். நான் குடுக்கறத வச்சி குடும்பம் நடத்து போதும்” என்றான் கோபமாய் 

தைரியம் இழந்த நிலையில் ஒடுங்கிப் போனாள் மீனா 

ருநாள் விஜயாவின் கணவன் வந்து மீனாவை அவசரமாய் அரசு மருத்துவமனைக்கு அழைக்க, “என்னாச்சு அண்ணா?” எனக் கேட்க 

“வாம்மா சொல்றேன்” என்றவன் அதன் பின் மௌனமாய் சைக்கிளை மிதித்தான்

ஆஸ்பத்திரி வாசலில் கூட்டம் அலை மோதியது. அழுகை சத்தம் காதைப் பிளக்க, “அண்ணா…” என நடுங்கும் குரலில் கேள்வியாய் பார்த்தாள் மீனா 

“அது வந்தும்மா… உன் புருசன் மாமனார் இன்னும் ரெண்டுப் பேர், தொட்டில இறங்கனவுடனே விஷவாயு தாக்கி இறந்துட்டாங்க” எனவும் 

“ஐயோ பாவி போயிட்டியா? இந்த புள்ளையை  வச்சுக்கிட்டு நான் என்ன பண்ணுவேன்” என கதறினாள் மீனா 

போலீஸ் வந்து,  விசாரணை என்ற பெயரில் கண்துடைப்பு நடத்திச் சென்றது

கம்பெனி முதலாளியின் ஆட்கள் கமுக்கமாய் ஆளுக்கு அம்பதாயிரம் என பேரம் பேசி முடித்தார்கள் 

மீண்டும் வேலைக்கு போனாள் மீனா. அவளால் தைக்க முடியவில்லை, கணவனிடம் உதை வாங்கி வாங்கி உடல் இத்துப் போய்விட்டது. 

அடிக்கடி ஒரு பக்க மார்பில், வலி வேறு உயிர் போனது. அரசு ஆஸ்பத்திரியில் காட்டக் கூட நேரமில்லை. 

ஞாயிற்றுக் கிழமைகளில் டாக்டர்கள் இருப்பதில்லை, மற்ற நாளில் வேலை என இப்படியே நாட்கள் ஓடியது. வலி பொறுக்க முடியாமல் போக, அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் செல்ல  முடிவு செய்தாள் மீனா

சீட்டை வாங்கி உள்ளே செல்ல, மீனாவை பரிசோதித்த மருத்துவர், “என்ன வேலை செய்றேம்மா?” எனக் கேட்க 

“ஷூ கம்பெனிக்கு வேலைக்கு போறேன் டாக்டரம்மா” என்றாள் 

“எப்பவாவது மார்புல அடிபட்டதா?” எனக் கேட்க 

“எம் புருசன் இருந்த வரைக்கும் குடிச்சிட்டு வந்து அடிப்பாருங்க, அப்ப ஏதாவது பட்டிருக்கலாம்” என்றாள் 

“எதுக்கும் ஒரு ஸ்கேன் பண்ணிப் பாப்போம். அதுக்கு பெரியாஸ்பத்திரிக்கு தான் போகணும். நான் எழுதித் தரேன், ஸ்கேன் எடுத்திட்டு வந்திடு. இல்லேன்னா அங்கேயே கூட பாத்துக்க” என டாக்டர் கூற 

“ரொம்ப செலவுப் புடிக்குமாம்மா?” என கவலையுடன் கேட்டாள் மீனா  

“இல்லம்மா… எல்லாமே ப்ரீ தான்” என்றார் வாஞ்சையாய் 

“சரிங்க டாக்டர்” என மருத்துவர் கொடுத்த சீட்டை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் 

விஜயாவிடம் விசயத்தை கூறியதும், “என்ன மீனா சொல்றே? இப்போ இது வேறயா? அவன் தான் ஒழிஞ்சான், இனி உனக்கு நிம்மதினு நினைச்சேன். பதிலுக்கு இதுவா? உன் தலை விதி, வேறென்ன?” என தோழிக்காக வருந்தினாள்  

