in

கிளித்தங்கவேலு (சிறுகதை) – ✍ சின்னுசாமி சந்திரசேகரன், ஈரோடு.

கிளித்தங்கவேலு (சிறுகதை)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

ன்பதாம் வகுப்பிற்கு மாணவர்கள் பிரிக்கப்பட்டு, வகுப்பினுள் அனுப்பப்பட்ட போது முன் வரிசைகளில் இடம் பிடிக்க அனைவரும் முண்டியடித்து ஓடினர்.  நான் வழக்கம்போல் மெதுவாகப் போய், கடைசி வரிசைக்கு முன் வரிசையில் உட்கார்ந்தேன்.  இடம் பிடிக்கும் அமர்க்களம் முடிந்து, ஆசிரியர் அறைக்குள் வந்தவுடன் சளசளப்பு குறைந்து வகுப்பில் அமைதி நிலவியது. 

அப்போதுதான் நான் என் இரு பக்கமும் உட்கார்ந்திருந்த என் எதிர்கால நண்பர்களைப் பார்த்தேன்.  வலது புறம் இருந்தவன் போன வருடம் என் வகுப்பில் படித்த ரங்கநாதன்.  இடது புறம் உட்கார்ந்திருந்தது புதிய முகம். அந்த முகத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு இருக்க வேண்டிய இளமை இல்லை.

நாங்களெல்லாம் மீசை முளைக்காதா என்ற ஏக்கத்தில் கண்ணாடியை தினம் தினம் பார்த்துக் கொண்டிருந்த காலத்தில், மழைக்கு முளைத்த அருகம்புல் போல முளைப்புக் கட்டிக்கொண்டிருக்கும் கருத்த மீசையோடு இருந்தான் அவன். 

காலரில் கிழிந்த நைந்து போன வெள்ளைச் சட்டை.  முழங்காலுக்கும் சற்று கீழோடு நின்று விட்ட வெள்ளை வேட்டி (எழுபதுகளில் கிராமத்துப் பள்ளிகளில் சீருடைகள் கட்டாயமாக்கப்படவில்லை).

சற்றே நீண்ட, பின்புறம் கோடாரி போன்ற அமைப்புக் கொண்ட தலை.  மொத்தத்தில், யார் பார்த்தாலும் கொஞ்சம் வெறுப்புடன் ஒதுங்கிக் கொள்ளும் உடல் வாகு. ஆனால், எனக்கு ஏனோ அவனைப் பார்த்தவுடன் பிடித்து விட்டது.

‘உன் பேரு என்ன?’ என்றேன்.

‘தங்கவேலு’ என்றான்.

‘போன வருசம் எங்க படிச்சே?’ என்றேன்.

‘கொளாநல்லி ஸ்கூல்ல படிச்சேன். ரெண்டு வருசம் பெயிலாயிட்டேன்.  டி.சி. குடுத்து அனுப்பிச்சிட்டாங்க’ என்றான்.

அவனின் நேர்மை எனக்குப் பிடிந்த்திருந்தது.  அத்தோடு அவனின் மீசைக்கான காரணமும் புரிந்தது.

அடுத்து வந்த நாட்களில் தங்கவேலுவைப் பற்றி தெரிந்தது என்னவென்றால், அவனுக்கு கல்வியோ, செல்வமோ, வீரமோ கொடுக்காமல் மூன்று தெய்வங்களும் அவனை நன்றாக ஏமாற்றி விட்டன என்பதுதான்.  அப்பனின் காசில் ஐஸ் வாங்கித்தின்று அலப்பறை செய்யும் வகுப்பு மாணவர்கள், தங்கவேலுவை நக்கலும், நையாண்டியும் செய்யும் போதெல்லாம், சிறு முறுவலுடன் அதை ஏற்றுக் கொள்ளும் ஏழ்மையின் பக்குவம் பெற்றிருந்தான் அவன். 

போதாதற்கு வகுப்பாசிரியர்கள் வேறு அவன் அறிவுக் குறையை சுட்டிக் காட்டி திட்டும், அடியும் கொடுக்கும் போது, மற்றவர்களின் கேலிகள் அதிகரித்தன.  அதுவும் தமிழாசிரியர் இவனை வைத்துத்தான் காமெடி செய்வார்.  தங்கவேலுவுக்குத் தெரியாது என்று தெரிந்தே கடினமான கேள்வியைக் கேட்பார். 

