in

வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 5) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை

வாழ்க்கை ❤ (அத்தியாயம் 5)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

பகுதி 1   பகுதி 2   பகுதி 3  பகுதி 4

திவ்யாவைத் தூக்கிக் கொண்டு கையில் பாலுடன் வந்தாள் புவனா.

“இன்னைக்கு அத்தா நம்ம கூடவா படுக்கப் போறாங்க அப்பா?”

“ஆமா”

“அத்தா எனக்கு கதை சொல்லுவியா?”

“ஓ! ராஜகுமாரி கதை சொல்லட்டுமா?”

“அய் பழம் வச்சிருக்கு, லட்டு மைசூர்பாகு எல்லாம் வச்சிருக்கு, என்னப்பா எதாவது விசேசமா?”

“ஆமா கண்ணு. அத்தா நம்ம கூட வந்திருக்காங்க இல்லையா,  அதற்காகத்தான் இதெல்லாம் சித்தப்பா கொண்டு வந்திருக்காங்க”

“திவ்யா… பால் சாப்பிடுகிறாயா கண்ணு?” புவனா கேட்டாள்.

“ம்கூம். நான் ஆப்பிள் சாப்பிடறேன்” என்று ஒரு பழத்தை எடுத்துக் கடிக்க ஆரம்பித்தாள்.

“ரொம்பா வருத்தமா புவனா?”

”எதற்கு?”

“இல்லை உன் முகத்தைப் பார்த்தால் ரொம்பா சோகமாக இருக்கிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். எங்க அம்மா சொன்னதிலே உனக்கு வருத்தமா? என்னாலே எடுத்துச் சொல்ல முடியாது புவனா. அவர்களுடைய தலைமுறை அவர்களை அப்படி வளர்த்து விட்டது. அவர்களை இனி மாற்ற முடியாது. நாம் தான் இனி அவர்களோடு மாறிப் போகணும். அவர்களை மாற்ற நினைத்தால் உடைந்து போவார்கள். அதனால் தான் சில விசயங்களை எதிர்த்து பேச முடியாமல் போய் விட்டது”

“பரவாயில்லை அத்தான். எனக்கு எல்லாம் புரியுது. ஆனால் சோகமும் துக்கமும் அடக்க முடியாதபடி அழுத்துகிறது. இதிலே வேற கல்யாண வேலைகள் செய்ததில் ஒரே களைப்பு, அதான் என் முகம் உங்களுக்கு சோகமாக தெரியுது”

“இவ்வளவு புரிந்து வைத்திருக்கிற புவனா நீ எனக்கு மனைவியாக வந்ததிலே எனக்குச் சந்தோஷம்தான். இந்தக் கல்யாணம் உனக்கு எப்படித் தோணுதம்மா?”

“இவ்வளவு வெளிப்படையாக பேசறதால உங்களிடம் சொல்வதில் எனக்கு எந்த பயமும் தோன்றவில்லை. திருமணம் முடியுமுன்னே ஒரு மூன்று வயதுக் குழந்தைக்கு அம்மாவாகப் போகிறோமே என்ற குறை ஒரு கரையில் இருந்து அழுத்திக் கொண்டிருந்தாலும், சிவா அத்தான் எனக்கு கணவர் என்னும் போது எனக்குள்ளே ஒரு பெருமை, சந்தோஷம், மகிழ்ச்சி அது என்ன வென்று சொல்லத் தெரியாத புளகாங்கிதமாக இருக்கிறது” பேசிக்கொண்டிருக்கும் போதே கொட்டாவி விட்டாள் புவனா.

