in ,

சிறந்த செல்வம் (சிறார்க்கான கதை) – ✍ கே.என்.சுவாமிநாதன், சென்னை

சிறந்த செல்வம் (சிறார்க்கான கதை)

ஜனவரி 2023 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு

குப்பில் ஆசிரியர் சிவராமன், “செல்வத்தில் சிறந்தது எது” என்று மாணவர்களைக் கேட்டார்.

“கார், வீடு, நிறையப் பணம், நகைகள், செல்போன், விளையாட்டு பொம்மைகள்” என்று மாணவர்கள் அவரவருக்கு விருப்பமானவற்றைக் கூறினார்கள்.

“சரி… நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன். அது முடிந்தவுடன் என்னுடைய கேள்விக்கு விடையளியுங்கள்” என்ற சிவராமன், கதை சொல்ல ஆரம்பித்தார்.

ராமநகரம் என்ற சிறிய ராஜ்யத்தில், தேவதத்தன், சோமதத்தன் என்று இரு நண்பர்கள் இருந்தார்கள். தேவதத்தனுக்குப் படிப்பில் ஆர்வம் அதிகம். வாழ்க்கையில் முன்னேறுவதற்குப் படிப்பு முக்கியம் என்று நினைப்பவன்.

சோமதத்தன் அவனுக்கு நேர்எதிர். வாழ்க்கைக்குப் பணம் தான் முக்கியம் என்று விவாதிப்பான். நிறையப் பணம் சேர்த்து பணக்காரன் ஆகி, வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவனுடைய லட்சியம்.

அந்த ராஜ்யத்தில் இருந்த குருகுலத்தில் படிப்பதற்காகச் சேர்ந்தான் தேவதத்தன். அந்த ராஜ்யத்தின் ராஜா ராஜசிம்மனின் மகன் இளவரசன் ஜெயசிம்மனும் குருகுலத்தில் தேவதத்தனுடன் படித்தான்.

குருகுலத்தில் படிப்பதற்காகச் சேர்ந்த சோமதத்தன், எழுதப் படிக்கத் தெரிந்து கொண்டவுடன் ‘என்னுடைய தேவை பணம்’ என்று வேலை தேடிப் போய் விட்டான்.

பத்து வருடம் குருகுலத்தில் படித்த தேவதத்தன், மொழி, வேதங்கள், இலக்கணம், தர்க்கம், கணிதம் ஆகிய எல்லாவற்றையும் கற்றான். அந்த நகரத்தில் அவன் கற்பதற்கு வேறு ஒன்றும் இல்லை என்ற நிலை வந்தது. இருந்தாலும் தேவதத்தனுடைய அறிவுப் பசி குறையவில்லை.

தேவதத்தனுடைய குரு அவனை உஜ்ஜயினி சென்று மேற்படிப்பு படிக்குமாறு கூறினார். உஜ்ஜயினியில் உயர்கல்வி படித்தால் அவனுடைய அறிவு மேலும் விசாலமடையும் என்று அறிவுறுத்தினார்.

தேவதத்தன், சோமதத்தனிடம் தான் உஜ்ஜயினிக்கு உயர்கல்வி படிக்கப் போவதாகக் கூறினான். சோமதத்தன் வேலை செய்து பணம் ஈட்டி வந்தாலும், பெரிய செல்வந்தனாக மாறுவதற்கு இது உதவாது என்று நினைத்தான்.

உஜ்ஜயினி மிகப் பெரிய நகரம். அங்கு உலகத்தின் பல பாகங்களிருந்தும் மக்கள் வந்து போவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறான் சோமதத்தன். பெரிய நகரங்களில் வேலை வாய்ப்பு அதிகம். சம்பளமும் அதிகம்.

உஜ்ஜயினி சென்று பணம் சேர்த்துப் பெரிய பணக்காரனாக சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற ஆசையில் சோமதத்தனும், தேவதத்தனுடன் உஜ்ஜயினிக்குப் புறப்பட்டுச் சென்றான்.

உஜ்ஜயினியில் குருகுலத்தில் சேர்ந்த தேவதத்தன், பல கலைகளிலும் கற்றுத் தேர்ந்தான். முக்கியமாக நாட்டை நிர்வகித்தல், நீதி நிர்வாகம், நிதி அறிவியல் போன்றவற்றில் அதிகக் கவனம் செலுத்தி வல்லுநர் என்ற பெயர் பெற்றான்.

படித்து முடித்தப் பின் உஜ்ஜயினி அரசில் மந்திரியின் உதவியாளராகப் பணியில் அமர்ந்தான். உஜ்ஜயினி பெரிய ராஜ்யம். அதன் கீழ் சில குறுநில மன்னர்கள் இருந்தார்கள். ஆகவே, உஜ்ஜயினி ராஜ்ய வேலை தேவதத்தனுக்கு ஒரு பயிற்சிக் களமாக உதவியது.