பெரியாஸ்பத்திரியில் இலவசம் என்று பேர் தான், ஆனால் எல்லா இடத்திலும் காசு கேட்டார்கள்

மீனா கையை விரிக்க, “போய் உக்காரு கூப்பிடறோம்” என்றார்கள்

இவளுக்கு பின் வந்தவர்கள் எல்லாம் ஸ்கேன் எடுத்து சென்ற பின்னும், இவளை அழைக்கவில்லை. மணி பண்ணிரெண்டு ஆக, பசி வேறு வயிற்றை இழுத்துப் பிடித்தது

போய் கேட்க, “போய் உக்காரு கூப்பிடறோம்” என்றார்கள் 

பொறுமையிழந்த மீனா, “நூறு இருநூறுக்கு கூட வக்கில்லாம தான இங்க வர்றோம். ஏன் இப்படி எங்கள அலைகழிக்கிறீங்க?” என கத்தினாள்  

இரவு முதலே எதுவும் உண்ணாதது, அதோடு பொறுமையிழந்து கத்தியதில், கொஞ்சம் நஞ்சம் இருந்த உயிரும் உருக, மயங்கி விழுந்தாள். 

சத்தம் கேட்டு வந்த டாக்டர் என்னவென கேட்க, முழித்தான் டெக்னீசியன்

“இவங்க காலையில் இருந்து வெயிட் பண்றாங்க” என அங்கிருந்த நர்ஸ் கூற 

“எதுக்கு?” எனக் கேட்டார் டாக்டர் 

பதில் சொல்ல முடியாமல் நின்ற டெக்னீசியனை முறைத்து விட்டு, மீனாவின் கையில் இருந்த காகிதத்தை எடுத்துப் பார்த்தவர்,  மார்பு ஸ்கேனிங்  பண்ண வந்தவங்களை எதுக்கு காக்க வச்சீங்க?” எனக் கேட்க 

“அது… வந்து சார்” என மென்று முழுங்கினான் டெக்னீசியன் 

“நீங்கல்லாம் மனுச பிறவிங்க தான, இந்த ஜீவன்களிடம் அம்பது நூறு வாங்கியா வயிறு வளக்கணும்? ச்சே…” எனறார் கோபமாய் 

அதற்குள் நர்ஸ் பார்த்து  விட்டு, “சார், இவங்க  வந்ததுல இருந்து சாப்பிட போன மாதிரி தெரியல, அதான் மயங்கி விழுந்திருக்காங்க” எனவும் 

“இந்தாங்க, இந்த பொண்ணுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கி குடுத்து சாப்பிட வெச்சு அப்புறம் கூட்டிட்டு வாங்க” என பணத்தை நர்ஸிடம் கொடுத்த டாக்டர், டெக்னீசியனை முறைத்தவர், “இந்த பொண்ணு வந்ததும் ஸ்கேன் எடுத்து ரிப்போர்ட் ரெடி பண்ணி என் ரூமுக்கு கூட்டிட்டு வாங்க” என்று கூறி விட்டு சென்றார் 

“ஏம்மா, நீ இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இதான்” என கண்டக்டர் கூற, பழைய நினைவில் இருந்து மீண்டாள் மீனா 

பேருந்தில் இருந்து இறங்கிய மீனா, தலை சுற்றுவது போல் உணர்ந்தாள்

‘டீ குடிப்போமா?’ என நினைத்தவள், அருகில் இருந்த கடையில் தேனீர் வாங்கி அருந்தியதும், சற்று  தெம்பு வந்ததைப் போல் உணர்ந்தாள்

மெல்ல நடந்தவள்,  மஞ்சள் பில்டிங் கேட் ஓரம் நின்று எட்டிப் பார்த்தாள். யாரும் கண்ணுக்குத் தெரியவில்லை. நிற்கவே கஷ்டமாக இருக்க, கேட்டைப் பிடித்துக் கொண்டு சாய்ந்து நின்றாள்

“யாரும்மா நீங்க? என்ன வேணும்?” என அருகில் வந்தார் வாட்ச்மேன். 

