in

திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 4) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

திசையறியா பயணம் (அத்தியாயம் 4)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

அத்தியாயம் 1  அத்தியாயம் 2   அத்தியாயம் 3

ன் கணவரைப் பார்த்து ஒரு முறை முறைத்துக் கொண்டே அவளது கையைப் பார்த்தாள். வேகமாக தன் கைப்பிடியிலிருந்த மனைவியின் கரத்தை ரிலீஸ் செய்தார்.

“சிந்து, நான் சொல்லுறத கொஞ்சம் கேளும்மா” என்று பரிவுடன் பேசத் தொடங்கினார்.

பதிலேதும் பேசாமல் தொடர்ந்து பார்வையால் அவரைச் சுட்டெரிப்பது போலவே அவரைப் பார்த்து கொண்டிருந்தாள்.

“அரசல் புரசலா நான் கேள்விப்பட்டேன். நீ ஏதோ புதுசா தேவையில்லாத வேலை செய்யுறனு, அது உண்மையா சிந்து?”

“என்ன… என்ன கேள்விப்பட்டீங்க?” என்று பேசும் போதே சிந்துவின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.

“நமக்கும் ஒரு பொண்ணு இருக்காம்மா. நீயும் ஒரு பொண்ணுதான். பாவம் அந்தப் பொண்ணே வீட்டுக்காரரு இல்லாம குழந்தைகள வச்சு கஷ்டப்படறா. அவளுக்கு உன்னால உதவி செய்ய முடியாட்டிலும் பரவாயில்ல, இந்தக் காரியம் மட்டும் செஞ்சு மேலும் பெரிய பாவத்த தேடிக்காதம்மா. அப்படி மத்தவங்கள கஷ்டப்படுத்தி சம்பாதிச்சு வர பணம் என்னைக்கும் நமக்கு ஒட்டவே ஒட்டாதும்மா. அது நமக்கு தேவையும் இல்ல. ப்ளீஸ் கொஞ்சம் உட்கார்ந்து பொறுமையா யோசிச்சு பாரும்மா” என்றார்.

“நானும் வர வர பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். ரொம்ப தான் எகிர்றீங்க. அப்படி என்ன மந்திரம் போட்டு உங்கள மயக்குனா அந்த வேலைக்காரி?” என்று தகாத வார்த்தைகளை பேச ஆரம்பித்து விட்டாள்.

“என்ன தேவையில்லாம சீண்டிப் பார்க்காதீங்க, அப்புறம் ரொம்ப வருத்தப்பட வேண்டியது வரும்” என்று தன் கணவரிடம் காரசாரமாக பேசிவிட்டு அறையிலிருந்து கிளம்பிச் சென்றாள்.

சிந்துவின் கணவர் சரத், மிகவும் பொறுமையான குணம் கொண்டவர், ஆனால் சிந்து மிகவும் பிடிவாதக்காரி.

யார் அவளுக்கு அறிவுரைக் கூறினாலும் காது கொடுத்து கேட்க மாட்டாள். பணத்தின் மீதும் ஆடம்பர வாழ்க்கையின் மீதும் அலாதி பிரியம் கொண்டவள். பணத்தின் மீது கொண்ட அளவுக்கு மீறின ஆசை, அவளைப் பாதாளத்தில் தள்ளிவிடும் என்பதை கூட அறியாமல், மிக மோசமான செயல்களின் உச்சகட்டத்திற்கு அவளை அழைத்துச் சென்றுவிட்டது.

சரத்திற்கு, சிந்து வேலைக்கு சேர்ந்த ஆரம்ப காலத்திலிருந்து அவள் மீது எந்த வித சந்தேகமும் வராமல் தான் இருந்தது. குடும்பத்திலும் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தான் போய்க் கொண்டிருந்தது.

ஆனால் கடந்த சில மாதங்களாக அவளுடைய நடவடிக்கையும் பேச்சுகளும், அடுத்தடுத்த பதவி உயர்வையும் கண்டு, சரத்திற்கு அவள் செய்யும் வேலையில் சந்தேகம் எழத் தொடங்கியது.

