in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 20) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17    பகுதி 18    பகுதி 19

“திருமணத்திற்காக என் நண்பர்களை அமெரிக்காவிலிருந்து  வரவழைத்தேன், எல்லோர் எதிரிலும் அசிங்கமாக அவமானமாகப் போய் விட்டது தர்ஷணா”

“திருமணத்திற்கு முன் அந்தப் பெண்ணிடம் நீங்கள் அவள் விருப்பத்தைக் கேட்கவில்லையா?

“நான் பலமுறை அவளுக்கு போன் செய்தேன் தர்ஷணா, ஆனால் அந்தப் பெண் போனே எடுக்கவில்லை. அம்மாவும், அப்பாவுமோ ‘இதெல்லாம் கிராமம், ரொம்பக் கட்டுப்பாடுகளோடு வளரத்திருப்பார்கள். திருமணத்திற்கு முன் இங்கெல்லாம் பெண்கள் அன்னியரோடு பேச மாட்டார்கள்’ என்று கூறி விட்டார்கள். அதனால் தான் ஏமாந்து விட்டேன்”

“அப்போ தவறு உங்களுடையதில்லை, பிறகு ஏன் சார் வாழ்க்கையை  வீண்டிக்கிறீர்கள்?”

“என்னை இவ்வளவு கேள்விகள் கேட்கிறீர்களே தர்ஷணா, நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை?”

“என்ன சார், நீங்கள் இவ்வளவு அழகாக இருக்கிறீர்கள், அமெரிக்காவில் வேலை செய்கிறீர்கள், உங்களுக்கே இந்த நிலை. நானோ சரியான கருப்பு, தெற்றுப் பல் வேறு… எனக்கெல்லாம் அவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்க்கை அமையாது சார்” என்றாள் தர்ஷணா சோகமாய்.

சமையல் அறையில் இருந்த நீலா, வாயைக் கையால் பொத்தி சப்தம் வராமல்  சிரித்துக் கொண்டிருந்தாள்.

“சரிங்க டாக்டர் சார், நீங்கள் நாளை இதேநேரம் உங்கள் அம்மா அப்பாவுடன் பேசுங்கள். ஆன்ட்டிதான் சொல்லச் சொன்னார்கள், நான் போனை வைத்து விடுகிறேன்” என்று வைத்து விட்டாள்.

“ஏய் நீலா, நான் போனில் பேசும் போது நீ இப்படித்தான் சிரிப்பதா?” என்றாள் தர்ஷணா நீலாவைப் பார்த்து. பிறகு இருவருமாக ரொம்ப நேரம் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் பொழுதைக் கழித்தனர்.

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வேலைக்குக் கிளம்பி விட்டாள் தர்ஷணா. அவள் கிளம்பிய பிறகு, போனில் தர்ஷணா ரிஷியுடன் பேசியதை ஜட்ஜிடமும் அவர் மனைவியிடமும் அப்படியே நடித்துக் காட்டினாள் நீலா. அதைக் கேட்டு இருவரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

உடனே தன் செல்போனில் இருந்த தர்ஷணாவின் போட்டோவை ரிஷிக்கு வாட்ஸ்அப்’பில் அனுப்பினாள் சாந்தா. கொஞ்ச நேரத்திற்கெல்லாம் ரிஷியிடமிருந்து போன்.

“அம்மா நீங்கள் இப்போது அனுப்பிய போட்டோ யாருடையது?” என்று கேட்டான் ரிஷி

“போட்டோவில் இருப்பது தான் தர்ஷணா. நேற்று உன்னிடம் அவள் பேசியதெல்லாம் பச்சைப் பொய். சரியான வாலு, ஒண்ணாம் நம்பர் வாயாடி. ஆனால் ரொம்ப நல்ல பெண். நல்ல அழகி , மஞ்சள் நிறம். நீ அவளிடம் மறுபடியும் பேசினால் நான் சொன்னதெல்லாம் தெரியாதது போல் பேசு. இன்னும் என்ன என்ன ரீல் ஓட்டுகிறாள் என்று பார்ப்போம்” என்று சிரித்தாள் சாந்தா .