“நீ என் மனைவி என்பதை விட, இந்த குழந்தைக்கு அம்மாவாக மாற வேண்டும் என்பது தான் எனக்கு ஆசையாக இருக்கிறது”

“இவள் என்னை சித்தி என்று கூப்பிட்டால் கூட சின்னம்மா என்கிற ஸ்தானத்திலாவது இருக்கிறோமே என்று சந்தோசப்பட்டுக் கொள்ளத் தோன்றும். இவள் என்றைக்குப் பேச ஆரம்பித்தாளோ அன்றையிலிருந்து என்னை அத்தா என்று தான் கூப்பிடுகிறாள். முன்னாலே ‘அக்கா’ என்று கூப்பிடுகிறாளோ என்று கூடத் தோன்றியது.

ஆனால் இந்த இளம் பிஞ்சு இனி என்னை எப்போது அம்மாவாகப் பாவிக்கப் போகிறதோ என்று நினைக்கத் தோன்றுகிறது நாம்தான் சொல்லிப் புரிய வைக்க வேண்டுமா? இல்லை நம் அரவணைப்பிலும் நாம் காட்டும் அன்பிலும் இவள் என்னை அம்மாவாக பாவிக்கப் போகிறாளா? இல்லையென்றால் வேறு ஏதாவது வழியில் நான் இவளைக் கவர வேண்டுமா? எனக்குப் புரிய மறுக்கிறது”

பெருமூச்சு விட்ட சிவா, சிகரெட் பாக்கெட்டை எடுத்து ஒரு சிகரெட் எடுத்து பற்ற வைத்துக் கொண்டு கதவைத் திறந்து மேலேறி, மொட்டை மாடியில் நின்று புகையை இழுத்து காற்றில் ஊதினான்.

மனதிற்குள் புன்னகை எழுந்தது.

‘திவ்யாவை எப்படி வளர்க்கப் போகிறோம்’ என்று தேவகி இறந்த போது திக்கித் திணறி நின்ற நேரத்தில் கூட புவனாவை திருமணம் செய்யப் போகிறோம் அவள்தான் திவ்யாவை வளர்க்கப் போகிறாள் என்பது தெரியவில்லை.

‘என்னுடைய வாழ்க்கையில் என்ன வெல்லாமோ நடந்து விட்டது.’ என்று எண்ணிக் கொண்டு திரும்பவும் புகையை இழுத்து விட்டான்.

கீழே நண்பர்களோடு சீட்டு விளையாடிக் கொண்டிருந்த சிவாவின் தம்பி, மொட்டை மாடியில் புகை கருவதைக் கவனித்தவன் “ஒரு ஆட்டம் போடுங்கப்பா, நான் இப்ப வருகிறேன்” என்று சொல்லி விட்டு மாடிக்கு வந்தான்.

“அண்ணா எனக்கொரு சிகரெட் கொடுங்க” என்றான் சிவாவின் அருகில் வந்து.

“எங்கிட்டயே சிகரெட் கேக்குற அளவுக்கு பெரியாளாகி வீட்டீர்கள் இல்லையா?” என்று பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து நீட்டினான்.

சிகரெட்டை வாங்கிக் கொண்ட பாலு, “என்ன அண்ணா ஏதாவது பிரச்சினையா? நான் சின்னப்பையன் தான், எதுவும் கேட்கக் கூடாது தான், இருந்தாலும் இப்படி நீங்கள் மொட்டை மாடியில் வந்து சிகரெட் குடிப்பதைப் பார்க்கும் போது கொஞ்சம் வருத்தமாக இருந்தது” என்றான் சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு.

“அதெல்லாம் ஒன்றுமில்லை. என்னடா வாடை அடிக்குது, கல்யாண பார்ட்டியா? சரி சரி போய் சீட்டு விளையாடு. கொஞ்சம் காற்று வாங்கத்தான் மொட்டை மாடிக்கு வந்தேன், வேற ஒன்றும் பிரச்சினை இல்லை.”

“என்னிடம் சொல்ல விருப்பமில்லை என்றால் சொல்ல வேண்டாம்”

“அப்படியெல்லாம் ஒன்றுமில்லை பாலு. ஒன்றும் பிரச்சினை இல்லை. அங்கே சிகரெட் குடித்தால் அரை முழுவதும் புகையாகும் என்றுதான் மொட்டை மாடிக்கு. நான் போய் படுக்கிறேன், நீ போ” என்றான் சிவா.