பதவி உயர்வைக் குறித்து நேரிடையாக சரத் சிந்துவிடம் கேட்கும் போதெல்லாம், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதை சேவையாக செய்வதால் கிடைக்கும் பலன் என்று கூறி சமாளித்து வந்திருக்கிறாள்.

அறையிலிருந்து வந்த சரத் ஷோபாவில் அமர்ந்து கொண்டு, படித்த நமக்கே வெளிநாட்டில் வேலைக் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமில்ல. ஆனால் சர்வ சாதாரணமாக வெளிநாட்டில் வேலை தர்றாங்கனு சொல்லுறாளே.

இது எப்படி சாத்தியம். அவர்களுக்கு வெளிநாட்டில் என்ன வேலைதான் அப்படி வாங்கித் தருகிறாள்? என்பதை அறிந்து கொள்வதற்காக, அவளிடம் ஏதேனும் பேச்சுக் கொடுத்து போட்டு வாங்கித் தெரிந்து கொள்ளலாம் என்று யோசித்து, எப்போதுமில்லாமல் இன்று சிந்துவிடம் சற்றுக் குரலை உசத்தி வேகமாக பேசிப் பார்த்தார்.

எப்போதும் காரசாரமாக பேசுவது அவளுடைய இயல்பான குணம்தான் என்றாலும், என்றுமில்லாமல் இன்று அவளுடைய முகத்தில் கொஞ்சம் பயமும் பேச்சில் பதற்றமும் தெரிந்ததை வைத்து சிந்துவின் மீதான சந்தேகத்தை உறுதி செய்தார் சரத்.

இது இப்படியே விட்டா பெரிய பிரச்சனையில முடிஞ்சிடும் என்னனு போய் நாளைக்கு விசாரிக்க வேண்டியது தான் என்று முடிவெடுத்தார் சரத்.

சிந்து வேக வேகமாக தன் வீட்டின் மாடிக்கு சென்று மேனேஜருக்கு போன் கால் செய்தாள்.

“சார்… ஒரு முக்கியமான விஷயம்”

“சொல்லுங்க சிந்து”

“என்னுடைய ஹஸ்பன்ட்’க்கு என் மேல டவுட் வர ஆரம்பிச்சிருச்சு. கண்டிப்பா இதைப் பத்தி விசாரிக்க ஆபிஸ் வந்தாலும் வருவார்” என்று வீட்டில் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் கூறினாள் சிந்து.

“டோன்ட் வொரி சிந்து, நான் பார்த்துக்கிறேன்” என்று கூறினார் மேனேஜர். சரத்திடம் வேகமாக பேசி சமாளித்தாலும், உண்மை மட்டும் தெரிந்தால் அவ்வளவுதான் என்று சிந்துவின் மனதில் பயம் ஆட்கொள்ளத் தொடங்கியது.

“வா பூஜா, என்னாச்சு உடம்பு எதுவும் சரியில்லையா? எப்பவும் கரெக்ட்டா டைம்’க்கு வந்திருவ. இன்னைக்கு ரொம்ப லேட்டா வந்திருக்க” என்று கேட்டார் ரோஜா.

“உடம்புக்குலாம் ஒன்னுமில்லம்மா…”

“அப்போ வீட்டுல எதுவும் பிரச்சனையா பூஜா?”

“இல்லம்மா… எனக்கு புதுசா வேலை கிடச்சிருக்கும்மா”

“ஏன் பூஜா? ஏற்கனவே அஞ்சு வீட்டுல வேலைப் பாக்குற. உனக்கு அப்படி என்ன அவசர தேவை? சம்பளம் பத்தாட்டி சொல்லு பூஜா, நான் வேணா சம்பளம் கூட போட்டு தர்றேன். எதுவும் அளவுக்கு அதிகமாக இழுத்துப் போட்டு வேலை செஞ்சா பிற்காலத்துல எந்த வேலையும் செய்ய முடியாம போயிரும். உடம்புல தெம்பு இருக்குற வரைக்கு தான் வேலை பார்க்க முடியும், அதைப் புரிஞ்சுகிட்டு முடிவு எடு”

“நான் புதுசா எந்த வீட்டுக்கும் வேலைக்கு போலம்மா”

“அப்போ வேலைக் கிடச்சிருக்குனு சொன்ன…”

“ஆமாம்மா… ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனல”

“கார்மெண்ட்ஸலையா?”

