in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 22) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17    பகுதி 18    பகுதி 19    பகுதி 20    பகுதி 21

“எனக்கு அம்மாவைப் போல் டாக்டராக வேண்டும் என்று ஆசை. அப்பாவைப் போல் வக்கீலாக வேண்டும் என்றும் ஆசை. தர்ஷணாக்கா, உங்களால் தான் எனக்கு அம்மா அப்பா என்ற சொர்க்கம் கிடைத்திருக்கிறது” என்றாள் உணர்ச்சிப்பூர்வமாக. அவள் தொண்டை கம்மியது.

“அடடா… உடனே சென்டிமென்ட், உடனே அழுகை. போதும் நித்யா நீ அழுத்தெல்லாம். அம்மாவும் அப்பாவும் உன்னிடம் எவ்வளவு பிரியமாக இருக்கிறார்களோ அதே அளவு நீயும் பிரியமாக இருக்க வேண்டும்”

மேலும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, “அங்கிள் மாதவன் அங்கிளிடம் பேச வேண்டும் என்றார்” என்றவள், போனை பிரகாசத்திடம் கொடுத்தாள். அவ்வளவு நேரமும் ரிஷி அவளையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான.

“தர்ஷணாவால் தான் நித்யா அவள் சித்தியின் கொடுமைகளிலிருந்து விடுபட்டாள்” என்று ரிஷிக்கு விளக்கிக் கூறினாள் சாந்தா. நித்யாவிற்கு அவள் சித்தி காலில் போட்ட சூட்டைப் பற்றியும் கூறினாள். இதெல்லாம் கேட்க ரிஷிக்கு ஆச்சர்யமாகவும், தர்ஷணாவை நினைத்துப் பெருமையாகவும் இருந்தது.

ரிஷி அமெரிக்காவில் இருந்து வந்திருப்பது பற்றியும், அவனும் தர்ஷணாவும் ஒருவரையொருவர் விரும்புவது பற்றியும் மாதவனிடம் கூறினார் ஜட்ஜ்  பிரகாசம். நித்யாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு, பிறகு விக்னேஷ், சியாமளா, மற்றும் அத்தையிடம் தர்ஷணாவை ரிஷிக்குப் பெண் கேட்கப் போவதாகவும் கூறினார்.

சாந்தாவும் பிரகாசமும் சென்னைக்குப் போன் செய்து, சியாமளா, விக்னேஷிடம், ரிஷி தர்ஷணாவை விரும்புவது பற்றிக் கூறினார்கள். தர்ஷணாவிற்கும் இதில் முழுச்சம்மதம் என்றும் கூறினார்கள். அதைப்பற்றி அவர்களின் சம்மதமும், அத்தையின் சம்மதமும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

சியாமளாவிற்கும் விக்னேஷிற்கும் நம்ப முடியவில்லை, கொஞ்சம் பயமாகவும் இருந்தது. மாதவன் சாரின் மிகுந்த மதிப்பிற்குரியவர் ஜட்ஜ் பிரகாசம், அவர்கள் குடும்பத்தின் பாரம்பரியம் பற்றியும் செல்வாக்கைப் பற்றியும் மாதவனே அடிக்கடி பேசுவார். அப்படிப்பட்ட  குடும்பத்தினருடன் சம்பந்தம் செய்து, தங்களால் அவர்களுக்கு ஏற்றாற் போல் சீர்வரிசை செய்ய முடியுமா? அகலக்கால் வைத்துப் பிறகு வீழ்ந்து விடக் கூடாதல்லவா? இந்த தர்ஷணாவிற்கு தகுதிக்கு மேல் பறப்பதே  வழக்கமாகி விட்டது. உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா? என்று பலவாறு யோசித்துப் பயந்தாள் சியாமளா.

அத்தை தான் தைரியம் கூறினார். “எல்லோருமே பணத்திற்கு முதலிடம் கொடுக்க மாட்டார்கள். பணம் தான் பெரியதென்றால் அவர்களே வலிய வந்து உங்களிடம் போனில் பேசி விஷயத்தை சொல்லியிருக்க மாட்டார்கள் சியாமளா. நீ ஏன் அநாவசியமாகப் பயப்படுகிறாய்?”

இப்போதெல்லாம் தர்ஷணா எங்கும் தனியாகப் போக ரிஷி அனுமதிப்பதில்லை. பைக்கிலோ அல்லது காரிலோ ரிஷிதான் அழைத்துச் செல்வான்.

அன்று இரவு டியூட்டி, தர்ஷணா கொஞ்சம் டென்ஷனாகவே கிளம்பினாள்.