சிகரெட்டை முடித்து விட்டு சிவா படுக்கையறைக்குள் நுழைந்த சப்தம் கேட்டு விழித்தெழுந்த புவனா, “ஸாரிங்க திவ்யாவிற்கு கதை சொல்லிக் கொண்டிருந்தேனா, களைப்பு வேறே உடம்பை அசத்தி விட்டது அயர்ந்து தூங்கி விட்டேன். ரொம்ப ஸாரி” என்று பதைப்பதைப்புடன் எழுந்தாள்.

‘’பரவாயில்லை புவனா தூங்கு’’

‘’என் மேல் வருத்தமில்லையே’’

‘’கண்டிப்பாக இல்லை, தூங்கு” என்று சொல்லி விட்டு தலையணையை எடுத்து வெறுந்தரையில் போட்டுக் கொண்டு படுத்துக் கொண்டான் சிவா.

அடுத்த நாள் மும்பைக்குப் புறப்பட, எல்லா பொருட்களையும் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள் புவனா.

கோகுலம்மாள் மறுநாள் பயணத்திற்கு வேண்டிய சாப்பாட்டிற்கான சமையலை செய்து கொண்டிருந்தாள். புவனாவின் அம்மா ஒரு பை நிறைய முறுக்கு, பணியாரம் எல்லாம் எடுத்துக் கொண்டு பெண்ணையும் பார்க்க வந்தாள்.

சமையற்கட்டிலிருந்து எட்டிப் பார்த்த கோகுலம்மாள், “வா ராணி. பெண்ணை மும்பைக்கு வழியனுப்ப என்னவெல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருக்கே” என்றாள் அருகில் வந்து பையை விரித்துப் பார்த்து

“அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கிறாயா?” சிவா குறுக்கிட்டான்.

“சும்மா இருடா, இது பெரியவங்க சமாச்சாரம். போய் உன் வேலையைப் பார்” என்ற கோகுலம்மாள் பையைப் பார்த்து விட்டு “ம்… கொஞ்சம் முறுக்கும் பணியாரமும் எடுத்துட்டு வந்துட்டா. பெரிசா ஏதாவது செய்வேன்னு நினைச்சேன். என் மகன் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். ஒழுங்கா பக்கத்தூர் ஆலமரத்தான் புதூரிலே பிரசிடெண்ட் வீட்டிலே பொண்ணு தாரேன்னாங்க. அங்கே கல்யாணம் பண்ணியிருந்தா சீரா வாரி இறைச்சிருப்பாங்க” முனங்கினார் கோகிலம்மாள்.

“இப்ப புள்ளைங்க பம்பாய்க்கு போறாங்க, அவங்களை ஒழுங்காக வழியனுப்ப பாருங்க”

அம்மா ராணிக்கு அப்போது வேறு எதுவும் பேசத் தோன்றவில்லை “ரெண்டாங் கல்யாணத்துக்கு இந்த ஆட்டம் போடுறாங்க” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.

“எனக்கு ஒரே தலைவலியாக இருக்கிறது. நீயாச்சும் உன் பொண்ணாச்சு. எல்லாம் நீங்களே பண்ணி எடுத்துட்டுப் போங்க” கோபமாகச் சொன்னவள், வராத தலைவலிக்காக போலியாக தலையைப் பிடித்து கொண்டு படுத்துக் கொண்டாள்.

வெளியே வந்த புவனா, “அம்மா நீ போய் விட்டு நாளைக்கு நாங்க ஸ்டேஷனுக்கு புறப்படும் போது வா. இரயில்வே ஸ்டேஷனில் பேசிக் கொள்ளலாம். வீணாக எங்க மாமியார் படபடப்பை வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டாம்” என்று ராணியின் கையிலிருந்த பையை வாங்கிக் கொண்டாள்.

