in

அப்துல்லா அமிர்தம் அபிஷேக் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி

அப்துல்லா அமிர்தம் அபிஷேக் (சிறுகதை)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

காலையில் சுப்ரபாதம் ஒலிக்க… மெதுவாக எழுந்து தன்னுடைய காலை வேலைகளை ஆரம்பித்தாள் அமிர்தம்.

“ஏழு மணிக்கெல்லாம் லீலா வந்துடுவா…  காலையில் காப்பி போட்டா போதும்”

சரியாக ஏழு மணி

“சமையல் என்ன பண்ணட்டும்மா?” என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் லீலா.

“பால்கனில இருக்கிற சேரை எடுத்து ஹால்ல போடு” என்றாள் அமிர்தம். 

“சமையல் என்ன பண்ணம்மா? வெண்டக்கா அஞ்சாறு தானே இருக்கு. அது போதுமா? குழம்பு என்ன வைக்கட்டும்?”

“என் ஒருத்திக்கு அது போதும். வெங்காயத்தை நிறைய போட்டுக்கோ… எண்ணெய குறைச்சு விடு… தேங்காய் போடாத. டாக்டர் பிரஷர் அதிகமா இருக்குன்னு சொல்றாரு. நேத்து வச்ச புளிக்குழம்பே மிச்சம் இருக்கு. அதனால குழம்பு வைக்க வேண்டாம். சின்ன குக்கர்ல ஒரு அரை தம்ளர் அரிசி  வச்சிடு. இன்னைக்கு அப்துல்லாவை வரச் சொல்லணும். காய்கறி, மளிகை சாமான், மெடிக்கல சில மருந்து, எல்லாம் வாங்கிட்டு வர ரெண்டு மணி நேரம் ஆயிடும். அவன் பத்து மணிக்கு ஆட்டோவ கொண்டு வந்த சரியா இருக்கும். அவனுக்கு போன் பண்ணனும்”

அமிர்தம் அம்மா சொல்வதைக் கேட்டுக் கொண்டே வேலையை ஆரம்பித்தாள் லீலா.

அப்துல்லாவுக்கும் அமிர்தத்துக்கு ஆன உறவு தாய்-பிள்ளை போல பாசமானது. அதில் வயதோ, மதமோ நுழைந்தது கிடையாது.

மாதத்திற்கு ஒரு முறையோ, இரு முறையோ அப்துல்லாவின் ஆட்டோவில் வெளியே போய்விட்டு வருவது அவளுக்கு பிடித்தமான ஒன்று. வீட்டுக்குள்ளேயே இருக்கும் வாழ்வில் சற்று வெளியே போய் வர வாய்ப்பாகவும் இருக்கும்.

அப்துல்லாவும் அவளை சர்வ ஜாக்கிரதையாக கூட்டிக்கொண்டு போய்… கொண்டு வந்து விடுவான். ஒரு சின்ன சாமானைக் கூட தூக்க விட மாட்டான். வாங்கிய சாமானையும் வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு தான் போவான்.

எத்தனை நாள் முடிகிறதோ அதுவரை போவோம் என்று நினைத்துக் கொண்டாள் அமிர்தம். இந்த ஐப்பசி வந்தால் 65 முடிஞ்சு 66 துவங்குகிறது.

கணவர் வேதாச்சலம் போய் சேர்ந்து ஐஞ்சு வருஷம் ஆகிறது. அவர் போன பிறகு அந்த சிங்கிள் பெட் ரூம் ஃப்ளாட்டில் தனியாகத் தான் வாழ்கிறாள். சொந்த வீடு, தனி வீடு என்பதால் பாதுகாப்பாக இருக்காது என்று அவளை இங்கே குடி வைத்தான் அபிஷேக்.

முன்னூறு வீடுகளைக் கொண்ட கேட்டட் கம்யூனிட்டி… அப்போது அவன் நண்பன் பக்கத்து வீட்டில் இருந்தது உதவியாக இருந்தது. இப்போது அவனும் மாற்றலாகி போய்விட்டான்.

அமிர்தத்தின் ஒரே மகன் அபிஷேக் இருப்பது அமெரிக்காவின் புளோரிடாவில். கல்யாணமாகி பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். அப்பா இறந்த பிறகு அம்மாவை தனியாக விட மனமில்லையென்றாலும், அவன் அங்கே கிரீன் கார்டு வாங்கி விட்டான்.

கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால், வீடு வாங்கி செட்டிலாகி விட்டார்கள். இனி எங்கே எங்கே வரப் போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள் அமிர்தம்.

அண்ணாவும், தங்கை உமாவும் சென்னையில் இருப்பதுதான் அமிர்தத்திற்கு பெரிய ஆறுதல். அண்ணா அவளை விட மூன்று வயது மூத்தவர். முன்பெல்லாம் வாரமிருமுறை தங்கை பார்க்க ஓடி வந்து விடுவார்.