“ஏன் ரொம்ப டென்ஷனாக இருக்கிறாய் தர்ஷணா?”  என்றான் ரிஷி அவளைக் காரில் அழைத்துப் போகும் போது.

“இன்று ஒரு பெண்ணுக்கு டெலிவரி. நார்மல் டெலிவரி இல்லை . சிசேரியன்”

“ஒரு கைனகாலஜிஸ்ட், நல்ல எக்ஸ்பீரியன்ஸ்ட் டாக்டர். ஸர்ஜரிக்குப் பயப்படுவதா, அதுவும் என் தர்ஷணா?” என்று அருகில் உட்கார்ந்திருந்த தர்ஷணாவின் கைகளை அழுத்தினான். பிறகு எடுத்து நெஞ்சில் வைத்துக் கொண்டான். அவனை இன்னும் நெருங்கி இடித்துக் கொண்டு உட்கார்ந்த தர்ஷணவை வியப்புடன் பார்த்தான் ரிஷி.

“நீ இப்படி இடித்தால் டோர் லாக் ஓப்பன் ஆகி வெளியே போய் விழுந்து விடுவேன் போலிருக்கிறதே” என்றான் சிரித்துக் கொண்டே.

“உங்களைத் தொட்டுக் கொண்டு உட்காரந்தால் உங்கள் தைரியம் எனக்கு வருவது போல் இருக்கிறது”

“இன்று என்ன ஆயிற்று தர்ஷணா உனக்கு?”

“நான் ஏன் இவ்வளவு டென்ஷனாக இருக்கிறேன் தெரியுமா? இன்று நாங்கள் டெலிவரி பார்க்கும் பெண் யார் தெரியுமா?  அகல்யா, உங்களை வேண்டாமென்று நிராகரித்து விட்டுப் போனாளே அந்தப் பெண்தான்”

“இருக்கட்டுமே, அதற்கு  நீ ஏன் டென்ஷன் ஆக வேண்டும்?” என்றான் சாதாரணமாக.

“அவள் என்னை என்ன கேட்டாள் தெரியுமா? என் மேல் உள்ள கோபத்தில் என்னை ஏதாவது செய்து விடுவீர்களா என்றாள்”

“அதற்கு நீ என்ன சொன்னாய்?”

“என்னை எங்கே பேச விட்டாள்? வலியில் கத்தத் தொடங்கி விட்டாள். தொப்புள்கொடி  குழந்தையின்  கழுத்தில் சுற்றிக் கொண்டிருப்பதால் தான் இந்த அர்ஜன்ட் சர்ஜரி. அவள் பேசியதை மிருதுளாவிடம் சொன்னேன், அதனால் மிருதுளாவும் வந்து  இங்கே சப்போர்ட் செய்வதாகக் கூறியிருக்கிறார்”

“வெரி குட், பி சியர்புல்” என்று அவளை இறக்கி விட்டான். கிளம்பும் போது அவளுக்கு ஒரு ப்ளையிங்-கிஸ் கொடுத்து அனுப்பினான்.

அடுத்த நாள் காலை ஆறு மணிக்குத் தான் தர்ஷணாவிடமிருந்து மெஸேஜ் வந்தது, “ஸர்ஜரி சக்ஸஸ்புல்’லாக முடிந்தது” என்று. அவளைப் பிக்கப் செய்து கொள்ளப் போனான் ரிஷி.

“ரிஷி, என்னால் இப்போது  டிரைவ் செய்ய முடியும் என்று தோன்றவில்லை, ரொம்ப டயர்ட். பிளீஸ் என்னையும் என் வீட்டில் டிராப் செய்து விடுகிறீர்களா? போய் குளித்து விட்டுப் படுக்க வேண்டும், சாப்பாடு கூட வேண்டாம் போலிருக்கிறது” என்றாள் மிருதுளா மிகவும் களைப்புடன் .

“ஏறுங்கள் மிருதுளா, நீங்கள் பாவம் தர்ஷணாவிற்கு ஹெல்ப் செய்யத்தானே  வந்தீர்கள். காபி டிபன் ஏதாவது சாப்பிட்டு விட்டுப் போகலாமா?  அப்போதுதான்  கொஞ்சமாவது களைப்பு போகும்”

“குளிக்காமல் என்னால் ஒன்றும் முடியாது ரிஷி. பெண்ணா அவள், சரியான அராத்து. காட்டுக் கத்தல், பஜாரி… காதே பிய்த்துக் கொண்டு போய்க் கொண்டு போய் விட்டது” என்றாள் மிருதுளா.

