in ,

உறவுகள் பிரிவதில்லை ❤ (பகுதி 19) – ✍ பானுமதி பார்த்தசாரதி, சென்னை

2023-24 நாவல்/சிறுகதைப் போட்டிக்கான பதிவு

மொத்தப் பரிசுத்தொகை ரூபாய் 10,000 + எங்கள் பதிப்பக செலவில் புத்தகம் பதிப்பிக்கும் வாய்ப்பு

நீங்களும் இந்த போட்டியில் உங்கள் சிறுகதை அல்லது நாவலை பதிவிட விரும்பினால், contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Login ID உருவாக்கித் தரச்சொல்லி ஈமெயில் செய்யலாம். மறக்காமல் உங்கள் பெயர் மற்றும் ஈமெயில் முகவரி பகிரவும். பரிசு வெல்ல அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Click the picture below for complete details of the contest

இனி கதை வாசிக்கலாம் வாருங்கள்…

பகுதி 1    பகுதி 2     பகுதி 3   பகுதி 4   பகுதி 5   பகுதி 6   பகுதி 7   பகுதி 8 பகுதி 9   பகுதி 10   பகுதி 11   பகுதி 12    பகுதி 13    பகுதி 14     பகுதி 15     பகுதி 16    பகுதி 17    பகுதி 18

“நீ என்ன சொல்கிறாய் நித்யா? இதற்கு மேலும் இவர்களோடு இருக்க விரும்புகிறாயா? நீ உன் அம்மாவிடம் கொஞ்ச நாள் இரு, நிர்மலா உன்னை உயிராகப் பார்த்துக் கொள்வாள். மாதவனைப் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும், உனக்கு அவர்களிடம் பிடிக்கவில்லையென்றால் எங்களிடம் வந்து விடம்மா. என் மகள் மாதிரி தான் நிர்மலா, என் நிர்மலாவின் மகள் எனக்கு பேத்தி மாதிரி தான்” உணர்ச்சிவசப்பட்டு பேசினார் ஜட்ஜ்.

“நீங்களே ஒருவர் மாற்றி ஒருவர் பேசிக் கொண்டிருந்தால் எப்படி? நாங்கள் சொல்வதையும் கேளுங்கள்” என்றாள் நித்யாவின் சித்தி .

“போதும் அம்மா, இத்தனை வருடங்களாக நீங்கள் பேசிக் கேட்டது போதும். தண்டனை பெறுவதற்கான தவறை நீங்கள் செய்திருக்கிறீர்கள், இனிமேல் நீங்கள் நித்யாவின் வாழ்வில் குறுக்கிடக் கூடாது. நீங்கள் இருவரும் இங்கிருந்து போய் விடுங்கள். நித்யாவோ நிர்மலாவோ உங்கள் மேல் காவல்துறையில்  கம்ப்ளெயிண்ட்’ கொடுத்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவீர்கள்” என்றார் ஜட்ஜ் கடுமையாக.

“அந்த காயத்திற்கு வைத்தியம் செய்த மருத்துவர் என்ற முறையில் ஒரு பொதுநல வழக்கு கூட நான் போட முடியும், இல்லையா அங்கிள்?” என்றாள் தர்ஷணா.

“தாராளமாக” என்றார் ஜட்ஜ்.

நித்யாவின் அப்பாவும் சித்தியும் கோபமாக வெளியேறினார்கள். நித்யாவின் கையைப் பிடித்து நிர்மலாவிடமும்  மாதவனிடமும் ஒப்புவித்தாள் சியாமளா.

“இது பொக்கிஷம், இதைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு” என்றாள் உணர்ச்சிப்பூர்வமாக. உணர்ச்சி மிகுதியால் அவள் கண்களில் நீர் தேங்கியது.

“நாங்கள் பலமுறை கேட்டும் கிடைக்காத செல்வத்தை எங்களிடம் கொடுத்தாய் தர்ஷணா. என்ன இருந்தாலும் நீ கிரேட் தான்” என்று நிர்மலாவும் மாதவனும் கொண்டாடினர் .

அன்று டின்னர் முடிந்தபின் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சியாமளா ஜட்ஜ்  பிரகாசத்திடம், தான் அவரிடம் அவ்வாறு பேசியதற்காகக் மன்னிப்புக் கேட்டாள்.