அதே சமயத்தில், அவர் மாத அகெளண்ட் வைத்துச் சாப்பிடும் நேதாஜி ஹோட்டல்காரர் பையன் ராமலிங்கத்திடம் மிக எளிமையான கேள்வியைக் கேட்டு, பதில் பெற்று பாராட்டுவார். வழக்கம்போல தங்கவேலு திட்டு வாங்குவான்.

மதிய உணவு அவரவர்கள் இருக்கையிலேயே உட்கார்ந்து சாப்பிடுவோம்.  ஆனால், தங்கவேலு மாத்திரம் தான் உணவு கொண்டு வரும் சம்படத்தை எடுத்துக் கொண்டு யாரும் இல்லாத மரத்தடிக்கு ஓடுவான். ஒரு நாள் நான் வேகவேகமாகச் சாப்பிட்டு விட்டு, தங்கவேல் சாப்பிட்டுப் கொண்டிருக்கும் மரத்தடிக்கு ஓடினேன்.  என்னைக் கண்டதும், சாப்பாட்டை கையை வைத்து மறைக்கப் பார்த்தான் தங்கவேல். 

‘என்னடா சாப்பாடு?’ என்று நாகரிகம் இல்லாமல் கேட்டேன்.  எங்களின் வயது அப்படி.

‘ம்… பாரு ‘ என்று காண்பித்தான்.  அரை உருண்டை களி (ராகியில் செய்வது) கிடந்தது.  பக்கத்தில் ஒரு கிண்ணத்தில் குழம்பு தொடப்படாமல் இருந்தது.

என் பார்வையைப் பார்த்து விட்டு சொன்னான், ‘பழைய குழம்பு கெட்டு விட்டது’.

என்னை அதற்கு மேல் கேள்வியைக் கேட்க விடாமல் அவனே சொல்ல ஆரம்பித்தான்.

‘அப்பாவுக்கு ஒடப்பு சரியில்லாததால வேலைக்குப் போறதில்ல.  அம்மாதான் வேலைக்குப் போறாங்க.  சாப்பாட்டுக்குக் கொஞ்சம் கஷ்டம்தான்.  தினம் சம்படத்தைத் தூக்கிக் கொண்டு இங்கே வருவேன். ஆனா எல்லா நாளும் சாப்பாடு இருக்காது.  மத்தவங்கெல்லாம் சாப்பிட போகலையானு கேப்பாங்களே அப்படின்னு வெறும் சம்படத்தை எடுத்து வருவேன்.  இதையெல்லாம் யார்கிட்டயும் சொல்லிடாத..’ என்றான் பரிதாபமாக. 

நானும் நடுத்தர குடும்பத்தில் பிறந்து கஷ்டங்களை அனுபவித்திருப்பதால், நான் யாரிடமும் சொல்லவில்லை.

கிராமத்து மாணவர்களாகிய எங்களுக்கு, இருக்கும் ஒரே பொழுதுபோக்கு ஊரிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ராஜராஜேஸ்வரி டெண்ட் கொட்டகைதான்.  அதில், முதல் இரவுக் காட்சி ஆறு மணிக்கும், இரண்டாவது காட்சி இரவு ஒன்பது மணிக்கும் தொடங்கும். 

பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்து, கிளம்பி முதல் காட்சிக்குக் போக முடியாது என்பதால் எப்போதும் இரண்டாம் காட்சிதான் எங்கள் சாய்ஸ்.  சில சமயம் நண்பர்களைத் திரட்டி, சைக்கிளில் கொட்டகையை அடையும்போது, முதல் ஆட்டம் விட்டு, ‘மருத மலை மாமணியே முருகையா’ பாடல் ஒலிக்கத் தொடங்கிவிடும்.  ஆனால், நாங்கள் விரும்புவது எட்டரை மணிக்கு கொட்டகையை அடையும் நாட்களைத்தான். 

அப்போதுதான் வீட்டில் சாப்பிட்டு விட்டு வர முடியாத நண்பர்கள் கொட்டகைக் கடையில் நிதானமாக பரோட்டா சாப்பிடுவார்கள். பிஞ்சிலே பழுத்த இன்னும் சிலர், சிசர் சிகரெட் வாங்கி இருளில் மறைந்து நின்று திருட்டு தம் அடிப்பார்கள்.  சினிமா பார்க்கும் ஆர்வத்தை விட, இது போன்ற பொழுது போக்குகளுக்காகவே, பார்த்த சினிமாவையே இரண்டாம் தடவை பார்க்க வரும் நண்பர்களும் உண்டு.