போனின் மறுபக்கமிருந்து கலகலவென்று சிரித்தான் ரிஷி.

“இன்னும் ஒரு வாரத்தில் என் வேலை விஷயமாக டெல்லி  வர வேண்டியிருக்கிறது. அப்போது அப்படியே கோவை  வந்து இரண்டு வாரம் தங்குவேன். அதெல்லாம் நீ தர்ஷணாவிடம் சொல்ல வேண்டாம். நேரில் பார்த்தால் எப்படி ‘ரியாக்ட்’  பண்ணுகிறாள் பார்க்கலாம்” என்றான் .

“நாங்கள் சென்னை வந்தால் உன்னைப் பார்க்க முடியுமா?”

“நோ நோ, நான் சென்னைக்கே வர மாட்டேன். டெல்லி வந்த பிறகு அங்கிருந்து நேரே கோயம்பத்தூர் தான். நிறைய வேலை இருக்கிறது அம்மா, வைத்து விடுகிறேன்”

மிக உற்சாகமாகப் பேசினான் ரிஷி. “தாய் நாட்டிற்கு வரும் சந்தோஷமா அல்லது தர்ஷணாவைப் பார்க்கப் போகும் எக்ஸைட்மென்ட்டா?” என்று ஆச்சர்யப்பட்டாள் சாந்தா.

மகன் வரப் போவதைத் தன் கணவரிடம் மட்டும் கூறினாள் சாந்தா, நீலாவிடம் கூடச் சொல்லவில்லை. ஏனெனில் தர்ஷணா கிச்சன் மேடை மீது ஏறி உட்கார்ந்து நீலாவுடன் சமமாக லொடலொடவென்று அரட்டை அடிப்பாள். புதிதாக ரிலீஸ் ஆகப் போகும் படங்களைப் பற்றிப் பேசுவாள். ஏதாவது நடித்துக் காட்டுவாள், உடனே நீலா எல்லா விஷயங்களையும் கொட்டி விடுவாள். அதுவுமில்லாமல் நீலாவிற்கு தர்ஷணாவிடம் பிரியம் அதிகம். இவ்வளவு அழகான ஒரு டாக்டர் தன்னுடன் சம்மாக ஒரு அழகியைப் போல் பழகுவதால் ஒரு பெருமை, ஒரு சந்தோஷம். அதனால் தர்ஷணா கேட்காமலே எல்லாவற்றையும் நீலா உளறி விடுவாள். அதை வைத்துக் கொண்டு தர்ஷணா ரொம்ப ஆட்டம் போடுவாள்.

சாந்தாவால் ரிஷி ஊருக்கு வரும் அன்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதிகாலையில் எழுந்து விட்டாள், ஹாலுக்கும் ரூமிற்குமாக அலைந்து கொண்டிருந்தாள். தர்ஷணா கூட கவனித்தாள்.

“ஆன்ட்டி, ஏன் இன்று இப்படி டென்ஷனாக இருக்கிறீர்கள்? கல்யாணத் தரகர் யாராவது ஜாதகம் கொண்டு வருவதாகக் கூறியிருக்கிறார்களா?” என்றாள் கிண்டலாக.

“போதுமே, இனி எந்தத் தரகரும் தேவையில்லை “ என்றாள் சாந்தாவாயெல்லாம் பல்லாக.

“ஜட்ஜ் அங்கிள், ஆன்ட்டி நிலமை சரியில்லை. தனக்குள்ளே பேசி தனக்குள்ளே சிரிக்கிறார்கள், கவனித்தீர்களா? ஸோ  சேட்” என்றாள்.