ஒரு கவரை எடுத்து அவரிடம் நீட்டினாள். வாங்கிப் பார்த்த வாட்ச்மேன், “வாங்க” என அழைத்துச் சென்றார் 

“சிஸ்டர்… டாக்டரய்யா அனுப்பியிருக்கார்” என வாட்ச்மேன் கூற 

“வாம்மா உக்காரு” என்ற சிஸ்டர், மீனா கொடுத்த கடிதத்தை வாசித்ததும், “என்ன வயசு பையனுக்கு?” எனக் கேட்டார் 

“ஏழு வயசு ஆகுதுங்க” என்றாள் மீனா  

“சரி  நாளைக்கு கூட்டிட்டு வாங்க” என்றவர், வாட்ச்மேன் பக்கம் திரும்பி,  “பீட்டர், இவங்களக் கூட்டிட்டுப் போய் சாப்பாடு குடுத்து அனுப்புங்க” என்றார் 

தலையசைப்பில் விடை பெற்று நகர்ந்தவள், உணவு உண்ட பின், நீண்ட நாளைக்குப் பிறகு வயிறு நிறைந்ததை உணர்ந்தாள்

பேருந்தில் ஏறி அமர்ந்ததும், மீண்டும் பழைய நினைவுகள் மனதில் ஊசலாடியது 

ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர், ‘பாவம் இந்தப் பெண், இதை எப்படித் தாங்குவாள்?’ என நினைத்துக் கொண்டிருக்க, நர்ஸுடன் உள்ளே நுழைந்தாள் மீனா 

“சிஸ்டர்,  டாக்டர் பாவனாவ கொஞ்சம் வரச் சொல்லுங்க” என நர்ஸிடம் கூறியவர், “எத்தனை குழந்தைகள் மா உங்களுக்கு?” எனக் கேட்டார்  

“ஒரேப் பையன் தாங்க, ரெண்டாம்ப்பு படிக்கிறான்” என்றாள் மீனா 

“உன் புருசன்?”  என கேள்வியாய் பார்க்க 

“அந்தாளு செத்து அஞ்சி மாசமாச்சுங்கய்யா” என்றாள் 

“என்ன வேலைப் பார்த்தாரு?” 

“தோல் கழிவுத் தொட்டி கீளீன் பண்ற வேலை சார், விஷ வாயுத் தாக்கி இறந்துப் போயிட்டாருங்க, மாமனார் புருசன் ரெண்டு பேரும் ஒரே நாளுல” எனவும் 

“கம்பெனில பணம் எதுவும் தரலையா?” 

“புருசனுக்கு மட்டும் அம்பதாயிரம் தந்தாங்க, மாமனார் வேலைக்கு வரலை சும்மா வேடிக்கைப் பார்க்க வந்த ஆளுன்னு அவருக்கு எதுவும் குடுக்கலை. அந்தப் பணமும் குடிக்க ஊரெல்லாம் கடன் வாங்கி வச்சதுனு ஆளாளுக்கு பிடுங்கிட்டாங்க” என்றாள் மீனா சலிப்புடன் 

கதவு தட்டும் ஒலி கேட்க, “வாங்க டாக்டர் பாவனா” என அழைத்தார் டாக்டர். வந்தவள் இளம் வயதாகத்  தான் தெரிந்தாள் 

“சிஸ்டர் இவங்கள உள்ள படுக்க வைங்க” என மீனாவை நர்ஸுடன் அனுப்பிய டாக்டர், “பாவனா இவங்கள ப்ரெஸ்ட் எக்ஸாமின் பண்ணனும், அதுக்கு முன்னாடி இதைப் பாருங்க” என ரிப்போர்ட்டை நீட்டினார் 