“ஆமாம்மா… அடுத்த மாசம் வெளிநாட்டுல உள்ள கம்பெனில வேலைக்கு கூட்டிட்டு போயிருவாங்க”

“என்ன பூஜா சொல்லுற? அடுத்தடுத்து ஷாக்கிங் நியூஸா இருக்கு”

“ஆமாம்மா… சிந்து மேடம் வேலைப் பாக்குற கம்பெனில வேலைக்கு ஆள் எடுக்குறதா சொன்னாங்க. அவங்க மூலமா தான் வேலை கிடச்சதும்மா…”

“உன் மேல எப்பவும் இல்லாத அக்கறை திடீருனு எப்படி அவங்களுக்கு இப்போ புதுசா வந்தது பூஜா”

“ஒரு நாள் அவுங்கக்கிட்ட என் கஷ்டத்தை சொல்லி புலம்புனேம்மா… அதோட அவுங்க தான் சொன்னாங்க. வெளிநாட்டுல வேலைனா நீ போக தயாரானு கேட்டாங்க. சரினு சொன்னேம்மா. உங்களுக்கே என் நிலைமை நல்லா தெரியும்லம்மா. என் பிள்ளைங்கள காப்பாத்த வேற வழி தெரியலம்மா” என்று கூறினாள்.

“நீ சொல்லுறதுலா சரிதான் பூஜா. வெளிநாட்டுல இதுக்கு முன்னாடி அங்க வேலைப் பாத்தவுங்கள பத்தி விசாரிச்சு பார்த்தியா? ஏன் சொல்லுறனா, முன்னப் பின்ன தெரியாத இடத்துக்கு போகும் போது அந்த இடத்த பத்தியும் அங்க வேலை பார்த்த யார்கிட்டயாவது அங்க உள்ள வேலைப் பத்தி விசாரிச்சிட்டு போறது நல்லது பூஜா.

நாளைக்கு அங்க போனப் பிறகு ஏதாவது பிரச்சனைனா ஊரு பேரு தெரியாத இடத்துல தன்னந்தனியா நீ மாட்டிக்கிட்டு முழிக்க கூடாது. பணம் அதிகமா கொடுக்குறாங்கனு சொல்லும் போது யாரா இருந்தாலும் சரினு சொல்லுறது இயல்பு தான். உன் கஷ்டமெல்லாம் தீரப்போகும்னு நினைச்சு ஆசையிலா சரினு சொல்லிருப்ப பூஜா. இருந்தாலும் நல்லா விசாரிச்சுட்டு முடிவெடு பூஜா”

“ஏற்கனவே அங்க வேலை பாக்குற ஒரு பொண்ணுகிட்ட போன்ல பேச சொல்லி சிந்து மேடம் போன் போட்டு கொடுத்தாங்கம்மா. அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லம்மா. அந்தப் பொண்ணு நல்லபடியா தான்ம்மா சொல்லுச்சு” என்றாள்.

“சரி பூஜா, எனக்கு தெரிஞ்சத உனக்கு சொல்லிட்டேன். அதுக்கு மேல உன்னோட முடிவு. சம்பளம் தான் பிரச்சனைனா சொல்லு, நான் சம்பளம் கூட்டிக் கூட தர்றேன். பிள்ளைங்கள விட்டுட்டு அவ்வளவு தூரம் போய் கஷ்டப்பட்டு சம்பாதிக்கனுமா? ஒரு முறைக்கு பத்து முறை நல்லா யோசிச்சு முடிவெடு பூஜா. என்ன உதவினாலும் தயங்காம கேளு”

“ரொம்ப நன்றிம்மா. நான் நல்லா யோசிச்சு தான் இந்த முடிவு எடுத்திருக்கேன்ம்மா. உங்களை என்னைக்குமே நான் மறக்க மாட்டேன்ம்மா. நான் வேலைப்பாக்குற எந்த வீட்டுலையும் என்ன ஒரு மனுஷியா நினைச்சதே இல்லம்மா. நீங்க ஒருதவுங்க மட்டும் தான் உண்மையான அன்பு காட்டி என்னோட உணர்வுக்கு மதிப்பு கொடுத்திருக்கீங்கம்மா. நீங்களும் சாரும் எப்பவும் நல்லா இருக்கனும்மா…” என்று கண்களில் கண்ணீருடன் கூறிவிட்டு அங்கிருந்து விடைபெற்றுச் சென்றாள் பூஜா.