அந்த வெள்ளிக்கிழமை ராஜராஜேஸ்வரியில் எம்.ஜி.ஆரின் ‘தொழிலாளி’ படம் போட்டிருந்தார்கள்.  எம்.ஜி.ஆர். தொழிலாளியாக, பாரம் வைக்கப்பட்ட கை வண்டியை சிரமத்துடன் இழுத்துச் செல்வது போன்ற கட் அவுட்டுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டு அனைவரையும் ஈர்த்ததனால், கொட்டகையில் கூட்டம் அலை மோதியது. 

நண்பர்கள் குழுவில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அதிகம் என்பதால் நாங்களும் போயிருந்தோம். அங்கேதான் தங்கவேலுவை எதிர்பார்க்காத கோலத்தில் பார்த்தேன்.

கொட்டகைக்கு வெளியே சற்று மையமான இடத்தில் காலை சப்பணமிட்டு உட்கார்ந்திருந்தான்.  நெற்றியில் பளிச்சிடும் திருநீறும், குங்குமமும்.  தலையிலும், இடுப்பிலும் காவி நிறத்தில் உருமாளும், வேட்டிக்கட்டும்.

அவன் முன்னே ஒரு பிளாஸ்டிக் சீட் விரிக்கப்பட்டிருந்தது.  அதன் மேல் ஒரு கிளிக்கூண்டும், கிளிகள் எடுப்பதற்கான சீட்டுகளும் சீராக வைக்கப்பட்டிருந்தது.  பக்கத்தில் காடா விளக்கு ஒன்று எரிந்து கொண்டிருந்தது. 

முதலில் அவனா என்ற சந்தேகம் வந்தாலும், காடா விளக்கின் ஒளி அது தங்கவேலுதான் என்று உறுதி செய்தது. அவன் அருகில் மெதுவாகச் சென்றேன்.  யாரோ கிளி ஜோஸ்யம் கேட்க வந்துள்ளார்கள் என்று தலையை உயர்த்தி பார்த்த அவன் என்னை அடையாளம் கண்டு கொண்டான். 

அவன் முகத்தில் என்னைப் பார்த்ததில் அதிர்ச்சியும், சங்கடமும் தெரிந்தது.  என்னைப் பக்கத்தில் உட்காரும்படி சைகை காட்டினான்.

பிறகு சொன்னான், ‘அப்பாதான் இந்தத் தொழிலைச் செய்து வந்தார்.  கூட்டம் அதிகம் வரும் பஸ் ஸ்டேண்ட், திருவிழாக்கள், சினிமா கொட்டகைகளில் கொஞ்சம் வருமானம் வரும். கூடவே அம்மாவும், அக்காவும் கூலி வேலைக்குப் போவதால் நானும் பள்ளிக்கூடத்தில் படிக்க முடியுது.  திடீரென்று அப்பா உடம்புக்கு முடியாம படுத்துவிட்டார்.  அவர் வேலையை நான் ராத்திரியில் செய்து கொஞ்சம் சம்பாதிக்கிறேன்.’ 

கொஞ்சம் தயக்கத்துக்குப் பின் கெஞ்சும் குரலில் கேட்டான், ‘பள்ளிக்கூடத்தில யார் கிட்டயும் சொல்லிடாதே’.

ஆனால் விதி வேறு மாதிரி வேலை செய்தது.  ஒரு பத்து நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் நான் வகுப்புக்குள் நுழைந்தபோது, நண்பர்கள் கிசு கிசுவென்று பேசி சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

என்னிடமே ஒருவன் சொன்னான், ‘டேய் உனக்குத் தெரியுமா? நம்ம தங்கவேலு சினிமாக் கொட்டாயில கிளி ஜோஸ்யம் பாக்கறானாமா?’.

எனக்குள் குழப்பம்.  நாம் யாரிடமும் சொல்லவில்லையே?  எப்படி எல்லோருக்கும் தெரிந்தது?

தங்கவேலு வகுப்பில் நுழைந்தவுடன் சிரிப்பும், கிண்டலும் வகுப்பையே கலகலக்க வைத்தது.  ஒருவன் கிளி போல கத்தினான்.  ஒருவன், ‘டேய் கிளி’ என்றான் தங்கவேலுவைப் பார்த்து. 

என் பக்கத்தில் அவன் அமர்ந்தவுடன் நான் சொன்னேன், ‘நான் சொல்லல‌டா’.

‘தெரியும்.. நேத்து நம் வகுப்பு சண்முகம் சினிமா கொட்டகையில் என்னைப் பார்த்து விட்டான்..’ என்றான். 