அதைப் பார்த்ததும், “ஓ மை காட்” என மெல்லிய குரலில் பதறினார் டாக்டர் பாவனா 

“உள்ளுக்குள் புரையோடிப் போயிருக்கு, இருபது சதம் தான் உத்தரவாதம் தர முடியும்னு தோணுது, நீங்க ஒருவாட்டி எக்ஸாமின் பண்ணுங்க பார்ப்போம்” எனவும்

“ஓகே டாக்டர்” என மீனா இருந்த அறைக்குள் சென்றார் பாவனா 

மார்பை கையால் தொடவே முடியாத அளவிற்கு கெட்டியாக வீங்கியிருந்தது. கை வைத்தவுடன் வலியால் துடித்தாள் மீனா 

“யாரு வந்திருக்காங்க உங்கக் கூட?” என டாக்டர் பாவனா கேட்க 

“எனக்கு யாரும் இல்லைங்க, தனியாத் தான் வந்திருக்கேன்” என்றாள் மீனா 

வேறு வழியின்றி மீனாவிடமே விஷயத்தை கூற ஆரம்பித்தார் பாவனா 

“மீனா, மனசை கொஞ்சம் திடப்படுத்திக்கோங்க, உங்களுக்கு ஒரு பக்கம் மார்பகம் முழுக்க உள்ளுக்குள்ள சீழ் பிடிச்சிருக்கு, ஆப்பரேசன் பண்ணணும். தெரிஞ்சவங்க யாராவது இருந்ததா விபரம் சொல்லி கூட கூட்டிட்டு வாங்க” எனவும் 

“ஐயோ என்ன டாக்டர் சொல்றீங்க? என் புள்ள..” என மீனா அழ ஆரம்பிக்க 

“தைரியமா இருக்கணும்மா, மருந்து மாத்திரை விட தைரியம் தான் பெரிய மருந்து” என்றார் டாக்டர் 

“என் பையன் இருக்கான் மேடம், அவனை தனியா எங்க விடறது? ஆபரேஷன்னா, கொஞ்ச நாள் ஆஸ்பத்திரில இருக்கணுமே, என் புள்ள எங்க இருக்கும். எத்தனை நாளைக்கு பக்கத்து வீட்டுகாரங்களுக்கு தொந்தரவு தர முடியும்” என மீனா செய்வதறியாது திகைப்புடன் கூற 

“இருங்க” என்ற டாக்டர், ஒரு கடிதம் எழுதி கொடுத்தார்

பின், “இந்தாங்க இதைக் கொண்டுப் போய் நான் சொல்ற எடத்துல குடுத்தா, உங்க பையனை அங்க சேத்துக்குவாங்க. படிப்பு சாப்பாடு எல்லாம் அவங்களேப் பார்த்துப்பாங்க. நீங்க பூரணமா குணமாகற வரை அங்கேயே இருக்கட்டும். எத்தனை நாள் வேணாலும் இருக்கலாம்” என டாக்டர் கூற, அவர் கூறியதன் மறைபொருள் மீனாவுக்கு புரிந்தது 

தனக்கு ஏதேனும் நேர்ந்தாலும் கூட, தன் பிள்ளைக்கு ஆதரவு வேண்டும் என்ற அர்த்தத்தில் டாக்டர் கூறியது புரிந்ததும்,  கண்ணில் நீர் வழிய நின்றாள் 

“எவ்ளோ சீக்கரம் முடியுமோ, அவ்ளோ சீக்கரம் வந்து அட்மிட் ஆகிடுங்க. அது வரைக்கும் மாத்திரை எழுதித் தரேன் சாப்பிடுங்க” என்றார் 

கண்களை துடைத்துக் கொண்டு மௌனமாய் வெளியேறினாள் மீனா  

வீட்டுக்கு வந்து விஜயாவிடம் விவரத்தை கூற, “மீனா உங்கண்ணிக்கு வேணா சொல்லேன்” என்றாள் விஜயா   