மறுநாள் சிந்து வேலை பார்க்கும் ஆபிஸிற்கு நேராக சென்று விசாரித்து பார்த்தார் சரத்.

அவர் வருகையை முன் கூட்டியே அறிந்து கொண்டு அலட்டாக இருந்தார் மேனேஜர். சரத் மேனேஜரிடம் சென்று எதையும் நேரிடையாக விசாரிக்கவில்லை. அங்கு வேலைப் பார்க்கும் சிலரிடம் ப்யூனின் உதவியுடன் பல தகவலை விசாரித்து பார்த்தார்.

அவருக்கு எந்தவொரு சந்தேகமும் வராத அளவுக்கு முன் கூட்டியே ப்ளான் போட்டு அங்கு வேலைப் பார்ப்பவர்களிடம் எப்படி பேச வேண்டும் என்று ட்ரெயினிங் கொடுத்திருந்தான் அந்த கம்பெனி மேனேஜர்.

எந்தவித துப்பும் கிடைக்காமல் பெறும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார் சரத்.

அதையறிந்த சிந்து வேகமாக மேனேஜர் அறைக்கு சென்று, “தாங்க் யூ சோ மச் சார்” என்று அவளுடைய நன்றிகளைத் தெரிவித்தாள்.

“எதுக்கு சிந்து நமக்குள்ள இந்த பார்மலிட்டிஸ் எல்லாம்… விடுங்க” என்றார் மேனேஜர்.

“ஓகே சார்” என்று கூறிவிட்டு அவளுடைய கேபினுக்கு சென்றாள் சிந்து.

ரோஜாவின் வீட்டிலிருந்து புறப்பட்ட பூஜா, அடுத்ததாக ப்ரியாவின் வீட்டிற்கு சென்றாள்.

“ப்ரியா என்னாச்சு? எப்பவும் நேரத்தோட வேலைக்கு வர்ற பூஜா இன்னைக்கு இவ்வளவு நேரமாகியும் ஆளக் காணோம்” என்று ப்ரியாவின் கணவர் சுஜித் கேட்டுக் கொண்டிருந்தார்.

“நானும் உங்க கூடத்தான இருக்கேன். எனக்கு மட்டும் எப்படி தெரியும். லீவுனா எப்பவும் முன்னக் கூட்டியே சொல்லிருவா. நான் வேற என்னைக்கும் இல்லாம இன்னைக்குனு பாத்து நிறைய புது டிஸ்  ட்ரை பண்ணி ஒரு செம பாத்திரத்தை குமிச்சு வச்சிருக்கேன்” என்று பேசிக் கொண்டிருக்கும் போது பூஜா வந்தாள்.

“உனக்கு ஆயுசு நூறு பூஜா. இப்ப தான் உன்னை பத்தி நாங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருந்தோம்” என்று பல்லை இளித்துக் கொண்டே கூறினான் சுஜித்.

“ஆமாம் பூஜா. நீ மட்டும் இப்போ வராம இருந்திருந்தா, அவ்வளவு தான், என்னோட பெண்டு நிமிர்ந்திருக்கும்”

“ஏன் இன்னைக்கு இவ்வளவு லேட் பூஜா?”

“இல்லம்மா… எனக்கு புதுசா வேலை கிடச்சிருக்கு .இனி நாளையில இருந்து வேலைக்கு வர மாட்டேன்”

“என்ன பூஜா சொல்லுற?” என்று ப்ரியா கேட்கும் முன் முந்திரி கொட்டைப் போல முந்திக் கொண்டு கேட்டான் சுஜித்.