வழக்கம்போல கேலியும், கிண்டலும் அவனை பாதிக்கவில்லை.  எப்போதும் போல் புன்முறுவலுடன் பேசினான். அதற்குப் பின் தங்கவேலுவின் பெயர் கிளித்தங்கவேலு என்றே வகுப்புத் தோழர்களால் அழைக்கப்பட்டது. 

அது நாளடைவில் ஆசிரியர்களுக்கும் பரவி, ‘டேய் கிளி’ என்றே ஆசிரியர்களாலும் அழைக்கப்பட்டான்.

வகுப்பு மாணவர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவனைச் சுற்றிக்கொண்டு, ‘கிளி,  முருகன் படம் எடுத்துக் கொடுத்தால் என்ன சொல்வாய்?’ என்று கேட்பார்கள். அவனும் கட கட வென்று அந்தப் படத்திற்குப் பாடம் செய்திருந்ததை ஒப்பிவிப்பான்.

ஒரு நாள் நான் கேட்டேன், ‘பள்ளிக்கூடத்துப் பாடம் மனப்பாடம் செய்ய முடியாமல் அடியும், திட்டும் வாங்கும் நீ இதெல்லாம் எப்படி மனப்பாடம் செய்தாய்?’

‘தெரியல.. அப்பா படிக்கும்போது கேட்பேன்.  இதுதானே பொழப்பு?‘ என்றான்.  பேச்சில் இழையோடியது ஏழ்மையின் நெடி.

பத்தாம் வகுப்பிற்கு அவன் வரவில்லை.  படிப்பு எனக்கு நல்ல வாழ்க்கையைக் கொடுத்தது.  ஆனாலும் இடையில் கார்ட்டூன் படம் போல கிளித்தங்கவேலுவின் ஞாபகம் வந்து போகும். 

அத்தனை வருடங்கள் கழித்து நான் அவனை திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பார்ப்போம் என்று நினைக்கவே இல்லை.  ராஜராஜேஸ்வரி கொட்டகை முன்பு பார்த்த அதே கோலத்தில் கிளிக்கூண்டுடன் அமர்ந்திருந்தான். 

வயது அவன் கோலத்தில் பல மாற்றங்களைச் செய்திருந்தாலும், எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

‘தங்கவேலு’ என்றவுடன் முதலில் தடுமாறினாலும், என் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டான். என் மனைவியையும், குழந்தைகளையும் அவனுக்கு அறிமுகப் படுத்தினேன்.  நான் அவனை ஒருமையில் பேசியபோது அவன் மாத்திரம் என்னை மரியாதையாகப் பேசினான். 

தானும், மனைவியும் மாத்திரம் இருப்பதாகவும், நல்ல வேளையாக குழந்தைகள் இல்லை என்றும் முறுவலுடன் கூறினான்.  அவனுக்கு மேலும் சங்கடத்தைக் கொடுக்க விரும்பாமல் நாங்கள் விரைவில் விடைபெற்றோம்.  கொஞ்ச தூரம் வந்ததும், கடற்கரை மணலில் நான்கைந்து கல்லூரி மாணவர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் இடத்தில் நின்றேன். 

‘எனக்கு ஒரு உதவி செய்வீங்களா புரோ?’ என்றேன்.

என் தோற்றத்தைப் பார்த்து விட்டு அதில் ஒருவன் எழுந்து,  ‘என்ன சார்?’ என்றான்.

‘அதோ அங்கே கிளி ஜோஸ்யம் பார்த்துக் கொண்டிருப்பவன் என் பள்ளி நண்பன். நான் நேரடியாகக் காசு கொடுத்தால் வாங்க மாட்டான்.  இந்த நூறு ரூபாய்க்கு நீங்க எல்லோரும் அவனிடம் ஜோஸ்யம் பார்க்கறீங்ளா? பிளீஸ்’ என்றேன்.

‘கண்டிப்பா சார்’ என்று சொல்லி நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு அந்த இளைஞர்கள் தங்கவேலுவை நோக்கி நகரத் தொடங்கினர்.  முழுத்திருப்தி ஏற்படவில்லை என்றாலும், ஒரு மன நிறைவோடு திருச்செந்தூர் முருகனின் கோபுரக் கலசத்தை நோக்கி வணங்கினேன்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 4) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி

    ஸ்ரீப்ரியா ராஜகோபாலனின் சிறுகதைத் தொகுப்பு மற்றும் கவிதைத் தொகுப்பு