“ஆனாலும் உன்னைப் பிடித்து கிணத்துக்குள்ளே தள்ளி விட்டேனோன்னுதான் தோன்றுகிறது. நான் வர்றேண்டி” என்று அழுது கொண்டே கிளம்பினாள் ராணி.

“மாமி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டுப் போங்களேன்” என்றான், அந்தப் பக்கம் வந்த சிவா.

புவனாவைப் பார்த்தபடி கண்களைத் துடைத்துக் கொண்ட ராணி, “இல்லை மாப்பிள்ளை. எனக்கு நிறைய வேலை இருக்கிறது, நான் வருகிறேன்” என்றவாறு வேகமாகச் சென்றாள் ராணி.

“என்ன புவனா, உங்க அம்மா அழுது கொண்டு போன மாதிரி இருக்கிறதே”

“ஒன்றுமில்லை”

“என் அம்மா ஏன் தான் இப்படி இருக்கிறார்கள் என்று புரியவில்லை”

“ஸ் ஸ்… அம்மா அங்கே படுத்திருக்கிறார்கள். நீங்கள் எதையாவது சொல்லி திரும்பவும் எதையாவது அவர்கள் குத்திக் காட்டப் போகிறார்கள். ஏற்கனெவே போலியாக தலைவலி சொல்லிட்டு சமையலை இடையிலே போட்டு விட்டு போய்ப் படுத்திருக்கிறார்கள். இனி அதையும் நான் தான் செய்யணும்”

“நான் கொஞ்சம் ஹெல்ப் பண்ணட்டுமா?”

“உங்கம்மாவிடம் கூட கொஞ்சம் திட்டு வாங்கிக் கொள்ளவா? சும்மா நல்ல பிள்ளையாட்டம் போய் துணியை மடிச்சு வைங்க”

“பாரு உனக்கு எவ்வளவு கஷ்டம்”

“பெண்களுக்கு இதெல்லாம் ரொம்பச் சாதாரண விஷயம்”

“என்னவோ போ. புவனா, இவ்வளவு அலைச்சலிலேயும் நீ ரொம்பா அழகாக இருக்கிறே” என்று அருகில் வந்தான்.

“அத்தான் அம்மா படுத்திருக்காங்க. இன்னும் நெறைய வேலகள் கிடக்குது. போய் துணிகளை மடித்து வையுங்கள்” என்று அவனைப் பிடித்துத் தள்ளி விட்டு சமையலறைக்குள் வந்தாள் புவனா.

காலையில் ரயில்நிலையத்திற்கு எல்லோரும் புறப்பட, திவ்யா எழுந்திருக்கிற போது சிவாவின் தம்பி அவளைத் தோளில் தூக்கிக் கொண்டான்.

இரண்டு கார்களில் எல்லாப் பொருட்களையும் சாமான்களையும் பெட்டியையும் பைகளையும் ஏற்றிக்கொள்ள, புவனாவின் அம்மா ராணி வேகமாக இரண்டு பைகளைத் தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து வந்தாள்.

“என்ன மாமி ரயிலுக்கு நேரமாகி விட்டது. கொஞ்சம் சீக்கிரம் வாருங்கள்” என்றான் சிவா.

“கொஞ்சம் பொறுங்கள் மாப்பிள்ளை” என்று சொன்ன ராணி வேகமாக கோவிந்தம்மாளிடம் வந்து, “என்ன மதினி இந்த பையெல்லாம் செம்மையா பார்த்துக் கொள்ளுங்கள். லட்டு, கேக், மைசூர்பாகுனு எல்லா அயிட்டமும் வாங்கிட்டு வந்திருக்கேன்”

“என்னவோ என் பிள்ளையை ஒன்றுமில்லாமல் அனுப்புவதாக நீங்கள் சும்மா குறை சொல்ல வேண்டாம்” என்று பைகளை அவள் முன்னால் வைத்தாள்.