“இப்போ எதுக்கு இவ்வளவு ஷாக் ஆகுறீங்க? நான் தான் கேட்டுக்கிட்டு இருக்கேன்ல” என்று தன் கணவரிடம் கூறினாள் ப்ரியா.

“அப்படியில்ல ப்ரியா… நீ இல்லாட்டிலும் எனக்கு தேவையானது எல்லாம் பார்த்து கரெக்ட்டா செஞ்சு வச்சிட்டு போயிருவா. நைட் சிப்ட் பார்த்துட்டு டயர்டா வந்து அவளை நம்பி தைரியமா தூங்குவேன். எத்தன தடவ அவளை நம்பி வீட்டை ஒப்படச்சிட்டு நாம்ம கோயிலுக்குலாம் போயிட்டு வந்திருக்கோம். இந்த காலத்துல இப்படி ஒரு நம்பிக்கையான பொண்ணு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்ல ப்ரியா, அதனால தான் சொன்னேன்”

“ம்ம்…” என்றாள் ப்ரியா.

“இப்படி திடுதிப்புனு வந்து சொன்னா நாங்க புதுசா வேலைக்கு ஆளு எப்படி தேட முடியும் பூஜா? நீயே சொல்லு”

“என்னை மன்னிச்சிருங்க மேடம். வேலை கன்பார்ம் ஆனதும் சொல்லுவோம்னு நினைச்சு தான் முன்ன கூட்டியே சொல்லல”

“சரி சரி விடு. நான் என்னுடைய ஆபிஸ்ல யாருகிட்டையாவது சொல்லி புதுசா வேலைக்கு ஆள் சேர்த்துக்கிறேன்”

“எந்த ஏரியாவுல வேலை பூஜா?”

“வெளிநாட்டுலம்மா….”

“என்னது வெளிநாட்டுலயா?” என்று வாயைப் பிளந்தான் சுஜித். ஆரம்பத்திலிருந்து அனைத்து கதைகளையும் பூஜா கூறினாள்.

“சரி பூஜா, உன் கஷ்ட காலத்துக்கு ஒரு விடிவு காலம் கிடைச்சா சரிதான். புது இடம் பார்த்து கவனமா இருந்துக்கோ”

“கோபிச்சுக்காம கடைசியா இந்தப் பாத்திரத்தை மட்டும் தேச்சு கொடுத்திட்டு போ பூஜா” என்றாள் ப்ரியா.

“சரிங்க மேடம்…” என்று கூறிவிட்டு வேலை அனைத்தையும் முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்படும் சமயம் பார்த்து ப்ரியா இருக்கும் போதே பூஜாவின் கையில் இரண்டாயிரம் ரூபாய் தாளை நீட்டினான் சுஜித். பூஜாவிற்கு தூக்கி வாரி போட்டது.

“சும்மா வாங்கிக்கோ பூஜா. நான் தான் கொடுக்க சொன்னேன். இத்தனை வருஷமா நேர்மையா வேலைப் பாத்திருக்க. வெளிநாட்டுக்கு வேலைக்கு போறேனு வேற சொல்லுற. எங்களால முடிந்த சின்ன உதவி” என்றாள் ப்ரியா.

“சரி பூஜா, பாப்பா ரூம்ல அழற சத்தம் கேட்குது. பார்த்து பத்தரமா போயிட்டு வா” என்று கூறிவிட்டு அறைக்குச் சென்றாள்.

தன் கையில் உள்ள பணத்தை பூஜாவின் கையில் கொடுக்கும்போது அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டு பிசைந்தான் சுஜித்.

“சார்… விடுங்க சார்…” என்று பொறுமையாக கூறிப் பார்த்தாள் பூஜா.

“நீ கண்டிப்பா வெளிநாட்டுக்கு போகனுமா பூஜா? ‘ம்ம்’னு ஒரு வார்த்தை சொல்லு. நான் உனக்கு தேவையானது எல்லாம் செஞ்சு கொடுத்து ராணி மாதிரி பாத்துக்கிறேன்” என்றான் சுஜித்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    அப்துல்லா அமிர்தம் அபிஷேக் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

    கிளித்தங்கவேலு (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.