பிறகு சாந்தாவிடம், “ஆன்ட்டி , நான் வீட்டிற்கு  வர கொஞ்சம் நேரம் ஆகும். இந்த ஊர் மருத்துவமனையில் வைத்தியம் பார்த்துக் கொண்டவருக்கு, கோவை அரசு மருத்துவமனையில் ஸர்ஜரி செய்ய வேண்டும். அங்கே தான் இரத்த சேமிப்பு வங்கி இருக்கிறது, அதனால் நான் வீட்டிற்கு வர கொஞ்சம் தாமதம் ஆகும்” என்று கூறி விட்டு, புதிதாக வாங்கிய ஸ்கூட்டியில் பறந்தாள்.

மதியம் இரண்டு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வந்து விட்டான் ரிஷி. வாய் விட்டுக் கேட்கவில்லையே தவிர, அவன் கண்கள் தர்ஷணாவைத் தேடி அலை பாய்ந்தன. அவன் அம்மா புரிந்து கொண்டாள், ஆனால் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளவில்லை.

நீலாவுடன் சாந்தாவும் மகனுக்காக இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். ரிஷி ஹால் சோபாவில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தான். “மணி ஏழாகி விட்டதே, இன்னும் தர்ஷணாவைக் காணோமே” என்று வாசலுக்கும் சமையலுக்குமாக அலைந்து  கொண்டிருந்தாள்  சாந்தா. அப்போது ஒரு காரில் வந்து இறங்கினாள் தர்ஷணா.

“ தர்ஷணா, யார் வீட்டுக் கார் அது?” என்றார் சாந்தா.

“சீப் டாக்டரின் கார் ஆன்ட்டி. ரொம்ப நேரமாகி விட்டது, அதனால் கொண்டு வந்து டிராப் செய்து விட்டுப் போனார். உங்களை ரொம்ப காக்க வைத்து விட்டேனா?” என்றவாறு குதித்துக் கொண்டே உள்ளே நுழைந்தவள், ரிஷியைப் பார்த்துச் சற்றே தயங்கினாள். அவன் முதுகு தான் தெரிந்தது, முகம் தெரியவில்லை.

“யார் ஆன்ட்டி அது? யாராக இருந்தாலும் அங்கிள் ஆபீஸ் அறையுடன் அனுப்பி விடுவாரே, இவர் ஏன் உள்ளே வந்தார்?” என்றாள் தர்ஷணா.

“நீ குளித்து விட்டு வா, பிறகு பேசிக் கொள்ளலாம்” என்றவாறு உள்ளே போய் விட்டாள் சாந்தா.

குளித்து விட்டு வெளிர் நீலநிற ஜீன்ஸ் பேண்டும், அடர் நீலநிற குர்த்தியுமாக வந்தாள். தலை குளித்து ட்ரையர் போட்டிருந்தாள். அந்த நீலநிற உடையில், கடல் நடுவே எழுந்த கடல்கன்னி போல் இருந்தாள். ஹாலுக்கு வந்தவள், உட்கார்ந்திருந்தவன் யாரென்று யோசித்தாள். போட்டோவில் பார்த்த அதே ரிஷி, இவன் எப்படி திடீரென்று இங்கே வந்தான் என்று நினைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

உட்கார்ந்திருந்தவன்  எழுந்து வந்து அவள் கண் முன் விரல்களை அசைத்து சொடக்குப் போட்டான். “ஹலோ, நீங்கள் யார்? ஏன் என் வீட்டில் இருக்ககிறீர்கள்?” என்று கேட்டான்.

அப்போது தான் தூக்கம் கலைந்தவள் போல் திடுக்கிட்டு விழித்தவள், “நீ… நீங்கள் ரிஷி தானே. எப்படி திடீரென்று? ஆன்ட்டி கூடச் சொல்லவேயில்லையே” என்றாள் திக்கித் தடுமாறி.

“நான் ரிஷி தான், நீங்கள் யார்? நீங்கள் எப்படி ஏன் இங்கே எங்கள் வீட்டில், அதுவும் இந்த நேரத்தில்?” என்று கேள்விகளை அடுக்கினான் ரிஷி.