“நீ பேசியதில் ஒன்றும் தவறில்லை சியாமளா. அவர்களை மட்டும் இங்கே வரவழைத்துப் பார்க்காமல், நானும் தற்செயலாகப் போவது போல் அவர்கள் வீட்டிற்குப் போய் விசாரித்திருக்க வேண்டும்” என்று வருத்தப்பட்டார்.

 “நித்யா, உன் அம்மாவும் மாதவன் அங்கிளும் கிடைத்தற்கரியவர்கள். இத்தனை நாள் நீ வாழ்ந்ததற்கும், இனிமேல் வாழப் போகும் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கலாம். நிர்மலா அக்காவின் மகளாக இருந்தும் கூட, நீ இத்தனை கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாய். எல்லாம் நேரம்” என்று பெருமூச்சு விட்டாள் தர்ஷணா.

விக்னேஷ் அவளை வியப்புடன் பார்த்தான். “தர்ஷணா பேசுவதைப் பாரேன், பெரிய பாட்டி போல்” என்றான் சியாமளாவிடம்.

நித்யா முதன் முதலாக வாயைத்திறந்தாள். “நான் இத்தனை நாள் என் அம்மாவை சரியாகப் புரிந்து கொள்ளாமல் மட்டமாக நடந்தேன். மாதவன் அப்பாவையும் இப்போது தான் புரிந்து கொண்டேன். இவர்கள் என் மேல் காட்டும் அன்பிற்கு நான் தகுதியானவளா என்றே என் மனம் வேதனைப்படுகிறது” என்றாள் கண்ணீர் வழிய.

நிர்மலா எழுந்து வந்து அவளருகில் அமர்ந்து அவள் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டாள். “நீ இப்போது எங்களை அப்பா அம்மா என்று ஏற்றுக் கொண்டாய் அல்லவா, எங்களுக்கு அதுவே போதும். போனதெல்லாம் போகட்டும் நித்யா. இனிமேல்  நீ சந்தோஷமாகவும், ஆரோக்யமாகவும், யாருக்கும் பயப்படாமலும் இருக்க வேண்டும். சியாமளா, தர்ஷணா, அவர்கள் தம்பி மூவரும் பெற்றோரை இழந்து, பல கோடி மதிப்பான சொத்துக்களை இழந்து தான் விக்னேஷ் வீட்டிற்கு வந்தார்கள். ஆனால் நீ உன் அம்மா, அப்பாவிடம் தான் வரப் போகிறாய், ஆதலால் எந்த பயமும் இல்லாமல் வாழ வேண்டும். உனக்கு நல்ல சினேகிதியாக தர்ஷணாவை நினைத்துக் கொள். சியாமளா மனிதாபமிக்க நல்ல ஆசிரியை. எல்லோருடனும் கலந்து பேசினால் தான் அடைப்பட்ட மனதிற்கு ஆக்ஸிஜன்  கிடைக்கும்” என்றாள்.

“சரிம்மா” என்ற நித்யா, “அந்த வீட்டில் இருக்கும் என் முக்கியமான புக்ஸ், டிரஸ், எல்லாம் வேண்டுமே” என்றாள்.

“நான் தர்ஷணாவுடன் போய் எல்லாவற்றையும் எடுத்து வந்து உனக்கு அனுப்பி விடுகிறேன்” என்றார் பிரகாசம்.

தன்மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் பெற்றோருடன் சென்னையில் ஐக்கியமாகி விட்டாள் நித்யா. அவளுக்கு முறையாக வாய்ப்பாட்டும், பரதநாட்டியமும் கற்றுத்தர ஆசிரியர்களை அமர்த்தினார் மாதவன். எல்லோரிடமும் “என் பெண் நித்யா” என்று அறிமுகப்படுத்தினார் .

தர்ஷணாவும் கோவை வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்து விட்டன. விஷ்ணு அவன் விரும்பியபடியே அண்ணா பல்கலைகழகத்தில் கம்ப்யூட்டர் இஞ்ஜினீயரிங் இரண்டாம் ஆண்டு படிக்கின்றான்.  ரோஷிணி கூட பிளே  ஸ்கூல் போகத் தொடங்கி விட்டாள். ஜட்ஜ் பிரகாசமும் அவர் மனைவி சாந்தாவும், தர்ஷணாவைத் தனியே வீடு எடுத்து வசிக்க அனுமதிக்கவில்லை.