“வேணாங்க்கா… அவங்களே அன்னாடம் சோத்துக்கு அவதிப்படறாங்க. இது வேறயா? அவங்க அப்படியே இருந்துகிடட்டும். நான் போக்குவரத்தில் இருந்தா,  இந்த குடிக்காரன் எந்நேரமும் போய் அது வாங்கி வா இது வாங்கி வான்னு தொல்லைக் குடுப்பானேன்னு தான், அவங்க உறவையே அத்துக் கழிச்சேன். மறுபடியும் அது வேண்டாம்” என மறுத்தாள் மீனா 

மீனா இறங்க வேண்டிய இடத்தின் பெயரை கண்டக்டர் ஏலமிட, அன்றைய நினைவில் இருந்து மீண்டு, அவசரமாய் இறங்கினாள்

வீட்டின் அருகே வந்ததும், வெளியே நின்றிருந்த விஜயா, “என்னாச்சி மீனா?” என கேட்க 

“நாளைக்கு கூட்டியாறச் சொன்னாங்க’க்கா…” என்றாள் மீனா பெருமூச்சுடன் 

“சரி சரி… ஏதோ இந்தப் பையானாச்சும் கிடைக்கற இடத்துல நல்லா படிச்சி மேல வந்தா சரித்தேன் இல்லைன்னா இந்தா இநத சகதியிலே வந்து பொரள வேண்டியது தேன்” என விஜயா கூற, மௌனமாய் தலையசைத்தாள் மீனா 

அன்று மாலை பிள்ளை பள்ளியில் இருந்து வந்ததும், மடியில் அமர்த்திய மீனா, “கண்ணா நீ நல்லா படிச்சு பெரிய ஆளாகணும், அதனால உன்னை பெரிய ஸ்கூலுல கொண்டு விடப் போறேன்” என மகனை தயார் படுத்த ஆரம்பித்தாள் 

“பக்கத்து வீட்டு திவாகர் அண்ணா படிக்கற ஸ்கூலா அம்மா, நானும் அந்த அண்ணா மாதிரி ஸ்கூல் பஸ்ல போயிட்டு வருவேனா அம்மா” என பிள்ளை ஆர்வத்துடன் கேட்க, மீனாவின் கண்கள் நிறைந்தது 

“இல்ல ராஜா அந்த ஸ்கூல் இல்ல, இது வேற. நீ அங்கேயே தான் இருக்கணும், எப்பவாச்சும் தான் வீட்டுக்கு வர முடியும்” எனவும் 

“ஐயோ உன்னை விட்டுட்டு என்னால இருக்க முடியாதும்மா” என கழுதைக்கு கட்டிக் கொண்டு அழுதது பிள்ளை 

ஒருவழியாய் மகனை சமாதானம் செய்து தயார்படுத்தி, மறுநாள் பள்ளியில் சேர்த்து விட்டு, அழுகையை அடக்கியது திரும்பி பார்க்காமல் ஆஸ்பத்திரி வந்து சேர்ந்தாள் மீனா 

ஆபரேசன் முடிந்ததும் டாக்டர்கள் எதுவுமே சொல்லாமல் போனார்கள். 

“நர்ஸம்மா மீனாவுக்கு எப்படியிருக்கு?” என விஜயா கேட்க 

“டாக்டர் வந்து சொல்லுவார் இருங்க” என நர்ஸ் கூற, பதட்டமானாள் விஜயா  

சற்று நேரத்தில், “மீனா கூட வந்தது யாரு” என நர்ஸ் வந்து கேட்க 

“நான் தாங்க” என எழுந்து நின்றாள் விஜயா 

“டாக்டர் வரச் சொல்றார் வாங்க” என அழைத்துச் சென்றார் 

உள் நுழைந்ததும், “ஐயா… மீனா?” என கேள்வியாய் பார்க்க 

“இங்க பாருங்கம்மா, ஒரு பக்க மார்பை முழுசாய் எடுத்துட்டோம். எப்பவோ அடி பட்டிருக்கு, கவனிக்காம விட்டிருக்காங்க. முடிஞ்ச வரைக்கும் முயற்சி பண்ணியிருக்கோம். இனி கடவுளின் கையில்” என்றார் டாக்டர் 