அவனைத் திடீரென்று பார்த்த திகைப்பு மாறாததால், தர்ஷணாவிற்கு ஏற்கெனவே அவனிடம் கலாட்டாவாகப் பேசிய டெலிபோன் பேச்சு மறந்தே போச்சு.

“நான் தர்ஷணா, உங்களிடம் கூட அன்று போனில் பேசினேனே?” என்றாள்.

“திருட்டுக் கழுதை. ‘நான் ரொம்பக் கறுப்பு, தெற்றுப்பல் வேறு’ என்றா சொன்னாய். பளிங்கு மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஏண்டி பொய் சொன்னாய்? போக்கிரி” என்று அப்போது அங்கு வந்த சாந்தா, அவள் காதைப் பிடித்துத் திருகினாள்.

“ஆ… வலிக்கிறது ஆன்ட்டி” என்று காதைத் தேய்த்துக் கொண்டு சிணுங்கினாள் தர்ஷணா.

தர்ஷணாவிற்குக் குடிக்க ஜூஸ் கொண்டு வந்த நீலா அதைப் பார்த்து சிரித்தாள். “எல்லாம் உன் வேலையா?”  என்று அவளை முறைத்தாள் தர்ஷணா. இவை எல்லாவற்றையும் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான் ரிஷி .

“ரிஷி சார், நீங்கள் எப்படி திடீரென்று இங்கே?”

“நான் ரிஷி மட்டும் தான், ரிஷி சார் இல்லை. நீங்கள் ஒரு டிராமா ஆடினீர்கள், அதற்கு பதிலாக அம்மா உங்களுக்கு ஒரு ஆச்சர்யம் கொடுத்தார்கள்” என்று கலகலவென்று சிரித்தான்.

அவன் சிரிக்கும் போது, வெள்ளை வெளேரென்ற பல் வரிசை அவன் நிறத்துடன் போட்டி போடுவதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டாள். அவள் உற்றுப் பார்ப்பதைப் பார்த்து விசில் அடித்தான் ரிஷி, வெட்கத்தால் சிவந்து தாழ்ந்தது தர்ஷணாவின் முகம். வெள்ளை வெளேரென்ற முகம் இப்படி திடீரென்று சிவக்குமா? ஆச்சர்யப்பட்டான் ரிஷி .

சாந்தாவோ, நீலா அவளிடம் தர்ஷணா போலவே பேசி நடித்துக் காட்டியது முதல் ரிஷி வந்து சேர்ந்தது வரை எல்லாவற்றையும் சொல்லிவிட்டு சமையலறைக்குள் சென்று விட்டாள்.

 “சாரி, உங்களிடம் பொய் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. கொஞ்சம் கலாட்டா செய்து விட்டேன்” என்றாள் தர்ஷணா மெதுவாக, ரிஷியிடம்.

அவனோ இன்னும் மெதுவாக, “எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றான் அவளைக் குறும்பாகப் பார்த்து சிரித்துக் கொண்டே. அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு உள்ளே ஓடி விட்டாள் தர்ஷணா.

அடுத்த நாள் முதல், ரிஷி எழுந்து ரெடியாவதற்குள் மருத்துவமனைக்கு கிளம்பி விடுவாள் தர்ஷணா. மாலையில் பணியிலிருந்து திரும்பியவுடன் நீலாவையோ அல்லது சாந்தாவையோ அழைத்துக் கொண்டு எங்காவது வெளியே போய் விடுவாள். ரிஷி அவளுடன் பேசவே முடியவில்லை. இப்படியே மூன்று நாட்கள் ஓடி விட்டன.

நான்காவது நாள், இன்-பேஷண்ட்டுகளைப் பார்வையிட்டுத் தர்ஷணா தன் இருக்கைக்கு வந்த போது, அவளுக்காகக்   காத்திருந்தான் ரிஷி.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஆசை அதிகம் வச்சு (சிறுகதை) -M.மனோஜ் குமார்

    மதி வதனா (பகுதி 2) – ராஜேஸ்வரி