“தர்ஷணா இங்கே இருப்பதால் தான், எங்களுக்கு இந்த ஊர் பிடிக்கின்றது. அவளும் இல்லையென்றால் இது வறண்ட பாலைவனம் தான்” என்றனர். தர்ஷணா அவர்களுக்குச் செல்லப் பெண் ஆகிவிட்டாள். ஒரு டாக்டராக இவர்களின் ஆரோக்யத்தை வாரம் தவறாமல் செக்-அப் செய்தாள். தொந்தரவு செய்து காலை ஆறு மணிக்கெல்லாம் மொட்டை மாடியில் வாக்கிங் அழைத்துச் செல்வாள். சில நேரம் சாந்தாவுடன் ஸ்கிப்பிங் செய்வாள், தன் மனைவி குதிக்க முடியாமல் கஷ்டப்பட்டுக் குதிப்பதைப் பார்த்து ஜட்ஜும் சிரித்துக் கொண்டிருப்பார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை எட்டு மணிக்கு அவர்கள் மகன் ரிஷி போன் செய்வான். அந்த நேரத்தில்  அவர்களை யாரும் தொந்தரவு செய்யாமல் பார்த்துக் கொள்வாள் தர்ஷணா.

ரிஷியின் திருமணத்தைப் பற்றி சாந்தா தான் மிகவும் கவலைப்பட்டாள், அதுதான் தர்ஷணாவிற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கும் .

“உங்கள் பிள்ளை பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறார். ஒரே பிள்ளை, நன்றாகப் படித்து அமெரிக்காவில் டாலரில் சம்பாதிக்கிறார். நீங்களோ படிக்காத, அழகில்லாத பெண்ணுக்கு திருமணத்திற்கு கஷ்டப்படுவது போல் கஷ்டப்படுகிறீர்களே” என்று சிரித்தாள் தர்ஷணா.  

“அவனுக்கென்று பார்த்த பெண் முகூர்த்த நேரத்தில் வேறு ஒருத்தனோடு ஓடி விட்டாள். ரிஷியைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்? ஏதோ குறையுள்ள பிள்ளை என்று தானே” என்று குறை பட்டுக் கொண்டாள் சாந்தா.

“நீங்கள் தானே ஆன்ட்டி அந்தப் பெண்ணைப் பார்த்தது? அந்தப் பெண்ணிடம் உங்கள் பிள்ளையை பிடித்திருக்கிறதா என்று கேட்டீர்களா?  நீங்கள் அந்தஸ்திற்கும் அந்தஸ்திற்கும் திருமணம் செய்யப் பார்த்தீர்கள், அது முடியவில்லை. அதற்காக ஏன் கவலைப்படுகிறீர்கள்?” என்றாள் தர்ஷணா.

“எங்கள் மகனும் தானே அதை அவமானமாக நினைக்கிறான்” என்றார் பிரகாசம்.

“இரு கோடுகள் தத்துவத்தை அப்ளை பண்ணுங்கள் அங்கிள். இன்னொரு பெண் அவர் வாழ்க்கையில் வந்தால் எல்லாம் மாறி விடும். அந்தப் பெண்ணால் உங்கள் வாழ்க்கை இன்னும் அதிக மகிழ்ச்சியாகும்” என்றாள் தர்ஷணா. ஜட்ஜ் பிரகாசமும், சாந்தாவும் ஒருவரை ஒருவர் பாரத்துக் கொண்டார்கள்.

அவர்கள் இருவரும் தனியாக இருக்கும்போது, “இந்த தர்ஷணா மட்டும் நமக்கு மருமகளாக வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்றார் பிரகாசம்.

“நானும் அதையே தான் நினைத்தேன்” என்றாள் சாந்தா.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை உறவினரின் திருமணம் என்று ஜட்ஜும் அவர் மனைவியும் கிளம்பினார்கள்.