“ம்… சரி. நான் சொன்ன பிறகு தானே கொண்டு வந்தாய். நேற்று சிவா சொன்ன போது நான் மௌனமாக இருந்திருந்தால் நீ இதையெல்லாம் கொண்டு வருவியாக்கும்?”

“மதனி நீங்க ரயிலுக்கு வரலியா?” என்றாள் ராணி

“நீதான் போறியே. நான் எதுக்கு? போய் ஒழுங்கா வழியனுப்பிட்டு வா. புவனாகிட்டே சிவாவை நல்ல முறையில் கவனிக்கச் சொல்லு” என்று வழியனுப்பி வைத்தாள்.

ரயில்நிலையத்திற்கு வந்ததும் சாமான்களை இறக்கி வைத்து விட்டு, கார்களுக்கு வாடகை பணம் கொடுத்து அனுப்பி விட்டு வந்தான் சிவா.

டிக்கெட் பரிசோதகர் வழி மறித்து டிக்கெட்டை பரிசோதித்து விட்டு, “இவ்வளவு பொருட்கள் கொண்டு போகிறீர்கள், மொத்தம் மூன்று பேர்தானே பயணம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்.

“ஆமா சார். பொருட்கள் அதிகம் வெயிட்டில்லை. நூற்றிருபது கிலோவிற்கு மேலே இருக்காது சார்” என்றான் சிவா.

ராணி அம்மாள் முந்திக் கொண்டு, “முதல் முதலாக மும்பைக்கு போறாங்க, இப்படி தடைக் கல்லாட்டம் சோதிக்க வந்து விட்டீர்களே” என்று கத்தினாள்.

என்ன நினைத்தாரோ டிக்கெட் பரிசோதகர். “சரி சரி போங்கள்” என்று நகர்ந்து விட்டார்.

ரயில்நிலையத்திற்குள் வந்ததும் பொருட்களை ஒரு பெஞ்சின் அருகில் வைத்து விட்டு புவனாவும் ராணி அம்மாளும் அமர்ந்தார்கள்.

திவ்யா தூக்கம் விழித்தெழுந்து, “அம்மா பால்” என்றாள் கண் விழிக்காமலே. ஞாபகமாக புவனா எடுத்து வந்திருந்த பிளாஸ்கை திறந்து பாட்டிலில் அடைத்து திவ்யாவின் வாயில் கொடுத்தாள்.

பாலைக் குடித்தவள் கண்ணைத் திறந்து, “அத்தா நாம் எங்கே வந்திருக்கோம்” என்றாள் திவ்யா.

“மும்பை போறதுக்கு அதான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்திருக்கோம், ரயில் வந்ததும் ஏறிப் போகணும்” என்றாள்.

“வா திவ்யா போய் முகம் கழுவி விட்டு வரலாம்” என்றான் சிவா.

“ம்கூம்” என்றாள் திவ்யா.

“சரி நீ அத்தாகிட்டே இருந்துக்கோ. நானும் மாமாவும் டீ குடிச்சிட்டு வரோம். புவனா உனக்கும் அம்மாவிற்கும் காபியா டீயா?” என்று கேட்டான் சிவா.

“எங்களுக்கு ஒன்றும் வேண்டாம். நீங்கள் போய் சாயா குடிச்சிட்டு வாங்க” என்றாள் புவனா.

“அப்பா நானும் வரட்டுமா” என்று எழுந்து சிவாவிடம் வந்தாள் திவ்யா.

“சரி வா” திவ்யாவைத் தூக்கிக் கொண்டு திவாகருடன் டீ கடைக்கு வந்தான் சிவா.

தொடரும் (புதன் தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    சிறந்த செல்வம் (சிறார்க்கான கதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

    அப்துல்லா அமிர்தம் அபிஷேக் (சிறுகதை) – ✍ தி.வள்ளி, திருநெல்வேலி