இப்போது அவருக்கும் முடியாததால் 2 மாதத்துக்கு ஒருமுறை வந்தாலே பெரிது. நடுவே ஒரு முறை அமிர்தம் போய் பார்த்து விட்டு வருவாள்.

உமாவை கேட்கவே வேண்டாம். பாதிநாள் பெண் வீட்டிற்கும் பாதி நாள் பிள்ளை விட்டிருக்கும் உதவிக்குப் போய் விடுவாள். அவர்களுக்கெல்லாம் பிள்ளைகள் பக்கத்தில் இருக்கிறார்கள், லீவு விட்டால் வருகிறார்கள். பேரக் குழந்தைகளோடு வாழும் பாக்கியம் எத்தனை பேருக்கு கிடைக்கும்.

பேரனை ஸ்கைப்பில் பார்ப்பது தான். அவனை ஸ்பரிசித்து மகிழும் சந்தோஷம் எப்பவாது மட்டுமே கிடைக்கும் பாக்கியமாகிப் போனது.

இத்தனைக்கும் அமிர்தம் தைரியமான பெண்தான். கணவன் இறந்த பிறகு ஐந்து ஆண்டுகள் யாரையும் சிரமப்படுத்தாமல் தன் வாழ்க்கையை தானே பார்த்துக் கொண்டு வாழ்கிறாள். ஆனாலும் வயது ஏற ஏற, மனதிற்குள் சிறு பயம் எட்டிப் பார்க்கவே செய்தது.

மகன் அருகில் இல்லையே என்ற ஏக்கம் வரத்தான் செய்தது.  பிள்ளை வீட்டில் வாழும் தன் வயதையொத்தவர்களைப்  பார்க்கும் போது ஒரு ஏக்கம் எட்டிப் பார்த்தது. இதற்கும் கொடுப்பினை வேண்டும்.

நல்ல மனம் படைத்த உதவி செய்பவர்கள் பக்கத்தில் இருந்ததால் அவளுக்கு சிரமம் அதிகம் தெரியவில்லை. இருந்தாலும் சொந்தப் பிள்ளையைப் போல் உரிமையுடன் சொல்ல முடியுமா?

அண்ணன் மகன் ஆன்லைனில் டெலிபோன் பில், மின்கட்டணம், வீட்டுக்கு வாடகை, பராமரிப்புத் தொகை எல்லாம் கட்டி விடுவான்.

போன் ரீசார்ஜ் பண்ணுவது, கேஸ் புக் புக் பண்ணுவது எல்லாம் பக்கத்து விட்டு ரமா பண்ணி கொடுத்து விடுவாள். ஆட்டோவில் வெளியே போகும்போது ஏ.டி.எம்மில் பணம் எடுத்து வைத்துக் கொள்வாள். எப்படியோ வாழ்க்கை ஓடுகிறது.

எல்லா வசதிகளையும் அபிஷேக் செய்து கொடுத்திருந்தாலும், தனக்கென ஒர் உறவு அருகில் இல்லாதது குறையாக தோன்ற ஆரம்பித்தது. அதுவும் உடம்பு சரியில்லாமல் போகும்போது அது பூதாகரமாகத் தோன்றும்.

இது போன்ற நேரங்களில், அப்துல்லா அவளை டாக்டரிடம் பொறுப்பாக கூட்டிப்போய், மருந்துகளை வாங்கிக் கொடுத்து, வீட்டில் கொண்டு வந்து விட்டுப் போவான்.

லீலாவும் வீட்டில் சொல்லிவிட்டு, இரவில் வந்து அவளுக்கு துணையாக படுத்துக் கொள்வாள். இதுபோல பாசமான மனிதர்கள் பக்கத்தில் இருப்பது கடவுள் கொடுத்த வரம் என்று நினைத்துக் கொள்வாள்.

அன்று இரவு பேசிய அபிஷேக், அடுத்த வாரம் கம்பெனி வேலையாக பதினைந்து நாட்கள் இந்தியா வரப் போவதாகச் சொன்னதும் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவனைப் பார்த்து ஒரு வருஷமாகப் போகிறது என்று நினைத்துக் கொண்டாள்.

மறுவாரம் அபிஷேக் வர, அமிர்தத்தின்  நாட்கள் மகிழ்ச்சியில் கழிந்தன. 15 நாட்கள், பதினைந்து நிமிடங்களாக ஓடிவிட.. இதோ நாளை கிளம்புகிறான் அபிஷேக்.

அப்துல்லாவின் ஆட்டோவில்  போய் ஊறுகாய், அப்பளம், வத்தல், வடகம் பொடி வகைகள்… பலகாரம். எல்லாம் வாங்கி பெட்டி நிறைய நிரப்பி விட்டாள். பேரனுக்கு பிடித்தமானவற்றையும் வாங்க மறக்கவில்லை.

இரவு சாப்பிட்டதும், அபிஷேக் அம்மாவின் அருகில் உட்கார்ந்தான்.