பெரிய நகரம் என்பதால் சோமதத்தனுக்கு வேலை கிடைப்பது எளிதாக இருந்தது. சோம்பல் இல்லாமல் உழைக்கும் தன்மை உடைய சோமதத்தன் நாளடைவில் நல்ல பொருளீட்ட ஆரம்பித்தான்.

பின்னர், தனியாகத் தொழில் தொடங்கி பொருட்களை வெளியூரிலிருந்து வாங்கி உள்ளூரில் விற்க ஆரம்பித்தான். பத்து வருடங்களில் பணம் நிறையச் சேர்த்து அத்தனையையும், நகையாகவும், தங்கக் கட்டிகளாகவும் மாற்றி வைத்துக் கொண்டான்.

பத்து வருடம் முடிந்தது. தேவதத்தனுக்குச் சொந்த ஊர் திரும்ப வேண்டும் என்ற ஆசை வந்தது. வேற்று நாட்டிற்கு வந்து நிறையக் கற்றுக் கொண்டது, சொந்த மண்ணிற்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.

நிறைய சம்பாதித்து, நகைகளாகவும், தங்கக் கட்டிகளாகவும் சேர்த்து வைத்திருக்கும் சோமதத்தனும், சொந்த ஊர் திரும்பி, சேர்த்த பணத்தில் வசதியுடன் வாழலாம் என்று நினைத்தான். இனி உழைக்க வேண்டிய அவசியமில்லை என்ற முடிவிற்கு வந்தான்.

உஜ்ஜயினியிலிருந்து ராமநகரத்தை அடைய அடர்ந்த காட்டைக் கடக்க வேண்டும். கொள்ளைக் கூட்டம் ஒன்று நண்பர்களை வழி மறித்தது. சோமதத்தனிடம் இருந்த பணம், நகைகள், தங்கக் கட்டிகளைத் திருடர்கள் பறித்துக் கொண்டார்கள்.

நிறையப் பணத்துடன் ஊர் திரும்பி வசதியாக வாழ ஆசைப்பட்ட சோமதத்தன், சேர்த்த செல்வம் அனைத்தையும் இழந்து ஏழையாகத் திரும்பி வந்தான்.

தேவதத்தனிடம் இருந்தது மற்றவர்களால் அபகரிக்க முடியாத கல்விச் செல்வம். அவன் அந்த ஒப்பற்ற கல்விச் செல்வத்துடன் சொந்த ஊர் திரும்பினான்.

ராஜசிம்மன் மறைவிற்குப் பின் அவனுடைய மகன் ஜெயசிம்மன் அரசனாக ஆண்டு வந்தான். மெத்தப் படித்தவனாகத் திரும்பி வந்த தேவதத்தனை, அவன் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான். அதிகம் படிக்காத சோமதத்தன் அரசுப் பணியில் சேவகனாக வேலையில் சேர்ந்தான்.

இப்போது சொல்லுங்கள், நான் கேட்ட கேள்விக்கு என்ன விடை?” என்றார் சிவராமன்.

மாணவர்கள் ஒரே குரலில் “கல்விதான் செல்வத்தில் சிறந்தது” என்று கூறினார்கள்.

ஆம், கல்வியைத் தவிர மற்ற செல்வங்கள் எல்லாம் அழியும் தன்மையுடையவை.

இதைத்தான் திருவள்ளுவர்

“கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு

மாடல்ல மற்றை யவை

என்று கூறினார்.

ஒருவனுக்கு கல்வி ஒன்றே அழிவில்லாத உயர்ந்த செல்வம். மற்றவையெல்லாம், அதைப் போல நிலையான செல்வங்கள் அல்ல.

அதிகப் பணச் செலவு செய்து திட்டமிட்டு கட்டிய வீடு, இயற்கைச் சீற்றத்தால் அழியலாம். செல்வத்தை மற்றவர்களுடன் பகிரும் போது, அதனுடைய அளவு குறையும். இயற்கைச் சீற்றம் கல்வி அறிவை சிதைக்காது.

நாம் கற்றவற்றை மற்றவருடன் பகிரும் போது, நம்மிடம் உள்ள கல்வியின் அளவு குறையாது.  மாறாக நம்முடைய அறிவு இன்னும் வலுப்படும்.

ஆகவே, மாணவர்களே, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

(முற்றும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நீ எனதின்னுயிர் கண்ணம்மா ❤ (பகுதி 4) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

    வாழ்க்கை எனும் கவிதை ❤ (நாவல் – அத்தியாயம் 5) – ✍ ”எழுத்துச் செம்மல்” இரஜகை நிலவன், மும்பை