அழுதுக் கொண்டே வெளியில் வந்த விஜயா, உட்கார இடம் தேடினாள் . சேர்களுக்குப் பின்னால் இருந்த காலி இடத்தில் உட்கார்ந்தவள், அப்படியே சாய்ந்து உறங்கிப் போனாள்

மாலை நான்கு மணிக்கு நர்ஸ் வந்து எழுப்பிய பிறகு அரக்கப் பரக்க எழுந்தவள், “மீனாவைப் பாக்கலாமா?” எனக் கேட்க 

பதிலே பேசாமல் அழைத்துச் சென்ற நர்ஸ், மூடியிருந்த வெள்ளைத் துணியை விலக்கி காட்டினாள்

உரத்த குரலில் விஜயா அழத் தொடங்க, “இங்க நின்னு சத்தம் போடாதீங்கம்மா, பெரிய டாக்டர் வந்தா திட்டுவாங்க” என நர்ஸ் கூற, அழுகையை விழுங்கிக் கொண்டாள் 

பிள்ளையை நல்ல இடத்தில் சேர்த்து விட்டோம் என்ற நிம்மதியுடன் நிரந்தரமாய் கண்ணை மூடி விட்டாள் மீனா 

ஆனால், பத்தாம் வகுப்பு வரை ஒழுங்காக படித்த மீனாவின் மகன், அந்த வருட முழுப்பரீட்சை விடுமுறைக்கு விஜயாவின் வீட்டிற்கு வந்தவன், இனி படிக்க செல்ல மறுத்து விட்டான் 

விதி, அவன் தந்தை பணியாற்றிய அதே வேலையில் அவனை சேர்த்தது. அதோடு, கெட்ட சகவாசமும் சேர, தந்தையைப் போல் இவனும்  குடிப்பழக்கத்திற்கு அடிமையானான் 

ஆம், மீனா பயந்தது போல், ஒரு குடிகாரனை தான் பெற்று விட்டாள் அவள் 

‘ஒரு வகையில், இதையெல்லாம் பார்த்து மனம் வெம்பாமல் நிம்மதியாய் போய் சேர்ந்து விட்டாள் மகராசி’ என நினைத்துக் கொண்டாள் விஜயா 

‘சஹானா’ இணைய இதழின் ‘சிறுகதை விமர்சனப் போட்டி’ யில் கலந்து கொண்டு பரிசு வெல்லும் வாய்ப்பு. போட்டி விவரங்கள் அறிய, இங்கு கிளிக் செய்யுங்கள்

சஹானா சிறுகதைப் போட்டி 2021ல் பங்குபெறும் மற்ற கதைகளை வாசிக்க இங்கு கிளிக் செய்யவும்

#ad – தமிழ் நாவல்கள் வாசிக்க இணைப்பு இதோ 👇

      

        

#ad ‘சஹானா’ இதழை Amazonல் வாசிக்க இணைப்பு இதோ 👇

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. “ Oru naduththara kudumbaththu illap peNmaNi enRaalEyE niRaiyavE thunbanGaL odoti vanthuvidum; athu muRRilum uNmai enRu Inthak kathayin asiriyar ‘Vidya Suki’ niroobiththuvittaar. Ithaip padippOr kaNGaLil kaNNeer varuvathu iyalbE. Kathaiyin aasiriyarukku miguntha VaazhththukkaL. Inthach ‘ChiRu Kathaiyai’ vaasiththu thirunthubhavarGaLum palar iruppaarGaL enbathu en ethirpaarppu.

    “ MandakolathurbSubramanian”.

  2. கதையின் இறுதியில் அந்தப் பிள்ளை படித்து, பெரியாளாகி விடுவான் என்ற ஏக்கம் எனக்குள்ளும் எட்டிப் பார்த்தது..!

நதியன் (சிறுகதை) – ✍ கவிஜி, கோவை

ஊனும் நீ… உயிரும் நீ…❤ (சிறுகதை) – ✍ அஞ்யுகாஸ்ரீ