“தர்ஷணா, நீயும் எங்களோடு வருகிறாயா? வீட்டில் தனியாகத்தானே இருக்க வேண்டும்” என்றார் ஜட்ஜ்.

“சமையல்கார நீலா தான் இருக்கிறாளே, டி.வி’யில் அவள் கேட்கும் சேனலை வைத்து விட்டால் நாள் முழுவதும் இங்கேயே இருப்பாள், அதனால் கவலைப்படாதீர்கள்” என்றாள் தர்ஷணா .

“எங்கள் மகன் ரிஷி போன் செய்வான். இன்று நாங்கள் திருமணத்திற்குப் போவதால் அவனிடம் நாளை பேச்ச் சொல்கிறாயா?” என்றாள் சாந்தா.

“சரிங்க ஆன்ட்டி” என்றாள் தர்ஷணா.

அவர்கள் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் போன் வந்தது, ரிஷி தான். “அம்மா, ரிஷி பேசுகிறேன்” என்றான் எடுத்தவுடன்.

“ஹலோ நான் தர்ஷணா பேசுகிறேன், உங்கள் வீட்டு கெஸ்ட். ஜட்ஜ் அங்கிளும் ஆன்ட்டியும் ஒரு திருமண நிகழ்ச்சிக்காகப் போயிருக்கிறார்கள், நாளை இதே நேரத்திற்குப் பேசச் சொன்னார்கள்” என்றாள் தர்ஷணா.   

“நீங்கள் டாக்டர் தானே?” ரிஷி எதிர்புறத்தில் இருந்து கேட்டான்.

“ஆமாம்”

“போனை வைத்து விடாதீர்கள் ப்ளீஸ், ரொம்ப தேங்க்ஸ்” என்றான்.

“தேங்க்ஸ்  எதற்கு?”

“நீங்கள் இருப்பதால் அம்மாவிற்கும் அப்பாவிற்கும் நன்றாகப் பொழுது போகிறது என்றார்கள். அவர்கள் இருவருக்கும் பீரியாடிகல் செக்-அப் செய்து வாக்கிங்  அழைத்துப் போகிறீர்கள் என்று சொன்னார்கள். அதற்குத் தான் தேங்க்ஸ்” என்றான் .

“டாக்டர் ரிஷி சார், நான் ஒன்று கேட்டால் கோபப்பட மாட்டீர்களே?”

“கேளுங்கள், கேட்டபிறகு தான்  தெரியும்… கோபம் வருமா, வராதா என்று”

“ரிஷிகள் எல்லாம் கோபம் வந்தால் சாபம் கொடுத்து விடுவார்கள், அதனால் தான் ஒரு முன்னெச்சரிக்கையாகக் கேட்டேன்”

“ஏது பொல்லாத வாயாடியாக இருப்பாய் போல் இருக்கிறதே, விஷயத்தைச் சொல்”

“என்ன சார், கொஞ்ச நேரம் பேசியதுமே மரியாதை தேய்கிறதே?” என்றாள் தர்ஷணா.

“சாரி தர்ஷணா, நீண்ட நாள் அறிமுகமான ஒரு நல்ல ப்ரண்டுடன் பேசுவது போல் சந்தோஷமாக இருந்தது. அந்த உற்சாகத்தில் வார்த்தை தவறி விட்டது, வெரி சாரி. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைக் கேளுங்கள்” என்றான் ரிஷி.

“சார் போட்டோவில் நீங்கள் நன்றாக இருக்கிறீர்கள், நன்றாகப் படித்து அமெரிக்காவில் வேலை செய்கிறீர்கள். பிறகு ஏன் பழசையே நினைத்துக் கொண்டிருக்கிறீரகள்? பழையன கழிதலும் புதியன புகுதலும் வாழ்க்கையின் வழிமுறை அல்லவா? உங்கள் வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொண்டால் அம்மா அப்பாவுக்குப் பிரஷர் குறையுமல்லவா?” என்றாள் தர்ஷணா.

(தொடரும் – வெள்ளி தோறும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    வாழ்க்கைத் துணை (சிறுகதை) – பானுமதி பார்த்தசாரதி

    காற்றுக்கென்ன வேலி ❤ (நாவல் – பகுதி 13) – ஸ்ரீவித்யா பசுபதி, சென்னை