அவள் கையை எடுத்து தன் கையில் வைத்துக் கொண்டு, “அம்மா உன்னை இப்படி தனியா விட்டுட்டுப் போக கஷ்டமாயிருக்கு.  உனக்கு முன்ன மாதிரி உடம்பு இல்லேன்னு புரியுது. நான் இங்க வர முடியாத நிலைமையில இருக்கேன்” என்று கூற

ரொம்ப தைரியமான பெண்ணாக இருந்தாலும், அமிர்தம்… சட்டென்று உடைந்து போய் அழத் துவங்கினாள்.

“அபிஷேக்! நீ கிட்டக்க இல்லாதது எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா? வரவர வயசு கூடும் போது… உடம்பு முடியாம போகும்போது… மனசுக்குள்ள பயமா இருக்குடா. எங்க உன்ன பாக்காம போயிடுவேனோன்னு   நெனப்பு வருது. என் தைரியமே பாதி குறைஞ்ச மாதிரி இருக்கு” என்றாள்.

“அம்மா! உனக்கு நினைவிருக்கிறதா? நான் படிக்கும்போது வெளிநாட்டு வேலைக்கு எல்லாம் போக மாட்டேன், இங்கே இருக்கிற வசதி போதும்னு தீர்மானமாக இருந்தேன். நீ தான் திரும்ப திரும்ப வெளிநாட்டு வாழ்க்கை, பணம், வசதி என்று சொல்லி என்னை வற்புறுத்தி, அதுக்கு ஏத்த மாதிரி பொண்ணும் பார்த்த.

உன் மருமக முழுக்க முழுக்க வெளிநாட்டு வாழ்க்கை விரும்புகிறவ, அவ பிள்ளையையும் அப்படியே வளர்த்திருக்கா. அவனும் இந்தியா வர விரும்பலை. அவன் கொஞ்சம் பெரிய பிள்ளையாயிருந்தா, அவங்களை விட்டுட்டு நானாவது வந்து உன் கூட இருப்பேன். ரெண்டு பேரும் வேலைக்கு போறதுனால, அவளால அவனைத் தனியா பாத்துக்க முடியாது. இப்ப நான் ஒரு சூழ்நிலை கைதிம்மா

வெளிநாட்டில இருக்கிற பிள்ளைங்க எல்லாம் ரொம்ப சந்தோஷமா நிம்மதியாக வாழ்றோம்னு  நினைக்கிறாங்க. அப்படி இல்லமா… தினமும் குற்ற உணர்ச்சியில தவிக்கிறேன். என்னை இந்த சூழ்நிலைக்கு  தள்ளுனதுக்கு  காரணம் நீதான்.

நீ சொல்லி சொல்லி வளர்த்ததாலேயே நான் வெளிநாடு போனேன், அதுவும்  உன்னை திருப்திப்படுத்த. இப்ப அந்த சூழலிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறேன்” என்றான் மனம் நெகிழ, தொண்டை அடைக்க.

அமிர்தத்துக்கு எதார்த்த புரிந்தது. கைக்கும், வாய்க்குமாக தன் கணவர் சம்பாதித்தது… தான் பார்த்துப் பார்த்து செலவு பண்ணிய நிலை தன் மகனுக்கு வரவேண்டாம் என்று நினைத்து அவனை வெளிநாடு போகச்  சொன்னது இன்று தன்னை பாதிக்கும் பூதாகரமான சூழ்நிலையாக மாறி பயமுறுத்தும் என்று நினைக்கவில்லை.

தான் விதைத்ததை தான் தான் அறுவடை செய்ய வேண்டும். சட்டென்று கண்ணீரைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தாள்.

“கவலைப்படாத அபிஷேக். நான் நிம்மதியா, சந்தோஷமா தான் இருக்கேன். மாமா சித்தி எல்லாம் இந்த ஊர்ல தானே இருக்காங்க. வினய்  எல்லா உதவியும் செய்கிறான். பக்கத்து வீட்டு ரமா, லீலா   எல்லா உதவியும் செய்து கொடுக்கிறாங்க. அப்துல்லாவும் நல்ல கவனிச்சுக்கிறான். இங்கே எனக்கு ஒரு குறையுமில்லை. பாசமான மனுஷங்க சுத்தி இருக்கிறாங்க” என்றாள் போலி புன்னகையுடன்.

அபிஷேக் மனம் லேசாக, அம்மாவை அணைத்துக் கொண்டான்.

“ஆண்டுக்கு ஒருமுறையாவது, எப்படியாவது வந்து பார்த்துட்டு போறம்மா” என்றான்.

“சரி” என தலையாட்டினாள், இரத்த பந்தம் இருந்தும் தனியாகி போன அந்த பணக்கார அனாதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 5) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

    திசையறியா பயணம் (நாவல் – அத்தியாயம் 4) – ✍ ராஜதிலகம் பாலாஜி, ஹங்கேரி