“ஏய் மிருதுளா, திட்டாதே. அவள் வலி  எப்படி இருக்கும் என்று நமக்கு எப்படித் தெரியும் பாவம்” என்றாள் தர்ஷணா.

மிருதுளாவை இறக்கி விட்ட ரிஷி, தர்ஷணாவை வீட்டிற்கு அழைத்துச் சென்றவன், திடீரென சிரித்தான்.

“எதற்கு இப்போது காரணம் இல்லாமல் சிரிக்கிறீர்கள்?” என தர்ஷணா கேட்க

“நீ சொன்ன வார்த்தைகள் தான் எனக்கு சிரிப்பு வந்தது”

“நான் என்ன சொன்னேன்?”

“அவள் வலி எப்படியிருக்கும் என்று நமக்குத் தெரியுமா என்றாய் அல்லவா? கூடிய சீக்கிரம் உனக்கும் தெரியும் என்று  நினைத்துக் கொண்டேன், அது தான் சிரிப்பு வந்தது”

“சீ” என்று அவன் தொட்டையில் தட்டியவள், மிக அருகில் வந்து உட்கார்ந்து அவன் தோள் மேல் தன் தலையைச் சாய்த்துக் கொண்டாள்.

“அந்த அகல்யா என்ன கேட்டாள் தெரியுமா?”

“என்ன கேட்டாள்?”

“நீ தானே அந்த அமெரிக்க டாக்டர் ரிஷியுடன் சுற்றும் பெண். என் மேல் உள்ள கோபத்தில் என்னையோ அல்லது என் குழந்தையையோ ஒன்றும் செய்து விடாதே  என்றாள்”

“நீ என்ன சொன்னாய்?”

“போடி பைத்தியம். எனக்கு  உன் மேல் என்ன கோபம்? நான் உனக்கு நன்றி தான்  சொல்ல வேண்டும். நீ கோபித்துக் கொண்டு போனதால் தான் எனக்கு என் ரிஷி கிடைத்திருக்கிறார்.  அதுவுமல்லாமல் எந்த டாக்டரும் தனிப்பட்ட கோபத்தில் எந்த பேஷண்டையும் பழி வாங்க மாட்டாள் என்று சொன்னேன்”

“நான் இப்போது எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறேன் என்று அவளுக்கு எப்படித் தெரியும் ? சரி அவள் பேச்சை விடு. நீ வீட்டிற்குப் போய் குளித்து சாப்பிட்டு விட்டுப் படு, அப்போது தான் நல்ல ரெஸ்ட் எடுக்க முடியும்” என்றான் ரிஷி.

குளித்து ரெஸ்ட் எடுத்து விட்டு சாந்தா பார்த்துப் பார்த்து செய்த லஞ்ச்சையும் சாப்பிட்டு விட்டு தன் அறையில் ஏ.சி’யைப்  போட்டு, கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு படுத்தாள்.

தர்ஷணா நைட் டியூட்டி முடித்து விட்டு வந்தால், சாந்தா எண்ணெய்  அதிகம் இல்லாத சாப்பாடு தான் செய்யச் சொல்வாள். அதிகக் காரம் இருக்காது, கட்டாயம் ஒரு பாயசம் இருக்கும். அதனால் சாப்பிட்டுப் படுத்தவுடன் தூக்கம் அப்படியே இழுத்துக் கொண்டு போகும். களைப்பில் புத்தகம் ஒரு புறம் நழுவ, போர்வையையும் சரியாகப் போர்த்திக் கொள்ளாமல் தூங்கி விட்டாள் தர்ஷணா.

ஏதோ பேச வேண்டுமென்று உள்ளே நுழைந்த சாந்தா, கீழே கிடந்த புத்தகத்தை எடுத்து பக்கத்திலிருந்த சிறிய டேபிள் மேல் வைத்து விட்டு, போர்வையையும் ஒழுங்காகப் போர்த்தி விட்டாள். திறந்திருந்த ஜன்னல்களின் ‘பிளைண்ட்ஸ்’களையும் மூடினாள். சப்தமில்லாமல் மெதுவாகக் கதவைச் சாத்திக் கொண்டு சத்தம் செய்யாமல் வெளியே  வந்தாள்.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நடுத் தெருவில் (சிறுகதை – முற்பகுதி) – நாமக்கல் வேலு

    மலர்களே மலருங்கள்! (சிறுகதை) – சாமுண்டீஸ்வரி பன்னீர்செல்வம்